Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | சிரிக்க சிரிக்க | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
கு. ஞானசம்பந்தன்
சுதா சந்திரசேகர்
- காந்தி சுந்தர்|ஆகஸ்டு 2011|
Share:
டெட்ராய்ட், மிச்சிகனில் உள்ள 'ஹிந்து டெம்பிள் ரிதம்ஸ்' வட அமெரிக்காவின் முன்னோடி பரதநாட்டியக் கல்விக்கூடங்களில் ஒன்றாகும். இதனை நிறுவி நடத்திவரும் குரு சுதா சந்திரசேகர் ஆகஸ்ட் மாதத்தில் தமது கலைப்பள்ளியின் எழுபத்தொன்பதாவது அரங்கேற்றத்துக்கான பணிகளில் இறங்கியுள்ளார். எழுபது வயதிலும் சுறுசுறுப்போடு ஊக்கம் குன்றாமல் தஞ்சாவூர் பாணியில் பரதம் பயில்விக்கும் சுதா, பரதம் கற்றது மும்பை 'ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பரதநாட்டிய கலா மந்திர்' புகழ் குரு கோவிந்தராஜன் பிள்ளை அவர்களிடம். 'நாட்டியக் கலையரசி' (1963, இந்தியா), 'நாட்டிய சிரோபூஷணம்' (1965, இந்தியா), 'நடனமணி' (1964, இந்தியா), 'தர்மரத்னா' (1984, Voice of the Veda Sabha, Canada), 'நாட்ய மயூரி' (2004, USA) போன்ற பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். 2010ம் ஆண்டு க்ளீவ்லாந்து தியாகராஜர் உற்சவத்தில் 'நிருத்திய சேவா மணி' என்ற பட்டமளித்து கௌரவிக்கப்பட்டார். தாம் வசிக்கும் ஓக் பார்க் நகரத்தின் ஆப்டிமிஸ்ட் கிளப்பின் உபதலைவராகத் திகழ்ந்து வரும் இவர், அந்நகரத்தின் கலை மற்றும் கலாசாரக் குழுவின் ஆலோசகர். சுதா சந்திரசேகருடன் ஓர் உரையாடல்.

*****


காந்தி சுந்தர்: ஆரம்ப காலத்திலிருந்தே ஆரம்பிக்கலாமா?
சுதா: செய்யலாமே. நான் சென்னையில் பிறந்து மும்பையில் வளர்ந்தேன். எனது தாய் திருமதி ஜெயா, தந்தை திரு. துரைசாமி. பிரகாஷ், சுரேஷ், ஸ்ரீநிவாஸன் என்று எனக்கு மூன்று சகோதரர்கள். எனது தாயாருக்கு, தனக்கு ஒரு மகள் பிறக்க வேண்டும், அவளை நாட்டிய மேதையாக்க வேண்டும் என்று மிகவும் ஆசை. நான் பிறந்து, எனது இரண்டாம் வயதில் குழாயில் தண்ணீர் வரும் தொனிக்கேற்ப நடனம் ஆடுவதைக் கண்ட என் அம்மா எனது ஐந்தாவது வயதில் நடன வகுப்பில் சேர்த்தார். மும்பையில் திரு. ஜி.வி.ரமணி என்பவர் 'ரூபாயத்தான் இன்ஸ்டிட்யூட்' (Roopayathan Institute) என்ற நடனப் பள்ளியை நடத்தி வந்தார். அவரிடம் முதன்முதலில் 'மணிப்புரி நடனம்' கற்கத் தொடங்கினேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரமணி அவர்கள் தஞ்சையிலிருந்து குரு கோவிந்தராஜன் பிள்ளையை மும்பைக்கு வரவழைத்தார். அவரிடம் பரதநாட்டியம் கற்றேன்.

