|
|
அன்புள்ள சிநேகிதியே...
இது எங்களுடைய குடும்ப நண்பருக்கு ஏற்பட்ட ஒரு பிரச்னை. அவர் 12 வருடங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் தன் மனைவியை இழந்தார். நானும் அவர் மனைவியும் மிகவும் நெருக்கமாக இருந்தோம். எனக்கே அது பெரிய அதிர்ச்சி. அவள் இறந்தபோது அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள்; 8 வயது, 5 வயது. என் தோழி அவள் பெற்றோருக்கு ஒரே பெண். உடனே அவள் அம்மா திரும்பி வந்து குழந்தைகளைப் பார்த்துக் கொண்டார். 2 வருடம் அப்படி, இப்படி என்று போனது. அதற்கு பிறகு தன் கணவரை விட்டு அவரால் இருக்க முடியவில்லை. அவர் ஒரு இருதய நோயாளி வேறு. போகும்போது என்னிடம் தன் பேத்திகளைப் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு, தன் மாப்பிள்ளை ஏதேனும் மறுமணம் என்று ஆரம்பித்தால் அதைத் தடுக்கும்படியும் சொல்லிவிட்டுப் போனார்கள். எனக்கு அப்போதே கொஞ்சம் திக்கென்று இருந்தது. அந்த நல்ல இளம் ஆண்மகன் மறுபடி வாழ்க்கையைத் தொடங்க வேண்டாமா? பெண் குழந்தைகளை அவர் தனியாக எப்படி வளர்க்க முடியும்? ஏன் இந்த ஆண்ட்டி இப்படிச் சுயநலமாக இருக்கிறார்கள் என்று யோசித்தேன். அந்தக் குழந்தைகளை என்னால் முடிந்தவரை போய் பார்த்துக் கொண்டு இருந்தேன். ஆனால் எனக்கும் என் வேலை, என் குடும்பம், என் குழந்தைகள் என்று நிறைய இருந்ததால் என்னால் அந்தக் குடும்பத்துக்கு அதிகம் உதவ முடியவில்லை. வேலை வேறு மாறி நாங்கள் கலிஃபோர்னியாவை விட்டுச் செல்ல வேண்டியதாக இருந்தது.
நாங்கள் கிளம்புவதற்கு முன்னால் அவர் எங்களைப் பார்க்க வந்திருந்தார். மிகவும் சோர்ந்து இருந்தார். 'பழையதை நினைத்துப் பயன் இல்லை. மீண்டும் புதிதாக வாழ்க்கையை ஆரம்பியுங்கள்' என்று என் கணவர் அறிவுரை வழங்கினார். அப்போது தான் அவர் மெல்ல மனம் திறந்து பேசினார். தான் சமீபத்தில் ஒரு பெண்ணைச் சந்தித்து இருப்பதாகவும், ஆனால் பெண் குழந்தைகள் இரண்டும் hysterical ஆகப் போய் விடுவதாகவும், மாமியார் மறுதிருமணம் கூடாது என்று இவருக்கு வாராவாரம் போனில் உபதேசம் செய்வதாகவும் வருத்தத்துடன் சொன்னார்.
பிறகு வேறு ஊருக்கு வந்த பிறகும் தொடர்பு விட்டுப் போகவில்லை. எப்போது அவர் depressed ஆக இருந்தாலும், எங்களுடன் போன் செய்து பேசுவார். குழந்தைகளின் எதிர்காலம் பொருட்டுத் தன் மறுமணத்தைப் பற்றி நினைக்காமல் இருந்தார்.
சமீபத்தில் அந்த இரண்டாவது பெண் graduation-க்குப் போய்விட்டு வந்தோம். அப்போது அந்த நண்பரின் தோழியைப் பார்த்தோம். 9 வருடமாகப் பழகிக் கொண்டு இருக்கிறார்கள். என் கணவர் அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி இப்போது முடிவெடுத்து இருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்டு அந்தப் பெண்கள் இரண்டு பேரும் எங்களிடம் ஒரே முறையீடு. அந்த ஆண்ட்டி வேறே போன் மேலே போன் செய்து எப்படியாவது இதை தடுத்து விடுமாறு கெஞ்சல். இத்தனை வருடம் தள்ளியாகிவிட்டது. இனிமேல் எதற்கு ஒரு மனைவி என்று ஒரு வாதம். இப்படியே நண்பர்களாக இருந்து விட்டுப் போகட்டுமே. எதற்கு இப்போது கல்யாணம். 'எங்கள் தந்தையை நாங்கள் நேசிக்கிறோம். யாருடனும் அவரைப் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை' என்று பெண்கள் எங்களைப் பேசிப் பார்க்கச் சொல்கிறார்கள்.
இப்போது எங்களுக்கே குழப்பமாகிவிட்டது நாங்கள் செய்தது சரியா தவறா என்று. ஒரு பக்கம் அந்த நண்பரை நினைத்தால் பாவமாக இருக்கிறது. இன்னொரு பக்கம் அந்தப் பெண்களின் பயமும், பாசமும் உண்மைதானே என்று தோன்றுகிறது.
இப்படிக்கு ........... |
|
அன்புள்ள சிநேகிதியே...
ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் என் வகையில் நீங்கள் செய்தது சரி.
வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன் |
|
|
|
|
|
|
|