Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்
போகிற போக்கில்
Tamil Unicode / English Search
நேர்காணல்
மெயில் பேக் தர்மராஜ்
- மனுபாரதி|ஆகஸ்டு 2003|
Share:
Click Here Enlargeமெயில் பேக் தர்மராஜ் - இந்தப் பெயருக்கு விரிகுடாப்பகுதி மக்களிடையே எந்த அறிமுகமும் தேவையில்லை.

"வணக்கங்க...சௌக்கியங்களா?" இந்த வாக்கியம் மெயில் பேக் கடைக்குள் நுழையும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் பரிச்சயமான வரவேற்பு வாக்கியம். தமிழ் நாட்டில் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தும் அவரது கடை. வட இந்தியக் கடைகளே நிரம்பி இருந்த காலத்தில் நடன ஆடை முதல் கொலுபொம்மை வரை பலதரப்பட்ட தமிழ்க் கலாச்சார மணம்வீசும் பொருட்களை விற்கத்தொடங்கிய முன்னோடியான இவர் செய்த சேவையைப் பாராட்டுமுகமாக விரிகுடாப்பகுதித் தமிழ்மன்றம் அண்மையில் இவரைத் தன் ஆயுள் உறுப்பினராக்கிக் கவுரவித்தது. அவரது பன்முகத்தை அவர் மூலமே தெரிந்துகொள்ளலாம்:

கே: நீங்கள் சுமார் 35 வருடங்களாக அமெரிக்காவில் வாழ்ந்துவருகிறீர்கள். முதன்முதலாக இங்கே காலடி எடுத்து வைத்தது பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.

ப: நான் திருச்சியில்தான் வளர்ந்தது, படித்தது எல்லாம். சென்னை லயோலா கல்லூரியில் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்று, திருச்சி செயிண்ட் ஜோச·ப் கல்லூரியில் முதுகலை முடித்தபின், அடுத்து என்ன செய்வது என்று யோசித்தேன். உப்பளம் வைத்து வியாபரம் செய்யலாம் என்ற ஆர்வம் பிறந்தது. அதைப்பற்றிக் கற்றுக்கொண்டு துவங்கப் போனேன். ஆனால் நிலம் ஒன்றும் குத்தகைக்கு எடுக்க இயலாமல் எல்லாம் கைவிட்டுப் போனதில் அதைச் செய்யமுடியவில்லை. அப்பொழுது ஐரோப்பா சென்று படிப்பது பற்றி ஒரு நண்பர் தகவல் கொடுத்தார். என் அண்ணன் "ஐரோப்பா என்ன, அமெரிக்காவிலே சென்று படிக்கலாமே" என்று ஊக்குவித்தார்.

லூயிஸியானா மாநிலப் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. இரண்டுமுறை முயற்சி செய்து ரிசர்வ் வங்கி அனுமதி (அந்நாளில் வெளிநாடு போகத் தேவை) வாங்கி அமெரிக்காவில் படிக்க நுழைந்தேன். துவக்கத்தில் ஏதோ வேறு கிரகம் போலத்தான் இருந்தது. ஆனால் எல்லாம் போகப்போகச் சரியாகிவிட்டது.

கே: படித்ததும் வேலைக்கு வந்துவிட்டீர்களா?

ப: இல்லை. மேலும் ஒரு முதுகலைப் படிப்பை அங்கேயே படித்தேன். அதன்பின் UCLAவில் முனைவருக்கான (Ph.D) ஆராய்ச்சி வாய்ப்புக் கிடைத்ததும் லாஸ் ஏஞ்சலஸிற்கு வந்தேன்.

கே: இங்கே கடையில் அமர்ந்து கொண்டிருக்கும் நீங்கள் ஒரு டாக்டர் பட்டம் பெற்றவர் என்பது ஆச்சர்யமான தகவல்.

