Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
பூமாதேவி
- அ. முத்துலிங்கம்|மே 2007|
Share:
Click Here Enlargeஇங்கே என்னடா என்றால் சமைலறைக் கேத்தில்கூட என்னை விசில் அடித்துக் கூப்பிடுகிறது! அவ்வளவு மரியாதை!

என்னுடைய அப்பா மிகவும் கண்டிப் பானவர். நான் சிறுவனாய் இருந்தபோது அவர் வீட்டில் இருக்கும் சமயங்களில் எல்லாம் மெல்ல மெல்ல அடிவைத்துத்தான் நடக்க வேண்டும். உரத்துப் பேசக்கூடாது. குஷியான சமயங்களில் பாடுவதற்கும் ஏன், விசிலடிக்கக் கூட முடியாது. அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வளர்ந்தவன் நான் ஆனால் இங்கே..!

நான் அமெரிக்காவுக்கு வந்து மிக வேகமாக முன்னேறியது இந்தத் தேநீர் போடும் துறையில்தான். இந்த அதிகாலையில் என் மகளுக்காகத் தேநீர் போட்டுக் கொண்டிருந் தேன். நேற்று எனக்கும் மகளுக்கும் கொஞ்சம் சண்டை. அதைச் சமாளிப்பதும் ஒரு நோக்கம். என் மகள் குளியலறையில் இருந்து வெளியே வந்தாள். நான் மற்றப் பக்கம் முகத்தை தூக்கி வைத்துக் கெண்டு நின்றேன். கைகளைக் குவித்து என் முதுகிலே ஒரு பொய் அடி வைத்தாள். பெருத்த சத்தத்தோடு சண்டை முற்றுப்பெற்றது என்று இதற்கு அர்த்தம். திரும்பிப் பார்த்தபோது நெளிந்து கொண்டே ஓடினாள்.

சண்டைக்குப் பெரியதாய் ஒரு காரணமும் இல்லை. அவளுடைய 'போய் பிரண்டின்' பிறந்த நாளை நான் மறந்து விட்டேனாம். எப்படி இருக்கிறது சங்கதி? தன் மகளுடைய நண்பர்களின் பிறந்த தினங்களை எல்லாம் மனனம் செய்வதுதான் ஒரு தகப்பனாருடைய தலையாய கடமையா? வேலை நிமித்தமாக நியூஜேர்ஸியில் தங்கி இருக்கிறாள். நான் நியூயோர்க்கிலிருந்து அவளைப் பார்ப்பதற்காக விழுந்தடித்து நேற்றுத்தான் வந்திருந்தேன். இன்று என்னவென்றால் தன் நண்பனைப் பார்ப்பதற்கு அவ ஓகண்டாவுக்கு போகிறாளாம். இதற்கிடையில் நான் இந்த சரித்திரப் பிரசித்தமான தேதியை மறந்துவிட்டேன் என்ற குற்றச்சாட்டு வேறு. மருட்டு விழிகளை இன்னும் கொஞ்சம் அகலத் திறந்து ஒரே சமயத்தில் கெஞ்சலாகவும், றாங்கியாகவும் இந்தத் தூரப் பயணத்திற்கு என்னையும் தனக்குத் துணையாக வரும்படி அழைக் கிறாள். பிறந்தநாளுக்கு வருவதாக வாக்குக் கொடுத்திருக்கிறாளாம். ஒப்பந்தங்களை காப்பாற்ற வேண்டுமென்று சிறுவயதிலேயே நான் அவளுக்கு கற்றுக் கொடுத்த பாடம் தானே!

அமெரிக்காவில் காரில் ஏறியவுடன் சீட் பெல்ட்டைக் கட்டுவது ஒரு முக்கிய சடங்கு. இத்தனை வருடங்களாகியும் நான் இந்தக் கலையில் பரிபூரண தேர்ச்சி பெறவில்லை. இதற்கு சாமர்த்தியமும், தந்திரமும் சரிசமமான அளவில் தேவைப்படும். அதிலும் இந்த விவகாரம் காருக்குக் கார் மாறுபடும். சீட் பெல்ட் இப்படித்தான் இருக்கும் என்கிற உத்திரவாதம் இல்லை. ஆனபடியால் எங்கள் செயல்முறைகளை நாங்கள் காருக்குத் தகுந்தபடி மாற்றியமைக்க வேண்டும்.

நண்பர் ஒருவருடைய கார் கொஞ்சம் அவசரபுத்தி கொண்டது. சீட்டில் ஏறி உட்கார்ந்த உடனேயே அது தன்பாட்டுக்கு வந்து உங்களை ஆரத்தழுவிக் கட்டிவிடும். ஒருமுறை தெரியாமல் தலையைக் கொடுத்து அது என்னை கொஞ்ச நேரம் மூச்சுத் திணற வைத்துவிட்டது. இன்னொரு சாதி சீட்பெல்ட், அதைக் கட்டும் வரைக்கும் 'கீ,கீ' என்று இரைந்து கத்திக்கொண்டே இருக்கும். கட்டி முடிக்கும் வரைக்கும் காரை நகர்த்த முடியாது.

என்னுடைய மகளின் காரில் சாதாரண சீட் பெல்ட்தான். வில்லங்கம் என்னவென்றால் குளிருக்கு எதிர்ப்பைக் காட்ட அணிந்திருந்த ஸ்வெட்டர், மப்ளர், ஒவர்கோட் என்று கூட்டத்துடன் ஒரே சமயத்தில் ஏறி காரிலே அமர்வது ஒரு பிரம்மப் பிரயத்தனமான காரியம். அப்பொழுதே கார் நிறைந்துவிடும். சிரமம் என்னவென்றால் வலது பக்கம் திரும்பி சீட்பெல்டில் துளியைக் கண்டுபிடித்து இழுத்தால் அதை மாட்டும் ஓட்டை மறைந்து போகும். இவ்வளவு நேரமும் இங்கேதான் இருந்தது சனியன்! இப்போது காணவில்லை! மறுபடியும் ஓட்டையைக் கண்டுபிடித்து ஓடுவதுபோல நுனி இழுத்துக் கொண்டு போய்விடும். பழையபடி Zeropointல் இருந்து தொடங்க வேண்டும். கடைசியில் ஒரு வழியாக பெல்ட்டைக் கட்டிமுடித்து காலை நீட்டிச் சாயும்போது பாதி தூரத்தைக் கடந்து விட்டிருப்போம்.

ஆனால் என் மகளைப் பார்க்கவேண்டும். அர்ஜுனன் பாணம் எடுப்பதும், விடுப்பதும் தெரியாது. எதிரிகளின் தலைகள் உருளுவது தான் தெரியுமாம். அதுபோலத்தான். அவள் சீட் பெல்டை இழுப்பதுவோ, அணிவதுவோ கண்ணுக்குத் தெரியாது. 'க்ளிக்' என்று ஒரு சத்தம் கேட்கும். அவ்வளவுதான். இந்த அதிசயத்தை நான் பொறாமையுடன் கண் வெட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பேன்.

இவள் கார் ஓட்டும் அழகு தனியானது. நாலு வயதில் என் கைவிரல்களை இறுக்கிப் பிடித்தபடி மிரளமிரள வந்தவளா? நம்ப முடியவில்லை! நெற்றியில் விழுந்திருக்கும் இரண்டொரு கேசங்களைத் தவிர அவள் உடம்பில் வேறு ஆபரணம் ஒன்றுமில்லை. இந்த வயதிலேயே தனியார் கம்பனி ஒன்றில் உயர் பதவி வகிக்கிறாள். மிகப்பெரிய அதிகாரிகளையெல்லாம் முதற்பெயர் சொல்லி அழைக்கிறாள். நூற்றுக்கணக்கான தொலை பேசி எண்கள் அவள் ஞாபகத்தில் இருக் கின்றன. கடுகதியாக காரில் செல்லும்போதே செல்லுணில் விளக்கிறாள். ஸ்டிக்கர் பொட்டை ஒட்டுவதுபோல ஒற்றைக் கையால் நம்பர்களை ஒத்திக் கொள்கிறாள். காரின் நாலு மூலைகளிலிருந்தும் ஒலிக்கும் மேற் கத்திய இசைக்கு மனதைப் பறிகொடுக்கிறாள். என்னுடைய ஆரம்ப கால வாழ்க்கை இந்த அமெரிக்காவில் இப்படியா இருந்தது?

அந்தக் கம்பனியில் நான் சேர்ந்தபோது எனக்காக ஒதுக்கப்பட்ட இடம் பேஸ் மெண்டில் ஒரு நகல் எடுக்கும் மெசினுக்கும், கோப்பி percolatorக்கும் இடையில் இருந்தது. மேலே அலுவலக அறை. வரவேற்பறை எல்லாம். கீழே நிலவறையில்தான் ஏற்றுமதி சம்பந்தமான வேலைகளும், கணக்கு வழக்கு களும் ஒப்பேறின. கோப்பிக் கடையை மொய்க்கும் கூட்டம், நகல் மெசின் கிரக முறைப்படி எழுப்பும் சத்தங்கள், சிப்பம் கட்டுவோரின் ஆரவாரம், கம்ப்யூட்டரின் வினா ஒளிகள் எல்லாம் ஒரே கோலாகலம் தான். இதுதவிர, நகல் எடுக்கும் மெசின் அவ்வப்போது ஒருவித வாசனையை என்பக்கமாக வீசிக் கொண்டே இருக்கும்.

கடைந்தெடுத்த முட்டாள்கள் அமெரிக்கா விலும் சரிசமான அளவில் உற்பத்தியாகும் விஷயம் எனக்கு கனகாலமாகத் தெரியாது. நான் இங்கே இருப்பவர்கள் எல்லோரும் அறிவுஜீவிகள் என்றுதான் எண்ணியிருந் தேன். உண்மை என்னவென்றால் எங்கள் ஊர் 'ஆனாப் படிச்ச கவானாதர்கள்' இங்கேயும் இருந்தார்கள்.

எனக்குப் பக்கத்தில் கம்புயூட்டரை ஓட்டிக் கொண்டிருந்தவள் அமெரிக்காவின் பள்ளிக் கூட எல்லையைத் தாண்ட முடியாமல் highschool drop out என்று சொல்கிற பெருமையைப் பெற்றவள். சிற்றின்பத்துக் காகவே கடவுளால் படைக்கப்பட்ட உடம்பு.

திராட்சை போன்ற கண்கள். ஒன்றில் நடன மாடியபடியே வருவாள். அல்லது முகத்தை உம்மென்று தூக்கிவைத்துக் கொண்டிருப் பாள். பெண்டுலம் போன்று அவள் மூட் எல்லைக்கும் அந்த எல்லைக்குமாக ஊசலாடிக்கொண்டே இருக்கும்.

அவளுடைய வாழ்க்கையின் இரண்டு பிரதான அம்சங்கள் காதலும், விரக தாபமும்தான். இவளுக்காகவே டெலிபோன் கள் அடித்து அடித்து ஓய்ந்து போகும். அவளுக்கு ஒரே சமயத்தில் நாலு காதலர்கள் இருப்பார்கள். ஒருநாளைக்கு ஒருவர் என்று. மிகச்சில சமயங்களில் ஒருவரும் அகப்படா விட்டால் உலகம் கவிந்தாற்போல சோக காவியமாக மாறிவிடுவாள். மற்ற நேரங்களில் காற்றில் மிதந்தபடி தன் கையால் கோப்பி ஊற்றி எல்லோருக்கும் தருவாள்.

கம்பனி அதிபருக்கு இந்தக் கோப்பியில் ஓர் அளவு கடந்த மோகம். 'தாம் தாம்' என்று நிலம் அதிர கீழ் தளத்திற்கு ஒரு நாளைக்கு நூறு தடவை வருவான். கோப்பி குடிப்பதற்கு அவன் அகராதியில் மூன்று வார்த்தைகள் மிகவும் பிரசித்தி வாய்ந்தவை. அவன் என்ன வசனம் பேசினாலும் இந்த வார்த்தைகளில் ஒன்றாவது அங்கே வந்து சேர்ந்து கொள்ளும். அந்த மூன்றும் இடுப்புக்கு கீழே சம்பந்தப்பட்ட வார்த்தைகள். அவற்றை நீக்கிவிட்டு அவனை யாராவது பேசச்சொன்னால் பாவம் தத் தளித்து விடுவான். ஒரு கோப்பி வேண்டு மென்றாலும் அந்த வார்த்தையிலேதான் கேட்டான். ஒரு கோப்பு தொலைந்து போனாலும் அந்த வார்த்தையிலேயே திட்டுவான். இவன் எல்லாம் வீட்டில் எப்படி மனைவி, பிள்ளைகளோடு சம்பாஷிப்பான்?

மூடர்களில் மூடன் அதிமூடன் என இரண்டு வகைகள் உண்டு அல்லவா? இவன் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவன். எங்கள் இதிகாசங்களை எல்லாம் ஆராய்ச்சி செய்ததில் மூடர்களுக்கெல்லாம் மூடன் கம்சன்தான் என்பது என் கணிப்பு. அல்லா விடில் தன் தங்கையின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்¨தான் தனக்கு யமனாவான் என்று தெரிந்திருந்தும் தேவகியையும், வாசுதேவரையும் ஒரே சிறையில் பூட்டி வைத்திருப்பானா? எங்கள் கம்பனி அதிபர் இந்தக் கம்சனிலும் பார்க்க ஒரு ஸ்தாயி மேலே என்றுதான் சொல்ல வேண்டும்.

தங்கத் தாம்பாளத்தைத் தட்டுவதுபோல் தன் நெஞ்சிலே விரல்களால் விளையாடியபடியே பேசுவான். ஒரு விஷயத்தை சொல்ல வந்தால் படு விஸ்தாரமாக பிரட்டிப் பிரட்டி சொல்லுவான். சிலருக்கு வயிறுப்போக்கு இருப்பதுபோல் இவனுக்கு வாய்ப்போக்கு. விளக்கி முடிந்த பிறகு பார்த்தால் எருமை கலக்கிய குட்டை போல விஷயம் தெள்ளத் தெளிவாகத் தெரியும்.

எங்கள் நாட்டில் urgent, ordinary, rush என்று எழுதி வைத்திருக்கும் கோப்புகளைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் குப்பைக் கூடை களில் இரண்டு விதமான கூடைகளை இவன் வைத்திருப்பதை இங்கேதான் கண்டேன். ஒரு கூடையில் ordinary என்று எழுதியிருந்தது. இன்னொன்றில் urgent என்று எழுதியிருந்தது. குப்பையில் கூட urgent என்று தரம் பிரித்து வைத்திருப்பவனை என்ன செய்ய முடியும்?

நான் செய்த ஊழ்வினை காரணமாக இப்படி வந்து மாட்டிக் கொண்டேனே என்று வருந்தாத நாளில்லை.

ஆனால் இந்த அலுவலக அவலங்களும், இடிபாடுகளும் எதிர்வரும் சனிக்கிழமைகளில் மாயமாக மறைந்துபோகும். ஒவ்வொரு சனிக்கிழமை காலை பத்து மணிக்கு நானும் என் நாலு வயது மகளும் கைகோத்தபடி கதைத்துக் கொண்டே சலவைத் துணிகளைப் பையில்போட்டு சுமந்தபடி சலவைக் கூடத்துக் குப் போய் வருவோம். இந்தச் சனிக்கிழமை நேரங்களை நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந் தேன். என் மகளும் அப்படியேதான். அந்தப் பத்து நிமிட நடைக்கிடையில் ஆயிரம் கேள்விகள் கேட்பாள். நானும் அவளுக்கு புரிகிறதோ, இல்லையோ எனக்குத் தெரிந்த வரைக்கும் சரியான பதில்களைச் சொல்லிச் சமாளிப்பேன்.

அந்தச் சலவைக்கூடத்தில் ஏறக்குறைய முப்பது மெசின்கள் இருந்தன. நாங்கள் எங்கள் குலதெய்வமான Maytag 22 என்ற மெசினில்தான் எங்களுடைய உடுப்புக்களைக் கழுவுவோம். நாலு காசுக் குற்றகிளைத் துளையில் போட்டு தள்ளியவுடன் அந்த ராட்சச மெசின்கள் 'உஸ் உஸ்' என்று மெதுவாகத் தொடங்கிப் பின் வேகமாகச் சுழலுவது பார்க்க வடிவாக இருக்கும். நாற்பது நிமிடம் இப்படி அலசோ அலசென்று அலசிவிட்டு ஓய்ந்துபோகும். நாங்கள் காத்திருந்து துணிகளை எடுத்து உவரியில் போட்டு மேலும் இருபது நிமிடங்கள் ஓடவிடுவோம். துணிகள் பளபளவென்று மினுக்கத்துடனும், ஒரு மிருதுத்தன்மையுடனும் சுகந்தமான வாசனையைப் பரப்பியபடி வந்துவிழும். இந்த மறக்கமுடியாத காத்திருப்பு நேரங்களில் மகளிடம் என் அன்னியோன் னியம் மிக நெருக்கமாக இருக்கும்.
அங்கேயிருக்கும் தானியங்கி யந்திரத்தில் காசு போட்டு விதவிதமான இனிப்பு வகை களை எடுக்கப் பழகிக் கொண்டாள். ஒவ்வொரு முறையும் அது வந்து விழும்போது சப்பாத்து நுனியில் நின்று தன் சின்னக் கைகளைத் தட்டி மகிழ்ச்சியைக் காட்டுவாள். எவ்வளவு தரம்தான் இப்படிச் செய்தாலும் அவளுக்கு அலுப்பதில்லை. அதுவும் ஒரு வழக்கமான சடங்காகிவிட்டது.

என்னுடைய மகளின் குணவிசேஷங்களில் ஒன்று கண்ணீர் எப்பவும் தழம்பி கரையை உடைக்க ரெடியாக இருப்பதுதான். என்ன சின்ன விஷயமாக இருந்தாலும் அவள் வாய் திறந்து சொல்லுமுன் கண்ணீர் அணையை உடைத்து பிரவாகமாகப் பொங்கும். ஒரு நாள் நாங்கள் அந்தக் கூடத்துக்கு வந்தபோது Maytag 22-ல் ஒரு கிழவி சலவைக்குப் போட்டுவிட்டு ஏதோ பின்னல் வேலையில் இருந்தாள். அடிக்கடி பின்னலை நிற்பாட்டி விட்டு இந்த மெசினை அவள் பார்ப்பதும், அது பயபக்தியுடன் வேலை செய்வது மாயிருந்தது. இந்தக் காட்சியை என் மகளால் தாங்க முடியவில்லை.

''அப்பா! அப்பா! ஆரோ எங்கட மெசினை பிடிச்சிட்டினம்' என்று அழுதாள். அந்தக் கிழவியை ஒரு குரோதத்துடன் பார்த்தாள்.

என்பாடு பெரிய பாடாகப் போய்விட்டது. அந்த மெசினை நாங்கள் ஏதோ குத்தகைக்கு வாங்கிவிட்டதாக அவள் அவ்வளவு நாளும் நினைத்திருந்தாள். நான் விளக்கிய பிறகுதான் அதை ஒரு மாதிரி ஒப்புக் கொண்டாள். என்றாலும் அந்தக் கிழவியை அவளுக்குத் துண்டாய் பிடிக்கவில்லை.

ஆனால் என் வாழ்நாளிலேயே என் மகளை மிகவும் குதூகலத்தில் ஆழ்த்திய சம்பவம் ஒன்று விரைவிலேயே நடந்தது. அப்படியான சந்தோஷத்தை நான் அவள் முகத்தில் அதற்கு முன்பும் கண்டதில்லை; பின்பும் கண்ட தில்லை.

வழக்கம்போல ஒரு சனிக்கிழமை காலை நாங்கள் சலவையை முடித்துவிட்டு வந்து மனைவியிடம் துணிகளை கணக்குக் கொடுத்துவிட்டு கைகட்டி நின்றோம். என் மனைவிக்கு கண்பார்வை இருபதுக்கு இருபது. முதல் வேலையாக என் மனைவி , ''எங்கை, இந்த சோடியில் ஒன்றைக் காணேல்லையே'' என்றாள். மனைவிகளை இதற்காகத்தானே கடவுள் படைத்திருக்கிறார்! அவ்வளவுதான். என் மகளுக்கு சுவிட்ச் போட்டதுபோல கண்ணீர் கொட்டத் தொடங்கியது. நிற்கவேயில்லை. மெசினி லிருந்து எடுக்கும்போது எங்கேயோ தவறிவிட்டது. கால் காசு பெறாத சமாச்சாரம் அது. உயிரைக் கொடுத்தது போல என் மகள் விக்கினாள். நான் எவ்வளவு தேற்றியும் நிற்கவில்லை.

அடுத்த சனிக்கிழமை எங்களுக்கு அந்தச் சலவைக் கூடத்தில் ஓர் அதிசயம் காத்திருந் தது. அங்கேயிருந்த விளம்பரப் பலகையில் என் மகளுடைய ஒரு கால் சொக்ஸ் தொங்கிக் கொண்டிருந்தது. அதற்குக் கீழே ''என்னு டைய சோடியை யாராவது கண்டீர்களா'' என்று எழுதியிருந்தது. அதைக் கண்டதும் என் மகள் குதிகுதி என்று குதித்தாள். அந்தச் சின்ன விஷயம் அவள் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சியைத் தோற்றுவித்தது! என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

இப்படியான ஒரு சனிக்கிழமை சேத்திராடனத்தின் போதுதான் Maylag 22-க்கு நாங்கள் 'பூமாதேவி' என்ற பேரைச் சூட்டினோம். அந்த முறை கொண்டு வந்த உடுப்புகள் அளவு கூடிவிட்டது. மெசினை நிறைத்தபிறகு இன்னும் கொஞ்சம் மீதி இருந்தது. அதை நான் திரும்பி எடுத்துப் போய் அடுத்த முறை கொண்டு வருவது என்று தீர்மானித்தேன். என்னுடைய மகளோ ''இன்னுமொருமுறை போடுவோம்'' என்று அடம்பிடித்தாள். அப்போது எங்களிடையே பெரிய வாக்குவாதம் நடந்தது.

''நாங்கள் சலவையில் பாவிக்கும் கழிவுநீர் எங்கோ பூமியில் போய்ச் சேருகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு அவலம் ஏற்படுகிறது. ஒரு முழு மெசினை ஒட்டினால் அதற்கு காரணம் இருக்கிறது. ஆனால் அரை மெசினை ஒட்டி சுற்றுச்சூழலைக் கெடுப்பது தவிர்க்கக் கூடியது. மிகப் பெரிய சுயநலம்.

"பூமாதேவி மிகவும் நல்லவள். நாங்கள் அவளுக்கு இழைக்கும் ஆக்கினைகள் எல்லாவற்றையும் மறந்து எங்களுக்கு அள்ளி அள்ளித் தருகிறாள். அவளுடைய குணங் களில் மிகச் சிறந்தது இந்த மறதிதான். நாங்கள் திரும்பித் திரும்பி செய்யும் கொடுமைகளை மறந்து ஒரு தாயின் அரவணைப்போடு எங்களுக்கு நன்மையே செய்கிறாள். இப்படிப்பட்ட தாய்க்கு தேவைக்கு மேல் கேடு விளைவிக்கக் கூடாது. இல்லையா?'' என்றேன்.

புரிந்ததோ, இல்லையோ நான் சொன்னதற்கு தலை¨யைப் பெரி¡க ஆட்டி சம்மதம் தெரிவித்தாள். பூமியைப் போல எங்கள் வசதிக்காக மாசுபடும் அந்த மெசினுக்கும் 'பூமிதேவி' என்று பேர் சூட்டினோம். அதற்குப் பிறகு எங்கள் வீட்டில் கொஞ்ச காலமாக யார் எதை மறந்தாலும் 'பூமாதேவி, பூமாதேவி' என்று சொல்லி பக்ஷ பண்ணுவது வழக்கமாகி விட்டது.

இப்படியான ஒரு நாளில்தான் நான் என்னுடைய நாலு வயது சின்ன மகளுக்கு 'ஒப்பந்தம்' பற்றியும் அதை மீறாமல் இருப்பதன் முக்கியத்துவம் பற்றியும் போதிக்க வேண்டி வந்தது. பூமாதேவியின் முன்பு சலவையை முடிப்பதற்காக நாங்கள் காத்திருந்த அந்த நாற்பது நிமிடங்களில்தான் இது நடந்தது.

என் சின்ன மகளுக்கோ அன்று பெரும் கவலை; முகம் நீண்டுபோயிருந்தது. அதுவும் ஒரு வடிவுதான். விஷயம் இதுதான். கீழ்வீட்டு பையனுக்கு அன்று பேர்த் டே விழா. என்னுடைய மகள் விழாவுக்கு வருவதாக வாக்களித்திருந்தாள். ஆனால் அதிலே எதிர் பாராத ஒரு கஷ்டம் வந்து சேர்ந்து கொண்டது.

எனது நண்பர் ஒருவர் அன்று பின்னேரம் நாய்க்குட்டி ஒன்று தருவதாகச் சொல்லி யிருந்தார். இதைக் கேள்விப்பட்டதும் மகள் பிறந்தநாள் விழாவுக்கு போகாமல் எங்களுடன் நாய்குட்டியை எடுக்கத் தானும் வரவேண்டும் என்று அடம் பிடித்தாள். விம்மி விம்மி அழுகை கரை முட்டிக்கொண்டு நின்றது. அப்பொழுதுதான், கடகடவென்று சத்தம் போடும் சலவை யந்திரங்களுக்கும், உலர்த்தி களுக்கும் நடுவே இருந்துகொண்டு என் மகளுக்கு உன்னதமான சலவைக்காரர் ஒருவருடைய கதையைச் சொன்னேன்.

திருக்குறிப்பு நாயனார் என்று ஒருவர். சிவபக்தர்களுடைய துணிகளைச் சலவை செய்வதே அவர் தொண்டு. கிழ வேதியர் ஒருவருடைய ஆடையை சலவை செய்வதற்கு ஒப்புக்கொண்டார். அந்தக் கிழவனார் 'எனக்கு ஒரேயொரு கந்தைதான் உள்ளது. இதை நீ தோய்த்து, உலர்த்தி அந்திபடுமுன் தர வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். நாயனாரும் இதற்கு உடன்பட்டு கந்தையைப் பெற்று தோய்த்து காயப்போட்டார். அப் பொழுது பார்த்து 'திசையடங்கி வெளி யடைத்து' மழை பிடித்துக் கொண்டது. நிற்கவேயில்லை. இரவாகிவிட்டது. கிழவர் தன்னுடைய ஆடையைக் கேட்டு குளிரில் வெடவெடவென்று நடுங்கிக் கொண்டிருந்தார். ஒப்பந்தம் என்னவென்றால் தோய்த்து, உலர்த்தி தரவேண்டுமென்பதுதான். தோய்ப்பது இவர் கடமை. ஆனால் உலர்த்து வது சூரியனுடைய வேலை அல்லவோ? என்றாலும் வாக்குக் கொடுத்துவிட்டாரே!

அந்தக் காலத்தில் இப்போதுபோல் சலவை யந்திரங்களும் இல்லை; உலர்த்திகளும் கிடையாது. என்ன செய்வார்? பாவம். தன் தலையை தூணிலே முட்டி சிவபிரானிடம் இரந்தார். அப்போது சிவபெருமான் வந்து சங்கடத் தைத் தீர்த்து வைத்தார் என்பதுதான் கதை.

மகளுக்குகதை நன்றாகப் பிடித்துக் கொண்டது. மறுபேச்சுப் பேசாமல் பிறந்தநாள் விழாவுக்குப் போனாள். அந்தச் சிறுவயதில் சொல்லிய கதையின் அடங்கிய கருத்தை இன்றுவரை அவள் மறக்கவில்லை. கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றிவிடுவாள்.

நான் வேலை பார்த்து வந்த கட்டிடத்தில் கணப்பு வசதிகள் மிகக் குறைவு. அதிலும் அது பூமிக்குக் கீழே உள்ள அறை; குளிரின் ஆதிக்கம் தாங்கமுடியாது. அடுத்த கெடுவுக் குள் முடிக்க வேண்டிய வேலைகள் என்முன் வந்து குவிந்தவண்ணமே இருக்கும். நான் கிரிசாம்பாள் பரம்பரை. ஆகவே எதிர்த்துக் கதைக்கும் திராணி இல்லை. விரகதேவதை யின் மிச்ச சொச்சங்களும் என் மேசையிலே வந்து விழும். நான் வேலைகளை முடிக்க சில சமயங்களில் இரவு பதினோரு மணியாகி விடும். அகதியாக வந்து சேர்ந்த அந்த ஆரம்ப நாட்களில் குளிரைத் தாங்கும் உடைகளை அணியும் வசதியும் இருக்கவில்லை; அதற்கேற்ற அறிவும் இல்லை.

'கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழுவி
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையான்'

ஆக வேதனைப்படுவேன். என் வரவையே கண் விழித்துக் காத்திருக்கும் மனைவியை நினைப்பேன். இப்படி நாடுவிட்டு நாடு வந்து படும் இன்னல்களையும், சிறுமைகளையும் எண்ணி கண்ணீர் வரும் நேரங்களி¦ல்லாம் என்னுடைய சின்ன வயது மகளை நினைத்துக் கொள்வேன். இந்த சமயங்களில் பல்லைக் கடித்துக் கொண்டும், மூக்கைப் பிடித்துக் கொண்டும், விரகதேவதை தாபம் மேலிட்ட நாட்களில் கண்களை மூடிக் கொண்டும், என் காலத்தைக் கழித்து வந்தேன்.

அப்போதுதான் ஒருநாள் கடவுள் கண்விழித்தார்.

என் தகுதிக்கு ஏற்ற வேலை ஒன்று முற்றிலும் எதிர்பாராமல் எனக்கு கிடைத்துவிட்டது. அதுமாத்திரமல்ல ஊரும், வீடும்கூட மாற்றலாகியது; எங்கள் வாழ்க்கையின் திசையும் திரும்பியது.

ஆனால் பெரிய சோகம் என்னவென்றால் புதிய வீட்டில் சலவை மெசின் இருந்தது. அத்துடன் அந்த அற்புதமான சனிக்கிழமை காலை வேலைகள் மறைந்து போயின. என் மகளுடன் தனித்திருந்து சம்பாஷிக்கும் அந்த மகத்தான தருணங்களும் அருகிவிட்டன. அமெரிக்க வாழ்க்கையில் அந்த முதல் ஒன்பது மாதங்கள் இப்படியாக என் மனதில் மறக்க முடியாததாகப் பதிந்துவிட்டது. என் மகளும் மெல்ல மெல்ல விலகித் தன் உலகத்தில் வாழத் தலைப்பட்டாள்.

'எக்ஸிட் 247, எக்ஸிட் 241' என்ற பாராயணம் செய்தவாறே வந்தேன். இந்த எக்ஸிட்டில் திரும்பினால் நல்ல கோப்பியும், அருமையான 'டோநட்டும்' கிடைக்கும். அமெரிக்காவில், காரிலே ஒரு பயணிக்கு மேல் இருந்தால் அவர்கள் போவதற்கென்று பிரத்தியேகமாகப் பாதை இருக்கும். அதி வேகமாகப் போனால் விசையாகப் போய்ச் சேர்ந்து விடலாம். தன்னுடைய தேர் போல எங்கள் கார் இந்தப் பாதையில் வாயுவேகம் மனோவேகமாகச் சென்றுகொண்டிருந்தது. 'எக்ஸிட் 741' என்று நான் சுற்றுவதற்கிடையில் கார் அந்த இடத்தைக் கடந்துவிட்டது. 'மேலாடை வீழ்ந்த நெடுவென்நான், அவ்வளவில் நாலாறு காதம் நடந்ததே' என்பது போல காரும் கடந்து போய்விட்டது.

எனக்கு ஏமாற்றமாகிவிட்டது. ஒரு திருப்பத்தை விட்டால் மீண்டும் திரும்ப வருவது இடியாப்பக் கூந்தலின் ஒரு துளியைப் பிடித்து மற்ற நுனிக்கு வருவதுபோல, அவ்வளவு கஷ்டம். இந்த டோநட் என்ற சமாச்சாரம் எங்கள் ஊர் கடையைப் போன்றது. அதிலும் 'கினேஸ்ட் டோநட்' என்பது பளபளவென்று மினுக்கும். வாயில் போட்டால் உடனுக்குடன் கரைந்து இதயத்தில் போய் விழும். இதைச் சாப்பிட ஐம்பது மைல் தூரத்தில் இருந்துகூட ஆட்கள் வருவார்களாம்' அவ்வளவு பிரக்கியாதி பெற்றது.

மகள் என் பக்கம் திரும்பி 'sorry அப்பா' என்றாள். இனி என்ன செய்வது? அடுத்து வந்த திருப்பத்தில் மறக்காமல் காரைத் திரும்பினாள். சீஸ் பேக்கும், காப்பியும் ஓடர் பண்ணினோம். எனக்கோ பசி. மகள் 'அப்பா! அப்பா!' என்று கத்துவதற்கு முன்பாக நான் உறிஞ்சியால் சுடு கோப்பியை உள்ளே இழுத்துவிட்டேன். வாய் வெந்துபோனது. இப்படி எத்தனை முறை எனக்கு நடந்து விட்டது? அப்படியும் புத்தி வரவில்லையே! திரும்பித் திரும்பி மறந்துவிடுகிறேனே! வேகமான அந்த உணவகத்தில் இப்படியாக நாக்கை வேக வைத்துக் கொண்டு வெளி யேறினேன். என் மகள் பிளாஸ்டிக் குவளைகளை சிவப்பு குப்பைத் தொட்டி யிலும், மற்றவற்றை வெள்ளைத் தொட்டியிலும் போட்டுவீட்டு வந்தாள். என் அவஸ்தையைப் பார்த்து செல்லமாக என்னை இடித்துவிட்டு இதழ் விரிக்காமல் சிரித்தாள்.

பிள்ளைத் தமிழில் செங்கீரைப் பருவம். சப்பாணிப் பருவம், அம்புலிப் பருவம், அம்மானைப் பருவம் என்று வரும் அல்லவா? அதுபோல இந்த அமெரிக்காவிலும் பல பருவங்கள் வந்து வந்து போகும். அவளுடைய முதல் பருவம் 'பாபி டோஸ்' பருவம்தான். ஒரு காலத்தில் இந்தப் பாவைகள் வீட்டிலே 'நீக்கமற நிறைந்து' கிடந்தன. இந்த பேதைப் பருவம் மிகவும் சந்தோஷமானது. ஒரு தனி உலம் மணிக்கணக்காக இந்த 'பாபிகளை' வைத்து விளையாடிக் கொண்டிருப்பாள்.

பதினொரு வயது என்று நினைக்கிறேன். அப்பொழுது தான் முதன்முதலாக நாலுநாள் 'காம்பிங்' போனாள். எங்களை விட்டு இதற்குமுன் ஒருநாள்கூட பிரிந்து இருந்த தில்லை. ஆவலோடு எதிர்பார்த்து இருந்தவள் அந்த நாள் வந்ததும் தயக்கம் காட்ட ஆரம்பித்துவிட்டாள். நாங்கள் தேற்றி அனுப்பி வைத்தோம். நாலாம் நாள் இரவு திரும்பி வந்ததும் எங்களைக் கட்டிக் கொண்டாள். அந்த நாலு நாள் கதைகளையும் இரண்டு நாட்களாகச் சொன்னபடியே இருந்தாள். அந்தக் குழந்தை அனுபவித்த பிரிவுத் துயரும், பிறகு திரும்பியவுடன் அடைந்த குதூகலமும் மறக்க முடியாததாக இருந்தது.

சங்கீதப் பித்து தலைக்கேறியது இதற்குப் பிறகுதான். 'டீன் ஏஜ்' என்ற மடந்தைப் பருவம். 'பொப் மார்லி' என்ற பாடகன் அப்ப பிரபலம். அவனுடைய ஒலிப்பேழைகளை எல்லாம் வாங்கிச் சேர்த்தாள். வீட்டிலே அவனுடைய பாடல்கள் ஐந்தரைக்கட்டை சுருதியில் அதிர்ந்து கொண்டிருக்கும். 'விரிந்த சடையும் வெறும் மேனியுமாக' அவனுடைய பிம்மாண்டமான படங்கள் அவளுடைய அறையை முழுக்க முழுக்க அலங்கரித்தன. டெலிபோன் வாயைப் பொத்திக்கொண்டு, நாங்கள் அந்த இடத்தைவிட்டு அகலும் வரை காத்திருக்கும் வழக்கம் இந்த வயதில்தான் அவளிடம் ஆரம்பமாகியது.

நான் சாடையாகக் கண்ணயர்ந்து விட்டேன். கார் ஒரு பெற்றோல் கூடத்தில் நின்று கொண்டிருந்தது. அது தானியங்கி பெற்றோல் கூடம். காரில் பெற்றோல் நிறைந்ததும் தானாகவே நின்றுவிடும். மறக்காமல் 'லெட்' இல்லாத பெற்றோலையே போட்டாள். கடன் அட்டையைக் கொடுத்து கணக்கைச் சரிசெய்தாள். முன்பின் தெரியாத அந்த இளம் ஊழியர் ஏதோ சொன்னான். இவள் விழுந்து விழுந்து கண் பொங்கச் சிரித்தாள். 'நல்ல நாளாகட்டும்' என்று சொல்லி அவன் அட்டையைத் திருப்பினான். இவள் 'உமக்கும் அப்படியே' என்று கூறி வாங்கிக் கொண்டாள். அந்தக் கணத்தில் இவள் முற்றிலும் ஓர் அமெரிக்கப் பெண்ணாக மாறிவிட்டதுபோல் எனக்கு காட்சியளித்தாள்.

ஒருமுறை சற்று வளர்ந்து, அமெரிக்கக் கலாச்சாரம் கொஞ்சம் உரஞ்சப்பட்ட பிறகு, பகவான் கிருஷ்ணருடைய கதையைச் சொல்லிக் கொண்டிருந்தேன். பலராமனுடைய பிறப்பைப் பற்றி வர்ணிக்கும்போது கொஞ்சம் தடங்கல் வந்துவிட்டது. பலராமன் வாசுகி யினுடைய வயிற்றிலே உண்டாகி, மாயை யினால் ரோகிணியின் கருப்பைக்கு மாறிய வரலாற்றில்தான் சிக்கல். நான் 'வாசுகிதான் பலராமனுடைய உயிரியல் அன்னை; ரோகிணி வெறும் கர்ப்பபையில் காவிய தாய்தான்' என்று கூறினேன். அவளுக்கு அர்த்தமாகவில்லை. சிறிது யோசித்துவிட்டு ஏதோ புரிந்து கொண்டவள் போல் 'ஓ surrogate mother' என்றாள். எங்கள் புராணங்களைக்கூட அமெரிக்கன் நடைமுறை யில் விளக்கினால்தான் புரியும் என்ற நிலை வந்தபோது நான் என் மகளைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டு வருவதுபோல எனக்குப்பட்டது.

ஒப்பந்தத்தை காப்பாற்றுவதற்காக 400 மைல் தூரம் போக ஒப்புக் கொண்டிருக்கிறாள். கார் இப்போது பொஸ்டன் நகரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. இங்கேதான் நான் என்னுடைய அமெரிக்க வாழ்க்கையின் முதல் ஒன்பது மாதங்களைக் கழித்தேன். இங்கே தான் நிலவறையின் குளிரில் நடுங்கிக் கொண்டே அமெரிக்காவின் தொழில்முறை அரிவரிகளை கற்றுக்கொண்டேன். இங்கே தான் என்னுடைய மறக்க முடியாத இன்ப மான சனிக்கிழமை காலைகள் வந்து வந்து போயின. மகளுடைய பிஞ்சு விரல்களைப் பிடித்தபடி சலவைக்கூட யாத்திரை போனேன். அகலத் திறந்த அவள் விழிகளைப் பார்த்தபடி பூமித்தாய் பற்றியும், நாயன்மார் பற்றியும், நாங்கள் விட்டு ஓடிவந்த எங்கள் அருமை யாழ்ப்பாணத்தின் பாரம்பரியம் பற்றியும் கதைகள் பேசினோம்.

அப்போது திடீரென்று நாங்கள் போய்வந்த, எங்கள் இருதயத்துக்கு மிகவும் நெருங்கிய, சலவைக்கூடம் தென்பட்டது. நான் ஒரு சிறு பையனின் ஆர்வத்தோடு 'அங்கை பார்! பூமாதேவி!' என்று கத்தினேன். என் மகளுக்கு நான் கத்தியது அர்த்தமாக வில்லை. தலையை அவள் திரும்பக்கூட இல்லை. ''என்னப்பா பூமாதேவி? What do you mean?" என்றாள்.

சலவைக்கூடம் அப்படியேதான் இருந்தது. விளம்பரப் பலகை கொஞ்சம் மங்கலாகி விட்டது போலப் பட்டது. அங்கே இப்போது முப்பது சலவை மெசின்களும், முப்பது உலர்த்திகளும் வேகமாகச் சுழன்று இந்த மனிதப்பிறவிகளின் உய்வுக்காக பூமாதேவியை மேலும் கொஞ்சம் மாசுபடுத்திக் கொண்டிருக்கும்.

கார் விரைந்து கொண்டிருந்தது.

''என்னப்பா, suddenly your are quiet?" என்றாள் என் மகள்.

மனித மனத்தின் விசித்திரத்தைப் பற்றி யார் என்ன சொல்வது? நான் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன்.

எங்கள் ஊரில் ஒரு கிழவி, செல்லாச்சி என்று பேர். கணக்கெடுக்க முடியாத வயது. தொண்டுக்கிழம் என்று சொல்வார்களே, அந்தப் பருவம்.

சிலவேளைகளில் என்ன நினைத்துக் கொள்வாளோ, 'முக்கித்தக்கி' எழும்பி அலமாரியைத் திறப்பாள். பிறகு அதற்குள்ளே இருக்கும் தைலாப்பெட்டியை எடுத்து பூட்டை நீக்கி மூடியைத் திறப்பாள். பிறகு அவளுக்குப் எதற்காக பெட்டியைத் திறந்தோம் என்பது மறந்துவிடும். அப்படியே கொஞ்சநேரம் இருந்து யோசித்துவிட்டு மறுபடியும் பூட்டிவைப்பாள்.

ஆனால் நாற்பது வருடங்களுக்கு முந்தி வேலாயுதபிள்ளை இருபது ரூபா அவளிடம் கடன் வாங்கி ஏமாற்றியதை இன்னும் மறக்கவில்லை. சொல்லிச்சொல்லி திட்டிய படியே இருப்பாள்.

மகள் மறுபடியும் ''என்னப்பா?'' என்றாள்.

''ஒன்றுமில்லை'' என்றேன்.

அந்தக் கார், ஒருவருக்கு மேற்பட்ட பயணிகள் போவதற்காக ஏற்படுத்தப்பட்ட அந்தப் பிரத்தியேகமான, வளைவேயில்லாத நெடுஞ்சாலையில், ஒரு தேர்போல வாயுவேகம் மனோவேகமாக, அமெரிக்காவின் நிர்ணயிக் கப்பட்ட உச்ச வரம்பு ஸ்பீட் வேகத்தையும் தாண்டி, கட்டிடங்கள், வாகனங்கள், மரங்கள், மனிதர்கள், பழைய ஞாபகங்கள் எல்லா வற்றையும் பின்னே தள்ளிவிட்டு, ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

அ. முத்துலிங்கம்
Share: 




© Copyright 2020 Tamilonline