Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
2007-ல் ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கான சிறந்த வாய்ப்புகள் என்ன - பாகம் 4
- கதிரவன் எழில்மன்னன்|மே 2007|
Share:
Click Here Enlarge2005, 2006 ஆண்டுகளில் சில மிகப் பெரிய நிறுவன விற்பனைகளும் (acquisitions) முதற் பங்கு வெளியீடுகளும் (Initial Public Offering-IPO) நடை பெற்றதாலும், ஆரம்ப முதலீட்டார் (venture capitalists) பல வருட வறட்சிக்குப் பிறகு மீண்டும் தங்கள் பணப்பையைத் திறக்க ஆரம்பித்திருக் கிறார்கள். எனவே புது நிறுவனங்கள் ஆரம்பிப்பதற்கான ஆர்வம் பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது.

சமீப காலத்தில், எந்தத் துறைகளில் புது நிறுவனங்களுக்கு தற்போது வாய்ப்புள்ளது என்றும், ஆரம்ப முதலீட்டாளர் எம்மாதிரி நிறுவனங்களில் முதலிட ஆர்வமாக இருக் கிறார்கள் என்பது பற்றியும் என்னிடம் பலர் விசாரித்துள்ளார்கள். அவர்கள் எழுப்பிய பல கேள்விகளும் அவற்றைப் பற்றிய என் கருத்துக்களும் இதோ இங்கே.

இதன் முந்தைய பகுதிகளில், பெரும் நிறுவன வலைச் சாதனம் (enterprise networking) மற்றும் பெரும் நிறுவன மென்பொருள் துறைகளில் (enterprise software) மிகக் குறுகிய வாய்ப்புக்களே உள்ளன. ஆனால் சேவை மென்பொருள் (Software as a Service-SaaS), தகவல் மைய மெய்நிகராக்கம் (data center virtualization), நகர்வு தொலைத் தகவல் தொடர்புக்கான (mobile telecom and datacom) தொழில் நுட்பங்கள் மற்றும் நுகர்வோர் வீட்டு வலை மற்றும் கேளிக்கை (consumer and home networking and entertainment) தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் வாய்ப்புக்கள் இருப்பதாகக் கண்டோம். அதையடுத்து, இரண்டாம் இணையத்தைப் (Web2.0) பற்றி விவரித்தோம். விளம்பரத் தாலேயே ஆதரிக்கப்பட்ட வலைத்தளங்கள், பயன்பாடுகளும் (applications), AJAX பயனர் இடைமுகம் (user interface), சமூக வலை இயக்கம் (social networking), ஒலி மற்றும் ஒளித் தகவல்கள் (audio/video content) பயனர்களின் கருத்துக்களைக் கலந்து அளித்தல், விக்கி மற்றும் ப்ளாக்ஸ் (wiki and blogs), இருக்கமாக உடன் பின்னிய வாணிகம் போன்ற பல அம்சங்களைச் சேர்த்து இரண்டாம் இணையம் என்று அழைப்பதாகக் கண்டோம்.

இப்போது இரண்டாம் இணையத்தில் 2007-ஆம் ஆண்டில் நிறுவனங்களை ஆரம்பித்து முதலீடு பெறும் வாய்ப்புக்களையும் அபாயங் களையும் பற்றி இப்பகுதியில் காண்போம்.

இரண்டாம் இணையம் (web2.0) பற்றி விவரித்தீர்கள்? பெரும் பரபரப்புள்ளதே? அத்துறையில் பெரும் வாய்ப்புக்கள் உள்ளன போலிருக்கிறதே. நான் உடனே ஓர் இரண்டாம் இணைய நிறுவனத்தை ஆரம்பிக்கலாமா?

