Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்
கவிதைப்பந்தல் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | முன்னோடி | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | முன்னோட்டம்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku | சதுரங்கப் புலி |
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
எர்தாம்டனின் சுடர் (புத்தகம் – 1 / அத்தியாயம் – 6)
- ராஜேஷ், Anh Tran|ஏப்ரல் 2016|
Share:
லெட்டரை எடுத்த கீதாவுக்கு ஒரே வியப்பு. இந்த நேரத்தில், அதுவும் அருணுக்கு ஒரு கடிதம் வைத்திருப்பது யாராக இருக்கும்? வீட்டுக்குள் வந்து கடிதத்தைப் பிரித்தார். அதனோடு ஒரு சின்ன பாக்கட்டில் இரு விதைகள் இருப்பதைப் பார்த்தார். ஒன்றும் புரியாமல் மெதுவாக அமர்ந்து அந்தக் கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தார்.

"பிரியமுள்ள அருணுக்கு,

நான் உன்னுடைய செல்ல நாய்க்குட்டிபற்றி அறிந்தேன். உனது செல்லம் இன்னும் சில நாட்களே உயிர்வாழ உள்ளது என்றும் அறிந்தேன். அதனால், அவசரமாக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

இந்த கடிதத்தோடு உள்ளே ஒரு பாக்கட்டில் இரு விதைகள் உள்ளன. அவை மிக அபூர்வமானவை, "அபூர்வமூலிகை" என்று கிழக்கு ஆசியப் பழங்குடிமக்கள் உபயோகிக்கும் ஒருவிதச் செடியின் விதை. இந்த விதையை நட்டால், அதில் இருந்து ஒரு சின்னச்செடி வரும். அந்தச் செடியில் ஒரு சின்னப் பழம் வரும். அந்தப் பழத்தின் சாற்றைக் கொடுத்தால் உனது செல்ல நாய் பிழைத்துக்கொள்ளும். இது உண்மை. உனது செல்ல நாய் பிழைப்பதற்கு இதுவே தற்போது ஓரே வாய்ப்பு.

மேற்கொண்டு கவனமாகப் படிக்கவும்: (1) இந்த விதைகள் மிக அபூர்வமானவை. இது என்னிடமுள்ள கடைசி விதைகள், வீணாக்கிவிடாதே. (2) விதையை வளமான மண்ணில் நடவேண்டும். நட்ட மறுநாளே செடி முளைத்து, அதிலிருந்து ஒரு சின்னப்பழம் வந்துவிடும். (3) அந்தப் பழத்தை 24 மணி நேரத்திற்குள் பறிக்காவிட்டால் அது வீணாகிவிடும். (4) செடி வருடத்திற்கு ஒருமுறைதான் பழம் கொடுக்கும். அதனால், மிகவும் வேகமாகச் செயல்படவேண்டும். (5) இந்த விதையைப்பற்றி ஹோர்ஷியானா அதிபர் டேவிடிடம் எக்காரணத்தைக் கொண்டும் சொல்லிவிடாதே. இதை உன்னிடமிருந்து பிடுங்க எது வேண்டுமானாலும் செய்வான் அவன். (6) உன் அம்மா தவிர யாரிடமும் சொல்லிவிடாதே. உன் அம்மாவிற்கு இந்த விதையைப்பற்றி நன்றாகத் தெரியும்.

வேகமாகச் செயல்படு. உனது செல்ல நாய் நலமடைய எனது பிரார்த்தனைகள்."

அவ்வளவுதான் அதில் எழுதியிருந்தது. வேறொன்றும் இல்லை. படித்து முடித்த கீதாவுக்கு வியப்புக் கலந்த பயம் வந்தது. அவர் அந்த விதையைப்பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறார். அவர் வேலைபார்க்கும் நிறுவனமான ஹோர்ஷியானாவில் அந்த விதையை Bio-Engineering செய்வதற்குப் பல வருஷமாக முயன்று வருகிறார்கள். அந்த விதைக்காக எதுவும் செய்யத் தயங்கமாட்டார்கள் எனப் பயந்தார். அந்த விதைதான் பக்கரூவை பிழைக்கவைக்க ஒரே வழி என்றால், என்ன செய்வது என்று விழித்தார்.

அதற்குள், ஏதோ வேலையாக அங்கே வந்த ரமேஷ், அந்தக் கடிதத்தை கீதாவிடமிருந்து வாங்கிப் படித்தார். எதேச்சையாக அங்கே வந்த அருண், அம்மா அப்பாவைப் பார்த்தவுடன் ஒரு ஆர்வம் வந்து, அப்பா படிக்கும் கடிதத்தைப் பற்றிக் கேட்டான். ரமேஷ் ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தார். அதற்குள் கீதா படபடவென விஷயத்தைக் கூறினார். அருணின் முகத்தில் ஒரு உற்சாகம் பிறந்தது.

"அம்மா, பக்கரூ பிழைக்க வழி இருக்கா? வா இப்பவே இந்த விதையை நடலாம்" என்று பிடிவாதத்தோடு குதித்தான். "அருண், கொஞ்சம் பொறுமையாக இரு" என்றார் அப்பா. அருணுக்கு ஒரே கோபம் கோபமாக வந்தது. ஏன் ஒன்றும் புரியாமல் இப்படிச் சொல்கிறார் என்று குழம்பினான். ரமேஷ், கீதாவைத் தனியே அழைத்து மெல்லிய குரலில், அருணின் காதில் விழாமல் ஏதோ பேசினார்.
அருணுக்கு இன்னும் கோபம் வந்தது.

"அப்பா, பக்கரூவை நான் காப்பாத்தியே தீருவேன்" என்று சொல்லி, படார் என்று விதையை கீதாவிடம் இருந்து பிடுங்க முயன்றான்.

"அருண், கொஞ்சம் பொறுமையா இரப்பா" என்றார் கீதா.

"வாங்கம்மா, நம்ம வீட்டுப் பின்னாடி இந்த விதையை நடலாம்" என்று அருண் கீதாவைத் தரதரவென்று இழுத்தான். அருணின் பிடிவாதம் பார்த்து அப்பா தயக்கத்தோடு பேச ஆரம்பித்தார். "அருண், நம்ம ஊரில் ஹோர்ஷியானாவின் அனுமதி இல்லாம நாம எதையும் நடமுடியாது. இந்த ஊரில் செடி, மரம் போன்ற எல்லாமும் ஹோர்ஷியானா மட்டும்தான் வளர்க்கமுடியும். நாம பண்ணனும்னா அவங்க அதுக்கு அனுமதி கொடுக்கணும்."

அருணுக்கு எல்லாமே புதிராக இருந்தது. கீதா மெதுவாக ஹோர்ஷியானா பற்றி அருணுக்குச் சொல்ல ஆரம்பித்தார்.

ஹோர்ஷியானா எர்தாம்டன் நகரில் உள்ள அனைத்து விதமான மரம், செடி, கொடிகளைத் தன்வசம் வைத்திருந்தது. அதுமட்டுமல்ல, எல்லா விளைநிலங்களையும் தன்வசம் வைத்திருந்தது. ஒரு சிறு விதைகூட யாரும் நடமுடியாதபடி ஒரு கட்டுப்பாட்டை விதித்திருந்தது.

அம்மா சொல்லச்சொல்ல, அருணுக்குப் புரிந்தது. "அம்மா, ஹோர்ஷியானா அனுமதி கொடுக்கலேன்னா நாம என்னம்மா பண்றது? பக்கரூ பிழைக்கமாட்டானே!" கீதாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

"அம்மா, நான் வந்து ஹோர்ஷியானா அதிபர்கிட்ட கேட்டா, அவர் அனுமதி கொடுப்பாரா அம்மா?"

ஹோர்ஷியானா அனுமதி கொடுப்பது ஒருபுறம்; மறுபுறம், ஹோர்ஷியானா இந்த விதையைப் பற்றித் தெரிந்துகொண்டால், அதைத் திருடமுயல்வது. கீதா ரொம்ப குழம்பிப்போனார். பக்கரூவின் நலம் தற்போது அந்த விதையை நம்பித்தான் இருந்தது.

"அம்மா, நான் நாளைக்கு உங்ககூட வந்து உங்க ஓனர்கிட்ட பேசப்போறேன்."

"அருண், இது பெரியவங்க விஷயம். இதில் தலையிடாதே" என்று அப்பா சட்டென்று கண்டித்தார். அவர் குரலில் எரிச்சல் இருந்தது. கீதா ரமேஷை உள்ளே போகச் சொல்லிவிட்டு, அருண் சொன்னதுபற்றி யோசித்தார். அவருக்கு அருண் சொன்னது நியாயமாகப் பட்டது. பக்கரூ பிழைப்பதற்கு ஒரே வழிதான் என்றால், ஏன் அருண் சொல்வதை முயற்சிக்கக்கூடாது?

"அருண், வா, நீ சொன்னபடியே முயற்சி செய்யலாம். காலைல சீக்கிரம் எழுந்து என்கூட வா. நாளைக்கு ஸ்கூலுக்கு லீவ் போட்டுக்கலாம்" என்றார்.

அருண், படுக்கப்போகுமுன் பக்கரூவை அணைத்து, "பக்கரூ! உன்னை நான் காப்பாத்தியே தீருவேன்" என்றான்.

(தொடரும்)

கதை: ராஜேஷ்;
படம்: Anh Tran
Share: 




© Copyright 2020 Tamilonline