Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர் கடிதம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | பொது | நலம்வாழ | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சமயம்
முப்பெருந் தேவியர் ஆலயங்கள்
- சீதா துரைராஜ்|அக்டோபர் 2016|
Share:
பூவனூர் சாமுண்டீஸ்வரி
பூவனூர் தஞ்சைக்கருகே நீடாமங்கலத்திலிருந்து நான்கு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. மன்னார்குடி-கும்பகோணம் பேருந்து மார்க்கத்தில் 7 கி.மீ. தூரத்தில் பாமணி ஆற்றின் கரையில் உள்ளது. மைசூருக்கு அடுத்தபடி சாமுண்டீஸ்வரிக்கு தனிச்சன்னிதி அமையப்பெற்ற தலம் இது.

பல ஆண்டுகளுக்கு முன் நெல்லையை ஆண்ட மன்னன் குழந்தைப் பேறின்றி வரம் வேண்டி நெல்லையப்பரைத் தொழுதான். இறைவன் கனவில் தோன்றி உமையன்னையே அவனுக்குக் குழந்தையாகவும், பராசக்தி அம்சமான சாமுண்டிதேவியே செவிலித்தாயாகவும் வருவாள் என்று வரமருளினார். மறுநாள் காலை மன்னன் தாமிரபரணி நதியில் மூழ்கி எழுந்ததும் அவன் கைகளில் சங்கு, சக்கரம் கிடைத்தது. உடன் அது குழந்தையாக மாறியது. குழந்தைக்கு ‘ராஜராஜேஸ்வரி' என்று பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தான். பெண் வளர்ந்து சதுரங்க ஆட்டத்தில் தன்னிகர் இல்லாதவளாக ஆனாள். அவளை ஜெயிக்க உலகில் யாராலும் இயலாதபோது மன்னன், மகளுடன் தீர்த்தயாத்திரை மேற்கொண்டு இத்தலத்திற்கு வந்தான்.

இத்தல இறைவனான புஷ்பநாதர் சித்தர் வேடத்தில் வந்து ராஜராஜேஸ்வரியுடன் விளையாடி ஆட்டத்தில் வென்றார். மன்னன் அவருக்கே தன் மகளை மணமுடித்துத் தந்தான். வந்தது சிவபெருமான் என்றும், தன் மகள் பார்வதி என்றும், உடன் வந்தவள் பராசக்தியின் அம்சமான சாமுண்டிதேவியே என்பதையும் அறிந்த மன்னன் மனமகிழ்ந்தான்.

இத்தலத்தில் ராஜராஜேஸ்வரியும், சாமுண்டிதேவியும் தனித்தனிச் சன்னிதிகளில் எழுந்தருளியுள்ளனர். ஆலயத்தின் எதிரில் க்ஷீரபுஷ்கரணி உள்ளது. இது நோயைத் தீர்ப்பதாக ஐதீகம். ஞாயிற்றுக்கிழமைகளில் விஷக்கடிக்கு வேர் மந்திரித்துக் கட்டுகின்றனர். காஞ்சி மகாபெரியவர் இக்கோவிலுக்கு விஜயம் செய்தபோது சாமுண்டீஸ்வரிக்கு சிறந்த சாந்நித்யம் உள்ளதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

*****


Click Here Enlargeகோலாப்பூர் மஹாலக்ஷ்மி
இவ்வாலயம் மகாராஷ்டிர மாநிலத்தின் கோலாப்பூரில் அமைந்துள்ளது. அம்பிகையின் சக்திபீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தெய்வீகத் தம்பதிகளான மகாவிஷ்ணுவும், மகாலக்ஷ்மியும் இவ்விடத்தில் 'காவீர்' என்ற பகுதியில் இன்றும் வசித்துவருவதாக ஐதீகம். இத்தலம் அன்னை ஜகதாம்பாளின் வலதுகையில் இருக்கும் காரணத்தால் தீய சக்திகளிலிருந்து காக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்டது. கல் மேடையில் மூன்றடி உயரத்திற்கு கருங்கற்களால் செதுக்கப்பட்டஉருவத்துடனும் நான்கு கரங்களுடனும் 40 கிலோ எடையுள்ள விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட கிரீடத்துடனும் மகாலக்ஷ்மி காட்சி அளிக்கிறாள். பாம்புத்தலையும், சிவலிங்கமும் கிரீடத்தைச் சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ யந்திரம் கோவில் சுவர்களில் செதுக்கப்பட்டுளது. கற்களால் ஆன சிம்மம் தேவியின் வாகனமாக அம்பிகையின் பின்னால் நிற்கின்றது. மேற்குப்பக்கச் சுவரில் திறந்த ஜன்னல் வழியாக மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 21ம் தேதி அம்பிகையின் முகத்தில் மாலைச்சூரியனின் பொற்கிரணங்கள் விழுகின்றன. இதைத் தரிசிக்கப் பக்தர்கள் திரளாக வருகின்றனர். இதை மூன்று நாள் கிரண உற்சவமாகக் கொண்டாடுகின்றனர். கோயில்களில் சிலைகள் பெரும்பாலும் வடக்கு அல்லது கிழக்கு நோக்கியே இருக்கும். இங்கே சிலைகள் மேற்குநோக்கி அமைந்துள்ளமை சிறப்பு.

கோயிலில் புஷ்கரணி மணிகர்ணிகா குண்டம் உள்ளது. கரையில் விஸ்வேஸ்வர மஹாதேவ் சன்னதி அமைந்துள்ளது. நவக்கிரகங்கள், சூரியன், மஹிஷாசுரமர்த்தினி, விட்டல ரகுமாயி, சிவ விஷ்ணு, துல்ஜா பவானி ஆகியோர் கோயில் பிராகாரத்தில் உள்ளனர். ஆலயத்தில் ஐந்துகால பூஜை நடக்கின்றது. வெள்ளிக்கிழமை, பௌர்ணமி நாட்களில் அம்பிகை கோயிலைச் சுற்றி ஊர்வலம் வருகின்றாள்.

மகாவிஷ்ணு வைகுந்தம், பாற்கடலைவிட மகாலக்ஷ்மியின் இருப்பிடமான கோலாப்பூரை அதிகம் நேசிப்பதாக ஐதீகம். இங்கு வந்து தரிசிப்பவர்களுக்கு மகாலக்ஷ்மியின் அருள் அபரிமிதமாகக் கிடைப்பதாக ஐதிகம்.

*****
பாஸர் ஞானசரஸ்வதி ஆலயம்
இவ்வாலயம் ஆந்திர மாநிலம் ஹைதராபாதிலிருந்து 130 மைல் வடக்கே அதிலாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோதாவரி நதியின் கரையில், நிஜாமாபாதிலிருந்து சுமார் 35 மைல் தூரத்தில் பாஸர் கிராமம் உள்ளது. கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்தைப் போலவே இங்கும் சரஸ்வதி தனிக்கோயிலில் அமைந்துள்ளாள்.

ஒரு சமயம் வேதவியாசர் சீடர்களுடன் தீர்த்த யாத்திரை செல்லும்போது கோதாவரி நதிக்கரையில் தங்கி தியானம் செய்தார். அவர் தினம் ஒரு பிடி மணலை எடுத்து அதைக்கொண்டு சரஸ்வதி சிலையை உருவாக்கிப் பிரதிஷ்டை செய்ததாக வரலாறு சொல்கிறது. நாரதர், வியாச தீர்த்த மகாத்மியம் பற்றி பிரம்மாவிடம் கேட்டு இத்தலம்பற்றி அறிந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. வியாசர் தேவியை பிரதிஷ்டை செய்ததால் இத்தலம் "வியாசபுரி" என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் "பாஸர்" ஆகிவிட்டது.

தேவியின் நாமம் வாஸரா, கௌமாரசல்வாசினி, வித்யா தாரிணி. ஞான சரஸ்வதிக்கு தினம் அதிகாலையில் ருத்ராபிஷேகம், பூஜை, விநாயக பூஜை, பிரம்மா, மஹாலக்ஷ்மி, மகாகாளி உள்ளிட்ட தெய்வங்களுக்குப் பூஜை நடக்கின்றது. கோதாவரி நீரால் ஞான சரஸ்வதிக்கு அபிஷேகம் செய்து தீர்த்தம் வழங்குகின்றனர். மஞ்சள் அலங்காரம் செய்து பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்குகின்றனர். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க தேவியின் பிரசாதத்தை நாவில் தடவுகின்றனர். கலைகளில் தேர்ச்சியடைய அம்மஞ்சளைப் பிரசாதமாக உண்ணுகின்றனர்.

நவராத்திரி ஒன்பது நாளும் மூன்றுகால பூஜை, நவமியன்று சண்டி ஹோமம், விஜயதசமி அன்று மகாபிஷேகம் முடித்து சுந்தர அலங்காரத்துடன் அம்மன் வீதியுலா வருகிறார். வெள்ளிக்கிழமைகளில் பூஜை, ஆரத்தி முடிந்து இரவு மயில்வாகனப் பல்லக்கில் கோயிலுள்ளே பிரதட்சிணம் நடைபெறுகிறது.

சீதாதுரைராஜ்,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline