|
எர்த்தாம்டனின் சுடர்: பீமபுஷ்டி லேகியம் |
|
- ராஜேஷ், Anh Tran|டிசம்பர் 2016| |
|
|
|
|
அத்தியாயம் – 2 எப்பொழுதும்போல், அன்று பள்ளிக்கூடத்துக்கு அருண் சீக்கிரமாகச் சென்றுவிட்டான், நண்பர்களோடு விளையாடத்தான். சிலசமயம் சிற்றுண்டிகூடச் சாப்பிடாமல் ஓடிவிடுவான். அம்மா கீதா எவ்வளவு வற்புறுத்தினாலும் சாப்பாட்டை ஒளித்து வைத்துவிட்டு, சாப்பிட்டதாகச் சொல்லி ஓடிவிடுவான்..
பள்ளிக்கூட மணி அடித்ததும் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் தத்தம் வகுப்பு வரிசையில் வந்து நின்றனர். உறுதிமொழி (Pledge) சொல்லிவிட்டு வகுப்புக்குள் போக வரிசையில் நின்றனர். பள்ளி முதல்வர் ஒரு புதுப்பையனை வகுப்பு ஆசிரியை திருமதி. ரிட்ஜிடம் அறிமுகப்படுத்துவதை அருண் பார்த்தான். அவனருகில் அவனது அம்மாவும் நின்றுகொண்டிருந்தார். முதல்வர் புதுப்பையனை அறிமுகப்படுத்தி விட்டு, அங்கிருந்து நகர்ந்தார்.
அந்தப் பையன் சற்றுத் தூரத்தில் வரிசையில் நிற்பதை அருண் பார்த்தான். அவன் மிகவும் குண்டாக பீமனைப்போல இருந்தான். வரிசையில் அருணுடன் நின்றுகொண்டிருந்த நண்பர்கள் அவனைப்பற்றிக் கேலி பேசினார்கள்.
"சாம், அவனைப் பாரேன். மலைபோல இல்லை!" என்றான் ஜார்ஜ். "ஆமாண்டா, அவனுக்கே தனியா ஒரு மினி வேன் வேணும்னு நினைக்கிறேன்!" சாம் பதில் கூறினான்.
"நம்ம எல்லார் சாப்பாட்டையும் அவன் ஒருத்தனே சாப்ட்ருவான் போலிருக்கு" என்றான் ஜார்ஜ் மறுபடியும். அருணுக்குத் தனது நண்பர்கள் அந்தப் புதுப்பையனைக் கிண்டல் செய்தது கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை.
"டேய் ஜார்ஜ், சாம்! நீங்க இப்படிக் கிண்டல் பண்றது கொஞ்சங்கூட நல்லாவே இல்லை" என்று சொல்லிப் பார்த்தான் அருண். அவர்கள் சட்டை செய்யவில்லை. போதாக்குறைக்கு மற்ற நண்பர்களும் கேலி பேசுவதில் சேர்ந்துகொண்டார்கள்.
*****
பள்ளி அசெம்பிளி முடிந்து வகுப்புக்குள் எல்லாரும் போனார்கள். புதுப்பையன் திருமதி. ரிட்ஜோடு வந்தான். அவனைப் பார்த்ததும் மாணவர்கள் கிசுகிசுத்தார்கள்.
"மாணவர்களே, கொஞ்சம் கவனியுங்கள்" என்றார் வகுப்பு ஆசிரியை. "இவன் பெயர், ஃப்ராங்க் டெல் ரியோ (Frank Del Rio), நம் வகுப்புக்குப் புது மாணவன். ஃப்ராங்க் இவ்வளவு நாளா ஹோம் ஸ்கூலிங் செய்துவிட்டு இன்றுமுதல் பள்ளிக்கு வருகிறான்."
"ஹலோ ஃப்ராங்க்" என்று எல்லாரும் ஒன்றாக அவனை வரவேற்றார்கள். பதிலுக்கு ஃப்ராங்க், "ஹை" என்று சொன்னான். அருணுக்கு என்னவோ தெரியவில்லை, ஃப்ராங்கைப் பார்தவுடன் பிடித்துவிட்டது. அவனோடு உடனே நட்புக்கொள்ள ஆசைப்பட்டான். |
|
"மாணவர்களே, ஃப்ராங்கிற்கு Buddy ஆக யாரைப் போடலாம்?" என்று புன்சிரிப்போடு ஆசிரியை கேட்டார். Buddy என்பவர் புதிதாக வரும் மாணவருக்கு உதவி செய்பவர். அருண் ஃப்ராங்கின் Buddy ஆக ஆசைப்பட்டான். அதன்மூலம் ஃப்ராங்கை விரைவில் நண்பனாக்கிக் கொள்ளலாம் என்று எண்ணினான்.
ஜார்ஜ் சாமைப் பார்த்துச் சிரித்தான். அதற்கு அவன், "நோ வே" என்று வாயசைத்தான்.
"ம்ம்ம்… யார் Buddy ஆகப் போறாங்க? அதற்கு ரொம்பப் பொறுப்பு வேண்டுமே?" என்று ரிட்ஜ் கேட்டார். "ஒரு புது மாணவனுக்கு நமது நடைமுறைகளை எல்லாம் பொறுமையாகச் சொல்லிக் கொடுக்கணும். அதற்கு யார் பெஸ்ட்?" என்று கேட்டார்.
"செரா ஃப்ளவர்ஸ்!" என்று ஒரு குரல் எங்கிருந்தோ வந்தது.
"செரா ஃப்ளவர்ஸ்! சரியான ஐடியா" என்றார் ஆசிரியை. அவர் செராவைப் பார்த்து, "செரா, ஃப்ராங்குக்கு Buddy ஆக இருப்பாயா! நீதான் அவனுக்கு உதவி செய்யவேண்டும் சில நாட்களுக்கு" என்றார்.
"ஷ்யூர் மிஸ். ரிட்ஜ். நிச்சயமா" என்று அமைதியாகப் பதில் அளித்தாள் செரா. ஆசிரியை ஃப்ராங்கை செராவின் அருகே அமர வைத்தார்.
அருண் ஃப்ராங்கைப் பார்த்தான். அவன் பதிலுக்கு அருணைப் பார்த்துப் புன்னகைத்தான். ஃப்ராங்கோடு உடனே நட்புக்கொள்ள அருண் துடித்தான். மதிய உணவு வேளையில் எப்படியாவது ஃப்ராங்கோடு பேசிவிட வேண்டும் என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.
கதை: ராஜேஷ் படம்: Anh Tran |
|
|
|
|
|
|
|