|
|
|
அன்புள்ள சிநேகிதியே,
ஒரு இக்கட்டான நிலைமை. என் மாமியார் அடுத்தவாரம் இந்தியாவிலிருந்து வருகிறார். என் கணவருக்கும் சரி, எனக்கும் சரி, இதில் அவ்வளவு விருப்பமில்லை. சிறு வயதிலிருந்தே அவர் என் கணவரிடம் பாராமுகமாக இருந்து இருக்கிறார். என் கணவர் சிறு வயதில் நிறைய அவருடைய பெற்றோர்களுக்குத் தொந்தரவு கொடுத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அவருடைய அண்ணா மிகவும் சாது. மூன்று வருடம்தான் பெரியவர். ஏதோ விளையாட்டுத்தனமாக இவர் அடித்து மாமியாருக்கு கையெலும்பு முறிந்துவிட்டதாம். அதிலிருந்து இவரைக் கண்டாலே ஒதுங்கித்தான் இருந்திருக்கிறார். என் மாமனார் அவ்வளவு வித்தியாசம் காட்டவில்லை. நான் அவர் வகையில் தூரத்து உறவு. திருமணம் முடிக்கும் முன்பே, "அம்மா அவன் கொஞ்சம் கோபக்காரன். சிறுவயதில் முரடனாக இருந்தான். இப்போது மாறிவிட்டான். இல்லாவிட்டால் அமெரிக்காவில் எட்டு வருடம் தனியாக இருந்து M.S., Ph.D. முடித்துக் காலந்தள்ளி இருக்க முடியுமா? நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போனால் வாழ்க்கை அழகாக இருக்கும்" என்று உண்மையைச் சொன்னார். அவருடன் பழக ஒரு மாதம் கொடுத்து அப்புறம் என் முடிவைச் சொல்லச் சொன்னார். நானும் பழகிப் பார்த்ததில் என் கணவரின் கோபம் பெரிய குறையாகத் தெரியவில்லை. I think he was longing for understanding and love. என்னிடம் அவற்றை உணர்ந்ததும் அவருக்கு அவ்வளவாகக் கோபம் வரும் நேரம் அதிகமில்லை. திருமணம் முடிந்து 15 வருடங்கள். இரண்டு பெண் குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கிறோம்.
ஆனால், என் கணவருக்கும் மாமியாருக்கும் எங்கள் திருமணம் முடிந்தபின்னும் எந்த ஒட்டுதலும் இல்லை, மாற்றமும் இல்லை. என் பெரிய மைத்துனரும் இங்கேயே செட்டில் ஆகி இருந்தார். அவர் குடும்பத்துடன் இரண்டு மாதம் மூன்று மாதம் தங்கும் மாமியார், மாமனார் எங்களுடன் ஒரு வாரந்தான் தங்குவார்கள். எனக்கும் என் மாமியார்மேல் கோபம் இருந்தது. எப்போதோ சிறுவயதில் நடந்த சம்பவத்தை இன்னும் நினைவில் நிறுத்தி, எங்கள் குடும்பத்தையே உதாசீனம் செய்ததுபோலத் தோன்றும். அதுவும் எனக்கு அம்மா, அப்பா, என் குழந்தைகள் சிறுவயதாக இருக்கும்போதே மறைந்து விட்டார்கள். என் பெண்களுக்கும் தாத்தா, பாட்டி வேண்டும் என்ற ஆசை இருக்காதா? என் மாமனாருக்கு ஆசை இருந்தும் தன் மனைவிக்கு உடம்பு சரியில்லை என்ற காரணத்தை வைத்து, தனியாக வந்து தங்குவது இல்லை.
