கூடு வாழ்வின் அழகியல்!
|
|
|
|
|
(மாஸ்கோ-க்ரெம்ளின் Diamond Fund-ல் உள்ள, ஒரு கோழிமுட்டையில் பாதியளவு இருக்கும் ஆர்லோவ் (Orlov) என்னும் அந்த அபூர்வ வைரத்தின் சரித்திரம் ஆரம்பித்த இடம், 108 திவ்ய தேசங்களில் மிக முக்கியமானதும், பூலோக வைகுண்டம் எனப்படுவதுமான ஸ்ரீரங்கமே)
பள்ளிகொண்ட பெருமாளின் ஒரு கண்ணாக இருந்த இந்த வைரம் உலகத்தின் மிகப்பெரியது என்று கருதப்படும் கோஹினூர் வைரத்தைவிட ஒன்றரை மடங்கு பெரியது.
மொட்டைகோபுரம் என்று ஒருகாலத்தில் சொல்லப்பட்ட ஸ்ரீரங்கத்தின் பெரியகோபுரத்தை அடையும் தெருவில் இன்று வரிசையாக ட்ராவெல்ஸும், ஜெராக்ஸ் கடைகளும், இவ்விடம் சூடான பால் கிடைக்கும் என்னும் டீக்கடைகளும், யாத்ரீகர்களை அழைத்து வந்த ஆம்னி பேருந்துகளும் நிறைந்து கிடக்க, 1750ல் இந்த இடம் எப்படி இருந்தது என்பது கொஞ்சம் சிக்கலான விவரணையாகப் போய்விடும் என்பதால் விட்டுவிடுவோம்.
ஸ்ரீரங்கம் கர்நாடகப் போர்களில் அல்லாடிக்கொண்டிருந்த நாட்கள். மொட்டைகோபுரத்தின் இடதுபக்கம், இப்போது பன்றிகள் குட்டிகளுடன் சுற்றிக்கொண்டிருக்கும், அதே இடத்தில்தான் ஒரு ஒண்டுவீட்டில் இந்தக் கதை ஆரம்பிக்கிறது.
மெட்ராஸில் முடியலாம்.
குழந்தைகள் மானாவாரியாகக் கத்திக்கொண்டிருந்தன. தாத்தா வாசலில் திண்ணையில் வெறித்தபடி பார்த்துக்கொண்டு, "ரங்கா! ரங்கா! இன்னிக்கு ததியோன்னம் உண்டொல்லியோ" என்று புலம்பிக்கொண்டிருந்தார்.
"ஆமா, இங்க கஞ்சிக்கே வழியாகலை. கிழத்துக்கு ததியோனம் வேணுமோ! கத்தாதேடி நப்பின்னை."
"அலர்! என்னோட அங்கவஸ்த்ரம் கொடுறீ! நாழியாறது!"
"சித்த இருங்கோ! வர்ரேன்!"
அலர் என்னும் அந்த நாற்பது வயதுத் தோற்றத்துடன் இருந்த இருபதே வயதான அலர்மேல் லக்ஷ்மி சாய்ந்த வயிற்றை எக்கியபடி மூச்சு விட்டுக்கொண்டு நடந்து வந்தாள். இது மூன்றாவது குழந்தை, இரண்டாவதுக்கு இப்போது ஒன்றரை வயசுதான்.
"இந்தாங்கோ! இன்னிக்கு ஏதானும் கெடச்சுடுமா?"
"அலஞ்சு பாக்கறேண்டி! பதினாறு கால் மண்டபத்தண்டே, அந்த சிப்பாய் வரச்சொல்லியிருக்கார். ஏதானும் தருவார்டி."
"ரெண்டு நாளா கொழந்தேளுக்கு கஞ்சிதான்னா குடுத்தாறது!"
"தெரியும் தெரியும், அப்பனே ரங்கா! சரி, போய்ட்டு வரேன்."
"கோதண்டம்! ததியோன்னம் வாங்கிண்டு வந்துரு." தாத்தா திண்ணையிலிருந்து ஹீனக்குரல் கொடுத்தார்.
"சரிப்பா!"
(32 மிமி, 35 மிமி, 21 மிமி என்ற அளவுகள் கொண்ட அந்த அபார ஆர்லோவ் வைரம் 189.62 காரட் (38 கிராம்) கனம் கொண்டது. குண்டூரிலிருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த வைரம் பல கைகள் மாறி இன்று மாஸ்கோவில் இருக்கிறது).
கோதண்டராமன் சப்பட்டைத்தெருவில் நடந்து, இடதுபுறம் திரும்பி, தேர்க்காலில் சுற்றி, கோபுரத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டு அங்காடிப் பக்கமாக நடந்தான். காலையிலேயே கோவிலுக்குப் போகிறவர் வருகிறவர் எல்லாம் கடந்து போய் வெறிச்சோடிக் கிடந்தது. முன்பெல்லாம் தென்படும் கலகலப்பு போயே போய்விட்டது.
"ரெண்டு கும்பினிக்காரார்களும் அடிச்சுண்டா நமக்குன்னா பொழப்பும் உயிரும் அல்லாடறது." நேற்று சாயங்காலம் குளத்தடியில் பாட்ராச்சாரி முனகினது நினைவுக்கு வந்தது. இதைச் சொன்ன கையோடு "டேய்! யார்ட்டயாவது நான் சொன்னேன்னு ஒளறிடாதேங்கோடா" என்று பதறினார்.
கோதண்டராமனுக்கு வேதப்படிப்பு வரவே இல்லை. அவனது அப்பாவுக்கும் அப்படியேதான். தாத்தா பெரிய கோதண்டம் பாராயணம் பண்ணின கையோடு பிள்ளையையும் பேரனையும் சேர்த்து தினம் ஒரு பாட்டம் வசவாக வைவார்.
கோதண்டத்தின் அப்பா அரங்கன் கோவில் மடைப்பள்ளியில் எடுபிடியாகவே காலத்தை ஓட்டிவிட்டார். அதுவும் ஒருநாள் அப்பா மடைப்பள்ளியில் ததியோன்ன அண்டாவைத் தூக்கியபோது மளுக்கென்று கால் முறிய, வீட்டுக்கு வந்ததோடு சரி, நடமாட்டமே நின்று போய்விட்டது. திண்ணையே கதி என்று கிடக்க ஆரம்பித்தார். அவரின் மரியாதையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கப்பட்டு சித்தம் கலங்கி, ததியோன்னமே வாழ்வின் குறிக்கோளாக ஒடுங்கிப் போனார்.
காலை எழுந்தவுடன் கணீரென்று வேதபாராயணம் செய்யும் தாத்தா பெரிய கோதண்டம் நம்பிக்கை இழக்கவில்லை.
பிள்ளைக்குத்தான் வேதம் வாயிலே நுழையவில்லை. மடப்பள்ளியும் சாப்பாடுமே வாழ்க்கையாகி விட்டது. பேரனுக்காவது ப்ராப்தம் இருக்காவென்று தாத்தா பெரிய கோதண்டம் பேரனைப் பாடசாலையில் சேர்த்துவிட்டார். அங்கே வேளாவேளைக்குப் போட்ட சோற்றைத் தின்றுவிட்டு ஏப்பமும் தூக்கமுமாய் கோதண்டம் பொழுது ஓட்டினதால் ஒரு 'கனம்' கூடச் சரியாச் சொல்ல வரவில்லை. பாசுரம் என்று எதையோ ஒப்பேத்துவான்.
கோவிலில் ஒருதரம் கோதண்டத்தை வேதம் சொல்லவைத்துப் பரிட்சை பண்ணிப் பார்த்தார்கள். ஒன்றும் தேறவில்லை.
"ஸ்வாமின்! உம்ம வித்வத்துக்கு பங்கம் வர்ராப்ல சொல்றான். இவன கோவில்ல வெச்சுண்டா உம்ம பேர் கெட்டுடும். வேண்டாம் விட்டுடுங்கோ!"
"முள்ளிக்கரம்பூர் வரதராஜயங்கார் பரம்பரையில வந்துட்டு இப்படி சமஸ்க்ரிதமே வர மாட்டேங்கறதேடா ஒங்களுக்கு! ஒழியறது, தமிழாவது நெட்டுரு போட்டிருக்கப்படாதா. இன்னிக்கு ஜாம்ஜாம்னு கோவில்ல சொல்லிண்டு வேளாவேளைக்கு ப்ரசாதம் சாட்டுண்டு இருக்கலாமோல்யோ? எல்லாம் என்னோட போச்சு!" தாத்தா மனமொடிந்து போனார். தினச்சாப்பாட்டில் நெய் அளவு குறைந்தாலும் இத்தனை வருஷம் உள்ளே போயிருந்த சர்க்கரைப் பொங்கலும் அக்காரவடிசலும் கொலஸ்ட்ராலாய்த் தேங்கி அவரை ஒருநாள் சாய்த்தது.
"கண் வழியா உசிர் போச்சு."
கோதண்டம் சொன்னதை "பேரனுக்கு கொடுப்பினை! தாத்தா உயிர்ப் பயணத்தை பாக்க கொடுத்து வெச்சிருக்கான். இன்னும் ஒரு வேஷ்டி தட்சணை சாதியுங்களேன்!" வந்த சீடர் கூட்டம் இளித்துக்கொண்டே போய்ச் சேர்ந்தது.
(கவுண்ட் ஆர்லோவிடமிருந்து காதல் பரிசாக ஆர்லோவ் வைரத்தைப் பெற்ற ரஷ்ய அரசி கேதரீன் அந்த வைரத்தைச் செங்கோலில் பதித்துக் கொண்டாள். இம்பீரியல் ஸெப்டர் (Imperial Scepter) என்று அழைக்கப்பட்ட அதைச் செய்துதந்தவர் கேதரீனின் ஆஸ்தான ஆசாரி சி.என். ட்ராய்டின்ஸ்கி.)
தென்னிந்திய சரித்திரத்தில், முக்கியமாக, ஸ்ரீரங்கத்தின் சரித்திரத்தில் 1750கள் அவ்வளவு சிலாக்கியமான தினங்கள் அல்ல
ஏன், அதற்கு முன் 1311ல் மாலிக் காபூர் படை எடுத்த காலத்திலேயே அரங்கனார் ஸ்ரீரங்கம் விட்டுப் பயணப்பட்டு, வேதாந்த தேசிகர் உபயத்தில் மதுரை, கேரளா, மைசூர், திருநெல்வேலியெல்லாம் சுற்றி, கடைசியில் திருப்பதியில் மறைந்திருந்து, ஒரு வழியாக 1371ல் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார்.
மறுபடியும் 1700களில் ஸ்ரீரங்கம் ஆங்கிலேய ஃப்ரெஞ்சுச் சண்டையில் சிக்கியது.
1750களில் ஃப்ரெஞ்சுப்படையும் கிழக்கிந்தியக் கும்பினிக்காரர்களும் இந்தியச் சந்தைக்காக மோதிக்கொண்டிருந்த நாட்கள். சந்தா சாஹிப்பும் முசாஃபர் ஜங்கும் ட்யூப்ளேவுடன் சேர்ந்துகொண்டு நாசீர் ஜங்கையும் முஹம்மது அலியையும் தோற்கடித்தாலும், 1754ல் கும்பினியாருடன் சேர்ந்து சந்தா சாஹிப்பை வென்று கொன்று போட்டார்கள்.
அப்போதுதான் அந்த ஃப்ரெஞ்சுச் சிப்பாய் படையைவிட்டு விலகி, ஒளிந்து வாழ, ஹிந்துவாக மதம் மாறி… இருங்கள், இவ்வளவு வேகம் வேண்டாம்.
கோதண்டம் வேறு வழியின்றி தரகுத்தொழிலைக்கைக்கொண்டான்.
சண்டை விட்டு விட்டு நடந்தாலும் எப்போதும் ஒரு பதட்டம். ஸ்ரீரங்கத்துவாழ் ஜனம் எதோ கடமைக்காக தினமும் காலை மாலைகளில் கோவிலுக்கு வந்துவிட்டு அவசர அவசரமாக வீட்டிற்குள் புகுந்துகொண்ட தினங்கள் அவை. ஊரைவிட்டு இன்னொரு ஊருக்குப்போகும் துணிவு போய்விட்ட காலகட்டம். ஆனாலும் ஏதானும் தேவைகள் தொடர்ந்துகொண்டே இருந்தன.
"மாதிரி மங்கலத்துல வாழக்காய் அறுத்துப் போட்ருக்கான். யாரு போய் எடுத்துண்டு வர்ரது?";
"கோதண்டத்தை அனுப்புங்களேன்"
"கோதண்டம்! போய் எடுத்துண்டு வரயா? காசு தரேண்டா!"
"நாளன்னிக்கு ஸ்ராத்தம்! ஆத்துல ஒரு சுள்ளி வெறகு இல்ல. நீங்க போய்….."
."வேண்டாண்டி! உசுரோட நா திரும்பமாட்டேன். ரெண்டு கும்பினிக்காராளும் அடிச்சுக்கரா தெரியுமோன்னோ?"
"சரி அப்ப நம்ம கோதண்டத்தை அனுப்பி வாங்கிண்டு வரச் சொல்லட்டும். காசக் கொடுத்துடலாம்".
திருச்செந்துரையிலேர்ந்து வெறகு வெட்டச்சொல்லி, வண்டில கட்டி இழுத்துண்டு வந்து போட்டுவிடுவான் கோதண்டம்.
"ஏண்டா மணி ஆய்டுத்தே! கோவிலுக்கு பூ கொடுக்கணுமில்லையோ?"
"அடப்போ பாட்டி! பதினாறு கால் மண்டபத்துல செகப்பா தொப்பி போட்டுண்டு சிப்பாய்ங்கள்லாம் ஒக்காந்து பேசிண்டு இருக்கா. துப்பாக்கியை வெச்சு டொப்புனு சுட்டுப்டா... போன உசுரு வருமா? ஸ்வாமிக்கு இன்னிக்கு பூ கொடுப்பின இல்ல, அவ்வளவுதான்!"
"டேய் டேய் வாண்டாண்டா! ரங்கனோட வெளையாடப்படாது. நீ அப்படியே தேர்முட்டிக்குப் போய் கோதண்டத்தை வரச்சொல்லு. ரெண்டு காசு கொடுத்தா அவன் போய் கோவில்ல கொடுத்துட்டு வந்துருவான்."
கோதண்டம் எல்லாத்துக்கும் ஓடினான். இந்த ஒரு காசுக்கும் ரெண்டு காசுக்கும் ததியோன்னம் தெனமும் முடியுமா? ஒருநாள் கஞ்சி, ஒருநாள் சாதம்தான். கோதண்டம் கொஞ்சம் வீரமானவன் என்று பேச்சு வேறு!
"நேத்தைக்கு தெரியுமோன்னோ, நம்ம கோதண்டம் மொட்ட கோபுரத்தண்ட சிப்பாயோட பேசிண்டு நிக்கறான், எனக்கு பேதி ஆய்டுத்து! அவன் ஏதோ சொல்றான், இவன் வேகமா தலய ஆட்டிண்டு மறுத்துப் பேசறாண்டா! அந்த இடுப்புக் கத்தியால ஒரு குத்து குத்திப்டா அலர் கொழந்தேள் பாடு ராப்பிச்சதான்!"
(எரிக் பர்டன் 1986ல் ஆர்லோவ் வைரத்தைப்பற்றி இவ்வாறு எழுதினார்: The scepter is a burnished shaft in three sections set with eight rings of brilliant-cut diamonds, including some of about 30 carats (6g) each and fifteen weighing about 14 carats (2.8g) each. The Orlov is set at the top, with its domed top facing forward. Above it is a double-headed eagle with the Arms of Russia enameled on its breast.)
அந்த ஃப்ரெஞ்சு இளைஞன், முன்னாள் சிப்பாய், கிட்டத்தட்ட ஆறடி உயரம். மெதுவாக நடந்து கோவிலின் முதல் ப்ராகாரத்தினுள் நுழைந்தான்.
மேலே சொன்ன கர்நாடகப் போர்கள் 1746லிருந்து 1763வரை மூன்று நடந்தன. ஃப்ரெஞ்சுக் கிழக்கிந்தியக் கும்பினிக்கும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கும்பினிக்குமான வர்த்தகப் போட்டி. இடையில் தென்னிந்திய சின்னச்சின்ன குறுநில ராஜாக்களும் நிலாச்சுவான்தர்களும் ஆளுக்கொரு பக்கம் சேர வேண்டிய கட்டாயம், இல்லாவிட்டால் யாராவது ஒரு கும்பினி சுளுக்கு எடுத்தார்கள். |
|
|
அப்படிப்பட்ட ஒரு சண்டையில் அந்த ஃப்ரெஞ்சு சிப்பாய் கிரெனேடியராக இருந்தான். ஏதோ ஒரு பட்டாலியனில் ஸ்ரீரங்கத்துக்கு வந்திருந்த அவனை ரங்கனாதரின் கோவில் சலனப்படுத்தியது. இதென்ன இப்படி ஒரு ஆலயம்! எவ்வளவு சுபிட்சம்! என்னவோ ஒரு ஆகர்ஷணத்தில் அவன் கோவிலைச் சுற்றிவர ஆரம்பித்தான். தட்டித்தடுமாறி தமிழ் பேசினான். மற்ற சிப்பாய்கள் வெட்டிப்பேச்சில் ஈடுபட, இவன் கோவிலை சுவர் சுவராக சுற்றிப் பார்த்தான். ஓரிருமுறை காசு கொடுத்து அரங்கன் சன்னிதிக்கும் உள்ளே போனான்.
படுத்திருந்த பெருமாளின் ஜாஜ்வல்யம் அவனை ஈர்த்திருக்க வேண்டும்.
1749ல் முதலில் ஃப்ரெஞ்சுப்படைகள் வெற்றிபெற்ற களிப்பில் ஆடிக்கொண்டிருக்க, ராபர்ட் க்ளைவ் என்னும் மகத்தான ஆங்கிலேயன் அவர்களை ஓட ஓட விரட்டின 1751க்கு முந்திய வருடத்தில் ஸ்ரீரங்கத்தில் இந்த ஃப்ரெஞ்சு சிப்பாய் ராணுவத்திலிருந்து நழுவிக் காணாமல் போனான்.
வெற்றிக் களிப்பிலிருந்து மீளுவதற்குள் க்ளைவ் படையுடன் வந்துவிட, ஃப்ரெஞ்ச்சுப்படை காணாமல் போன சிப்பாய் பற்றி கவலைப்பட நேரமின்றி விரட்டப்பட்டதும் ட்யூப்ளே படுதோல்விக்குப் பிறகு மறுபடியும் ஃப்ரான்சுக்கு அழைக்கப்பட்டதும், அதனாலேயெ தேன்னிந்தியா முழுவதுமாக ஆங்கிலேயக் கும்பினியின் கட்டுப்பாட்டில் வந்து, ஃப்ரெஞ்சுக்கு வெறும் பாண்டிச்சேரி மட்டுமே என்கிற 'பாண்டிச்சேரி ஒப்பந்தம்' ஏற்பட்டதும் இப்போது நமக்குத் தேவையில்லாத சரித்திரங்கள்.
அந்த சிப்பாய் பாட்ராச்சாரி தெருவில் ஒரு சாது அய்யங்காரிடம் வந்து தான் ஹிந்து மதத்தில் சேர விரும்புவதாகக் கூறிச் சேர்ந்தும் விட்டான். தலையை மொட்டை அடித்துக்கொண்டு அழுக்கு வேஷ்டி கட்டி மேல்துண்டு போடப் பழகினான். அவன் காண்பித்த பொற்காசுகள் பாட்ராச்சரி அதுவரை பரம்பரையிலேயே பார்த்திராதவை. அவர் கோவிலில் இந்தச் சில காசுகளுக்கு ஃப்ரெஞ்சுக்காரனை கருவறை முதற்கொண்டு அழைத்துப்போய்க் காண்பிக்கலானார். வீட்டில் தினமும் அக்கார அடிசலும் பொங்கலும் புழங்கின. பாட்ராச்சாரியின் மனைவி ஆசாரியிடம் சொல்லி கிழங்கு கிழங்காய் சங்கிலி போட்டுக்கொண்டாள்.
"என்னமா வேதம் சொல்றான் தெரியுமோனோ! நமக்கேல்லாமே வாயில நுழைய மாட்டேங்கிறது, சமஸ்கிரிதம் ஆனாக்க அவன் வாயில ஸ்பஷ்டம் ஓய்!" காசு இல்லாததும் பொல்லாததும் பேச வைத்தது. நோட்டம் பார்த்துக்கொண்டே இருந்த ஃப்ரெஞ்சுக்காரன் கோதண்டத்தையும் கவனித்து வந்தான்.
"என்னோட மெட்ராசுக்கு வரியா? ரெண்டு நாள்தான். ஒரு பவுன் தரேன்!"
கோதண்டத்துக்கு மூச்சடைத்தது. ஒரு பவுனா?
"என்ன பண்ணணும்?"
"எனக்காக ஒரு மூட்டை எடுத்துண்டு வரணும்."
"எனக்கு வலு போறாது, மூடையெல்லாம் தூக்க முடியாதுன்னா."
'சின்ன மூட்டைதான்."
"அப்படீன்னா சரி! எப்போ போகணும், நா ஆம்டயாகிட்ட சொல்லிக்கணும். அப்பாக்கு நமஸ்காரம் பண்ணிட்டு வந்துர்ரேன்."
"நா சொல்றேன். நீ தினமும் கார்த்தால என்னை தேர்முட்டில வந்து பாரு."
1750ன் அந்தச் செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீரங்கத்தில் எப்போதும் போல விடியவில்லை.
கோவிலினுள் ஏகப்பரபரப்பு. பெருமாளின் ஒரு கண்ணைக் காணவில்லை! இரைச்சல், ரகஸ்யம், விஜாரிப்புகள், குசுகுசுவெனப் பேச்சு, கண்களில் பயம், கோவில் சிப்பந்திகளின் வரிசை, பெரிய பட்டரின் கோபம், வருத்தம், சாபம், இயலாமை… முன்னும் பின்னும் அலக்கழிந்த கோவில் ஆசாமிகள்.
விவரிக்க அவஸ்யமில்லை, உங்களுக்குப் புரியும்.
தேர்முட்டியில் அங்கவஸ்திரத்தால் முகத்தைத் துடைத்துக்கொண்டு கோதண்டம் காத்திருக்கையில் சிப்பாய் வந்து சேர்ந்தான். "மூட்டை எங்கே?"
"சொல்றேன்! நாம இப்போ உடனே மெட்ராஸ் புறப்படணும், வந்தா ரெண்டே வாரத்துல திரும்பிடலாம். சொன்னா மாதிரி சல்லிசா உனக்கு ஒரு பவுன் தரேன்!"
"நான் தயராத்தான் வந்திருக்கேன். இதப் பாருங்கோ, மாத்துத் துணிகூட! ஆம்டயாட்ட சொல்லிட்டேன்!"
"சரி, இந்தா இத உங்கிட்ட வெச்சுக்கோ."
சின்னதாக ஃப்ரெஞ்ச் மஸ்லின் துணியில் இறுக்க முடியப்பட்ட பெட்டி மாதிரி இருந்த்து.
"இதா மூட்டை?"
"இப்போதைக்கு இதான். பேசாம என்னோட வா."
சிப்பாய் கோதண்டத்தை முன்னால் நடந்துபோகச் சொல்லிவிட்டு பத்துத் தப்படி பின்னால் நடந்துவந்தான். மஞ்சள் பழுப்பேறிய வேஷ்டியும் மேலே ஸ்ரீரங்கம் கோவில் நாயனக்காரன் போடும் மஞ்சள் ஜரிகைச் சட்டையும் போட்டிருந்தான். முகத்தையே மறைக்கும் தலைப்பாகை, அதுவும் சிக்குப்பிடித்து அழுக்காய் நாறிற்று,
"வடகிழக்காக நட, கோதண்டம்."
வடக்காவது கிழக்காவது, கோதண்டத்துக்கு ஒன்றும் புரியவில்லை, கிடைக்கப்போகும் ஒரு பவுனையே நினைத்து கனவுகண்டு நடந்தான். ராஜபாட்டையை விட்டு வயல்வெளி ஓரமே நடக்கலாம் என்று சிப்பாய் சொல்ல, கோதண்டம் அப்படியே நடந்தான். இருட்டும்போது ஒதுங்கின ஊரில் சாப்பாடு வாங்கிக்கொடுத்தான். ஒரு திண்ணையில் கட்டையைச் சாய்த்தார்கள்.
அதிகாலை வெயில் வருவதற்குள் நடக்கணும் என்று புறப்பட்டு இரண்டு நாள் முடிந்து திருக்கொவிலூர் வந்துவிட்டனர். அங்கே சிப்பாய் நடமாட்டம் இருந்தது. ஆங்கிலேயக் கும்பினிக்காரர்கள்.
கோதண்டத்தை முன்னே விட்டு சிப்பாய் பம்மி பம்மி பின்னால் நடந்து வந்தான். வெயிலிலும் அழுக்கிலும் அவன் சிகப்பு கிட்டத்தட்ட மறைந்து அவனுமே கோதண்டத்தின் பெரியண்ணன் மாதிரி ஒருவித பழுப்பாகிவிட்டிருந்தான்.
மெட்ராஸ் வந்தபோது கோதண்டம் ஒரு மாதிரி கிலி பிடித்துப் போயிருந்தான். வரவர அந்தச் சிப்பாய் கோதண்டத்தின்மேல் எரிந்து விழுந்தான். அடிமைபோல நடத்தினான். எப்படா ஒரு பவுன் கொடுத்து அனுப்புவான் என்று கோதண்டம் காத்திருக்க சிப்பாய் அவனை சிந்தாதிரிப்பேட்டையின் ஒரு சத்திரத்தில் காத்திருக்கச் சொன்னான். கையில் சில காசுகளைக் கொடுத்து சாப்பிட வெச்சுக்கோ என்று போய்விட்டான்.
"மூட்டை ஜாக்கிரதை" என்று பலமுறை சொல்லிவிட்டுப் போனான். கோதண்டம் அதைத் தன் பிருஷ்டத்துக்கு அடியிலேயே வைத்துக்கொண்டு ஆடாமல் அசையாமல் சிப்பாய் வரும்வரை வாசலைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். ஏதோ தப்பு நடப்பது புரிந்தது. என்னவென்று யோசிக்கத்தெரியவில்லை. சூரியன் சாய்ந்து இருள் வரும் நேரத்தில் சிப்பாய் இன்னொரு ஆளுடன் வந்தான்.
"கோதண்டம் வா!"
இருவரும் முன்னால் நடக்க கோதண்டம் பலி ஆடுபோல விழித்துக்கொண்டே போனான். கையில் மூட்டையை இறுகப் பற்றியிருந்தான்
"எப்படி எடுத்தே?"
"அதெல்லாம் உனக்கு எதுக்கு?"
"இல்லப்பா! செய்தி வந்துடுச்சு இங்கயும்! துரை நாலு சிப்பாய்களை அனுப்பி ட்ரிச்சினாப்ளி ரோடைக் கண்காணிக்கச் சொல்லியிருக்கார்."
"எங்க வெச்சிருக்க?"
"அந்த ஆள் கொண்டு வரான்!"
"அவனா? ஏன்?"
"மாட்டிண்டா நாம ஓடிடலாம்!"
"பலே ஆளுயா நீ! ஃப்ரெஞ்சா கொக்கா?"
"நல்லா தமிழ் பேசறே!"
"பேசாமல் வரமாட்டியா? இன்னும் எவ்ளோ தூரம் போகணும்?"
"இதோ கோட்டைக்கு பக்கவாட்டுல கூவம் ஆத்துப் பாலத்துல காத்திருப்பார்."
"நம்பலாமா?"
"அவுரு யாரு தெரியுமில்ல? தொரைக்கு துபாஷி! கையில காசு பொரளுது!"
(பெயரிடப்படாத, அரங்கனின் கண்ணான அந்த வைரக்கல் பல கைகள் மாறி பல வருடங்களுக்குப்பின் ஆம்ஸ்டர்டாமில் தோன்றியது. இரானிய செல்வந்தரான ஷஃப்ராஸ் அதை க்ரெகரி க்ரெகரிவிச் ஆர்லோவுக்கு 400,000 டச்சு ஃப்ளோரின்களுக்கு விற்றுவிட்டுப் போனார். அதை வாங்கிய ஆர்லோவ் தன் காதல் கிழத்தியான ரஷ்ய அரசி கேதரீனுக்கு காதல் பரிசாக அளித்தார்.)
செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் பக்கவாட்டில் ஒடிக்கொண்டிருந்த கூவம் ஆறு அப்பொதெல்லாம் நாறவில்லை. இருளடைந்து கிடந்த அந்தப் பாலத்தில் ஆறு மணிக்கு ஏற்றப்பட்டிருந்த சிம்னி விளக்கை துபாஷியின் வேலைக்காரன் அணைத்து விட்டிருக்க அடுத்த தப்படி தெரியாத இருட்டு.
"ஐயா! வந்துட்டோமுங்க!"
கால்கள் நடக்கும் சலசலப்பு. சின்னதாக ஒரு மெழுகு வத்தி ஏற்றப்பட்டு அந்த வேலைக்காரன் கைகளுக்குள் அதன் சூடு பயம் இன்றிப் பிடித்திருக்க பின்னால் ஆஜானுபாகுவாக அந்த துபாஷி. "காமி பாக்கணும்" கட்டைக்குரல். தெலுங்கு கலந்த தமிழ்
சிப்பாய் கோதண்டத்தை அழைத்து மூட்டையை வாங்கிக்கொண்டு. "நீ அங்க தள்ளிப்போய் இரு."
கோதண்டம் உதடு கிட்டிப்போய் பயத்தில் சிறுநீர் கழிக்கும் உந்துதலை அடக்கிக்கொண்டு இருட்டில் தட்டித்தடவி கொஞ்சதூரம் போய் நின்றான்.
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஒளிர்ந்த அந்த வைரக்கல் சற்றுநேரம் அந்த இடத்தையே ஜ்வலிக்க வைத்து மறுபடி அழுக்கு மூட்டையில் ஒடுங்கியது.
கோதண்டத்துக்கு மூச்சு அடைத்தது. இந்த வைரத்தையா தூக்கிண்டு வந்தோம்! அய்யோ! இது பெருமாளின் கண்ணாச்சே! இந்தப் பாவத்தையா கட்டிக்கொள்ளப் போகிறேன்! அலர், நப்பின்னை முகங்களும் தாத்தா, பெரிய கோதண்டத்தின் முகமும் நிழலாடின. பயத்தின் நடுவிலும் அந்த ஒரு பவுன் ஆசை மறைந்துபோய் தார்மீகக்கோபம் தலை தூக்கியது.
இப்போது அங்கே பணம் கைமாறி மூட்டை கொடுக்கப்பட்டது. குசுகுசுவெனப் பேச்சுக்குரல்கள்
"விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது."
"இதோ நான் இன்றிரவே பாண்டிச்சேரிக்குப் போய்விடுவேன். அடுத்த கப்பலில் மார்செய்ல்."
"உன்கூட வந்தவன் எந்த ஊர்?"
"ஸ்ரீரங்கம்."
"அடப்பாவி! அவன் ஒர்த்தன் போறுமே காட்டிக்கொடுக்க!"
"இல்லை இல்லை, அவன் சாது முட்டாள்."
"இந்த மாதிரி விஷயத்தில் யாரும் சாதுவோ முட்டாளோ இல்லை."
துபாஷியும் வேலைக்காரனும் எடுபிடியும் பாலத்துக்கு எதிர்ப்புறம் நடந்து போய்விட, சிப்பாய் இடுப்பில் கனமாகத் தொங்கிய பொற்காசுகளின் எதிர்காலக் கனவில் ஒரு கணம் மயங்கித் தயங்கினான்.
"கோதண்டம், இங்க வா."
பிற்காலத்தில் "சில வைரங்கள் மனித உயிரைக்காவு வாங்கிவிடும்" என்று சொல்லப்படப் போகும் வாசகத்துக்கு உண்மையாக அன்று இரவு கூவத்தில் மிதந்தது ஒரு பிணம்.
ஜே. ரகுநாதன், சென்னை |
|
|
More
கூடு வாழ்வின் அழகியல்!
|
|
|
|
|
|
|
|