|
|
சூரிய வெப்பத்தில் (கடல் ஆமையின்) முட்டைகள் பொரிக்கும். வெளியே வந்த குஞ்சுகள் நாலா பக்கமும் சிதறி ஓடத் தொடங்கும். இறுதியில் தண்ணீரின் திசை அறிந்து வழிதேடி கடலில் போய்ச் சேர்ந்து கொள்ளும். நான் எழுதிக் கொண்டே இருக்கிறேன். எங்கோ ஒரு வாசகர், என் எழுத்தை முற்றிலும் உணர்ந்தவர், காத்திருக்கிறார். என்னுடைய படைப்புகள் எப்படியோ வழி தேடி அவரிடம் போய்ச் சேர்ந்துவிடும். அப்படி நம்பிக்கை' இப்படிச் சொல்கிறார் முத்துலிங்கம் 'மகாராஜாவின் ரயில் வண்டி' சிறுகதைத் தொகுதிக்கான சமர்ப்பணப் பகுதியில். அதுமட்டுமல்ல, அந்த வாசகருக்கும் அந்த உலகத்துக்கும் தனது நூலைச் சமர்ப்பிக்கிறார். இந்தக் கூர்ந்த கவனிப்பு, அக்கறை, உள்ளுணர்வு, செழுமையான மொழி, துல்லியமான சித்திரிப்பு--இவைதாம் அ. முத்துலிங்கம்.
ஈழத்தின் கொக்குவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட முத்துலிங்கம் தற்போது வசிப்பது கனடாவில். உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் இவர் மேற்கொண்ட பணிகள் இவரை உலகின் பல நாடுகளுக்கும் இட்டுச் சென்றன. இலங்கை தினகரன் பத்திரிகையில் இவரது 'அக்கா' என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது. அதே தலைப்பிலான இவரது இளவயதுக் கதைகளின் தொகுப்பு நூல் 1964ல் க. கைலாசபதியின் அணிந்துரையுடன் வெளியானது.
இவரது நூல்களில், 'திகடசக்கரம்' (1995), 'வம்சவிருத்தி' (1996), 'வடக்கு வீதி' (1998), 'மகாராஜாவின் ரயில் வண்டி' (2001) ஆகிய சிறுகதைத் தொகுப்புகள்; 'அ. முத்துலிங்கம் கதைகள்' (சிறுகதைகளின் முழுத்தொகுப்பு; 2004), அங்க இப்ப என்ன நேரம்? (கட்டுரைகள்; 2005) ஆகியவை அடங்கும். இவருடைய கதைகள் இந்தியாவிலும் இலங்கையிலும் பல இலக்கியப் பரிசுகளை வென்றுள்ளன. தமிழ்நாட்டில் இவரது கதைகள் வெளியாகாத பத்திரிகைகளே இல்லை எனலாம்.
'வார்த்தைகளே என் கதைகளுக்கு ஆரம்பம். ஒரு நடுநிசியில் அபூர்வமான ஒரு வார்த்தை வந்து என்னைக் குழப்பிவிடும். அது என்னை வசீகரிக்கும்; சிந்திக்க வைக்கும்; பிறகு ஆட்கொள்ளும். அப்படித்தான் தொடக்கம்' என்று கதை உருவாகும் செயல்முறையை ஒரு சொற்காதலனுக்கே உரிய ஈர்ப்போடு முத்துலிங்கம் விவரிக்கிறார்.
முத்துலிங்கத்தின் 'புனைகதை வெளிப்பாடு மனித இயல்பின் பல்வேறு ஆர்வங்களையும் தாபங்களையும் குதூகலங்களையும் சோகங் களையும் வெகு நுட்பமானவகையில் தூண்டி விடக்கூடியது. தேர்ந்தெடுத்த சொற்களில், சிறப்பான வடிவத்தில் முத்துலிங்கத்தின் புனைகதையுலகம் பரந்துபட்டது. காலத்திலும் தளத்திலும் மிகுந்த வீச்சுடையது. அதே நேரத்தில் படிப்போரின் அந்தரங்க உணர்வை அடையாளம் சொல்லக்கூடிய குடும்ப மற்றும் சமூகப் பாத்திரம் மூலம் விசையூட்டக் கூடியது. அவருடைய மனிதர்கள் பலதரப்பட்டவர்கள்; ஆனால் தனித்துவம் உடையவர்கள். அனைவரும் நிஜத்தன்மையோடு உருவாகி யிருப்பவர்கள். இதனால் அவர்களுக்கு நேரும் சில அசாதாரண நிகழ்ச்சிகள் கூடப் படிப் போருக்கு இயல்பானதாகவே தோன்றுகின்றன' என்று தனக்கே உரிய வகையில் முத்து லிங்கத்தின் எழுத்துகளை வர்ணிக்கிறார் தமிழின் முதுபெரும் எழுத்தாளரான அசோகமித்திரன். |
|
ஒரு வகையில் அசோகமித்திரனுக்கும் முத்துலிங்கத்துக்கும் எழுத்து ரீதியான ஒற்றுமையைப் பார்க்கிறேன். இருவருமே சாதாரணச் சொற்களில் அசாதாராணமான விளைவுகளைக் கொண்டுவந்து விடுபவர்கள். அசாதாரணமான நிகழ்வுகளைக் கூட அலட்டிக் கொள்ளாமல், சீண்டிவிடாமல், போகிற போக்கில் சொல்லி வாசகனை அதிர வைப்பவர்கள். எங்கே சிரிக்கிறார்கள் எங்கே அழுகிறார்கள் என்பதை வாசகனின் மனம்தான் சொல்லுமே தவிர, அறிவு சொல்லாது. இது வெகு அரிதாகவே கை கூடும் கலை. 'நகைச்சுவை நிறைய உள்ள அவருடைய படைப்புகளில்தான் ஆழ்ந்த சோகமும் உள்ளது' என்று அசோகமித்திரன் முத்துலிங்கத்தைப் பற்றிச் சொல்லுவது அவருக்கே பொருந்துமே!
முத்துலிங்கத்தின் கதைக்களம் ஆ·ப்ரிக்கா வாக இருந்தாலும் ஆ·ப்கனிஸ்தானமாக இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் நாம் அந்த இடங்களையும் மனிதர்களையும் சம்பவங் களையும் முன்பே பார்த்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம் என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியாது. 'இதை நானே கூட எழுதியிருக்கலாமே' என்று தோன்றாமல் இருக்காது. ஆனால், அந்தப் பரிச்சயமும் எளிமையும் மிக ஏமாற்றுபவை. எல்லாப் பேனாக்களுக்கும் அகப்படுபவை அல்ல. 'வாழ்க்கையில் கதையாக்க முடியாதது எதுவும் இல்லை' என்று சாமர்செட் மாம் சொல்வதை முத்துலிங்கம் உண்மையாக்குகிறார். அதே சமயம், வாழ்க்கை அப்படியே கதை ஆவதில்லை என்பதை உணர்ந்து, தனது கற்பனையால் அதற்கு மெருகூட்டிவிடுகிறார். வாழ்க்கை எது, கற்பனை எது பிரித்தறிய முடியாதபடிக் கதைசொல்லும் திறன் அவருக்கே உரியது.
சிறு பத்திரிகைகளில் தொடங்கி வெகுஜனப் பத்திரிகைகள் வரை எல்லாவற்றிலும் எழுதும் முத்துலிங்கம் எந்தக் கூடாரத்திலும் அகப் பட்டுச் சேற்றை வாரிப் பூசிக்கொள்ளவில்லை என்பது மற்றோர் அதிசயம். மனிதருக்குப் பட்டயம் எழுதிச் சார்த்தாமல், அவர்களை முழுமையாகப் பார்த்து, கருணை பூத்து, அரவணைக்கும் இவரது கதைகளைப் போலவேதான் இவருமோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. அவருக்குக் கொள்கை அல்லது கட்சி ரீதியான அங்கீகாரங்களுக்கு அவசியம் கிடையாது.
'அ. முத்துலிங்கத்தின் கதைகள் நாம் அறிந்த உலகங்களுக்கு நம்மை நாம் அறியாத பாதைகளில் இட்டுச்செல்பவை. நாம் அறியாத உலகங்களின் கதவுகளையும், சாளரங் களையும், காதல்களையும் ஓசைப்படுத்தாமல் மெல்லத் திறப்பவை' என்று அம்பை கூறும்போது நாமும் நமது மூச்சின் அடியில் 'ஆமாம்' என்கிறோம், மகிழ்ச்சியோடுதான்.
மதுரபாரதி |
|
|
|
|
|
|
|