ப: இல்லை. முனைவர் பட்டம் வாங்கும் முன் உல்வொர்த் (woolworth) என்ற டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் மேனேஜர் வேலை கிடைத்துவிட்டது. அவர்களுக்கு நான் எல்லாரிடமும் நன்றாகப் பேசுவது பிடித்திருக்க வேண்டும். என் பேராசிரியரே இந்த வேலையை ஒத்துக்கொள்ள ஊக்குவித்தார். அங்குதான் ரீடெயில் வியாபாரம் பற்றி எல்லாம் கற்றுக்கொண்டேன். அந்த அனுபவத்தில்தான் இந்தக் கடை வைத்தது. உல்வொர்த்தில் பல வருடங்கள் வேலை பார்த்து நல்ல நிலையை எட்டியவுடன் இன்னும் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்த கடைகளை எடுத்து நடத்தினேன். அவற்றின் திசையை லாபத்தை நோக்கித் திருப்பியபின், விட்டுவிட்டு விரிகுடாப்பகுதிக்கு வந்து சேர்ந்தேன்.

கே: உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்.

ப: மனைவி பெயர் சசிகலா; எங்களுக்கு ஒரே ஒரு மகள் மட்டும். இப்பொழுது கல்லூரியில் சென்று படிக்கப்போகிறாள்.

கே: மெயில் பேக் - இந்தக் கடை இங்கு வாழும் தமிழர்களுக்கும் தென்னிந்தியர்களுக்கும் மிகவும் பரிச்சயமான கடை. அதன் ஆரம்பம்பற்றிச் சொல்லுங்கள்.

ப: கடை வைக்கலாம் என்று முடிவெடுத்து இங்கே நிறைய அலைந்து கொண்டிருந்த காலத்தில் மெயில் பேக் இருக்கும் கட்டட அடுக்கில் வேறு ஒரு கடை காலியாக இருப்பதாக சொன்னார்கள். வந்து பார்த்த போது அது மிகவும் பெரியதாக இருந்தது. 'என்னடா இப்படி ஆகிவிட்டதே' என்று யோசித்தபடி பக்கத்துக் கடையில் கா·பியும் ஒரு நோட்டும் வாங்கிக்கொண்டு இந்த மெயில் பேக் கடையில் நுழைந்தேன். அப்பொழுதும் இதற்கு அதே பெயர்தான். உரிமையாளரிடம் மிகவும் எதேச்சையாகக் கடை வாங்குவதைப் பற்றிச் சொன்னேன். அவர் "இந்தக் கடையை வாங்கிக்கொள்கிறாயா?" என்று திடீரென்று கேட்டார். எல்லாம் ஒத்துப்போனதால் கடை எனக்குக் கைமாறியது. தொடக்கத்தில் FedEx, UPS போன்ற அஞ்சல் கடையாக மட்டும்தான் இருந்தது.

கே: வீடியோ, கொலு பொம்மை, பரதநாட்டியப் பொருட்கள் என்று விரிந்தது எப்படி?

ப: எல்லாம் என் நண்பர்கள் கொடுத்த யோசனையும் ஊக்கமும்தான். நவராத்திரி என்பது தமிழகத்தில் வைக்கப்படும் கொலுவினால் தான் மற்ற கலாச்சாரத்திலிருந்து வித்தியாசப்படுகிறது. இங்கிருப்பவர்களுக்குக் கொலுவைக்கமாட்டோமா என்ற ஏக்கம் இருந்தது. அதைச் சரிக்கட்டலாம் என்று முதலில் மிகவும் சிறிய அளவில்தான் இதைத் தொடங்கினேன். வருடாவருடம் தேவை கூடியபடியே இருக்கிறது. பொம்மைகளைத் தேர்வுசெய்து இந்தியாவிலிருந்து தருவிக்கிறேன். பரதநாட்டியம் பயிலும் குழந்தைகளுக்கு அரங்கேற்றம் போன்ற நிகழ்ச்சிகளுக்குத் தேவையான பொருட்களையும் விற்கிறேன். வருமானவரிப் படிவங்களைத் தாக்கல் செய்வதில் பயிற்சி எடுத்துத் தேறி சில ஆண்டுகளாக அதைச் செய்துவருகிறேன். இதற்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. நான் ஒரு 'நோட்டரி பப்ளிக்'கும் கூட. கொஞ்ச நாட்களுக்கு மிகவும் மலிவான விலையில் வீடியோ கன்வர்ஷன் கூட செய்திருக்கிறேன்.

