Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
நேர்காணல்
ஆயிக்குடி ராமகிருஷ்ணன்
சொல்லின் செல்வி உமையாள் முத்து
- வெ.சு. பாலநேந்திரம்|மே 2007|
Share:
Click Here Enlargeபட்டிமன்றங்கள் சொற்பொழிவுகள் மூலமாக அமெரிக்காவாழ் தமிழர் களுக்கும் இந்தியத் தமிழர்களுக்கும் அறிமுகமானவர் சொல்லின் செல்வி திருமதி உமையாள் முத்து. தனது பதினாறாவது வயது முதல் கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாகப் பட்டிமன்றம், வழக்காடு மன்றம், சுழலும் சொற்போர், கருத்தரங்கம், தனிச் சொற்பொழிவுகள் எனத் தாயகத்தில் பல்வேறு மாநிலங் களிலும், வெளிநாடுகளிலும், தொலைக் காட்சியிலும், வானொலியிலும், இலக்கிய மேடைகளிலும் இலக்கியப் பணி ஆற்றி வருகிறார். வரலாறு மற்றும் சட்டத்துறைகளில் கல்லூரிப் படிப்பை முடித்து, வங்கிகளில் பலவருடங்கள் பணியாற்றி, நேரம் கிடைத்த போது மேடைப் பேச்சுகளில் பங்கேற்ற உமையாள் முத்து கடந்த சில வருடங் களாக அமெரிக்காவில் டெட்ராய்ட் மாநகரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். எந்த நேரமும் நாம் அழைத்தால், வந்து சொற்பொழிவு நிகழ்த்த வசதியாக அவர் அருகிலேயே இருப்பது அமெரிக்கவாழ் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

இனி உமையாள் முத்து அவர்களுடன் ஓர் சந்திப்பு...

கே: உங்களுடைய குடும்பப் பின்னணி பற்றி சொல்லுங்கள்..

ப: என் தந்தையார் திரு. சாத்தப்பா சுப்பிரமணியன் வங்கியில் பொது மேலாளராகப் பணிபுரிந்தவர். பலவித சமூகப் பணிகளில் ஈடுபட்டவர். என்னுடைய பெற்றோரின் பதினோரு குழந்தைகளில் நான் மூத்தவள். என்னுடைய தாயார், முறைப்படி இசை கற்று நன்றாகப் பாடும் திறன் படைத்திருந்தவர்.

கே: பேச்சுத் துறையில் நீங்கள் வளர்வதற்குக் காரணமாக இருந்த முக்கியமான மனிதர்கள் யார்?

ப: என்னுடைய சிறிய தந்தையார் திரு. எஸ். மெய்யப்பன் பிரபல வழக்கறிஞர். மூதறிஞர் ராஜாஜி அவர்கள் தொடங்கிய சுதந்திரா கட்சியின் சார்பில் ஒரு சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். அவர் சிறந்த மேடைப் பேச்சாளர், இலக்கிய ஆர்வலர். அவருடைய வீட்டில் சிறிது காலம் நான் வளர்ந்தேன். அதுதான் பேச்சுத் துறையில் நான் ஈடுபடக் காரணம்.

கே: வரலாறு, சட்டம் ஆகியவற்றைக் கல்லூரியில் படித்திருக்கிறீர்கள். வங்கியில் பணிபுரிந்திருக்கிறீர்கள். இவைகளுக்கிடையில், தமிழில் ஈடுபாடு ஏற்பட்டது எவ்வாறு எனக் கூறமுடியுமா?

ப: என்னுடைய சிறிய தந்தையார் நிறையத் தமிழ்ப் புத்தகங்களை வீட்டில் வைத்திருந்தார். அவரைத்தேடி வந்த கட்சிக்காரர்கள் பலரும் புகழ்பெற்ற தமிழ் அறிஞர்கள் மற்றும் பிரபல இலக்கிய வாதிகள். தெய்வத்திரு குன்றக்குடி அடிகளார், அ.சா. ஞானசம்பந்தம், கம்பன் அடிப்பொடி சா. கணேசன் இதுபோன்ற பல அறிஞர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்குச் சிறுவயதிலேயே கிடைத்தது.

கே: முதன்முதலில் தமிழ் மேடையில் பேசும் வாய்ப்பு எப்பொழுது கிடைத்தது? அந்த அனுபவம் எப்படி இருந்தது?

ப: கண்டனூர் என்கிற கிராமத்தில் நான் படித்த சிட்டாள் ஆச்சி உயர்நிலைப் பள்ளியில் பாரதியைப் பற்றியப் பேச்சுப் போட்டிகள் நடத்தி வந்தார்கள். நான் ஆறாவது வகுப்பில் படிக்கும் போது அந்தப் பேச்சுப் போட்டியில் பங்குபெற்றுப் பரிசும் கிடைத்தது. அந்த இனிய அனுபவம் என் நெஞ்சில் இன்றும் பசுமையாக உள்ளது. என்னுடைய பதினாறாவது வயதிலிருந்து நான் நிறைய தமிழ் இலக்கியங்களைப் படித்துப் பல இடங்களில் பேச ஆரம்பித்திருந்தேன். அப்பொழுது தான் கம்பன் விழாப் பட்டிமன்றத்தில் பங்கு பெறும் அறிய வாய்ப்புக் கிட்டியது. அதில் பங்கேற்க வேண்டுமென்றால். கம்பனை நன்கு படித்தறிந்த அறிஞர்கள் மட்டுமே பங்கேற்ற முடியும் என்கிற நேரம் அது. அதில் பங்கேற்கும் அரிய வாய்ப்பு கம்பன் அடிப்பொடி திரு. சா. கணேசன் அவர்களால் என்னுடைய 16ஆவது வயதிலேயே எனக்குக் கிடைத்தது. அ.சா. ஞானசம்பந்தன் அவர்கள் சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர்; நூற்றுக்கும் மேலான புத்தகங்கள் எழுதியவர். அவரும் மதுரை எஸ். ராமகிருஷ்ணன், ஸ்ரீனிவாச ராகவன் போன்றவர்களும் அணித் தலைவர்களாகப் பங்கேற்ற அந்தக் காலத்திலேயே கல்லூரி மாணவியாக அதே மேடைகளில் பேசும் வாய்ப்புகள் எனக்குக் கிடைத்தன. அவர்களுடைய பேச்சுக்களைக் கேட்கக் கேட்க, அவர்களைப் போல் படிக்க வேண்டும, பேச வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் தோன்றியது.

கே: உங்களுடைய கல்லூரி வாழ்க்கையைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்...

ப: புதுக்கோட்டை மன்னர் கல்லூரியிலும், சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்தேன். என்னுடைய கல்லூரிப் பாடங்கள் எல்லாம் சட்டக் கல்வி மற்றும் வரலாற்றுத் துறைகளில் தான் இருந்தன. ஆர்வத்தினால் தனியாகத் தமிழைப் படித்து வளர்த்துக் கொண்டேன். நான் புகுமுக வகுப்பு மாணவியாக இருந்தபோது மாநில அளவில் பேச்சுப் போட்டி ஒன்று நடந்தது. பல்வேறு சுற்றுகளுக்குப் பிறகு, சென்னையில் நடந்த இறுதித் சுற்றில் மாநிலத்திலேயே இரண்டு சிறந்த பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். அதில், மாநிலத்திலேயே சிறந்த பேச்சாளர் என்ற பரிசை வாங்கினேன். தொடர்ந்து பல்வேறு வெற்றிகள் வந்தடைந்தன. கும்பகோணத்தில் கிடைத்த உ.வே. சாமிநாத ஐயர் தங்கப் பரிசு அவைகளில் குறிப்பிடத் தக்க ஒன்று.

ஒரு பேச்சாளர் என்பதைவிட, ஒரு நல்ல ரசிகை என்று என்னை அறிந்தவர்கள் சொல்வார்கள். அறிஞர்கள் பேசுகிறார்கள் என்று தெரிந்தால் தேடிப்போய் அவர் களுடைய பேச்சுக்களைக் கேட்டு என்னுடைய கேள்வி ஞானத்தை வளர்த்துக் கொள்வேன். அந்தப் பழக்கம் எனக்கு இன்னும் இருக்கிறது. இப்பொழுதெல்லாம் பல பேச்சாளர்கள், தமது பேச்சு முடிந்தவுடன் எழுந்து சென்று விடுகிறார்கள். இது வருந்ததக்கது. மற்றவர்கள் பேச்சைக் கேட்டதனால் என்னுடைய பேச்சுத் திறன் வளர்ந்தது என்றே சொல்லவேண்டும்.

கே: நீங்கள் கேட்ட பேச்சாளர்களில் தங்கள் மனதைக் கவர்ந்த பேச்சாளர்கள் யாவர்?

ப: குன்றக்குடி அடிகளார், கி.வா.ஜ., திருக்குறளார் முனுசாமி, சுகி. சிவம், பேராசிரியர் சாலமன் பாப்பையா, சரஸ்வதி ராமநாதன், இளம்பிறை மணிமாறன், வாணியம்பாடிக் கவிஞர் அப்துல் காதர் இதுபோன்று பலருடைய பேச்சுக்கள் என்னைக் கவர்ந்திருக்கின்றன. அவர்களுடன் எண்ணற்ற மேடைகளிலும் பேசியிருக்கிறேன்.

கே: மேடை நிகழ்ச்சிகளில் உங்களால் மறக்கமுடியாத நிகழ்ச்சிகள் சிலவற்றைக் குறிப்பிட முடியுமா?

ப: மதுரையில் கைலாசபுரம் என்ற இடத்தில் நடந்த பட்டிமன்றம் மறக்க முடியாதது. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் பேராசிரியராக இருந்த அமரர் சொல் விளங்கும் பெருமாள் நடுவராக இருந்து நடத்தவிருக்கும் பட்டிமன்றம் என்று கூறி எங்களை அழைத்தார். அது நடக்குமிடம் ஒரு சுடுகாடு என்பது அங்கு போனபிறகுதான் எங்களுக்குத் தெரிந்தது. மதுரை வழக்கப்படி, பட்டிமன்றங்கள் இரவு 10 மணிக்குமேல்தான் தொடங்கும்.

அந்த இரவு வேளையில் பிணங்கள் எரிந்து கொண்டு இருந்தன. அருகிலேயே பட்டி மன்றம் நடந்தது. அதைக் கேட்க ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்தது. எதிரணியில் இருந்த செந்தமிழ்க் கல்லூரிப் பேராசிரியர் சின்னப்பா, 'பட்டிமன்றம் என்று ஏதோ வாய்க்கு வந்தபடி பேசிவிடாதீர்கள். அதைத் தடுப்பதற்குத்தான், இந்தப் பட்டிமன்றம் சுடுகாட்டிலேயே நடக்கிறது. ஏடாகூடமாக ஏதாவது பேசினால், சுற்றிக் கொண்டிருக்கும் கொள்ளிவாய்ப் பிசாசுகள் உங்களைப் பற்றிக் கொண்டு விடும்' என்று வேடிக்கையாக மிரட்டினார்.

இன்னொரு சமயம், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில், திருக்குறள் முனுசாமி அவர்களை நடுவராய் வைத்து நடந்த சிலப்பதிகார வழக்காடு மன்றத்தில், நானும் சகோதரி இளம்பிறை மணிமாறனும் பேசினோம். சகோதரி தூத்துக்குடியில் ஆங்கிலப் பேராசிரியை. தமிழில் அருமை யாகப் பேசுவார். வழக்காடு மன்றத்தைக் கேட்ட தமிழன்பர் ஒருவர் எங்கள் இருவரையும் பாராட்டி 40 பக்கக் கடிதம் ஒன்று எழுதியிருந்தார்.
கே: பட்டிமன்றம், வழக்காடு மன்றம் ஆகியவை சுவையாக அமையப் பேச்சாளர்கள் என்னென்ன உத்தி களைக் கையாள வேண்டும்?

ப: எந்தத் தலைப்பில் பேசினாலும் பட்டிமன்றம் சுவையாக அமையலாம். இப்பொழுதெல்லாம் தமிழ்நாட்டில் பட்டிமன்றம் தேவையா என்று கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். பட்டி மன்றம் ஊரைக்கெடுக்கிறது என்றுகூட சிலர் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். அதைத் தகர்க்க, பேசுபவர்கள ஆழத்துடன், பயன் தரும்படிப் பேசவேண்டும். அரிச்சந்திரன் குற்றவாளி, கர்ணன் குற்றவாளி, கோவலன் குற்றவாளி, திருக்குறளை நடைமுறைப்படுத்த இயலாத தமிழ்மக்கள் குற்றவாளி, பாரதி தாசன் கனவு பலித்தது என்று கூறுவது குற்றம்; பாரதிதாசன் பெண்ணடிமையைப் பற்றி மட்டுமே பாடினார் என்று கூறுவது குற்றம் என்றெல்லாம் தலைப்புகள் கொடுப்பார்கள். பேச்சாளர்கள் அந்தந்த தமிழ்ப் பேரறிஞர்களின் கவிதைகளில் இருந்தே மேற்கோள் காட்டிப் பேசி விடுவார்கள். அந்த அளவுக்குக் கருத்தாழம் செறிந்திருக்கும். கேட்க வந்தவர்களும், அந்த இலக்கியச் சுவையை அனுபவித்து ரசிப்பார்கள்.

இக் காலத்தில் தரம் குறையும் பொழு தெல்லாம், பட்டிமன்றத்தை மக்கள் குறைகூற ஆரம்பித்து விடுகிறார்கள். இந்த நிலை வராமல் தடுக்க, பேச்சாளர்கள் நிறையப் படிக்க வேண்டும். படிக்கத் தகுந்த புத்தகங்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். 'ஊன் கலந்து, உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே' என்ற வார்த்தைகளைப் போல், படிக்கும் இலக்கியங்களுடன் இரண்டறக் கலந்துவிட வேண்டும். பின் அதிலிருந்து பெறும் செய்திகளை மக்கள் மனதில் பயனுற விதைக்க வேண்டும்.

கே: இந்தக் கருத்தை வலியுறுத்தத் தங்களுடைய பேச்சிலிருந்து குறிப்பிட்டு எதையேனும் சொல்ல முடியுமா?

ப: நிச்சயமாகச் சொல்ல முடியும். முன்பே நான் குறிப்பிட்ட திண்டுக்கல் வழக்காடு மன்றத்தில் கொடுக்கப்பட்ட தலைப்பு சிலப்பதிகாரத்தில் அமைந்த ஒன்று. ''கோவலன் தானே குற்றத்தை ஒப்புக் கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பிறகு வழக்கு ஏன்?'' என்று நான் வாதாடி, அதற்குச் சான்றாகக் கீழ்க்கண்ட சிலப்பதிகாரப் பாடலையே முன்வைத்தேன்:

''வறுமொழியாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழிகோட்டி நெடுநகைபுக்கு
பொச்சாப்புண்டு பொருளரையாளர்
ஈச்சுக் கொன்றேர்க்கு நன்னெறி உண்டோ?''

கே: இலக்கியத் தலைப்புகளில் மட்டும்தான் பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள் நடத்துவீர்களா?

ப: நடைமுறையில் நடக்கும் நிகழ்ச்சிகள்கூடப் பட்டிமன்றத் தலைப்பாக வரும். சான்றாக, 'கின்னஸ் சாதனைகள் சாதனைகளா?', 'ஆஸ்கர் விருது வாங்கும் தகுதி தமிழ்த் திரைப்படங்களுக்கு உண்டா?' 'திரைப்படப் பாடல்கள் சமுதாயத்தைக் கெடுக்கின்றனவா?' இப்படி நூற்றுக்கணக்கான தலைப்புகளில் பட்டிமன்றங்கள் நடத்தலாம்.

கே: தென்றல் வாசகர்களுக்கு அளிக்கும் செய்தி என்ன?

ப: கவிதைகள், கதைகள், சமையல் குறிப்புகள், நேர்முகம், அறிவியல், அரசியல் என்று பாலைவனச் சோலையாக இருக்கும் தமிழ் மாத இதழ் தென்றல். 'கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவே, தருநிழலே, நிழல் கனிந்த கனியே, மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே, மென்காற்றில் விளை சுகமே, சுகத்திலுறும் பயனே' என்ற வள்ளல் பெருமானின் பாடல்தான் தென்றலைப் படிக்கும்போது என் நினைவுக்கு வருகிறது. வாசகர்களுடன் என் கருத்துக்களைப் பரிமாறக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

டாக்டர் வெ.சு. பாலநேந்திரம்
More

ஆயிக்குடி ராமகிருஷ்ணன்
Share: 
© Copyright 2020 Tamilonline