|
இரா. நாறும்பூநாதன் |
|
- அரவிந்த்|செப்டம்பர் 2016| |
|
|
|
|
நெல்லை மண்ணுக்கே உரிய மண்வாசனையுடன் எழுதுவோரில் இரா. நாறும்பூநாதனும் ஒருவர். எழுத்தாளர், பேச்சாளர், சமூக ஆர்வலர் எனப் பலதிறக்குகளில் இயங்கிவரும் இவர் பிறந்தது கழுகுமலையில். தந்தை இராமகிருஷ்ணன் தமிழாசிரியர். அவர்மூலம் புத்தகங்கள் அறிமுகமாகின. கோவில்பட்டி ஆயிரவைஸ்ய உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்பருவம் கழிந்தது. அங்கு திருவள்ளுவர் மன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழறிஞர்கள் வருவர். அவர்களது பேச்சும் சிந்தனையும் தமிழார்வத்தை வளர்த்தன. ஆசிரியர் புலவர் மு. படிக்கராமு இவருக்குத் தமிழார்வம், இலக்கிய ஆர்வம் மேம்படக் காரணமானார். பள்ளிநூலகம் வாசிப்பார்வத்துக்குத் தீனிபோட்டது. அக்காலகட்டத்தில் இவரே கற்பனைக் கதைகளை எழுதி, படமும் வரைந்து சகமாணவர்களிடம் காட்டுவார். அவர்களது ஊக்குவிப்பு கதைசொல்லும் ஆர்வத்தைத் தூண்டியது. கல்லூரிக்காலத்தில் இவ்வார்வம் தீவிரமானது. நண்பர்கள் உதயசங்கர், பார்த்தசாரதி, முத்துச்சாமி போன்றவர்களுடன் இணைந்து 'மொட்டுகள்' என்ற பெயரில் கையெழுத்து இதழ் ஒன்றை நடத்தினார். அதற்கு ஓவியம் வரைவதும் எழுதுவதும் இவரது முக்கியப் பணியானது. நடிகர் சார்லி, நண்பர் வெள்ளதுரை ஆகியோருடன் இணைந்து 'எண்ணங்கள்' இதழை நடத்திய அனுபவமும் உண்டு.
எழுத்தாளர் தமிழ்ச்செல்வனுடனான சந்திப்பு வாழ்வில் திருப்புமுனையானது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறிமுகம் ஏற்பட்டது. அது புதிய பல படைப்பாளிகளுடனான தொடர்பிற்கும் நட்புக்கும் வழிவகுத்தது. அக்காலகட்டத்தில் வாசித்த செம்மலர், தாமரை, தீபம், கணையாழி, கண்ணதாசன் போன்ற இதழ்கள் எழுத்தார்வத்தைக் கொழுந்துவிடச் செய்தன. 'தொழில்' என்ற சிறுகதையை எழுதினார். எழுதவரும் என்ற நம்பிக்கையை அச்சிறுகதை அளித்தது. உதயசங்கர், தமிழ்ச்செல்வன் போன்றோருடன் இணைந்து 'த்வனி' என்ற இதழையும் நடத்தியிருக்கிறார். எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியுடனான சந்திப்பு மேலும் எழுதத் தூண்டுகோலானது. செம்மலர், தாமரை, புதுவிசை போன்ற இதழ்களில் எழுதத் துவங்கினார். தி.க. சிவசங்கரன், வல்லிக்கண்ணன் போன்றோர் வாசித்துவிட்டு, தொடர்ந்து எழுதும்படி ஊக்குவித்தனர்.
இக்காலகட்டத்தில் நாடகத்தின் மீது ஆர்வம் ஏற்படவே நண்பர்களுடன் இணைந்து 'தர்சனா' என்ற நாடகக்குழுவை உருவாக்கி, நிஜநாடக இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டார். ச. தமிழ்ச்செல்வன், கோணங்கி, உதயசங்கர் உள்ளிட்ட எழுத்தாளர்கள் இணைந்து நடத்திய 'ஸ்ருஷ்டி' நாடகக்குழுவில் இணைந்து நூற்றுக்கு மேற்பட்ட நாடகங்களைத் தமிழகம் முழுவதும் சென்று நடத்தினார். செம்மலர், புதுவிசை போன்ற இதழ்களில் அவ்வப்போது எழுதிவந்தார். புதுவிசை ஆசிரியர் குழுவிலும் சிலகாலம் பணியாற்றினார்.
இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 'கனவில் உதிர்ந்த பூ' என்னும் தலைப்பில் நூலாக வெளியானது. அதற்குப் பரவலான வாசககவனமும் கிடைத்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு 'ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்' வெளியானது. அது இவருக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. சாதாரண மனிதர்களாக நாம் கருதுபவர்களின் வாழ்க்கைச் சித்திரிப்பை இயல்பாகக் கண்முன்னே காட்டுவதாக இவரது படைப்புகள் அமைந்துள்ளன. மண்ணின் மணத்தோடு யதார்த்தச் சித்திரிப்பாக இவரது கதைகள் அமைந்துள்ளன. "நாறும்பூநாதனின் பெரும்பாலான கதைகளில் வீடும் குடும்பமும் முக்கியக் களங்களாக அமைந்திருக்கின்றன. பால்யத்தின் நினைவுச் சுவடுகளைப் பின்பற்றி எழுதிப் பார்த்திருக்கிற கதைகள். அதனால் அதன்மீது ஈர்ப்பு ஏற்படுவது இயல்பானதுதான்" என்று இவரது சிறுகதைகளை மதிப்பிடுகிறார் எழுத்தாளர் உதயசங்கர். "நமக்குக் காற்றைப்போல், இசையைப்போல் மொழி வேண்டும். குழந்தைகள் ஓடிவரும் தேவவனம் வேண்டும். அதற்கான ஒரு ஜன்னலைத் திறந்திருக்கிறது நாறும்பூநாதனின் கதைகள்" என்று வரவேற்கிறார் கவிஞரும் எழுத்தாளருமான கிருஷி. நாறும்பூநாதனின் சிறுகதை 'கனவில் உதிர்ந்த பூ' பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா தன்னாட்சிக் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. தினமணி நாளிதழில் இவர் எழுதிவரும் இலக்கியம் மற்றும் வரலாறு சார்ந்த கட்டுரைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. |
|
|
இவர் எழுதியிருக்கும் 'கண்முன்னே விரியும் கடல்' முக்கியமான தொகுப்பு நூலாகும். திருநெல்வேலியைச் சுற்றி வாழ்ந்த சாதாரண மக்கள்முதல் புகழ் பெற்றவர்கள்வரை பலரைப்பற்றிய சுவாரஸ்யமான வரலாற்றுக் குறிப்புகள் இந்நூலில் கிடைக்கின்றன. வரலாற்றுப் பதிவுகள், நெல்லையைப் பற்றிய நினைவுகள், நாறும்பூநாதனின் ஆசிரியர்கள், நண்பர்கள், வாழ்க்கை அனுபவங்கள், கலை, இலக்கிய இயக்கங்கள் எனப் பல செய்திகள் இந்நூலில் மிகவும் சுவாரஸ்யமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. சான்றாக, பாளையங்கோட்டையில் இருக்கும் புகழ்பெற்ற லூர்துநாதன் சிலைபற்றிக் கூறும்போது, அவர், சேலத்திலிருந்து வந்து தனது கல்லூரிப் பேராசிரியருக்காக உயிரை மாய்த்துக்கொண்டவர் என்ற வரலாற்றுத் தகவலை முன்வைக்கிறார். நெல்லையின் புகழ்பெற்றவற்றுள் ஒன்று சுலோச்சன முதலியார் பாலம். யார் அந்த முதலியார், எதற்கு அந்தப் பாலத்திற்கு அவர் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது, அவர் ஏன் அதைக் கட்டினார் என்பது போன்ற சுவாரஸ்யமான பல தகவல்கள் இந்நூலில் உள்ளன. இவை அனைத்தும் ஃபேஸ்புக்கில் இவரால் எழுதப்பட்டவற்றின் தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. ஃபேஸ்புக்கில் இவர் பகிர்ந்துகொள்ளும் சின்னச்சின்ன சுவாரஸ்யமான வரலாறு, இலக்கியம் சார்ந்த தகவல்கள் பலரும் அறியாதவை. ஆனால், அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியவை.
'ஒரு தொழி்ற்சங்கப் போராளியின் டயரிக் குறிப்புகள்', 'கடன் எத்தனை வகைப்படும்' போன்ற நூல்கள் வங்கி ஊழியர்களுக்காக எழுதப்பட்டவை. அவர்களுக்கான அகராதி என்று இவற்றைச் சொல்லலாம். 'இலை உதிர்வதைப் போல' என்பது இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. தற்போது நாவல் ஒன்றை எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். நெல்லையின் நூறாண்டுகளைக் கடந்த பள்ளிகளின் வரலாற்றைப்பற்றி எழுதுவதற்கான தரவுகளைச் சேகரித்து வருகிறார். பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற நாறும்பூநாதன், குடும்பத்துடன் பாளையங்கோட்டையில் வசிக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவரும்கூட. பூமணி, தேவதச்சன், கௌரிசங்கர், சோ. தர்மன், ச. தமிழ்ச்செல்வன், கோணங்கி, உதயசங்கர், முருகபூபதி, வித்யாசங்கர் போன்ற கோவில்பட்டியின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வரிசையில் நாறும்பூநாதனுக்கும் மிகமுக்கிய இடமுண்டு.
அரவிந்த் |
|
|
|
|
|
|
|