மூன்று மாதங்களுக்கு முன்பு என் மைத்துனர் திடீரென்று ஹார்ட் அட்டாக்கில் போய்விட்டார். அவர் மனைவி மனநிம்மதிக்காக இந்தியா போயிருக்கிறார். என் மாமியாருக்கு கிரீன் கார்டு புதுப்பிக்க வேண்டும். ஆகவே வேறு வழியில்லாமல் இங்கே வருகிறார் என்று நினைத்தோம். கடைசி நிமிடத்தில் அவர்கள் வீட்டில் குடியிருப்பவர்கள் கோர்ட்-கேஸ் என்று, என் மாமனார் டிக்கெட்டைக் கேன்சல் செய்ய வேண்டி வந்துவிட்டது. அவருடைய ரின்யூவல் கொஞ்சம் தள்ளிப் போகலாம். இப்போது எங்கள் மாமியாரை நாங்கள் அழைத்து வந்து வைத்துக்கொண்டு (என் மாமனார் வர இன்னும் இரண்டு மாதம் ஆகும்) இருக்க வேண்டும். அம்மாவிற்கும் பிள்ளைக்கும் கொஞ்சங்கூட ஒட்டுதல், உறவில்லை. இது அதிசயம் ஆனால் உண்மை. எனக்கு எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை. வழி சொல்லுங்கள்?
இப்படிக்கு, ........... |
|
அன்புள்ள சிநேகிதியே,
குடும்பத்தின் முக்கிய நபர் - ஆனால் அழையாத விருந்தாளி. உங்களுக்கு இக்கட்டான நிலைமை தான். ம்ம்ம்... என்ன செய்வது?
* என்னிடம் இருந்து கருத்துக்கள் வந்தாலும் வராவிட்டாலும் அந்த விருந்தாளி உங்கள் வீட்டுக்கு வரத்தான் போகிறார். நீங்கள் ஏர்போர்ட்டுக்குப் போய் அழைத்து வரத்தான் போகிறீர்கள்.
* உங்களுக்கு இருக்கும் இக்கட்டான நிலைமை அவருக்கும் இருக்கும். அவருக்குச் சங்கடம் இன்னும் அதிகமாகவே இருக்கும். வேறு வழியில்லாமல் தான் அவரும் வருகிறார். தங்குவதற்குப் பலமுறை யோசித்திருப்பார். So, both of you are on Par.
* உங்கள் மாமியாரின் போக்கு உங்கள் கணவரைத்தான் அதிகம் பாதித்து இருக்கிறது. உங்கள் எதிர்பார்ப்புகள் குறைவாகவே இருந்திருக்கும். அவருடன் எப்படி நடந்து கொள்வது என்பதை நீங்களேதான் முடிவு செய்யவேண்டும்.
* உங்கள் மாமியாரை நீங்கள் நடத்தும் வகையில் (பழையதை மறந்து) அவருடைய போக்கும் எண்ணங்களும் மாறலாம். உங்கள் இருவரிடமும் சிநேகம்கூட வலுக்கக் கூடும்.
* இருந்த இரண்டு மகன்களில், தான் முழுதும் நம்பியிருந்த மகனைத் தொலைத்துவிட்ட அந்தத் தாய்க்கு, இந்த மகனை உடலாலும் மனதாலும் தொலைக்கக்கூடாது என்று உள்ளுணர்வு உறுத்திக்கொண்டே இருக்கும். அவரும் தன் பங்குக்குக் கொஞ்சம் வெளிப்படையாக அன்பைச் செலுத்தக்கூடும்.
* முதலில் உங்கள் கணவரும் மாமியாரும் பேசுவதைத் தவிர்ப்பார்கள் நீங்கள் அதைச் சரிக்கட்டி, அவர்களுக்குப் பாலமாக இருந்தால் கொஞ்ச....ம் கொஞ்ச....மாக சங்கட நிலையில் இருந்து சகஜ நிலைக்கு வரலாம். The ball is in your court. பழையதை மறக்கக் கற்றுக்கொண்டால் எல்லாமே சீர்படும். தயக்கமும் இருக்காது தளர்ச்சியும் இருக்காது.
|
|
|
|
|
|
|
|