காந்தி: அதைப்பற்றிச் சொல்லுங்கள்....
சுதா: 1945ல் மும்பை 'ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பரதநாட்டிய கலா மந்திர்' கலைமாமணி கோவிந்தராஜன் பிள்ளையிடம் சேர்ந்தேன். இவருடையது ஒரு மிகப் பெரிய கலைக்குடும்பம். அவருடைய மாமனார் குப்பையா பிள்ளை மிகப் பிரசித்தி பெற்றவர் 'பரத வித்வான்'. அவரும் மும்பைக்குக் குடிபெயர்ந்தார். பிறகு அவரது மகன்கள் கலைமாமணி மகாலிங்கம் பிள்ளை, கல்யாணசுந்தரம் பிள்ளை ஆகியோரும் மும்பைக்குக் குடிபெயர்ந்தனர். ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பள்ளியின் மூத்த மாணவிகளில் நானும் ஒருத்தி. தற்போது அவர்களது முதன்மையான மாணவி நான்தான்.

பள்ளி முடிந்ததும் மாலையில் டான்ஸ் கிளாசுக்குப் போவேன். ஒவ்வோர் அபிநயத்தையும் குரு எனக்கு விளக்குவார். நடனம் ஆட ஆரம்பித்து விட்டால் நேரம் போவதே தெரியாது. என் குரு குடும்பத்தினரிடம் நான் கற்றுக்கொண்ட முக்கிய விஷயங்கள் அடக்கமும் தெய்வ பக்தியும்தான். குரு குப்பையா பிள்ளை அவர்களுக்கு இவ்வாண்டு 125வது நினைவு விழா சென்னையில் நடக்கவுள்ளது. நான் அவரைச் செல்லமாகத் தாத்தா என்று அழைப்பேன். என் தாத்தாவின் நினைவு விழாவில் நானும் கலந்து கொள்ளப் போவதில் எனக்கு ஒரே சந்தோஷம். தாத்தா எனக்குப் பிரத்யேகமாக 'பைரவி தாண்ட வர்ணம்', 'நவசந்தி கவுத்துவம்' போன்ற அபூர்வ வர்ணங்களைக் கற்பித்துள்ளார். இன்றும் அவற்றை எங்கு ஆடினாலும் பாராட்டுதான். எனது ஐந்தாவது வயதில் துவங்கிய குருகுலம் இருபத்தாறாம் வயதுவரை தொடர்ந்தது.

காந்தி: தாங்கள் மணிப்புரி, பரதநாட்டியம் இவை தவிர வேறு வகை நடனம் பயின்றதுண்டா?
சுதா: நாங்கள் மும்பையில் வசித்தபோது எங்கள் வீட்டின் எதிரே 'கதக்' நடன ஆசான் துலாரி ஸ்ரீவாஸ்தவா வசித்தார். அவரது கதக் அபிநயங்களை வீட்டில் இருந்தபடியே பார்த்துப் பார்த்து நான் பயில்வதை அவர் பார்த்துவிட்டார். என் தாயாரிடம் வந்து நான் பிரியப்பட்டால் எனக்குக் கதக் சொல்லித்தரத் தயாராக இருப்பதாகக் கூறினார். தாயாரும் சரியென்று சொல்லவே நான் கதக் பயின்றேன். அதே சமயம் எம்.எஸ். நாராயணசுவாமி என்பவரிடம் இசை கற்றேன். பிறகு பாஸ்கர பாகவதரிடம் இசை கற்றுக்கொண்டேன். எனது 16வது வயதில் நான் போதார் கல்லூரியில் (Poddar College) படித்துக் கொண்டிருந்த சமயம் எனது கதக் அரங்கேற்றம் நடந்தது.

என் நடனத்தை ஒருமுறை பார்த்த்த குரு எல்லப்பா பிள்ளை என்னை அழைத்து எனக்கென்று பிரத்யேகமாக 'பதறி வருகுது' என்ற பாடலுக்கு அபிநயம் கற்றுக் கொடுத்ததை என்னால் மறக்க முடியாது. இதை நான் குறிப்பிட்டுச் சொல்வதன் காரணம், எனக்குப் பலபேர் பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். அவற்றை கிரகித்து இன்று நான் என் மாணவர்களுக்குத் தருகிறேன். என் குரு கோவிந்தராஜன் பிள்ளை 'நட்டுவாங்கம்' செய்வார். அந்த ஜதிகளைக் கேட்டு நானே சொல்லிச் சொல்லி ஒத்திகை பார்ப்பேன். இதை அறிந்து என் குரு தானாகவே எனக்கு நட்டுவாங்கமும் பயில்வித்தார்.


காந்தி: இந்தியாவில் உங்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்கள் குறித்து...
சுதா: ஒன்றல்ல, பல உண்டு. 1968ல் எனக்கு நடனக் கலைக்கான இந்திய அரசின் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. இரண்டு ஆண்டுகள் வரை ரூ. 250 கொடுத்தார்கள். அதற்குத் தகுதிபெற நான் சங்கராபரண ராகத்தில் 'சாமிக்கு சரி எவரே' என்ற பாடலுக்கு ஆடினேன். என்னுடன் போட்டியிட்டவர் ஜீவரத்தினம் மாலா. நடுவர்களாக வந்தவர்கள் ருக்மணி தேவி அருண்டேல், வி. கிருஷ்ணன் ஐயர், டாக்டர் திரு. வி. ராகவன் ஆகியோர். இது எனக்கு மிக கௌரவமான சன்மானமாகும்.

இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஒருமுறை என்னிடம் சொன்னார் "உன் நடனத்தில் ஆன்மீகம் இருக்கிறது. எக்காரணம் கொண்டும் இந்தக் கலையை நிறுத்தாதே. அதேபோல் பகவத்கீதை படிப்பதையும் நிறுத்தாதே." அவர் சொன்னதை வேத வாக்காகக் கொண்டு தினமும் மதியம் 2:30 மணிக்கு ஹவாயில் உள்ள ISKCON அன்பர்களுடன் பகவத்கீதை கருத்துப் பரிமாற்றம் செய்து வருகிறேன்.

காந்தி: நீங்க அமெரிக்காவுக்கு எப்ப வந்தீங்க?
சுதா: 1967 ஜனவரி பதினாலாம் தேதி கனடாவிலுள்ள விண்ட்ஸரில் என் கணவர்கூட அவரது பணிநிமித்தமாக வந்திறங்கினேன். அன்றைக்குப் பெரிய பனிப்புயல். எங்கு பார்த்தாலும் வெள்ளை வெளேர் விரிப்பு. அன்று பொங்கல் பண்டிகை வேறு. நம் இந்திய வழக்கம் போல் காக்கைக்கு உணவு வைக்க வேண்டி 'கா....கா'ன்னு நான் கூவ, "இங்கே காக்காவெல்லாம் கிடையாது"ன்னு என் கணவர் சேகர் சொல்லிச் சிரித்தார். எனக்கு ஒரே ஆச்சரியம். வின்ட்ஸர் பல்கலைக்கழகத்தில் பல நடனங்கள் ஆடியுள்ளேன். சில வருஷங்களுக்குப் பின்னால மிச்சிகனுக்குக் குடிபெயர்ந்தோம்.

காந்தி: இந்தியாவிலேருந்து வந்த பிறகு என்னென்ன செய்திருக்கிறீங்க?
சுதா: இன்றுவரை ஏறத்தாழ ஏழாயிரம் தனி நடனங்கள் ஆடியிருக்கேன். திருப்பாவையை முதன்முதலில் நாட்டியமாக்கியது, ஹிந்தி பஜனைகளுக்கு அபிநயம் கொடுத்தது போன்ற நவீன யுக்திகளை அறிமுகப்படுத்தி இருக்கேன். லாவணி, பாங்கடா, மார்வாரி, ராஜஸ்தானி, காஷ்மீரி ஆகிய இதர நடனங்களைப் பயின்று ஆடி இருக்கேன்.
காந்தி: உங்கள் நடனப் பள்ளிக்கு 'ஹிந்து டெம்பிள் ரிதம்ஸ்' என்று ஏன் பெயர் வைத்தீர்கள்?
சுதா: நாட்டிய சாஸ்திரத்தின் அடிப்படையே நம் கோவில்களிலிருந்தும் ஆன்மீக வரலாறுகளிலிருந்தும்தான் பெறப்பட்டுள்ளது. இன்றைக்குப் பல சமூக நடனங்கள் இருந்தாலும் பரதநாட்டியத்தின் ஒவ்வொரு வடிவமும் வரலாறும் பேணிப் பாதுகாக்கப்படுவது கோவில்களில்தான் என்பது என் கருத்து. இக்கலையை வளர்த்த தேவதாசிகளைத் தலை சாய்த்து வணங்குகிறேன். பேணிய எல்லோருக்கும் என் நன்றியும்.

கே: உங்கள் குடும்பம் பற்றி....
சுதா: என் கணவர் சந்திரசேகர் என் பரம ரசிகர். அவர் மறைந்து இருபது ஆண்டுகள் ஓடிவிட்டன. அவரை நினைக்காத நாள் இல்லை. என் கலைப் பணிக்கு அவர் தூண்டுகோலாக இருந்தார். எங்களுக்கு மூணு மகள்கள். ஸ்ரீவித்யா, அஞ்சலி, ஆனந்தினி. மூவரும் நடனத்திலும் சங்கீதத்திலும் சிறந்து விளங்குகின்றனர். ஏன், எழுத்திலும்கூடத்தான்.

காந்தி: பேசுகையில் அடிக்கடி 'ராதே கிருஷ்ணா' என்று சொல்கிறீர்களே?
சுதா: எங்கள் குடும்பமே ஸ்ரீ ஹரிதாஸ் கிரி சுவாமியின் பக்தர்கள். கலியுகத்தில் நாம சங்கீர்த்தனத்தை உயிர்ப்பித்தத்திலும் நலிந்து கொண்டிருந்த நாம சங்கீத இசை வித்வான்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டியதிலும் குருஜியின் பங்கை வரலாறு பேசும். அவர் அடிக்கடி "ராதே கிருஷ்ணா" என்று கூறுவார். அதுவே எனக்கும் பழக்கமாகிவிட்டது.

காந்தி: உங்கள் வாத்தியக் குழு அன்பர்கள் யார், யார்?
சுதா: முக்கியப் பாடகர் கோபால் வெங்கட்ராமன். சங்கீத வித்வான் கலாநிதி நாராயணன் பரம்பரையில் வந்தவர். கணினித் துறையில் இருந்து கொண்டே சங்கீதமும் பயின்றவர். தமிழில் நன்கு கவிதைகளும் பாடல்களும் எழுதக் கூடியவர். இதுவரை 33 தில்லானாக்களை எழுதி இசையும் வர்ணமும் அமைத்துள்ளார். என் மூத்தமகள் ஸ்ரீவித்யா எங்கள் குழுவில் பாடுவார். 12ம் வயது முதல் பாடத்துவங்கிய ஸ்ரீவித்யா, இரண்டு உலக ரிகார்டுகள் படைத்திருக்கிறார். முதல் ரிகார்டு, 48 மணிநேரம் விடாமல் நடனம் ஆடியதற்கு. இரண்டாவது ரிகார்டு தன் தந்தையின் நினைவாக 72 மணிநேரம் விடாமல் நடனம் ஆடியதற்கு. மிஸ் இந்தியா யூ.எஸ்.ஏ மற்றும் மிஸ் மிச்சிகன் ஸ்டேட் ஃபேர் பட்டங்களைப் பெற்றவர். மிருதங்கம் வாசிக்கிறார் ஜெயசிங்கம். அனிருத் புல்லாங்குழல் வாசிக்கிறார்.

காந்தி: தங்களுக்குப் பிடித்த பாடல், நடனம், ராகம் என்ன?
சுதா: கபீர்தாஸ் எழுதிய "குரு கிருபாஞ்சலி பாயோ மேரே பாயி", ராஜாஜி எழுதிய "குறையொன்றுமில்லை", "பாவயாமி ரகுராமம்" இவை எனக்கு மிகவும் பிடித்தவை. பைரவி, தோடி, சங்கராபரணம், ஹிந்தோளம், ஹம்ஸாநந்தி, ஆபோகி, பவதாரி, ஷண்முகப்ரியா இவை எனது பிரியமான ராகங்கள். "பாவயாமி ரகுராமம்", "பைரவி தான வர்ணம்" "விரிபோணி" ஆகியவற்றுக்கு நடனம் ஆட எனக்கு மிகவும் பிடிக்கும்.

