|
தென்றல் பேசுகிறது... |
|
- |ஜூலை 2011||(1 Comment) |
|
|
|
|
|
நிலத்தடி எண்ணெய்தான் உலகின் எரிசக்தித் தேவையின் பெரும்பகுதியை நிறைவு செய்கிறது. சூரிய மின்சக்தி, அணு மின்சக்தி, அனல் மின்சக்தி என்று இவையெல்லாம் ஆற்றல் தேவையின் மிகச்சிறிய பகுதியைக்கூடப் பூர்த்தி செய்யும் அளவுக்கு வளரவில்லை. அணு மின்சக்தி மிகப் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜப்பான் சுனாமியை அடுத்து ஃபூகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்து, உலக அளவில் அணு உலைகள் பாதுகாப்பனவைதாமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளன. இந்தப் பின்னணியில், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உலக நாடுகளின் பொருளாதாரத்தைத் தமது பேராசைக்குப் பணயமாக வைக்கத் துணிந்ததில் ஆச்சரியம் இல்லை. எவ்வாறு இணையப் புரட்சி, குறிப்பாக சமூகத் தொடர்பு வலை வசதிகளான ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குப் பயணிப்பதைக் குறைத்து, அதன்மூலம் எரிபொருள் தேவையை குறைத்துவிட்டன என்பதைச் சென்ற இதழின் 'தென்றல் பேசுகிறது' பகுதியில் அலசியிருந்தோம். தேவை குறைந்தும் விலை ஏறுவதென்பது பொருளாதாரக் கொள்கைக்கு முரணானது. துணிச்சலாக அதிபர் ஒபாமா அரசின் கையிருப்பிலிருந்து கச்சா எண்ணெயைச் சந்தையில் இறக்கி வைத்து, மாயையான விலையேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டதைப் பாராட்டத்தான் வேண்டும். மக்களுக்கு இது மகிழ்ச்சியைத் தந்தாலும், எண்ணெய் முதலைகளை கூக்குரலிடச் செய்துள்ளது இந்த நடவடிக்கை. அதிபரின் நல்லெண்ணத்தோடு கூடிய இந்த முற்போக்கான செயலைத் தென்றல் பாராட்டுகிறது.
*****
இந்தியாவைப் பொறுத்த வரையில் லஞ்சம், முறைகேடு, ஊழல், கையாடல், சட்டத்தை வளைத்தல், நிலத்தை வளைத்துப் போடுதல், ஒருதலைப் பட்சமாக நடத்தல் என்னும் சொற்களெல்லாம் கூர்முனையை இழந்துவிட்டன. அந்தச் சொற்களைப் படித்தாலோ கேட்டாலோ நாம் அதிர்ந்து போவதில்லை. 'இதெல்லாம் சகஜமப்பா' மனப்பான்மை எல்லோரிடத்திலும் தொற்றிக்கொண்டு விட்டது. இந்தக் காமாலை கொண்ட கண்ணுக்கு அன்னா ஹஸாரேயும் சுவாமி ராம்தேவும் ஏதோ கோமளிகளைப் போலத் தெரிகிறார்கள். குற்றம் சாட்டப்படும் ஒவ்வொருவரும் "நான் குற்றவாளியல்ல" என்று நிரூபிக்க முற்படுவதை விட்டுவிட்டு, "குற்றம் சாட்டுபவன் யோக்கியனா?" என்று திசை திருப்புவதில் தமது சாமர்த்தியத்தைக் காட்டுகின்றனர். இத்தகைய சூழலில் இந்திய உச்சநீதி மன்றம் "மனித உரிமைக்கு எதிரான மிகப்பெரிய குற்றம் ஊழல்தான்" என்று சுட்டிக் காட்டியிருப்பது சற்றே தெம்பளிப்பதாக இருக்கிறது. ஆனால் அரசுத் துறைகளைத் தணிக்கை செய்து அவற்றின் அதிர்ச்சியூட்டும் ஒழுங்கீனங்களைப் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுவரும் மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (CAG) தமது "வரம்பை மீறியுள்ளார்" என்று பொது மேடையில் கூறி அவரை வாயடைக்கச் செய்யும் பிரதமர் மன்மோகன் சிங்கின் முயற்சி நம்மைத் திகைக்க வைக்கிறது. போதாததற்கு, "லஞ்ச லாவண்யத்தின் உச்சம் எனது அரசு என்று கூறுகிறார்கள். அது வெறும் பிறழ்வுதான் (just an aberration)" என்றும் கூறியுள்ளார். அப்படி நம்பத்தான் நாமும் விரும்புகிறோம். ஆனால் தினந்தோறும் அலமாரியிலிருந்து சரிந்து விழும் மண்டையோடுகளைப் பார்த்தால் நமது நம்பிக்கைக்கு ஆதாரம் இல்லையோ என்று தோன்றுகிறது.
***** |
|
வட அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் பொதுமேடையில் காலடி வைத்துத் தமது தலைமைத் திறனை நிரூபிக்கும் போதெல்லாம் தென்றல் அவர்களை நேர்கண்டு அவர்களது வெற்றியின் பின்புலத்தைப் பதிவு செய்து வந்துள்ளது. இது ஒருவகையில் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் என்றாலும் மற்றொரு வகையில் வரும் தலைமுறையினருக்கு வழிகாட்டல் என்ற முறையில் முக்கியமானது. அப்படி அரசியலில் காலடி பதித்து ஒரு முக்கியமான மைல்கல்லைத் தொட்ட பெண் என்ற வகையில் அண்மையில் கனடியப் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்ப் பெண் ராதிகா சித்சபையீசனோடு ஒரு நேர்காணல் இந்த இதழில் வெளியாகிறது. சிலேடைச் செல்வர் கி.வா.ஜ., குமுதத்தை இந்தியாவிலேயே மிக அதிகம் விற்கும் வார இதழாக உயர்த்திய ஆசிரியர் குழுவில் இருந்த ரா.கி. ரங்கராஜன் ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்புகள் மிகச் சுவையானவை. சென்ற இதழில் தொடங்கிய குறுநாவல் தொடர் இந்த இதழில் விறுவிறுப்பேறுகிறது. புதிய கருத்துக் களங்கள், புதிய கண்ணோட்டம் கொண்ட கதைகளும் கவிதைகளும் தென்றலை ஒரு பரீட்சார்த்த ஊடகமாகவும் மாற்றி வருகின்றன. நகைச்சுவைக்கும் குறைவில்லை.
வாசகர்களுக்கு அமெரிக்க விடுதலை நாள், குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!
ஜூலை 2011 |
|
|
|
|
|
|
|