Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | சிரிக்க சிரிக்க | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
தென்றல் பேசுகிறது
தென்றல் பேசுகிறது...
- |ஆகஸ்டு 2011|
Share:
அமெரிக்க ஐக்கிய அரசு தனது தேவைக்காகக் கருவூலத்திலிருந்து இவ்வளவுதான் கடன் வாங்கலாம் என்று ஓர் உச்சவரம்பு உண்டு. இந்த வரம்பு ஒரு தார்மீக அளவுதானே தவிர, அரசு வாங்கும்வரை வாங்கிவிட்டுப் பின்னர் அதற்குத் தேவையான அங்கீகாரத்தைப் பெறுவது வழக்கம். இப்போது ஒரு பிரச்சனை: உச்சவரம்பை மேலும் உயர்த்த நிபந்தனைகள் விதிப்பதும், அவற்றைத் தளர்த்த மறுப்பதும் தான் அது. 'குதிரைகள் ஓடியபின் லாயத்தைப் பூட்டுவது' என்று ஒரு பழமொழி உண்டு, அதைப் போன்ற முயற்சியே இந்தத் தடைச்சட்டம். ஏனென்றால், அரசு கடனை எக்கச்சக்கமாக வாங்கித் தள்ளிவிட்டது. இனி வாங்கத் தடை போட்டால் என்ன ஆகும் தெரியுமா? அது பொதுமக்களுக்கு விற்ற கடன் பத்திரங்களின் மீதான வட்டியைத் தர முடியாது, சமூகக் காப்பீட்டுப் பணத்தைத் திருப்பித்தர இயலாது, அரசுக்குப் பொருள்கள் விற்றோருக்குத் தொகை தர இயலாது என்று பட்டியல் நீளும். இவ்வாறு சமூகத்தை வெவ்வேறு வகைகளில் சென்றடைய வேண்டிய பணத்தைத் தராமல் அமெரிக்க அரசு தவறினால் உலக அளவில் அரசின் நம்பகத்தன்மை போய்விடும், வட்டி விகிதங்கள் உயரும். அத்தோடு, மக்களின் கையில் பணப்பற்றாக்குறை ஏற்பட்டு மீண்டும் பொருளாதார மந்தநிலை ஏற்படும். இந்தக் கைக்கும் வாய்க்குமான வாழ்க்கை முதலிலேயே மக்களை நொந்துபோக வைத்துள்ளது. எப்போது மீண்டும் முன்போல செழிப்பைப் பார்ப்போம், அங்காடிகளில் போய் ஆசைதீர வாங்குவோம் என்ற தவிப்பில் அவர்கள் உள்ளனர். சட்டமியற்றுவோர் இதை உணர்ந்து நடப்பது நலம்.

*****


"இரண்டடிக்கு மேல் உயரமாக உங்கள் வீட்டு வாசலில் ஒரு களைச்செடி வளர்ந்துள்ளது. அதை உடனடியாக நீங்கள் அகற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். நீங்கள் செய்யாத பட்சத்தில் ஒவ்வொரு அடுத்த எச்சரிக்கைக் கடிதத்திலும் தொகை இரட்டிப்பாக உயர்த்தப்படும்" என்று ஒரு வீட்டுக்காரருக்கு நிர்வாகத்திலிருந்து கடிதம் வந்துள்ளது. அவர் அந்த வீட்டில் குடியிருக்கும் கடந்த முப்பதாண்டுகளில் இப்படி ஒரு கடிதத்தை அவர் பார்த்ததில்லை. "ஆஹா! இந்தச் செடியில்தான் எத்தனை அழகான பூ" என்று அந்தக் 'களைச்செடி'யின் பூவை அவ்வழியே நாயை நடத்திக்கொண்டு போன ஒரு பெண்மணி வியந்துள்ளார். தீயணைப்பு வீரர்கள், பொலீஸ், நகர அலுவலர்களின் ஓய்வூதியம் குறைக்கப்படுகின்றன. இது லஞ்சப் பெருக்கம் என்னும் அபாயத்துக்கு இடமளிக்கலாம். நூலக நேரம் குறைக்கப்படுகிறது. பள்ளிப் பாடங்கள் குறைக்கப்படுகின்றன. சற்றே பெரிய அளவில் பார்த்தால், பிற நாடுகளுக்கு உதவித் தொகை தருவது நிறுத்தப்படுகிறது. அமெரிக்காவின் தாராள மனத்துக்கு விடப்பட்ட சவாலாக இவை அமைகின்றன. இவ்வாறு சராசரிக் குடிமகன் பல அடிப்படை வசதிகளை இழக்கும் அதே நேரத்தில் குடியரசுக் கட்சி பெரும்பணக்காரர் மீதான வரியை ஏற்றவும் சம்மதிப்பதில்லை. இது ஒரு கொள்கை ரீதியான எதிர்ப்பே. நியாயமான முறையில் சரியான பிரிவினரிடமிருந்து வரி வசூலிக்காவிட்டால், அரசின் கருவூலம் வறண்டுதான் போகும். இந்த நிலைமை யாருக்கும் மகிழ்ச்சி அளிக்காது. முந்தைய பத்தியில் கூறியபடி கடன் பெற நிபந்தனைகள் விதிக்கப்பட்டால் எந்தப் பயனும் விளையாது. நாட்டு நலனுக்கும் கட்சி அரசியல் கோட்பாட்டுக்கும் பிணக்கு வரும்போது நாட்டு நலனே முதலிடம் பெற வேண்டும் என்பதை அரசியல்வாதிகள் உணராவிட்டால், அதைத் தேர்தல்கள் உணரவைக்கும்.

*****
இலங்கைத் தேர்தல்களில் தமிழர் அதிகமுள்ள பகுதிகளில் தமிழ் வேட்பாளர்கள் பெருமளவு வெற்றி பெற்றுள்ளனர். இந்த அரசியல்ரீதியான அமைதிப் புரட்சி இரு தரப்பினரிடையே சமாதான சகவாழ்வைக் கொண்டுவர உதவ வேண்டும் என்றும் தென்றல் விரும்புகிறது. இதற்கு எல்லோரும் ஒன்றாக உழைப்பது அவசியம்.

*****


முன்னோடி நடனமணி சுதா சந்திரசேகர், நகைச்சுவைத் தென்றல் கு. ஞானசம்பந்தன் ஆகியோரின் நேர்காணல்கள், சாதிக்கத் துடிக்கும் தோழியர் ரஞ்சனி, ஸ்ரீவித்யாவைப் பற்றிய கட்டுரை, வெவ்வேறு கோணங்களில் அமெரிக்க வாழ்வைப் படம் பிடிக்கும் சிறுகதைகள், குறுநாவல் தொடர் என்று பல்சுவைச் சிறப்பிதழாகத் தென்றல் மலர்ந்துள்ளது. சிறுகதைப் போட்டியின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு தவிர உலகெங்கிலுமுள்ளோர் இதில் பங்கு பெறலாம் என்பது இதன் சிறப்பம்சம்.

வாசகர்களுக்கு இந்திய சுதந்திர தினம், ரமலான் நோன்பு, ஈகைத் திருநாள், பிள்ளையார் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!


ஆகஸ்டு 2011
Share: 
© Copyright 2020 Tamilonline