காந்தி: நடனக் கலையை நாடும் இளைஞர்களுக்கு உங்கள் அறிவுரை...
சுதா: நிறைய ஒத்திகை பாருங்கள். குரு ஊரில் இல்லையென்று ஒத்திகையைத் தள்ளிப் போடாதீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் ஒரு குரு இருக்கிறார். அவரை விழிக்கச் செய்து, அவர் முன் ஒத்திகை பாருங்கள். ரசித்து ஆடுங்கள். கற்று முடித்த பின்னரும் உங்கள் நடனப் பள்ளியை மறந்துவிடாமல், தொடர்ந்து அதற்கு உங்கள் பங்களிப்பைச் செய்யுங்கள்.

பரதநாட்டியத்தைப் பற்றித் தாம் கடந்து வந்த பாதை, ஆடலரசன் சிவபெருமான், தனது இஷ்ட தெய்வம் கிருஷ்ணர் ஆகிய கருத்துகளில் புத்தகங்கள் எழுதும் முயற்சியில் இறங்கியுள்ளார். மராட்டி 'கீத் ராமாயண்', சிலப்பதிகாரம் ஆகியவற்றுக்கு நடனவடிவம் தருகிற ஆவலும் உண்டு. அமெரிக்காவின் தொன்மையான ஆலயங்களில் ஒன்றான மிச்சிகன் டிராயில் உள்ள பாரதி கோவிலில் 25 ஆண்டுகளாக நடனம் பயில்வித்து வரும் சுதா, கேன்டன் கோவில், பாலாஜி வேதிக் சென்டர், தமது இல்லம் ஆகிய இடங்களிலும் நடனம் பயில்விக்கிறார். தென்றலுக்காக நம்மோடு உரையாடிய அவருக்கு வாழ்த்தும் நன்றியும் கூறி விடைபெற்றோம்.

சந்திப்பு: காந்தி சுந்தர்

என்னிடம் ஆட்டோகிராஃப் கேட்டார் நேரு
ஒருமுறை எனக்கு சமஸ்கிருதப் பரீட்சை. காளிதாஸரின் சாகுந்தலத்தை நன்றாகப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அகில இந்திய வானொலி நிலையம் என் குருவைத் தொடர்பு கொண்டு, அப்போதைய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு என்னை ராஷ்டிரபதி பவனில் நடனம் ஆட அழைத்ததாகத் தெரிவித்தனர். நியூசிலாந்து பிரதமர் வால்டர் நேஷ் அவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் இந்நடனம் நடைபெற்றது. 1968ம் வருடம் அது. என் குரு, அவரது சகோதரி ஆசான் கருணாம்பாள், நான் மூவரும் டெல்லிக்குச் சென்றோம். ஆசான் கருணாம்பா மெத்தப் படித்தவர். அடக்கமே உருவானவர். நடனக் கலையில் புகழ்பெற்ற கௌரி அம்மாவுக்கு நிகரானவர். நாங்கள் மூவரும் இருந்த அறைக்குள் பிரதமர் நேரு, வால்டர் நேஷுடன் உள்ளே நுழைந்தார். "லுக் வால்டர் - திஸ் இஸ் இந்தியா" என்று கருணாம்பாள் ஆசானைக் காண்பித்துக் கூறினார் நேரு. நடனம் முடிந்தபின் நான் அவரிடம் ஆட்டோகிராஃப் கேட்க, அவர், "நீதான் கலைஞர். நீதான் உன் ஆட்டோகிராஃபை எனக்குக் கொடுக்க வேண்டும்" என்று பெருந்தன்மையாகப் புன்சிரிப்புடன் கூறினார்.

*****


அம்மா தந்த பழச்சாறு
என் தாயார் ஜெயா துரைசாமி எனக்குக் கிடைத்த வரப்ரசாதம். நடனத்தை என்மேல் திணிக்காமல் அதன்மேல் எனக்குத் தனி பக்தியை ஊட்டினார். சிலசமயம் நான் நடனமாடும்போது லேசான தொய்வு தெரிந்தால், அம்மா அரங்கத்தின் உள்ளிருந்து எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து கொடுப்பதுபோல் எனக்குக் காண்பிப்பார். அதைப் பார்த்தவுடனேயே எனக்குத் தெம்பு வந்து விடும்.
மேலும் படங்களுக்கு
More

கு. ஞானசம்பந்தன்
Share: 




© Copyright 2020 Tamilonline