பேராசிரியர் இரா. மோகன்
|
|
|
|
1972ம் ஆண்டில் Crazy boys of the Games என்ற படம் உலகத்தையே சிரிப்பில் குலுங்க வைத்துக்கொண்டிருந்தது. அந்தத் தலைப்பு மோகன் ரங்காச்சாரியை உலுக்கியிருக்க வேண்டும். அதனால் 1976ல் பிறந்தது 'க்ரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்'! அந்தச் சமயத்தில் இந்தப் பித்துக்குளித் திருடர்கள் சென்னையை உலுக்கியது நிஜம். தமிழகத்தின் ஒரு சிரிப்புச் சகாப்தத்தைத் தொடங்கி வைத்து, அவர் க்ரேஸி மோகனாக மறு அவதாரம் எடுத்தார். எத்தனை திரைப்படங்கள், பட்டி தொட்டி முதல் பட்டணம் வரை சிரித்துச் சிரித்து வயிற்று வலியால் அவதிப்பட்டவர் எத்தனை பேர், எத்தனை புகழ்!
அந்தப் புகழ் அவரது தலைக்குச் செல்லவில்லை. ஜூன் 10ம் தேதி 67 வயதில் தீடீர் மாரடைப்பில் அவர் அமரரானார். திரைப் பிரபலங்கள், நாத்திகர்கள், ஆத்திகர்கள், கவிஞர்கள், ரசிகர்கள், இலக்கிய வாதிகள், இசைக் கலைஞர்கள் என்று அவரின் பிரிவாற்றாமையை எழுதிய, பேசிய ஒவ்வொருவருமே ஏதோ க்ரேஸி மோகன் தன்னோடு மட்டுமே மிக நெருங்கிப் பழகியது போலவும், பணிவோடும் அன்போடும் பேசியது போலவும், வேற்றுமை பாராட்டாதது போலவும் கருத்துத் தெரிவித்தார்கள். இது எப்படிச் சாத்தியம் என்று வியப்பாக இருந்தது.
திரையுலகத்தின் ஜிகினாவோ, நாடகத்தின் அரிதாரமோ தன் முகத்தில் நிரந்தரமாகப் படிந்துவிடாமல் பார்த்துக்கொண்டவர் க்ரேஸி. "நான் யார்?" என்று கேட்கச் சொன்ன ரமணர் அவரை ஈர்த்துவிட்டதில் அதிசயமே இல்லை. ரமணர் குறித்த நூல்களை அவர் படித்திருந்தார். 2009ல் தென்றல் ஒரு சிரிப்புச் சிறப்பிதழ் வெளியிட எண்ணியபோது அவரைத்தான் நேர்காண வேண்டும் என்று நானும் இணையாசிரியர் அரவிந்த் சுவாமிநாதனும் தீர்மானித்தோம். (நேர்காணல் பார்க்க)
அப்போது அவருக்கு எனது 'ரமண சரிதம்' நூலை நான் கொடுக்க, அதே சமயத்தில் அவர் கச்சை கட்டிக்கொண்டு வெண்பா எழுதுவதில் இறங்கியிருக்க, பிறந்தது 'ரமணாயனம்', 425 வெண்பாக்களில்! எழுதத் தொடங்கிய உடனேயே என்னுடன் பல வெண்பாக்களைப் பகிர்ந்துகொண்டார். அவை அமுதசுரபியில் வெளியாகிப் பிரபலமாயின. |
|
|
அவர் மறைவுக்கு ஒரு மாதம் முன் அவரைப் பெருங்கூட்டத்தில் ஒருவனாகச் சென்று பார்க்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. "நீங்க அவசியம் வரணும்" என்று மூன்று நான்கு முறை என்னை ஃபோனில் அழைத்தார். நான் நழுவிக்கொண்டே இருந்தேன். "வருகிறேன்" என்று அவரது அன்புக்குக் கட்டுப்பட்டுச் சொன்ன பிறகுதான் விட்டார். "சீக்கிரமே வந்துவிடுங்கள், அப்போதுதான் முன் வரிசையில் உட்காரமுடியும்" என்று வேறு அன்புக்கட்டளை. (நானும் அரவிந்த் சுவாமிநாதனும் சென்று சத்தமில்லாமல் பின்னால் ஒரு வரிசையில் உட்கார்ந்துகொண்டது வேறு கதை). அவரது ரமண வெண்பாக்களுக்கு டாக்டர் ராஜ்குமார் பாரதி இசையமைக்க, திருமதி காயத்ரி கிரீஷ் கர்நாடக இசையில் இரண்டு மணி நேரம் பாட, மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் நிரம்பி வழிந்தது. வெண்பாக்கள் இசைக்கு இசையுமா என்ற எனது சந்தேகம் அன்று நீக்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்தபின் அவரிடம் சென்று வாழ்த்திக் கை குலுக்கினேன். "இவர்தான் மதுரபாரதி, ரமண சரிதம் எழுதியவர்" என்று உரக்க மகிழ்ச்சியோடு சுற்றியிருந்தோருக்குச் சொன்னார். மறுநாள் மீண்டும் தொலைபேசியில் நிகழ்ச்சி எப்படி இருந்தது என்று விசாரித்தார். எனக்குப் பொய் பேச வேண்டிய அவசியமிருக்கவில்லை; இசை, ரமணர்வெண்பா என்ற இந்த மூன்றின் கலவை எப்படி நன்றாக இல்லாமல் போகும், அதுவும் க்ரேஸி மோகன் எழுத்தில்!
அரவிந்த அன்னை, ஸ்ரீ சத்திய சாயிபாபா என அவருக்கு ஆன்மீக நாட்டம் அபரிமிதமாக இருந்தது. உண்மையான ஆன்மீகவாதியானதால் அவருக்கு அகங்காரம் மிகக்குறைவாக இருந்தது. க்ரேஸி என்ற எழுத்தாளர், வசனகர்த்தா, நாடக ஆசிரியர், நடிகர், கவிஞர் என்கிற விவரங்களைப் பலரும் நிறைய எழுதிவிட்டார்கள். அவரிடம் தளும்பி நின்ற 'மனிதம்' என்னை மிக ஈர்த்தது என்றால் மிகையல்ல.
அவரால் சிரிக்கவைக்க மட்டுமே முடியும் என்று உலகம் நம்பியது. ஆனால் 2019 ஜூன் 10ம் தேதி, சற்றும் எதிர்பாராமல், அவரை நேரில் அறிந்த, அறியாத எண்ணற்றோரை அவர் அழவைத்துவிட்டார்.
மதுரபாரதி |
|
|
More
பேராசிரியர் இரா. மோகன்
|
|
|
|
|
|
|