Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
நேர்காணல்
முன்னாள் தொலைக்காட்சி இயக்குநர் ஏ. நடராசன்
டாக்டர் கே.எம். செரியன்
- கேடிஸ்ரீ|ஜூன் 2007|
Share:
Click Here Enlargeபத்மஸ்ரீ டாக்டர் கே.எம். செரியன்-இந்திய மருத்துவ உலகில் இந்தப் பெயரை அறியாதவர்கள் இருக்க முடியாது. தற்போது ஃப்ரான்டியர் லைஃப்லைன் மருத்துவ மனையின் (Frontier Lifeline) முதன்மை நிர்வாக அதிகாரியான (CEO) டாக்டர் செரியன் எம்.பி.பி.எஸ். (1964), எம்.எஸ். (1968) ஆகியவற்றை முடித்தார். தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் FRACS (Fellow of the Royal Australian College of Surgeons) படிப்பை வெற்றிகரமாக முடித்துத் தாய்நாடு திரும்பி ரயில்வேயில் பணியாற்றினார்.

முதன்முதலாக 1975ஆம் ஆண்டு இந்தியாவி லேயே முதன்முதலில் கரோனரி பை-பாஸ் இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிகழ்த்தி மருத்துவ உலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார். குழந்தைகளுக்கான இருதய மாற்று அறுவை சிகிச்சை, இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றை முதன்முதலாகச் செய்த பெருமையும் டாக்டர் செரியனுக்கு உண்டு. 1991ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார்.

அமெரிக்காவில் உள்ள ஒரிகான் பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரிய ராகப் பணியாற்றியிருக்கிறார். மேலும் பல வெளிநாட்டு மருத்துவமனைகளில் முதுநிலைப் பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறார். மருத்துவம் குறித்த பல்வேறு நூல்களை எழுதியுள்ள டாக்டர் செரியன் 1990 முதல் 1993வரை இந்தியக் குடியரசுத் தலைவருக் கான கெளரவ மருத்துவராக நியமிக்கப் பட்டார். இதுவரை சுமார் 17,000 இதய அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளார். பல சீனப் பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவ பேராசிரியர் கவுரத்தை அளித்துள்ளன. 2005ஆம் ஆண்டில் இவருக்கு ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரி 'வோக்ஹார்ட் மருத்துவ மேன்மை விருது' (Wockhardt Medical Excellence Award) அளித்தது.

பரபரப்பான தனது பணிகளுக்கிடையில், இருதய அறுவை சிகிச்சை தொடர்பாக நாம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் டாக்டர் கே.எம். செரியன். இதோ அவை...

கே: இருதய அறுவை சிகிச்சையின்றி, மருத்துவமனையில் புற நோயாளியாகவே இருந்து பை-பாஸ் செய்துகொள்ள முடியுமா?

ப: ஈ.ஈ.ஸி.பி என்று அழைக்கப்படும் நவீன இருதய சிகிச்சையின் மூலம் இது சாத்தியம். பை-பாஸ் அறுவை சிகிச்சையை மேற் கொள்ளும் உடல்நிலையோ, மனநிலையோ இல்லாதவர்கள் அறுவை இல்லாத பை-பாஸ் செய்து கொள்ளலாம். ரத்தமின்றி, காய மின்றிச் செய்யப்படும் இந்த பை-பாஸ் நிரந்தரத் தீர்வை அளிக்கும்.

பொதுவாக இருதய அறுவை சிகிச்சை என்றாலே குறைந்தது பத்து நாட்களாவது மருத்துவமனையில் தங்க வேண்டும். இந்த பாரம்பரிய இருதய அறுவை சிகிச்சையில் நெஞ்செலும்பின் நடுவே அறுவை சிகிச்சை செய்யப்படும். அதன் ஒரு பகுதியாக இருதயத் துக்கும், சுவாசப்பைக்கும் இயந்திரத்தின் மூலம் செயற்கையான இயக்கம் கொடுக்கப் படும். உடலின் பிற பகுதியிலிருந்து (பெரும்பாலும் கால் அல்லது மார்பு) இரத்த நாளங்கள் எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட இரத்த நாளங்களுக்குப் பதிலாக அவை இணைக்கப்படும்.

அறுவை சிகிச்சைக்காகக் கீறிய மார்பைப் பின்னர் இணைத்துத் தைக்கிறோம். இதனால் வடு ஏற்படும். காயம் ஆறுவதற்கும் சில நாட்கள் ஆகும். இயற்கையான பை-பாஸ் என அழைக்கப்படும் ஈ.ஈ.ஸி.பி. சிகிச்சையில், மருத்துவமனையில் தங்க வேண்டியது இல்லை; காயமில்லை, வடு இல்லை, அலுவலகத்துக்கு விடுப்பும் இல்லை.

கே: ஈ.ஈ.ஸி.பி. என்றால் என்ன?

ப: இயற்கையான பை-பாஸ் என்று வர்ணிக்கப்படும் ஈ.ஈ.ஸி.பி. சிகிச்சை காரணமாக இருதயத் தசைகளில் புதிய ரத்த நாளங்கள் தோன்றி தசைகளுக்குத் தேவையான ரத்தம் கிடைக்கிறது. இந்தச் சிகிச்சையின் போது என்ன நிகழ்கிறது என்பதை விளக்குவதே ஈ.ஈ.ஸி.பி. (Enhanced External Counter Pulsation) என்னும் பெயராகும்.

கே: அதைக் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன்...

ப: சிகிச்சை அறையில் நோயாளி படுக்கையில் சாய்ந்து படுத்திருப்பார். இரத்த அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி கையில் பொருத்தப்பட்டிருக்கும். கால்களில் மூன்று ஜோடி காற்றுப்பைகள் பொருத்தப்பட்டிருக்கும். இருதயம் விரிவடையும் போது கால்களில் பொருத்தப்பட்டிருக்கும் காற்றுப்பைகள் சுருங்குவதால் கால் பகுதியிலுள்ள இரத்தம் அழுத்தத்துடன் இருதய நாளங்கள் வழியாக இருதய தசைகளைச் சென்றடைகிறது. அதனால் அதிக அழுத்தத்துடன் இரத்தம் எளிதாக இருதயத்திலிருந்து வெளியேற்றப் படுகிறது.

நவீன கணினி இக்கருவியுடன் இணைக்கப் பட்டிருக்கும். இதனால் நோயாளிகளின் இருதயம் சுருங்கும் நேரமும், விரிவடையும் நேரமும் துல்லியமாகக் கணக்கிடப்படுகிறது. அடைபட்டுக் கிடக்கும் இரத்த நாளங்கள் மற்றும் துணைநாளங்கள் இச்சிகிச்சையினால் மீண்டும் இரத்தம் ஓடும்படி விரிவடை கின்றன. நாளடைவில் இவை இரத்தத்தை அனுப்பும் நிரந்தரப் பாதைகளாகிவிடக் கூடும். இந்தச் சிகிச்சை பெற்றவர்கள் இதன் பிறகு உடற்பயிற்சிகளை அதிக நேரம் செய்ய முடியும்.

கே: ஆஞ்ஜியோகிராம் பரிசோதனையில் பயன்படுத்தப்படும் டை சிறுநீரகத்தை பாதிக்கக்கூடும் என்று சொல்லப் படுகிறதே?

ப: ஒருவருக்கு இருதய சிகிச்சை தேவையா என்று அறியக்கூடிய ஆஞ்ஜியோகிராம் பரிசோதனையில் பயன்படுத்தப்படும் டை சிறுநீரகத்தை பாதிக்கும் என்பது உண்மை தான். ஆனால் சிறுநீரகப் பாதிப்பைக் குறைக்க முடியும் என்பதை எங்கள் மருத்துவமனையில் நிரூபித்துள்ளோம்.

இருதயத்தின் சீரான ரத்தம் ஓட்டம் குறித்து அறியவும், ரத்தக் குழாய்களில் அடைப்புகள் உள்ளதா என அறியக் கரோனரி ஆஞ்ஜியோ கிராம் செய்கிறோம். இது 'ஓடும் எக்ஸ்ரே படங்களாக' இதயத்தில் எங்கெங்கே இரத்த ஓட்டத்தில் தடை இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும். பழைய முறையில் செய்யும் போது ரத்தக் குழாய்களில் 'டை' எனப்படும் சாயத்திரவம் செலுத்தப்பட்டுப் பல்வேறு கோணங்களில் படம் பிடிக்கப்படும். இருதயத்தின் இடப்புறத்தில் ஆறிலிருந்து எட்டு முறையும், வலப்புறத்தில் மூன்று முறையும் படம் பிடிக்கப்படும். இதைச் செய்ய குறைந்தது முப்பது நிமிடம் ஆகும்.

ஆனால் தற்போது வந்துள்ள நவீன கருவியான இன்னோவா 2000 ஸ்பின் கேத்லாப் மூலம் 'டை' செலுத்திய பின் வலப்புறத்தில் ஒன்றும், இடப்புறத்தில் மூன்றும் என மொத்தம் நான்கு படங்கள் எடுத்தால் போதும். ஒவ்வொரு படத்தையும் பல்வேறு கோணத்திலும் ஆராய முடியும். இப்படிச் செய்யப் பத்து அல்லது பதினைந்து நிமிடம்தான் ஆகும். பழைய ஆஞ்ஜியோகிராம் கருவியுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இதில் கால அளவு மட்டுமின்றி கதிர்வீச்சும், டையின் அளவும் மூன்றில் ஒரு பங்கு குறைகிறது. இதனால் டையினால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பு குறைகிறது. மேலும் இந்தக் கருவியின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் இருதய நோய்களையும் மிகத் துல்லியமாக அறியமுடியும். இந்த நவீன சோதனைக்கு உபரிக்கட்டணம் எதுவும் நோயாளிகளிடம் இருந்து நாங்கள் வசூலிப்பதில்லை.

கே: இருதய பை-பாஸ் அறுவை சிகிக்சையைத் தவிர்க்க முடியாதா?

ப: பை-பாஸ் சிகிச்சையின் முக்கியக் குறிக்கோள் இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை முற்றிலுமாக நீக்கி ரத்த ஓட்டத்தைச் சீர் செய்வதே. ஸ்டென்ட் (stent) போன்ற பிற சிகிச்சை முறைகள் இருந்தாலும், இருதய நாளங்களில் பல இடங்களில் பல அடைப்புகள் ஒருவருக்கு இருந்தால், அத்தகைய சிகிச்சை முறைகளைப் பயன் படுத்துவது நடைமுறையில் சாத்தியப்படாது. அதனால் அவசியமும், அவசரமும் இருந்தால் மட்டுமே பை-பாஸ் செய்யப்படுகிறது என்பதுதான் உண்மை. சில நேரங்களில் பை-பாஸைத் தவிர்க்க முடியாது என்பதும் உண்மை.

கே: பெண்கள் பயன்படுத்தும் முகக் கிரீம்கள்கூட இருதயத்தை பாதிக்குமா?

ப: பொதுவாக இளம் பெண்கள் முகப்பருவால் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்க ரெட்டினாயிக் அமிலம் (Retinoic acid) அடங்கிய கிரீம்களைப் பயன்படுத்துகிறார்கள். இக்கிரீம்கள் சிசுவின் இருதயம் உருவாகும் போதே, அதைத் தாக்கும் தன்மை கொண்டவை. அதனால் இவற்றைக் கருத் தரிக்கும் காலத்தில் பெண்கள் தவிர்த்து விடுவது நல்லது. இளவயதில் உபயோகித் திருந்தாலும், கருத்தரிக்கும் காலத்தில் உபயோகப்படுத்தா விட்டால் பாதிப்பு ஏற்படுவதில்லை.
கே: பிரச்னை ஏதேனும் தெரிந்தால் கருவிலிருக்கும் போதே குழந்தைக்கு சிகிச்சை அளிக்கலாமா?

ப: இந்தியாவில் இதற்கான வசதிகள் இன்னும் வரவில்லை. ஆனால் மேலை நாடுகளில் கருவிலுள்ள குழந்தையின் இருதய வால்வுகள் சரியாக அமையவில்லை என்றால் தாயின் வயிற்று வழியாக 'கதீட்டர்' குழாய் மூலம் குழந்தையின் இதயத்திற்குள் பலூன் செலுத்தி, பாதிக்கப்பட்ட வால்வை விரித்து விடுவார்கள். இந்தச் சிகிச்சை இந்தியாவில் விரைவில் வந்துவிடும். இதற்கான திறமை யான மருத்துவர்களும் தொழில்நுட்பமும் தற்போது வந்துகொண்டு இருக்கிறது.

கே: கருவில் உள்ள குழந்தையின் இருதயம் எந்தச் சந்தர்ப்பங்களில் பாதிக்கக்கூடும்?

ப: பொதுவாகத் தாய்க்குப் பிறக்கும் போது இருதய பாதிப்பு இருந்திருந்தாலோ, கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் இருந்தாலோ, 'ரெடினாயிக் அமிலம்' அடங்கிய மருந்து களைப் பேறுகாலத்தின் முதல் இரண்டு மாதத்துக்குள் உபயோகப்படுத்தியிருந்தாலோ குழந்தையின் இருதயம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதுபோல் தந்தைக்கும் பிறவியிலிருந்தே இருதய நோய் இருந்தால் (வயதான பின் வரும் இருதய நோய் அல்ல) குழந்தைக்கும் இருதய நோய் வர வாய்ப்புள்ளது. முகப்பரு கிரீமைத் தந்தை உபயோகித்து இருந்தால், பிரச்னை ஒன்றும் இல்லை.

நெருங்கிய சொந்தத்தில் மணந்திருந்தால் பல தலைமுறைகளைப் பாதிக்கக் கூடும். இதனால் ஃபீட்டல் எக்கோ கார்டியோகிராஃபி (foetal Echocardiography) பரிசோதனை செய்ய வேண்டும். இது கருவில் இருக்கும் சிசுவின் இருதயத்தை ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்யும் முறையாகும்.

தாய், தந்தையரின் முதல் குழந்தைக்கு இருதய பாதிப்பு இருந்ததால் இரண்டாவது குழந்தைக்கு 'எக்கோ கார்டியோகிராம்' பரிசோதனை கண்டிப்பாக செய்ய வேண்டியது அவசியம். கருவிலேயே அல்லது குழந்தை பிறந்த உடனேயே சிகிச்சை அளிக்கலாம். சில நேரங்களில் குழந்தை பிறந்தவுடனேயே இயற்கையாகவே சில இருதய குழாய்கள் மூடிக்கொள்ள ஆரம்பிக்கும். அப்பொழுது 'நீலக் குழந்தைகள்' ஆழ்ந்த நீல நிறமாகி, குழந்தையின் உடல்நிலை மோசமாகக்கூடும். அதனால் இந்த நிலை ஏற்படுவதற்கு முன் சிகிச்சை அளிப்பது மிக முக்கியம். நீலக் குழந்தை களுக்கு இருதய ஓட்டை, இருதய அறைகள் அமையாமை உள்ளிட்ட பல வகையான குறைகள் இருக்கலாம்.

எந்த விதமான பாதிப்பு இருந்தாலும் ஒன்றுக்கு இரண்டு, மூன்று முறை இருதய அறுவை சிகிச்சை செய்து, சுத்த ரத்தமும் அசுத்த ரத்தமும் கலக்காமல் தடுக்கலாம். இவ்வறுவை சிகிச்சைகள் முதலில் பிறந்த வுடனும், பின்னர் மூன்று வயதிலும், கடைசியில் ஆறு வயதிலும் செய்கிறோம். இக்குழந்தைகள் பள்ளிக்கு செல்லலாம். நீச்சல், குதித்தல் ஆகியவற்றை மற்ற குழந்தைகள் போலவே செய்ய முடியும். ஏன் புத்தகப் பையைக்கூட அவர்களே தூக்கிக் கொண்டு செல்லலாம். இக்குழந்தைகள் பெரியவர்கள் ஆன பின்பு கல்யாணம் செய்து குழந்தைகள்கூடப் பெற்றுக் கொள்ளலாம்.

கே: எத்தனை வயது வரை இருதய அறுவை சிகிச்சை செய்யலாம்? இருதய மாற்று அறுவை சிகிச்சை எண்ணிக் கையில் குறைவாக இருக்க காரணம் என்ன?

ப: இச்சிகிச்சைகளுக்கு வயது ஒரு தடையே அல்ல. சமீபத்தில் 90 வயதான சிந்தி போதகருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்திருக்கிறோம். பொதுவாக இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு இருதயங்களின் தேவை அதிகமாக இருக்கிறது. இவற்றை தானம் செய்ய மக்கள் பெருமளவு முன்வர வேண்டும். இங்கு நான் மக்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். உடல் உறுப்புகளை சொர்க்கத்திற்கு எடுத்து செல்ல வேண்டாம். இந்த பூமியில் அதன் தேவை அதிகமாக இருக்கிறது. இதனைப் பூர்த்தி செய்ய அனைவரும் முயல வேண்டும்.

பொதுவாக பரம்பரையில், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கரோனரி ஹார்ட் அட்டாக் ஆகியன இருந்தால் 40 வயதுக்கு மேலான அனைவருமே இருதய நல மருத்துவர்களிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இப்பரிசோதனையில் குறையொன்றும் தென்படாவிட்டாலும் ஆண்டுக்கொரு முறை சோதனை செய்து கொள்வது நல்லது. இருதயத்தில் ரத்த ஓட்டத்தின் அளவு குறைவாகத் தெரிந்தால், இருதயத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது என்று அறியமுடியும். பிரச்னை தீவிர மாவதற்கு முன் சிகிச்சையைத் தொடங்குவது நல்லது.

கே: சாதாரண தொண்டை கரகரப்பு இருதயத்தை தாக்குமா?

ப: இருதயத்தின் ருமாட்டிஸம் என்ற நோய்க்கு மூலமுதற் காரணமே தொண்டைக் கரகரப்பினால் ஏற்படும் தொற்றுநோய்தான். பொதுவாக இத்தொற்றுநோய் பள்ளிக் குழந்தைகளை பெரிதும் பாதிக்கக் காரணம் அவர்கள் வளரும் சூழ்நிலைதான். ஆரம்ப அறிகுறிகளைப் பள்ளி மருத்துவரும், பெற்றோர்களும் கவனமாகக் கண்டறிந்து தகுந்த சிகிச்சையை ஆரம்பத்திலேயே அளித்துவிட்டால், குழந்தைகளின் இருதயம் பாதுகாக்கப்படும்.

இந்த நோய்க்கான முக்கிய அறிகுறி சோர்வு மிக அதிகமாக இருக்கும். தலைசுற்றல் வரும். இதை இரண்டு விதமாக சொல்லலாம். இரத்த ஓட்டம் தடை செய்யப்படுவதால். இதற்கு ஸ்டினோஸிஸ் என்று பெயர். வால்வ் சிறிதளவே திறக்கும். இதனால் விளையாடக் கூட முடியாது. செயல்பாடுகள் குறைந்து கொண்டே வரும். நெஞ்சில் படபடப்பு ஏற்படும். தூங்கிக் கொண்டு இருக்கும்போது திடீரென்று எழுந்து கொண்டுவிட்டு பின்னர் தூங்கப் போகும் நிலையில் லேசான தலைசுற்றல் வரும். இதன் பின்னர் சோர்வு ஏற்படும். இதற்கு காரணம் இருதய வால்வுகளில் உள்ள பிரச்சினைகள்தான். இந்த வால்வுகள் ரத்தத்தை ஒருவழிப் பாதையில் செல்ல மட்டுமே அனுமதிக்கும். வால்வு பழுதடைந்துவிட்டால், ரத்தம் எதிர்ப்புறமாகப் பாயவும் அனுமதித்துவிடும். இதற்குக் கசிதல் என்று பெயர். இந்த நிலையில்தான் மயக்கம் வரும். பொதுவாக வாதம் எனப்படும் ருமாடிஸம் மூட்டுகளைத் தாக்கக்கூடியது. இது வயதானவர்களுக்கு மட்டுமே வரும். இவ்வகை ருமாடிஸத்தினால் முட்டிகளில் வீக்கமும், சூடும் இருக்கும். ஆனால், இருதய ருமாடிஸத்தில் இவ்வகை மூட்டு பாதிப்புகள் அறிகுறியே தவிர நிரந்தரமாகத் தங்கிவிடாமல் அவை வந்துவிட்டுப் போய்விடும்.

இது ஒரு தொற்றுநோய். இந்நோய் பீட்டா ஹிமாலிடிக் ஸ்ட்ரெப்டோ காக்கஸ் என்ற பாக்டீரியாவால் பரவுகிறது. நோய் பரவும் காலங்களில் ஏற்படும் சாதாரண தொண்டைக் கரகரப்பே இந்நோய்க்கு காரணம். இதுவே மூட்டுகளை பாதித்து வீக்கம் உண்டாக்கும். காலம் செல்லச் செல்ல இருதயத்தைத் தாக்கும். பொதுவாக நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி, நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்க்கும். ஆனால் ஹிமாலிடிக் ஸ்ட்ரெப்டோ காக்கஸ் என்ற வகை பாக்டீரியாக்களின் தோற்றமும், திசுக்களின் தோற்றமும் ஒன்று போலவே மற்றொன்று இருப்பதால், பாக்டீரியாக்கள் தாக்கும் போது, இதுவரை நமக்கு நண்பனாக இருந்த திசுக்களும் நிலை தடுமாறி நம்மையே தாக்கத் தொடங்கிவிடும். இந்நிலையில் நம் உடலின் தற்காப்புப் படையே எதிரிப் படையாக மாறிவிடுகிறது. மூட்டுவலிதான் இந்நோய்க்கான முதல் அறிகுறி.

இந்நோய் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களிடையே அதிகமாக காணப் படுகிறது. பொதுவாக ஐந்து வயதிலிருந்து இருபத்தி ஐந்து வயது வரை உள்ளவர் களையே இந்நோய் தாக்குகிறது.

சந்திப்பு: கேடிஸ்ரீ

ரத்த நாளத்தின் உள்புறத்தை உரித்து எடுத்தோம்!

'தனபாக்கியம்னு ஒரு அம்மா. திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவங்க. இரண்டு வருடமாக அவங்க இருதயத்தில் அசெளகர்யத்தை உணர்ந்திருக்காங்க. ஆஞ்ஜியோகிராம் எடுத்ததில் மூன்று இடங்கள் அடைப்பினால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. அந்த நேரத்தில் அவங்க மகனுடன் சிங்கப்பூர்ல இருந்தாங்க. அங்க இவங்களுக்கு பை-பாஸ் செய்யச் சொல்லியிருக்காங்க. ஆனால் அதில் அவர் மகனுக்கு விருப்பம் இல்லை. இங்கு இரண்டாம் கருத்துக் கேட்க வந்தார். எங்களிடம் ஆஞ்ஜியோ பிளாஸ்டி செய்யலாமா என்று கேட்டார். அது கண்டிப்பாக அவங்களுக்குப் பொருந்தாது என்று சொன்னோம். அவருக்கு பை-பாஸ் மட்டுமே தீர்வு என்று சொன்னோம். தனபாக்கியத்துக்கு நடத்தப்பட்டது எண்டார்ட்டெக்டமி என்ற சிறப்பு அறுவை சிகிச்சை. அதன் மூலம் கரோனரி ஆர்ட்டரியின் உள்புறப் படிவுகளை உரித்து எடுத்து, ரத்த ஓட்டத்தைச் சீராக்கினோம். பல வருடங்களாக இருந்த இந்த அடைப்பை முற்றிலுமாக நீக்கிவிட்டோ ம். பழைய உற்சாகத்துடன் இன்று அந்த அம்மா தனது அனைத்து வேலைகளையும் செய்யறாங்க.'

*****


இதயத்தில் ஒரு குடை!

'எங்கள் குழந்தை ஹரிணிக்கு மார்பில் இடதுபுறம் வீங்கி இருந்தது. தஞ்சாவூரில் பரிசோதனை செய்ததில் இருதயத்தில் ஓட்டை உள்ளது, அறுவை சிகிச்சை அவசியம் என்று சொன்னார்கள். இந்நிலையில்தான் இருதய ஓட்டையை அறுவை சிகிச்சையின்றியே அடைத்து விடலாம் என்றும் இச்சிகிச்சையை டாக்டர் கே.எம். செரியன் மருத்துவமனையான ஃப்ரான்டியர் லைஃப்லைன் மருத்துவ மனையில் செய்கிறார்கள் என்றும் தெரிந்தது. சிகிச்சைக்குப் பிறகு ரொம்ப நிம்மதியா இருக்கு' என்று கூறுகிறார் ஹரிணியின் தாயார்.

இருதயத்தில் உள்ள சில வகையான சின்ன ஓட்டைகளை அடைக்க அறுவை சிகிச்சையே அவசியம் இல்லை. ஆஞ்ஜியோகிராம் செய்வது போல் தொடை நரம்புகள் வழியாக செலுத்தப்படும் மெல்லிய குழாய்கள் மூலம் குடை போன்ற நுண்ணிய கருவியை ஓட்டையில் பொருத்திவிடுவோம். இது ஆடாமல் அசையாமல் ஓட்டையை அடைத்து கொண்டுவிடும். இதனால் சுத்த மற்றும் அசுத்த ரத்தங்கள் கலப்பது தடுக்கப்பட்டு இருதயம் நன்கு இயங்கத் தொடங்கும். புறப்பொருளான இக்கருவியையும் இருதயம் தன்னுடன் ஏற்றுக்கொண்டு எவ்விதப் பிரச்சினையும் இன்றி செயல்படும். இவ்வகைச் சிகிச்சைக்கு இரண்டு நாட்கள் மட்டுமே மருத்துவமனையில் தங்கினால் போதும். ஆனால், பெரிய ஓட்டைகளுக்கு அறுவை சிகிச்சையைத் தவிர வேறு வழி இல்லை.
More

முன்னாள் தொலைக்காட்சி இயக்குநர் ஏ. நடராசன்
Share: 
© Copyright 2020 Tamilonline