Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | பொது | சிறுகதை | வாசகர்கடிதம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
பாக்கியரதி
- எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு|ஜூன் 2020|
Share:
சில வருஷங்களுக்கு முன் தென்னிந்தியாவிலிருந்த ஒருவன் ஒரு பெண்ணை சாஸ்திரோக்தமாய் மணம் புரிந்து ஜீவன ஹேதுவின்றி மனம் வெறுத்து அவளுடன் வாழ்ந்த சில நாளைக்குள் அவளை விட்டுப் பிரிந்து எங்கேயோ சென்றுவிட்டான். அநேக வருஷங்கள் வரையில் அவனைப் பற்றி யாதொரு சங்கதியும் கேள்விப்படாததால், அவன் இறந்து போனான் என்று ஊகித்து ஹிந்துக்களின் வழக்கப்படி மாங்கல்யம் முதலியவற்றைப் போக்கி அப்பெண்ணை அலங்கோலப்படுத்தினார்கள். விதவை என்ற துர்ப்பாக்கியமான முட்கிரீடம் அவள் தலையிலேறிற்று. அவள் புருஷன் போனபோதே மூன்றுமாத கர்ப்பவதியாயிருந்ததால், ஒரு பெண் குழந்தையைப் பிரஸவித்தாள். பர்த்தா இறந்துவிட்டாலும் அவ்வளவு துக்கம் ஏற்படாது. ஆனால் உயிருடன் அவனைப் பறிகொடுப்பதே சகித்தற்கரிய ஸஞ்சலமாம். தன் கணவன் சென்ற இடம் தெரியாமல் தவிப்பது மகாகஷ்டமும் அவமானமுமன்றோ? தன்னைச் சுமங்கலியென்பதா? அமங்கலியென்பதா? ஒன்றும் நிச்சயிக்கக்கூடவில்லை. ஊரார் தன் தலைமீது ஏற்றிய அமங்கலத்வமே சாஸ்வதமாயிற்று. பிறந்த பெண் குழந்தையைப் பற்றி அண்டை அயலார் வம்பு பேசத் தொடங்கினார்கள். மூன்றுமாத கர்ப்பம் அவ்வளவாக வெளிக்குத் தோன்றாது. எட்டாவது மாதக் கடைசியிலும் குழந்தை ஜனிப்பது உண்டாதலின், பத்து மாதமும் நிறைந்து மகவு பிறந்ததாயினும், எட்டாவது மாதத்தில் என்றே எல்லோரும் கூறி அதை வித்யாஸமாகப் பேதப்படுத்தி அதற்கான ஸம்சய சரக்குகளையும் கூட்டித் தங்கள் அவதூறை உண்மைப்படுத்த முயற்சித்தனர். சிலர் பகிரங்கமாகவே அப்பெண்மணி மீது தோஷாரோபணம் செய்தனர். சிலர் அவளைத் தோஷமற்றவளென்றனர். இவர்கள் கூறும் வார்த்தைகளெல்லாம் இரும்பு முட்களைப்போல் அந்த சாந்தையின் ஹிருதயத்தில் சுறுக்குச் சுறுக்கென்று தைத்ததால், 'ஹா! பகவானே நீயே துணை' என்று கதறினாள். அவளுக்கு ஜனித்த பெண் குழந்தை உத்தம மார்க்கத்திலேயே உதயமாயிற்றென்பதை அவளது பெற்றோர்கள் அறிவாராயினும் ஊராரின் தூற்றுதலை அடக்கக்கூடவில்லை. பெண்மணி நன்கு படித்தவள். வித்யாவந்தை. ஆனால் பரம ஏழை. அவளுக்கு இரண்டொரு அநாமதேயக் கடிதங்களும் வந்தன. இன்ன இடத்திலிருந்தால் அவளைச் சந்தித்து உபநாயகியாக ஏற்றுக்கொள்வதற்கான முடிவு வார்த்தைகளை நிச்சயப்படுத்தலாமென்று அக்கடிதங்களில் குறிப்பிட்டிருந்தன. பெண்மணி, கண்ணீரும் கம்பலையுமாக அக்கடிதங்களைத் தன் பிதாவிடம் காண்பித்தாள். பெற்றவயிறு பொறுக்குமா? தானே அவ்விடத்திற்குச் சென்று நடக்கும் விஷயங்களைக் கிரகிக்க வேண்டுமென்று தந்தை தீர்மானித்தான்.

இரவு எட்டுமணியாயிற்று. நல்ல நிலாக்காலம். எவரும் நெருங்காத ஒரு பாழுங்குளத்துக்கருகில் தந்தை உலாவியவாறு இருந்தான். சில நிமிஷங்களுக்குப் பிறகு இருவர் நன்றாக உடை தரித்துக்கொண்டு அங்கு தோன்றினர். பெண்மணியின் பிதாவே அங்கு நின்றுகொண்டிருந்ததால் அவனைக் கண்டு, "ஓகோ நீரே வந்துவிட்டீரா, பரமானந்தம், எங்கள் கடிதம் கிடைத்ததா?, உமது உத்தேசம், என்ன?"வென்றனர். தந்தையோ ஆத்திரத்தில் தன்னை மறந்தான். எதிர்க்கத் தொடங்கிக்கொண்டான். இருவரும் கை கலந்தனர். பெண்ணைப் பெற்றவன் எப்போதும் பலஹீனனே. இன்னும் அப்பெண் பதியைப் பிராணனுடன் பிரிந்து பரமதுக்காக் கிராந்தையாய் இருப்பின், அவளை உலகத்தில் தோற்றுவித்த பிதாவின் உள்ளத்தில் வலிமை என்பது எங்கிருந்து வரும்? வியஸனமே அவனைப் பிடித்து அவன் தேகத்தை உருக்கிவிடுமன்றோ? இரு விடர்களும் இப்பரிதாப மனுஷ்யனை நன்றாகப் புடைத்து இரத்தக் காயங்களாக்கிவிட்டுச் சென்றனர். வெகுநேரம் வரையில் தந்தைக்குப் பிரக்ஞையேயில்லை. இரவு அவ்வழியாக 'ரோந்து' சுற்றி வந்த போலீஸ் வீரன், தந்தையின் அலங்கோலத்தைக் கண்டு எழுப்பி வீட்டில் சேர்த்தான். மாதாவும் மகளும் அதைக் கண்டு அலறினர்.

பெண்மணி இனிதான் அவ்வூரில் இருப்பது அபாயகரமென்று தீர்மானித்து எவருடனும் சொல்லிக்கொள்ளாமல் தன் குழந்தையுடன் காசிக்குச் சென்றாள். அகதிக்குத் தெய்வமே துணையென்பதாக, அங்கு தனவானாகிய ஒரு பிரபுவின் குடும்பத்தாரால் ஆதரிக்கப்பட்டாள். சில காலம் அங்கிருந்துவிட்டு, தன் பெற்றோர்களைப் பார்க்கவேண்டுமென்ற பிரியத்தால் தன் ஊருக்குப் புறப்பட்டாள். இவளை ஆதரித்த கனவான் செல்வ சம்பத்தில் மிகுந்தவராயினும் புத்திரஸம்பத்து இன்மையால் இவளது பெண் குழந்தையைத் தனது சொந்த புத்திரி போலவே வளர்த்து வந்தான். ஆகவே அதைப் பிரிய மனமின்றி அவளுக்குச் செலவுக்கு வேண்டியது கொடுத்துப் பெற்றோருடன் சீக்கிரம் திரும்பித் தன்னிடம் வந்துவிடும்படி சொல்லியனுப்பினான். அவன் வார்த்தையைத் தள்ள முடியாமல் தனக்குத் துணை வந்தவர்களோடும் புறப்பட்டுத் தன் ஊர் சேர்ந்து சில காலம் அங்கேயே தங்கிவிட்டாள். பல காரணங்களாலும் புறப்படத் தடையாகி, ஐந்து வருஷங்களுக்குப் பிறகு தன் பெற்றோர்களுடனும் காசிக்குப் பிரயாணப்பட்டு வந்து சேர்ந்தாள்.
இதன் மத்தியில் காசியிலிருந்த தனவான் ஊர் சென்ற பெண்மணியைப்பற்றி எந்த விவரமும் தெரியாததாலும், அவளுடைய விலாஸமும் எங்கோ தவறிவிட்டதாலும், தன்னிடம் நான்கு வருஷங்களாய்க் குமாஸ்தா வேலை பார்த்துவரும் 34-வயதுள்ள ஒருவனுக்கு அப்பெண் குழந்தையைத் தருவதென்று தீர்மானித்து விவாகத்துக்கும் ஏற்பாடு செய்து விட்டான். விவாக முகூர்த்தத்திற்கு அனைவரும் வந்திருந்து சிறப்பித்தனர். மாங்கல்ய தாரணம் புனைவதற்குச் சில நிமிஷங்களே இருக்கையில் நமது பாக்கியரதியும் அவளுடைய பெற்றோர்களும் அங்கு போய்ச் சேர்ந்தனர். பாக்கியரதி மணப்பெண்ணாய் ஸர்வாலங்கிருத சுந்தரியாக நின்ற தனது புத்திரியை ஆசையோடும் அணைத்து முத்தமிட்டுக்கொண்டாள். பாக்கியரதி தனவானை நோக்கித் தன் பெண்ணுக்கு நிச்சயித்த வரனைத் தான் பார்க்கவேண்டும் மென்றாள். உடனே தனவான் குமாஸ்தாவுக்குச் சொல்லியனுப்ப, மணமகனான குமாஸ்தா பரமஸந்தோஷத்துடனும் வந்து தனக்கு இனி மாமியாகப்போகும் பெண்மணியின் பாதங்களில் சாஷ்டாங்கமாய் வீழ்ந்து நமஸ்கரித்தான். அவளும் ஆசீர்வதித்தாள். ஐயோ! பகவான் செய்யும் கூத்தை யார் அறிவர்? ஸந்தோஷம் உடனே வியஸனமாக மாறியது. மாமியார் தன் மருமகனைப் பார்க்கவில்லை. அவன் தன் புருஷனென்றறிந்தாள். மூர்ச்சையானாள்.

