Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | கவிதைபந்தல் | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
ஸ்வாமினாத ஆத்ரேயர்
- அரவிந்த்|டிசம்பர் 2016|
Share:
தமிழுக்கு அருந்தொண்டாற்றிய அறிஞர் உ.வே. சாமிநாதையர் என்றால் தமிழோடு வடமொழிக்கும் சேர்த்துத் தொண்டாற்றிய பேரறிஞர் ஸ்வாமினாத ஆத்ரேயர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், உபன்யாசகர், இசைவல்லுநர் எனப் பன்முக அடையாளம் கொண்ட இவர், நவம்பர் 19, 1919 அன்று பிறந்தார். தந்தை சிமிழி வெங்கடராம சாஸ்திரிகள் சகல சாஸ்திர பண்டிதர். பன்மொழிப் புலவர். வேத, வேதாந்தங்களில் தேர்ந்தவர். அவரிடம் சாஸ்திர நுணுக்கங்களையும், இதிகாச, புராணங்களையும் கற்றுத் தேர்ந்த ஆத்ரேயர், தமிழையும் முறைப்படி பயின்று அதில் தேர்ந்தவரானார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதத்தில் 'வியாகரண சிரோமணி' பட்டம் பெற்றார். படிக்கும் காலத்திலேயே தனது திறமை காரணமாக சீனிவாச சாஸ்திரியின் அன்பையும் பாராட்டுதலையும் பெற்றார். இசையிலும் நல்ல புலமை பெற்றிருந்த இவர், மூத்த எழுத்தாளர் கு.ப. ராஜகோபாலனின் அபிமானத்திற்கு உரியவராக இருந்தார். தஞ்சை எழுத்தாளர்களான தி. ஜானகிராமன், கரிச்சான்குஞ்சு, திருலோகசீதாராம், தி.ஜ. ரங்கநாதன், சாலிவாகனன், எம்.வி. வெங்கட்ராம் போன்றோரின் நெருங்கிய நண்பர். அவர்களைப் போலவே இவரும் சிறு சிறு கதைகளை எழுதி அனுப்ப, அவை 'மணிக்கொடி' இதழில் பிரசுரமாகின. தொடர்ந்து கதை, கட்டுரைகளை 'சிவாஜி', 'சரஸ்வதி', 'சந்திரோதயம்', 'யாத்ரா' போன்ற இதழ்களில் எழுதினார். சிறிதுகாலம் சென்னை குப்புசுவாமி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார். அக்காலகட்டத்தில் சி.சு. செல்லப்பா, சிட்டி, கி.வா.ஜ., பகீரதன் போன்றோரின் நட்பு கிடைத்தது. அது மேலும் பல படைப்புகள் வெளியாகக் காரணமானது.

காஞ்சி மஹாபெரியவரின் பூரண அன்பைப் பெற்றவர் ஸ்வாமினாத ஆத்ரேயர். அவரால் அன்போடு 'சிமிழி' என்று அழைக்கப்பட்டவர். காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வானாகவும் இருந்தார். மஹாபெரியவரின் ஆணைக்கிணங்க சமஸ்கிருதத்தில் பல நூல்களை எழுதியதுடன், சம்ஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கும் பல நூல்களை மொழிபெயர்த்து வெளியிட்டார். பாகவதர்களின் கதைகளை உணர்ச்சிபொங்க எழுதுவதில் வல்லவராக இருந்த இவர், பல இசைநூல்களைத் தமிழில் பெயர்த்திருக்கிறார். இசைசார்ந்த இவரது படைப்புகளில் 'பக்த சாம்ராஜ்யம்', 'நாம சாம்ராஜ்யம்', 'ஸ்ரீதர அய்யாவாள் சரிதம்', "ராமநாமம்', 'தியாகராஜ அனுபவங்கள்', 'ஸ்ரீராம மாதுரீ', 'ஸ்ரீதர அய்யாவாளின் பகவந்நாம அனுபவங்கள்' போன்றவை முக்கியமானவை. இந்த வரிசையில் இவர் எழுதிய 'துளஸி ராமாயணம்' (துளசிதாசரின் ராமசரித மானஸின் தமிழ் மொழிபெயர்ப்பு), 'சமர்த்த ராமதாஸர் சரிதம்' போன்ற நூல்கள் குறிப்பிடத்தகுந்தன. துளஸி ராமாயணத்தின் முன்னுரையில் அவர், "துளஸீதாஸர், கால வழக்கப்படி முதலில் வடமொழியில்தான் ராமாயணம் எழுதினார். தைவ ஸம்மதம் இன்மையால் அதை மறைத்துவிட்டார். மாந்தரின் அறியாமை, காலத்தின் தேவை, அற நூல்களின்பால் சமூகம் காட்டிய அசட்டை ஆகியவற்றை இவர் கூர்ந்து கவனித்திருக்க வேண்டும். ஏனெனில் ராமகாதையை மட்டும் இவர் சொல்லவில்லை; நன்னெறி, நம்பிக்கை, அறத்தில் உறுதிப்பாடு இவற்றை கதை என்னும் ஊடகம் வழியே மாந்தருக்குப் புகட்டுவதில் இவர் காட்டும் தீவிரம் இவ்வாறு முடிவுகட்டத் தூண்டுகிறது" என்றும், "குறுகிய காலத்தில் இனப் பன்முகம் கொண்ட ஒரு சமுதாயத்தின்மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மற்றொரு நூல் இருந்திருக்குமா தெரியவில்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார். 'குருக்ஷேத்திரப் பரம்பரை', 'ஆத்ரேய லகுலேகமாலா', 'ஜயஜய ஹனுமான்', 'சிவ லீலார்ணவம்' போன்ற வடமொழி நூல்களையும் தமிழில் தந்திருக்கிறார். கோரக்பூர் கீதா பிரஸ்ஸின் பகவத் கீதை (பகவத்கீதை தத்வவிவேசனீ) தமிழ் மொழிபெயர்ப்பைச் செய்தவர் இவரே.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் வாழ்வில் நடந்த சில சம்பவங்களைத் தொகுத்து எழுதிய நூல் 'தியாகராஜ அனுபவங்கள்'. தியாகராஜரின் நேரடி சிஷ்யர்கள் வழிவந்த உமையாள்புரம் ஸ்வாமினாத பாகவதர், ஸ்ரீரங்காச்சாரியார் போன்றோர் சொன்ன தகவல்களைத் திரட்டி இந்நூலை அவர் உருவாக்கியிருந்தார். அதில் தியாகராஜ சுவாமிகளின் பக்தி உள்ளம், ராமர்மீது அவர் கொண்டிருந்த அன்பு, கீர்த்தனைகள் உருவான விதம், அவற்றின் சிறப்பு என எல்லாவற்றையும் மிக விரிவாக எழுதியிருக்கிறார். இந்நூலுக்காக அவர் 'ராஷ்ட்ரிய சம்ஸ்கிருத சம்ஸ்தான்' விருது பெற்றார். மேலும் தியாகராஜர் வாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்களைச் சிறுகதைகளாக எழுதியிருக்கிறார். "தெரதீயகராத", "மனசுலோனி மர்மமு", "இதர தைவமுலவல்ல" "ஸரிவாரிலோன", "அடிகிஸுகமுலு", "நினுவினா" போன்ற கீர்த்தனைகளை எந்தச் சூழ்நிலையில் ஸ்ரீ தியாகய்யர் பாடநேர்ந்தது என்பதைக் கதைவடிவில் எழுதியிருக்கிறார். இக்கதைகள் பின்னர் "கலாநிலைய"த்தாரால் நாடகமாக ஆக்கப்பட்டன.

'சிவாஜி' இதழின் ஆசிரியர் திருலோக சீதாராம் நடத்திவந்த 'தேவசபை' கூட்டங்களில் கலந்துகொண்டு சம்ஸ்கிருதப் பாடல்களுக்கும் துதிகளுக்கும் விளக்கமளிப்பது ஸ்வாமினாத ஆத்ரேயரின் வழக்கம். தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம், ஹிந்தி என நான்கு மொழிகளிலும் தேர்ந்தவர். உபன்யாசகர். கர்நாடக சங்கீதத்திலும் வல்லவர். நாமபஜனை சம்பிரதாய வழிபாட்டைப் பெரிதும் ஊக்குவித்தார். 'மாணிக்கவீணை' இவரது முக்கியமான தொகுப்பாகும். சிறுகதை, கட்டுரை, விமர்சனம் எனப் பலவற்றை உள்ளடக்கியது இந்நூல். 'தீபம்' இதழிலும் 'ராமா நீயெட' என்ற சிறுகதை உள்ளிட்ட இவரது பல படைப்புகள் பிரசுரமாகியுள்ளன. அக்காலத்து முன்னணி இதழ்கள் பலவற்றிலும் இயற்பெயரிலும், புனைபெயரிலும் இசைக்கட்டுரைகள், வேதம் பற்றிய கட்டுரைகள், தத்துவ விளக்கங்கள் பலவற்றை எழுதியுள்ளார். தமது முதிர்ந்த வயதிலும்கூட, புத்தகங்களை எழுதுவதற்காக வடநாடுகளுக்குச் சென்று தகவல் திரட்டி எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவரது திறமையைப் பாராட்டி காஞ்சிப்பெரியவர் இவருக்கு 'ஆசுகவி திலகம்' என்ற பட்டம் அளித்துக் கௌரவித்தார். உலக வேத அமைப்பு இவருக்கு 'வேதஸ்ரீ' என்ற பட்டம் வழங்கியுள்ளது. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அறக்கட்டளை இவருக்கு 'ஞானச்செம்மல்' விருது வழங்கியுள்ளது.

தன்னை முன்னிறுத்திக்கொள்ள விரும்பாமல் அமைதியாக வாழ்ந்தவர் ஸ்வாமினாத ஆத்ரேயர். மனைவி ஜயலட்சுமியை இழந்து சிலகாலம் தனியாக வசித்துவந்த இவர் டிசம்பர் 19, 2013 அன்று 94ம் வயதில் காலமானார். மணிக்கொடி எழுத்தாளர்களில் பலராலும் மறக்கப்பட்ட, ஆனால் இலக்கிய உலகம் மறக்கவேகூடாத எழுத்தாளர் ஸ்வாமினாத ஆத்ரேயர்.

அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline