Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம் | சமயம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | கவிதைபந்தல் | முன்னோடி | அனுபவம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
பசுமைப் போராளி M. ரேவதி (பகுதி - 1)
அழகியசிங்கர்
- அரவிந்த் சுவாமிநாதன்|டிசம்பர் 2016|
Share:
'நவீனவிருட்சம்' காலாண்டுச் சிற்றிதழை 28 ஆண்டுகளாக நடத்தி வருபவர் அழகியசிங்கர். இயற்பெயர் சந்திரமௌலி. கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர் எனப் பல தளங்களிலும் செயல்பட்டுவரும் இவர், 'கதா விருது' பெற்றவர். 'எழுத்து' இதழ் ஆசிரியர் சி.சு. செல்லப்பாவின் இலக்கியவாரிசு என தி.க. சிவங்கரனால் பாராட்டப்பட்டவர். '406 சதுர அடிகள்', 'ராம் காலனி', 'ரோஜாநிறச் சட்டை' போன்றவை இவரது சிறுகதைத் தொகுப்புகள். 'சில கதைகள்' குறுநாவல் தொகுப்பு. 'யாருடனும் இல்லை', 'தொலையாத தூரம்', 'விநோதமான பறவை','அழகியசிங்கர் கவிதைகள்' போன்றவை கவிதைத் தொகுப்புகள். விட்டல்ராவுடன் இணைந்து 'இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்' என்ற தலைப்பில் மூன்று சிறுகதைத் தொகுப்புகளைக் கொண்டுவந்துள்ளார். இவரது பல கதைகள் ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி மற்றும் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சமீபத்தில் நவீனவிருட்சத்தின் நூறாவது இதழைக் கொண்டுவந்துள்ளார். தனது இலக்கியப் பயணம்பற்றி இங்கே மனம் திறக்கிறார். வாருங்கள், கேட்போம்....

கே: இலக்கிய ஆர்வம் வந்தது எப்படி?
ப: நான் பி.யூ.சி. படித்த காலத்தில் என் பெரியப்பா பையன் வசித்து வந்த திருவல்லிக்கேணிக்கு வாராவாரம் போவேன். அப்படி ஒருமுறை செல்லும்போது அவர் மறைத்துவைத்து ஒரு பேப்பரைப் படித்துக் கொண்டிருந்தார். என்ன என்று வாங்கிப் பார்த்தால் அது ஒரு சிறுகதை. 'ஐயோ அம்பது' என்ற தலைப்பில் எழுதியிருந்தார். அதைப் படித்ததும் எனக்கும் சிறுகதை எழுத ஆசை வரவே, சில சிறுகதைகள் எழுதினேன். அக்காலத்தின் பிரபல பத்திரிகைகளுக்கு அனுப்பினேன். எந்தக் கதையும் பிரசுரம் ஆகவில்லை. அப்போதுதான் கணையாழி, தீபம் போன்ற இதழ்கள் எனக்கு அறிமுகமாகின. க.நா.சு., சி.சு.செல்லப்பா, அசோகமித்திரன், ஞானக்கூத்தன், ப்ரமீள் போன்ற பெயர்கள் பரிச்சயம் ஆகின. அவர்களது படைப்புகளை வாசிக்க ஆரம்பித்தேன். இப்படித்தான் இலக்கிய ஆர்வம் வளர்ந்தது.

கே: சொந்தமாக ஓர் இலக்கிய இதழ் ஆரம்பிக்கத் தோன்றியது ஏன்?
ப: எனது பெரியப்பா பையன் சுவாமிநாதன், ஸ்ரீதர் சாமா என்ற பெயரில் எழுதுவார். ஒருசமயம் கல்கியில் அவரது கதை வெளியானது. மற்றபடி நாங்கள் எழுதியனுப்பிய சிறுகதைகள் எதுவுமே வெளியாகாததால் அவற்றை வெளியிடுவதற்காக 'தூதுவன்' என்ற கையெழுத்துப் பிரதியை ஆரம்பித்தார். நான் அதற்கு உதவினேன். கதை, கவிதைகளை அதில் எழுதினோம். சில ஆண்டுகளுக்குப் பின் 'மலர்த்தும்பி' என்ற பெயரில் ஓர் அச்சிதழை ஆரம்பித்தார். வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த நான் அதை என் நண்பர்களுக்கு விநியோகம் செய்வேன்.



அப்போது 'ழ' இதழ் ஆத்மாநாம் மற்றும் ராஜகோபாலின் முயற்சியில் வெளிவந்துகொண்டிருந்தது. 'ழ' ஆத்மாநாமின் தற்கொலையால் நிலைகுலைந்தது. அது எனக்கு மிகுந்த மனவருத்தத்தைத் தந்தது. அது தொடர்ந்து வெளிவர நான் சில உதவிகள் செய்தேன். நாளடைவில் அது நின்றுபோனது. அதை எடுத்து நடத்த விரும்பி ஞானக்கூத்தனிடம் ஆலோசனை கேட்டேன். அதற்கு அவர், "அது சரியாக வராது. அதற்குப் பதிலாக நீங்கள் வேறு பத்திரிகை ஆரம்பியுங்களேன்" என்று சொன்னார். நான் நண்பர்கள் கோபிகிருஷ்ணன், எம். கண்ணன், ரா. ஸ்ரீனிவாஸன், இளம்பரிதி இவர்களின் துணையுடன் விருட்சத்தை ஆரம்பித்தேன்.

கே: விருட்சம் முதல் இதழ் பற்றி...
ப: 1988ம் வருடம், காலாண்டிதழாக (ஜூலை-செப்டம்பர்) விருட்சத்தின் முதல் இதழ் வெளியானது. நான் வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்ததால் 'கௌரவ ஆசிரியர்' தான். கோபிகிருஷ்ணன் இணையாசிரியர். வெளியீட்டாளர் என் தந்தை. 'ழ'வைப் போன்ற தோற்றத்தில், அதே 16 பக்கங்களில் வெளியிட்டோம். ஞானக்கூத்தன், தேவதேவன், ராஜகோபாலன், எஸ். வைத்தியநாதன், இளம்பரிதி, நாரணோ ஜெயராமன், ஆனந்த், கோபிகிருஷ்ணன் எனப் பலரது கவிதைகள் அதில் இடம் பெற்றிருந்தன. 'ழ'வைப் போலக் கவிதைகளை மட்டுமே தாங்கி ஆரம்பத்தில் வெளிவந்தது. பின்னர்தான் நூல் விமர்சனம், கட்டுரைகள், சிறுகதைகள் போன்றவை இடம்பெற்றன. இரண்டாவது இதழில் கோபிகிருஷ்ணன் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டு விட்டார்.

கே: ஏன்?
ப: அப்போது பாலிமிக்ஸ் (சர்ச்சை) கவிதைகள் எழுதுவது வழக்கத்தில் இருந்தது. யார், யாரைத் திட்டி எழுதியிருக்கிறார்கள் என்பது சம்பந்தப்பட்ட கவிஞர்களுக்கும் அவர்கள் சார்ந்த சிலருக்கு மட்டுமே புரியும். இதனால் நிறையச் சர்ச்சைகள் ஏற்பட்டன. விருட்சத்திலும் அப்படிச் சில கவிதைகள் வருமோ, தான் அதற்குப் பொறுப்பாக வேண்டுமோ என்று பயந்து கோபிகிருஷ்ணன் விலகிக்கொண்டார். அவர் சண்டை, சச்சரவுகளை விரும்பாதவர். கூச்ச சுபாவி. அன்று ஆரம்பித்து இன்றுவரை எனது தனி ஆசிரியர் பொறுப்பில், முயற்சியில் இவ்விதழை நடத்தி வருகிறேன்.

கே: சந்திரமௌலி, அழகியசிங்கர் ஆனதற்கு ஏதாவது காரணம் உள்ளதா?
ப: ஆம். பிரபலமான இதழ்களில் என் கதைகள் வெளியாக வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. (இன்றுவரையும் எனக்கு அந்த மனக்குறை உண்டு) அப்போது 'மௌலி' என்பவர் மிகவும் பிரபலமாக இருந்ததால், 'சந்திரமௌலி' என்ற பெயரில் எழுதி அனுப்பினால் அது சரியாக இருக்காது என்று தோன்றியது. அந்தச் சமயத்தில் அமெரிக்க யூத எழுத்தாளர் ஐ.பி. சிங்கரின் எழுத்துக்கள் என்னைக் கவர்ந்தன. அவர் நோபெல் பரிசு வாங்கியவர். அக்காலத்தில் மிகவும் பிரபலம். அந்தப் பெயரில் இருந்த ஈர்ப்பு காரணமாகவும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் வீற்றிருக்கும் லக்ஷ்மிநரசிம்மப் பெருமானின் நினைவாகவும் 'அழகியசிங்கர்' என்ற புனைபெயரை வைத்துக் கொண்டேன். அப்போது கணையாழி இதழில் தி. ஜானகிராமன் குறுநாவல் போட்டியை அறிவித்திருந்தார்கள். அதற்கு 'போராட்டம்' என்ற கதையை எழுதி அனுப்பினேன். அது தேர்ந்தெடுக்கப்பட்டுப் பிரசுரமானது. 'அழகியசிங்கர்' என்ற பெயரில் வெளியான முதல் கதை அதுதான். பின்னர் கணையாழியில் எனது சிறுகதைகள் வெளியாகின.

கே: தனி ஒருவராக 'விருட்சத்தை' நடத்துவதில் நீங்கள் எதிர்கொண்ட, எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன?
ப: விருட்சம் ஒரு காலாண்டிதழ். ஆசிரியர், பதிப்பாளர் எல்லாமும் நான்தான். அலுவலகப் பணியின் ஊடே ஓய்வுநேரத்தில் இதை நடத்திவருகிறேன். முதல் பிரச்சனை, படைப்புகளை வாங்குவதுதான். ஞானக்கூத்தன், ப்ரமீள் போன்றவர்கள் எழுதிவந்தார்கள். ஐராவதம் அவர்களின் நட்பு கிடைத்த பின்னர் அந்தப் பிரச்சனை கொஞ்சம் தீர்ந்தது. அவர் சிறுகதை, கட்டுரை, விமர்சனம் என்று தொடர்ந்து எழுதிக் கொடுத்துவிடுவார். இரண்டாவதாக சிறுபத்திரிகை என்பதற்கு எப்போதுமே பெரிதாக வாசக ஆதரவு இருந்ததில்லை. சிலர் வாங்குவார்கள். சிலர் விரும்ப மாட்டார்கள். சிலர் வாங்கி வைப்பார்களே தவிர படிக்கவே மாட்டார்கள். சந்தாத்தொகை மிகவும் குறைவுதான். அதை நாம் கேட்கவும் முடியாது. கேட்டாலும் அனுப்ப மாட்டார்கள். அதுபோல இதை வாங்கி விற்பனை செய்பவர்களிடமிருந்தும் பணம் கிடைக்காது. ஏன், விற்காத பழைய இதழ்கள்கூடத் திரும்பக் கிடைக்காது. வாசகர்களிடமிருந்தும் பெரிதாக ரெஸ்பான்ஸ் ஏதும் இருக்காது. இதழ் அவர்களுக்குக் கிடைத்ததா இல்லையா, நன்றாக இருந்ததா இல்லையா என்ற கருத்து, விமர்சனம்கூட வராது.

ஆனால் ஊக்கமளித்துத் தவறாது கடிதம் எழுதி வந்தவர்கள் வல்லிக்கண்ணன் மற்றும் தி.க. சிவசங்கரன். இன்றுவரை பல பிரச்சனைகளோடுதான் இதழை நடத்திக்கொண்டு வருகிறேன். ஆனால், இதில் எனக்கேதும் வருத்தமில்லை. பணப் பிரச்சனையால் பல இதழ்கள் நின்றதுண்டு. வங்கியில் பணியாற்றியதால் பணப்பிரச்சனை எனக்கு ஏற்பட்டதில்லை. எனது வருமானத்திலிருந்து இதழுக்காகச் செலவழிக்கத் தயங்கியதே இல்லை. இலக்கிய ஆர்வத்தால் செய்துவருகிறேன்.



கே: உங்களுக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் குறித்து...
ப: எனக்கு இரண்டு விதமான நண்பர்கள் குழாம் இருந்தது. ஞானக்கூத்தன், வைத்தியநாதன், ஸ்டெல்லா புரூஸ், ராஜகோபாலன், ஆனந்த். இவர்கள் ஒருபுறம் விருட்சத்தில் கவிதை எழுதிக் கொண்டிருந்தனர். மற்றொருபுறம் ப்ரமீள், கால சுப்பிரமணியன், தேவதேவன், கோகுல்ஸ்ரீ போன்றோர். இவர்களை விருட்சத்தில் பயன்படுத்திக்கொள்ள விரும்பினேன். நான் சிற்றிதழ் ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொன்னபோது, ப்ரமீள் "இதெல்லாம் வேண்டாத வேலை" என்றார். ஆனால், ஞானக்கூத்தன் பத்திரிகை ஆரம்பியுங்கள் என்று ஊக்குவித்தார். இப்படி இருவேறு துருவங்களாக இருந்தவர்களையும் நான் விருட்சம்மூலம் இணைத்தேன்.

இதில் ஞானக்கூத்தன் மிகத்திறமையான கவிஞர். பகடியாகக் கவிதைகள் எழுதுவதில் தேர்ந்தவர். மனதில் பட்டதை பகிரங்கமாகப் பேசிவிடுவார். கவிதைகள் மூலமாகவே பல எதிரிகளைச் சம்பாதித்தவர் அவர். அதுபோல ஐராவதம் மிகத் திறமையான எழுத்தாளர். 'கசடதபற', 'பிரக்ஞை' போன்ற இதழ்களில் எழுதியவர். விமர்சனத்துக்கு வரும் புத்தகங்களை அவரிடம் கொடுப்பேன். அவர் உடனடியாக எழுதிக் கொடுத்துவிடுவார். அவரிடம் பிரச்சனை என்னவென்றால் அவர் கொடுத்ததை அப்படியே போடவேண்டும். இல்லாவிட்டால் அப்புறம் எழுதமாட்டார். அப்படி ஒருமுறை அவர் எழுதித் தந்தது, பெரிய பிரச்சனை ஆகிவிட்டது.

கே: ஓ... என்ன அது?
ப: ஒருசமயம் காலச்சுவடு ஆண்டுமலர் வந்தது. சுந்தர ராமசாமி அதன் ஆசிரியர். விமர்சனத்திற்காக அதை ஐராவதம் அவர்களிடம் கொடுத்திருந்தேன். அவர் எழுதிக் கொடுத்ததை அப்படியே பிரசுரித்துவிட்டேன். வந்தது வினை. அந்த விமர்சனத்தைப் படித்துப் பார்த்த சுந்தர ராமசாமிக்கு கடுங்கோபம் வந்துவிட்டது. காரணம், ஐராவதம், சுந்தராமசாமியை அதில், "இதில் இவர் ஒரு குழுவை வைத்து எழுதிக் கொண்டிருக்கிறார். இலக்கிய உலகின் ஞானத்தந்தையாகத் தன்னை அறிவிக்க மேற்கொள்ளும் முயற்சி இது. நாகர்கோவில் நவாப்" என்றெல்லாம் மிகக்கடுமையாக விமர்சித்திருந்தார். ஜெயமோகன் துவங்கி, வேதசகாயகுமார், ராஜமார்த்தாண்டன் என்று பலரிடமிருந்து மிகக் கடுமையான கண்டனக் கடிதங்கள் எனக்கு வந்தன. பலரும் கண்டனக் கடிதங்களை எழுத, நான் அப்படியே அடுத்த இதழில் அவற்றைப் பிரசுரித்து விட்டேன். கண்டனக் கடிதங்களுக்கு எதிர்ப்பாகச் சிலரிடமிருந்து கடிதங்கள் வந்திருந்தன. ஐராவதம், ப்ரமீள், தமிழவன், ஞானி போன்றோர் அதில் முக்கியமானவர்கள். இவர்கள் எல்லாம் சுந்தர ராமசாமிக்கு எதிர் முகாமைச் சேர்ந்தவர்கள்.

நான் இவற்றையும் பிரசுரித்தேன். அந்த இதழை நான் எல்லாருக்கும் தபாலில் சேர்ப்பதற்காக கட்டாகக் கட்டி போஸ்ட் செய்தும் விட்டேன். ஆனால், எனக்கு ஏனோ அந்த இதழ் அச்சானது முதல் மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. நான் யாருக்கும் எதிரியில்லை; யாரையும் கிண்டல், கேலி செய்யும் மனப்பாங்கு உடையவனும் அல்ல. ஆனால், நிலைமை இப்படி ஆகிவிட்டது. ப்ரமீளுக்கும் சுந்தரராமசாமிக்கும் எப்போதுமே ஆகாது. அவர், நான் ப்ரமீளுடன் சேர்ந்துகொண்டு அவருக்கு எதிராக நடந்து கொள்வதாக, பத்திரிகையில் எழுதுவதாக நினைத்து விட்டார். அவர் மிகவும் மனம் புண்பட்டு விட்டார். எனக்கும் மிகவும் மனம் வருத்தமாகி விட்டது. பத்திரிகையை நிறுத்தி விடலாமா என்றுகூட நினைக்க ஆரம்பித்தேன். அடடா பத்திரிகையை அடித்து தபாலில் அனுப்பியும் விட்டோமே! அது வெளிவந்தால் மென்மேலும் பிரச்சனை ஆகுமே! இது யாருக்கும் போய்ச் சேராமல் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். பாபாவிடமும் வேண்டிக் கொண்டேன். ப்ரமீள் அப்போது எனக்கு நெருக்கமான நண்பர். அவர் ஜே.கே.மீது அபிமானம் உள்ளவர். ஆனால் வாராவாரம் வியாழக்கிழமை மயிலை ஷீரடி பாபா கோயிலுக்குச் செல்வார். உடன் நானும் செல்வேன். அதனால் பாபாவிடம் இந்த இதழ் யார் கைக்கும் கிடைக்கக் கூடாது என்று மனதார வேண்டிக் கொண்டேன்.

கே: அப்புறம்?
ப: இரண்டு நாள் கழித்து ஒருவர் வந்தார். என்னிடம், "சார்.. உங்கள் தபால் எல்லாம் போகாமல் அப்படியே எக்மோர் சார்டிங் ஆஃபிஸில் இருக்கிறது. ஸ்டாம்ப் போதவில்லை. இன்னமும் அதிகமாக ஒட்டவேண்டும். நீங்கள் வந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போங்கள்" என்றார். உண்மையில் நான் ஸ்டாம்ப் எல்லாம் கம்மியாக ஒட்டவில்லை. சரியாகத்தான் ஒட்டியிருந்தேன். ஆனால், ஏனோ அவர்கள் அப்படிச் சொல்லி அவற்றை அனுப்பாமல் வைத்திருந்தார்கள். என்னால் நம்பவே முடியவில்லை. மனதிற்கு மிகவும் நிம்மதியாக இருந்தது. உடனே எக்மோருக்குச் சென்று அத்தனை இதழ்களையும் எடுத்து வந்துவிட்டேன். அதனைத் தபாலில் சேர்க்கவில்லை. பின்னர் ப்ரமீளைப் பார்த்தபோது "பத்திரிகையை நிறுத்தி விடலாமா" என்றிருக்கிறேன் என்று சொன்னேன். ஆனால் அவர், "இல்லை. நீங்கள் நிறுத்தக்கூடாது. இதெல்லாம் பத்திரிகை உலகில் சகஜம். உங்களுக்கு இதன்மூலம் தான் ஓர் அடையாளமும் பெயரும் கிடைக்கும். இதனை நீங்கள் தொடர்ந்து நடத்தவேண்டும்" என்று சொன்னார். ஒருகாலத்தில் பத்திரிகை ஆரம்பிக்காதே என்று சொன்னவர் இப்படிச் சொன்னார். மனம் குழம்பி ஞானக்கூத்தனிடம் ஆலோசனை கேட்டேன். அவரோ, "ஆமாம், நீங்கள் பெரிய கான்ட்ரவர்ஸியில் மாட்டிக்கொண்டு விட்டீர்கள். நிறுத்திவிடுவதுதான் நல்லது" என்றார். நான் மேலும் மனம் குழம்பினேன்.

பின் ப்ரமீளிடம் ஆலோசித்தபோது அவர், "விருட்சம் ஒரு சிற்றிதழ். அதன் பக்கங்கள் மிகவும் குறைவு. காலச்சுவடு விமர்சனம், அதற்கு பதில் விமர்சனம் என்று இதழுக்கு இதழ் தொடர்ந்து பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அதனால் இந்தப் பிரச்சனையை இத்தோடு நிறுத்திக் கொள்கிறோம்" என்பதாக எழுதிக் கொடுத்தார். நானும் சுந்தர ராமசாமிக்கான கடிதங்கள், பிரச்சனைக்குரியவைகள் எல்லாவற்றையும் நீக்கிவிட்டு ப்ரமீள் எழுதியதைத் தலையங்கத்தில் சேர்த்து மற்ற கதை, கவிதைகளைச் சேர்த்து புதிதாக இதழை அச்சிட்டு வெளியிட்டேன். பிரச்சனையும் அத்துடன் முடிவுக்கு வந்தது. உண்மையில் இதுமாதிரி பிரச்சனைகள் எல்லாம் சிற்றிதழ்களுக்கு வரக் கூடியதுதான் என்பது பின்னர் எனக்குப் புரிந்தது.
கே: வெளியூருக்கு மாற்றலான போதும் தொய்வில்லாமல் உங்களால் இதழை நடந்த முடிந்ததா?
ப: விட்டுவிட்டுத்தான் கொண்டுவர முடிந்தது. காலாண்டிதழ் என்று பெயராக இருந்தாலும் சில இதழ்கள் வெளியாக அரையாண்டுக் காலம்கூட ஆகியிருக்கிறது. அதனால்தான் மிகத்தாமதமாக இந்த நூறாவது இதழ் வந்திருக்கிறது. எனக்குப் பதவி உயர்வு கிடைத்து மாற்றல் வந்தது. எனது 50ம் வயதில் நான் அதனை ஏற்றுக்கொண்டேன். அதுவரை சென்னையில்தான் வேலை பார்த்தேன். மயிலாடுதுறைக்கு அருகே பந்தநல்லூர்க் கிளையில் எனக்கு வேலை. பணிமுடிந்து அறைக்குச் செல்ல இரவாகிவிடும். கையில் லேப்டாப் வைத்திருந்தேன். எனக்கு வரும் படைப்புகளை இரவில் தட்டச்சுவேன். வாராவாரம் ஞாயிறு காலை சென்னை வந்து விடுவேன். அப்போதுதான் 'விருட்சம்' வருவதில் தாமதமானது. ஆனாலும் விடாப்படியாகக் கொண்டு வந்துவிடுவேன். நல்லியின் விளம்பரம், நூலக ஆணையும் (சுமார் 200 பிரதிகள்) கிடைத்தன. சந்தா வருவாயை எதிர்பார்க்காமல் இதழைக் கொண்டுவருவதில் கவனம் செலுத்தினேன்.

கே: விருட்சம், நவீன விருட்சம் ஆனது ஏன்?
ப: ஆரம்பத்தில் பத்திரிகையை ரிஜிஸ்தர் செய்யும்போது எனக்கு ஃபோன் இல்லை. ஃபோனுக்கு அப்ளை செய்தால் கிடைக்க இரண்டு, மூன்று வருடம் ஆகும். ஆனால் பத்திரிகை என்றால் உடனடியாகக் கிடைக்கும் டில்லிக்கு அப்ளை செய்தேன். ஆனால் 'நவீன விருட்சம்' என்ற பெயருக்குத்தான் அப்ரூவல் கிடைத்தது. அதனால் பத்திரிகையும் 'நவீன விருட்சம்' ஆகிவிட்டது.

கே: நூல்களையும் பதிப்பித்து வெளியிடுகிறீர்கள் அல்லவா...
ப: ஆமாம். ரா. ஸ்ரீனிவாசன் என் நண்பர். அவரது கவிதைகளை விருட்சம் வெளியீடாக முதலில் கொண்டுவந்தேன். ஆதிமூலம் அதற்கு ஓவியம் வரைந்திருந்தார். இன்றுவரை 37க்கும் மேல் நூல்களை வெளியிட்டிருக்கிறேன். வரும் புத்தகக்காட்சிக்காக சுமார் ஐந்து நூல்கள் வெளியிட இருக்கிறேன்.



கே: இந்தப் புத்தகங்கள் நன்கு விற்பனையாகின்றனவா?
ப: அப்படிச் சொல்லமுடியாது. ஸ்ரீனிவாசனின் புத்தகங்கள் ஒரு 10, 15 வருடம் என்னிடமே இருந்தன. அதனால் நான் 50, 100, 200 எனத் தேவைக்கேற்பப் பிரதிகளை அச்சடிக்கிறேன். அவை விற்றுத் தீர்ந்தபின் மேலும் அடிக்கலாம் என்பது எண்ணம். கடந்த ஆண்டு வந்த பெருமழை வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் நனைந்து வீணாய்ப் போயின.

கே: இன்றைய பதிப்புலகம் எப்படி இருக்கிறது?
ப: முன்பெல்லாம் பிரம்மாண்டமான நூல்களை, நாவல்களை யாரும் அச்சிட யோசிப்பார்கள். தயங்குவார்கள். ஆனால் இப்போது பல நூற்றுக்கணக்கான பக்கங்களைக் கொண்ட நூல்கள் மிகச் சாதாரணமாக வெளிவருகின்றன. தேவைக்கேற்பப் பிரதிகளை அச்சிட முடிகிறது. இது ஒரு வசதி. ஆண்டுக்காண்டு பதிப்பாளர்களின் எண்ணிக்கை, புத்தகச் சந்தையில் ஸ்டால்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டுதான் போகிறது.

கே: ஸ்டெல்லா புரூஸ் உங்கள் நெருங்கிய நண்பர் அல்லவா?
ப: ஆம். எனக்கு பாதிப்பை ஏற்படுத்திய மரணம் அவருடையது. அவர் காளிதாஸ் என்ற பெயரில் கவிதைகள் எழுதி வந்தார். அவர் மிகவும் சிக்கனமானவர். எந்தக் கெட்டபழக்கமும் கிடையாது. இசை கேட்பதும், புத்தகம் படிப்பதும்தான் அவரது பொழுதுபோக்கு. கம்பீரமாக இருப்பார். இலக்கியக் கூட்டங்களில் அவரைப் பார்க்கலாம். சினிமா விவாதங்களில் கலந்துகொள்வார். அவரது கதைகள் மிகநன்றாக இருக்கும். குடும்பத்தாருடன் அவருக்கு அவ்வளவு ஒட்டுதல் இல்லை. அவ்வப்போது சொந்த ஊரான விருதுநகருக்குப் போய்வருவார். அவருடைய வாசகியான ஹேமா என்பவருடன் அவருக்குத் திருமணம் நிகழ்ந்தது. ஒரு காவிய வாழ்க்கை என்று சொல்லும் அளவுக்கு ஹேமா அவரைப் பார்த்துக்கொண்டார். ஒரு கடைக்குப் போய் கறிகாய் வாங்கக்கூட ஸ்டெல்லா புரூஸுக்குத் தெரியாது. எல்லா வேலைகளையும் ஹேமாவே செய்துவிடுவார். இருவரும் இலக்கியம், இசை, ஆன்மிகம் பற்றிப் பேசிக்கொண்டிருப்பர். அப்படியிருந்த ஹேமா சிறுநீரகப் பாதிப்பால் காலமானார். அது ஸ்டெல்லா புரூஸை மிகவும் பாதித்துவிட்டது. பல ஆண்டுக்காலம் தனிமையில் இருந்தவரால் ஹேமா இல்லாத வெறுமையைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. நான் டாக்டர் ருத்ரனிடம் அவரது நிலைமையைப் பற்றிச் சொன்னபோது, "அவரை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். இங்கே அழைத்து வாருங்கள். சிகிச்சை அளிக்கலாம்" என்றார். ஆனால், ஸ்டெல்லா புரூஸ் ஒருநாள் கடிதமெழுதிவிட்டுத் தற்கொலை செய்து கொண்டுவிட்டார்.

இதுபோல ஐராவதம், ஞானக்கூத்தன் இருவரது மறைவும் என்னை பாதித்தன.



கே: உங்கள் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருந்ததா?
ப: ஆதரவு என்று சொல்லமுடியாது, எதிர்ப்பும் இல்லை. என் மனைவிக்குப் புத்தகங்களில் ஈடுபாடு கிடையாது. என் அப்பா, "இத்தனை புத்தகம் வாங்கி அடுக்கி வைத்திருக்கிறாயே, எப்போது படித்து முடிப்பாய்?" என்று கிண்டல் செய்வார். எனக்கு ஒரு பெண், ஒரு பையன். பையன் ஃப்ளோரிடாவில் இருக்கிறார். பெண்ணுக்குத் திருமணமாகி மடிப்பாக்கத்தில் வசிக்கிறார். இவர்கள் யாருக்குமே இலக்கிய ஈடுபாடில்லை. இருந்தாலும் நான் புதிய, பழைய புத்தகங்களை வாங்கி வரும்போது, இன்றளவும் மனைவிக்குத் தெரியாமல் மறைத்துத்தான் என் அறைக்குக் கொண்டு வருகிறேன். நான் படித்தவை குறித்து எனது வலைப்பதிவில் எழுதி வருகிறேன்.

கே: எதிர்காலத் திட்டங்கள் என்ன?
ப: நான் பணி ஓய்வு பெற்றுவிட்டேன். முதலில், "ஓய்வு பெற்றதும் விருட்சத்தை மாத இதழாகக் கொண்டு வரவேண்டும்" என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. பல பிரச்சனைகள். என் மாம்பலம் வீட்டைச் சிறு கூட்டங்கள் நடத்த, வாசிப்பரங்கமாக வைத்துக்கொள்ள, வாடகைக்குப் புத்தகங்களைப் பெற்றுச் செல்லும் நூல்நிலையமாக வைத்திருக்க என்று பல எண்ணங்கள் இருக்கின்றன. விருட்சம் இதழைத் தொடர்ந்து நடத்துவேன். நிறைய நல்ல புத்தகங்களைப் பதிப்பிக்கும் எண்ணம் இருக்கிறது.

அழகியசிங்கர். "இதுதான் வாழ்வில் என் முதல் நேர்காணல்" என்கிறார். அவரது முயற்சிகளுக்கு வாழ்த்துக் கூறி விடைபெற்றோம்.

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்

*****


செல்லப்பாவின் கோபம்
சி.சு. செல்லப்பா 'சுதந்திர தாகம்' என்ற மூன்று வால்யூம் நூலை, ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதியிருந்தார். வெளியிட யாரும் முன்வரவில்லை. எனக்குத் தெரிந்த நண்பர் மூலம் அது நூலாக உதவினேன். அப்போது சி.சு. செல்லப்பாவிற்காக பிரஸன்னா ராமஸ்வாமியும், சா. கந்தசாமியும் தங்கள் அமைப்புமூலம் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தனர். அதில் கலந்துகொள்ள செல்லப்பா என்னை அழைத்திருந்தார். அன்று நல்ல மழை. அரங்கத்தில் நான், திருப்பூர் கிருஷ்ணன், செல்லப்பா, கந்தசாமி, சி.சு. செல்லப்பா மற்றும் ஒரு டிரைவரைத் தவிர வேறு யாருமே இல்லை. மொத்தம் ஏழே பேர்தான். சி.சு.செல்லப்பாவுக்கு அதில் ரொம்பக் கோபம். மேடையில் பேசிக்கொண்டே இருந்தவர் திடீரென, "உன் விருட்சம் பட்டுப் போக; உன் விருட்சம் எரிஞ்சு போக" என்றெல்லாம் திட்ட ஆரம்பித்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

மறுநாள் எனக்கு ஃபோன் செய்தார். "நான் கோபத்துல ஏதோ தெரியாமப் பேசிட்டேன். மன்னிச்சுக்கங்க" என்றார். இதுதான் செல்லப்பா. எனக்குக் கோபமேதும் இல்லை. விருட்சத்திற்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று நான் கவலைப்படவுமில்லை. அவர் மீதான மதிப்பு எனக்கு இறுதிவரை குறையவே இல்லை.

- அழகியசிங்கர்

*****


சில நேரங்களில் சில கவிஞர்கள்
ஆத்மாநாம் சிறந்த கவிஞர். தன் கவிதைகளுக்கு அங்கீகாரத்தை எதிர்பார்த்தார். இறுதிவரை அது கிடைக்கவேயில்லை. தொழிலில் நஷ்டம், பத்திரிகையில், காதல் தோல்வி என்று மனமுடைந்து போய்விட்டார். கவலையை மறக்க அவர் செய்தவை உடலைப் பாதித்தன. மனப்பிறழ்வை உண்டாக்கி விட்டது. அதற்காக சிகிச்சை எடுத்துவந்தார். ஒருநாள் அவர் தற்கொலை செய்துகொண்டு விட்டார். என்னால் அந்தச் சோகத்தைத் தாளவே முடியவில்லை. ஸ்டெல்லாபுரூஸ், ஆத்மாநாமுக்கு மிகவும் நெருக்கமானவர். கடுமையாக அதிர்ந்துபோன அவர் இரங்கல் கூட்டத்தில்கூடக் கலந்துகொள்ளாமல், தன் ஊருக்குப் போய்விட்டார்.

ப்ரமீள் வித்தியாசமான கவிஞர். கதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று நிறையச் செய்திருக்கிறார். இயற்பெயர் ராமலிங்கம் என்பது யாருக்கும் தெரியாது. அரூப், தருமு சிவராமு என்று பெயரை அடிக்கடி மாற்றிக்கொண்டு எழுதுவார். பூர்வீகம் இலங்கை. ஆன்மீகத்திலும், சித்தரியலிலும் மிகுந்த நாட்டம். சாது அப்பாத்துரை பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ஜே.கே. மீது மிகுந்த அபிமானம் கொண்டவர். "புத்தருக்குப் பிறகு வந்த முக்கியமான ஞானி ஜே.கே. ஆனால், அது ஏனோ பலருக்கும் தெரியவில்லை" என்று அடிக்கடி சொல்வார்.

என் அலுவலகம் அப்போது பீச் ஸ்டேஷன் அருகே இருந்தது. அப்படி ஒருமுறை வந்த ப்ரமீள், என் அலுவலகத்திற்கு எதிரே இருந்த சுரங்கப்பாதை அருகே, துணி மூட்டையுடன், அழுக்கு ஆடையுடன் அமர்ந்திருந்த ஒரு வட இந்தியப் பெண்மணியைக் காட்டி, "இவர் பிச்சைக்காரர் அல்ல; ஒரு சித்தர். யாரிடமும் பிச்சை கேட்கமாட்டார். கவனித்துப் பாருங்கள்" என்றார். எனக்கு ஆச்சரியமாகி விட்டது. அவ்வப்போது நானும் அந்தப் பெண்மணியைப் போகும்போதும் வரும்போதும் கவனித்தேன். அவர் யாரிடமும் பிச்சை கேட்கவில்லை. பர்மா பஜாரில் சில கடைகளைக் கூட்டி, சுத்தம் செய்து அதில் வரும் வருமானத்தில் வாழ்வதும் தெரியவந்தது. ப்ரமீள் கவிதை, கட்டுரைகளில் எதிரணியைத் திட்டி எழுதி விடுவார். சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஞானக்கூத்தன் என்று பலருடன் சண்டை போட்டிருக்கிறார்.

- அழகியசிங்கர்

*****


"ஒரு பிரச்சனையும் வராது, போ!"
அசோகமித்திரன் மிக எளிமையானவர். பந்தா எதுவும் இல்லாதவர். விருட்சத்திற்கான கதை, கட்டுரைகளை என் வீடுதேடி வந்துகூடக் கொடுத்துச் சென்றிருக்கிறார். அப்படி வரவேண்டும் என்ற அவசியமில்லை. ஃபோன் செய்தால் நானே போய் வாங்கிக் வந்திருப்பேன். நல்ல நகைச்சுவை உணர்வு உடையவர். 'இன்னும் சில நாட்கள்' என்பதுதான் அவரது படைப்பில் நான் முதலில் படித்தது. அதுமுதல் தீவிர வாசகனாகி விட்டேன். "தமிழில் இப்படியெல்லாம் எழுத முடியுமா?" என்னுமளவிற்கு எழுதிக் குவித்தவர். 'விபத்து' என்ற கதையை வங்கியில் பணியாற்றும் ஒருவர் சொல்வதுபோல எழுதியிருந்தேன். அதை எழுதி அனுப்பியதும் எனக்குக் கொஞ்சம் பயமாகிவிட்டது. நானும் வங்கியில் வேலை பார்க்கிறேன். யாராவது எங்காவது சொல்லி, வேலைக்கே பிரச்சனை ஆகிவிடுமோ என்று பயப்பட்டேன். அசோகமித்திரனிடம் ஆலோசனை கேட்டேன். "அதெல்லாம் ஒண்ணும் பயப்படாதே. ஒரு பிரச்சனையும் வராது, போ!" என்று தைரியம் சொன்னார். அது கணையாழியில் வெளியானது. ஒரு பிரச்சனையும் வரவில்லை. நான் கூப்பிடும் இலக்கியக் கூட்டங்களில் அவர் தவறாது கலந்து கொள்வார். விருட்சம் நூறாவது இதழை வெளியிட்டது அவர்தான்.

- அழகியசிங்கர்

*****


யோகி ராம்சுரத்குமாருடன் ஒரு நாள்...
ப்ரமீளை ஒருமுறை திருவண்ணாமலைக்கு அழைத்துப் போனேன். சித்தர்கள், ஞானிகளைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. யோகி ராம்சுரத்குமார் அப்போது ஆலயத்தருகே ஒரு பழைய வீட்டில் தங்கியிருந்தார். அதன் அறையில் எங்கும் மாலைகளாய் இருந்தன. அவை தூக்கிப் போடப்படாமல் ஓர் ஆணியில் மாட்டப்பட்டிருந்தன. யோகியார் எங்களைப் பார்த்ததும், "ப்ளீஸ் கம்" என்று சொல்லி உள்ளே அழைத்துச் சென்றார். எங்களுடன் கால சுப்ரமணியமும் வந்திருந்தார். யோகியார் ஒவ்வொருவரையும் ஓரோரிடத்தில் உட்காரச் சொன்னார். அவர் உட்காரச் சொல்கிற இடத்தில்தான் உட்கார வேண்டும். யோகியார் ப்ரமீளுடன் பேசிக் கொண்டிருந்தார். ப்ரமீளுடன் பேசிக்கொண்டிருந்த யோகியார், அவரிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்து படி என்றார். அது 'தெய்வத்தின் குரல்' என்ற புத்தகம். அடுத்து யோகியார் ப்ரமீளின் கையைப் பிடித்துக் கொண்டு, முதுகில் டமால் டமால் என்று அடித்தார். ப்ரமிள் அதைத் தாங்கிக்கொண்டு மௌனமாக இருந்தார். அவர் அத்தனை பவ்யமாக நடந்துகொண்டு அதுவரை நான் பார்த்ததில்லை!

- அழகியசிங்கர்

*****
More

பசுமைப் போராளி M. ரேவதி (பகுதி - 1)
Share: 




© Copyright 2020 Tamilonline