Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | கவிதைபந்தல் | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சிரிக்காத சிரிப்பு
- ஹரி கிருஷ்ணன்|டிசம்பர் 2016|
Share:
சூதில் நாட்டையும் தம்பியரையும் மனைவியையும் இழந்த தருமபுத்திரனுடைய செயலைக் கேள்விப்படும்போது பதறுகிறோம். 'இப்படியொரு மோசமான செயலுக்குச் சம்மதித்துத்தானே அவன் காயை உருட்டினான்? அப்படியானால் அனைத்துக்கும் தருமன்தானே பொறுப்பேற்றாக வேண்டும்' என்றொரு கேள்வி காலகாலமாகக் கேட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சுமார் இருபது வருடங்களுக்கு முன் வரையில் அடியேனும் அப்படிக் கேட்டுக்கொண்டிருந்தவன்தான். சகுனியை ஆதரித்துக் கவிதையேகூட எழுதியிருக்கிறேன். நாளாக ஆக, பாரதத்தைத் திரும்பத் திரும்ப வாசிக்க, வாசிக்க தருமபுத்திரன் எவ்வாறு சூழலுக்கு அடிமையாக இருந்திருக்கிறான்; எவ்வாறு அவனால் இப்படியொரு சூழ்நிலையைத் தடுக்கவோ தவிர்க்கவோ முடியவில்லை என்ற உண்மை புரியத் தொடங்கியது. 'இவன் ஆட்டத்தில் வைத்துத் தோற்றதால்தானே பாஞ்சாலி சபையில் துகிலுரியப்பட்டாள்? குருடன் மகனும் குருடன்தானோ' என்று அவள் பேசிய பேச்சுக்குத் தண்டனையாகவல்லவா துகிலுரியப்பட்டாள்? ஆகவே, நடந்த நிகழ்வுக்கு தருமனும் பாஞ்சாலியும்தான் பொறுப்பு' என்று பலர் பேசக் கேட்டிருக்கிறேன். சூதிலே அவளை இழந்தது தருமனுடைய குற்றம் என்று ஒரு பேச்சுக்காக வைத்துக்கொண்டாலும்கூட, அடிமையாக்கப்பட்ட பெண்ணை, ஒரு நாட்டின் அரசியை, அண்ணன் மனைவியை, நடுச்சபையிலே துகிலுரிப்பது எந்தவகையான குற்றத்துக்கும் தண்டனையாகாது. அவள் அரசியாக இருக்க வேண்டாம்; பெண்ணைச் சபையிலே துகிலுரித்து அவமானப்படுத்துபவன் மனிதனே அல்லன். இந்தத் துகிலுரிப்பைத் தூண்டிவிட்டவனும் கர்ணன்தான் என்பதை மறப்பதற்கும் இல்லை.

அது ஒருபுறமிருக்க, ராஜசூய யாகத்தின்போது மய மண்டபத்தில் தடுக்கி விழுந்தும் தடுமாறிக்கொண்டும் இருந்த துரியோதனனைப் பார்த்து 'குருடன் மகனும் குருடன்தானோ' என்றோ வேறெந்த வகையிலோ பாஞ்சாலி பேசியதாய் வியாச பாரதத்திலோ வில்லி பாரதத்திலோ இல்லை. இன்னொன்று. அந்த ராஜசூய யாகத்துக்காக வந்திருந்த அத்தனை ஆயிரம் மன்னர்களுக்கும் அத்தனை லட்சம் ஆட்களுக்கும் ஏற்படாத தடுமாற்றம் துரியோதனனுக்கு மட்டுமே ஏற்பட்டிருந்தது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். மற்றவர்களால் சரியானபடி நடமாட முடிந்தபோது, இவன் மட்டும்தான் தடுமாறிக் கொண்டிருந்தான். அப்படியே தடுமாறிக் கொண்டிருந்தாலும், பாஞ்சாலி அவனைக் கேலி பேசாவிட்டாலும், சிரித்தாளா இல்லையா?' சிரித்தால் துரியோதனனுக்குக் கோபம் எழுவது இயற்கைதானே என்று கேட்கத் தோன்றம். என்ன வேடிக்கை என்றால், அந்தக் கட்டத்தில் பாஞ்சாலி சிரித்தாள் என்று வியாசரில் ஒரு குறிப்பும் இல்லை! தடுமாறிக் கொண்டிருந்த துரியோதனனைப் பார்த்து பீமன் சிரித்தான் என்றிருக்கிறது; வேலைக்காரர்கள் சிரித்தார்கள் என்றிருக்கிறது. அங்கே பாஞ்சாலியின் பெயர்கூடக் குறிப்பிடப்படவில்லை. நீண்ட பகுதியை மேற்கோளாகக் காட்ட முடியாது என்பதால் அதற்கான சுட்டியைத் தருகிறேன். இந்தப் பகுதியில் உள்ள விவரங்களைக் கூர்ந்து வாசியுங்கள். பாஞ்சாலியின் பெயர் எங்கே குறிப்பிடப்படுகிறது என்று சொல்லுங்கள்.

'பாஞ்சாலி சிரித்ததாக-பாரதத்தின் மொழிபெயர்ப்பு என்ற கருதத் தக்கதான-பாஞ்சாலி சபதத்தில் பாரதி குறிப்பிட்டிருக்கிறானே என்று கேட்கலாம். அங்கே, சம்பவங்களே துரியோதனன் பொறாமை மொழியிலிருந்துதான் ஆரம்பிக்கின்றன. ராஜசூய யாகக் காட்சி கிடையாது. அப்படியானால், பாஞ்சாலி சிரித்ததாகக் குறிப்புகூடவா இல்லை என்று கேட்டால், இருக்கிறது. அதாவது அவள் தன்னைப் பார்த்துச் சிரித்ததாக துரியோதனன் சொல்கிற குறிப்பு இருக்கிறது. தரைக்கும் தண்ணீருக்குமே வித்தியாசம் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த இந்த துரியோதனனுக்கு, மற்ற எல்லோராலும் இந்த வேறுபாட்டைக் கண்டு, தடுமாறாமல், தடுக்கி விழாமல் நடமாட முடிந்தபோது, தான் ஒருவன் மட்டும்தான் தரையென்று நினைத்துத் தண்ணீரில் விழுந்து ஆடையை நனைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது புரிகின்ற நிலையில், அவனைப் பார்த்து வேலைக்காரர்கள்கூட பரிகாசமாகச் சிரிக்கின்ற நிலையில், இது எதுவுமே நினைவில்லாமல், சிரிக்காத பாஞ்சாலி சிரித்ததாக மட்டுமே நினைவிருந்தது என்றால் அது ஒரு ஹலூசினேஷன் என்று மட்டும்தான் கொள்ளமுடியும். இப்படி நடக்காததை நடந்ததாய்ச் சொல்லும் அவனுடைய மனநிலை, தருமபுத்திரன் செய்த யாகத்தாலும், அவன் பெற்றிருக்கும் பெரும்புகழாலும் எவ்வாறு பொறாமையால் கொந்தளித்துக் கொண்டிருந்தது என்பதைக் காட்டுகிறதே ஒழிய, பாஞ்சாலி அவனைப் பார்த்து உண்மையிலேயே சிரித்ததாக வியாசரோ வில்லியோ குறிப்பிடவில்லை. அவ்வளவு ஏன், நான் மேலே கொடுத்திருக்கும் சுட்டியிலுள்ள பகுதியிலோ அதைத் தொடரும் பகுதியிலோகூட, சகுனியிடம் தன்னைப் பார்த்து வேலைக்காரர்கள் சிரித்ததாகச் சொல்லும் துரியோதனேகூட, 'பாஞ்சாலி என்னைப் பார்த்துச் சிரித்தாள்' என்று சொல்லவில்லை என்பது கூர்ந்து கவனிக்கத் தக்கது. அந்தப் பகுதியின் இறுதி வாக்கியம் இப்படி முடிகிறது: Beholding that prosperity of the Pandavas, and that assembly house of theirs, and those menials laughing at me, my heart burneth as if it were on fire. Therefore, O uncle, know me now as deeply grieved and filled with jealousy, and speak of it to Dhritarashtra. வீட்டு வேலைக்காரர்கள்-menials-சிரித்ததைச் சொல்லும் துரியோதனன், பாஞ்சாலி சிரித்ததாகச் சகுனியிடம்கூட சொல்லவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
'பாண்டவர்களைப் பார்த்து ஏன் பொறாமைப்படுகிறாய்' என்றுதான் சகுனியே துரியோதனனைத் தொடக்கத்தில் கேட்கிறான். "சகுனி, 'துரியோதனா! நீ யுதிஷ்டிரனைப் பற்றிப் பொறாமைப்படத் தகாது. பாண்டவர்கள் எப்போதும் தங்கள் பாகங்களையே தாம் அனுபவிக்கிறார்கள். விதி பலவகைகளாக இருக்கிறது. அவர்களுக்கு விதியினால் மேன்மை உண்டாயிருக்கிறது..." என்றெல்லாம்தான் சகுனி தொடங்குகிறான். (பாரதம், ஸபா பர்வம், த்யூத பர்வம், அத்: 75, பக்: 232). ஆங்கிலத்தில் சமஇடம் வேண்டுவோர் இங்கே பார்க்கலாம்.

பாஞ்சாலி தன்னைப் பார்த்துச் சிரித்ததாக சகுனியிடத்தில் பேசும்போதுகூட சொல்லாத துரியோதனன், திருதராஷ்ட்ரனிடம் பேசும்போது இந்தக் 'கதையைச்' சொல்கிறான்: "தாமரைக் குளத்தைச் சபையென்று நினைத்து விழுந்தேன். அப்போது பீமனும் அர்ஜுனனும் சப்தத்துடன் சிரித்தார்கள். திரெளபதியும் பெண்களுடன் சேர்ந்து என் மனம் விழுந்துபோகும்படி நகைத்தாள்" என்று பாஞ்சாலி நகைத்ததாக துரியோதனன் முதன்முறையாகச் சொல்கிறான். (மேற்படி, அத்: 76, பக்: 237). இதை கிஸாரி மோகன் கங்கூலி, "At that, Bhima with Arjuna once more laughed derisively, and Draupadi also accompanied by other females joined in the laughter" என்று மொழிபெயர்க்கிறார்.

ஆக, சிரிக்காத ஒருத்தி சிரித்ததாக ஒருகதை இப்போதுதான் உருவாகியிருக்கிறது. செய்யாத குற்றத்துக்குப் பாஞ்சாலியின்மேல் பழி. இப்படி ஒருவேளை சிரித்தே இருந்தாலும் நடுச்சபையில் துகிலுரிந்தது அதற்குப் பழிவாங்கும் செயலாகப் பார்க்கப்பட இயலாதது. அது குரூர மனப்பான்மையுள்ள ஒருவனுடைய அப்பட்டமான வக்கிரத்தின் வெளிப்பாடு. அது கர்ணனிடத்திலிருந்துதான் கிளைத்தது என்பதையும் சொல்லாமலிருக்க முடியவில்லை.

தருமன் சூதாட்டத்துக்குச் சம்மதித்தது குறித்துப் பாஞ்சாலி சபதத்தில் "நீதித் தருமனும் சூதில் அன்புளோன்" என்ற குறிப்பு இருப்பதையும் பலர் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். பாரதி இதையும் வியாசரிலிருந்துதான் நேரடியாக எடுத்திருக்கிறான். "யுதிஷ்டிரன் சூதாட்டத்தில் ஆசையுள்ளவன். அவனுக்கு ஆடத்தெரியாது. ராஜ சிரேஷ்டனான அவன் நாம் அழைத்தால் வராமலிருக்க மாட்டான்" என்ற குறிப்பு வியாச பாரதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் இருக்கிறது. (மேற்படி அத்: 75, பக்: 234). 'The son of Kunti is very fond of dice-play although he doth not know how to play. That king if asked to play, is ill able to refuse.' என்பது ஆங்கில மொழிபெயர்ப்பு.

அப்படியானால் 'சூதில் அன்புள்ளவனான தருமபுத்திரன் எவ்வாறு சூதாட்டம் வேண்டாம் என்று மறுத்திருப்பான் என்றுதானே கேட்கத் தோன்றுகிறது? வியாச பாரதத்தில் இந்த வாக்கியம் வரும் இடம், அதைப் பேசுபவர் யார் என்பன போன்ற contextual விவரங்களோடு பேசவேண்டிய ஒன்று அது. பாரதியின் பாஞ்சாலி சபதத்திலேயேகூட இதற்கான விடை இருக்கிறது. பார்ப்போம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline