Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | எனக்குப் பிடிச்சது | சிரிக்க, சிந்திக்க
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
தூய தண்ணீரின் தவிப்பு (பாகம்-1)
- கதிரவன் எழில்மன்னன்|ஜூலை 2011|
Share:
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா. அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன்! தொழில் பங்கு வர்த்தகம், ஆனாலும் சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்போர்ட் மருத்துவ மனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

*****


சூர்யா, கிரணின் வீட்டில் ஸோஃபாவில் சாய்ந்து கொண்டு தொலைக்காட்சி சேனல்களை உருட்டிப் பார்த்து ஒன்றும் சுவாரஸ்யப் படாததால், "சே!" என்று அலுத்துக் கொண்டு அணைத்து விட்டுப் பத்திரிகை ஒன்றை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். விளையாட்டுக் கூடத்திலிருந்து சற்று முன்னர்தான் திரும்பியிருந்த கிரண் தனது படுக்கையறையிலிருந்து தலையை மட்டும் வெளியில் நீட்டி, "ஹே, சூர்யா, இப்ப எப்ப வேணும்னா ஷாலினி வந்துடுவா. நான் குளிச்சிட்டு வந்தவுடனே சாப்பிடக் கிளம்பிடலாம். ஜஸ்ட் அ ஃப்யூ மினிட்ஸ்" என்றான்.

அப்போதே சரியாக கிரணின் வாசல் மணி நாதத்தை இசைத்தது. கதவைத் திறந்துகொண்டு, "என்ன எல்லாரும் ரெடியா?" என்று கேட்டுக் கொண்டே ஷாலினி உள்ளே வந்தாள்.

கிரண் "ஹாய் ஷால்! வெல்கம்! ஒரு நிமிஷம் சூர்யாவோட பேசிட்டிரு ரெடியாயிடறேன்! ஆனா உங்கிட்டதான் சாவி இருக்கில்லே? ஏன் மணியடிச்சுட்டு வரே?!" என்றான்.

ஷாலினி சிரித்தாள். "நீ ஜிம்மிலிருந்து இப்பதான் வந்திருப்பே, ஒருவேளை குளிச்சுட்டு இல்லன்னா அதுக்குப் போறதுக்கு துணியெல்லாம் அவுத்துட்டு எங்கயாவது ஆடிட்டிருக்கப் போறேன்னு ஒரு பயத்துலதான்!" என்றாள்.

சூர்யா சிரித்துக் கொண்டே ஷாலினியை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டார். மாலை சாப்பாட்டுக்கு வெளியில் போகத் தன்னைத் தயார் செய்து கொண்டிருந்த ஷாலினி மருத்துவ அலுவலக உடையை மாற்றிக்கொண்டு ஒரு தேவதையைப் போல் வசீகரமாக இருந்தாள். தன் வாழ்க்கையின் பழைய நடப்புக்களால் இறுகியிருந்த சூர்யாவின் இதயம் கூட கடந்த சில காலமாக ஷாலினியின் விடாமுயற்சியால் இளகியிருந்தது. அதனால், ஷாலினியின் அழகுத் தோற்றம், எதற்கும் கலங்காத சூர்யாவைக் கூடச் சற்று கலக்கிவிட்டது என்றுதான் கூறவேண்டும். வறண்ட பாலைவனத்தில் சில்லென்ற தூறலின் காரணமாக எழும் பாலைவனச் சோலையைப் போல சமீப காலமாக மலர்ந்து கொண்டிருந்த சூர்யாவின் உள்ளம் தன் முன் நின்ற எழில் உருவத்தைக் கண்டு மேலும் கனிந்தது.

சூர்யா தன்னைக் கண்டு ரசிப்பதை உணர்ந்த ஷாலினி வெட்கத்தால் முகம் சிவந்தாலும் உள்ளூரப் பெருமிதம் அடைந்தாள். தான் நேசிக்கும் ஆடவன் தன்னை ரசிப்பதைவிட ஒரு பருவப் பெண்ணுக்கு அதிக மகிழ்ச்சி எதுவும் இருக்க முடியாது என்று தனக்குள் கூறிக்கொண்டு பூரித்துப் போனாள்.

வார்த்தையில்லாமல் பரிமாறிக் கொண்ட இந்த இன்ப நாடகத்தைக் கண்ட கிரணுக்குச் சந்தோஷம்தான். "நல்லதுதான். இப்படியே போச்சுனா இன்னும் கொஞ்ச காலத்துல இந்த சூர்யாவை நல்ல வழிக்குக் கொண்டு வந்துடலாம்" என்று எண்ணிக் கொண்டான். வெளியே காட்டாமல், "சரி, ஒரு நிமிஷம் பேசிக்கிட்டிருங்க, சீக்கிரம் குளிச்சிட்டு வந்துடறேன்” என்றான்.

ஷாலினி சிரித்துக் கொண்டே, "டேய், கொஞ்சம் நல்லா தேச்சுக் குளி. சாப்பிடச்சே உன் ஜிம் வேர்வை நாற்றம் வேணாம்!" என்று நையாண்டி செய்தாள்.

கிரண் சும்மா விடும் ஜாதியில்லையே! பதிலுக்கு வேட்டு விட்டான், "அதான் நீ அண்டா அளவுக்கு ஸெண்ட் போட்டிருக்கயே அதை மறைச்சுடும் கவலைப்படாதே! என் ஆண் வேர்வை வாசனை எத்தனை அழகிய இளம்பெண் பறவைகளைச் சுண்டி இழுக்குது தெரியுமா. நீ வேணா நான் ஜிம் முடிச்சு வெளியில வரச்ச என்ன ஆகுதுன்னு வந்து பாரு!"

சூர்யா மீண்டும் கலகலவெனச் சிரித்தார். அதைக் கேட்ட கிரணும் ஷாலினியும் அவரைக் கேள்விக்குறியுடன் பார்க்கவே, சூர்யா சிரிப்பதை படக்கென நிறுத்திவிட்டு தன் சிரிப்பின் காரணத்தை விளக்கினார். "நெப்போலியன் எதோ போருக்குப் போயிருந்தாராம். அவர் வெற்றியுடன் திரும்ப வந்து கொண்டிருந்த போது தான் படையுடன் மெள்ள பாரிஸ் போய் சேர்வதற்கு ஒரு நாள் முன்னமே, தன் துணைவியான ஜோஸஃபீனுக்கு ஒரு ஸீல் வைத்த அவசரக் குறிப்பை முன்கூட்டியே வேகக் குதிரைக்காரன் மூலம் அனுப்பிவைத்தாராம். கிரண் சொன்னதைக் கேட்டவுடன் அந்தக் குறிப்பைப் பற்றி ஞாபகம் வந்தது. அதான் சிரிப்புத் தாங்க முடியுலை".

ஷாலினி ஆர்வத்துடன் தூண்டினாள். "உம்? மேல சீக்கிரம் சொல்லுங்க. அந்தக் குறிப்பில என்ன இருந்தது. கிரணுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?"

கிரணும் ஆவலுடன் பார்க்கவே சூர்யா தொடர்ந்து விளக்கினார். "அந்தக் குறிப்பில நெப்போலியன், 'நான் நாளை வீடு வந்து சேர்ந்துடுவேன். குளிக்காமல் காத்திரு' அப்படின்னு எழுதியிருந்தாராம். குளிச்சா ஜோஸஃபீனுடைய இயற்கை வாசனை போயிடும், ரொம்ப நாளா வீட்டுல இல்லாத்துனால..." என்று சொல்லிக்கொண்டு போனவர், சட்டென்று ஷாலினியின் முகம் நாணத்தால் சிவப்பதைக் கண்டு சட்டென்று நிறுத்தி விட்டு, "உம்... அப்புறம் நான் சொல்றத்துக்கு என்ன உங்க கற்பனையிலேயே மீதியைப் பூர்த்தி செஞ்சுக்கங்க" என்றார்.
கிரண் கற்பனா லோகத்துக்குள்ளேயே சென்று ஜோஸஃபீனின் அழகையும் இயற்கை வாசனையையும் பற்றி ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்து விட, ஷாலினி அவனை உசுப்பினாள். "சரி கிரண் சீக்கிரம் உன் குளியலை முடிச்சிட்டு வாயேன். வேணும்னா குறைச்சலா குளிச்சுட்டு ஸெண்ட்டுலயும் குளிக்காம உன் இயற்கை வாசனையைக் கொஞ்சம் வச்சுக்க என்ன ஆகுதுன்னு பார்க்கலாம். சுத்தக் தண்ணியும் அதுக்கான சக்தியும் கொஞ்சம் சேமிக்கலாம், உன் ஸெண்ட்டால ஓஸோன் லேயர்ல வந்திருக்கற ஓட்டையையும் கொஞ்சம் குறைக்கலாம்" என்று கேலியாகக் கூறினாள்.

கற்பனையிலிருந்து மீளாத கிரண் வழக்கம் போல் திரும்பித் தாக்காமல், "அதுக்கென்ன அப்படியே செஞ்சு எல்லாத்தையும் காப்பாத்திட்டாப் போச்சு!" என்று கூறிவிட்டு குளிக்கச் சென்ற கிரண் வெகு சீக்கிரமே குளியலை முடித்துக் கொண்டு ஒரு துவாலையை இடுப்பில் கட்டிக் கொண்டு தலையை வெளியில் நீட்டி "குளியல் ஆச்சு, சீக்கிரம் வரேன்" என்றான்.

ஷாலினி. "அடேங்கப்பா! கிரணைக் கூட தண்ணி குறைச்சலா செலவழிக்க வைக்க ஒரு வழி கண்டு பிடிச்சிட்டீங்களே சூர்யா, பிரமாதந்தான்!" என்றாள்.

கிரணோ, "அதெல்லாம் இன்னிக்கு மட்டுந்தான். நாளைக்கு இதுக்கும் சேத்து குளிச்சுடறேன்!" என்று கூறியவன், ஷாலினியின் முகத்தில் ஏமாற்றம் படர்வதைக் கண்டு மனமிளகி, "ஹே ஷால். கவலைப்படாதே, உனக்காக நிஜமாவே குளியல் தண்ணியைக் குறைச்சுடறேம்மா, உன் மூஞ்சி கோணலைப் பாத்தா சகிக்கலை" என்றான் கிண்டலாக.

ஷாலினியோ சிரிக்காமல் தன் கவலையை விவரித்தாள். "கிரண், நீ என்னமோ இந்தத் தண்ணி விஷயத்த விளையாட்டா எடுத்துக்கற. ஆனா, என்னுடைய சக ஊழியர் ஒருத்தரின் இளம் தங்கை ஒரு சுத்த நீர் நிறுவனத்துல ஆராய்ச்சி வேலை பாக்கறா. அவ சொன்னா..."

கிரண் அவளைத் தொடர விடாமல் குறுக்கிட்டான். "இளம்... தங்கையா? நீ அது சொன்னவுடனேயே நீ சொன்ன மீதி எதுவும் என் காதுல விழல. என்ன அவ நல்ல அழகா இருப்பாளா? லைன் போட்டுடலாமா?"

ஷாலினி பொய்க் கோபத்துடன் அவனைக் கடிந்து கொண்டாள். "சீ போ கிரண்! ஒனக்கு வேற வேலையே இல்லை. எப்பப் பாத்தாலும் பொண்ணுங்களைத் துரத்திண்டு - சரியான ஜொள்ளு பார்ட்டிப்பா நீ! எப்படியோ இந்த விஷயத்தை விசாரிக்க நீங்க ரெண்டு பேருந்தான் வருவீங்களே அப்ப நீயே அவ எப்படின்னு கணிச்சுக்க. இப்ப நான் அந்தப் பிரச்சனையை பத்தி கொஞ்சம் மேலே சொல்றேன்."

கிரண் மேற்கொண்டு எதோ சொல்லப் போக, சூர்யா அவனைத் தடுத்தார். "கொஞ்சம் சும்மா இரு கிரண். மேல சொல்லு ஷாலினி. எனக்கு இந்த சுத்த நீர் விஷயத்துல ரொம்ப ஆர்வம் இருக்கு. சமீபத்துல நேஷனல் ஜியக்ராஃபிக் பத்திரிகையில கூட நிறையப் படிச்சேன்" என்றார்.

ஷாலினி தொடர்ந்தாள். "என் சக ஊழியர் அவரது தங்கையை எனக்கு அறிமுகம் செஞ்சு குடுத்தார். அவதான் தண்ணீர் பிரச்சனை எதிர்காலத்துல ரொம்பவே பெரிசாகப் போகுதுன்னும், இப்ப நடக்கற எண்ணைச் சண்டைகளை விடவும் அதிகத் தீவிரமான பிரச்சனைகளை உண்டாக்கும்னும் சொன்னாள். அவ வேலை செய்யற நிறுவனம், கடல் தண்ணீர்லேந்து மிகக் குறைவான செலவுல எளிதா சுத்த நீர் பிரிக்கும் நுட்பம் தயார் செஞ்சுக்கிட்டிருக்காம். ஆனா, சமீப காலமா..."

கிரண் மீண்டும் குறுக்கிட்டான். "என்ன சமீப காலமா எதோ புரியாத பிரச்சனைகள் அவங்க ஆராய்ச்சிக்கு இடையூறா இருக்கு. அதன் காரணத்தை யாராவது கண்டு பிடிச்சு நிவர்த்திக்க முடியுமான்னு கேட்டாளாக்கும். நமக்கு இதே மாதிரி தொழில்கள்தான் வந்துகிட்டே இருக்கே. அதுல இதுவும் ஓண்ணு அவ்வளவுதான். அது கிடக்கட்டும் பாத்துடலாம். நீ சொன்னயே அந்தப் பொண்ணு எப்படி இருப்பான்னு பாக்கவாவது போய்ப் பேசிட வேண்டியதுதான்!"

ஷாலினி அவனை விளாயாட்டாகத் தோளில் தட்டினாள். "ஒன்னைத் திருத்தவே முடியாதுடா! சரி போகட்டும். சூர்யா என்ன சொல்றீங்க - நீங்க விசாரிக்கறீங்களா?"

சூர்யா மிகுந்த முக்கிய உணர்வுடன் சம்மதித்தார். "நான் படிச்ச பத்திரிகைக் கட்டுரையில் நீர்த் தட்டுப்பாட்டால வருங்காலத்துல எவ்வளவு பிரச்சனைகள், போர்கள் நடக்கக் கூடும்னு எழுதியிருந்தாங்க. ஏன், இந்தியாவிலேயே கூட தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களுக்கிடையில காவேரித் தண்ணித் தட்டுப்பாடு சண்டை இப்பவே நடக்குதே. பெங்களூர்ல பல தமிழர்கள் வீட்டைக் கன்னட சாலுவளிகர்ங்கற குழு தாக்கினாங்க... இந்த மாதிரியான பிரச்சனைகள் முத்தாமத் தவிர்க்கும் முயற்சிக்கு நாமும் உதவக் கூடும்னா செஞ்சுட வேண்டியதுதான். நாளைக்கே சந்திக்கலாம்."

கிரண்கூடக் கிண்டலை விட்டுவிட்டு சீரியஸாக, "ஆமாமாம். நான் கூட ஒரு தடவை சென்னைக்குப் போயிருந்தப்போ ஹோட்டல்ல தண்ணி நின்னுபோய் நாறிப் போச்சு. பெங்களூர்க் கலவரம் பத்தி நானும் படிச்சேன்" என்றான்.

சூர்யா முறுவலித்தார். "சென்னையில இப்ப தண்ணி தட்டுப்பாடு கொஞ்சம் தேவலாம்னு சொல்றாங்க. ஆனாலும் காவேரிப் பிரச்சனை தீரலை. ஓகே. நாளைக்கு அவங்க நிறுவனத்துக்கு வரோம்னு தெரிவிச்சுடு ஷாலினி. இப்ப சாப்பிடப் போலாம் கிளம்புங்க!" என்றார்.

மறுநாள் அவர்கள் அந்த சுத்த நீர் ஆராய்ச்சி நிறுவனத்தில் கேள்விப்பட்டது அவர்கள் நினைத்திருந்ததை விட மிக வினோதமாக, ஆச்சர்யமளிப்பதாக இருந்தது.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline