Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்
கவிதைப்பந்தல் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | முன்னோடி | Events Calendar | பொது | நலம்வாழ | சாதனையாளர் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | முன்னோட்டம்
Tamil Unicode / English Search
முன்னோடி
உளுந்தூர்பேட்டை சண்முகம்
- பா.சு. ரமணன்|ஏப்ரல் 2016|
Share:
"விநாயகனே வினை தீர்ப்பவனே", "நீயல்லால் தெய்வம் இல்லை", "பள்ளிக்கட்டு சபரிமலைக்கு", "பகவான் சரணம் பகவதி சரணம்", "திருப்பதி மலைவாழும் வெங்கடேசா", "சின்னஞ்சிறு பெண் போலே", "மதுரை அரசாளும் மீனாட்சி", "சந்தனம் மணக்கும்", "தென்றலோடு உடன்பிறந்தாள் செந்தமிழ்ப் பெண்ணாள்", "வென்றிடுவேன் நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்" போன்ற பாடல்கள் மூலம் தமிழில் பக்தி இசையை வளர்த்தவர் உளுந்தூர்ப்பேட்டை சண்முகம். இவர் உளுந்தூர்பேட்டையில் செப்டம்பர் 16,1932 அன்று பிறந்தார். துவக்கக்கல்வியை அங்கேயே முடித்தவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வாழ்க்கையைத் துவங்கினார். அங்கேயே பயின்று எம்.லிட். படிப்பை நிறைவு செய்தார். பின்னர் சென்னை S.I.V.E.T. கல்லூரியில் பேராசிரியராகப் பணிதொடங்கித் தமிழ்த்துறைத் தலைவராக உயர்ந்தார்.

சில காலத்திற்குப் பின் தமிழக அரசு இவரை மொழிப்பெயர்ப்புத்துறையின் உதவி இயக்குநராக நியமித்தது. நான்கு வருடங்கள் அங்கு பணிபுரிந்தவர், தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டார். தமிழ் வளர்ச்சிக்காக முனைந்து பல பணிகளை மேற்கொண்டார். "தமிழ் நாவல்களின் தோற்றமும் எழுச்சியும்" என்ற தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார். கிடைத்த ஓய்வுநேரத்தில் சிறந்த சொற்பொழிவாளராகவும், பாடலாசிரியராகவும் மிளிர்ந்தார். தமிழில் நூற்றுக்கணக்கான பக்தியிசைப் பாடல்களை எழுதினார். அவற்றை சீர்காழி கோவிந்தராஜன், கே. வீரமணி, எல்.ஆர். ஈஸ்வரி, எஸ். ஜானகி, எஸ்.பி. பாலசுப்ரமணியன் என முன்னணி இசைக்கலைஞர்கள் பலர் பாடி அவற்றைத் தரணியெங்கும் பரவச்செய்தனர்.

Click Here Enlargeகவிதைகள், பக்திப் பாடல்கள், மொழிபெயர்ப்புப் பாடல்கள் எனக் கிட்டத்தட்ட 4,000 பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார் சண்முகம். அவை இசைத்தட்டுகளாகவும் ஒலிப்பேழைகளாகவும், நூல்களாகவும் வெளிவந்துள்ளன. விஷ்ணு சஹஸ்ரநாமம், பஜகோவிந்தம், ஆதித்ய ஹ்ருதயம், சௌந்தர்யலஹரி, ஹனுமான் சாலீஸா, மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம், துர்காதுதி, ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் என நூற்றுக்கணக்கான வடமொழிப் பாடல்களை இவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். பாம்பே சகோதரிகள் பாடி வெளியான தமிழ் வேங்கடேச சுப்ரபாதம், மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் லட்சக்கணக்கில் விற்றுச் சாதனை படைத்தன. ஸ்ரீஅன்னை, ஸ்ரீஅரவிந்தர், ஷீரடி சாய், பகவான் சத்யசாய், ஸ்ரீராகவேந்திரர், பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் என ஞானியர்களைக் குறித்தும் பாடல்களை எழுதியிருக்கிறார். இயேசு மற்றும் மேரிமாதா மீதும் பல பாடல்களைப் புனைந்து தனது சமய நல்லிணக்க உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கும் இவர் மிக முக்கியப் பங்காற்றியுள்ளார். இவரது "வளரும் பயிர்" நர்சரி ரைம்ஸ் பாடல்களை திருமதி. லதா ரஜினிகாந்த் பாடியுள்ளார். 'கண்மணி பூங்கா' என்னும் நர்சரி ரைம்ஸ் பாடல்கள் திருமதி. சந்தியா ராஜகோபால் பாடியுள்ளவையாகும். இவரது பாடல்கள் வானொலி, தொலைக்காட்சிகளிலும் ஒலி/ஒளிபரப்பாகியுள்ளன. இன்றும் ஒலி/ஒளிபரப்பாகி வருகின்றன. இவரது தேசபக்திப் பாடல்களின் தொகுப்பான 'செக்கர்வானம்' நூலை இந்திய அரசு வெளியிட்டுச் சிறப்புச் செய்தது. அகத்தியர், ராஜராஜ சோழன், திருமலை தென்குமரி எனப் பல திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதிப் புகழ் பெற்றார். தமிழில் நாட்டிய நாடகங்கள் வளர்வதற்கு இவர் முக்கியமான முன்னோடி எனலாம்.
இசைமாலை, எங்கே சென்றாய், பொங்குபுனல், வளரும் பயிர், இன்பத்தீ, சாரல், பாதமலர்கள் எனப் பல கவிதை, பாடல் நூல்களை வெளியிட்டுள்ளார். புதுக்கவிதை, செய்யுள், மரபிசைப் பாடல்கள், பக்திப்பாடல்கள் என இவை பல தரத்தனவாகும். இவர் எழுதிய 'அன்னையடா அன்னை' என்னும் நாட்டிய நாடகம் மிகுந்த பாராட்டுப்பெற்ற ஒன்றாகும். சிறந்த சிறுகதை ஆசிரியர் மற்றும் கட்டுரையாளராகத் திகழ்ந்த இவரது படைப்புகள் பல முன்னணி இதழ்களில் வெளியாகி இருக்கின்றன. பொன்மாரி பொழிக (தமிழில் கனகதாரா ஸ்தோத்திரம்), ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் (தமிழில்) ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினி (தமிழில்) போன்ற நூல்கள் மிகுந்த வாசக வரவேற்பைப் பெற்றவை.

Click Here Enlargeதமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற இவர். அருட்செல்வர், பக்தசிகாமணி, தெய்வீகக்கவிஞர், இசைக்கவி அரசு உள்ளிட்ட பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றிருக்கிறார். இவர் ஆகஸ்ட் 24, 2003ல் காலமானார். இவரது மகன் இசையமைப்பாளர் சங்கர் 'சாதகப் பறவைகள்' என்ற புகழ்பெற்ற இசைக்குழுவை நடத்தி வருகிறார். மற்றொரு மகன் சரவணன் திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநராக உள்ளார். உளுந்தூர்பேட்டை சண்முகம் அவரது படைப்புகள் அனைத்தையும் தொகுத்து 32 நூல்களாக நெய்தல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

தமிழிசை வளர்ச்சிக்குத் தமிழிசை மூவர் ஆற்றிய தொண்டைப்போல இருபதாம் நூற்றாண்டில் தமிழிசையும், பக்தியிசையும் தழைக்கக் காரணமாக அமைந்த, தமிழர்கள் நினைவில் வைக்கவேண்டிய முன்னோடி உளுந்தூர்பேட்டை சண்முகம்.

தகவல், படங்கள்: ulundurpettaishanmugam.com

பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline