|
|
|
இந்திய அமெரிக்கப் பின்னணியில் வந்து அண்மையில் தமிழகத்தில் கர்நாடக இசைக்கச்சேரிகள் நிகழ்த்தத் துவங்கியிருப்பவர்களில் குறிப்பிடத்தக்கவர் அமெரிக்காவின் விரிகுடாப் பகுதியில் வாழும் இளம்கலைஞர் நிஷேவிதா ரமேஷ். கடந்த ஆகஸ்டு மாதம் பழம்பெரும் வயலின் வித்வான் சங்கீத கலாநிதி திரு. எம். சந்திரசேகரன் தலைமையில் திரு எம்.ஆர். கோபிநாத் (வயலின்), திரு. திருவனந்தபுரம் பாலாஜி (மிருதங்கம்), திரு. திருச்சி முரளி (கடம்) ஆகியோர் பக்கம் வாசிக்க நடந்தது நிஷேவிதாவின் அரங்கேற்றம்.
அற்புதமான குரல்வளம் கொண்ட நிஷாவின் சிறப்பம்சமே உணர்வோடு கூடிய பாவம்தான் என்று மிகச்சரியாக அவதானித்தார் தலமையுரை ஆற்றிய திரு. க்ளீவ்லண்ட் சுந்தரம்.
பிறகு டிசம்பர் சங்கீத சீசனில் மூன்று கச்சேரிகளில் பாடினார் நிஷா. முதல் கச்சேரி டிசம்பர் 20ம் தேதி கோவை ராஜலஷ்மி ஃபைன் ஆர்ட்ஸுக்காக நடந்தது. பக்கவாத்தியக்காரர்கள் திரு கணேஷ் வயலினிலும், திரு. சுவாமிநாதன் மிருதங்கத்திலும் மெருகு சேர்க்க, சாவேரி வர்ணம் 'சரசூட', ஹம்சத்வனியின் 'வரவல்லபா' தெளிவான சாகித்யத்தோடும் தேர்ந்த பாவத்தோடும் பவனி வந்தன. 'சம்போ மஹாதேவா' என்கிற பந்துவராளி ஆலாபனையும், இறுதிகட்ட துக்கடாக்களும் அன்றைய கச்சேரியின் சிறப்பம்சங்கள்.
டிசம்பர் 24 அன்று சென்னை ஹம்சத்வனியில் நடந்த கச்சேரியில் கல்யாணிராக 'பங்கஜலோசனா'வின் விஸ்தாரமான ஆலாபனை ரசிகர்களை மகிழ்வித்தன. 'அருள் செய்ய வேண்டும் ஐயா' என்று ரசிகப்ரியாவில் நிஷேவிதா மனதைக் கவர்ந்தார்.
மூன்றாம் கச்சேரி டிசம்பர் 28ம் தேதி ஸ்ரீ சங்கர வித்யாஸ்ரம் அரங்கத்தில் க்ளீவ்லண்ட் தியாகராஜ ஆராதனையின் ஓர் அங்கமாக நிகழ்ந்தது. பிரபல வயலின் வித்வான் எச்.என். பாஸ்கரும், கடம் வித்வான் திருச்சி முரளியும் பக்கம் வாசித்த அந்தக் கச்சேரி குறித்து குங்குமம் வார இதழில் எழுதிய வித்வான் அஷோக் ரமணி அவர்கள் "இளம்பாடகி நிஷேவிதா ரமேஷ். நல்ல குரல் நல்ல பாடம் எல்லா அம்சங்களும் நிறைந்த பாட்டு. 'ப்ரோவவம்மா' பாடலை இந்த வயதில் நிர்வகித்துப் பாடியது சிறப்பு" என்கிறார். |
|
|
ஒரு ருசிகர சம்பவம். க்ளீவ்லண்ட் தியாகராஜ உற்சவத்தின்போது பயிற்சி செய்துகொண்டிருந்த மிருங்க வித்வான்கள் திரு. ஈஸ்வரன் மணி மற்றும் திரு. திருவாரூர் வைத்தியநாதன் ஆகியோர் க்ளீவ்லண்டில் பிரசித்திபெற்ற, சிறுவர்கள் பங்குபெறும் Sustainng Sampradhaya நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த பெண்களில் ஒருவரை வந்து பாடுங்கள் என்று அழைக்க, ஆர்வமாய் வந்த நிஷாவைப் பாடச்சொல்ல, அவர் பாடும் பாவத்தையும் அழகையும் கண்ட அங்கிருந்த க்ளீவ்லண்டு சுந்தரம் நிஷாவை மேலும் பாடச்சொல்லிக் கேட்டு அங்கே சின்னதாய் ஒரு கச்சேரியே நடந்ததாம். அங்கேதான் துவங்கியது நிஷாவின் இசைப்பயணம். அந்தப் பயணத்தில் படிக்கல்லாய் இருந்தவர்கள் வீணை விதூஷி திருமதி. ஜெயலஷ்மி சேகர் மற்றும் பிரபல வித்வான் திரு. நெய்வேலி சந்தான கோபாலன்.
நிஷேவிதா கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கும் 19 வயதுப் பெண். குரு பிரபல இசைக்கலைஞர் நாதபூஷணம் டாக்டர். விஜயலஷ்மி சுப்ரமணியம். கர்நாடக இசையோடு மேற்கத்திய சாஸ்திரிய சங்கீதமும் கற்கிறார். பியானோ, செல்லோ போன்ற கருவிகளில் இசைக்கும் திறன்கொண்ட நிஷா தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் தவிரச் சரளமாக ஃப்ரெஞ்சு பேசுவார். பிரபல இசையமைப்பாளர் நவீன் சந்தர் இசையில் இவர் வழங்கிய சிறிய பின்னணி இசைப்பகுதி ஒன்று 'வில் அம்பு' படத்தில் இடம்பெற்றிருக்கிறது. நிஷேவிதாவின் பெற்றோர் ரமேஷ் சுப்ரணியம், சுஜாதா ரமேஷ் இருவரும் இவருக்குச் சிறந்த ஊக்கம் தந்து வருகிறார்கள். வரும் நாட்களில் நிஷாவின் குரல்வளம் சென்னை ரசிகர்களை மகிழ்விக்கப்போவது நிச்சயம்.
ஆனந்த் ராகவ், பெங்களூரு |
|
|
|
|
|
|
|