Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | சாதனையாளர் | சமயம் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
கருப்ஸ் பாண்டியன்
அடாராவின் பார்வை
முரண்பாடு
- சப் மோஹன்|மார்ச் 2015||(2 Comments)
Share:
ஒருவழியாக டிரைவ்வேயில் படிந்திருந்த பனித்திரள்களை ஒதுக்கிவிட்டு வீட்டினுள் நுழைந்தாள் கௌரி. சிகாகோ நகரத்துக் குளிரும் பனியும் பெயர்போனதென்றாலும், இந்த வருடம் ரொம்ப அதிகம். அமெரிக்கா வந்த புதிதில் ரகுவோடு சேர்ந்து பனியில் விளையாடும்போது சந்தோஷமாக இருக்கும். இப்போது ரகு இல்லை. சந்தோஷமும் தொலைந்துவிட்டது. வீட்டிற்குள் நுழைந்ததுமே விளக்கைப் போட்டாள்.

குளிர்காலத்தில் எப்பவும் விளக்கு வேண்டியிருக்கிறது. எல்லாமே எரிச்சலாக இருக்கிறது. சமையலறையில் நுழையும்போது இந்திய சமையலுக்கே உள்ள ஒரு மசாலா வாசனை. சாயங்காலம் கீதாவின் வீட்டுக்குச் செய்து அனுப்பவேண்டிய பூரிகள், பிசைந்த மாவாக ஒரு மூலையில் இருந்தது. மசாலாவிற்கு வேண்டிய உருளைக்கிழங்கும், வெங்காயமும் ஏற்கனவே நறுக்கி வைத்துவிட்டாள். சாம்பார், தயிர் சாதத்திற்கான சாதம் வடிக்கப்பட்டு வெண்மலர்கள் போல் தாம்பாளத்தில் கொட்டப்பட்டிருந்தது. ராஜா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான்.

இரவுமுழுதும் தூங்காமல் அடம் செய்துவிட்டு விடிகாலையில் கௌரி இன்னுமொரு பாதி மாத்திரையைக் கொடுக்க, துவண்டுபோய் தூங்கிவிட்டான். அடம் செய்ய அவன் ஒன்றும் இரண்டு வயதுக் குழந்தையல்ல. போனமாதம்தான் பத்து வயதைக் கடந்தவன். பிறந்த இரண்டாவது வயதில்தான் கௌரிக்கும், ரகுவிற்கும் அவனிடம் ஏதோ மாறுபட்டிருப்பது புலப்பட்டது. மற்ற குழந்தைகளைப் போல ராஜா இருக்கவில்லை. இரண்டாம் புள்ளி ஆடிஸம் என்று டாக்டர் சொன்ன பிறகு அவர்கள் வாழ்க்கை மாறத் துவங்கியது ராஜாவைவிட ஆறுவயது மூத்தவளான அபர்ணா ஓரளவுக்கு ஒதுக்கப்பட்டாள். ராஜாவை கவனிக்கவே ரகுவுக்கும் கௌரிக்கும் நேரம் போதவில்லை. ராஜாவின் நிலை ரகுவை வெகுவாகப் பாதித்தாலும் கௌரி கடவுள் தந்த குழந்தையாய் ராஜாவை தாங்கித் தாங்கி வளர்த்தாள்.

"ம்மா.." என்ற குரலைக் கேட்டு கௌரி மெதுவாக மாடியில் ஏறினாள். வடிந்த உமிழ்நீரைத் துடைத்து, தலையைத் தூக்கி தலையணையில் வைத்துப் போர்த்தி விட்டாள். திரும்பி நடக்கும்போது அபர்ணாவின் அறையைப் பார்க்கக் கோபமாக வந்தது. பதினெட்டு வயதுப் பெண்ணுக்கு எந்தப் பொறுப்புமில்லை. போட்டது போட்டபடி கிடக்க மூன்று நாட்களாக எங்கோ கேம்ப் செல்வதாகச் சொல்லிவிட்டு பேச்சு மூச்சில்லை. அபர்ணாவை நினைத்தால் கௌரிக்கு வயிற்றைக் கலக்கியது. நினைவுகளின் பாரம் நெஞ்சில் முள்ளாக வலித்தது. சற்றுநேரம் படுத்து எழுந்தால் நன்றாயிருக்கும் போலிருந்தது.

அதே சிகாகோ நகரத்தின் தென்கிழக்கு மூலையில் மாளிகைபோல் பரந்திருந்த வீட்டின் வாயிலைப் படாரெனச் சாத்திவிட்டு உள்ளே வந்தாள் கீதா. உயரமான ஏணியில் நின்றுகொண்டு வர்ண விளக்குகளை வீட்டிற்குள் தொங்கவிட்டிருந்த முரளி சத்தத்தாலும், அதிர்வினாலும் கீழே விழப் போனான். "ஏங்க உங்களுக்குக் கொஞ்சமாவது புத்தி வேண்டாம்! சாயந்தரம் பொண்ணோட பிறந்தநாளை வச்சுக்கிட்டு அவளை பிரண்ட்ஸோட சினிமாவுக்கு அனுப்பியிருக்கீங்களே! இன்னும் சில மணிநேரத்தில் விருந்தாளிகள் வர மட்டார்கள்?"

"ஏதோ ஆசைப்பட்டா கீதா! இல்லைன்னு சொன்னா கேக்கவா போறா?" முரளி மெதுவாய்ச் சொன்னான்.

"கௌரியைக் கூப்பிட்டு கேசரியும் பண்ணிக் கொண்டுவரச் சொல்லுங்கள்."

"பாவம் கீதா... அவளும் தனியா எவ்வளவுதான் பண்ணுவா? நீதானே
ஸ்வீட் செய்வதாயிருந்தாய்!"

"ஆமாம். இருக்கற நிலைமைல உங்க பெண் வரவும், அவளைத் தயார் பண்ணவுமே எனக்கு நேரம் போதாது. அதுதான் ஒண்ணுக்கு இரண்டாய் பணம் தரோமே!"

முரளியும், ரகுவும் மத்தியக்கிழக்கு நாடுகளில் ஒன்றாய் வேலை செய்தவர்கள். ரகுவின் மறைவுக்குப் பிறகு முரளிக்கு அந்தக் குடும்பத்தின்மேல் கொஞ்சம் பாசம் அதிகம். அதுவும் கௌரி ஒரு பெண்ணோடு, ஒரு தள்ளாத குழந்தையையும் வைத்துக்கொண்டு பல இடங்களில் வேலைசெய்து வாய்க்கும் வயிற்றுக்குமாய்க் குடும்பம் நடத்துவது, அவன் மனதை வருத்தும். இன்றைக்கு அவனுக்கும் கீதாவுக்கும் செல்லமாய்ப் பிறந்த ஒரே மகள் ஆர்த்திக்கு பதினாறாம் ஆண்டு பிறந்தநாள். செல்லமாய்ப் பிறந்தது மட்டுமல்லாமல், செல்லமாய் வளர்ந்து, "தான்", "தனக்கு" என்ற எண்ணத்தோடே உலாவரும் அருமைமகளை வயதாக ஆக எல்லாம் சரியாய்விடும் என்று முரளியும், கீதாவும் எண்ணிக் கொண்டிருப்பது இன்னும் நிலைமையை மோசமாக்கிக் கொண்டிருந்தது.


1990ம் ஆண்டில் சதாம் உசேனின் டேங்க்குகள் குவையத் நகரத்திற்குள் நுழைந்த வேளையில் கௌரியும் ரகுவும் குவையத் வந்து மூன்றே மாதம்தான் நிறைவாகியிருந்தது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ரகு மெக்கானிகல் எஞ்சினியர். முரளி தலைமைப் பாதுகாப்பு அதிகாரி. கைநிறையச் சம்பளம், வருடத்தில் நாற்பது நாட்கள் விடுமுறை என்று கௌரியும் ரகுவும் மகிழ்ந்திருந்த வேளையில்தான் அந்த அசம்பாவிதம் நடந்தது. குவையத் நகரின் பெரிய நட்சத்திர ஓட்டலில் கம்பெனியின் வருடாந்திரக் கூடத்தில் பங்கெடுத்துக் கொண்டிருந்த ரகுவின் வலதுதோளில் இராக் ராணுவம் சுட்ட குண்டு ஒன்று இறங்கிவிட, அவனை வாரிப் போட்டுக்கொண்டு வீதி வீதியாய் ஆஸ்பத்திரி தேடி அலைந்தான் முரளி. முடிவில் ஒரு இந்திய நர்ஸின் உதவியால் அரைகுறை சிகிச்சையோடு இரண்டு குடும்பமும் வீட்டில் முடங்கிக் கிடந்தது.

ஆசை ஆசையாய்ப் பொருள்சேர்த்து அத்தனையும் இழந்து லோல்பட்ட ஆயிரக்கணக்கான குடும்பங்களுடன் குவையத்திலிருந்து ஜார்டான், அங்கிருந்து சென்னை வந்துசேர ஒரு வாரமாகியிருந்தது. இரண்டு அறுவை சிகிச்சைகள், ஒரு வருடம் உடற்பயிற்சி என்று ரகு ஒருவாறு தேறிவிட, எப்போதோ போடப்பட்டிருந்த விண்ணப்பங்கள் தேறிவர, கனடா நாட்டின் பிரஜைகளாக வந்திறங்கினர் கௌரியும், ரகுவும். இதற்கிடையில் முரளியும் கீதாவும், ரத்தபந்தங்களின் உதவியால் அமெரிக்கா வந்திறங்க, கடைசியில் இரு குடும்பங்களும் ஒரே நகரில் வசித்தது காலத்தின் விசித்திரம். அதற்குப்பின் குழந்தைகள் பிறந்ததும், அறுவை சிகிச்சைகளின் சிக்கல்கள் ரகுவை விழுங்கியதும், கௌரி நடைப்பிணமானதும் எந்த உதவியுமில்லாமல் தவித்ததும் நிதர்சனம்.

சடேரென்று எழுந்த கௌரி கடிகாரத்தைப் பார்த்தாள். மணி மூன்றாகிவிட்டது. இன்னும் பதார்த்தங்கள் செய்து முடிக்கவில்லை. தனித்தனியாகப் பொட்டலத்தில் கட்டியாக வேண்டும். கேசரி கிண்டியாக வேண்டும். முகத்தில் நீரை அடித்துக்கொண்டு மடமடவென்று கீழே இறங்கிவர அவளுக்கு ஆச்சரியமான ஆச்சரியம். அழகாகப் பொரித்த பூரிகளை அபர்ணா, எடுத்துத்தர ராஜா தாம்பாளத்தில் அடுக்கிக் கொண்டிருந்தான். வெள்ளைக்காகித ட்ரேக்களில் சாம்பார் சாதமும், தயிர் சாதமும் பேக் செய்யப்பட்டிருந்தன. அவளைப் பார்த்ததும் ராஜா ஓடிவந்து காலைக் கட்டிக்கொண்டான். அவன் முகத்தில் ஏதோ சாதனை செய்துவிட்ட பெருமை. அபர்ணா ஒன்றும் பேசவில்லை. ரகுவின் மறைவிற்குப் பிறகு அவள் அதிகம் பேசுவதில்லை. எதுவும் வேண்டுமென்று கேட்பதுமில்லை. கௌரிக்கு பல சமயங்களில் வேதனையாக இருக்கும். அபர்ணாவும், ஆர்த்தியும் ஒன்றாய் வளர்ந்து ஒன்றாய் விளையாடிய குழந்தைகள். ஆர்த்தி செல்வத்தில் புரளும்போது அபர்ணா தன் ஆசைகளை அடக்கிக்கொண்டு, அவளைச் சுற்றி ஒரு கோட்டைப் போட்டுக்கொண்டதுபோல் தோன்றும். விரைவாக கேசரியை செய்து முடித்து, சாமான்களை வேனில் ஏற்றி, குழந்தைகளோடு கிளம்பும்போது மணி ஐந்து.
அலங்கரிக்கப்பட்ட அரண்மனை போலிருந்த வீட்டின் வாசலில் பலவிதமான படகுக்கார்கள், உள்ளேயிருக்கும் பணக்காரர்களை அடையாளம் காட்டியது. கௌரியும், அபர்ணாவும் உணவுப் பாத்திரங்களையும் பொட்டலங்களையும் சமையலறையில் கொண்டு வைத்தனர். வீட்டுக்குப் போவதற்கு முன்னால் கீதாவிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ராஜாவின் மருந்துகளை நாளைக்காவது வாங்க வேண்டும். என்னதான் பெரிய பணக்கார விருந்தாக இருந்தாலும், கீதாவின் சாப்பாட்டு ஆர்டர் கௌரிக்குத்தான். அதற்காக கீதாவுக்கு நன்றி சொல்லத்தான் வேண்டும்.

பார்ட்டி களைகட்டினாலும் முரளி, கீதா முகத்தில் ஏதோ ஒரு கவலை. ஆளுயர கேக் ஹாலில் வைத்திருக்க, ஆர்த்தியைக் காணவில்லை. கீதாவும் பலமுறை மாடியில் ஆர்த்தி ரூமில் சென்று கதவைத் தட்டினாலும், "மாம்... டோண்ட் பாதர் மீ. நேரமானால் நீயே கேக்கை வெட்டிக்கோ" என்ற கத்தலைக் கேட்டு, கடைசியில் தாஜாசெய்து கீழே கூட்டிவந்தாள். ஒருவழியாகக் கேக் வெட்டும் படலம் முடிந்து, முரளி எல்லோரையும் வீட்டுக்கு வெளியே கொண்டுவந்தான். பலவிதமான கரகோஷங்களுக்கும் கைதட்டல்களுக்குமிடையே திரையை விலக்க நீலவண்ணத்தில் பளபளவென புத்தம்புதிய BMW ஜொலித்தது. பெருமையும் பொறாமையுமாகக் கூட்டம் ஆர்த்தியின் பக்கம் திரும்ப, அவள் 'வீல்' என்று போட்ட சத்தத்தில் இடம் அமைதியானது. "டாட்! ஐ வான்டட் ரெட் கலர். நீலம் எனக்குப் பிடிக்காது என்று தெரியாதா!" முரளி ஏதோ பதில் சொல்வதற்குள் செருப்புகள் தூக்கியெறியப்படுவதும் கதவுகள் சாத்தப்படுவதும், பெற்றவர்கள் மானம் கப்பலேறுவதுமாய் ஆர்த்தி தன் அறைக்கதவைப் பூட்டிக்கொண்டாள்.

ஏனோதானாவென்று கொரித்துவிட்டு விருந்தினர்கள் கிளம்ப, கீதாவை சமாதானப்படுத்த முற்பட்டுத் தோற்றுப்போக கௌரி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு கிளம்பினாள். இந்த நிலைமையில்
எப்படிப் பணம் கேட்பது என்று நினைத்தாலும், எப்படி சமாளிப்போம் என்ற கவலையும் வருத்தமும் வியாபிக்க வேனைக் கிளப்பினாள். பதட்டத்தின் நடுவிலும் அபர்ணா அந்தப் புதிய காரை ஏக்கத்தோடு பார்ப்பதை கௌரி கவனிக்கத் தவறவில்லை.

காலையிலிருந்து செய்த வேலைகளின் அயர்ச்சியும், இயலாமையும் கண்களில் நீரைக் கொண்டுவர, வீட்டைத் திறந்து சோபாவில் படேரென விழுந்தாள். ரகுவின்மேல் கோபம் கோபமாய் வந்தது. விளக்கை அணைத்துவிட்டுச் சுருண்டு படுத்தவள், யாரோ கன்னத்தை வருடுவது போலிருக்க திடுக்கிட்டுப் பார்த்தாள்.

உதட்டின் ஓரமாய் உமிழ்நீரோடும், வாய் திறந்த சிரிப்போடும் தன் சிறிய கைகளால் ராஜா அவள் முகத்தில் கை வைத்திருந்தான். அருகே அபர்ணா. அவள் கையில் மூன்று நூறுடாலர் நோட்டுகள்.

"அம்மா... இது கேம்பில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்ததற்காகக் கிடைத்த பணம்."

ராஜா விரைவாக நகர்ந்து டாலர் நோட்டுக்களைப் பறித்து கௌரி கையில் திணித்தான். அவன் சிரிப்புமட்டும் மாறவில்லை. ஆனால் விழியோரம் கண்ணீர்த் துளிகள்.

இரண்டு குழந்தைகளையும் வாரி அணைத்த கௌரி, கதறிக் கதறி அழுதாள். ஆனாலும் அந்த அழுகை ஒரு புதிய விடியலைத் தரும் என்ற நம்பிக்கையோடு ரகு மாலைக்குப் பின்னாலிருந்து புன்னகைத்தான்.

அதே சமயம் சிகாகோ நகரின் தென்கிழக்கு மூலையில் ஆர்த்தியின் கட்டில் தலைமாட்டில் அமர்ந்து, நீலக் காரைக் கொடுத்துச் சிகப்புக் காராக்க என்ன வழி என்று கீதாவும் முரளியும் யோசனை செய்து கொண்டிருந்தார்கள்.

சப் மோஹன்,
ஹூஸ்டன், டெக்சாஸ்
More

கருப்ஸ் பாண்டியன்
அடாராவின் பார்வை
Share: 




© Copyright 2020 Tamilonline