கே: வெறும் கடையாக இருந்த மெயில் பேக் கலாச்சார சந்திப்பு மையம் ஆனது எப்படி?

ப: கலாச்சார சந்திப்பு மையமாக மாறியது கடையின் வாடிக்கையாளர்களால் தான். வருபவர்கள் வெறும் வியாபாரத்துடன் மட்டும் நிறுத்திக் கொள்வதில்லை. "நான் வக்கீலாக இருக்கிறேன். யாருக்காவது வழக்கு என்று வந்து கேட்டால் சொல்லுங்கள் சார்", "என் அம்மாவிற்கு எலும்பு முறிவு ஆகிவிட்டது. இங்கு தமிழ் பேசும் மருத்துவர் யாராவது உங்களுக்குத் தெரியுமா?", "என்னுடைய கம்பெனியில் இரண்டு வேலைகள் காலியாக இருக்கின்றன. யாராவது விசாரித்தால் சொல்லுங்கள்" என விதவிதமாய்க் கோரிக்கைகள் வரும். ஏதோ என்னால் முடிந்தவரை இவற்றை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு தேவைப்படுபவருக்குச் சொல்லியிருக்கிறேன். இப்படித்தான் கடை மிகவும் பிரபலமானதுன்னு நினைக்கிறேன். நண்பர்களின் வாய்வழியாகப் பரவியதுதான் அதிகம்.

இன்னொன்று சொல்லவேண்டும். வெறும் விரிகுடாப் பகுதிக்கு மட்டுமே அறிமுகமாயிருந்த கடையை உலகத்துக்கே அறிமுகம் செய்துவைத்தது நண்பர் சரவணன் தீனதயாளனும் மற்றும் அவரது மனைவியார் பொன்னி சரவணனும் தான். அவர்கள் தான் mail-bag.com வலைதளத்தைத் துவக்கி ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, மலேசியா என்று பல நாடுகளிலும் பிரபலமாக்கினார்கள். இப்பொழுது இலவசமாக அதில் கல்யாணத்திற்கு வரன்களைப் பட்டியலி டுகிறோம். உலகம் முழுதும் நல்ல வரவேற்பு.

கே: மெயில் பேக் தவிர நாஸ் திரையரங்கில் உங்களைப் பார்த்திருப்பது பலருக்கு நினைவிருக்கும். தமிழ்ப் படங்களைத் திரையிடும் பொறுப்பை ஏற்று சில வருடங்கள் நடத்தியிருக்கிறீர்கள். அந்த அனுபவம் பற்றி..

ப: நான் 16 mm படங்கள் இருந்த காலத்திலேயே லாஸ் ஏஞ்சலஸில் தமிழ்ப்படங்களைத் திரையிட்டதுண்டு. இங்கே வந்தபொழுது அதைத் தொடர்ந்தால் என்ன என்று தோன்றித்தான் இந்தத் திரையிடும் வியாபாரத்தில் நுழைந்தேன். 5 டாலருக்குள் டிக்கெட் விலை இருந்தால் மக்கள் வருவார்கள் என்று டிஸ்ட்ரிபியூட்டர்களிடம் போராடி, நாஸ் மற்றும் ஏ.எம்.ஸி திரையரங்கு உரிமையாளர்களிடம் அனுமதி வாங்கித் திரையிட ஆரம்பித்தேன். மக்களின் வாய்வழியேதான் இதுவும் பிரபலமாகி நிறையக் கூட்டம் வந்திருக்கிறது. Y2K காலங்களில் கூட்டம் அலைமோதும். இரண்டு காட்சிகள் வாரத்திற்கு என்பது மூன்றாகி, நான்காகி நிறையப் பெருகியது அப்போதுதான்.

கே: விரிகுடாப்பகுதி தமிழ் மன்றத்திற்கு விலாசம் என்பது இன்றும் மெயில் பேக் முகவரிதான். மன்றத்தோடு உங்களின் தொடர்பு பற்றி சொல்லுங்கள்.

ப: உண்மைதான். இங்கு வந்த புதிதில் - 1981 என்று நினைக்கிறேன் - தமிழ் மன்றம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றுக்குப் போக நேர்ந்தது. நம் ஆட்கள் அத்தனை பேரையும் பார்த்ததில் ரொம்பக் குஷியாகிவிட்டேன்.

அப்பொழுது தமிழ் மன்றம் மிகவும் ஆரம்ப நிலையில் இருந்தது. எனக்கு நம் சமூகத்திற்கென்று என்ன செய்யச் சொன்னாலும் செய்வதில் உற்சாகமும் ஆர்வமும் தானாக வந்துவிடும். மன்றத்தின் கமிட்டி உறுப்பினராக சேர்ந்து கொள்ளவில்லையே தவிர அதன் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்திருக்கிறேன்.

நான் கடை ஆரம்பித்த புதிதில் ஒரு பொதுவான முகவரி அதன் இயக்கத்திற்குத் தேவைப்பட்டது. மன்ற நிர்வாகிகள் வருடா வருடம் மாறுவதால் தொடர்ந்து என் கடை முகவரியையே பயன்படுத்திக்கொண்டார்கள். அதனால் சிலர் நான்தான் தமிழ்மன்றத்தை நடத்துவதாகக் கூட எண்ணியதுண்டு. (சிரிக்கிறார்).

கே: இவ்வளவு ஆர்வமுடைய நீங்கள் மன்ற நிர்வாகக் குழுவில் ஏன் இருந்ததில்லை?

ப: வாரத்திற்கு ஆறு நாட்கள் கடையில் வேலை, குடும்பம் என எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு தமிழ் மன்றக் கமிட்டியிலும் சேர்ந்து தொண்டாற்ற நேரமில்லை என்பதுதான் உண்மை. ஆனால் மறைமுகமாக மன்றத்திற்கு உறுதுணையாக இருந்துவருகிறேன். அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு என் கடையில் நுழைவுச்சீட்டு விற்றுகொடுத்து உதவியிருக்கிறேன்.
கே: தமிழ்நாட்டுப் பெரிய தலைவர்கள், பிரபலமானவர்கள் - இவர்களுடனான தொடர்பு குறித்துச் சொல்லுங்கள்.

ப: என் தந்தை திராவிடர் கழகத்தில் இருந்ததால் தந்தை பெரியாரை எங்கள் வீட்டில் எல்லாருக்கும் பிடிக்கும். பெரியாரிடம் எனக்கு ரொம்ப பிடித்தது - வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லாருக்கும் மரியாதை கொடுப்பதுதான். ஆறு வயது பையனாக இருந்தாலும் கூட மரியாதை கொடுத்து அவன் சொல்ல வந்த விஷயத்தைக் காதுகொடுத்துக் கேட்கும் பண்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவரது அரசியல், நாத்திகம் இதெல்லாம் பற்றி எனக்கு எந்தக் கருத்தும், சார்பும் இல்லை. டைரக்டர் ஸ்ரீதர் மிக நன்றாகப் பழக்கம். 1978-இல், நான் லாஸ் ஏஞ்சலஸில் இருந்தபொழுது அவருடைய ஒரு படப்பிடிப்பிற்கு என்னாலான எல்லா உதவிகளையும் செய்திருந்ததேன். அதில் அவருக்கு என்னை மிகவும் பிடித்துப் போய் அவரே என்னை தன் குடும்பத்துள் ஒருவர் போல நடத்தியிருக்கிறார். எனக்குப் பெண் பார்த்துத் திருமணம் செய்து வைத்ததில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு.

நடிகை ரேவதி அவருடைய 'மித்ரு மை ·பிரண்ட்' படத்திற்காக இங்கு வந்திருந்தார்கள். படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட சில உதவிகள் செய்து கொடுத்தேன். முன்னாள் நடிகை ஜயஸ்ரீ சந்திரசேகர் அவர்களும் நல்ல தோழமையுடன் பழகுவார்கள். பிரபல சிலிக்கன் வேலித் தொழில்நுட்ப நிறுவன நிர்வாகி கே.பி.சந்திரசேகர் அவர்கள்கூட நல்ல நண்பர்தான். நம் பகுதியைப் பொறுத்தவரை மிகவும் பிடித்த விஷயம் பணம் அந்தஸ்து பார்க்காமல் எல்லாரும் பழகுவதுதான்.

கே: விரிகுடாப்பகுதிக்கு நீங்கள் வந்தது 1981இல். கிட்டத்தட்ட 22 வருடங்களாக இங்கே இருக்கிறீர்கள். என்னென்ன மாற்றங்கள் பார்த்திருக்கிறீர்கள்?

ப: எண்பதுகளில் எல்லாம் மிகவும் குறைந்த எண்ணிகையில்தான் நம் மக்கள் இருந்தார்கள். அதிலும் தமிழர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். 90களின் பிற்பகுதியில் Y2K காலம் மிகவும் செழுமையான காலம் என்று சொல்வேன். அந்தக் காலத்தில் கடைக்கு வரும் அத்தனைபேரின் பெயரையும் தெரிந்துவைத்திருந்தேன். லிவர்மோர் கோவில் அஸ்திவாரம் போட்ட நாளிலிருந்து அதன் வளர்ச்சியைப் பார்த்துவருகிறேன். ஒரே ஒரு நாஸ் தியேட்டரிலிருந்து எட்டாகி எப்பொழுது நிறைய இந்தியத் திரையரங்குகளும், இரண்டே இரண்டு கடைகளிலிருந்து தெருவுக்குத் தெரு இந்தியக் காய்கறி, மளிகை, வீடியோ கடைகளும் பெருகிவிட்டதை பார்க்கிறேன். சந்தோஷம்தான். நில்கிரீஸ், நியு இந்தியா பஜார், பாரத் பஜார் போன்ற கடைகள் எல்லாம் நல்ல சேவை செய்துவருகின்றன. இவர்களின் முதலாளி களுடன் எல்லாம் இன்றும் நல்ல தொடர்பு உள்ளது. மகிழ்ச்சி தரும் வளர்ச்சிதான் மொத்தத்தில்.

கே: ஆங்கிலக் கலப்பில்லாமல் எளிமையாய் இயல்பாய் தமிழில் பேசுகிறீர்கள். (தென்றலுக்காக செந்தமிழ்ப் படுத்தியிருக்கிறோம்!) உங்களது இருபத்தியைந்து வருடத்திற்கும் மேலான அமெரிக்க வாசத்தில் எப்படி பேச்சுத்தமிழ் கெடாமல் இருக்கிறது?

ப: தமிழர்களிடம் தமிழில் தான் பேசுவது என்று வைத்துக்கொண்டிருக்கிறேன். நம் கலாச்சாரம் என்பது நம் மொழியில் தானே இருக்கிறது. அதை எப்படி விட்டுக்கொடுப்பது? யார் என் கடைக்கு வந்தாலும் தமிழர் என்று தெரிந்தால் தமிழில் மட்டுமே பதில் சொல்லுவது என் வழக்கம். இங்கேயே வளர்ந்த என் பெண்ணிடம் கூட தமிழில்தான் பேசுகிறேன். அவளும் இதற்கு மதிப்பு கொடுத்து என்னிடம் பேசுவதற்கென்றே தமிழ் கற்றுவருகிறாள். நம்புவீர்களா என்று தெரியவில்லை - ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஒரு காலத்தில் கலந்து கொண்டவன் நான்.

கே: அப்படியா! (ஆச்சர்யமாகப் பார்க்கிறோம்)

ப: அரசியல் காரணங்களுக்காகவோ மொழி வெறியினாலோ அல்ல. என்னுடன் படித்த மாணவர்களின் விடுதிக்குள் புகுந்து இரவோடு இரவாக நிறையப் பேரை அடித்துக் காயப்படுத்திவிட்டுப் போய்விட்டார்கள். அதிலிருந்துதான் நானும் போராட்டத்தில் குதித்தேன். உண்ணாவிரதம், மறியல் என்று மூன்று மாதங்கள் கல்லூரியில் படித்த காலத்தில் இதில் கழித்ததைச் சொல்லவேண்டும். இன்றுவரை என் சொந்தக் கொள்கையாக ஹிந்திப் படம் பார்க்கக்கூடாது என்றிருந்து வந்திருக்கிறேன். என் குடும்பத்தினரோ மற்றவரோ ஹிந்தி படித்தால் தடுப்பதில்லை. சமீபத்தில்தான் எத்தனையோ வருடங்கள் கழித்து என் பெண்ணின் கட்டாயத்தினால் 'லகான்' பார்த்தேன்.

கே: இங்கு நம்போன்ற இந்தியர்களுடன் அமெரிக்கர்கள் பழகும்விதம் முன்பு எப்படி இருந்தது? இப்பொழுது ஏதேனும் மாறியிருக்கிறதா?

ப: நிச்சயம். நான் படிக்கவந்த காலத்தில் வேற்றுகிரகவாசி போலதான் நடத்தப்பட்டேன். லூயீஸியானாவில் படித்த காலத்தில் ball room நடனத்துக்குப் போயிருக்கிறேன். வெள்ளைத்தோல்காரர்கள் தனியாக ஆடுவார்கள். கருப்பர்கள் தனியாக ஆடுவார்கள். நம்போன்ற இந்தியர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பார்கள். ஏனெனில் நாம் கருப்பர்களைவிட வெளுத்த தோல்காரர்கள். வெள்ளையர்களைவிடக் கருத்த தோல்காரர்கள். நம்மால் கலக்கவே முடியாது. ஆனால் கலி·போர்னியாவில் அப்படி இல்லை. இங்கு சிறுபான்மையினர் அதிகம். எனவே மிகவும் திறந்த மனத்துடன் இருக்கிறார்கள் என்பது என் அனுபவத்தில் கண்டது. அன்றைவிட இன்றைக்கு நம் மக்கள்தொகை இங்கே கூடியிருக்கிறது. இங்கு வாழ் அமெரிக்கர்களும் அதை ஏற்றுக்கொண்டு நம்மைச் சமூகத்தின் சிறுபான்மையினராய் மதிப்புக் கொடுக்கத்தான் செய்கிறார்கள்.

கே: உங்களுடைய பொழுதுபோக்கு?

ப: நிறையப் படிப்பேன். விரும்பிப் படிப்பது மு.வரதராசனார், கல்கி, சாண்டில்யன் போன்றோரின் நாவல்கள். மணமாகாமல் இருந்த காலத்தில் என்னுடைய USC LA நண்பருடன் சேர்ந்து டென்வரிலிருந்து எல்.ஏ வரை, சியாட்டிலிலிருந்து சான் டியாகோவரை நிறையக் காரில் சுற்றியிருக்கிறேன். என்ன ஆனாலும் இரவு 10 மணியிலிருந்து காலை 7 மணிவரை தொலைபேசியை எடுக்காத ஒரு பழக்கம் எங்கள் குடும்பத்தில் இருக்கிறது. அந்த நேரத்தின் அமைதி மிக முக்கியம்.

கே: உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு மிகவும் நிறைவைத் தரும் விஷயம் எது?

ப: எத்தனையோ மக்களுடன் பழக முடிந்ததைத்தான் என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்தி என்று கருதுகிறேன். நான் வாழ்ந்த எல்லா இடங்களிலும் ஏராளமான நல்ல நண்பர்களைச் சம்பாதிக்கமுடிந்திருப்பது எனக்கு நிறைவளிக்கிறது.

சந்திப்பும் தொகுப்பும்: மனுபாரதி

******


அறிந்தவர் சொல்வது

"அப்போல்லாம் எங்களுக்கு மெயில் பேகுக்குப் போறதுன்னா அவ்வளோ பிடிக்கும். கோவில் தவிர அடுத்து நிறைய தமிழ் மக்களைப் பாக்கறதுக்கான வாய்ப்பு அங்கதான். கலகலன்னு பேசற தர்மராஜ் சாரப் பார்த்தா எனக்கெல்லாம் குடும்பத்துல ஒருத்தர சந்திச்சது மாதிரி இருக்கும். தெரியாத புது பேச்சுலர் பசங்க வந்தாக்க எங்கள மாதிரி குடும்ப ஆட்களுக்கு அறிமுகம் பண்ணறதும், நண்பர்களோட நண்பர்களைப் பரிச்சயம் செய்து வைக்கிறதும்... ஒரு மெகாகுடும்பத்தின் பொது family room மாதிரி இங்க மக்கள் வருவாங்க போவாங்க. சந்திப்பு மையம்னு சொன்னா பத்தாது. கலாச்சார சந்திப்பு மையம்னு சொல்லணும்.” தமிழ் மன்றக் கமிட்டியில் இல்லையே தவிர, மன்றத்தின் தொடக்கக் காலத்தில் ஓர் ஒழுங்கைக் கொண்டுவர பல ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார்.

மன்றக் கணக்கு வழக்குகளை கணினியில் quicken போன்ற மென்பொருளைக்கொண்டு போடவும், நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச் சீட்டுகளை அச்சடிப்பது பற்றியும் யோசனைகள் வழங்கினார். இவை மட்டுமில்லாமல் மன்றத்தின் இயக்கத்திற்கு ஓர் கட்டமைப்பை (infrastructure) நிறுவ வழிமுறைகளை சிபாரிசு செய்தவரில் இவரும் முக்கியமானவர். நம் தமிழ் மக்கள் எல்லாரும் எந்தப் பிரிவினையும் பாராட்டாமல் ஒன்றாக ஒத்துமையாக இருக்கவேண்டும் என்று பெரிதும் ஆசைப்படுபவர் இவர். அரசியல் இல்லாமல் எப்படி எல்லாரையும் ஒன்று சேர்ப்பது என்பது பற்றி இவருக்கு எப்பொழுதும் சிந்தனை இருக்கும். நம் சமூகம் ஒன்றுபட்டு இருப்பது மிகவும் முக்கியம் என்று நினைப்பவர் இவர்."

ஜெயந்தி சுவாமிநாதன்,
சாண்டா கிளாரா.

******


"தர்மராஜ் ஒரு நேரான பேர்வழி. எதையும் மறைக்கத் தெரியாது அவருக்கு. வெளிப்படையாய்ப் பேசும் ஆள். மிகவும் ஒழுக்கமான உழைப்பாளி. எதில் நுழைந்தாலும் மிகவும் சிரத்தையாய்ச் செய்பவர். வாக்குக்கொடுத்தால் என்ன ஆனாலும் மீறாமல் காப்பாற்றுபவர். எல்லாவற்றையும் விட அவரது எளிமை. யாராலும் அணுகக்கூடிய எளிமை, தோழமை. இது மட்டுமே போதும். யாருக்கும் அவரைப் பிடித்துவிடும்."

"இவர் தமிழ் மன்றம் என்று இல்லை. எந்த ஒரு அமைப்பிற்கும் தன்னாலான எல்லா உதவிகளையும் செய்திருக்கிறார். அது AID ஆக இருக்கட்டும், சங்கரா கண் அமைப்பாக இருக்கட்டும். எல்லாவற்றிற்கும் முடிந்ததை செய்திருக்கிறார். லிவர்மோர் கோவிலின் அடிக்கல் நாட்டலில் இருந்து அதன் வளர்ச்சிக்கு இன்றுவரை உழைத்தவர்களில் இவரையும் நிச்சயம் சொல்லவேண்டும். எல்லாவற்றையும் சமமாக பாவிக்கும் குணம் அவரிடம் மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இன்னொன்றும் சொல்ல வேண்டும். வருடா வருடம் தவறாமல் ஆங்கிலப் புதுவருட தினத்தன்று லிவர்மோர் கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்களுக்கும் இலவசமாய்க் காப்பி வழங்கும் சேவை செய்து வருகிறார்."

திரு. கல்யாணசுந்தரம் வெங்கடேஸ்வரன்
Share: 




© Copyright 2020 Tamilonline