|
கு.ப. சேது அம்மாள் |
|
- அரவிந்த்|ஜூலை 2020| |
|
|
|
|
புதுமைப்பித்தனுக்குப் பெரும்புகழ் சேர்த்த கதைகளுள் ஒன்று 'அகலிகை.' அகலிகையின் உள்ளத்து உணர்வுகளைக் கூறும் கதை அது. அக்கதைக்கு மாற்றாக, அதே சம்பவத்தை மையமாக வைத்து, இந்திரனின் மனைவி இந்திராணியின் உள்ளத்து உணர்வுகளைச் சித்திரிக்கும் விதமாக ஒரு கதையை எழுதி, அக்கால இலக்கிய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியவர் கு.ப. சேது அம்மாள். 'தேவசுகம்' என்ற அக்கதை 1945ல் 'வசந்தம்' இலக்கிய இதழில் வெளியானது. மாறுபட்ட கோணங்களில், பெண்களை, அவர்களது வாழ்க்கையை, சிந்தனைகளை மையப்படுத்தி விதவிதமாக எழுதிக்குவித்த சேது அம்மாள், 'மணிக்கொடி' இதழ் தந்த பெண் எழுத்தாளர்களுள் முதன்மையானவர். எழுத்தாளர் கு.ப. ராஜகோபாலனின் சகோதரி. 1908ல் கும்பகோணத்தில் பட்டாபிராமய்யர் - ஜானகி அம்மாள் இணையருக்கு மகளாகப் பிறந்தார். பள்ளியில் படிக்கும்போதே, 11ம் வயதில் திருமணம் நிகழ்ந்தது. ஆனாலும் கணவர் வீட்டாரின் அனுமதியுடன் படிப்பை நிறைவு செய்தார்.
எழுத்தில் கு.ப.,ரா.வுக்கு இருந்த ஆர்வம் சேது அம்மாளுக்கும் இருந்த போதிலும் ஆரம்பத்தில் எழுதத் தலைப்படவில்லை. வாசிப்பிலேயே அதிக கவனம் செலுத்தினார். குடும்பக் கடமைகளும் குறுக்கிட்டன. கு.ப.ரா.வுக்குக் கண்புரை பிரச்சனையால் பார்வை பாதிக்கப்பட்டு எழுத முடியாமல் போனபோது, அவர் சொல்லச்சொல்ல சேது அம்மாள் எழுதினார். கு.ப.ரா.வின் புகழ்பெற்ற பல சிறுகதைகள் அவ்வாறு வெளியானவைதாம். எழுத எழுதச் சேது அம்மாளுக்கு எழுத்தின் சூட்சுமம் பிடிபட்டது. தொடர் வாசிப்பும் அதற்குத் துணையானது. கு.ப.ரா.வும் ஊக்குவிக்கவே எழுத ஆரம்பித்தார். முதல் சிறுகதை 'செவ்வாய் தோஷம்', 1935ல் 'காந்தி' இதழில் வெளியானது. தொடர்ந்து சிறுகதைகளை எழுத ஆரம்பித்தார். 'கருகிய காதல்', 'சாவித்திரியின் கடிதம்', 'லலிதா', 'குணவதி' போன்ற சிறுகதைகள் மணிக்கொடி இதழில் வெளியாகி வாசககவனம் பெற்றன.
மணிக்கொடி மட்டுமல்லாது வசந்தம், பாரதமணி, மங்கை, கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி, காவேரி, கலைமகள், கல்கி, ஆனந்தவிகடன், அமுதசுரபி போன்ற இதழ்களிலும் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். தந்து 'தேவசுகம்' சிறுகதை குறித்துச் சேது அம்மாள், "அகலிகை கல்லான கதையின் காரணகர்த்தா தேவேந்திரன், அவனைப்பற்றி அவன் பட்டத்தரசி இந்திராணியின் சித்தக்கடலில் வீசிய எண்ண அலைகளைச் சித்திரிக்கிறது இச்சொற்சித்திரம். அகலிகை கதையைப் பலர் பலவிதமாகப் பேசியும் எழுதியும், பாடியும் தீர்த்து வருவதற்கு இது ஒரு மாற்று" என்று கூறியுள்ளார். காந்தியக் கருத்துக்களைக் கொண்ட சிறுகதைகளையும் நிறைய எழுதியிருக்கிறார்.
சிறுகதைகள் மட்டுமல்லாமல் மூன்று நாடகங்களையும் படைத்துள்ளார். அவற்றுள் 'பில்ஹண காவியம்' குறிப்பிடத் தகுந்ததாகும். வானொலியில் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றியுள்ளார். திரைப்படங்களிலும் இவரது பங்களிப்பு இருந்திருக்கிறது. பி.யு. சின்னப்பா நடித்த 'கிருஷ்ண பக்தி' படத்திற்காக, ஆர்.எஸ். மணியின் கதைக்கு இவர், ச.து.சு.யோகி, சுத்தானந்தபாரதி, சாண்டில்யன் ஆகியோருடன் இணைந்து வசனம் எழுதியிருக்கிறார். இதழ்கள் நடத்திய பல்வேறு சிறுகதை, நாவல் போட்டிகளுக்கு நடுவராக இருந்து சிறந்த எழுத்துக்களை அடையாளம் காட்டியிருக்கிறார். சம்ஸ்கிருதத்திலும் புலமை மிக்கவர்.
இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான 'ஒளி உதயம்' 1946ல் வெளியானது. 13 சிறுகதைகளைக் கொண்ட இதனைத் தனது சகோதரர் கு.ப.ரா.வுக்குச் சமர்ப்பித்திருந்தார். 'தெய்வத்தின் பரிசு', 'வீர வனிதை', 'உயிரின் அழைப்பு' போன்றவை இவரது பிற சிறுகதைத் தொகுப்புகள். காந்தி நூற்றாண்டு விழாவின்போது, எழுத்தாளர் மகரம் தொகுத்த 'காந்தி வழிக்கதைகள்' என்ற தொகுப்பில் இவரது சிறுகதை 'சோதனை' இடம் பெற்றிருக்கிறது. இது கைம்பெண் மணத்தை ஆதரிக்கும் சிறுகதை. சேது அம்மாள் ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். பெண் கல்வியின் முக்கியத்துவம், பெண் விடுதலை உட்பட்ட காந்திய சிந்தனைகளைத் தனது படைப்புகளில் வலியுறுத்தி இருக்கிறார். அக்கால மத்தியதர வர்க்கத்தினரின் வாழ்க்கையை மிகைப்படுத்தல் இல்லாது சித்திரிப்பதாக இவரது படைப்புகள் அமைந்துள்ளன. சமூகம், குடும்பம், வாழ்க்கை, முரண்கள், உறவுச் சிக்கல்கள் போன்றவற்றை அடியொற்றி இவரது சிறுகதைகள் பல அமைந்துள்ளன. கதை மாந்தர்களின் நுண்ணிய உணர்ச்சி நிலைகளைத் தனது பாத்திர வார்ப்புகள் மூலம் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். நேர்மறைச் சிந்தனை கொண்டதாகவே இவரது படைப்புகள் அமைந்துள்ளன. |
|
இவருடைய முதல் நாவல் 'அம்பிகா' 1962ல் வெளியானது. 'மைதிலி', 'உஷா', 'ஓட்டமும் நடையும்', 'கல்பனா', 'குரலும் பதிலும்', 'உண்மையின் உள்ளம்', 'தனி வழியே' போன்றவை இவர் எழுதிய பிற நாவல்கள். 'குரலும் பதிலும்' இவருக்கு மிகவும் பிடித்த நாவலாகும். இதன் முன்னுரையில், "பொறுப்பும், கடமை உணர்வுமற்ற கணவர்களை அடைந்த பெண்களின் சீரழிவில், அவர்களுடைய அவல வாழ்வில் சோகம், ரோஷம், மானம் முதலிய உணர்ச்சிகளால் பாதிக்கப்பட்டு, அவற்றை வாய்விட்டுக் கூறக்கூட இயலாத தத்தளிப்பில் சிக்கி உழலும் உயரிய பண்புள்ள பெண்களின் சித்திரமே இந்த நவீனம்" என்று குறிப்பிட்டிருக்கிறார். நாவலில் இடம்பெறும் அனைத்துப் பெண் பாத்திரங்களும் அன்பே உருவானவர்கள். அவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் பாசம் காட்டுவதால், அந்த மன வலிமையால், ஆண் கதாபாத்திரங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை எதிர்கொள்ள உதவுகிறார்கள்.
சேது அம்மாளுக்கு, வீணை உள்ளிட்ட இசைக்கருவிகள் வாசிக்கவும் தெரியும், நல்ல குரல்வளமும் உண்டு. சமையற்கலையில் ஆர்வமுண்டு. சமையல்கலை குறித்து இரு நூல்களை எழுதியுள்ளார். சுஜாதா ஆசிரியராக இருந்த 'அம்பலம்' இணைய இதழில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் சமையல் குறிப்புகளை எழுதி வந்துள்ளார். 'போதி மாதவன்' என்ற தலைப்பில் புத்தரின் வரலாற்றையும் எழுதியிருக்கிறார்
"பெண் புனைகதையாளர்களில் முக்கியமானவர் கு.ப. சேது அம்மாள். தமிழ்ப் புனைகதை வரலாற்றில் பெண்ணெழுத்து என்ற வகைப்பாட்டை உருவாக்கிப் பேசும் ஒரு நூலில் கட்டாயம் இடம்பெற வேண்டிய பெயர் இது. நாவல்கள், திரைப்பட வசனம் எனச் செயல்பட்ட கு.ப. சேது அம்மாளின் சிறுகதைகள் வடிவச் செம்மையும் தூக்கலாக எதையும் முன்வைக்காமல் உரையாடல்கள் வழி நடப்பதைக் காட்டிவிட்டு ஒதுங்கிக் கொள்ளும் உத்தியையும் கொண்டவை" என்று மதிப்பிடும் பேராசிரியர் அ. ராமசாமியின் கருத்து மிகவும் பொருத்தமானதே!.
கு.ப. சேது அம்மாளின் தமிழ் இலக்கிய சேவையை அங்கீகரித்து தமிழக அரசு 2002ல் இவரது படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியது. நவம்பர் 5, 2002 அன்று, தனது 94ம் வயதில் இவர் காலமானார். தமிழின் முன்னோடிப் பெண் எழுத்தாளர்களுள் ஒருவரான கு.ப. சேது அம்மாள், தமிழ் இலக்கிய உலகம் நினைவில் நிறுத்தவேண்டிய ஒருவர்.
அரவிந்த் |
|
|
|
|
|
|
|
|