|
எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு |
|
- அரவிந்த்|ஜூன் 2020| |
|
|
|
|
"ஸ்ரீமான் நாயுடுகாரு பழங்காலத்துப் பிரபல பத்திராசிரியர்களான காலஞ்சென்ற ஸ்ரீமான் ஜி. சுப்ரமண்ய ஐயர், ஸ்ரீமான் சுப்ரமணிய பாரதியார், ஸ்ரீமான் அ. மாதவ அய்யர், ஸ்ரீமான் வேதாசலம் பிள்ளை, ஸ்ரீமான் ராஜமய்யர் முதலிய கோஷ்டியைச் சேர்ந்தவர். அவரைப் பிறவி ஆசிரியர் என்றே சொல்லவேண்டும்; ஏனெனில் அவர் தமது இளவயது முதலே 'பாலபாஸ்கரன்' என்னும் புனைபெயருடன் 'சுதேசமித்திரன்' முதலிய பத்திரிகைகளுக்கு விஷயதானம் செய்துவந்தார்" என்று மதிப்பிடுகிறார் அக்காலத்தின் பிரபல துப்பறியும் நாவலாசிரியரும், 'கிருஷிகன்' பத்திரிகையின் ஆசிரியருமான ஜே.ஆர். ரங்கராஜூ. "எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு அனுபவமிக்க பழம்பத்திரிகையாளர். அது மட்டுமல்ல; விஷயஞானம் கொண்ட நாவலாசிரியர்; தராதரம் தெரிந்த எழுத்தாளர்; கவி பாரதியாரின் நண்பர்" என்று குறிப்பிடுகிறார் ரா.அ. பத்மநாபன். புதுமைப்பித்தன், கல்கி உள்ளிட்டோரால் பாராட்டப்பட்ட எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு, 1886ல் ஸ்ரீரங்கத்தில், சங்கு கோவிந்தசாமி நாயுடு - கோவிந்தம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
தந்தை வைஷ்ணவத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். பல வைணவத் தலங்களுக்கும் யாத்திரை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். தாய் மிகுந்த கல்வியறிவு மிக்கவர். பள்ளிக் கல்வியோடு, பெற்றோர்களிடமிருந்து தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார் நாயுடு. பழைய இதழ்களை, புத்தகங்களைச் சேகரிப்பதையும், வாசிப்பதையும் இவர் தனது பொழுதுபோக்காக வைத்திருந்தார். பத்திரிகை ஆர்வத்தால் சில வருடங்கள் சுதேசமித்திரன் இதழின் முகவராகப் பணியாற்றினார். இயல்பாக எழுந்த எழுத்தார்வத்தால் 'பாலபாஸ்கரன்' என்ற புனை பெயரோடு சுதேசமித்திரனில் எழுத ஆரம்பித்தார்.
பத்திரிகை முகவர் என்பதால் பல இதழ்களை வாசிப்பார் இராமாநுஜலு நாயுடு. பத்திரிகையார்வத்தால் 1904ல் ஸ்ரீரங்கத்தில் 'பிரஜாநுகூலன்' என்ற இதழை ஆரம்பித்தார். நிறுவனர், ஆசிரியர், பதிப்பாளர் எல்லாம் அவரே. அப்போது அவருக்கு வயது 17தான். பிற இதழ்களுக்கும் சிறுகதை, கட்டுரைகளை எழுதி வந்தார். இவருக்கு 19 வயது நடக்கும்போது தந்தை காலமானார். குடும்பப் பொறுப்பை இராமாநுஜலு ஏற்றுக்கொண்டார். தனது பத்திரிகை, எழுத்துப் பணியையும் தொடர்ந்தார். பத்திரிகை தொடர்பாக அவ்வப்போது சென்னை சென்றுவர வேண்டி நேர்ந்தது. அதன் மூலம் பாரதியார், அ. மாதவய்யர், ஜே.ஆர். ரங்கராஜூ உள்ளிட்ட பலரது அறிமுகமும் நட்பும் கிடைத்தது. பாரதியார் ஆசிரியராக இருந்த சக்கரவர்த்தினி இதழில் (பிப்ரவரி 1906, பக். 155) 'பாலபாஸ்கரன்' என்ற புனைபெயரில், 'பால்ய விவாகமும் பெண் கல்வியும்' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினார். தொடர்ந்து அக்கால இதழ்களில் கதை, கட்டுரை, துணுக்குகளை எழுத ஆரம்பித்தார்.
இவரது திறமையை அறிந்துகொண்ட தி. இராஜகோபால் முதலியார் இவரை ஆசிரியராக வைத்து 1926ம் ஆண்டு ஏப்ரலில் 'ஆநந்தகுணபோதினி' இதழைத் துவங்கினார். அக்காலத்தில் பிரபல துப்பறியும் எழுத்தாளரான ஆரணி குப்புசாமி முதலியார் ஆசிரியராக இருந்த 'ஆனந்தபோதினி' இதழுக்குப் போட்டியாக 'ஆநந்தகுணபோதினி' தொடங்கப்பட்டது. ஆரம்பித்த சில மாதங்களிலேயே நல்ல வரவேற்பையும் பெற்றது. இது குறித்து, "ஆநந்தகுணபோதினி மாத இதழ் ஆனந்தபோதினியை விட ஜனரஞ்சகமாக இருந்தது. துண்டு துணுக்குகள், அனுபவ ரத்தினங்கள், நகைச்சுவை கலந்த சம்பவக் குறிப்புகள் முதலியன பத்திரிகையில் இடம்பெற்றன" என்று புகழ்ந்துரைக்கிறார் ரா.அ. பத்மநாபன். ஆனால், 'ஆநந்தகுணபோதினி' சில வருடங்கள் மட்டுமே நடந்தது. அட்டைப்படம், எழுத்துரு, முகப்பு, பஞ்சாங்கம் என அனைத்திலுமே 'ஆனந்தபோதினி'யையே அது பிரதிபலித்ததாலும், பெயரில் மட்டுமே சிறு வேறுபாடு இருந்ததாலும், ஆனந்தபோதினி இதழின் விற்பனை வெகுவாகப் பாதித்ததாலும், சினமுற்ற அதன் உரிமையாளர், ஆநந்தகுணபோதினி இதழின் மீது வழக்குத் தொடர்ந்தார். தீர்ப்பும் அவர்களுக்குச் சாதகமாகவே வந்தது.
தீர்ப்பைக் கண்ட இராமாநுஜலு நாயுடு, உடன் இதழை நிறுத்திவிடவில்லை. மாறாக, இதழின் பெயரை 'அமிர்தகுணபோதினி' என்று மாற்றினார். அதற்கும் வாசக வரவேற்பு தொடர்ந்தது. அவ்விதழில் கட்டுரை, துணுக்குகள், புத்தக மதிப்புரை, பழமொழி விளக்கங்கள், செய்தித் துணுக்குகள் எனப் பல விஷயங்களை எழுதினார் நாயுடு. பெரும்பாலான கட்டுரைகளைப் புனைபெயரிலும், தன் தந்தை பெயரிலும் சமயங்களில் சொந்தப் பெயரிலும் எழுதினார்
இராமாநுஜலு நாயுடு சிறந்த சிறுகதை ஆசிரியரும்கூட. தன் பெயரைக் குறிப்பிட்டும் குறிப்பிடாமலும் பல சிறுகதைகளை எழுதியிருக்கிறார். 'பாக்கியரதி', 'பே பே செட்டியார்' 'நாடக லாபம்', 'சனிக்கிழமை விரதம்', 'தங்கையின் மறுகல்யாணம்', 'அத்தையின் பேராசை', 'புது மனிதனின் புதுமைகள்', 'சாமுண்டியின் பிற்கால வாழ்வு', 'தொந்திச் சுப்பு', 'விநோதக் கடிதங்கள்' போன்றவை அமிர்தகுண போதினியில் வெளியான இவரது குறிப்பிடத்தகுந்த சிறுகதைகளாகும். தனது தந்தை 'சங்கு கோவிந்த சாமி நாயுடு'வின் பெயரிலும் கதை, கவிதை, கட்டுரைகளை எழுதியிருக்கிறார். சிறுவர் பக்கம், பெண்கள் பக்கம், சென்ற மாதம் என்ற பெயரில் நாட்டுநடப்பு, பத்திரிகாசாரம் என்ற பெயரில் பிற பத்திரிகைகளின் செய்திகள் என்று பலதரப்பட்ட செய்திகளை மிகச் சுவைபடச் சொல்லியிருக்கிறார். 'நமது கதாப் பிரஸங்கி' என்ற தலைப்பில் இவர் எழுதிய பல சிறுகதைகள் வெளியாகியிருக்கின்றன. மாறல் கார்த்திகேய முதலியார், அரியூர் வ. பதுமநாபப் பிள்ளை உள்ளிட்ட சிலர் மட்டுமே அமிர்தகுணபோதினி இதழில் எழுதியுள்ளனர். பிற அனைத்தும் முழுக்க முழுக்க நாயுடுவின் கைவண்ணமே!
கிண்டல், கேலியாக எழுதுவதிலும் இராமாநுஜலு நாயுடு தேர்ந்தவர். அந்த விதத்தில் இவரது முன்னோடியாக பாரதியாரைச் சொல்லலாம். பாரதியின் 'தராசு' கட்டுரைகளைப் போன்றே, "நமது கடை" என்ற தலைப்பில், இவர் வெகு சுவாரஸ்யமாக அக்கால நடப்புச் செய்திகளைப் பற்றி எழுதியிருக்கிறார். 'விகடப் பிரதாபன்' என்ற தலைப்பில் இவர் எழுதியிருக்கும் கட்டுரைகள் கேலியும் கிண்டலும் கலந்து சுவையாக இருக்கும். சிந்திக்க வைக்கும் கருத்துக்களும் அத்தொடரில் இடம்பெற்றுள்ளன. 'பரமசிவம் படியளக்கிற கொள்ளை', 'எதிலே குறைச்சல் என்னத்திலே தாழ்த்தி', 'ரயில்வே பிரயாண தமாஷ்' போன்றவை குறிப்பிடத்தகுந்தன. ஒவ்வொரு கட்டுரையையும் நகைச்சுவையாக, 'ராம், ராம்', 'சுபம்' "சூ" 'சுவாஹா" என்பதாக முடித்துள்ளார்.
இந்தப் பகுதியைப் பற்றி நாயுடு, "'ஆநந்த கதா கல்பக'த்தில் உள்ள 'விகட மாமா' என்ற விகடப் பகுதியை 'ஆநந்தகுணபோதினி'யில் 'விகடப் பிரதாபன்' என்று மாற்றியும், இன்னும் 'ஆநந்த கதா கல்பக'த்தில் என்னென்ன விசேஷ அம்ஸங்கள் சிறந்து விளங்குகின்றனவோ அவற்றையெல்லாம் 'ஆநந்த குணபோதினி'யில் காணும்படி திருத்தியும் - இவ்வாறாக 'ஆநந்த கதா கல்பக'த்தின் முழுச் சாயலையும் 'ஆநந்த குணபோதினி'யில் அமைப்பித்து, அதற்குத் தகுந்த விதமாய் பிரதி தடவையும் விஷயங்களைத் தேர்ந்தெடுத்து எழுதப்பட்டு வருகின்றது" என்று குறிப்பிட்டிருக்கிறார். 'ஆநந்த கதா கல்பகம்' என்பது இவர் வெளியிட்டு வந்த தொகுப்பு நூலாகும் |
|
கதை, கட்டுரை மட்டுமல்லாது நாவல்கள் எழுதுவதிலும் இராமாநுஜலு நாயுடு தேர்ந்தவர். 'ஆயிரம் தலைவாங்கிய அதிசய சிந்தாமணி', 'ஜெய விஜயன்', 'இந்திரா', 'லலிதாமநோகரம்', 'ஆசையின் முடிவு', 'வித்தியா நவநீதம்', 'நாகரீக பாரிஜாதம்', 'ஜனகா மோகன சாதுர்யம்', 'பன்னிரு மரகத மர்மம்', 'விசித்திரத் துப்பறியும் கண்', 'ராம் மோஹனன்', 'சுகுமார திலகம்' போன்றவை இவரது நாவல்களாகும். கதை, கட்டுரை, பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல்கள் சிலவற்றையும் வெளியிட்டுள்ளார். 'ரஞ்சித ரத்னம்', 'ஆநந்த கதா கல்பகம்', 'பாலிகா கல்பகம்' 'ஆநந்த கதாரத்னம்' போன்றவை இவர் தொகுத்த நூல்களாகும். 'பரிமளா', 'விஷ்ணு ஸ்தல யாத்ரா மார்க்க விவரணம்' போன்ற நூல்களைப் பதிப்பித்துள்ளார். ஸ்ரீவிஷ்ணு ஸ்தல யாத்ரா மார்க்க விவரணம் இராமாநுஜலு நாயுடுவின் தந்தை சங்கு கோவிந்தசாமி நாயுடுவால் எழுதப்பட்டு, அவரது மறைவிற்குப் பின் அவரது சகோதரர் கோபாலகிருஷ்ண நாயுடுவின் உதவியைக் கொண்டு இராமாநுஜலு நாயுடுவால் 1914ல் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. 108 வைணவத் திருத்தலங்களைப் பற்றிய விரிவான செய்திகள் அடங்கிய நூல் இது.
இராமாநுஜலு நாயுடு தொகுத்த குறிப்பிடத்தகுந்த நூல்களுள் ஒன்று 'கதா மோகன ரஞ்சிதம்.' 1915ல் இவரால் வெளியிடப்பட்ட இந்நூல் பெத்தாச்சி செட்டியாருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது. பாரதியின் சிறுகதை 'ஸ்வர்ணகுமாரி' இந்தத் தொகுப்பில் 'நாவல்' என்ற உட்தலைப்பில் வெளியாகியுள்ளது. ஆனால் அதில் பாரதியாரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. மேலும் கதையில் நிறையவே மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, 'திலகர்' என்று வரும் இடமெல்லாம் 'கோபால கிருஷ்ண கோகலே' என்று மாற்றம் செய்துள்ளார் நாயுடு. இப்போது நாம் படிக்கக் கிடைக்கும் 'ஸ்வர்ணகுமாரி'யில் ஆண், பெண் இருவரும் தங்கள் தங்கள் காதலைத் துறந்து தேச சேவை செய்கின்றனர். ஆனால் இந்த நூலில் வெளியாகியிருப்பதிலோ இருவரும் இணைந்து திருமணம் செய்துகொண்டு தேசசேவை செய்வதாகவும் 'ஆநந்த பாரதா' என்ற பெயரில் பத்திரிகை ஒன்றைத் தொடங்கி நடத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் பாரதி அனுமதி பெற்றுச் செய்யப்பட்டதா அல்லது நாயுடுவே செய்தாரா என்பது தெரியவில்லை. பாரதி பெயரைக் குறிப்பிடாததற்கு இப்படி மாற்றம் செய்யப்பட்டிருப்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம். பாரதி இந்த நூல் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. காரணம், இந்நூல் வெளியான காலகட்டத்தில் பாரதியார் புதுச்சேரியில் வசித்து வந்தார். ஆனால், இதே தொகுப்பில் பாரதியின் 'பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்து' கவிதை அவரது பெயரில் வெளியாகியுள்ளது.
இவர் எழுதியதில் மிக முக்கியமானது, 'சென்றுபோன நாட்கள்' என்ற தலைப்பில், அந்தக் காலத்துப் பத்திரிகை ஆசிரியர்களான நடராஜ ஐயர், வேணுகோபாலசாமி நாயுடு, வீரராகவாச்சாரியார், கோவிந்தசாமிப் பிள்ளை, சுப்பிரமணிய பாரதி உள்ளிட்ட பலரைப் பற்றி 'அமிர்தகுணபோதினி' இதழில் எழுதிய தொடர்கட்டுரைதான். (அவற்றின் தொகுப்பு, "சென்றுபோன நாட்கள்" என்ற அதே பெயரில், நூலாக வெளியாகியுள்ளது. ஆ.இரா. வேங்கடாசலபதி தொகுத்திருக்கும் அந்நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது)
'திராவிடாபிமானி' என்ற பத்திரிகைக்கும் இராமாநுஜலு நாயுடு ஆசிரியராக இருந்திருக்கிறார். மஹாவிகட தூதன், வந்தேமாதரம் உள்ளிட்ட பல இதழ்களுக்கும் இவர் முக்கியப் பங்களிப்புகளைத் தந்துள்ளார். 1934ம் ஆண்டு அமிர்தகுணபோதினி இதழ், மதுரையைச் சேர்ந்த இ.மா. கோபால கிருஷ்ண கோனுக்கு விற்கப்பட்டது. அவருடன் ஏற்பட்ட பிணக்கு மற்றும் கருத்து மாறுபாட்டால் அந்த இதழின் பொறுப்பிலிருந்து வெளியேறினார் நாயுடு. பின் அவர் நீண்டகாலம் வாழவில்லை. ஆகஸ்ட் 17, 1935 அன்று நாயுடு காலமானார். அவருக்கு அஞ்சலிக் குறிப்பை எழுதியிருக்கும் ஜே.ஆர். ரங்கராஜூவின் குறிப்பிலிருந்து நாயுடு, தமிழ்நாடு, பணம் போன்ற இதழ்களுக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார் என்பது தெரியவருகிறது.
கல்கி, புதுமைப்பித்தன் போன்றோரின் நகைச்சுவை எழுத்துக்கு முக்கியமான முன்னோடி எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு என்று சொன்னால் அது மிகையில்லை.
அரவிந்த் |
|
|
|
|
|
|
|
|