|
|
|
"இந்த நாவலை வாசிக்கும்போது மூல நூலாசிரியரின் பழந்தமிழ் இலக்கியப் புலமை வியப்பளிக்கிறது. சற்றுத் தீவிரமாக யோசித்துப் பார்த்தால், மலையாள மொழிபேசும் எழுத்தாளர் எழுதிய தமிழ்நாவலை வாசிப்பது போல் நீரோட்டமாக இருக்கிறது. அல்லது அவ்விதம் தோன்றும்படி கே.வி. ஜெயஸ்ரீ மொழியாக்கம் செய்துள்ளார். வழக்கமாக, மொழிமாற்றம் பெற்றுவரும் இலக்கிய வடிவங்களை வாசிக்கும்போது தோன்றும் சலிப்பும் வறட்டுத்தன்மையும் கட்டுரைத் தனமும் தோன்றாவண்ணம் மிகத் துல்லியமான படைப்பு மொழியில் மாற்றுகிறார் மொழிபெயர்ப்பாளர்" இப்படிப் பாராட்டியிருக்கிறார் நாஞ்சில்நாடன். பாராட்டப்பட்ட நூல், சாகித்ய அகாதமியால் அண்மையில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 'நிலம் பூத்து மலர்ந்த நாள்'. மனோஜ் குரூர் மலையாளத்தில் எழுதி, கே.வி. ஜெயஸ்ரீ தமிழில் பெயர்த்திருக்கும் இந்த நூலை, 2019ம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலாக டாக்டர் பிரேமா நந்தகுமார், எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஆர். வெங்கடேஷ், சா. தேவதாஸ் அடங்கிய நடுவர் குழு தேர்ந்தெடுத்துள்ளது. சாகித்ய அகாதமி தொடங்கிய 1955ம் ஆண்டுமுதல் இன்றுவரை மூன்று பெண் படைப்பாளிகள்தாம் (ராஜம் கிருஷ்ணன், லக்ஷ்மி, திலகவதி) இவ்விருதினைப் பெற்றிருக்கிறார்கள். நான்காவதாக அப்பட்டியலில் இணைந்திருக்கிறார் ஜெயஸ்ரீ.
இவர், கேரளாவில் வாசுதேவன் - மாதவி இணையருக்கு மகளாகப் பிறந்தார். தந்தையின் வியாபார நிமித்தமாகக் குடும்பம் தமிழ்நாட்டின் திருவண்ணாமலைக்குக் குடிபெயர்ந்தது. பள்ளிப்படிப்பு திருவண்ணாமலையில். தாய்மொழி மலையாளம் என்றாலும் தமிழிலும் தேர்ந்தவரானார். கையில் கிடைத்த நூல்களையெல்லாம் வாசிப்பது வழக்கமானது. தாய் மாதவி மிகுந்த வாசிப்பார்வம் கொண்டவர். அவர்மூலம் பல சிறுகதை, நாவல்கள் அறிமுகமாகின. தமிழ்மீது கொண்ட ஆர்வம் தேடித்தேடி வாசிக்க வைத்தது. கல்லூரிப் படிப்பைத் திருவண்ணாமலையில் நிறைவுசெய்தார். ஓய்வு நேரத்தைத் தமிழ் இலக்கியம், நாவல்கள், சிறுகதைகள் வாசிப்பதில் செலவிட்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடனான தொடர்பு வாசிப்புத்தளத்தை மாற்றியது. புதிய பல கதவுகளைத் திறந்துவிட்டது.
எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், வம்சி பதிப்பகத்தின் உரிமையாளர் கே.வி. ஷைலஜா, இவரது சகோதரி. அவரது தொடர் தூண்டுதலால், அவர் தொகுத்த நவீன மலையாள தமிழ்ச் சிறுகதைகள் நூலுக்காக, பால் சக்கரியாவின் 'ஒரு நாளுக்கான வேலை', சாரா ஜோசப்பின் 'காலடிச் சுவடுகள்', சி.வி. ஸ்ரீராமனின் 'பொந்தன்மாடன்' கதைகளை மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். 'பச்சை இருளனின் சகா பொந்தன் மாடன்' என்ற தலைப்பில் அதனை விஜயா பதிப்பகம் வெளியிட்டது. அதுதான் ஆரம்பம். அது தந்த உத்வேகம் மேலும் பல சிறுகதைகளை, படைப்புகளை மொழிபெயர்க்கும் ஆவலைத் தந்தது. பால் சக்கரியாவின் கதைகளில் பன்னிரண்டைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்கத் தொடங்கினார். அவற்றை இலக்கிய இதழ்களுக்கு அனுப்ப அவை பிரசுரமாகின. காலச்சுவடு இதழில் வெளியான 'இரண்டாம் குடியேற்றம்' என்னும் மொழிபெயர்ப்புக் கதை, 'தேர்ந்த மொழிபெயர்ப்பு' என்று சுந்தரராமசாமியால் பாராட்டப்பட்டது. எழுத்தாளர் பிரபஞ்சனும் ஜெயஸ்ரீயைத் தொடர்ந்து ஊக்குவித்தார்.
பிரபஞ்சனின் உறுதுணையால் பால்சக்கரியாவின் படைப்புகளைக் கொண்ட முதல் மொழிபெயர்ப்பு நூல் 'இதுதான் என் பெயர்' என்ற தலைப்பில் கவிதா பதிப்பகம் மூலம் வெளியானது. அதுதான் ஜெயஸ்ரீயின் முதல் மொழிபெயர்ப்பு நூல். எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரின் ஊக்கம் தேடித்தேடிப் படைப்புகளை வாசிக்க, மொழிபெயர்த்து வெளியிட உதவியது. தொடர்ந்து பால் சக்கரியாவின் படைப்புகள், இவரது மொழிபெயர்ப்பில், 'இரண்டாம் குடியேற்றம்', 'அல்போன்சம்மாவின் மரணமும் இறுதிச்சடங்கும்', 'யேசு கதைகள்', 'பால் சக்காரியாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்' (சாகித்ய அகாடமி வெளியீடு) போன்ற நூல்களாக வெளியாகின. தொடர்ந்து சிறந்த மலையாள ஆக்கங்களைத் தமிழில் தரும் முயற்சியில் ஈடுபட்டார். |
|
இவரது மொழிபெயர்ப்பில் வெளியான மலையாளக் கவிஞர் ஷ்யாமளா சசிகுமாரின் 'நிசப்தம்' தொகுதிக்கு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது கிடைத்தது. அந்த நூல் கல்லூரி ஒன்றில் முதுகலைப் படிப்பிற்கான பாடநூலாகவும் வைக்கப்பட்டது. தொடர்ந்து இவர் மொழிபெயர்த்த ஏ. அய்யப்பனின் 'வார்த்தைகள் கிடைக்காத தீவில்' கவிதைத் தொகுப்பிற்கு திருப்பூர் தமிழ்ச்சங்க விருது கிடைத்தது. சந்தோஷ் ஏச்சிகானத்தின் சிறுகதைகளை 'ஒற்றைக்கதவு' என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார் ஜெயஸ்ரீ. அதற்கு 2012ல் 'நல்லி திசையெட்டும் விருது' கிடைத்தது.
திருப்பூர் கலை இலக்கியப் பேரவை விருது, தினமணி - என்.எல்.சி. சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது, சிறந்த பெண் எழுத்தாளருக்கான அங்கம்மாள் முத்துசாமி நினைவு இலக்கிய விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் ஜெயஸ்ரீயின் முக்கிய மொழிபெயர்ப்பு நூல்களுள் ஒன்று 'ஹிமாலயம்'. ஷௌக்கத் எழுதிய பயணக்கட்டுரைத் தொகுப்பின் மொழிபெயர்ப்பே இந்த நூல். இது கேரள சாகித்திய அகாதமி விருதுபெற்ற மலையாள நூலாகும். மொழிபெயர்ப்பு என்றே தோன்றாத வண்ணம் ஷௌக்கத்தின் அனுபவங்களை, அவதானங்களை மிகச்சிறப்பாக இந்நூலில் பதிவு செய்துள்ளார் ஜெயஸ்ரீ. இது இவரது முக்கியமான சாதனைப் படைப்பு எனலாம். மற்றொரு சாதனை நூலே 'நிலம் பூத்து மலர்ந்த நாள்'. மலையாளத்துக்கும் ஆதித்தமிழுக்கும் இடையிலான ஒற்றுமையை அறிமுகப்படுத்துவதற்காக மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதிய நூல் இது. இதனை அறிந்த எழுத்தாளர் ஜெயமோகன், தமிழ், மலையாளம் இரண்டிலுமே தேர்ந்த ஜெயஸ்ரீயை அதனை மொழிபெயர்க்கப் பரிந்துரைத்தார். அவ்வாறு உருவானதே இது. இந்த நூல் சங்க இலங்கியங்களில் இடம்பெற்றுள்ள சங்ககாலப் பாணர் பற்றியும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் விவரிக்கிறது.
மொழிபெயர்ப்புப் பற்றி ஜெயஸ்ரீ, "மொழிபெயர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு இரண்டு மொழிகளும் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். எழுத்தாளர் எதை நினைத்து அந்தப் படைப்பை உருவாக்கினாரோ, அதை உணர்வு சிதையாமல், அடுத்த மொழிக்குக் கடத்தவேண்டும். நாமாக ஒன்றைப் புரிந்துகொண்டு எழுதுவதோ, படைப்பின் சில பகுதிகள் புரியவில்லை என்று அதை வெட்டிக் குறைப்பதோ, மாற்றுவதோ கூடாது. மொழிபெயர்ப்பாளர் எழுத்தாளரின் மனதைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்க வேண்டும். மூலப் படைப்பைத் தாண்டி சொந்தக் கருத்துகளைப் புகுத்த மொழிபெயர்ப்பாளருக்கு எந்த உரிமையும் கிடையாது. இதைக் கருத்தில் கொண்டால், மொழிபெயர்ப்பு அதன் தன்மையில் இருந்து மாறாது" என்கிறார் ஒரு நேர்காணலில்
தேர்ந்தெடுத்த மலையாளப் படைப்புகளைத் தமிழில் கொடுத்து வரும் ஜெயஸ்ரீ, திருவண்ணாமலை மாவட்ட அரசுப்பள்ளி ஒன்றில் தமிழாசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் உத்திரகுமாரனும் ஓர் எழுத்தாளரே. கல்லூரியில் படிக்கும் மகள் சஹானாவும் ஒரு மொழிபெயர்ப்பாளர்தான். அவர், இதுவரை மூன்று புத்தகங்களை மொழிபெயர்த்துள்ளார். மலையாளம் - தமிழ் மொழிகளிடையே சிறந்த பாலமாகத் திகழ்ந்து வரும் ஜெயஸ்ரீ, தற்போது ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.வி. மோகன்குமாரின் 'உஷ்ணராசி' நாவலைத் தமிழில் மொழிபெயர்த்து வருகின்றார்.
அரவிந்த் |
|
|
|
|
|
|
|