Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | பயணம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புதுமைத்தொடர் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
முன்னோடி
திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை
- மதுசூதனன் தெ.|டிசம்பர் 2005|
Share:
Click Here Enlargeதென்னிந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற இசைக்கருவியாக விளங்குவது நாதசுரம். காற்றிசைக் கருவி வகையைச் சார்ந்த நாதசுரம் கோட்டு வாத்தியம் அல்லது ஜலதரங்கம் போன்று ஓர் அபூர்வ இசைக் கருவியாக இல்லாமல் அன்றாட வாழ்க்கையில் வாசிக்கப்படுகிறது.

நாதசுரம் திறந்த வெளியில் இசைப்பதற்கு மிகவும் ஏற்ற இசைக்கருவி. நெடுந்தூரம் வரையில் இதன் ஓசையைச் கேட்கலாம். கிராமங்களிலே கோயில்கள் சார்ந்து இடம்பெறும் சடங்குகளில் நாதசுரத்தின் இசைக்கலாசாரம் தமிழர்களிடையே வலுவாக உள்ளது. குறிப்பாக நாதஸ்வரம் தமிழ் இசை மரபில் ஒரு தனித்துவமிக்க இசைக்கருவியாக இன்றுவரை இருந்து வருகிறது. இந்த இசைக்கருவியை வாசித்து இதற்குப் பெருமையும் அழகும் சேர்த்தவர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை.

இவர் தஞ்சை மாவட்டத்தில் இசை வேளாளர் மரபில் 12 ஆகஸ்டு 1898-ல் பிறந்தார். இவரது இயற்பெயர் பால சுப்பிரமணியம். இவர் பிறந்த சில மாதங்களில் தந்தை காலமானார். இவருடைய தாய்மாமா திருமருகல் நடேசப்பிள்ளைக்கு திருவாவடுதுறை ஆதீனத்தில் நாயனம் வாசிக்கும் வேலை கிடைத்தது. நடேச பிள்ளை தனது மனைவி, சகோதரி கோவிந்தம்மாள், மருமகன் பாலசுப்பிர மணியம் ஆகியோரை அழைத்துக் கொண்டு திருவாவடுதுறைக்குச் சென்றார். நடேச பிள்ளைக்கு பிள்ளைப்பாக்கியம் இல்லாத தால் மருமகன் பாலசுப்பிரமணியத்தைத் தத்து எடுத்துக் கொண்டார்.

தாய்மாமன் இட்ட பெயர்தான் ராஜ ரத்தினம் என்பது. பின்னர் பாலசுப்பிரமணியம் என்ற பெயர் மறைந்து ராஜ ரத்தினம் பிள்ளை என்பதே நிலைத்து விட்டது. டி என்பது திருவாவடுதுறையையும் என் என்பது நடேசபிள்ளையையும் குறிக்கும் வண்ணம் தன் பெயரை அமைத்துக் கொண்டார் ராஜரத்தினம்.

ஒருநாள் நடேசபிள்ளை நாதசுரத்தில் வாசித்த மோகன ராகத்தைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான் சிறுவன் டி.என்.ஆர். நடேசபிள்ளை வாசித்து முடிந்ததும், 'இப்போது நீங்கள் வாசித்தது மோகனம் தானே...?' என்று கேட்டான். இது நடேசபிள்ளைக்கு வியப்பையளித்தது. படிப்பைவிட அவனுக்குச் சங்கீதம்தான் நன்றாக வரும் என்பதையறிந்து நடேச பிள்ளை தனக்கு இசை கற்பித்த திருக் கோடிக்கால் மகாவித்வான் கிருஷ்ணய்யரிடம் ராஜரத்தினத்தை சிட்சைபெறச் செய்தார்.

ஆரம்ப காலத்தில் அவர் சகோதரி தயாளுவும் ராஜரத்தினத்துடன் சேர்ந்து சில கச்சேரிகளில் பாடினார். வாய்ப்பாட்டில் கவனம் குறைந்து மடத்து நாயனக்காரரான மார்க்கண்டேயம் பிள்ளையிடம் நாதசுரம் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். பிறகு திருவழுந்தூரில் குருகுல வாசம் செய்து நாதசுர வித்துவானாக வளர்ந்தார். முதன்முதலில் நன்னிலத்தில் கச்சேரி செய்தார். நல்ல பெயர் கிடைத்தது. பல ஊர்களில் கச்சேரி செய்தார் இளம் வயதிலேயே பலரது பாராட்டைப் பெற்றார். தனக்கென்று ஒரு புதுப்பாணியை உருவாக்கினார். தனது பதினைந்தாவது வயதிலேயே தேர்ச்சி மிகு கலைஞராக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

நாதசுரக் கருவியை நாகசின்னம் நாக சாரம், நாதஸ்வரம் என்றும் அழைக்கின்றனர். 'நாதஸ்வரம்' என்று சொல்வது இருபதாம் நூற்றாண்டின் முப்பதுகள் தொடக்கத்தில்தான் வழக்கில் வந்தது என்று பேரா. பி. சாம்பமூர்த்தி தனது தென்னிந்திய இசை அகராதியில் தெரிவித்துள்ளார். 'நாகசுரம்' தான் சரியான சொல் என்று கருதும் ஆய்வாளர்கள் பலர் உள்ளார்கள்.

சரபோஜியின் 'கூளப்ப நாயக்கன் காதல்' என்ற நூலில் தாரை, கவுரி, தவண்டை, துடி, 'நாகசுரம்' என்றே குறிப்பிடுகின்றனர். இது பற்றி பேரா. பக்கிரிசாமி பாரதி ஒரு கட்டுரையில் மிக விரிவாக ஆய்ந்துள்ளார்.

நாகசுரம் மிகப் பழங்காலத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை 18.25 அங்குல நீளம் உடையதாகவும் நாலரைக் கட்டைச் சுருதியுடனும் இருந்து வந்தது. இது முகவீணைக்கு அடுத்த நிலை. இதில் ஏழு விரல் துவாரங்களும் ஒரு பிரம்ம சுரமும் தவிர கூடுதலாக இரண்டு இணை ஜீவசுரங்களும் அமைக்கப்பட்டு இருக்கும். 1909-ம் ஆண்டு மன்னார்குடி சின்னப்ப பக்கிரி நாகசுரக்காரர் 21.50 அங்குல நீளமும் நான்கு கட்டைச் சுருதியும் கொண்ட நாகசுரத்தைப் பழக்கத்தில் கொண்டு வந்தார்.

1920-ம் ஆண்டு திருப்பாம்பரம் சாமிநாத பிள்ளை 23.75 அங்குல நீளமும் மூன்றரைக் கட்டை சுருதியும் கொண்ட நாகசுரத்தைக் கொண்டு வந்தார். பின்னர் 1932-ம் ஆண்டு கீரனூர் சின்னத்தம்பி என்பவர் 18 அங்குல நீளமும் மூன்றரைக் கட்டை சுருதியும் கொண்ட நாதசுரத்தை அறிமுகம் செய்தார். இத்தகைய நாலரை, நான்கு, மூன்றரை, மூன்று ஆகிய கட்டையுள்ள சுரங்களுக்கு 'திமிரி நாசுரம்' என்று பெயர்.

1932-ம் ஆண்டு திருவாடுதுறை ராஜ ரத்தினம் பிள்ளை 31.25 அங்குல நீளமும் மூன்றரைக் கட்டை சுருதியும் கொண்ட இடைபாரி நாகசுரத்தை கொண்டு வந்தார். பின்னர் அவரே முயற்சிகள் பல மேற் கொண்டு 1914-ம் ஆண்டு 34.5 அங்குல நீளமும் இரண்டு கட்டைச் சுருதியும் கொண்ட நாதசுரத்தை உருவாக்கினார். அவரே மேலும் முயன்று மத்திமத்தை ஆதாரமாக வைத்து மற்ற சுரங்களை அதற்கேற்ப அமைத்துக் கொண்டு 1946-ம் ஆண்டு மத்திம சுருதி நாகசுரத்தை உருவாக்கினார். இவற்றிற்கு 'பாரி நாகசுரங்கள்' என்று பெயர்.

இவ்வாறு வரலாற்று நோக்கில் நாகசுரம் பற்றிய சில வளர்ச்சிப்படி நிலைகளை 'மரபிசைச் சுரங்கம்' என்ற கட்டுரையில் இசை ஆய்வாளர் பேரா. பக்கிரிசாமி பாரதி குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் ராஜ ரத்தினம் பிள்ளை நாதசுரக் கருவி உருவாக்கத்தில் எத்துணை ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதும் தெரிய வருகிறது. அவரது வாசிப்புக்கு நாகசுரக் கருவி எப்படி இருக்க வேண்டுமென்பது பற்றிய சிந்தனை பளிச்சிடுகிறது. மேலும் 'சங்கீத சந்திரிகா' என்ற நூலைக் கற்றுக் கிருதிகளை இயற்றி நாகசுர உலகில் தனிப்புகழ் பெற்று விளங்கினார்.

இசைப் பாரம்பரியத்தின் நாகஸ்வர உலகிற்குச் சக்கரவர்த்தியாக உயர்வதற் கான தகுதியும் சிறப்பும் முயற்சியும் உழைப்பும் எப்படி ராஜரத்தினத்திடம் இருந்தது என்பதுதான் அவரது தகுதிப் பாட்டை கணிக்க ஏதுவாக இருக்கும். 'ராக ஆலாபனைக்குப் பெரிய இடத்தைக் கொடுத்துத் தன்னை மறந்து தனது ராட்சத வாத்தியத்தைக் கட்டியாண்டு பரிபூரண குழைவையும் சுகத்தையும் தந்து கொண்டிருந்தவர்' என்றுதான் அவர் காலத்தில் வாழ்ந்து அவரது வாசிப்பில் லயித்து வந்தவர்கள் அவரை நினைவு கூருகிறார்கள். வாய்ப்பாட்டு மற்றும் வீணை பாணிகளில் உள்ள சாரத்தையெல்லாம் தன்னுள் கிரகித்துத் தன் வித்தைக்கு அடித்தளம் அமைத்தவர் டி.என்.ஆர். இன்றுவரை அவர் இடத்தை யாரும் எட்டிப் பிடிக்கவில்லை என்பதே இசை ஆய்வாளர் களின் கணிப்பு.

திருவிழா, மணவிழாக்களில் கால்கடுக்க நின்று கொண்டே வாசிக்கும் பழக்கத்தை மாற்றி மேடையில் உட்கார்ந்து வாசிக்கும் முறையைக் கொண்டுவந்தவர் ராஜரத்தினம் பிள்ளைதான். குறிப்பாகச் செல்வந்தர்கள் வீடுகளில் நடைபெறும் விழாக்களில் நாகசுரம்வாசிப்பவர்கள் இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு பணிவோடு மூலையில் அமர்ந்து அடிமைகள் போல நடத்தப்பட்டார்கள். இந்த அவமானத்தை அகற்றுவதில் டி.என்.ஆர். குறியாக இருந்தார். வாசிப்பதற்கு மேடையமைக்க வேண்டும் என்ற நிபந்தனையை வைத்தார். கலைஞர்களுக்குச் சுயமரியாதை வேண்டும் என்பதை நிலை நாட்டினார். அத்தகைய மரபு உருவாகத் தானே முன்மாதிரியாக இருந்தார்.

தனது நடையுடை பாவனையிலும் புதுமையை மேற்கொண்டார். கிராப்புத் தலை. ஷெர்வானி, பைஜாமா அணிந்து ஒரு ராஜகுமாரனைப் போலத் தோற்றமளித்தார். வாசிக்கும் நாயனத்தின் வடிவமைப்பிலும் மாற்றம் செய்தார். நீளத்தை அதிகப் படுத்தினார். அதாவது திமிரியாக இருந் ததை பாரியாக மாற்றினார். ராகங்களில் புதிய இசைக் கோலங்களைக் கோர்த்தார். தோடிராகம் இவரால் மேலும் மேலும் மெருகு பெற்றுத் தனித்தன்மை கண்டது.
வீணை தனம்மாள், எஸ்.ஜி. கிட்டப்பா, புல்லாங்குழல் மாலி, மதுரை மணிஅய்யர், எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.கே. தியாகராஜ பாகவதர், ஜி.என். பாலசுப்பிரமணியம் போன்ற இசைமேதைகளின் சங்கீதத்தை விரும்பிக்கேட்பார். மேலும் இவர்களுடன் கொண்ட நட்பும் தொடர்பும் இசைபற்றிய உரையாடல்களும் ராஜரத்தினத்தை மேலும் பண்படுத்தியது.

சங்கீத வித்துவான்கள் பலர் டி.என்.ஆரின் வாசிப்பை அனுபவித்ததோடு மட்டுமல்லாமல் அதே பாணியில் வாய்ப்பாட்டுப் பாடவும் ஆரம்பித்தனர். ஜி.என்.பி. அவர்கள் டி.என்.ஆர். வாசிப்பு என்றால் எங்கிருந் தாலும் வந்துவிடுவார். அவரது வாசிப்பில் ஜி.என்.பி. பைத்தியமாகவே இருந்தார். கல்யாணி, சண்முகப்பிரியா, தோடி, நடனபைரவி முதலிய ராகங்களை ஜி.என்.பி. பாடும் முறையும் பிருக்காக்கள் உபயோகிப் பதும் டி.என்.ஆரின் பாணியைப் பின்பற்றித் தான் இருந்தது என்று பல வித்துவான்கள் கூறுகிறார்கள்.

தென்னிந்தியா எங்கும் டி.என்.ஆரின் புகழ் பரவியிருந்தது. நாகசுர வாசிப்பில் ஒரு மேதையாகவே இசைமேதைகளால் கருதப் பட்டவர். அவரளவிற்கு கச்சேரிக்குப் பணம் பெற்றவர்கள் அப்போது வேறு யாரும் இருந்திருக்க முடியாது. அதேநேரம் பெரும் செலவாளியாகவும் இருந்தார். ஆனால் புகழுடன் வாழ்ந்தார்.

டி.என்.ஆர். அந்தநாள் பத்திரிகைகளில் சில கட்டுரைகள் கூட எழுதியிருக்கிறார். அப்படியொரு கட்டுரையில் இப்படி எழுதுகிறார். "எனது குழந்தைப் பருவத்திலி ருந்தே நாதஸ்வரத்தை நாபிக்கமலத்திலிருந்து வரும் பிர்க்காக்களையும் கமங்களையும் கொண்ட சாதகங்களைப் பயிற்சி செய்து வருகிறேன். எவ்வளவு அபாரமான சங்கதி களை வாசித்தாலும் சுருதி சுத்தமாகக் கையாளவே முயல்கிறேன்."

"நாதஸ்வர வாத்தியத்திற்கு வாய்ப்பாட்டு ஞானம் ரொம்ப அவசியம். சங்கீதத்தில் எல்லாம் கட்டிடம் தான். இருந்தாலும் நாதஸ்வரத்தைப் போல் கட்டிடப்பாடு எதுவும் இல்லை. கர்நாடக சங்கீதம் கெட்டுப்போகாமல் இருப்பதற்குக் காரணம் நாதஸ்வரமே தான். என் வாழ்நாள் பூராவும் இன்னும் நாதஸ்வரத்தில் எப்படி எப்படி வாசிக்கலாம் என்னும் உண்மையை என் மனத்துக்குத் திருப்திகரமாகவும் தெளிவாக வும் லோகோபகாரமாகவும் இருப்பதற்குப் பாடுபட முயற்சிக்கிறேன். ராகங்களை வந்தது வராமல் வர்ஜா வர்ஜியக் கிரமங் களோடு துரிதகாலமாகவும் அலை அலை யாகவும் வாசிக்கவே யாவரும் முயல வேண்டும். சிலர் தெரியாமல் இது நாதஸ்வர வழி, இது வாய்ப்பாட்டு வழி என்று சொல்லித்திரிகின்றனர். எந்தப் பாட்டும் எந்த வாத்தியமும் நாதஸ்வரவழி இல்லாமல் வேறு வழியில் இல்லை. வேறு வழி உண்டென்று கூறினால் அது வீட்டுக்குள் இருக்கும் வழிதான்."

"கச்சேரி செய்யும் வித்துவான்கள் பாடும்போது யார் வழி, யாரை நினைத்துக் கொண்டு அவர்கள் பாடுகிறார்கள் என்று பிரமாணரூபத்துடன் கேட்டால் பதில் சொல்லுவார்கள். தற்காலத்தில் நாதஸ்வரக் கலை மாணவர்களிடையே குன்றியிருப் பதற்குக் காரணம் அஸ்திவார பலமில்லாத சிட்சையும் அசுர சாதகமில்லாத வாழ்க்கையும் அக்கிரமத்திலடங்கிய சினிமாப் பாட்டுகளும் மகுடிகளும் உண்டானதுதான் காரணம். ஆனால் இனி முன்னுக்கு வருபவர்கள் ஆபாசமான பாட்டுக்களையோ மகுடியையோ கையாளமாட்டார்கள். அப்படிப்பட்டவர் களை சங்கீத உலகம் விரும்பாது என்பது அவர்கள் அறிந்ததே."

இவ்வாறு டி.என்.ஆர் 1949 இல் வெளி வந்த சக்தி பொங்கல் மலரில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவரது சிந்தனை வேட்கை, கலை மீதுள்ள தாகம், நாகசுரக் கலையின் எதிர் காலம் ஆகியவற்றைக் கோடி காட்டியுள்ளார். இதன் மூலம் டி.என்.ஆர். யார் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

மங்கள இசையென்று போற்றப்படும் நாகசுர இசையோடுதான் இறைவனின் ஆறுகாலப் பூசை நடைபெறும். கோயில் சார்ந்த பண்பாட்டில் நாகசுரத்தின் பயன்பாடு முக்கியமாக உள்ளது. ஒவ்வொரு ராகமும் ஒவ்வொரு விதமான வழிபாட்டிலும், சடங்கிலும் வாசிக்கப்படுவதைக் காணலாம். உதாராணமாகக் கோயில்பூசைக்கு நீர் கொண்டுவரும் போது குறிஞ்சி ராகமும் குடமுழுக்கின் போது தீர்த்த மல்லாரியும் வாசிக்கப்படும். மொத்தத்தில் நாகசுரக் கலையின் உயிர்ப்பு கோயில் பண்பாட்டுடன இரண்டறக் கலந்திருப்பதையும் நோக்கலாம்.

நாகசுரக் கலை வளர்ச்சியில் டி.என்.ஆரின் பங்களிப்பு மிக முக்கியமானது. அவரை விட்டுவிட்டு 'நாதசுர வரலாறு' 'தமிழிசையில் நாதசுரம்' போன்ற வரலாறுகள் எழுத முடியாது. இசையின் மீட்டலில்தான் அந்தந்த இசைக் கருவியின் தனித்துவமும் தொன்மமும் உள்ளது. டி.என்.ஆரின் இசைப் பிரகாரம் ஏற்படுத்தும் மனக் கிளறல்கள், அனுபவத் தேட்டம் டி.என்.ஆரின் மேதைமைக்குச் சாட்சி.

டி.என்.ஆர். 58 ஆண்டுகள் வாழ்ந்து, இசை வேள்வி நடத்தி 1956-ல் மறைந்தார். ஆனால் அவரது நாகசுர வாசிப்பும் அதன்மூலம் அவர் கோர்த்த இசைக் கோலங்களும் என்றும் அவரது பெயரை கூறிக்கொண்டேயிருக்கும்.

தெ. மதுசூதனன்
Share: 
© Copyright 2020 Tamilonline