Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | கவிதைபந்தல் | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
அழகியசிங்கர்
பசுமைப் போராளி M. ரேவதி (பகுதி - 1)
- வெங்கட்ராமன் சி.கே., அரவிந்த் சுவாமிநாதன்|டிசம்பர் 2016|
Share:
ரேவதி, 15 வருடங்களாக இயற்கை, பாரம்பரிய விவசாயம், புதிய வேளாண்மைத் தொழில்நுட்பம் பற்றியும், நுகர்வோர் நலம், விவசாயிகளின் வாழ்க்கை மேம்பாடு, பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது பற்றியும் ஆராய்ச்சியும் களப்பணியும் செய்துவருகிறார். பதினோரு லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் ரசாயனமுறை விவசாயத்தைக் கைவிட்டு நிலையான இயற்கை விவசாயத்திற்கு மாற ரேவதியின் Inspire அமைப்பு வழிகாட்டியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த இவர் இந்தியா மட்டுமின்றி இந்தோனேசியா, இலங்கை போன்ற நாட்டு விவசாயிகளிடமும் நமது பாரம்பரிய இயற்கை வேளாண் முறைகளைக் கொண்டு சேர்த்துள்ளார். இவர், AID அமைப்பின் துணையுடன், இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்கள் வாழ்வாதாரத்தை திரும்பப்பெறவும், ஏரி, குளங்களைச் சீரமைக்கவும், முன்னூறுக்கும் மேற்ப்பட்ட பாரம்பரிய விதைகளைக் காக்கவும் உழைத்துள்ளார். அவருடன் உரையாடியதிலிருந்து...

*****


தென்றல்: வணக்கம் அம்மா. உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.
ரேவதி: எல்லாருக்கும் பசுமை வணக்கம். தென்றலை எனக்குக் கடந்த பல ஆண்டுகளாகவே தெரியும். நான் தொடர்ந்து தென்றலைப் பார்த்துக்கொண்டு வருகிறேன். மிகநல்ல முயற்சி. தென்றலுடன் என் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

தென்றல்: உங்கள் பின்புலம் குறித்துச் சொல்லுங்கள்...
ரேவதி: நான் ஈரோடு அருகே உள்ள சிறிய விவசாயக் கிராமம் ஒன்றில் பிறந்து வளர்ந்தவள். தந்தை கிராமத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர். நான் ஆறுமாதக் குழந்தையாக இருந்தபோது போலியோ தாக்கி இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டன. வலதுகால் 20 சதவீதம்தான் செயல்படும். இடதுகால் 70 சதவீதம் செயல்படும். வளர வளர இதை ஒரு பெரிய பாதிப்பு என்று சொல்லமுடியாத அளவுக்கு என்னால் அதிலிருந்து மீளமுடிந்தது. இதற்கு என் தந்தை ஒரு காரணம். அவர் எனக்கு நிறையக் கதைப் புத்தகங்களைக் கொடுத்தார். அதன்மூலம் இயற்கையின் மீதும் பறவைகள் மீதும் எனக்குப் பெரிய ஈடுபாடு உண்டானது.

நடக்கமுடியாது; தானாகச் செயலபட முடியாது என்ற நிலையில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பறவைகளை, இயற்கையை வேடிக்கை பார்ப்பேன். பறவைகள் என் அருகில் வரும். அவற்றுக்குத் தெரியும், நான் அவற்றைத் தாக்கமாட்டேன், பிடிக்க முயலமாட்டேன் என்பது. அப்படி வரும்போது ஒவ்வொருமுறையும் ஏதாவது பூச்சி, விதை அல்லது கூடுகட்டப் பயன்படும் பொருள்களை எடுத்து வரும். அதைப் பார்க்கப் பார்க்க எனக்கு ஆர்வம் அதிகமானது. பின்னர் மெள்ளச் சமாளித்துக்கொண்டு நடக்கப் பழகினேன். பள்ளிக்குப் போனேன். எனது பெரும்பாலான ஓய்வுநேரம் நூலகத்திலும் இயற்கை சார்ந்த விஷயத்திலும் கழிந்தன. நிறையச் செடிகளை வளர்த்தேன். நிறைய பறவை காணும் முகாம்களுக்குச் சென்றேன். சுற்றுச்சூழல் இயக்கங்களில் ஈடுபட்டேன். பணிக்குச் செல்லும் காலம் வந்தபோது, குழந்தைகளுடன் இருக்க விரும்பி ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுத்தேன்.



தென்றல்: உங்கள் ஆசிரியப் பணி குறித்துச் சொல்லுங்கள்....
ரேவதி: இயற்கை, அறிவியல், சுற்றுச்சூழல் ஆகியவற்றை இயன்ற அளவுக்குத் தீவிரமாக, குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டேன். என்னுடைய வகுப்புகள் மிக விறுவிறுப்பாகவும், உரையாடலால் நிரம்பியும் குழந்தைகள் விரும்பத்தக்க வகையில் இருந்தன. மிருகக்காட்சி சாலை பயணம், இயற்கைச்சூழல் நடை, காட்டுப் பாதைநடை என்று பல முயற்சிகளைப் பள்ளியில் செய்தோம். பத்து வருடம் ஆசிரியையாக இருந்தேன். அந்தக் காலகட்டத்தில் நாங்கள் செய்துவந்த பணி மற்றப் பள்ளிகளையும் கவர்ந்ததால், அவையும் எங்களுடன் இணைந்துகொண்டன. நாங்கள் கோவை சுற்றுச்சூழல் சங்கம், கோவை மலையேற்றச் சங்கம் என பல அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டோம். ஒவ்வொரு வாரமும் காடு, மலைகளுக்குப் போய் அங்கிருக்கும் இயற்கைச் சூழலைக் குறித்துக் கற்றுக்கொடுப்போம். எல்லாம் ஒன்றோடொன்று தொடர்புடையவை; யாவுமே முக்கியம்தான்; எப்படி ஒரு பறவை அழிந்து போனால் அதனுடன் நிற்காமல், தொடர்புடைய 40 இனங்கள் நேரடியாக பாதிக்கப்படும்; காட்டுக்குள் என்னவெல்லாம் நடக்கின்றன; நாம் எப்படி இயற்கையின் அங்கமாக இருக்கிறோம்; எல்லாவற்றையும் எப்படி மதிக்க வேண்டும்; பூச்சிகள் பறவைகள் எப்படி இயற்கையோடு பிணைந்து தங்கள் வேலைகளை அழகாகச் செய்கின்றன என்பவை பற்றியெல்லாம் சொல்லித் தருவது எங்கள் வேலையாக இருந்தது.

வெகு சீக்கிரத்திலேயே இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் இதில் இணைந்தனர். தொடர்ந்து குடும்பத்தினரும் சேர்ந்தனர். எங்கள் குழுவில் ஒரு Anthropologist, Reptile specialist, Ornithologist, Soil expert என்று பலர் இருந்தனர். இந்தப் பயணங்கள் புதிய வாசல்களைத் திறந்தன.

தென்றல்: பறவைகள் பற்றிய உங்கள் ஆய்வு பற்றிச் சொல்லுங்கள்...
ரேவதி: இந்தியப் பறவையியலின் தந்தை சலீம் அலியின் நினைவாக உருவாக்கப்பட்ட Salim Ali Center for Ornithology and Natural History (SACON) கோவையின் ஆனைகட்டியில் உள்ளது. இந்தப் பறவைகள் ஆராய்ச்சி நிலையத்தில் இயற்கைக்கல்வி தொடங்கினோம். அப்போது அந்த ஆராய்ச்சி நிலையத்தின் பணிகளில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. விரைவிலேயே அவர்கள் எனக்கு அசோசியேட் மெம்பர்ஷிப் கொடுத்தார்கள்.

இந்தியா முழுவதிலுமிருந்து இறந்த பறவைகளின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் அங்கே வரும். அவற்றைப் போஸ்ட்மார்ட்டம் செய்து, எதனால் அந்தப் பறவைகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன அல்லது அழிந்துவிட்டன என்ற தகவலைச் சேகரித்தோம். பறவைகளின் மரணத்திற்கான காரணத்தை அறியப் போஸ்ட்மார்ட்டம் அறிக்கைக்காகக் காத்துக் கொண்டிருப்பேன். ஒவ்வொரு பறவைக்கும் ஓர் இயற்கைச்சூழல் மண்டலம் இருக்கின்றது. அது அழிந்தால் அந்தப் பறவை பாதிக்கப்படும். உதாரணமாக டோடோ பறவையினம் அழிந்தே போய்விட்டது. அவை அழிந்ததனால் சிலவகை மர நாற்றுக்கள் உருவாவதே இல்லை. ஏனென்றால் டோடோக்கள் சாப்பிட்டு அதன் வயிற்றுக்குள் இருந்தால்தான் அந்த விதையின் உறை கிழிந்து, முளைக்கத் தயாராகி, பறவை எச்சத்துடன் மண்ணில் விழுந்து முளைக்கும். டோடோ இல்லை என்னும்போது நாளடைவில் அந்த மரங்களும் இல்லாமல் போயின. மரங்கள் இல்லாததால் டோடோக்கள் வசித்த தீவே கடலுக்குள் போகும் சூழல் இன்றைக்கு இருக்கிறது. இயற்கை என்பது ஒரு சிக்கலான வலைப்பின்னல். வாழும் ஒவ்வொருவருக்கும் அதில் ஒரு முக்கியமான பாத்திரம் இருக்கிறது. அதையறியாததால், எல்லாவற்றையும் விடப் பெரிய உயிரினமாக, அறிவால் மேம்பட்டவர்களாக இருந்தும், நம்முடைய சுற்றுச்சூழலை வெகுவாகச் சிதைப்பவர்களாகவும் இருக்கிறோம்.

அங்கே நான் அறியவந்தது எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. விவசாயிகள் பயிர்களுக்கு எண்டோசல்ஃபான் போன்ற பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கிறார்கள். பூச்சிமருந்தால் இறந்த பூச்சிகளைச் சாப்பிடும் பறவைகளின் உடலிலும் விஷம் ஏறுகிறது. பூச்சிமருந்து, ரசாயன உரம் எல்லாமே விஷம்தான். பறவைகள் பத்து பூச்சிகளைச் சாப்பிட்டால், அவற்றின் உடலில் பத்துப் பங்கு விஷம் ஏறுகிறது. இதுவே பறவைகளின் அழிவிற்கு மிகப்பெரிய காரணம்.

தென்றல்: பின் என்ன செய்தீர்கள்?
ரேவதி: விவசாயிகள் இதன் தீமைபற்றி அறிந்திருக்கிறார்களா, இவ்வகை விவசாய முறை உண்மையிலேயே தேவைதானா, இதனால் சுற்றுச்சூழல் மாசு உண்டாவது அவர்களுக்குத் தெரியுமா என்று சிந்தித்தேன். இரண்டாவது, பறவைகள் அழிந்தால், உணவுச் சங்கிலியின் உயர்மட்டத்தில் இருக்கும் நம்மை அது எப்படிப் பாதிக்கும் என்ற கேள்வி எழுந்தது. இதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டேன். விவசாயக் கிராமங்களுக்கு பயணம் சென்றேன். அது எனக்கு ஒரு கனவுபோல இருந்தது. நான் பொன்னியின் செல்வனில் வந்த இஞ்சியும், மஞ்சளும், கரும்பும் விளையும் கிராமங்களைத் தேடிப்போனேன். ஆனால் நான் கண்டது வேறு.



தென்றல்: நீங்கள் என்ன பார்த்தீர்கள்?
ரேவதி: கிராமத்தில் எந்த விவசாயியும் சந்தோஷமாக இல்லை. விவசாயத்தை தங்களுக்கு இடப்பட்ட சாபமாக அவர்கள் கருதினார்கள். காரணம், காலங்காலமாகப் பின்பற்றப்பட்ட வேளாண் அறிவு அவர்கள் கையைவிட்டுப் போயிருந்தன. இரண்டு தலைமுறையாகப் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதரவில் நடக்கும் ரசாயன விவசாயத்தைச் செய்ததால், அதை அறிவியல் வளர்ச்சி என அவர்கள் நம்பியதால், பாரம்பரிய அறிவை முற்றிலுமாகத் தொலைத்திருந்தனர். புதிய தொழில்நுட்பம் அவர்களை மிக உயர்ந்த இடத்தில் கொண்டுசேர்க்கும் என்று நம்பினார்கள். தலைமுறைகள் கடந்து 40, 50 வருடங்கள் ஆகியும் தவறான பாதையிலிருந்து அவர்களால் மீளமுடியவில்லை.

மண்ணும் வீரியமிழந்தது, விவசாயியும் களைப்படைந்தார். எந்த விளைபொருளை உற்பத்தி செய்தால் இதிலிருந்து மீளமுடியும் என்று யோசித்துக் கொண்டிருந்தார். நான் பார்த்த விவசாயிகளில் ஒருவர்கூடச் சந்தோஷமாக இல்லை. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இஞ்சியும் மஞ்சளும் மணக்கவில்லை. மாறாக எண்டோசல்ஃபானும், மோனோ போட்டோபிளாஸமும் தான் எங்கும் நாறிக்கிடந்தன. பூச்சிக்கொல்லிகளால் பூச்சிகளும், பாம்புகளும், பறவைகளும், மயில்களோடும் இரவோடு இரவாகக் கொல்லப்பட்டுக் கிடந்தன. மாலை பூச்சிமருந்து அடிக்கவேண்டியது, காலையில் செத்துக் கிடக்கும் உயிரினத்தைப் புதைக்கவேண்டியது என்று விவசாயிகளின் வேலை தொடர்ந்தது.

அப்படி ஆரம்பிப்பதுதான் விவசாயிகளின் தற்கொலையில் போய் முடிகிறது. ஒரு விவசாயிகூடக் கடன் இல்லாமல் இல்லை. ஒரு விவசாயியின் முகத்தில்கூடப் புன்னகையைப் பார்க்கவில்லை. பயிரிட்டவர்கள் கடனாளியாகவும், அதனை உண்பவர்கள் நோயாளிகளாகவும் இருப்பதைக் கண்கூடாகப் பார்க்கமுடிந்தது.

அங்கு விளைந்த விதைகள், பயிர்கள், பழங்கள் எல்லாவற்றையும், அவற்றை உண்டவர்களின் தாய்ப்பால் சாம்பிளையும் எடுத்துச்சென்று ஆராய்ந்தபோது அவற்றில் நச்சின் எச்சம் இருந்தது தெரியவந்தது. கழுவினாலோ, சமைத்தாலோ, வேகவைத்தாலோ அந்த விஷம் காணாமலோ நீராவியாகவோ போய்விடுவதில்லை. பெருமளவு உண்பவர்களின் உடலுக்குள் சென்று, அது மெல்லக் கொல்லும் விஷமாகி, ஏகப்பட்ட நோய்களை உண்டாக்குகிறது!

தென்றல்: மிகவும் கொடுமையான விஷயம்தான்!
ரேவதி: ஆமாம். ஆனால், இதை விவசாயிகள் அறியவில்லை. பாரம்பரிய இந்திய விவசாயம் சிதைந்து, இன்றைக்கு Agri-Business ஆக மாறியிருக்கிறது. இதை அவர்கள் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி என்று நினைத்துப் பின்பற்றுகிறார்கள். உண்மையில் பெரிய நிறுவனங்கள் விவசாயிகளை ஒரு மார்க்கெட் என்றுதான் பார்க்கிறார்கள். விதைப்பதுமுதல் அறுவடைவரை எல்லாவற்றுக்கும் வெளியாரையே விவசாயி சார்ந்திருக்கிறார். இந்த இடுபொருட்களுக்காக ஒவ்வொரு விவசாயியும் ஒரு ஏக்கருக்குக் குறைந்தபட்சம் 25,000 ரூபாய் செலவழிக்கிறார். எல்லாப் பணமும் நாட்டைவிட்டு வெளியே செல்கிறது. ஆனால் விவசாயியோ கடனாளி ஆகிக்கொண்டே இருக்கிறார்.

நாளடைவில் நிலம் வளத்தை இழந்து, மண்ணிலிருக்கும் உயிரினங்கள் அழிந்துபோய், மண் மலடாகிவிடுகிறது. உவர்மண் ஆகிறது. களைகூட முளைப்பதில்லை. பறவைகள் மரணம்பற்றி ஆராயப்போன எனக்கு, அது விவசாயிகளின் தற்கொலையில் முடிவது தெரியவந்தது. "வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்" என்ற நிலை மாறி, அவன் பிற உயிரினங்களையும் அழித்துத் தன்னையும் அழித்துக்கொள்பவனாக மாறியிருக்கும் அவல நிலைமை தெரிந்தது. விவசாயம், விவசாயிகள் மீது ஈடுபாடு வந்தது இப்படித்தான்.
தென்றல்: இயற்கை விவசாயம் ஏன் அவசியமாகிறது?
ரேவதி: இந்த நிலைமையை மாற்ற விவசாயிகளிடம் இதுபற்றி விரிவாகப் பேசியபோது "இதிலிருந்து எப்படி மீள்வது எனத் தெரியவில்லை; மாற்றுமுறை எங்களுக்குத் தெரியவில்லை. தெரிந்தால் அப்படிச் செய்ய மாட்டோம். நிலம் கெட்டுப் போய்விட்டது. உரங்கள் மண்ணையும் மட்டுமில்லாமல் நிலத்தடி நீரையும் பாதித்துவிட்டன. எங்கள் அப்பா, தாத்தா காலத்தில் நல்ல தண்ணீராக இருந்தது இன்றைக்கு உப்புநீராகிவிட்டது. அதை எடுத்து விவசாயம் செய்யும்போது மண்ணும் பயிரும் நாசமடைகின்றன. மேல்மண் உப்பாகி விளைச்சல் குறைந்துவிட்டது. இந்த இடுபொருட்களை விலைக்கு வாங்கிப்போட்டு, நாங்கள் கடனாளி ஆனதுதான் மிச்சம். மழையும் பொய்த்துவிட்டது" என்றனர் கவலையுடன்.

புவி வெப்பமாதல் விவசாயிகளையும், மீனவர்களையும்தான் அதிகம் பாதிக்கிறது. இந்தியாவில் இன்றைக்கு மழைக்காலம் என்பதே இல்லாமல் போய்விட்டது. காலநிலை மாறிவிட்டது. புயலினால் வரும் மழையைத் தவிர, வேறு வகையில் நமக்குத் தண்ணீர் வரத்து என்பதே இல்லை. பருவமழை இருந்தால் திட்டமிட்டு வேலை செய்யலாம். ஆனால் புயல்மழையை நம்பி விவசாயம் செய்ய முடியாது. கோடைக்காலமோ, பனிக்காலமோ, புயல்மழைக் காலமோ பயிர் பாதிப்புக்குண்டாகிறது. இந்தச் சூழ்நிலையில் இயற்கை விவசாயம் மிக மிக அவசியமாகிறது.

தென்றல்: விவசாயத்தின் இன்றைய நிலை என்ன?
ரேவதி: இன்றைக்கு விவசாயிகள் ரசாயன விவசாயத்தின் தீமையை நன்றாக அறிந்திருக்கிறார்கள். ரசாயன உர விவசாயத்துக்குத் தண்ணீர்த் தேவை அதிகம். இதனால் 1000, 1500 அடிக்கு போர்வெல் போடும் நிலைமை உண்டாகிறது. செயற்கை விவசாயத்தில் பலமடங்கு செலவழித்தும் விளைச்சல் நிச்சயமில்லை. ஆனால் விவசாயி பாரம்பரிய விவசாய முறையிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப் பட்டிருப்பதால் அதுபற்றிய அறிவு அவருக்கில்லை. மாடுகள் இல்லை. வறட்சியையும், மழை வெள்ளத்தையும் தாங்கிநின்ற பயிர்வகைகள் இப்போது இல்லை. எல்லாம் 'பசுமைப்புரட்சி' என்ற புயல்வெள்ளத்தில் அடித்துப் போய்விட்டன.

மடுவு முழுங்கி, மாப்பிள்ளைச் சம்பா, உவர் நிலத்துக்கேற்ற உவர் முண்டான், வறட்சியைத் தாங்கும் வாடன் சம்பான், கார்காலத்தில் தழைத்து வளரும் கார்நெல் இன்றைக்கு இல்லை. இருப்பதெல்லாம் நம்பர் கொண்ட நெல்கள்தான். அந்த நம்பரிலிருந்து விவசாயி எதுவும் தெரிந்துகொள்ள முடியாது. விஞ்ஞானிகள் சொல்வதை, அல்லது சந்தையில் கிடைக்கும் தகவலை நம்பித்தான் விவசாயி செயல்பட வேண்டியிருக்கிறது. இப்போதைய நெல்கள் குட்டைரகம். பாரம்பரிய ரகங்களோ உயர்ந்து வளர்பவை. வறட்சியை, புயல், மழை, வெள்ளத்தைத் தாங்கும் தன்மை கொண்டவை. உப்புநிலத்தில் வளர்க்கவெனத் தனிப்பட்ட பயிர் ரகங்கள் இருந்தன.

தென்றல்: இயற்கை விவசாயத்தைப் பின்பற்றுவதில் ஏதும் சிக்கல் உண்டா?
ரேவதி: இயற்கை விவசாயத்தை எப்படி முன்னெடுத்துப் போவது என்பதுதான் சிக்கலே. இயற்கை விவசாயம் செய்ய ஒரு விவசாயி முன்வரும்போது அவனுக்கு அதற்குரிய வழிமுறைகள் சரியாகக் கிடைப்பதில்லை. ஏனென்றால், எங்களைப் போன்ற அமைப்புகள் அதிகம் இல்லை. நாங்கள் ஆயிரக்கணக்கான பேருக்குப் பயிற்சி அளிக்கிறோம். அது போதவில்லை. கோடிக்கணக்கான மக்கள் உள்ள இந்திய தேசத்தில், மீடியாவோ, அரசு எந்திரங்களோ, பல்கலைக்கழகங்களோ முழுமையாக இதில் இன்னமும் இறங்கவில்லை. எத்தனை கடுமையாக உழைத்தாலும், கடந்த 14 ஆண்டுகளில் 11 லட்சம் பேருக்குத்தான் பயிற்சி அளிக்க முடிந்திருக்கிறது. இந்த வெற்றிக்கதைகள் பலனடைந்தோர் மூலம் பலபேரைச் சென்றடைகிறன. இயற்கை விவசாயத்திற்குப் பலர் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இன்னமும் இது நிறையப்பேரைச் சென்றடைய வேண்டிய தேவை இருக்கத்தான் செய்கிறது.



தென்றல்: இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்க நீங்கள் என்ன செய்து வருகிறீர்கள்?
ரேவதி: நாங்கள் கற்பிக்கும் முறையை 'உயிர்த்தெழும் பூமி' (Reviving the Earth concept) என்று தமிழில் சொல்கிறோம். அதற்காக ஒரு விவசாயி மூன்று நாட்கள் எங்களோடு தங்கவேண்டும். தோட்டத்தின் மேல்மண் எப்படி உருவாகியிருக்கிறது, அதற்கு இயற்கை எப்படி உதவுகிறது என்பதையும், அந்த மண்ணை வளப்படுத்தி அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பதற்கான முறைகள், செயல்திட்டங்களையும் விரிவாகப் பயிற்சியில் சொல்லித் தருகிறோம். நிறைய செயல்முறைப் பயிற்சிகள் உண்டு.

நாகப்பட்டினத்தில் ஒரு பயிற்சிப்பள்ளி உள்ளது. அங்கே 300க்கும் மேற்பட்ட மாதிரிகளை உருவாக்கி வைத்திருக்கிறோம். விதைப்பது முதல் அறுவடை வரையான தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொடுக்கிறோம். ஒரு மண்புழு எப்படி நிலத்தை வளப்படுத்துகிறது, எப்படி தண்ணீரை நிலத்திற்குள் கொண்டு சேர்க்கிறது, உரங்கள், பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தும்போது அந்த மண்புழுவுக்கு என்ன ஆகிறது, நிலம் எப்படிப் பாதிப்புள்ளாகிறது என்பதையெல்லாம் விரிவாக விளக்குகிறோம்.

பூச்சிகள் எல்லாமே பயிரை அழிக்கும் என்றுதான் விவசாயி எண்ணுகிறார். செடியைத் தின்னும் சைவப்பூச்சிகள், அந்த சைவப்பூச்சிகளைத் தின்னும் அசைவப் பூச்சிகள் என இரண்டும் வயலில் இருக்கின்றன. பூச்சிக்கொல்லிகள் அசைவப்பூச்சிகளை முதலில் அழிக்கின்றன. செடியை உண்ணக்கூடிய சைவப்பூச்சிகளை மட்டும் அழிக்கும் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லாமல் போய்விட்டது. எவ்வளவு கெட்டுப்போன நிலமாக இருந்தாலும் அதை மூன்றே மாதத்தில் மீட்கமுடியும், விளைச்சலுக்குத் தயாராக்க முடியும் என்பதையும் விளக்குகிறோம். இதைக் கேட்டு விவசாயிகள் ஆச்சரியமடைகின்றனர்.

வெகுவாகப் பாழ்பட்ட மண்ணை முழுக்க வளமிக்கதாக மாற்ற மூன்று நான்காண்டுகள் ஆகலாம். ஆனால் நம்மால் முதல் விளைச்சல் தொடங்கி, பின்னர் எப்போதுக்குமான விளைச்சலை உறுதிப்படுத்த முடியும். நல்ல விளைச்சலை எடுக்கமுடியும்.

(விதையில்லாப் பயிர்களால் என்ன பிரச்சனை, டாக்டர் அப்துல் கலாம், பில் கிளிண்டன் ஆகியோருடன் ரேவதியின் சந்திப்பு என இன்னும் பல சுவையான, பயனுள்ள விஷயங்களை அறிய அடுத்த இதழில் வெளிவரப்போகும் பகுதியை வாசியுங்கள்.)

உரையாடல்: சி.கே. வெங்கட்ராமன்
உதவி: அரவிந்த் சுவாமிநாதன்

*****


சூதாட்டம் ஆகிவிட்ட விவசாயம்
பாரம்பரிய முறையில்தான் நம் முன்னோர்கள் செழித்தனர். "சோழ வளநாடு சோறுடைத்து" என்று சொல்லப்பட்டது. பெரிய நெற்களஞ்சியங்கள் உருவாகின. ஆனால் இன்றைக்கு தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் எல்லாம் காய்ந்து கிடக்கின்றது. கடந்த 10 ஆண்டுகளில் மூன்றே மூன்று முறை மட்டுமே அவர்கள் விளைச்சல் எடுத்திருக்கிறார்கள். ஒன்று வறட்சியால் கருகும். இல்லாவிட்டால் மழைநீரில் அழுகும். இதுதான் புவி வெப்பமாவதன் விளைவு. சொல்வது சரி, மாற்றத்தை எப்படிக் கொண்டுவருவது?

நம்மிடம் இருக்கும் நம்பர் நெல் ரகங்களின் பெற்றோர் யார்? இதை எந்தப் பருவத்தில், எப்படிப் பயிரிட வேண்டும் என்பது விவசாயிக்குத் தெரியாது. அவர்கள் பிறரைச் சார்ந்தே இருக்கவேண்டிய சூழல். பயிருக்காக எத்தனை செலவு செய்தாலும் அது ஐ.சி.யூ. நோயாளி மாதிரிதான். அதிக மழை, வறட்சி, காலநிலை மாற்றம், திடீர் பூச்சித் தாக்குதல், நோய்த்தாக்குதல் எதுவானாலும், மீட்புமுறை இல்லாமல் சீக்கிரமாகப் பயிர்கள் அழிந்துபோய் விடுகின்றன. இதனால் விவசாயம் ஒரு சூதாட்டம் ஆகிவிட்டது.

- ரேவதி

*****


இயற்கை விவசாயம் என்றால் என்ன?
செலவுகளைப் பெருமளவில் குறைத்து, பண்ணைக்குள்ளேயே செய்யத் தக்கவற்றைச் செய்து, மண்ணின் மலட்டுத்தனத்தை அகற்றி, ஒருபயிர்ச் சாகுபடி அல்லாமல் பலபயிர்ச் சாகுபடியால் நிலத்தை வளப்படுத்தி, ஒரு புதிய சூழலமைப்பை உண்டாக்குவதுதான் இயற்கை விவசாயம். அங்கே பறவை, பூச்சி, மண்புழு, கரையான் எல்லாவற்றுக்கும் இணக்கமான தொடர்பிருக்கும். இம்மாதிரி விவசாயத்தைச் செய்யும்போது செலவுகளைப் பெரிதும் குறைக்கலாம். விளைச்சலைப் பன்மடங்கு கூட்டமுடியும். தொடர்ந்து இதைச் செய்துகொண்டே வரும்போது, ஒரு கட்டத்தில் விதைப்பது, அறுவடை செய்வது என்ற கட்டத்திற்கு நாம் வந்துவிட முடியும். இதைத்தான் நாங்கள் இன்றைக்கு விவசாயிகளிடம் எடுத்துக் கொண்டு போகிறோம்.

- ரேவதி

*****
More

அழகியசிங்கர்
Share: 




© Copyright 2020 Tamilonline