உடனே விவாக வீடு அலங்கோலமாயிற்று. விவாகத்துக்கு வந்திருந்த எல்லோரும் இந்த அதிசயத்தைக் கண்டு திகைத்தனர். மணப்பெண் மயங்கி நின்றாள். பாக்கியரதியின் பெற்றோர்களும் தனவானும் ஒரு பெரிய அமங்களம் நேரவிருந்ததை நடவாது தடுத்துவிட்ட கடவுளின் அருளை வியந்து கொண்டாடினர். மருமகன் மாமியைக் கண்டு தலைகுனிந்தான். பாக்கியரதியும் மூர்ச்சை தெளிந்து எழுந்து தன் பதியை வணங்கினாள். மணப்பெண்ணும் தன் பிதாவை நமஸ்கரித்தாள். ஒரு பயங்கர ஸம்பவம் எப்படியோ பகவத் கருணையால் விலகி எல்லோரும் ஆநந்த ஸாகரத்தில் ஆழ்ந்தனர். தனவானின் தமக்கை புதல்வனுக்கு அப்பெண் குழந்தையைத் தருவதென்று அப்பொழுதே நிச்சயமாகி, அதே விவாகப் பந்தலில் மறுதினம் விவாகம் மங்களமாய் நிறைவேறிற்று. தான் தன் மனைவியைப் பிரிந்து ஓடிவிட்ட சமயத்தில் தன் மனைவி மூன்றுமாத கர்ப்பமென்று குமஸ்தாவே வாய்விட்டுச் சொல்வதானான். பெண்ணைப் பற்றிய ஸம்சயமும் நிவர்த்தியாயிற்று. பிறகு சில மாதங்கள் பொறுத்துப் பாக்கியரதி தன் பர்த்தாவுடனும் பெற்றோர்களுடனும் தன் குமாரத்தி மருமகன் இவர்களோடும் தன் கிராமத்திற்கு வந்துசேர, முன்பு தூற்றிய பந்துக்களெல்லாம் பாக்கியரதியின் செல்வத்தையும் அவளது அதிர்ஷ்டத்தையும் நோக்கித் தங்களின் ஊத்தை வாயை மூடிக்கொண்டு வெகு விசுவாசமாய் உறவாட நெருங்கினர். கடவுளின் கருணையையும், பந்து ஜனங்களின் ஸமயத்துக்கேற்ற ஸ்வபாவத்தையும் கண்டீர்களா?

எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு
Share: 




© Copyright 2020 Tamilonline