Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
அஞ்சலி
தமிழ்நூல் கடல் தி.வே. கோபாலய்யர்
விமர்சனப் பிதாமகர் சுப்புடு
- கேடிஸ்ரீ|மே 2007|
Share:
Click Here Enlargeபிரபல கர்நாடக சங்கீத விமர்சகர் சுப்புடு மார்ச் 29ம் தேதி தில்லியில் தமது 90வது வயதில் காலமானார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உடல்நலம் குன்றியிருந்தார். சுப்புடுவின் மறைவுச் செய்தி கேட்டவுடன் ஜனாதிபதி அப்துல் கலாம் விரைந்து சென்று அஞ்சலி செலுத்தினார்.

இசை ஆர்வம் உள்ள தமிழ்க் குடும்பம் ஒன்றில் பிறந்த சுப்புடுவின் இயற்பெயர் பி.வி. சுப்பிரமணியம். 1917, மார்ச் 27ம் தேதி பிறந்த சுப்புடு, ஆரம்ப காலங்களில் பர்மாவில் வசித்து வந்தார். கோயம்புத்தூர் மாவட்டத் தைச் சேர்ந்த தாராபுரம் இவரது சொந்த ஊர். தந்தை வெங்கட்ராமன் பர்மாவில் சிறை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தார். இரண்டாம் உலகப்போர் உச்சக்கட்டத்தை அடைந்த நேரம் அது. ஒட்டுமொத்த மக்களை யும் உடனடியாக பர்மாவை விட்டு வெளியேறும்படி பிரிட்டிஷ் அரசு உத்தரவிட, சுப்புடுவும் பர்மாவை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். நடந்தே வடகிழக்கு இந்தியா வழியாகப் பல மைல் தூரம் நடந்து இந்தியா வந்தார் சுப்புடு. இந்தியாவில் அவர் முதன்முதலாக காலடி எடுத்து வைத்த இடம் சிம்லா. சிறிது காலத்துக்குள் இசை விமர்சகராக மலரத் தொடங்கினார்; அங்குள்ள கர்நாடக இசைக் கலைஞர்களின் இசையைப் பற்றி விமர்சனம் செய்யத் தொடங்கினார்.

இந்நிலையில் இவருக்கு மத்திய அரசு உத்தியோகம் கிடைத்தது. தில்லியில் நிதித் துறையில் சார்புச் செயலாளராகப் பணி யாற்றினார். சுப்புடு இசை விமர்சகர் மட்டு மல்ல. மிருதங்கம், கஞ்சிரா, ஜலதரங்கம் போன்ற கருவிகளையும் வாசிப்பதில் கெட்டிக் காரர். பூர்ணம் விஸ்வநாதன் நாடகங்களில் நடித்த அனுபவமும் இவருக்கு உண்டு. ஹார்மோனியம் வாசிப்பதில் தேர்ந்தவர். ஜாமினி கிருஷ்ண மூர்த்தி, மணக்கால் ரங்க ராஜன் போன்றோருக்கு ஹார்மோனியம் வாசித்திருக்கிறார். கீ போர்ட் வாசிக்கத் தெரியும். நாட்டியத்திலும் ஆழமான அறிவு உண்டு.

சுப்புடு அவர்கள் தனது எட்டாவது வயதிலேயே மேடை அனுபவம் கண்டவர். அவருக்கு எட்டு வயது இருக்கும் போது ஹரிகதா காலட்சேபத்திற்காக பர்மாவுக்கு விஜயம் செய்தார் ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர். அப்போது பாகவதருக்கு ஹார்மோனியம் வாசிக்க ஆள் கிடைக்க வில்லை. என்ன செய்வது என்று அவர் குழம்பிய நிலையில், அங்கு இருந்தவர்கள் அவரிடம் 'இங்கு சுப்புடு என்ற 8 வயதுச் சிறுவன் இருக்கிறான். அவன் நன்றாக ஹார்மோனியம் வாசிப்பான்' என்று கூறினார்கள். பாகதவர் சுப்புடுவை அழைத்து வரச் சொன்னார். அந்த வயதில் சுப்புடுவால் ஹார்மோனியத்தைக் கூடத் தூக்க முடிய வில்லை. சுப்புடுவிடம் முத்தையா பாகவதர் கல்யாணி, சண்முகப்ரியா ராகங்களை வாசிக்கச் சொல்ல, சிறுவன் சுப்புடுவும் அசராமல் அவருக்கு வாசித்துக் காட்டினார். அவரது வாசிப்பில் தன்னை மறந்த ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர் தனக்கு பக்கவாத்தியம் வாசிக்கச் சம்மதிக்க, அதுவே சுப்புடுவின் முதல் மேடை அனுபவம், அரங் கேற்றம் ஆயிற்று. அன்று ஆரம்பித்த இவரது இசைப் பயணம் கடைசி வரை தொடர்ந்தது.

