Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | கவிதைபந்தல் | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
முன்னோடி
கே.வி. நாராயணசாமி
- பா.சு. ரமணன்|டிசம்பர் 2016|
Share:
இசைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு வாழ்ந்த இசைக்கலைஞர்களுள் ஒருவர் கே.வி.என். என்று அழைக்கப்படும் பாலக்காடு கே.வி. நாராயணசாமி அவர்கள். இவர் மே 23, 1923 அன்று பாலக்காட்டுக்கு அருகேயுள்ள சந்திரசேகரபுரத்தில், விஸ்வநாத பாகவதர் - முத்துலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தார். சங்கீத பாராம்பரியம் கொண்ட குடும்பம். பாட்டனார், தந்தையார் இருவருமே தேர்ந்த வயலின் வித்வான்கள். வீட்டில் எந்நேரமும் இசை ஒலித்துக்கொண்டிருக்கும். அந்தச் சூழலிலேயே நாராயணசாமி வளர்ந்தார். தந்தையார், தன்னைப்போலவே மகனும் ஓர் இசைக்கலைஞராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் தன்னைப்போல் பக்கவாத்தியம் செய்பவராக இல்லாமல் மேடையின் மையத்தில் அமர்ந்து பாடும் முதன்மைக் கலைஞராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்கான முயற்சிகளைச் சிறுவயதிலேயே துவங்கிவிட்டார். பள்ளிப்படிப்பைவிட இசைப்படிப்பே முக்கியம் என்று கருதினார் தந்தை. அதனால் நாராயணசாமி பள்ளியிறுதி வகுப்பைக்கூடத் தாண்டவில்லை. ஐந்தாவது ஃபாரத்தோடு படிப்பை நிறுத்திவிட்டு இசைக்கே முழுக்க முழுக்கத் தன்னை அர்ப்பணித்தார். சங்கீத நுணுக்கங்களைத் தந்தையிடமிருந்து கற்றுத் தேர்ந்தார்.

பிரபல மிருதங்க வித்வான் பாலக்காடு மணி ஐயர் இவரது உறவினர். அவரிடம் இசை கற்க அனுப்பினார் தந்தை. மணி ஐயர் மிருதங்க வித்வான் என்றாலும் வாய்ப்பாட்டிலும் தேர்ந்தவர். அவர் அன்போடு நாராயணசாமிக்கு சங்கீத நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார். ஒரு ராகத்தை எடுத்துக்கொண்டு, எப்படி அதை விஸ்தாரமாகப் பாடுவது, எப்படி அதில் விதவிதமான சங்கதிகளைக் கொண்டுவருவது என்று பல நுணுக்கங்களை அவர் சொல்லிக்கொடுக்க, அப்படியே பிடித்துக்கொண்டார் நாராயணசாமி. மணி ஐயரைத் தொடர்ந்து தந்தையின் நண்பரான சங்கீத வித்வான் கிருஷ்ணையரிடம் பயின்று மேலும் பல இசை நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். நல்ல குரல்வளமும், பாவத்துடன் பாடும் ஆற்றலும் இவருக்கிருந்தது. கோயில் மேடைகள் பலவற்றில் பாடினார். பல இசைமேதைகளின் கச்சேரிகளுக்குச் சென்று அவர்கள் எப்படிப் பாடுகின்றனர் என்பதைக் கவனித்தார். கேட்டுக்கேட்டே தனது திறமையை வளர்த்துக் கொண்டார். இக்காலகட்டத்தில் அவரது குடும்பம் கோயமுத்தூருக்கு இடம் பெயர்ந்தது. தந்தையின் நண்பர் ஒருவர்மூலம் 'கண்ணப்பா' படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அழகான தோற்றமும் நல்ல குரல்வளமும் உடைய 'மாஸ்டர் கே.வி. நாராயணசாமி' அப்படத்தில் பால கண்ணப்பராக நடித்தார். அதுவே இவரது முதலும் கடைசியுமான படம்.

Click Here Enlargeஇச்சமயத்தில் இசைமேதை பாப்பா வெங்கட்ராம ஐயரிடம் இசைபயில அனுப்பினார் தந்தை. அவர், அரியக்குடி ராமானுஜ ஐயங்காரிடம் இவரை ஒப்புவித்தார். குடும்ப நண்பரான ஐயங்கார் நாராயணசாமியை அரவணைத்துக் கொண்டார். ஐயங்காரின் முதன்மைச் சீடரானார் நாராயணசாமி. குருகுலவாசமாக அரியக்குடியிடம் இருந்து இசை நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார். அப்போது நாராயணசாமிக்கு வயது 19. அதுமுதல் அரியக்குடி காலமான 1967ம் ஆண்டுவரை, கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் அவரது உள்ளம் கவர்ந்த அத்யந்த சீடராக இருந்தார் அவர். அரியக்குடி செல்லும் இடங்களுக்கெல்லாம் உடன்சென்று, குருவின் பின்னால் அடக்கமாக அமர்ந்து தம்புரா மீட்டுவது, குரு பாடுவதற்கேற்ப உடன்பாடுவது என்று கேட்டுக் கேட்டே கற்றார். உறவுப்பெண்ணான அன்னபூரணியுடன் நாராயணசாமிக்குத் திருமணம் நிகழ்ந்தது. அந்த விழாவில் குரு அரியக்குடி, பாலக்காடு மணி ஐயர், பாப்பா வெங்கட்ராம ஐயர் உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் கலந்துகொண்டனர். அந்த மண விழாவில் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் கச்சேரி செய்ய, அவருக்குத் தம்புரா மீட்டினார் புதுமாப்பிள்ளையும் சீடருமான நாராயணசாமி.

இவரது முதல் கச்சேரி 1954ல் சென்னை மியூசிக் அகாதமியில் நடந்தது. அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் பாடுவதாக இருந்த அந்தக் கச்சேரியில் திடீரென அவரால் வரமுடியாததால் அவருக்கு பதிலாக கே.வி. நாராயணசாமி அனுப்பி வைக்கப்பட்டார். பாப்பா வெங்கட்ராம ஐயரும், பாலக்காடு மணி ஐயரும் பக்கம் வாசித்த அந்தக் கச்சேரி நாராயணசாமியின் வாழ்க்கையில் திருப்புமுனை ஆனது. தொடர்ந்து கச்சேரி வாய்ப்புகள் வரத்துவங்கின.

அரியக்குடி பாட இயலாத சமயங்களில் அவருக்குப் பதிலாகச் சென்று கச்சேரிகள் செய்வது, அரியக்குடியின் அனுமதியுடன் பல இடங்களுக்கும் சென்று கச்சேரிகள் செய்வது என்று குரு சொல் மீறாத சீடராக இருந்தார் அவர். சென்னை வானொலியிலும் பல கச்சேரிகளைச் செய்திருக்கிறார். ஒரே நேரத்தில் இரு இடங்களில் பாட வாய்ப்பு வரும்போது ஓரிடத்திற்கு அரியக்குடியும் மற்றோர் இடத்திற்கு நாராயணசாமியும் செல்வதுண்டு.

1962ல் சென்னை அரசு இசைக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார் நாராயணசாமி. 1963ல் மனைவி திடீரெனக் காலமானார். இசையின் துணையால் அதிலிருந்து மீண்டுவந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் இசைக்கலைஞரான பத்மாவைத் திருமணம் செய்துகொண்டார். இக்காலகட்டத்தில் டாக்டர் ராபர்ட் பிரௌனின் வேண்டுகோளுக்கிணங்க 1965ம் ஆண்டில் அமெரிக்கா வந்தார். வெஸ்லெய்ன் பல்கலையின் ஆதரவில் அங்குள்ள மாணவர்களுக்கு கர்நாடக இசை பயிற்றுவித்தார். அக்காலகட்டத்தில் புகழ்பெற்ற பல கச்சேரிகளை பாலக்காடு ரகு மற்றும் வி.வி. சுப்ரமணியுடன் இணைந்து செய்தார். தமிழகத்திலிருந்து வருகை தந்த பல இசைக்கலைஞர்களுடன் இணைந்து அமெரிக்காவின் பல நகரங்களுக்கும் சென்று கச்சேரிகள் செய்தார். 1967ல், லாஸ் ஏஞ்சலஸில் நடந்த Hollywood Bowl நிகழ்வில் இந்தியாவிலிருந்து வந்திருந்த சிறந்த நான்கு இசைக் கலைஞர்களுள் நாராயணசாமியும் ஒருவர். மீதி மூவர் பிஸ்மில்லாகான், அலி அக்பர் கான், பண்டிட் ரவிசங்கர்.
பல்வேறு ஜுகல்பந்திகளில், சேர்ந்திசைக் கச்சேரிகளில் பங்கேற்றுத் தனது தனித்திறமையை நிரூபித்தார் நாராயணசாமி. மேடையில் அரியக்குடியின் வழிமுறையையே பின்பற்றினாலும் தனக்கேயான தனிப்பாணியில் பாடுவது அவரது வழக்கம். பழனி சுப்பிரமணிய பிள்ளை, பாலக்காடு மணி ஐயர், பாலக்காடு ரகு, உமையாள்புரம் சிவராமன், டி.என். கிருஷ்ணன் எனப் பலருடன் இணைந்து பல கச்சேரிகளைச் செய்திருக்கிறார். 1974ல் American Society for Eastern Arts அழைத்ததன் பேரில் மீண்டும் அமெரிக்கா சென்றார் நாராயணசாமி. தென்னகத்திலிருந்து சென்ற கலைஞர்களுடன் இணைந்து பல கச்சேரிகளைச் செய்தார். 1983ல் க்ளீவ்லாண்ட் சுந்தரம் மற்றும் இசையன்பர்கள் இணைந்து நடத்திவந்த "பைரவி" அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்கி மீண்டும் அமெரிக்கா வந்தார். எம்.எஸ். அனந்தராமன், திருச்சூர் நரேந்திரன் உள்ளிட்டோருடன் கச்சேரிகள் செய்தார். இசைக் கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் நடத்தினார். பின்னர் தமிழகம் திரும்பிய அவர், 1984ல் Fulbright Scholarship மூலம் மீண்டும் அமெரிக்கா வந்தார். இசைத்துறைக்காக அந்த ஸ்காலர்ஷிப் பெற்ற முதல் இந்தியர் கே.வி. நாராயணசாமிதான். அக்காலத்தில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வந்து அதிகம் கச்சேரிகள் பாடியவரும் நாராயணசாமிதான். அக்காலக்கட்டத்தில் வட அமெரிக்க நகரங்கள் பலவற்றுக்கும் பயணம் செய்து கச்சேரிகள் நடத்தினார். பல மாணவர்களுக்கு நேரடியாக இசை பயிற்றுவித்தார். அமெரிக்காவில் மிகச்சிறந்த சீடர் குழாத்தை உருவாக்கினார். இன்றளவும் அவரது சிஷ்ய பரம்பரையினர் சீரிய முறையில் இசையைப் பரப்பி வருகின்றனர்.

1982ல் இசைப்பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர், தொடர்ந்து உலகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து இசை வளர்த்தார். அமெரிக்கா மட்டுமல்லாது துபாய், மஸ்கட், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, லண்டன், பாரிஸ், ஜெனிவா எனப் பயணம் செய்து கச்சேரிகள் செய்திருக்கிறார். எடின்பர்க் இசைவிழா, பெர்லின் இசைவிழா என உலகளாவிய இசைவிழாக்களில் கலந்துகொண்ட பெருமை இவருக்கு உண்டு.

நாராயணசாமியின் குரல் மிக மென்மையானது. இனிமையானது. "எந்தரோ மஹானுபாவுலு", "ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே", "பாலகோபால", "தசரத சுதா", "பாஹிமாம்", "மாயம்மா" உள்ளிட்ட புகழ்பெற்ற கீர்த்தனங்களைத் தன் பாணியில் பாடி பார்வையாளர்களை வசப்படுத்தி விடுவார். மேடைகளில் தமிழ்க் கீர்த்தனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்."காண வேண்டாமோ", "முருகா முருகா", "பிறவா வரம் தாரும்", "எந்நேரமும் உந்தன்", "ஒருத்தி மகனாய்ப் பிறந்து" போன்ற பாடல்களை மேடைதோறும் பாடித் தமிழிசை வளர்த்திருக்கிறார். கோபாலகிருஷ்ண பாரதியாரின் கீர்த்தனைகளை மேடையில் அதிகம் பாடியவர் இவர்தான். எத்தனையோ கச்சேரிகள் செய்திருந்தாலும் 1940ல் தான் பங்கேற்ற திருவையாறு தியாகராஜ ஆராதனை நிகழ்ச்சியே தன்னால் மறக்க முடியாத கச்சேரி என்பார் இவர். இவர் பாடியவை அக்காலத்தில் கிராமஃபோன் தட்டுகளாகவும், பிற்காலத்தில் குறுந்தகடுகளாகவும் வெளியாகியிருக்கின்றன. இவரது முக்கியமான இசைத் தொகுப்புகளை www.youtube.com/watch?v=jTCG0GnlpNA என்ற யூ-ட்யூப் சேனலில் கேட்கலாம்.



இளைய பாடகர்களை எப்போதும் ஊக்குவித்து வந்தவர்; சீடர்களுக்கு மிகச் சிறப்பான முறையில் குரல்வளம் மேம்படும் வகையில் நுணுக்கமாகப் பயிற்சி அளித்தவர்; கடினமான ராகமான வராளியை மிகவும் அநாயசமாகப் பாடும் ஆற்றல் மிக்கவர்; நாகஸ்வராவளி ராகத்தில் அமைந்த தியாகய்யரின் கீர்த்தனையான 'ஸ்ரீபதே'வை இவர் பாடப் பாடக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என ரசிகர்களால் பலவாறாகப் பாராட்டப்பட்டவர். 1970ல் இவரது இசை மேதைமையைப் பாராட்டி கேரள அரசு சங்கீத நாடக அகாதமி விருதளித்து கௌரவித்தது. 1976ல் இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான 'பத்மஸ்ரீ' அளிக்கப்பட்டது. மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் இவருக்கு 'சங்கீதகலா நிபுணா' என்ற பட்டத்தை வழங்கியது. தவிர, 'சங்கீத ரத்னாகர', காயக சூடாமணி', 'கீதாபூஷணம்' உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

இளம் பாடகர்களுக்கு இவர் சொல்லியிருக்கும் அறிவுரைகள் என்றும் பின்பற்றத்தக்கவை. விடியற்காலையில் எழுந்து உச்ச ஸ்தாயியில் பாடி பயிற்சி செய்யக்கூடாது. மந்த்ர ஸ்தாயியில் மட்டுமே விடிகாலை வேளைகளில் பயிற்சி செய்யலாம். அதுவே குரலுக்கு நல்லதென்பது இவரது தீர்மானமான கருத்து. பயிற்சி செய்கிறேன், அசுர சாதகம் செய்கிறேன் என்று இளம் பாடகர்கள் குரலைக்கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பதில் இவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். நடுவில் இதயநோய் தாக்கி சிகிச்சை மேற்கொண்டார் என்றாலும் அதிலிருந்து மீண்டு முன்பைவிட அதிகமாகக் கச்சேரிகள் செய்தார். இறுதி மூச்சுவரை இசைக்காகவே வாழ்ந்த இவர் ஏப்ரல் 1, 2002 அன்று 79ம் வயதில் நாதத்துடன் கலந்தார். உலகெங்கிலும் உள்ள அவரது சீடர்கள் கே.வி. நாராயணசாமி அவர்களது புகழை, பெருமையைத் தமது இசைமூலம் பரப்பிவருகின்றனர்.

பா.சு.ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline