Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
பொது
தாலாட்டு பாடாத பாரதி
"இந்தியா அழைக்கிறது!"
உண்மைச்சம்பவம் - நட்பு
கீதாபென்னெட் பக்கம்
கல்லாப்பெட்டி
இந்தியப் பங்குமார்க்கட்டில் சுறுசுறுப்பு - ஏராளமான வெளிநாட்டு முதலீடு
ரகுராம் ராஜன் - இந்தியாவுக்குப் பெருமை!
அபரிமிதமான டாலர்
சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளித்திரை கண்ட வெட்டுக்கள்
வரலாறு ஒரு போதும் மன்னிக்காது
- துரை.மடன்|ஆகஸ்டு 2003|
Share:
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன் மற்றும் சகநாடுகள் வீழ்ந்துவிட்ட நிலையில், ஜப்பான் மட்டும் பிடிவாதமாகப் போரில் திளைத்திருந்தது. ஜப்பானை எப்படிப் பணிய வைப்பது என அமெரிக்கா அதிகாரவர்க்கம் ஆலோசித்தது. அதன் விளைவுகள்தான் ஜப்பான் மீது குண்டு வீசும் திட்டம்.

ஆகஸ்டு 6, 1945

காலை 8.15க்கு திட்டமிட்டபடி அமெரிக்காவின் தாக்குதல் ஜப்பான் மீது தொடுக்கப்பட்டது. ஆம் ஹிரோஷிமா நகரம் குண்டுவீச்சுக்கு இலக்கானது. ''Little Boy' என்றழைக்கப்பட்ட முதல் அணுகுண்டு ஹிரோஷிமா நகரையே அழித்தது.

மீண்டும் ஆகஸ்டு 9, 1945. 11.02 மணிக்கு இரண்டாவது அணுகுண்டு ‘Fateman’ நாகசாகியின் மேல் போடப்பட்டது. ''அணுகுண்டு வெடித்தவுடன் கண்ணை மறைக்கும் மின்னல் தோன்றியது. பெரும்அளவிலான கரும்புகை சுழன்றபடி மேலெழுந்தது. ஒரு பெரிய காளான் போல் வளர்ந்த புகையினூடாக 40,000 அடிகளுக்கு தீ மேலெழுவதைக் கண்டேன் என அணுகுண்டு வீசிய விமானத்தின் தொழில்நுட்ப ராணுவ அதிகாரி அஸவர்த் குறிப்பிட்டுள்ளார்.

அணுகுண்டு வீச்சின் விளைவாக மக்கள் நெருக்கமும் கட்டடப் பெருக்கமும் கொண்ட இரு நகரங்களும் அந்தக் கணத்திலேயே அழிந்து ஒளிவெள்ளமாயின. ஹிரோஷிமாவில் வெடிப்பு நேர்மையத்திலிருந்து (ஹைப்போசென்டர்-வெடிப்புக்கு நேர்கீழே உள்ள நிலப்பகுதி) 4 கி.மீ. ஆரத்துக்குள் இருந்த 76,000 கட்டங்களில் 92 சதவீதத்துக்கும் மேல் வெடித்தும் எரிந்தும் இடிந்தும் போயின. நாகசாகியில் இருந்த 51,000 கட்டடங்களில் 36 சதவீதம் அவ்வாறே நாசமாக்கப்பட்டன. ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் வெடிப்பு நேர்மையத்திலிருந்து முறையே 27 கி.மீ, 19 கி.மீ வரை இருந்த கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறி இருக்கக் கண்டார்கள்.

ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமாவில் இருந்ததாகக் கணக்கிடப்பட்ட 3,50,000 பேரில் 2 லட்சம் பேர் மடிந்தார்கள். நாகசாகியில் 1945 ஆகஸ்ட் 9 அன்று இருந்ததாக மதிப்பிடப்படும் 2,70,000 பேரில் சுமார் 1,40,000 பேர் அதே முடிவைச் சந்தித்தார்கள். இலக்குப் பகுதிகளில் சாவும் அழிவும் கண்மூடித்தனமாக இருந்தன. குழந்தைகளோ பெண்களோ இளைஞரோ, முதியோரோ, குடிகளோ, படைகளோ, குடியிருந்தோரோ, வருகை புரிந்தோரோ, வீடுகளோ, தொழிற்சாலைகளோ, மருத்துவமனைகளோ, பள்ளிகளோ எதுவும்விட்டு வைக்கப்படவில்லை. பலியானவர்களில் 90 சதவீதத்துக்கு மேல் பொதுமக்கள் இந்த அழிவும் துன்பமும் இன்றுவரை உயிர்பலி வாங்கி வருகிறது. முதல்நிலைப் பலியாள்களைத் தவிர கதிர்வீச்சு எச்சத்தால் பாதிக்கப்பட்ட இரண்டாம் நிலைப்பலியாள்களும் இருக்கிறார்கள்.

உலக வரலாற்றில் ஹிரோஷிமா நாசகாகி 'மரணச் சாம்பலால்' கறைபடிந்த மனிதநேயத்துக்கு விடப்பட்ட சவாலாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் நாம் வரலாற்றில் கற்க வேண்டியுள்ளது. ''எல்லா அணுகுண்டுகளும் தீமையானவை; எல்லா அணு உலைகளும் கல்லறைக் குழிகள்; எல்லா அணு ஆயுதங்களும் சவப்பெட்டிகள்'' என்று எப்பொழுது கற்றுக் கொள்ளப் போகிறார்களோ? அன்றுதான் மனிதசமுதாயத்தின் எதிர்காலம் கட்டிக் காக்கப்படும். ''நான் இப்போது உலகங்களை அழித்தவனாக இறந்து கொண்டிருக்கிறேன்'' என்று அணுகுண்டு சோதனையை முதல்முறையாக வெற்றிகரமாக முடித்த ஜே ராபர்ட் ஓபன்ஹெய்மர் வெடித்து அழுகிறார். ஆனால் நாம் எப்போது கற்றுக்கொள்ளப்போகிறோம். அணு ஆயுதங்களை எதிர்க்கும் மனிதர்களாக நாம் எப்போது மாறப்போகிறோம் என்பதில் தான் நமக்கான எதிர்கால கேள்வி தங்கியுள்ளது. நமக்குப் பின் வரும் சந்ததியினரை ஒளிரச் செய்வதே நமது கடமை. ஒழியச் செய்வது அல்ல. ஏனெனில் நமக்கு வரலாறு கற்றுக் கொடுத்திருப்பது இதைத்தான்.

சில இரவுகளில்
எனது தூக்கம் திடீரென்று கலைக்கப்படுகிறது.
எனது கண்கள் திறக்கின்றன.
அணு ஆயுதங்களைக் கண்டுபிடித்த
அந்த விஞ்ஞானிகளைப் பற்றி நினைக்கிறேன்.
ஹிரோஷிமா- நாகசாகியில் நிகழ்ந்த
பயங்கர இனப்படுகொலை பற்றிய
செய்தியைக் கேட்டபோது
இரவில் அவர்கள்
எப்படித் தூங்கியிருப்பார்கள்?
தாங்கள் செய்தது சரியல்ல
என்ற உணர்வு அவர்களுக்கு
ஒரு வினாடியாவது ஏற்பட்டதா?
ஏற்பட்டிருந்தால் காலம் அவர்களைக்
குற்றவாளிக்கூண்டில் ஏற்றாது.
இல்லையென்றால் வரலாறு அவர்களை
ஒருபோதும் மன்னிக்காது.

இப்படி 'ஹிரோஷிமாவின் வலி'யை பதிவு செய்த இந்தியக் கவிஞர் வேறுயாருமல்ல இந்தியப் பிரதமர் வாஜ்பாய் அவர்கள்தான். ஆனால் 'பொக்ரான் 11' இன் விளைவுகளைப் பற்றி பிரதமர் வாஜ்பாய் ஒரு வினாடியாவது சிந்தித்தரா! தெரியாது. 1998 மே 11 மற்றும் 13தேதிகளில் பொக்ரானில் நடந்த அணு ஆயுத சோதனை தேசப் பாதுகாப்புக்கு தேவை என்றுதான் அரசு தரப்பில் கூறப்படுகிறது.

அணு ஆற்றல் பற்றிய அறிவையும் பிரயோகத்தையும் சமாதான நோக்கங்களுக்காகப் பயன்படுத்துதல் என்பதுவே இந்தியாவிற்குத் தெரிந்த ஒரே அணுசக்தித் திட்டமாக இருந்தது. சுதந்திரம் பெற்றதில் இருந்து அதையே இந்தியா உச்சரித்தும் கடைப்பிடித்தும் வந்தது.

1974ன் பொக்ரான்11-ம் 'சமாதான அணுசக்தி பரிசோதனை' என்றே அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவிடமிருந்தும் பிறரிடம் இருந்தும் மிகுந்த அழுத்தம் வந்த போதிலும் இந்தியா உறுதியாக இருந்தது. ஒட்டுமொத்த சோதனைத் தடை ஒப்பந்தத்தில் (சிடிபிடி) கையெழுத்திடவில்லை. இதற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்தன. குறிப்பாக மூன்றாம் உலகம் மிக உயர்வாகவே மதித்தது.

"ஆயுதமயமாக்கத்திறன் இருந்தும் அவ்வாறு செய்யாதிருந்ததற்காக இந்தியாவுக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருந்தது. தார்மீக ரீதியாக நாம் மிக வலுவாக இருந்தோம். அணு ஆயுத உடைமையாளர்கள் தம் அணு ஆயுதப் படைக்கலங்களை கைவிடும்படிச் செய்வதற்காக தொடர்ந்தும் போராடத் தகுதியான நிலையில் இருந்தோம்'.
அந்தோ அவையெல்லாம் மே 11 (1998) அணு வெடிப்புப் புகையோடும் கதிர்வீச்சோடும் கலந்து காணாமல் போய்விட்டன. அதன்பின் உடனடியாக நம்மை ஒரு அணு ஆயுத அரசு என அறிவித்துக் கொள்ளத் தொடங்கிவிட்டோம். அணு ஆயுதப் போர்த்திட்டமே இல்லாமலேயே தன்னை ஒரு அணுஆயுத சக்தி என அழைத்துக் கொள்வது 'குரங்கு கையில் பூமாலை?'' என்னும் ஒரு தமிழ் பழமொழியை நினைவுப்படுத்துகின்றது. குரங்கிடம் ஒரு பூமாலையைக் கொடுத்துவிட்டு அது பிய்தெறியப்படாமல் அப்படியே இருக்க வேண்டும் என எதிர்பார்த்தால் நடக்குமா?

இவ்வாறு தனது சிந்தனைகளை சந்தேகத்தை வெளிப்படுத்தியவர் அட்மிரல் எல். ராமதாஸ் (கப்பற்படையின் முன்னாள் தளபதி) அவரது 'பொக்ரான் 11ம் அதன் விளைவும்'' என்ற கட்டுரை இந்தியாவின் எண்ணப்போக்கை அணுஆயுதக்கோட்பாடு பற்றிய தெளிவின்மையை இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத போர்த் தன்மைக்கும் அதன் விளைவுகளுக்கும் உள்ளாகிவரும் போக்கு என பல்வேறு பிரச்சனைகளை ஆலோசனைகளை கட்டுரை வெளிப்படுத்தி இருந்தது.தென் ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி போட்டு அணுஆயுத வெடிப்புகளில் ஈடுபட்டமை 'அணுஆயுதமயமாதலின்' போக்கையே, வெளிப்படுத்துகிறது. அணு ஆயுதங்களை உருவாக்கி இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய குடிமக்கள் மீது பிரயோகித்து மோசமான விளைவுகளுக்கு காரணமானது அமெரிக்கா. சுமார் 4 ஆண்டுகளாக அணு ஆயுதங்கள் மீது முற்றான ஏகபோகத்தைக் கொண்டிருந்தது.

ஆனால் 1949ல் சோசலிச சோவியத் ஒன்றியம் தன்னை ஒரு அணுஆயுத அரசாக வெளிப்படுத்தி அத்துறையில் துரித பாய்ச்சல்களை நிகழ்த்தியது. மேலும் இத்துறைசார் வளர்ச்சியில் அறிவும் தொழில்நுட்பமும் பல்கிப் பெருகவே 1952இல் இங்கிலாந்தும் 1960இல் பிரான்சும் 1964இல் சீனமும் அங்கீகரிக்கப்பட்ட அணு ஆயுத அரசுகள் ஆயின. இந்த வரலாற்று தொடர்ச்சியில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.

ஆக இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளும் தற்போது தங்கள் வசம் அணுகுண்டுகளை வைத்துள்ளன. இரண்டு நாடுகளும் அதை நியாயப்படுத்துகின்றன. விரைவிலேயே மற்ற நாடுகளும் இதையே செய்யப்போகின்றன.

பாதுகாப்புக்கு அணுஆயுதத்தை முன் வைப்பது எலும்புத் துண்டிற்கு நாய்களை காவல் வைப்பது போலத்தான் உண்மையில் மனித உறவுகளே பாதுகாப்பு தரமுடியும். அணு ஆயுதமல்ல, அவை பயத்தையே தரும். பயம் வாழ்க்கையை உருக்கும், உருக்குலைக்கும்.

ஹிரோஷிமா - நாகசாகி மேல் எறியப்பட்ட 'பொடியனும் தடியனும்' மனிதஜீன்களில் புகுந்து விளையாடுவதை இன்றுவரை காணலாம். வரலாறு கற்றுத்தரும் பாடம் எதிர்காலத்தின் சுபிட்சமான ஒளி மிகுந்த வாழ்க்கைக்கான உரைகல். இன்று ஹிரோஷிமா - நாகசாகி மனிதநேயத்தை ஒவ்வொரு கணமும் அறிவிக்கும் முழக்கம் தான். அணு ஆயுதங்களை எதிர்க்கும் மனித சங்கிலியின் உயிர்ப்பும் உறைவிடமும் அதுதான்.

துரை.மடன்
More

தாலாட்டு பாடாத பாரதி
"இந்தியா அழைக்கிறது!"
உண்மைச்சம்பவம் - நட்பு
கீதாபென்னெட் பக்கம்
கல்லாப்பெட்டி
இந்தியப் பங்குமார்க்கட்டில் சுறுசுறுப்பு - ஏராளமான வெளிநாட்டு முதலீடு
ரகுராம் ராஜன் - இந்தியாவுக்குப் பெருமை!
அபரிமிதமான டாலர்
சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளித்திரை கண்ட வெட்டுக்கள்
Share: 




© Copyright 2020 Tamilonline