தில்லிக்கு வரும் கர்நாடக சங்கீத வித்வான்கள் சுப்புடுவைச் சந்திக்கக் காத்திருப்பார்கள். பேசுவதற்கும், பழகுவதற்கும் இனிமையான மனிதர். நகைச்சவை உணர்வு இவரிடம் உள்ள மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட் என்று கூறலாம். இவரது எழுத்து சில நேரங்களில் சூடாக இருந்தாலும், இவரிடம் கோபமாகச் சென்றவர்கள்கூட இவரைப் பார்த்தவுடன் சிரித்து விடுவார்கள். ஆரம்ப காலங்களில் தில்லியில் செளத் இண்டியன் தியேட்டர் எனும் நாடகக் குழுவை நடத்தி வந்த சுப்புடு, இக்குழுவின் மூலம் 'கோமதியின் காதலன்' உட்பட பல்வேறு நாடகங்களை இயக்கி இருக்கிறார். அகில இந்திய வானொலியின் உதவி இயக்குநர் டாக்டர் நாராயண மேனனின் அறிமுகம் இவருக்குக் கிடைக்க, இதன் விளைவாக 'ஸ்டேட்ஸ்மன்' (Statesman) இதழில் இசை மற்றும் நடன விமர்சனங்கள் எழுதத் தொடங்கினார். தொடர்ந்து 50 ஆண்டுகாலம் தமிழ் இதழ்கள் உள்படப் பல்வேறு இதழ் களில் இசை விமர்சனங்களை எழுதி வந்தார். அவர் முதன்முதலில் எழுதிய விமர்சனம் ஆனந்த விகடனில் வெளிவந்தது.

அப்போது 'கர்நாடகம்' என்ற புனைபெயரில் கல்கி சங்கீத விமர்சனம் எழுதி வந்தார். கல்கி எழுதிக் கொண்டிருந்த போதே தான் மிகவும் ரசித்துப் பாராட்டிய வாசகர் கடிதம் ஒன்றை வெளியிட்டார். அக்கடிதத்தில் வாசகர் இப்படி எழுதியிருந்தார்: 'சாத்தூர் ஏ.ஆர். சுப்பிரமணிய ஐயர் நன்றாகப் பாடுவதெல்லாம் சரிதான்; ஆனால் 'தாயே நீ இரங்காவிடில்' என்று பாடும் போது ஐயர் ஏன் 'இற்றங்காய்' என்று பாடுகிறார்? அம்பாள் என்ன மரத்தில் மேலா ஏறிக் கொண்டிருக்கிறார்?'

அந்த வாசகர் வேறு யாருமல்ல, சுப்புடுதான். அவரது விமர்சனப் பணி அன்றிலிருந்துதான் ஆரம்பம் ஆனது; கல்கிக்குப் பிறகு பாரபட்ச மற்ற முறையில் விமர்சனம் எழுதியவர் சுப்புடு என்றால் அது மிகையல்ல. மிகச் சரளமான, கலகலப்பான நடை; எப்போது பாராட்டுவார், எப்போது குட்டுவார் என்று சொல்ல முடியாத மர்மம்; நடுநிலைமை யான நோக்கு இவைதான் சுப்புடு. விமர்சனம் என்று வந்துவிட்டால் பயப்பட மாட்டார். தன் மனதுக்குச் சரி என்று பட்டுவிட்டால் போதும், வித்வான் யார் என்று கவலைப்பட மாட்டார், கிழி கிழி என்று கிழித்துவிடுவார். குட்டுவதில் மட்டுமில்லை. ஒருவரிடம் திறமை இருக்கிறது என்று கண்டு பிடித்து விட்டால் அதை வரவேற்பதிலும், தட்டிக் கொடுப்பதிலும் அவருக்கு நிகர் அவர்தான். அவர் என்ன எழுதியிருக்கிறார் என்று அறிவதில் முன்னணிக் கலைஞர்கள் முதல் இளங் கலைஞர்கள் வரை அனைவருமே மிக்க ஆர்வமாக இருப்பர். இவரது மோதிரக்கை யால் பாராட்டுப் பெற்றவர்கள் என்று பெரிய பட்டியலே உண்டு: பாம்பே ஜெயஸ்ரீ, மாண்டலின் ஸ்ரீனிவாசன், உன்னி கிருஷ்ணன், சஞ்சய் சுப்ரமண்யம், சுதாரகுநாதன், சிவா, ராஜ்குமார் பாரதி என்று பலரும் அவரால் பாராட்டப் பெற்றவர்கள் தாம். அதே சமயம் கர்நாடக இசை பாடுகிறவர்கள் திரைப்படப் பாடல்களைப் பாடுவது சரியல்ல என்ற எண்ணம் கொண்டிருந்தார். அதற்காகவே பலரைக் கடுமையாக விமர்சனம் செய்து பலரது எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டுள்ளார்.
ஒரு வித்வான் அன்றைக்கு என்ன பாடுகிறாரோ அதுதான் சுப்புடுவின் பிரதான விஷயமாக இருக்கும். பாடுகின்ற வித்வான் எப்படிப்பட்டவர், அவர் எவ்வளவு அனுபவம் வாய்ந்தவர், அவர் நன்றாகப் பாடியதைப் பற்றி நாம் ஏற்கெனவே பாராட்டி எழுதியிருக்கி றோமே என்றெல்லாம் பார்க்க மாட்டார். இந்த ஒரு குணாதிசயத்தினாலேயே அவர் பல எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருந்தார். பல சமயங்களில் மிரட்டல்களும் அவருக்கு விடுக்கப்பட்டிருக்கின்றன. ஓரிரண்டு சந்தர்ப்பங்களில் தரக் குறைவான விமர்சனத் துக்கும் ஆளானதுண்டு. கவலையே படமாட்டார், அதுதான் சுப்புடு.

ஒருமுறை பிரபல நடனமணியின் நடனத்தைப் பற்றி தினமணியில் இவர் எழுதிய விமர்சனம் பெரும் சர்ச்சையைக் கிளப்ப, தினமணியின் மேல் அந்த நடனமணி 50 லட்சரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு ஒன்றைத் தொடுத்தார். ஆனால், இந்த வழக்கு எடுபடாமல் போனது வேறு விஷயம்.

அவர் உருட்டிய தலைகளில் முக்கியமானது செம்மங்குடி ஸ்ரீநிவாச ஐயரின் தலை. ஒவ்வொரு கச்சேரியையும் கிழிப்பார். செம்மங்குடி முன்னால் யாரும் உட்காரக் கூடத் தயங்கிய காலம் அது. செம்மங்குடியே ஒரு முறை மிகவும் அலுப்புடன், 'நானும் வெக்கமில்லாம வருஷா வருஷம் பாடிண்டிருக் கேன். நீயும் வெக்கமில்லாம வருஷா வருஷம் எழுதிண்டிருக்கே' என்றாராம்.

2002ஆம் ஆண்டு சுப்புடுவின் 85வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இவரது விமர்சனங் களுக்கு ஆளான பல்வேறு நடனக் கலைஞர் களும், சங்கீத வித்வான்களும் அதில் கலந்து கொண்டு சுப்புடுவிடம் ஆசி பெற்றது சிறப்பு.

இந்திய ஜனாதிபதி அப்துல்காலம் இசை விமர்சகருக்கான விருதை இவருக்கு வழங்கி கெளரவித்தது குறிப்பிடத்தக்கது. மிக அபூர்வமான கேள்வி ஞானமும், ஆழமான ரசனையும் தாம் அவரது விமர்சனங்களின் அடித்தளமாய் அமைந்தன.

அவரது மரணம் விமர்சனத் துறைக்கு மட்டுமல்ல, இசை நாடகத் துறைக்கும் பெரிய இழப்புத்தான்.

கேடிஸ்ரீ
More

தமிழ்நூல் கடல் தி.வே. கோபாலய்யர்
Share: 




© Copyright 2020 Tamilonline