Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | பொது
Tamil Unicode / English Search
நேர்காணல்
எழுத்தாளர் ராஜேஷ்குமார்
- அரவிந்த்|அக்டோபர் 2020||(1 Comment)
Share:
51 ஆண்டுகளுக்கு முன் 'உன்னை விட மாட்டேன்' என்று பேனாவைப் பிடித்தார் ராஜேஷ்குமார். அதுமுதல் எழுத்து அவரை விடாமல் இறுகப் பற்றிக்கொண்டுவிட்டது. இன்றளவும் தமிழின் முன்னணி எழுத்தாளராகக் கதை, கட்டுரை, நாவல், தொடர்கதை என்று அடித்து விளாசிக் கொண்டிருக்கிறார். 1500க்கும் மேற்பட்ட நாவல்கள், 2000க்கும் மேற்பட்ட சிறுகதைகள் என்று ஸ்கோர் தொடர்கிறது. தனது எழுத்துச் சாதனைக்காகத் தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகளும் பெற்றவர். இவர் எழுதாத இதழ்களே இல்லை. தனது தொடர்கதைகளால் பல பத்திரிகைகளின் விற்பனை அதிகரிக்கக் காரணமாக இருந்தவர். புதிதாக ஆரம்பிக்கும் ஒவ்வொரு தமிழ் இதழும் ராஜேஷ்குமாரிடம் கதை கேட்டு வாங்கிப் பிரசுரிப்பது வழக்கம். க்ரைம் கதைகளை ஸ்டெம் செல், உடலுறுப்பு தானம், அணுவியல், க்ரோமோசோம் என்றெல்லாம் புதிய பல விஞ்ஞான விஷயங்களை இணைத்து எழுதுபவர். வாருங்கள், அவரோடு பேசலாம்...

★★★★★


கே: எழுதவேண்டும் என்ற உந்துதல் எப்போது ஏற்பட்டது?
ப: அது 1968ம் ஆண்டு. கோவை அரசுக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் தமிழ்ப் பேராசிரியர் கல்லூரி ஆண்டு மலருக்கு ஒரு கதை எழுதிக் கொடுக்கும்படி வகுப்பு மாணவர்களைக் கேட்டுக்கொண்டார். சக மாணவர் ஒருவர், "சார், இவன் நல்லாக் கதை எழுதுவான்" என்று என்னை மாட்டிவிட்டார். ஒரு கதையை எழுதி ஆசிரியரிடம் கொண்டுபோய்க் கொடுத்தேன். அதைப் படித்துவிட்டு ஆசிரியர், "மிக அருமை" என்று சொன்னார். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. அந்த நேரத்தில் கோவை மாலைமுரசில், 'முரசு மலர்' என்ற தலைப்பில் வாராவரம் ஓர் அறிமுக எழுத்தாளரின் சிறுகதையை வெளியிட்டு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அதில் வெளிவரும் கதைக்கு 10 ரூபாய் பரிசு என்ற அறிவிப்பும் இருந்தது. அப்போது 10 ரூபாய் மிகப்பெரிய தொகை. அதற்கு ஆசைப்பட்டுக் கதை எழுத ஆரம்பித்தேன். எனக்கு நிலையான வேலை கிடைக்கும்வரை நிறையச் சிறுகதைகளை எழுதினேன்.

கே: முதல் படைப்பு வெளியான அந்தத் தருணம் எப்படி இருந்தது?
ப: மிகவும் பெருமையாக இருந்தது. 1969ம் வருடம், கோவை மாலை முரசில் 'உன்னை விட மாட்டேன்' என்ற தலைப்பில் அது வெளியானது. என் அம்மா பத்து மாலைமுரசு பிரதிகளை வாங்கி, தனக்குத் தெரிந்தவர்கள் எல்லாரிடமும் கொடுத்து, "என் மகன் எழுதிய கதை. படித்துப் பாருங்கள்" என்று பெருமையுடன் சொன்னது இன்னமும் எனக்கு நினைவில் இருக்கிறது. இன்றைக்கு எண்ணிப் பார்த்தால் 51 வருடங்கள் போனதே தெரியவில்லை. அந்த முதல் கதை வந்த அந்தப் பெருமைமிகு தருணம், அதுவும் என் அம்மா, என் முதல் வாசகியாக மாறி, பத்திரிகையை எல்லாருக்கும் வாங்கிக் கொடுத்த அந்தத் தருணம் என் வாழ்வில் மறக்கமுடியாத ஒன்று.

வாழ்நாள் சாதனையாளர் விருது



கே: சமூகம் சார்ந்த பல சிறுகதைகளை ஆரம்பத்தில் எழுதி வந்த நீங்கள், 'துப்பறியும் நாவல்கள்தான் என் களம்' என்று தேர்ந்தெடுக்கக் காரணம்?
ப: கண்டிப்பாக. நான் எழுத வந்த காலத்தில் நிறையப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இருந்தார்கள். அவர்கள் பல்வேறு வகை நாவல், சிறுகதைகளை எழுதி வந்தார்கள். சமூகக் கதைகள், சரித்திரக் கதைகள், ஹாஸ்யக் கதைகள் என்று எல்லாவற்றிலுமே சிறந்து விளங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், க்ரைம் கதைகளை எழுத மிகச்சிலரே இருந்தார்கள். அதில் தமிழ்வாணன் முக்கியமானவர். அவர் மறைவுக்குப் பின் சுஜாதா க்ரைம் சார்ந்த கதைகளை எழுதி வந்தார். வேறு பலர் எழுதிய போதிலும் அவர்களைவிடச் சிறப்பாக, விஞ்ஞானக் கருக்களை அடிப்படையாக வைத்து க்ரைம் கதைகளை எழுதினால்தான் நம் பெயர் நன்கு கவனிக்கப்படும் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் நான் க்ரைம் கதைக் களத்தைத் தேர்ந்தெடுத்தேன். 'க்ரைம்' என்றாலே கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை, அவை தொடர்பான விசாரணை என்று இல்லாமல், விஞ்ஞான விஷயங்கள் பலவற்றில் க்ரைம் இருப்பதை உணர்ந்தேன். அவற்றை என் கதைகளில் கருவாக வைத்து எழுத ஆரம்பித்தேன்.

ஒரு கதையைப் படித்தால், அதிலிருக்கும் விஞ்ஞான விஷயம் வெளியே வருகிறது, அது தொடர்பான அறிவும் வாசகனுக்குக் கிடைக்கிறது. என்பதைப் புரிந்துகொண்டு, விஞ்ஞானம் கலந்த க்ரைம் கதைகளைத் தொடர்ந்து எழுதினேன்.

நான்கு தூண்கள்
சாவி என்னுடன் மிக நெருக்கமாகப் பழகியவர். எல்லா விஷயங்களையுமே என்னிடம் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வார். உரிமையோடு தொடர்கதையை ஆரம்பிக்கச் சொல்லுவார். "இவ்வளவு தொகைதான் கொடுக்கமுடியும் ராஜேஷ்குமார். நீங்கள் எவ்வளவு வாரம் வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள்" என்று சொல்லி, எனக்கு 'சாவி' பத்திரிகையில் வாராவாரம் 6 பக்கங்களை ஒதுக்கினார். 'சாவி' இல்லையென்றால் இந்த 'ராஜேஷ்குமார்' என்ற எழுத்தாளன் கண்டிப்பாக உருவாகியிருக்க மாட்டான். எஸ்.ஏ.பி. குமுதம் ஆறு லட்சம் பிரதி விற்பனையில் இருந்தபோது, அறிமுக எழுத்தாளரான என்னை குமுதத்தில் தொடர்கதை எழுதச் சொன்னார். நான் சற்றுத் தயங்கினேன். "உங்களால் எழுதமுடியும் ராஜேஷ்குமார். குமுதத்தில் ஆறு லட்சம் பிரதிகளில் ஒரு பிரதி உயர்ந்தால்கூட எனக்குச் சந்தோஷம். நீங்கள் எழுதுங்கள்" என்று சொன்னார்.

மணியன் மிகச்சிறந்த பண்பாளர். ஈகோ பார்க்காதவர். கோவை வந்ததும் நேரடியாக என் வீடு தேடி வந்து என்னைச் சந்தித்து, "அடுத்த மாத மணியன் இதழுக்கு ஒரு நாவல் வேண்டும் ராஜேஷ்குமார்" என்று உரிமையோடு கேட்ட அன்பு உள்ளத்தை மறக்கமுடியாது. விகடன் பாலசுப்பிரமணியன் என்னைச் சென்னைக்கு வரவழைத்து, "விகடனில் நீங்கள் ஒரு அருமையான தொடர் எழுத வேண்டும். ஏதாவது கதை இருக்கிறதா?" என்று கேட்டார். நான் ஒரு கதையைச் சொன்னேன். அவர், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டே, கண்மூடி கதையைக் கேட்டார். கதை சொல்லி முடித்ததும், 'பேஷ்.. பேஷ். நல்லா இருக்கு. உடனே ஒரு தலைப்புச் சொல்லுங்கள்" என்று கேட்டு வாங்கி, அடுத்த வாரமே, தமிழகமெங்கும் தொடர்கதையின் தலைப்பை, போஸ்டர் அடித்து விளம்பரம் செய்து என்னைப் பெருமைப்படுத்தினார்.

பத்திரிகை உலகின் நான்கு தூண்கள் இவர்கள். எனது எழுத்துலக வளர்ச்சிக்கு உரம் போட்டவர்கள். இந்த நான்கு பேரையும் எப்போதும் நான் நினைவு கூர்கிறேன்.
ராஜேஷ்குமார்


கே: ஆரம்ப காலகட்டத்தில் உங்களுக்குக் குடும்பத்தினரின் ஆதரவு இருந்ததா? குறிப்பாக, உங்கள் மனைவியின் ஆதரவு, புரிதல் எப்படி இருந்தது?
ப: நான் எழுத வந்த காலகட்டத்தில் என் அம்மா எனது எழுத்தின் முதல் வாசகியாக இருந்தார். என் அப்பா, "உனக்கு எது பிடிக்கிறதோ அதைச் செய்" என்றார். நான் பி.எஸ்ஸி, பி.எட். படித்து ஒரு பள்ளி ஆசிரியராக இருந்தாலும், நான் எனது எழுத்துப் பணியை விடாமல், தொடர்ந்து செய்தேன். குடும்பத்தினர் ஊக்குவித்தனர். எனக்குத் திருமணமானதும் எனக்கு வாய்த்த மனைவி தனலட்சுமியும் எனது முதல் வாசகியாக மாறி எனது எழுத்துப்பணிக்கு உறுதுணையாக இருந்தார்.

ஒரு காலகட்டத்தில் நான் ஆசிரியப் பணியை விட்டுவிட்டு முழு நேர எழுத்தாளராக மாறியபோது ஒரு சின்ன பயம் இருந்தது. ஆனால், எனது மனைவி, என்னை ஊக்குவித்து, என் கதைகளை நான் எழுதியதும் படித்துப் பார்த்து, "இப்படி எழுதினால்தான் பெண்களுக்குப் பிடிக்கும்; இப்படி எழுதினால் பெண்களுக்குப் பிடிக்காது" என்றெல்லாம் 'ஹோம் சென்சார்' செய்து செய்து, மெருகேற்றிச் சிறப்பாக வெளிவர வழிகாட்டினார். எனது கதைகளில் ஆபாசம் இல்லாமல் இருக்கக் காரணம் என் மனைவியின் வழிகாட்டல்தான்.

நடிகர் ரஜினிகாந்துடன் ராஜேஷ்குமார்



கே: எழுத்தே வாழ்க்கை என்று வாழ்கின்றவர் நீங்கள். ஆனால், அது மிக மிகக் கடினமானதும் சவாலானதும் கூட. சோர்வுற்ற தருணங்களை எப்படி எதிர்கொண்டீர்கள்?
ப: சோர்வுற்ற போதெல்லாம் நான் நினைத்துக் கொண்டது, "நம்மால் முடியும்; எதுவும் முடியும்" என்பதுதான். பிரபல எழுத்தாளர்கள் எல்லாம் எப்படிப் புகழ்பெற்றார்கள் என்றெல்லாம் எண்ணிப் பார்ப்பேன். எந்தத் துறையாக இருந்தாலும், திறமையாக, நேர்மையாக, கடுமையாக உழைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று மனப்பூவமாக நம்பினேன். அதேபோல் எனது எழுத்துக்கள் நீர்த்துப் போகாமல் இருக்க, காலத்துக்கேற்ப என்னைப் புதுப்பித்துக் கொண்டே வந்தேன். சோர்வு என்னை அண்டாமல் பார்த்துக் கொண்டேன். அதற்கு திரு சாவி, திரு. எஸ்.ஏ.பி., திரு.மணியன், விகடன் ஆசிரியர் திரு. பாலன் மற்றும் பல பத்திரிகை ஆசிரியர்கள் என்னை ஊக்குவித்தார்கள்.

கே: 1500க்கும் மேற்பட்ட நாவல்கள். ஆனால், ஒவ்வொன்றிலும் வித்தியாசமான கரு. மாறுபட்ட கதைக்களம். எப்படிச் சாத்தியமானது?
ப: இந்தக் கேள்வியைப் பலரும் கேட்டிருக்கிறார்கள். 'உங்களது ஒவ்வொரு நாவலும் ஒன்றிற்கொன்று வித்தியாசமாக இருக்கிறதே, அது எப்படி?' என்று கேட்கிறார்கள். நான் புதிதாகக் கதைகளைத் தேடிச் செல்வதில்லை. பத்திரிகைகளில் ஏராளமான செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. நாம் பேருந்திலோ, ரயில் வண்டியிலோ போகும்போது சக பயணிகளின் பேச்சைக் கவனித்தாலே நிறையக் கதைகள் கிடைக்கும். பக்கத்து வீட்டுச் சம்பவங்களை, நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கவனித்தால் கதைகள் கிடைக்கும். தேடலும் மெனக்கெடலும் இருந்தால் 1500 என்ன, அதற்கும் மேற்பட்டு ஆயிரக்கணக்கில் ஒருவரால் எழுதமுடியும்.

கதைக்களன்கள் புதிதாக இருக்க வேண்டும் என்பதற்காக நிறையப் புத்தகங்களைப் படிப்பேன். கதைப் புத்தகங்கள் அல்ல, விஞ்ஞானம், தொழில்நுட்பம் சம்பந்தமான புத்தகங்களைப் படிப்பேன். அவற்றில் கரு கிடைக்கும். அதுபோலப் பிரபல மருத்துவர்கள், பொறியாளர்கள், கணினித் தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்றோரைச் சந்தித்து, அவர்களுடைய துறைகளிலே எது மாதிரியான குற்றங்கள் நிகழ்கின்றன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்வேன். அதைக் கருவாக வைத்து எழுதுவதால், ஒவ்வொரு கதையும் புதுப்புதுக் கோணத்தில் புதிதாகத் திகழ்கிறது.

சாண்டில்யன் கையால் பரிசு



கே: உங்கள் படைப்புகளில் மிகவும் பிடித்தமானது அல்லது சவாலானது என்று எதைச் சொல்வீர்கள்?
ப: மிகவும் பிடித்தமானது என்று சொல்ல வேண்டுமென்றால், நான் எழுதி 'தேவி' வார இதழில் வெளிவந்த சமூகக் கதையான 'முதல் பகல்' என்பதைத்தான் சொல்லவேண்டும்.

கதை இதுதான்.

ஆறு வயதில் பார்வை பறிபோன ஒரு பெண்ணுக்கு, எந்த நேரத்திலும் பார்வை திரும்பலாம் என்று ஒரு மருத்துவர் கண்களை ஆராய்ந்து பார்த்துவிட்டுச் சொல்கிறார். அவளுக்குத் திருமணம் ஆகும்போதோ, அவளுக்குப் பிரசவம் ஆகும்போதோ அல்லது ஏதோ ஒருவிதத்தில் கடுமையாக உணர்ச்சி வசப்படும்போதோ அவளது பார்வை நரம்புகள் உயிர் பெறலாம் என்று மருத்துவர் சொன்ன நம்பிக்கையில் அவள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு எப்போது பார்வை கிடைக்குமோ அன்றைக்குத்தான் அவளுக்கு 'முதல் பகல்' என்பதுதான் அந்தக் கதையின் கரு. இந்தக் கதையை எழுதுவது எனக்குச் சவாலாக இருந்தது. இது தேவி வார இதழில் வந்தபோது, லட்சக்கணக்கான பெண்கள் இதைப் படித்துவிட்டு, அதுவும் கடைசி அத்தியாயம் வந்தபோது கண்ணீரோடு அதனைப் படித்துவிட்டுப் பலரும் உணர்ச்சி பொங்கக் கடிதம் எழுதியிருந்தனர் என்று தேவி ஆசிரியர் என்னிடம் சொன்னபோது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. ஒரு எழுத்தாளனுக்கு இம்மாதிரியான வாசக ஊக்குவிப்புதான் நிறைய வேண்டும். அவைதான் அவனை மேலும் எழுதத் தூண்டும்.

விவேக் - ரூபலா
ராஜேஷ்குமார், கோவை ராமகிருஷ்ண வித்யாலயத்தில் பயின்றவர். சிறு வயதிலிருந்தே விவேகானந்தர்மீது ஈடுபாடு. தவிர, காவல்துறை தொடர்பான சந்தேகங்களுக்கு விடையளித்து, தகவல் தந்து உதவிய காவல்துறை நண்பர் விவேகானந்தனின் நினைவாகவும் தனது கதைகளில் வரும் துப்பறியும் அதிகாரிக்கு 'விவேக்' என்று பெயர் சூட்டினார்.

ராஜேஷ்குமார் ஒரு முறை மதுரை சென்றிருந்தபோது விடுதி ஒன்றில் வரவேற்பாளராக இருந்த 'ரூபலா' என்ற பெண்ணைச் சந்தித்தார் அவர் இவரது வாசகியும்கூட. விடுதியில் இடம் இல்லாதபோதும், இவருக்காகச் சிரமப்பட்டு அறை ஒன்றை ஒதுக்கிக் கொடுத்தார் ரூபலா. அப்போது, "என் பெயரை உங்கள் புதினத்தில் மறக்கமுடியாத பெயராகக் கொண்டுவர வேண்டும்" என்று வேண்டிக் கொண்டார். ராஜேஷ்குமார் விவேக்கின் மனைவியாக வரும் கதாபாத்திரத்திற்கு அந்தப் பெயரைச் சூட்டினார். அதன் பின் இன்றுவரை அந்தப் பெண்ணை ராஜேஷ்குமாரால் சந்திக்க முடியவில்லை என்பதுதான் ராஜேஷ்குமாரின் வருத்தம்.


கே: உங்கள் எழுத்துலகப் பயணத்தில் 'க்ரைம்' நாவலுக்கு மிக முக்கியப் பங்குண்டு அல்லவா?
ப: ஆம். என்னுடைய எழுத்துப் பயணத்தில் பலர் எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் என்று தம்பி அசோகன் அவர்களைத்தான் சொல்ல வேண்டும். 1985ல், எனக்காகவென்றே 'க்ரைம் நாவல்' என்ற மாத இதழைத் தொடங்கி, 35 ஆண்டுகளாக இன்று வரைக்கும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவர் எனக்கு ஒரு சகோதரராக மட்டுமல்லாமல், சிறந்த பத்திரிகை ஆசிரியராகவும் இருந்து வருகிறார். 300க்கும் மேற்பட்ட நாவல்களை அதில் எழுதியிருக்கிறேன்.

கே: உங்களது திரைப்பட, தொலைக்காட்சித் தொடர் அனுபவம் குறித்துச் சில வார்த்தைகள்…
ப: என் திரைப்பட அனுபவம் மிகவும் கசப்பானது. அதைப்பற்றி விரிவாகக் குமுதம் இதழில் '24 கேரட் துரோகம்' என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன். அதைப்பற்றிப் பேசிப் பலனில்லை. தொலைக்காட்சி அனுபவம் என்றால், என் நாவல்கள், கதைகள் பலவற்றை, 'கலைஞர் தொலைக்காட்சி' 'சின்னத்திரை சினிமா' என்ற தலைப்பில் 2013 முதல் 2018 வரை, ஐந்து வருடகாலம், இரண்டு மணி நேரம் கொண்ட ஒரு சினிமாவாக உருவாக்கி, எனக்குப் பெருமை சேர்த்தார்கள். அதுபோல, எனது கதா பாத்திரங்களான விவேக், விஷ்ணு, ரூபலா பங்கு கொள்ளும் 'விசாரணை' என்ற தொடரை வெளியிட்டார்கள். சன் தொலைக்காட்சியில் 'ஊமத்தம் பூக்கள்' என்று - ஆனந்த விகடனில் நான் எழுதிய கதை - தொடராக வெளியானது. விஜய் தொலைக்காட்சியில் 'நீ எங்கே என் அன்பே', 'இருட்டில் ஒரு வானம்பாடி', 'அஞ்சாதே அஞ்சு' போன்ற தொடர்கள் வெளிவந்தன. என்னுடைய பெரும்பாலான கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாக வெளியாகியிருக்கின்றன.

மகன்களுடன் ராஜேஷ்குமார்



கே: பல எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் 'ராயல்டி' பிரச்சனைகளை நீங்களும் எதிர்கொண்டிருக்கிறீர்களா?
ப: இல்லை. எனக்குரிய ராயல்டி தொகையைப் பதிப்பாளர்கள் சரியாகக் கொடுத்து விடுகிறார்கள். அவர்கள் சிறிய பதிப்பகமோ, பெரிய பதிப்பகமோ, இதுவரைக்கும் என்னிடம் பாரபட்சம் காட்டியதில்லை. யாரும் என்னை ஏமாற்றியதாகவும் நான் நினைக்கவில்லை. ஏனென்றால், எனக்குரிய ராயல்டி எவ்வளவென்பது எனக்குத் தெரியும். அது இப்போதும் எனக்கு முறையாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

கே: இளைஞர்களிடம் வாசிப்பார்வம் வெகுவாகக் குறைந்திருப்பதாகச் சொல்கிறார்களே?
ப: உண்மைதான். இன்றைக்குப் பத்திரிகை வாசிக்கும் வழக்கம் இளைஞர்களிடம் வெகுவாகக் குறைந்துவிட்டது. இது தற்காலிகம்தான். நீடிக்காது. ஏனென்றால் செல்ஃபோனில் வாசிப்பது கண்ணுக்குக் கெடுதல் என்பதைப் புரிந்துகொண்டு, சிறிது சிறிதாக, மேலை நாட்டினர் புத்தக வாசிப்பிற்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். நான் சிங்கப்பூர், மலேசியா, துபாய் சென்றிருந்தபோது, அங்கே ட்ரெயினில் பலரும் புத்தகங்களைப் படித்துக்கொண்டு வந்ததைப் பார்த்தேன். நான் ஆச்சரியப்பட்டு நண்பரிடம் கேட்டேன். அவர் சொன்னார், "ஐந்து வருடங்களுக்கு முன்பாக எல்லாரும் செல்ஃபோனை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். இப்போது, நிலைமை மாறிவிட்டது. செல்ஃபோனையே பார்த்துக்கொண்டிருப்பது கண்ணுக்குக் கெடுதல் என்பதைப் புரிந்துகொண்டு விட்டார்கள். மெல்ல மெல்ல அச்சுப் புத்தகம் வாசிக்கத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் சீக்கிரம் வரும். அதுவும் தமிழ்நாட்டில் கண்டிப்பாக வரும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஆக, வாசிப்பார்வம் சற்றே குறைந்திருந்தாலும் மீண்டும் நிலைமை மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

கே: இந்த கோவிட்-19 பிரச்சனையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதில் இதழியல் துறையும் ஒன்று. அதன் எதிர்காலம் எப்படி இருக்கும்?
ப: நன்றாகவே இருக்கும். இப்போது ஒரு தொய்வு ஏற்பட்டிருக்கிறது. இதுவுமே கடந்து போகும். இதற்கு முன்னாலும் பல சிக்கல்கள், தோன்றி எல்லாவற்றையும் புரட்டிப் போட்டதுண்டு. அவற்றிலிருந்து மீண்டிருக்கிறோம். இது தற்காலிகப் பாதிப்புத்தான். கண்டிப்பாக மீள்வோம். நின்றுபோன பத்திரிகைகள் மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.

மனைவி, மகன்கள், பேரன் பேத்திகளுடன்



கே: நீங்கள் ஆர்.கே. பப்ளிஷிங் எனப் புதிதாக ஆரம்பித்ததற்கான சூழல்கள் குறித்துச் சொல்லுங்கள்.
ப: இது நானே எதிர்பார்க்காத முடிவு. என் மகன் கார்த்திக்குமார், வங்கி ஒன்றில் மேலதிகாரியாகப் பணிபுரிந்தார். ஒருநாள் என்னிடம் வந்து, "அப்பா எனக்கு இந்த வங்கித்தொழில் பிடிக்கவில்லை. கை நிறையச் சம்பளம் கிடைக்கிறது. பதவி உயர்வு கிடைக்கிறது. ஆனால் மனநிம்மதி இல்லை. காலையில் ஆறு மணிக்கு எழுந்து ஓட வேண்டியிருக்கிறது. டென்ஷன் மிக மிக அதிகம். பணம் மட்டுமே வாழ்க்கையல்ல. நான் இந்த வேலையிலிருந்து விலகிக் கொள்ளப் போகிறேன்" என்று சொன்னார்.

"சரி, அடுத்து என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டேன். அதற்கு என் மகன், "அப்பா, நீங்கள் 1500 நாவல்கள் எழுதியிருக்கிறீர்கள். ஆனால், இவற்றில் பல எங்கே என்று உங்களுக்கே தெரியாது. பதிப்பாளர்கள் 1000, 2000 பிரதிகள் அச்சிட்டு விற்பார்கள். புத்தகங்கள் பின் கால வெள்ளத்தில் காணாமல் போய்விடும். நீங்கள் எழுதிய பல நாவல்கள் இப்போது கிடைப்பதில்லை. ஆகவே, நான் உங்கள் புத்தகங்களை அச்சிட்டு விற்க மட்டுமே ஒரு பதிப்பகம் ஆரம்பிக்க விரும்புகிறேன். 'ஆர்.கே. பப்ளிஷிங்' மூலம் அவற்றை சர்வதேசத் தரத்தில் அச்சிட்டு, அச்சுப் பிரதிகளாகவும், உலக அளவில் வாசிக்கும்படி டிஜிடல் வடிவிலும் கொண்டு சேர்க்க விரும்புகிறேன். அவை எப்போதும், எங்கும் கிடைக்கும்படிச் செய்ய விரும்புகிறேன். அவை உலகில் என்றும் நிலைத்திருக்க ஆசைப்படுகிறேன்" என்று சொன்னார். நானும் சம்மதித்தேன்.

அவர் அதை இன்றைக்கு வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் அந்தப் புத்தகங்களை வாங்கிப் படித்து எங்களை மேலும் பல நூல்களை வெளியிட உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.
கே: எழுத்தாளர் மற்றும் பதிப்பாளரின் அனுமதி இல்லாமல், அவர்களின் படைப்புகள் 'திருட்டு பி.டி.எஃப்' ஆகப் பகிரப்படுவது குறித்து உங்கள் கருத்தென்ன?
ப: அதைத் தடுக்க முடியாது. ஏனென்றால் பிரபல நடிகர்கள், திரைப்பட இயக்குநர்களின் திரைப்படங்களே இம்மாதிரி பைரஸியால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு இதுவரை தீர்வு காணமுடியவில்லை. எழுத்தாளர் என்ன செய்யமுடியும்? இது 'அறிவுத் திருட்டு'. திருட்டுகளிலேயே மிகப்பெரிய திருட்டு மற்றவர் அறிவை, உழைப்பைத் திருடுவதுதான். இது தவிர்க்கப்பட வேண்டும்.

கே: வணிக இலக்கியம், தீவிர இலக்கியம் என்ற பாகுபாடு பற்றி உங்கள் கருத்தென்ன?
ப: என்னைப் பொறுத்தவரைக்கும் இலக்கியம் ஒரே வகைதான். வாசகனுக்கு நாம் சொல்வது புரிந்தால் அதுதான் இலக்கியம். புரியாத நடையில் எழுதித் தன்னை மேதாவியாகக் காட்டிக் கொள்வது இலக்கியமல்ல. தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் ஒரு பாமரனுக்கு நான் சொல்லும் ஒரு விஞ்ஞானச் செய்தி புரிகிறது என்றால் அதுதான் இலக்கியம் என்று நான் சொல்வேன். பாமரரையும் படிக்கவைக்கும் எழுத்தாளனாக இருப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.



கே: உங்கள் வாரிசுகளுக்கும் எழுத்தார்வம் இருக்கிறதா?
ப: இருக்கிறது. என்னுடைய மகன்கள், பேரன் ஆகியோர் என் எழுத்துலக வாரிசாக அமைவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால், ஐந்து வருடங்களுக்கு முன்புவரை அப்படியொரு நம்பிக்கை இருந்திருக்கவில்லை. என்னுடைய மகன் கார்த்திக்குமார், ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதிய சிறுகதையை குமுதத்திற்கு அனுப்ப, அதை "ஒரு வாரிசு உருவாகிறது" என்னும் தலைப்பில் பிரசுரம் செய்தது. அந்தக் கதை மிகுந்த பாராட்டுதலைப் பெற்றது. அதன்பின் குங்குமம் ஆசிரியர் கே.என். சிவராமன், என் மகனிடம் கதை கேட்க, இவரும் எழுதி அனுப்ப, அதுவும் பிரசுரமானது. இதைத் தொடர்ந்து எனது இளைய மகன் ராம்பிரகாஷ், ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, 'காகித அப்பா' என்ற தலைப்பில் எழுதிய சிறுகதை ஒன்றும் 'குங்குமம்' இதழில் பிரசுரமானது.

இவர்களைத் தொடர்ந்து எனது பேரன் ஸ்ரீவத்சன் ஒரு கதையை ஆங்கிலத்தில் எழுதி அனுப்பியிருக்கிறான். அவனுக்கும் எழுத்தார்வம் இருக்கிறது. இனி வரும் காலகட்டங்களில், இந்தத் துறையில், இவர்கள் என்னைப்போல நிறைய எழுதுவார்களா என்பது சந்தேகம்தான்! ஏனென்றால் பத்திரிகைகளில் கதைகள் இடம்பெறுவதே மிக அரிதாகி விட்டது. ஒரு பக்கக் கதை, அரைப் பக்கக் கதைதான் வெளியாகிறது. நாங்கள் எழுத வந்த காலத்தில், ஒரு இதழுக்கு ஐந்து அல்லது ஆறு சிறுகதைகள் வரும். இன்றைக்கு அப்படியில்லை. அதனால், இவர்கள் தனிப்பட்ட முறையில் சிறுகதைகள் எழுதிப் புத்தகமாகக் கொண்டு வரலாம் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது.

கின்னஸ் எழுத்தாளர்
# 45 வருடங்களில் 904 நாவல்கள் எழுதி கின்னஸ் சாதனை படைத்த Kathleen Lindsay என்பவரைவிட அதிக நாவல்களை இவர் எழுதியிருப்பதாக, பிப்ரவரி, 2009 நியூயார்க் டைம்ஸ் இதழில் வியந்து குறிப்பிட்டிருக்கிறார் ஜெஃப் நிக்கல்சன்.
# பொது அறிவை வளர்க்கும் நோக்கில் இவர் எழுதியிருக்கும் 'விளக்கம் ப்ளீஸ் விவேக்', 'அர்த்தமுள்ள அரட்டை', 'சார் ஒரு சந்தேகம்' போன்ற நூல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.
# இவரது சில படைப்புகளை ஆங்கிலத்தில் பிளாஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
# தனது சுயசரிதையை 'என்னை நான் சந்தித்தேன்' என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார்.
# ராஜேஷ்குமாரின் ஃபேஸ்புக் பக்கம் வாசகர்களிடையே மிகப் பிரபலம்.
# ராஜேஷ்குமாரின் கதைகள் புஸ்தகா, அமேசான் கிண்டில், நாவல் ஜங்‌ஷன் போன்ற இணைய தளங்களிலும் வாசிக்கக் கிடைக்கின்றன.
கதைகளைக் கேட்க


கே: மறக்க முடியாத வாசகர் என்று யாரைச் சொல்வீர்கள், ஏன்?
ப: என்னால் மறக்க முடியாத வாசகர் என்றால் ஜெயகாந்தி அம்மாளைத்தான் சொல்ல வேண்டும். அவருக்கு வயது 85. அவருடைய மகன் நியூ யார்க்கில் வசிக்கிறார். அங்கு ஜெயகாந்தி அம்மாள் இருந்தபோது மகன், "அம்மா, உன் ஆசை என்ன?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த அம்மாள், "நான் எழுத்தாளர் ராஜேஷ்குமாரைச் சந்தித்துப் பேசவேண்டும்" என்று சொல்ல, தாயின் அந்த ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, அவர், ஜெயகாந்தி அம்மாளை அழைத்துக் கொண்டு, நியூ யார்க்கில் இருந்து 25 மணி நேரம் பயணம் செய்து, கோவையில் என் வீட்டுக்கு வந்து என்னைச் சந்தித்தார்.

என்னைவிடப் பெரியவரான அந்த அம்மாள், 50 வருடங்களாக எனது நாவல்களைப் படித்து வருவதாகச் சொன்னார். எனக்குக் கடிகாரம் ஒன்றைப் பரிசாக அளித்து வாழ்த்தினார். என் எழுத்துலக வாழ்வில் இதை மறக்கவே முடியாது. 85 வயதான வாசகர் எனக்கு இருக்கிறார் என்பதை எனக்குக் கிடைத்த ஒரு பெரிய விருதாகவே நினைக்கிறேன்.



கே: இந்த 51 வருட எழுத்துலக வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்க்கும்போது எப்படி உணர்கிறீர்கள்?
ப: 'அது ஒரு பொற்காலம்' என்ற ஒற்றை வரியிலேயே அதைச் சொல்லிவிட முடியும். அவ்வளவுதான். அது மாதிரியான ஒரு பொற்காலம் இனிமேல் வருமா என்பது எனக்குத் தெரியாது. ஒரு பொற்காலத்தில் வாழ்ந்தோம் என்ற சந்தோஷம் எனக்கு எப்போதும் இருக்கும்.

அவரது நாவல்களைப் போலவே, ஜெட் வேகத்தில் பதில் வருகிறது ராஜேஷ்குமாரிடமிருந்து. "தலைமுறை, தலைமுறையாக என்னை வாசித்து வரும், கடிதங்கள் எழுதி உற்சாகப்படுத்தும் வாசகர்களும், ஊக்குவிக்கும் பத்திரிகையாளர்களும் தான் எனது எழுத்திற்கு எப்போதும் உற்சாக டானிக்" புன்னகையோடு சொல்கிறார் ராஜேஷ்குமார். நாமும் பிரமிப்பு அகலாமல் நன்றி கூறி விடைபெறுகிறோம்.

உரையாடல்: அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline