வாஷிங்டன்: 'ஓடிபோலாமா' ஐடியல் கிட்ஸ் ஆண்டு விழா கச்சேரி: மாளவிகா ஸ்ரீராம் சிகாகோ: வறியோர்க்கு உணவு
|
|
நாட்ய தாரா: இசை, நடன நிகழ்ச்சி |
|
- சாந்தா ரங்கநாதன், வெங்கட் குட்டுவா நிழற்படங்கள்|ஏப்ரல் 2014| |
|
|
|
|
|
ஜனவரி 19, 2014 அன்று நாட்ய தாரா நாட்டியக் கலை மையம் (Natya Dhaara–Center for Performing Arts) மற்றும் நேபாள இல்லம் (Nepal House) இணைந்து Traditions-Transitions என்ற தலைப்பில் ஓர் இசை, நாட்டிய நிகழ்ச்சியை போர்ட்டர் சன்போர்ட் நாட்டிய, கலை மற்றும் சமூக மையத்தில் நடத்தினார்கள். நாட்டிய தாரா இயக்குனரும் அட்லாண்டாவின் பிரபல பரதநாட்டிய நடனமணியுமான உமா பேரம்பலம் புலேந்திரன் நிகழ்ச்சியை இயக்கினார். முதலில் வந்த அலாரிப்பு, மயூர முத்திரையுடன் மயில்கழுத்து ஆட்டத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது. 'மாறும் என் பூமி' (My Changing Planet) மக்களின் தீச்செயல்களால் அவதிப்படும் பூமியைய் பேணிக் காப்பாற்ற வேண்டுகோள் விடுக்கும் நடனம். இந்த நடனம் ஆங்கிலப் பாடலுக்கு அமைந்திருந்ததால் குழந்தைகள் முதல் முதியோர்வரை எல்லா மொழி பேசுவோராலும் புரிந்துகொண்டு ரசிக்க முடிந்தது. இந்த நடனம் உமாவின் புதுமையான நடன ஆக்கத் திறமையை வெளிக்கொணர்ந்தது.
ரேவதி சங்கரன் எழுதி, ராதிகா சூரஜித் வடிவம் கொடுத்த தமிழ் வந்தனத்திற்கு ஆறு மாணவிகள் நேர்த்தியாக ஆடினர். கீர்த்தி ராமசந்திரன், யாமி ஜோஷி, பூர்ணிமா ராவ் மற்றும் நந்தினி பிரகாஷ் 'ஸ்ரீசக்ரராஜ' கீர்த்தனத்துக்கு ஸ்ரீராஜராஜேஸ்வரியின் அழகையும் அருளையும் சிறப்பாகக் காட்டினர். பாபநாசம் சிவனின் 'சுவாமி நீ' வர்ணத்தை உமாவுடன் சேர்த்து 8 நடனமணிகள் ஆடினர். தீர்மானங்களையும் சாஹித்யத்தையும் இருவர் இருவராக ஆடியது இந்த நடனத்தின் நுணுக்கத்தை அவையோரால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. ஜெயதேவரின் அஷ்டபதி 'சந்தன சர்சித' கோபியரோடு கிருஷ்ணன் செய்யும் லீலைகளைச் சித்திரித்தது. கிருஷ்ணனாக தர்ஷனா தாந்து, கோபியராக கீர்த்தி ராமசந்திரன், ராஜி வெங்கட், தாரணி பாலகுமார், தக்ஷி பாலகுமார் ஆகியோர் பிருந்தாவனத்தைக் கண்முன் நிறுத்தினர். காபி ராகத் தில்லானா அழகான லாஸ்ய நடையுடன் நயமாக இருந்தது. இதை அனுஷா ஐயர், ஸ்வேதா சாய்நாதன், திவ்யா சாவ்லா மற்றும் ஆண்யா கோரை ஆகியோர் நீண்ட மேற்கத்தியச் சிவப்பு பாவாடை சட்டையுடன் ஆடியது புதுமையாக இருந்தது. |
|
கடைசி நடனம் இளையராஜா இசை அமைத்த பக்தி ததும்பும் மாணிக்கவாசகரின் 'சிவபுராணம்'. சமகால நாட்டிய அடவுகள் பாவங்கள் மற்றும் சிலை போன்ற நாட்டிய தோரணைகளுடன் ஆக்கப்பட்டிருந்த இந்த நடனம், பல்கலாச்சார அவையோரின் பாராட்டுதலைப் பெற்றது. நிகழ்ச்சியில் நான்கு தனி நாட்டிய உருப்படிகள் ஆடப்பட்டன. அட்லாண்டாவின் சிறந்த ஆண் நர்த்தகரான சித்தார்த் கேலம் ராமரைப் போற்றும் தோடைய மங்களத்தை கம்பீரமாக விறுவிறுப்புடன் ஆடினார். டென்னசியைச் சேர்ந்த ரஞ்சனி மூர்த்தி 'ஸ்ரீகிருஷ்ண நாதோ' என்ற வர்ணத்தின் சிறுபகுதியை லய லாவண்யங்களுடன் ஆடினார். உமா புலேந்திரன், தனஞ்சயன் தம்பதியர் வடிவமைத்த 'தண்டை முழங்க' என்று தொடங்கும் சப்தத்தை முருகனை அழைத்து மிக ஆழமான வாத்சல்ய பாவத்தோடு ஆடினார். அடுத்து இத்தாலியப் பாடகரான அந்த்ரேயா போசெல்லி பாடிய Mille Lune Mille Onde (ஓராயிரம் சந்திரன்கள் ஓராயிரம் அலைகள்) என்று தொடங்கும் சிருங்காரப் பாடலுக்கு உமா புலேந்திரனின் மனங்கவரும் அபிநயம் மனதைக் கவர்ந்தது. புல்லாங்குழல் வல்லுநர் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் ராஜன் மற்றும் தபலா வல்லுநர் ஆஞ்சநேய சாஸ்திரி இணைந்து ஒரு குறுகிய, ஆனால் இனிய இசைநிகழ்ச்சி வழங்கினர்.
'நேபாள் இல்லம்' அமெரிக்கப் பிரிவு அட்லாண்டாவைச் சேர்ந்த பதின்வயதினன் கைலேஷ் ஷர்மா தொடங்கிய லாபநோக்கற்ற அமைப்பு. இதில் இப்போது 25 நேபாளிப் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்குக் கல்வி, மனநல ஆலோசனை, வாழ்க்கைத் திறன்கள், தங்கும் வசதி மற்றும் உணவு வழங்கி உதவுகிறது. இவ்வில்லத்தின் முதன்மை நோக்கம் நேபாள் இல்லம் நடத்தும் பள்ளிக்கு நிதி திரட்டுவதும், நேபாளப் பெண்களின் நிலைபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் ஆகும்.
தகவல்: சாந்தா ரங்கநாதன், அட்லாண்டா, ஜார்ஜியா படங்கள்: வெங்கட் குட்டுவா நிழற்படங்கள் |
|
|
More
வாஷிங்டன்: 'ஓடிபோலாமா' ஐடியல் கிட்ஸ் ஆண்டு விழா கச்சேரி: மாளவிகா ஸ்ரீராம் சிகாகோ: வறியோர்க்கு உணவு
|
|
|
|
|
|
|