|
தென்றல் பேசுகிறது |
|
- |ஜூன் 2011| |
|
|
|
|
|
நீண்டதொரு பொருளாதாரச் சரிவிலிருந்து அமெரிக்கா மீண்டுகொண்டிருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கச்சா எண்ணெயின் விலை உயர்வு எங்கே இந்த மீட்சிக்கு உலை வைத்துவிடுமோ என்கிற அச்சம் இருந்தாலும் இரண்டு விஷயங்கள் நம்பிக்கை தருகின்றன. ஒன்று, கச்சா எண்ணெயின் விலை மீண்டும் கட்டுக்குள் வந்து கொண்டிருப்பது; இரண்டாவதும் முக்கியமானதும் என்னவென்றால் அமெரிக்காவின் எண்ணெய்க் கையிருப்பு கணிசமாக இருந்த போதும் மக்களின் நுகர்வு முன்னெப்போதையும் விடக் குறைச்சலாக இருப்பது. வேலை வாய்ப்புகள் அதிகரித்து, வருமானம் மீண்டும் உயரத் தொடங்கிய போதும் கேஸலீன் நுகர்வு அதற்குச் சமமாக ஏறவில்லை என்பது மக்கள் பொருளாதார வீழ்ச்சியின் பாடத்தைக் கற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று கருத இடமளிக்கிறது. அது மட்டுமல்ல, கடன் தொகைகளைத் திரும்பச் செலுத்துவதிலும் அவர்கள் உறுதியாக இருப்பது ஒரு நல்ல அறிகுறி. இந்தப் பாங்கு தொடர வேண்டும்.
*****
வலைமயமான, உடனடி செய்தித் தொடர்புக்கு வழிகண்ட, ட்விட்டர்/ஃபேஸ்புக் சகாப்தம் உலகின் மல்லிகைப் புரட்சிகளுக்குக் காரணமாக அமைந்ததோடு நிற்கவில்லை. மேலே கூறிய கேஸலீன் சேமிப்புக்கும் காரணமாக இருக்கிறது என்பதை எண்ணும்போது வியப்பு மேலிடுகிறது. சினிமா சூத்திரத்தின்படி, முன்னெல்லாம் பிரிந்தவர்கள் கூடுவதற்கு அவர்கள் சிறு வயதில் பாடிய ஒரு பாட்டு காரணமாக இருக்கும். இப்போதோ அவர்களை ஃபேஸ்புக்கில் கண்டுபிடித்துவிட முடிகிறது. ஏன், டெல்லியில் கடத்தப்பட்ட ஒரு குழந்தை ஃபேஸ்புக்கில் அறிவித்ததால் அகப்பட்டது! 'To catch up' இனிமேல் யாரும் மாலைநேரப் பாட்லக் விருந்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டியதில்லை. மேற்கூறிய சமூக வலையகங்கள் நொடிக்கு நொடி ஒவ்வொருவரின் அப்போதைய நிலைமையை, சிந்தனையைப் பகிர்ந்து கொள்ள வழி செய்துவிட்டன. மனிதர்கள் நேருக்கு நேர் சந்திக்கும் அவசியத்தை இணைய உலகம் வெகுவாகக் குறைத்துவிட்டதால் அவர்கள் பயணிப்பதற்கான நேரத்தை, செலவை, குறிப்பாக எரிபொருள் செலவை, குறைத்துவிட்டது. அமெரிக்காவில் எரிபொருள் நுகர்வு குறைந்து போனதற்கு இது முக்கியக் காரணம் என்பதை அறிந்து சொல்லப் பொருளாதார நிபுணர்கள் வர வேண்டியதில்லை.
*****
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னார் ஆட்சி "மலர்ந்தது" என்று சொல்வது ஒரு மரபு. கூட்டணி ஆட்சிகளில் சிக்கி அல்லாடுவதை வழக்கமாகக் கொண்டுவிட்ட இந்தியாவில், செல்வி ஜெயலலிதா அவர்களின் அ.இ.அ.தி.மு.க. அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளதே ஒரு முக்கியமான அரசியல் மாற்றம்தான். "கூட்டணி தர்மம்" என்ற பெயரால் எல்லாவற்றையும் சக-கட்சிகளின் தலையில் போட்டுத் தப்பித்துக்கொள்ள முடியாது. அவரைத் திரைப்படத் துறையினர் பாராட்டு விழாவுக்கு அழைத்தபோது, "செய்ய வேண்டிய மக்கள் பணிகள் ஏராளமாக இருக்கின்றன. விழாவுக்கு வரமுடியாது" என்று கூறியிருப்பது வரவேற்கத் தக்கது. ஆனால் 20 கிலோ, 30 கிலோ என்று குடும்ப அட்டைகளுக்கு இலவசமாக அரிசியைத் தருவது கவலைக்கு இடமளிக்கிறது. மக்களை இலவசங்களுக்கு அடிமையாக்குவது தவறு. அதுமட்டுமல்ல, இன்றுள்ள தமிழகத்தில் வேலைக்குப் பஞ்சமில்லை. சொல்லப் போனால், பல குறைந்த ஊதியம் தரும் உடலுழைப்பு மிக்க பணிகளில் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலத்தவரின் முகங்களைத் தமிழத்தில் பார்க்க முடிகிறது. எனவே வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திட்டங்கள், அடிப்படை வசதிகளை உயர்த்தும் திட்டங்கள், மின்சாரத் தட்டுப்பாட்டை நீக்குதல், கல்வி மருத்துவம் இவற்றை சாமானியருக்கும் எட்டச் செய்தல் போன்றவற்றுக்கு அரசின் நிதியும் கவனமும் அதிகம் செல்ல வேண்டும். இவற்றை அமல்படுத்தினால், சராசரி மனிதரின் வாழ்க்கை வளம் தானாகவே உயரும். மிகத்தாழ்ந்த சமூக நிலை, உடல்நலக் குறைவு அல்லது வயது முதிர்ச்சி போன்ற காரணங்களால் பொருளீட்டவே இயலாதோருக்கு அரசாங்கம் சரியான வரைமுறைகளை நிர்ணயித்து அவற்றுக்கிணங்க உதவலாம். வேறுவகை இலவசங்கள், உழைக்காமல் ஊதியம் தேடும் மனப்பாங்கைச் சமூகத்தில் வளர்த்துவிடும்.
***** |
|
படைப்புலகில் அமெரிக்காவின் இளந்தமிழ்த் தலைமுறையினர் கால் பதித்து வருவதைத் தென்றல் தொடர்ந்து பதிவு செய்து வருகிறது. அந்த வரிசையில் இந்தியப் பின்னணியில் பன்னாட்டு ரசிகர்களுக்கு ஆங்கிலப் படம் எடுக்கும் இயக்குநர் இஷு கிருஷ்ணாவின் நேர்காணல், இந்திய புராண-இதிகாசங்களின் ஆதாரத்தில் மிகுபுனைவு வரைபடக் கதைகளை (fanatasy graphic novels) தயாரிப்பதில் இறங்கியுள்ள அஸ்வின், அஷோக் ஆகியோரைப் பற்றிய கட்டுரை, ஓசூரைக் கலக்கிய சமூக ஆர்வலர் செல்லம் ராமமூர்த்தியின் வாழ்க்கைக் குறிப்புகள், கருத்திலும் விவரிப்பிலும் மாறுபட்ட சுவையான சிறுகதைகள் என்று தென்றல் மீண்டும் தயாராகியுள்ளது. சமையலின் பெருமை உண்டால் தெரியும் என்பதுபோல, படித்துப் பார்த்துச் சுவையறியுங்கள். எங்களுக்கு உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.
ஜூலை 4ம் தேதியை ஒட்டிய வார இறுதியில் தென் கரோலினாவின் சார்ல்ஸ்டன் நகரில் நடக்க இருக்கும் FeTNA ஆண்டுவிழா வெற்றி பெறத் தென்றலின் வாழ்த்துகள். வாசகர்களுக்குத் தந்தையர் தின வாழ்த்துக்கள்.
ஜூன் 2011 |
|
|
|
|
|
|
|