|
|
|
அன்புள்ள சிநேகிதியே
போன 'தென்றல்' இதழில் ஒரு சிநேகிதர், தன் நண்பரின் விவாகரத்து முடிந்து, குழந்தைகளைப் பொறுப்பேற்கும் வேதனையிலும் அவதியிலும் எப்படி உதவிபுரிந்து, ஆதரவாக இருந்தார் என்பதைப் படித்தேன். எங்கள் வாழ்க்கையிலும் சுமார் 7 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நாங்கள் இங்கே வந்து செட்டில் ஆகி ஐந்து வருடங்கள் இருக்கும். என் கணவருக்குத் தெரிந்த குடும்பம். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் பெரிய பணக்காரர்கள். அவர்கள் வீட்டுப்பையன் இங்கே படிக்க வந்தபோது எங்களால் முடிந்த உதவி செய்தோம். அவன் நல்ல பையன். ஊருக்குப்போய் அப்பா, அம்மா பார்த்து வைத்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு இங்கேயே செட்டில் ஆகத் தீர்மானம் செய்தான். இந்த வாழ்க்கை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் பெண்ணுக்கும் வெகேஷன், வெளியே சாப்பிடுதல், மால், சினிமா என்றெல்லாம் பிடித்தது. அவளும் பணக்காரப்பெண். வேலைசெய்து பழக்கம் இல்லை. 'செல்லமாக' வளர்த்திருக்கிறாள். புது மனைவி மயக்கத்தில் இந்தப் பையனும் அவளுடைய குறைபாடுகளைப் பொருட்படுத்தாது ஜாலியாக இருந்தான். அவளுக்குச் சமைக்கப் பிடிக்காது. வீட்டை கவனிக்கப் பிடிக்காது. அவ்வப்போது ஏதேனும் சாக்குச்சொல்லி எங்கள் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு கையிலும் எடுத்துக்கொண்டு போவாள். நானும் பல மாதங்கள் ஆசையாகத்தான் செய்தேன். தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு நேரத்தில் எனக்குத் தோன்றியது, "இந்தப் பெண்ணின் சுபாவத்தை இப்படியே வளரவிட்டால் குடும்பத்துக்குச் சரிப்பட்டு வராதே" என்று, மனதை நோகவைக்காமல் அவளிடம் எடுத்துச் சொன்னேன். அப்படியும் பெரிய மாற்றம் ஒன்றும் தெரியவில்லை.
ஆனால், அந்தப் பையன் புரிந்துகொண்டான். அவனே அவளைப்பற்றிக் குறைகூறவும் ஆரம்பித்தான். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களிடம் உரசல்கள், வாக்குவாதங்கள். அவ்வப்போது தலையிட்டு சமரசம் செய்வோம். இதற்கிடையில் அவள் கருவடைந்தாள். அந்த மகிழ்ச்சியில் கொஞ்சம் சண்டைகள் பின்வாங்கின. அவளைக் கவனிக்க அவள் அம்மா, அக்கா என்று வந்து தங்கி, அவள் குழந்தையுடன் இந்தியா போய் மே மாதம் தங்கிவிட்டு வந்தாள். குழந்தையைக் கவனிக்க ஆயா போட்டுக்கொள்ள வேண்டும் என்று அவள் வீட்டில் நிர்ப்பந்தம். மறுபடியும் கொஞ்சம் தகராறு. அவர்கள் வீட்டில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அனுப்பத் தயாராக இருந்தார்கள். இது அவனுடைய தன்மானத்தை அவமதிப்பதாகத் தோன்றியது. பணக்காரவீட்டுப் பிள்ளை என்றாலும் இங்கே வாழ்க்கையின் கலாசாரத்தையும், பிறரை அண்டி வாழாமல் இருக்கவும் கற்றுக்கொண்டிருந்தான். குழந்தையை கவனிக்காமல் விட்டுவிடப் போகிறாளே என்ற பயத்தில் ஒரு Nanny போட்டு விட்டிருந்தான். அப்புறம் அவனுக்கே Lay off' வந்துவிடும் என்ற நிலைமையில் ஆயாவை நிறுத்தி, அவனால் முடிந்தவரை கவனித்துக் கொண்டான். இந்தப்பெண் நல்லவள்தான். ஆனால், குழந்தைத்தனமாகத்தான் இருந்தாள். முடிவில், அவனுக்கே பொறுக்க முடியாமல், எங்களிடம் "அவளை இந்தியாவிற்கு அனுப்பிவிடப் போகிறேன். எனக்கு எல்லாம் வெறுத்துப் போய்விட்டது. விவாகரத்து செய்துவிடலாம் என்றிருக்கிறேன்" என்ற அதிர்ச்சியான செய்தியைச் சொன்னான்.
அவன் வேலையிலும் மிகவும் ஸ்ட்ரெஸ் இருந்தது. அந்தப் பெண்ணுக்கு எப்படித் தெரிவிப்பது என்று தெரியாமல் எங்களிடம் உதவிகேட்டான். அழகான மனைவி, அழகான குழந்தை, அருமையான குடும்பம். மகிழ்ச்சியான தருணங்கள் எவ்வளவோ வருங்காலத்தில் காத்துக் கிடக்கும்போது ஏன் இந்த முடிவு? இதன் பின்விளைவுகள் எத்தனையோ இருக்கிறதே! நானும், என் கணவரும் யோசித்தோம். இந்தப் பையனை ஒரு 10 நாள் ஆஃபீஸ் வேலையாக வெளியூர் போகச் சொல்லி, அந்தப் பெண்ணையும் குழந்தையையும் எங்களிடம் கொண்டு வைத்துக்கொண்டோம். மெல்ல அந்தப் பெண்ணிற்கு குழந்தை வளர்ப்பின் கலையை படிப்படியாகச் சொல்லிக் கொடுத்தேன். கணவரும் ஆயாவும் இல்லாத நிலையில், அவள் கொஞ்சம் எங்களுக்குப் பயந்துகொண்டு தானே குழந்தையை என் மேற்பார்வையில் ஒழுங்காகக் கவனித்துக் கொள்ள ஆரம்பித்தாள். அவ்வப்போது சமையல் ஐட்டங்கள் கற்றுக்கொடுக்க முயற்சி செய்தேன். அவர்கள் அசைவம். அவளுக்கு எங்கள் சைவச்சமையலைக் கற்றுக்கொள்ளப் பிடிக்கவில்லை. என் சமையல் மட்டும் பிடிக்கும். டிஷ் வாஷ் செய்வதையும் தவிர்த்தாள். ஏதோ கொஞ்சம் முன்னேறியிருக்கிறாள் என்று என்னைத் தேற்றிக்கொண்டேன். அவள் திரும்பிப் போனபின் மறுபடியும் கணவன் - மனைவிக்குள் சச்சரவு. எங்களுடன் 10 நாள் இருந்த உரிமையில், அவள் அவனைப்பற்றி புகார்செய்ய ஆரம்பித்தாள். எனக்கும் அந்த உரிமை கிடைத்ததால் அவளிடம் கொஞ்சம் கண்டிப்பாக இருக்க ஆரம்பித்தேன். 'எச்சரிக்கை' செய்திகளைத் தெரியப்படுத்தினேன்.
'அவன் விட்டுவிட நினைக்கிறான்' என்பதைப் புரிந்து கொண்டவுடன் முதலில் கோபப்பட்டாள். அப்புறம் பயம் வந்துவிட்டது. அவனே அவளிடம் நேர்படச் சொன்னபோது, எங்களைச் சமரசத்துக்கு அழைத்தாள். அவன் அந்தச் சமயத்தில் வெறுப்பின் எல்லைக்கே போய்விட்டான். நாங்கள் இருவரும் வாராவாரம் அவர்கள் வீட்டுக்குப் போய் அவளைச் சமைக்கச் சொல்லி (நான் குழந்தையை பார்த்துக் கொண்டிருப்பேன்) சாப்பிட்டுவிட்டு நல்ல வார்த்தைகள் சொல்லிவிட்டு வருவோம். ஆறு மாதத்திற்குள் அவளும் மாறிப் போயிருந்தாள். இவனும் வேலை நன்கு நிலைத்து கொஞ்சம் சமாதானம் ஆகியிருந்தான்.
அதற்குப் பிறகு அவர்கள் இந்தியாவிற்கே போகவேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. அவன் அப்பா காலமானதால் பிசினஸைக் கவனித்துக்கொள்ள நேர்ந்தது. இன்னும் நட்பு மறக்கவில்லை. நன்றி மறக்கவில்லை. எப்போது பிசினஸ் விஷயமாக இங்கே வந்தாலும், முடிந்தால் எங்களை வந்து பார்த்துவிட்டுப் போகிறான். அவளும் அவ்வப்போது ஃபோன் செய்து பேசுகிறாள். மிகவும் பொறுப்பாகிவிட்டாள். அங்கே போய் ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. மனைவியையும், குழந்தைகளைப் பற்றியும் பெருமையாகப் பேசினான், போனமுறை சந்தித்தபோது. நாங்கள் ஒன்றும் பெரிதாகச் செய்து விடவில்லைதான். இருந்தாலும் நினைப்பு வந்தது எழுதுகிறேன். முடிந்தால் பிரசுரியுங்கள்.
இப்படிக்கு ................... |
|
அன்புள்ள சிநேகிதியே
வாழ்க. வளர்க. உங்களைப் போல நண்பர்கள் நாள்தோறும் நாடெங்கும் பெருகட்டும். திருமண முறிவுகளும், பிரிவுகளும் குறையட்டும்.
வாழ்த்துக்கள், டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன், கனெக்டிகட் |
|
|
|
|
|
|
|