|
|
|
|
"ஏண்டா ரமணா, என் பேரன் கல்யாணத்துக்கு என்னை விட்டுட்டு நீங்க மட்டும் போறது என்னடா நியாயம்?" என்றாள் காமாட்சிப் பாட்டி தன் மகன் வெங்கட்ரமணனிடம்.
உன் உடல்நலம் கருதித்தான் உன்னை இங்கேயே விட்டுவிட்டுப் போகிறோம். உனக்கு சர்க்கரை, ப்ரெஷர், மூட்டுவலி என்று வேளாவேளைக்கு மாத்திரை சாப்பிடணும். எல்லாரும் கல்யாண வேலையில் இருப்பாளா, உன்னை கவனிச்சுண்டு இருப்பாளா?" என்றான் மகன்.
"நான் தூக்கிவளர்த்து நான் பேர்வச்ச பேரன். அவன் கல்யாணத்துக்கு நானாவது வராமல் இருப்பாதாவது" என்று சண்டையிட்டாள் காமாட்சி.
"ஆமாம். நன்னா பேர் வச்சியே ’கலிவரதன்’னு கல்யாணப்பெண் கூட கலிவரதனா இல்ல, கரிவரதனான்னு கிண்டல் பண்றாளாம்" என்று முகவாயைத் தோள்பட்டையில் இடித்துக்கொண்டாள் மூன்றாவது மருமகள் கலா.
"பாத்துடி. ரொம்ப இடிச்சுக்காத. ஏற்கனவே ரெண்டு பல் சொத்தை. அதுவும் நாலா விழுந்திறப் போறது" என்றாள் மாமியார் கிண்டலாக.
"ம்க்கூம். இந்த வாய்க்குப் பயந்துண்டுதானே விட்டுட்டுப் போகிறோம். அது புரியறதா பார் இந்தக் கிழத்துக்கு," முணுமுணுத்தாள் வைதேகி, இரண்டாம் மருமகள்.
"அம்மா. கோபப்படாதீங்கோ. கல்யாணமோ சுவாமிமலை சுவாமிநாதசாமி சன்னதியில். சென்னையிலேர்ந்து கும்பகோணம் போகணும். கும்பேஸ்வரர் கோயில்லயும், சாரங்கபாணி கோயில்லயும் அர்ச்சனை, அபிஷேகங்களுக்கு உங்கள் பிள்ளை ஏற்பாடு பண்ணியிருக்கார். அப்புறம் சுவாமிமலைக்குப் போகணும். உங்க உடம்புக்கு ஏதாவது வந்துட்டால் என்ன பண்றது? உங்கள் பிள்ளையைக்கூட சமாளிச்சுடலாம். நான் பெத்த மகராசன் ஆடித் தீர்த்துடுவான். அதனாலதான் நீங்க இங்கேயே இருங்கன்னு சொல்றோம்" என்று நீட்டிமுழக்கி முடித்தாள் வத்சலா மூத்த மருமகள்; கல்யாணப்பிள்ளையின் தாய்.
"அதனாலதான் நான் வருவேங்கறேன். என் பேரன் என்மேல எவ்வளவு பிரியம் வச்சிருக்கான். அவன் கல்யாணத்துல கட்டாயம் நான் இருக்கணும்" என்றாள் காமாட்சி.
காமாட்சிக்குக் கணவர் இல்லை. அவர் தவறிப்போய் நான்கைந்து ஆண்டுகள் ஆகின்றன. ஆண் பிள்ளைகள் மூன்றுபேர். பெரியவர் வெங்கட்ரமணன். அடுத்தவர் நாராயணன். மூன்றாவது மகன் மாதவன்.
ஒவ்வொருத்தருக்கும் இரண்டு ஆண் பிள்ளைகள். முதல் பேரன் கலிவரதனுக்குத்தான் சுவாமிமலையில் கல்யாணம். சப்ரிஜிஸ்ட்ரார் ஆபிஸில் வேலை பார்க்கிறான். பாட்டியின் செல்லப்பேரன்.
பேச்சு நடந்துகொண்டிருக்கும்போதே பேரன் கலிவரதன் நேரில் வந்துவிட்டான்.
"என்ன பாட்டி, எல்லாரும் என்ன சொல்றா?" என்றான்.
"வேறென்ன சொல்லுவா? எனக்கு ரொம்ப வயசாயிடுத்தாம். உடம்பிலே ஏகப்பட்ட வியாதியாம். பிரயாணம் எல்லாம் தாங்காதாம். அதனால நான் கல்யாணத்துக்கு வரக்கூடாதாம்" என்றாள் காமாட்சிப்பாட்டி கோபமாக.
"அவா கிடக்கறா பாட்டி. நீ ஏன் கவலைப்படறே. நான் உன்னை ஃப்ளைட்டிலாவது கூட்டிண்டுதான் போவேன். உனக்கு மட்டுந்தானா வயசாயிடுத்து? இவாளெல்லாம் என்ன டீனேஜாமா? இவங்களையெல்லாம் செக்கப் பண்ணினாத்தான் தெரியும், யார் யாருக்கு உப்பு, சர்க்கரை, மிளகாய் எல்லாம் இருக்குன்னு. நீ கட்டாயம் வர பாட்டி" என்று சொல்லிவிட்டுப் போனான்.
வெங்கட்ரமணன் மேக்ஸிகேப் வண்டி ஒன்றைக் குடும்பம் மொத்தத்திற்கும் ஏற்பாடு செய்தார்.
அந்தவீட்டில் வெங்கட்ரமணனும் அவர் மனைவி வத்சலாவும்தான் மிகவும் சாது. அவர்களும் வீட்டில் மற்றவர்கள் சொல்வதற்கெல்லாம் அப்படியே தலையாட்டுவர். கலிவரதன் அவன் பாட்டியைத்தவிர மீதிப்பேருக்கெல்லாம் வாய் என்று சொல்லுவான்.
"பாட்டி.. நானோ சாதாரண கிளார்க். பெண்வீட்டில் நூறுபவுன் போடவேண்டும் என்று இந்த இரண்டு சித்திகளும், சித்தப்பாக்களும் உத்தரவு போட்டிருக்கிறார்கள். ஸ்கூட்டர் வேறு கேட்கிறார்கள். பெட்ரோல் விக்கிற விலையில் நானே சைக்கிளில் போகலாம்னு இருக்கேன். இந்த அப்பா, அம்மா அவர்கள் சொன்னதற்கெல்லாம் தலையாட்டுகிறார்கள். சியாமளா என்னதான் நினைப்பாள்?" என்று புலம்பினான். |
|
"அது யாருடா சியாமளா?" என்றாள் காமாட்சிப் பாட்டி கேலியாக.
"ஆமாம் பாட்டி. உனக்குக்கூட கிண்டலா இருக்கு. ம்ம்ம்."
"ஏண்டா, இத்தனை நாள் பெத்து வளர்த்தவங்களைப் பத்திக் கவலைப்படாம கல்யாணமாகி வரப்போறவளைப் பத்திக் கவலைப்படறாயே, இது என்ன நியாயமோ?" என்று அங்கலாய்த்தாள்.
நல்ல நாள், நேரம் பார்த்து எல்லாரும் கிளம்பினார்கள். பாட்டி மட்டும் நிறையப் பவுன்நகை போட்டிருந்தாள். மற்றவர்கள் கொஞ்சம் கம்மியாகப் போட்டிருந்தார்கள். கலிவரதன் ஆச்சரியப்பட்டான். "கல்யாணம் எனக்கா? உங்களுக்கா? ஒவ்வொருத்தரும் ஒரு நகை ஸ்டாண்டா? திருடன் நம் வண்டியை கடத்திக்கொண்டு போனாலே போதும். ஒரே நாளில் பில்லியனர்தான்."
"நாங்க என்ன ஏழை வீட்டுப் பெண்களா? இல்லை. ஏழை வீட்டு மருமகளா? உன் வருங்காலப் பெண்டாட்டிபோல" என்றாள் கடைசிச் சித்தி கலா.
"காதலுக்குக் கண்ணில்லை" என்றாள் வைதேகி சித்தி. "உன் பாட்டிதான் எங்களைப்போல் இரண்டு பங்கு நகை போட்டிருக்கிறாள். காலங்கெட்ட காலத்தில் ஆசையைப் பார்" என்று முணுமுணுத்தாள்.
கும்பகோணத்தில் ஒருநாள் தங்கி கும்பேஸ்வரர் கோவிலிலும், சாரங்கபாணி கோவிலிலும் அர்ச்சனை, அபிஷேகம் எல்லாம் முடித்துக்கொண்டு சுவாமிமலை வந்தனர்.
பஸ்ஸில் ஏறியதுமுதலே இரண்டு சித்திகளும் அவன் அம்மாவின் காதில் ஏதோ ஓதிக்கொண்டிருந்தனர்.
கலிவரதனைப் பார்த்ததும் பேச்சை நிறுத்திவிட்டனர்.
"பாட்டி, அவா ரெண்டுபேரும் அம்மாவின் காதில் ஏதோ ஓதிண்டே வர்றா."
"விடுடா, பெட்டைக்கோழி கூவி பொழுது விடியுமா?"
"ஐயோ பாட்டி. எந்தக் கோழி கூவாட்டியும் பொழுது விடியும். கால நேரமில்லாமல் பழமொழி" என்று தலையில் அடித்துக்கொண்டான்.
சம்பந்திகள் பலகாரமும், காபியுமாக அமர்க்களப்படுத்தினர்.
கல்யாணப்பெண் சியாமளா மிக அழகாகக் களையுடன் அமர்க்களமாக இருந்தாள். கலிவரதன் சொக்கித்தான் போனான். பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் மாறி மாறி நலங்கு வைத்துக் கொண்டிருந்தனர்.
கலிவரதனின் வருங்கால மாமனாரும் மாமியாரும் கொஞ்சம் தயக்கத்துடனும் கொஞ்சம் பயத்துடனும் வந்தனர்.
மாப்பிள்ளையின் அப்பா வெங்கட்ரமணன், "வாங்கோ சம்பந்தி, டிபன், காபி, சாப்பாடு எல்லாம் ரொம்ப அட்டகாசம்" என்றார். வத்சலா சிரித்துக்கொண்டே கணவர் அருகில் நின்றாள்.
அப்போதுதான் கலாவும் வைதேகியும் அணுகுண்டு போட்டனர்.
"நகை நூறு பவுன் ரெடியா?" என்றனர்.
"இல்லை. அதைப்பற்றித்தான் பேசவந்தேன். எழுபத்தைந்து பவுன்தான் என்னால் ரெடிபண்ண முடிஞ்சது. மீதி இருபத்தைந்து பவுன் மூன்று மாதத்திற்குள் போட்டுவிடுகிறேன்" என்றார் பெண்ணின் அப்பா மிகப்பணிவாக.
பேச்சுவார்த்தையைக் கலாவும் வைதேகியும் தேவையில்லாமல் வளர்த்தனர். சியாமளாவின் தந்தை எவ்வளவோ அமைதியாகத் தாழ்ந்து பேசியும் கலிவரதனின் இரண்டு சித்தி, சித்தப்பாக்களும் விடுவதாக இல்லை. பேச்சுப் போனவிதம் சியாமளாவிற்கும் கலிவரதனுக்கும் பயம் கொடுத்தது.
கண்களில் மைகரைய சியாமளா அழுதுகொண்டிருந்தாள். அதைப் பார்த்த கலிவரதனுக்கு உயிரே போய்விடும்போல் இருந்தது. ஓடிப்போய் பாட்டியை அழைத்துவந்தான். பாட்டி இரண்டு பக்க வாதங்களையும் கேட்டாள்.
"சம்பந்திதான் மூன்றுமாதம் கழித்துப் போடுகிறேன் என்கிறாரே, இப்போ கல்யாணம் நடக்கட்டும்" என்றாள்.
"அதென்ன அம்மா, உங்களுக்கு புத்திகித்தி பிசகிப் போச்சா? சொன்ன வார்த்தையைக் காப்பாற்றவேண்டும். அதுதானே பெரிய மனுஷனுக்கு அழகு" என்றனர் இரண்டு மருமகள்களும்.
"நிறுத்துங்கடி சின்னவங்களா லட்சணமா இருங்க. பவுன் விற்கிற விலையில நூறு பவுன் கேட்கறீங்களே. நீங்கள் என் பேரனுக்கு கல்யாணம் செய்ய வந்தீர்களா, பண்டமாற்று வியாபாரம் பண்ணவந்தீர்களா?" என்றாள் காமாட்சிப்பாட்டி உரத்த குரலில்.
"அதெல்லாம் முடியாது. பேசியபடி செய்தால்தான் எல்லாம் நடக்கும்" என்றனர் இருவரும். அவர்களுடைய கணவன்களும் மண்டையை ஆட்டிக்கொண்டு நின்றனர்.
"ஏண்டா ரமணா, உன் பிள்ளைக்காக நீ ஒன்றும் பேசப்போவதில்லையா? நீங்கள் ரெண்டுபேரும் எப்போது பேசியிருக்கிறீர்கள், இப்போது பேச? சரி, என்ன, இன்னும் இருபத்தைந்து பவுன்தானே வேண்டும். சியாமளா, இங்கே வாடிம்மா" என்றவள் தன் கழுத்திலிருந்த காசுமாலையைக் கழற்றி அவள் கழுத்தில் போட்டாள்.
"இது முப்பது பவுன். மேலேயே ஐந்து பவுன் இருக்கிறது. சரிதானே!" என்றாள்.
"பிள்ளை வீட்டுக்காரரே நகையைப் போட்டுவிட்டு பெண் வீட்டிற்கு வக்காலத்து வாங்கினால் எப்படி?"
"இல்லேடி நான் பெண் வீட்டுக்காரிதான். என் பேரன் பெண்டாட்டி எனக்கும் பேத்திதானே. என் பேத்திக்கு நான் போடுகிறேன். அவ்வளவுதான். இதற்குமேல் யாரும் வாயைத் திறக்கக்கூடாது. போய் ஆகிற வேலையைப் பாருங்கள்."
கல்யாணம் களைகட்டத் தொடங்கியது. நாதஸ்வரமும் தவிலும் அதிர்ந்தன. கலிவரதன் அப்போதே சியாமளாவின் கையைப் பிடித்துக்கொண்டு பாட்டியின் காலில் விழுந்தான். பாட்டியைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டான்.
பாட்டி பேரனைப் பார்த்துக் கண்சிமிட்டினாள். "எதற்குப் பாட்டி இவ்வளவு நகை என்றாயே, எனக்குத் தெரியும் இவர்களைப்பற்றி" என்று சொல்லிச் சிரித்தாள் அந்த விஷமக்காரப் பாட்டி.
கி. பானுமதி பார்த்தசாரதி, சான் ரமோன், கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|