இரண்டாம் இணையத் துறை பெரும் பரபரப்பு வாய்ந்தது என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. அதில் சில நிறுவனங்கள் பெரும் வெற்றி கண்டிரு கின்றன. வேறு பல நிறுவனங்கள் நடுத்தர மதிப்பீட்டில் வாங்கப்பட்டு அந்த அளவு வெற்றியும் கண்டிருக்கின்றன. அதனால் வெகு பலர் வெவ்வேறு கோணங்களோடு குதித்து கணக்கற்ற நிறுவனங்களை ஏற்கனவே ஆரம்பித்துள்ளார்கள்; நிறுவன முதலீட்டாளரும் ஆவேசத்தோடு இரண்டாம் இணைய நிறுவனம் என்றவுடனேயே போட்டி போட்டுக் கொண்டு மூலதனம் தர முன்வர ஆரம்பித்துள்ளார்கள். அதனால் இத் துறையில் ஆரம்ப நிலை மதிப்பீடுகளும் வானளாவ எம்பியுள்ளன! அதனால் இரண்டாம் இணைய நிறுவனத்தை ஆரம்பிக்க உங்களுக்குப் பேரார்வம் எழுந்திருப்பதில் ஆச்சர்யமே இல்லை; அதில் தவறுமில்லை. ஆனால்... ஆம் மீண்டும் அதே கேள்விக் குறி வார்த்தைதான்!

ஆனால்... நான் ஓர் எச்சரிக்கை தரக் கடமைப் பட்டுள்ளேன். முதலாம் இணையத் தின் பெருங்கொப்புளம் அளவுக்கு அதிகமாக வில்லையானாலும், விளம்பரம் சார்ந்த மற்றும் விலையுள்ள சேவைகளின் மூலம் உண்மை யான வருமான ரீதியான நிதி மாதிரிகள் (financial models) இருக்கின்றன என்றாலும், ஓரளவுக்கு எச்சரிக்கையுடன் நினைத்துப் பார்ப்பது நல்லது. ஏனெனில் கூகிள், யூ-ட்யூப் போன்ற சில பெரு வெற்றிகளினால் ஏற்பட்ட பரபரப்பால் ஒரு பெரிய படையே திரண்டு இத்துறையில் குதித்துள்ளது! அதனால் ஒரு சிறு கொப்புளம் முகிழ்த்துள்ளது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டுள்ள பல நூற்றுக் கணக்கான நிறுவனங்களிலேயே நூற்றுக்கு ஐந்துதான் நடுத்தர அல்லது பெரும் வெற்றி பெறக்கூடும். மற்றவை போட்ட மூலதனத்தைத் திரும்பித் தந்தாலே நிம்மதி என்ற நிலைதான் வரக்கூடும்.

ஏனெனில், இத்தகைய நிறுவனங்களில் பெரும்பாலானவற்றின் நிதி மாதிரி நிரூபணமற்ற பரிசோதனைதான். சில பெரும் வெற்றி பெரும்; சில ஓரளவு வெற்றி பெரும்; பெரும்பாலானவைப் படுத்து விடும். மேலும் இரண்டாம் இணையத்தின் ஒரு திறந்த ரகசியம் என்னவென்றால், ஒவ்வொரு துறைப்பிரிவு அல்லது படிவத்திலும் (segment or model) ஓரிரு நிறுவனங்கள் மட்டுமே பயனர்களின் மனங்களில் ஆழமாகப் படிந்து (mindshare) பெரும் வெற்றி காண்கின்றன. மற்றவை பல்லிளித்துப் படுத்து விடுகின்றன. உதாரணமாக வீடியோத் துறையில் யூ-ட்யூப் மட்டுமே பெரும் வெற்றி பெற்றுள்ளது. மீதி வீடியோ வினியோக நிறுவனங்கள் தங்கள் படிவங்களை எந்த மாதிரி மாற்ற வேண்டும் என்று தத்தளிக்கின்றன. சமூக வலையில் கூட அதை ஆரம்பித்து வைத்த ·ப்ரெண்ட்ஸ்டர் நிறுவனமே தடுமாறிக் கொண்டிருக்கிறது. மை ஸ்பேஸ், ·பேஸ் புக் என்ற இரு நிறுவனங்களே வெற்றி கண்டுள்ளன.

வேறு நிறுவனங்கள் வெற்றி காணவே முடியாது என்று நான் கூற முன்வரவில்லை. பல நிறுவனங்கள் வெற்றி பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், ஆரம்பிக்கப் படும் ஒரே மாதிரியான பலப்பல நிறுவனங்களில் எது வெற்றி பெற முடியும் என்று முன்கூட்டிக் கூறுவது மிகக் கடினமாக உள்ளது; மிகக் குறைவான சதவிகிதமே வெற்றி பெறுகிறது; அம்மாதிரி வெற்றி பெற்ற பிறகே எதனால் வெற்றி கிடைத்தது என்று அலசப் படிகிறது. அதனால் திறந்தக் கண்களோடும், வெற்றி வாய்ப்பைப் பற்றிய சரியான எதிர்பார்ப்புடன் ஆரம்பிக்க வேண்டும் என்றுதான் கூறுகிறேன். மூலதனமிடுபவர்களே இத்தகைய எதிர் பார்ப்புடன், பல நிறுவனங்களில் முதலிட்டு, அவற்றில் பெரும்பாலானவை நிதியைத் திருப்பாவிட்டாலும், சில பெரும் வெற்றிகளும் சில நடு வெற்றிகளும் கிடைத்தாலே, மொத்தத்தில் முதலுக்கு நல்ல லாபம் கிடைத்து விடும் என்ற எண்ணத்துடன் செயல் பட ஆரம்பித்துள்ளனர்!

ஆரம்பிக்கப் படும் ஒவ்வொரு இரண்டாம் இணைய நிறுவனமும் வெற்றி பெற ஒரே சூத்திரந்தான்: வைரல் வளர்ச்சி (viral growth), அதாவது சேரும் ஒவ்வொரு பயனரும், தங்களுக்குக் தெரிந்த மற்றவர்களை இணைப்பதற்கு விரும்புவார்கள். அதனால் அவர்களின் வாய்வழி சிபாரிசினாலேயே பயனர் தொகை படுவேகமாக வளர்ந்து விடும் என்ற எதிர்பார்ப்பு!
ஆனால் அது எல்லா நிறுவனங்களுக்கும் கிடைத்து விடுவதில்லை. இரண்டாம் இணைய நிறுவனங்களை ஆரம்பிப்பவர்கள் தங்கள் நிறுவனத்தின் பயன்பாட்டு சேவையின் பயனைப் பற்றி ஒரு விதமாக நினைப்பார்கள். ஆனால் அந்தப் சேவையை முதன் முதலில் பயன் படுத்துபவர்கள் என்ன நினைக்கிறார்க்ள், அதன் பலனை எவ்வாறு மதிப்பிடுகிறார்கள் என்பதைப் பொறுத்துத் தான் வெற்றியும் தோல்வியும் நிர்ணயிக்கப் படும். அதனால், சேவைக்குச் சரியான பயனர்களை, சரியான பலனுடன் பிடித்தால் தான் அவர்கள் மற்றவர்களுக்கு சேவையை பரிந்துரைத்து (recommend) அவர்களையும் அச்சேவை வலையில் சிக்க வைப்பார்கள்; எதிர்பார்த்த படுவேக வைரல் வளர்ச்சியும் உருவாகும்.

சில நிறுவனங்கள் பயனர்களின் வாய்வழி பரிந்துரையாலேயே வளர்கின்றன. அதற்கு மைஸ்பேஸையும், க்ரெய்க்ஸ் லிஸ்டையும் உதாரணங்களாகக் குறிப்பிடலாம். ஆனால் வேறு சில நிறுவனங்களுக்கு சேவைப் பலன் இருந்தால் மட்டும் போதாது. பயனர்களின் கவனத்தை ஈர்க்க, அவர்களிடம் சென்று சேர்க்க வேண்டிய ஒரு வினியோக வழியும் (distribution channel) வேண்டியுள்ளது. உதாரணமாக யூ-ட்யூபைக் குறிப்பிடலாம். பலப் பல வீடியோப் பகிர்தல் (video sharing) தளங்கள் இருந்தாலும் யூ-ட்யூப் வெடி வளர்ச்சியுடன் வெற்றி பெற்றதற்குக் காரணம் அவர்கள் முதலிலிருந்தே மைஸ்பேஸ¤டன் வினியோக உடன்பாடு பெற்றது என்று கூறலாம். எனவே, அத்தகைய, ஏற்கனவே பெரும் பயனர் தொகையுள்ள மற்ற சேவை களுடன் உடன்பாடு வைத்துக் கொள்வது முக்கியமாகிறது.

ஆனால், வேண்டிய அளவு பெரும் வளர்ச்சி எல்லா இரண்டாம் இணைய நிறுவனங் களுக்கும் கிட்டிவிடுவதில்லை. முதற் பயனர்களுக்கு பிடித்த சேவையானாலும், வினியோக உடன்பாடுகள் இருந்தாலும் கூட பெரும்பாலான நிறுவனங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் முடங்கி விடுகின்றன. சமூக வலைத்துறையில் மைஸ்பேஸ் மற்றும் ·பேஸ்புக் நிறுவனங்கள் வெற்றி பெற்ற அளவு ·ப்ரெண்ட்ஸ்டர் வளராமல் தேங்கிவிட்டதைக் குறிப்பிடலாம். அது மட்டுமல்ல!

பெரும் சக்திவாய்ந்த கூகிளின் சேவையான ஆர்க்கட் (Orkut) என்னும் சமூக வலைத் தளம் ப்ரேஸிலில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது, உலகில் வேறு எங்கும் அதன் சத்தமே இல்லை!

இரண்டாம் இணையத்தில் வெற்றி பெற உங்கள் நிறுவனத்தின் சேவைக்கு சத்தும் வேண்டும், சக்தியும் வேண்டும், அது இரண்டு மட்டுமல்லாமல் பெரும் அதிர்ஷ்டமும் வேண்டும். மூன்றும் சேர்ந்தால்தான் பெரும் வெற்றி கிடைக்கிறது. அதனால், ஆரம்பிக்கப் பட்டுள்ள நூற்றுக் கணக்கான, (ஏன் ஆயிரக்கணக்கானவை இருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன்) இரண்டாம் இணைய நிறுவனங்களில் சிலவே வெற்றி பெரும், பெரும்பாலானவை படுத்துவிடும் என்பதில் ஐயமில்லை. இந்த உண்மையை நன்கு உணர்ந்து கொண்டு நீங்கள் அக்களத்தில் குதிப்பது நல்லது.

இரண்டாம் இணைய நிறுவனம் ஒன்றுக் கான பிரமாதமான யோசனை உங்களுக்கு இருக்கிறது, வெற்றி பெற பெரும் வாய்ப் புள்ளது என்று நீங்கள் பலமாகக் கருதினால், ஆரம்பியுங்கள்! இரண்டாம் இணைய நிறுவனங்களுக்கு ஆரம்ப மூலதனம் நிறையத் தேவையில்லை - (ஓரிரு சேவைப் பொறி களும், திறப்பு மென்பொருளும் போதும் (few servers and free open source software) என்பதாலும், பயனர்கள் திரண்டு வருகிறார்களா எனும் வெற்றி வாய்ப்பைக் கூடிய சீக்கிரமே கணித்து விடலாம் என்பதாலும் முயற்சி செய்து பார்த்து விடலாம்.

அவ்வாறு நீங்கள் முயன்றால், அதற்கு என் வாழ்த்துக்கள்! வெற்றிக்கு மேலும் சில பரிந்துரைகள்: உங்கள் யோசனையை விரைவில் சில பயனர்களுடன் சோதனை செய்து விடுங்கள்; அவர்களின் விமர்சனத்தை உங்களுக்கே உண்மையாக ஆழ்ந்து அலசுங்கள், உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். உங்கள் கருத்துக்கு ஆமாம் போடும் கருத்துக்களை மட்டும் பொறுக்கி எடுத்துக் கொண்டு, மாறாகக் கூறப்படும் விமர்சனங்களைப் புறக்கணித்து விடாதீர்கள். அதுவே தோல்விக்கு முதல் அறிகுறி. மாற்று விமர்சனங்களில் உள்ள உண்மைகளை உணர்ந்து உங்கள் யோசனைகளை மெருகேற்றி வெற்றியடையுங்கள். மேலும், உங்கள் சேவைக்கு எப்படி பயனர்களைச் சேர்க்க முடியும் என்ற வினியோக முறைகள், எந்த நிறுவனங்களோடு உறவு வைத்துக் கொள்ள வேண்டும், போட்டியாளர்களாக இருக்கக் கூடியவர்களையும் (உதாரணமாக, கூகிள், மைக்ரோஸா·ப்ட், யாஹ¥, மைஸ்பேஸ்) துணைவர்களாக எப்படி மாற்றுவது எப்படி என்பதை எல்லாம் யோசித்து செயல்படுங்கள். அப்படி செயலாற்றினால் உங்கள் வெற்றி வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கக் கூடும்.

அடுத்து, ஒரு முக்கிய கருத்து: இரண்டாம் இணையத்துறையில், அதைச் சார்ந்த ஒரு பயன்பாடு அல்லது தளத்தை (application or site) வைத்துத்தான் வெற்றி பெறவேண்டும் என்பதில்லை. அத்தகையோருக்கு வேண்டிய அடிப்படைச் சாதனங்களையும் மென்பொருள் கருவிகளையும் (infrastructure and tools) உருவாக்கித் தரும் வேறு விதமான வாய்ப்புக்களும் உள்ளன. அத்தகைய வாய்ப்புக்கள் யூ-ட்யூப் அளவில் வானளாவிய தொகையை அள்ளித் தராவிட்டாலும், வெற்றி பெற வாய்ப்புண்டு. அதே சமயம், தோல்விக்கான அபாயமும் தளங்களின் அபாயத்தை விடக் குறைவு.

இதற்கு கலி·போர்னியாவின் தங்க வேட்டையை (goldrush) உதாரணமாகக் கூறலாம். தங்கம் கிடைக்கிறது என்று தெரிந்தவுடன் பல்லாயிரக் கணக்கானோர் கலி·போர்னியாவுக்கு வந்து குவிந்தனர். ஆனால் அவர்கள் எல்லோரும் பெருமளவில் தங்கம் கண்டெடுத்து பணக்காரர்களாகி விடவில்லை. ஒரு சிலரே வெற்றி கண்டனர். பெரும்பாலானோர் பசியுடன் அலைந்து வெறுங்கையோடு திரும்பியதுதான் மிச்சம். ஆனால் தங்கம் தேடுபவர்களுக்கு வேண்டிய மண்வெட்டிகள், தட்டுக்கள், உடைகள், கொட்டகைகள் போன்ற கருவிகளை விற்றவர்கள் பெரும் பணக்காரர்கள் ஆகவில்லையானாலும், சராசரி ரீதியில் பார்த்தால், தங்கம் தேடியவர்களை விட அதிக அளவு சம்பாதித்தார்கள் என்பதே உண்மை! இந்த உவமையை நினைத்துப் பார்த்து இரண்டாம் இணையத் தளங்களுக்குத் தேவையான அடிப்படை சாதனங்கள், மென்பொருட்கள், சேவைகள் என்ன என்பதை யோசிப்பதும் நல்லதுதானே!

அடுத்து, இந்த 2007-ஆம் ஆண்டு ஆரம்ப நிலை வாய்ப்புக்களைப் பற்றிய கட்டுரையின் இறுதிப் பகுதியாக, இன்னொரு பரபரப்பான துறையான சுத்த சக்தி தொழில்நுட்ப (clean energy tech) வாய்ப்புக்களைப் பற்றிக் காண்போம்.

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline