Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | முன்னோடி | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சமயம்
சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி ஆலயம்
- சீதா துரைராஜ்|செப்டம்பர் 2016|
Share:
தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு அருகில் அமைந்துள்ளது சுவாமிமலை. சாலை மற்றும் ரயில் மூலம் இத்தலத்தை அடையலாம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது நான்காவது படைவீடாகும்.

இத்தல இறைவன் சுவாமிநாதன் என்ற திருநாமத்துடன் மூலவராகக் காட்சியளிக்கிறார். தந்தை சிவபெருமானுக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருளை குருவாக அமர்ந்து உபதேசித்ததால் சுவாமிநாதன் என்று பெயர். வஜ்ரதீர்த்தம், குமரதீர்த்தம், சரவணதீர்த்தம், நேத்ரதீர்த்தம் என்பவை இத்தலத்தின் புண்ணியதீர்த்தங்கள். தலவிருட்சம் நெல்லிமரம். நக்கீரர் தனது திருமுகாற்றுப்படையிலும், அருணகிரிநாதர் திருப்புகழிலும் இவரைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.

ஒருகாலத்தில் பிருகு மகரிஷி தனது தவத்திற்கு யாரும் இடையூறு செய்தால் அவர் தனது அறிவை இழந்துவிடுவர் என்பதாக வரம் பெற்றார். தவத்தின் சக்தியால் மகரிஷியின் தலையிலிருந்து ஜ்வாலை தேவலோகத்திற்குச் சென்று தேவர்களை வருத்தியது. தேவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ளச் சிவபெருமானைச் சரணடைந்தனர். சிவபெருமான் அக்னி ஜ்வாலையைத் தன் கையால் மூடினார். முனிவரின் தவம் கலைந்தது. சிவபெருமான் முனிவர் பெற்ற வரத்தின்படி தனது அறிவை இழந்தார். தன் குமரனான முருகப்பெருமானிடம் சீடராக அமர்ந்து, இழந்த அறிவைத் திரும்பப்பெற்றாராம்.

ஒருசமயம் கைலாயம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பிரம்மாவை, குழந்தை முருகன் தடுத்து நிறுத்தி, பிரணவத்தின் பொருளைக் கூறுமாறு கேட்டார். பிரம்மா தனது அறியாமையை ஒப்புக்கொள்ள, முருகன் பிரம்மாவைச் சிறைபிடித்தார். அதனால் சிருஷ்டித் தொழில் பாதிக்கப்பட்டது. தேவர்கள் சிவனைத் தொழுது பிரம்மாவை விடுதலை செய்யும்படிக் கேட்டனர். முருகன், தண்டனை அறியாமைக்காகக் கொடுக்கப்பட்டது என்றார்.
உடனே சிவபெருமான் முருகனிடம் 'உனக்கு பிரணவத்தின் பொருள் தெரியுமா?' என்று கேட்க, 'சீடனாக இருந்து கேட்டால் உபதேசிக்கிறேன்' என்றார் குமரப் பெருமான். அவ்வாறே ஈசனும் சீடனாக அமர்ந்து கேட்க, முருகன் அவருக்கு குருவாக உபதேசம் செய்தார். சுவாமிக்கே குருவாக, நாதனாக விளங்கியதால் முருகப்பெருமான் சுவாமிநாதன் ஆனார், சுவாமி அமர்ந்த இம்மலையும் சுவாமிமலை ஆயிற்று.

கோயில் 60 தமிழ் வருடங்களைக் குறிக்கும் 60 படிகளைக் கொண்டு அமைந்துள்ளது. இது முதல் பராந்தகசோழனால் கட்டப்பட்டது. கோயிலின் அடிவாரத்திலுள்ள மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் சன்னிதி வரகுண பாண்டியனால் கட்டப்பட்டது. ஆலயத்தில் மூன்று பிரகாரமும் மூன்று நுழைவாயிலும் உள்ளன. பிரதானவாயில் ஐந்து ராஜகோபுரங்களைக் கொண்டது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கீழ்க்கோவிலாகவும் மலைமேல் உள்ள சுவாமிநாத சுவாமிசன்னிதி மேலக் கோவிலாகவும் அழைக்கப்படுகிறது. இரண்டாவது பிரகாரத்தில் நுழைந்ததும் முருகன், சிவனுக்குப் பிரணவம் உபதேசிக்கும் காட்சியைச் சிற்பத்தில் காணலாம். தொடர்ந்து நடந்தால் நேத்ர விநாயகரைத் தரிசிக்கலாம். சுமதி என்னும் பக்தன் தான் செய்த பாவத்தினால் பார்வையை இழந்தான். பரத்வாஜ மகரிஷி அவனிடம் நேத்ர விநாயகரை தரிசித்து நேத்ர தீர்த்தத்தில் நீராடி எழுந்தால் இழந்த பார்வையைப் பெறலாம் என உபதேசிக்க அவ்வாறே அவனும் தன் கண் பார்வையை மீண்டும் பெற்றான்.

கருவறைப் பிரகாரத்துக்குள் நுழைந்தால் அருணகிரிநாதர், அகத்தியர், நடராஜர், சிவகாமி, சூரியன், சந்திரன், கார்த்தவீர்யார்ஜுனர் போன்றோரை தரிசிக்கலாம். கருவறை மண்டபத்தில் ஆறடி உயரத்தில் முருகப்பெருமான் மிகவும் கம்பீரமாக, சக்திவேல், தண்டம் தரித்துக் காட்சியளிக்கிறார். மயிலுக்கு பதிலாக யானை வாகனம் எதிரே உள்ளது.

ஆலயத்தில் கார்த்திகை பூஜை, தங்கரத உற்சவம், கந்தசஷ்டி, வைகாசி உற்சவம், தைப்பூசம், பங்குனி உத்திரப் பெருவிழா எனப் பல விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தங்கரதம் விழாக்காலங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையனை வணங்கினால் ஞானம் பெருகும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline