Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
அன்புள்ள சிநேகிதியே
ஒரு சிறிய தப்படி
- சித்ரா வைத்தீஸ்வரன்|மே 2007|
Share:
Click Here Enlargeடெல்லியிலிருந்து என் மகன் வீட்டுக்கு வந்திருக்கிறேன். வந்து 2 மாதம் ஆகிறது. 6 மாதமாவது இங்கு தங்க வேண்டும் என்று பிள்ளை வற்புறுத்தியிருந்தான். ஏழு வருடம் கழித்து அவனைப் பார்க்கிறேன். எனக்கு ஒரே பிள்ளை, இரண்டு பெண்கள். எல்லோருக்கும் கல்யாணம் ஆகி செட்டிலாகி விட்டார்கள். இவன் இந்த ஊர்ப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு விட்டான். அதனால் அப்பாவுக்கும், பிள்ளைக் கும் பல வருஷங்களாகப் பேச்சுவார்த்தை இல்லை. போன வருடம் அவர் போய்விட்டார். பிள்ளை வந்து கதறியழுதான். மிகவும் நல்ல பையன். என்னமோ வயசுக் கோளாறு. திடீரென்று 'இவளைத்'தான் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகிறேன் என்று சொன்னபோது, அப்பாவுக்கு ஏமாற்றம்; அதிர்ச்சி. அவரையும் குறைச் சொல்ல முடியாது. எதையுமே அனுபவிக்காமல், அந்த அரசு உத்தியோக வருமானத்தில் சேர்த்துச் சேர்த்து வைத்துப் பிள்ளையைப் படிக்க இங்கே அனுப்பினார். கடைசியில் சுயநலமாக இருந்துவிட்டான் என்பது அவருடைய கருத்து. நான் இருவருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு திணறித்தான் போனேன். மிகவும் வருத்தமான நாட்கள். உள்ளுக்குள்ளேயே குமைந்து, குமைந்து தன் வேதனையை வார்த்தையில் வெளிக்காட்டாமல் மெளனமாக இருந்தே மறைந்து போனார்.

என் மருமகளுக்கு இது மூன்றாவது பிரசவம். முதலில் ஆறு வயதில், இரண்டு வயதில் இரண்டு பிள்ளைகள். அவளுக்குக் குழந்தை கள் என்றால் ரொம்பப் பிடிக்குமாம். எனக்கும் அவரை இழந்த பிறகு வாழ்க்கை வெறிச் சென்று போனதால் பேரக் குழந்தைகளையும் பார்க்கவில்லையே என்று வந்தேன்.

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போல இருந்தது. அக்கம்பக்கத்தில் அரண்மனை போல வீடுகள். கூப்பிட்டால்கூட ஆள் இல்லை. அதுவும் நம் மக்கள் யாருமே இல்லை. என் பிள்ளை ஒருமுறை எங்கோ மளிகை சாமான் கடையில் 'தென்றல்' பார்த்து எனக்கு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான். இரண்டு இதழ்கள் பார்த்தேன். நன்றாக இருந்தது. என் மகனுக்கு வேண்டிய நம் சமையல் எல்லாம் செய்து அவன் ஆர்வமாக சாப்பிடுவதை ரசித்துப் பார்ப்பது என் குறிக்கோளாக இருந்தது. குழந்தைகள் அதிகம் ஒட்டவில்லை. அவளும் அதிகம் பேசமாட்டாள். ஆனால், நானே ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டுச் செய்து கொடுப்பேன். சில சமயம் சின்னவனை என் பொறுப்பில் விட்டுவிட்டுப் போவாள். அவனும் கொஞ்சம் கொஞ்சமாக என்னுடன் சிரித்துப் பழக ஆரம்பித்தான். அவளும் கொஞ்சம் சகஜமாக இருக்க ஆரம்பித்தாள்.

இரண்டு வாரத்துக்கு முன்பு ஒரு விபரீதம் நடந்தது. இரண்டாவது பையனை என் பொறுப்பில் விட்டுவிட்டு, முதல் பையனை எங்கோ அழைத்துக் கொண்டு போயிருந்தாள். மைக்ரோவேவில் காபிக்காகப் பாலைச் சுடவைத்து எடுக்கும் போது இந்தக் குழந்தை என் புடவைத் தலைப்பை இழுக்க, நான் நிலை தடுமாறி விழுந்து சூடான பால் அவன்மேல் கொட்டிவிட்டது. எனக்கும் சுதாரித்து எழுந்து உடனே கவனிக்க முடியவில்லை. கால் அந்த சமயம் மடங்கிப் போய்விட்டது. குழந்தை ஓவென்று கதற, நான் மெள்ள என் வலியைப் பொறுத்துக் கொண்டே நொண்டிக் கொண்டு, பிரிட்ஜி லிருந்து ஐஸ் கட்டிகளை எடுத்து அவன் மேல் ஒற்றினேன். இவளுக்கு ·போன் செய்தால் எடுக்கவில்லை. மகனுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவன் வேறு ஏதோ நாட்டுக்கு கான்·பிரன்சுக்குப் போயிருந்தான். 911க்கு போன் செய்ய பயமாகவும் இருந்தது.

நல்லவேளை 10 நிமிடத்தில் அவள் வந்துவிட்டாள். உடனே மருத்துவ மனைக்கு எடுத்துக் கொண்டு ஓடினாள். என்னை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு ஹிஸ்டரிக்கலாகக் கத்தினாள். கடவுள் புண்ணியத்தில் குழந்தைக்குப் பெரிய அபாயம் எதுவும் இல்லை. இருந்தாலும் சூடுபட்ட இடம் தோல் பிய்ந்து, வலி என்று அழுது அழுதது. இப்போது விளையாடிக் கொண்டு தான் இருக்கிறான். ஆனால் மருமகளின் போக்கு மாறிப் போய்விட்டது. என்னைக் கண்டாலே வெறுக்கிறாள். என் மகன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உடனே திரும்பி வந்தான். அவன் அவளிடம் ஏதோ சமாதானம் சொல்லிப் பார்த்தான். 'அம்மா பிள்ளை இரண்டு பேரும் சேர்ந்து என் குழந்தையை... பண்ணி விடுவீர்கள்' என்று கத்தினாள். நான் திரும்பி போகிறேன் என்றால் என் மகன் 'இன்னும் கொஞ்ச நாளில் சரியாகப் போய்விடுவாள். ஒவ்வொரு பிரசவ நேரத்திலும் இப்படித்தான் கத்துவாள். தயவு செய்து இருந்து விட்டுப் போங்கள். உங்கள் சாப்பாட்டுக்காக ஏங்குகிறேன்' என்று கெஞ்சுகிறான். எனக்கு இங்கே தண்ணீர் குடிக்கக்கூடப் பிடிக்கவில்லை. மனது எதிலும் ஓட்ட மாட்டேன் என்கிறது. தினமும் நேரத்தை நகர்த்துவதே நரக வேதனையாக இருக்கிறது. என் மனதைத் தேற்றிக் கொள்ள ஏதேனும் வழி?

இப்படிக்கு
....................
அன்புள்ள சிநேகிதியே

உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த வேதனையான அனுபவம் மனதைச் சிறிது கலக்கி, கசக்கித்தான் விடுகிறது. நேர்மையான பாதையில்தான் போய் கொண்டிருக்கிறோம் - ஒரு சிறிய தப்படி - அது நம்மைச் செலுத்துவது ஒரு சின்னக் குழியிலேயா, இல்லை பள்ளத்தாக்கிலேயா என்று அந்த நேரம், இடத்தைப் பார்த்துதான் நிர்ணயிக்க வேண்டியிருக்கிறது. உங்களுக்கு மட்டுமல்ல இந்த அனுபவம். பலருக்கும் இது போன்ற சம்பவங்கள் ஏற்பட்டு, உடம்பில் ஏற்படும் காயம் மட்டுமல்லாமல் உள்ளத்தால் ஏற்படும் விரிசல்களில் நொறுங்கிப் போயிருக்கிறார்கள்.

எப்போது பிறர் நம் பேரில் நம்பிக்கை இழக்கிறார்களோ அப்போது தன்னம்பிக் கையும் அடிப்பட்டுப் போகிறது. உங்கள் மருமகளின் ஆதரவையோ, அன்பையோ மீண்டும் பெறுவது இந்தமுறை வருகையில் மிகவும் சிரமம். இதுபோன்ற ஆபத்துக்கள் அவளால் கூட ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அதை உணர்ந்து உங்களைப் புரிந்து கொள்ளக்கூடிய முதிர்ச்சியும், பெருந் தன்மையும் அந்தப் பெண்ணுக்கு இன்னும் வரவில்லை. தாய்ப்பாசமும், சுயநலமும் கண்களை மூடிவிடுகின்றன. அந்த முதிர்ச்சி யின்மையையும், சுயநலத்தையும் புரிந்து கொண்டால் உங்களுக்கு மனதில் வேதனையோ, குற்ற உணர்ச்சியோ இருக்காது. அந்தக் குழந்தை அலறியதில் அந்தத் தாய்க்கு வெறுப்பும் பயமும் தன் குஞ்சைக் காப்பாற்றும் உணர்ச்சியும் தான் முதலில் மிகுந்து இருக்கும். ஆனால், மனிதத்தன்மை இருப்பவர்கள் பிறர் அறியாமல் செய்த செயல்களைப் புரிந்து கொண்டு அவர் களுக்கும் ஆறுதல் சொல்வார்கள்.

என்னுடைய கருத்து என்னவென்றால், உங்கள் மகனுக்கு நீங்கள் வேண்டும். அந்த மருமகளிடம் இருக்கும் தாய்ப்பாசம் உங்களுக் கும் உண்டு. ஏழு வருடம் கழித்துப் பார்க்கிறீர்கள். உங்களுக்கு ஏற்பட்டது துரதிருஷ்ட வசமானது. இருந்தாலும் குழந்தை பிழைத்துக் கொண்டானே; இல்லாவிட்டால் இன்னும் கசப்பாகத்தானே இருக்கும் உங்களுக்கு. ஒரு மனிதரின் சுபாவத்தை நாம் புரிந்து கொண்டு விட்டால், நாம் அதற் கேற்றாற் போல் அனுசரிப்பது அவ்வளவு சிரமம் இல்லை. எட்டு மணி நேரக் காத்திருப்பு, அந்த மகன் எட்டு நிமிடம் உணவை ருசித்துச் சாப்பிடும் போது மறைந்து போகிறது. இங்கே ருசியோ, உணவோ முக்கியம் அல்ல. ஒரு தாய் ஒரு மகனின் ஏழு வருட இழப்பை அவசர அவசரமாக ஈடு செய்யும், பந்தத்தை இணைக்கத் துடிக்கும், உணர்வுகளின் உத்வேகம். இதை வெளியில் சுலபமாக எடுத்துச் சொல்ல முடியாது. பத்து மாதம் சுமக்கிறோம்; அந்தப் பச்சிளம் உயிரின் சின்ன மூச்சுக் காற்று பட்டதும், அழுகைச் சத்தம் கேட்டதும், வேதனை பட்ட மாதங்கள் பத்து நொடியில் மறைந்து போகின்றன. உங்களுக்குப் புரிந்துவிட்டது. பேரக் குழந்தையின் ரணம் ஆறஆற மீண்டும் நிலைமை சகஜமாக மாறக்கூடும்.

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்
Share: 
© Copyright 2020 Tamilonline