|
|
பொதுவாழ்க்கையில் அரசியலில் எத்தனையோ பேர் இயங்கியுள்ளார்கள். பலர் தலைவராகவும் அறியப்படுகிறார்கள். ஆனால் சிலர்தாம் பொதுவாழ்க்கையில் இயங்குவதற்கான முன்மாதிரிகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளனர். குறிப்பாகத் தமிழகச்சூழலில் முற்போக்கு, சனநாயக, இடதுசாரிச் சிந்தனை மரபின் முகிழ்ப்புக்கும் அதனின்று மேற்கிளம்பும் செயற்பாட்டுக்கும் உறுதியான தளம் அமைத்தவர்களில் ப. ஜீவானந்தத்துக்குத் தனியான இடமுண்டு.
தமிழ் மரபுக்குள்ளிருந்து முற்போக்கு சனநாயக இடதுசாரிச் சிந்தனை மற்றும் செயல் வாதத்துக்கு உத்வேகம் கொடுத்தவர் ஜீவா என்று கூறலாம். தமிழ்நாட்டில் நிலவிவந்த காந்திய, பெரியாரிய, மார்க்சியச் சிந்தனைகளின் தாக்கத்துக்கு உட்பட்டு தமிழ்ச் சமூகத்தில் புரட்சிகரமான மாற்றம் உருவாகத் தீவிரமாக உழைத்தவர் ஜீவா.
இவர் தமிழறிஞர், ஆசிரியர், எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர், பத்திரிகையாளர், பகுத்தறிவுவாதி, தேசியவாதி, போராளி, பொதுவுடைமைவாதி, விவசாயத் தொழிலாளர்களின் உற்ற தோழன், போராட்டக்களம் பல கண்ட தளபதி... என்றெல்லாம் பலவாறு சொல்லி ஜீவாவைப் புகழும் மரபு இன்றுவரை உள்ளது. இவை வெறும் அலங்கார வார்த்தைகள் அல்ல. ஜீவாவை அவர் வாழ்ந்த காலத்தில் வைத்துப் புரிந்து கொள்ளும்போது மேற்குறித்த பண்புகளுக்கான கூறுகள் வெளிப்பட்டன என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
தமிழரின் மொழி, இனம், மற்றும் நாடு சார்ந்து ஜீவா முழங்கிய சொற்கள் வெறும் உணர்ச்சி மயமானவை அல்ல. தமிழ்ப் பண்பாடு மற்றும் சிந்தனை மரபில் இழையோடிவரும் உயிர்ப்பான முற்போக்கு, சனநாயக, இடதுசாரி மரபை மீளக்கட்டமைக்கும் இலட்சிய பூர்வமான நடைமுறைகள் கொண்டவையும் ஆகும். இதற்கேற்ற சொல்-செயல் இணைவுதான் ஜீவா.
சமூக, அரசியல், கலாசார தளங்களில் கொள்கை சார்ந்த விளக்கங்கள் அறிவுபூர்வ மாக வேண்டிநின்ற காலத்தில் ஜீவாவின் வருகை அதனைத் தக்கவாறு பூர்த்தி செய்யத் தொடங்கிற்று. தமிழ்ச் சமூக இயக்கத்தின் விமரிசனப் பரப்பில் செயற்பாட்டாளராக ஜீவாவின் பாகம் இன்னும் தொடர்வதற்கான முழுச்சாத்தியத்தையும் கொண்டுள்ளது.
இதனாலேயே ஜீவா தலைவராக, சிந்தனையாளராக, செயற்பாட்டாளராக, தொண்டராக இனம் காணுவதற்கான முழுத் தகுதியையும் வெளிப்படுத்தியுள்ளார், வாழ்ந்துள்ளார்.
"கொள்கை எங்களுக்குக் கிடையாது என்கிறார் ஸ்ரீமான் ராஜகோபாலச்சாரியார். எங்கள் கொள்கையெல்லாம் ராஜாஜியை எதிர்ப்பது ஒன்றுதான் என்று கூறுகிறார். ஏன் என்று கேட்கிறேன்? ராஜகோபாலாச்சாரியை எதிர்ப்பதற்கு ஒரு ஐக்கிய முன்னணி அவசியமில்லை. அவர் ஒருவரை மாத்திரம் எதிர்ப்பதற்கு ஐக்கிய முன்னணி ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்குமேயானால், அதைப் போன்ற அவசியமற்றதான வேறு ஒரு கட்சி இந்த நாட்டில் இருக்க முடியாது. ஒரு ராஜாஜியை எதிர்ப்பதற்காகவோ 10 இலட்சக்கணக்கான மக்கள் இந்த மாகாணம் முழுவதிலும் வோட்டுப் போட்டார்கள்? காங்கிரஸ்காரர்களுடைய அதிகார பலத்தை எதிர்த்து, காங்கிரஸ்காரர்களுடைய திமிர் நடத்தையை எதிர்த்து, காங்கிரஸ்காரர்களுடைய ஜபர் தஸ்துக்களை எதிர்த்து இவ்வளவையெல்லாம் எதிர்த்து 10 ஆயிரக்கணக்கில் வெள்ளமாகத் திரண்டு வந்து வோட்டுப் போட்டார்கள்."
இவ்வாறு சட்டப்பேரவையில் முழங்கினார் ஜீவா. இந்த முழக்கம் ஜீவாவின் முதல் முழக்கம். 1952 ஜூலை 1-ம் தேதி தொடங்கிய ஜீவாவின் இந்த முழக்கம் சட்டப்பேரவையில் அன்று தனித்துவமாக ஒலித்தது. கொள்கை சார்ந்த நிலைப்பாடுகளை மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் அறிவுபூர்வமாகவும் எடுத்துரைத்த பாங்கு ஜீவாவினுடையது. அன்று காங்கிரஸ் கட்சி குறித்த ஜீவாவின் விமரிசனம் அக் காலத்து நடைமுறையில் அக்கட்சி எத்தகைய திமிர்த்தனத்துடன் விளங்கியது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. அக்கட்சியின் மீதான மோகம் எங்கும் புனிதப்படுத்தப்பட்டிருந்த பொழுது ஜீவாவின் இந்த முழக்கம் உண்மையின்பால் கவனம் குவிக்க வைத்தது. கொள்கை சார்ந்த நிலைப்பாடுகளின் மேல் கவன ஈர்ப்பை ஜீவா ஏற்படுத்தினார்.
சட்டப்பேரவையில் முற்போக்கு சனநாயக இடதுசாரி அரசியல், சிந்தனை, கலாசார நடைமுறைகளுக்கான தளம் அமைத்துக் கொடுத்த பெருமை ஜீவாவையே சாரும்.
1952 பிப்ரவரியில் 'வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை' என்ற அடிப்படையில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் சென்னை வண்ணாரப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டார் தோழர் ஜீவா. இவரை எதிர்த்து நின்றவர்களை கட்டுக்காசு இழக்கச் செய்து வெற்றி வாகை சூடினார்.
ஜீவா தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவராகப் பட்டிதொட்டியெங்கும் அறியப்பட்டிருந்தார்; வறிய விவசாய, தொழிலாள வர்க்கத்தின் பிரதிநிதியாகத் தன்னை வரித்துக்கொண்டு பணியாற்றினார்; மக்கள் தலைவராக வாழ்ந்து மறைந்தார்.
ஜீவாவின் ஆளுமை வளர்ந்த விதம் சராசரி எதிர்பார்ப்புக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவே இருந்தது. குழந்தைப் பருவத்திலேயே ஆதிக்க எதிர்ப்புக் குணம் இவரிடம் இயல்பாக அமைந்திருந்தது. ஆனால் இதன் தோற்றம் முரட்டுத்தனமானது. எதிலும் மோதிப் பார்த்துவிடும் இயல்பு கொண்டது. இந்த இயல்புதான் இவரைப் போர்க்குணம் கொண்ட மனிதராக உருவாக்கியிருந்தது. அவரை நன்கு உணர்ந்த தோழர்கள் இவ்வாறுதான் பதிவு செய்துள்ளார்கள்.
இளவயதிலேயே தம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கூர்ந்து நோக்கிவந்தார். சக மனிதர்களைக் கேவலப்படுத்தும் தீண்டாமைக் கொடுமைகள் அவரைப் பாதித்தது. அப்போதே மனவுறுதியோடு தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார். தீண்டாமைக்கு உட்பட்ட மக்களுடன் நெருங்கிப் பழகிவந்தார் இந்தச் செய்கைகளால் இவருடைய வீட்டார் இவருடன் முரண்பட்டார்கள். இதனால் இவர் வீட்டை விட்டே வெளியேறினார். தனக்குச் சரியென்று படுவதில் எந்த விட்டுக்கொடுப்பும் செய்யாமல் உறுதியுடன் போராடும் மனவுறுதி ஜீவாவின் வாழ்க்கையை மாற்றியமைக்கத் தொடங்கியது.
காரைக்குடிக்கு அருகில் உள்ள சிராவயல் என்ற கிராமத்தில் நண்பர்கள் உதவியுடன் 'காந்தி ஆசிரம்' என்ற பெயரில் ஆசிரமம் உருவாக்கினார். இதன்மூலம் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக் கான வாழ்விடங்களை உருவாக்கிக் கொடுப்பது ஜீவாவின் நோக்கமாக இருந்தது. இக்காலத்தில் வ.வே.சு. ஐயர் சேரன்மாதேவியில் நடத்திய 'பரத்வாஜ ஆசிரமம்' சாதிய உணர்வோடு நடத்தப்பட்டது பெரும் விவகாரமாக இருந்தது. இந்த நடைமுறையை எதிர்த்து ஈ.வே.ரா, வரதராஜுலு நாயுடு நடத்திய கிளர்ச்சியிலும் ஜீவா பங்கு கொண்டார். வ.வே.சு. ஐயர் நடத்திய ஆசிரமத்துக்கு மாறான ஆசிரமம் உருவாக்குவது தான் ஜீவாவின் நோக்கமாக இருந்தது.
ஜீவாவின் ஆசிரமத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள், பெண்கள் ஆகியோரை மிகுதியாகச் சேர்த்தார். இதைவிட இக்காலங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் இரவுப் பள்ளிக்கூடங்களை உருவாக்குவதிலும் அக்கறை கொண்டு செயற்பட்டார். ஜீவா நடத்திய ஆசிரமத்துக்கு காந்தி வந்தார். அத்தருணத்தில் நால்வருணப் பாகுபாட்டைப் பற்றி ஜீவா எழுப்பிய வினாவுக்கு அதனை ஆதரிக்கும் நிலை எடுத்து காந்தி பதில் கூறியமையால் காந்தியுடன் ஜீவாவுக்குக் கருத்து வேறுபாடு பிறந்தது. காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஆழமாகிவிடவே தலைவர் கும்பலிங்கத்துக்கும் ஜீவாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றியது. ஜீவா ஆசிரமத்திலிருந்து விலகி நாச்சியார்புரத்தில் 'உண்மை விளக்க நிலையம்' அமைத்து அதனைச் சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்தார்.
ஜீவாவைத் தனித்தமிழ் இயக்கம் ஈர்த்தது. சுயமரியாதை இயக்கத்தில் இணைந்த பின்னர் தனது பெயரை 'உயிர் இன்பன்' என்று மாற்றிக் கொண்டார். தனித்தமிழ் இயத்தின் முதல்வர்களில் ஒருவரான மறைமலையடிகளை ஒருமுறை சந்திக்கச் சென்றார் ஜீவா. அப்பொழுது அடிகளார் 'போஸ்ட்மேன்', 'காரணம்' என்ற சொற்களைக் கையாண்டது கண்டு அதிர்ச்சியடைந்தார். தனித்தமிழ் இயக்கத்தின் நடைமுறை குறித்து மேலும் ஆழமாக சிந்திப்பதற்கான தேவையை உணர்ந்தார்.
1920களில் தமிழ்ச்சூழல் பல புதிய பரிமாணங்களை ஏற்றுச் செயற்பட்டது. காலனியம் உருவாக்கிய கல்வி மூலம் படித்தவர்-படிக்காதவர் என்ற சமூக முரண் உருவானது. ஏற்கனவே சமூகத்தில் புரையோடியிருந்த சமூக முரண்கள் புதிய வடிவம் பெறத் தொடங்கின. இப்பின் புலத்தில் பல்வேறு இயக்கங்கள் தோன்றின.
'தென்னிந்திய நல உரிமைச் சங்கம்', 'சுயமரியாதை இயக்கம்', 'தனித்தமிழ் இயக்கம்', 'தமிழிசை இயக்கம்' போன்ற இயக்கங்கள் தோன்றின. தமிழ்நாட்டுச் சமூக அரசியல் பண்பாடு கருத்துநிலைத் தளங்களில் இந்த இயக்கங்களின் தாக்கம் வலுவாக இருந்தன.
இதைவிடக் காலனித்துவ ஆட்சிக்கெதிராகச் சுதந்திரப் போராட்டம் பல முனைகளிலும் வேகம் கண்டது. அரசியல், விடுதலை பற்றிய எண்ணக்கருக்கள் சமூகத்தின் மாறுநிலைக் காலகட்டத்தின் வாழ்வியல் புலமாக மாற்றம் பெற்றன. இதனால் சிந்தனையிலும், செயற்பாட்டிலும் புதிய தன்மைகளையும் புதிய பண்புகளையும் வேண்டிநின்றன. இயக்கங்கள் சார்ந்த அரசியல் போக்குகள் பல நிலைகளிலும் வெளிப்பட்டன. இந்த மாற்றங்களும் இயக்கங்களுக்கும் முகம் கொடுத்து, அவற்றின் தாக்கங்களுக்கு உட்பட்டு வளர்ந்த தலைமுறையில் ஒருவராக ஜீவா இருந்தார்.
1931-ல் விருதுநகரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் பங்கு பற்றினார். சாதி ஒழிப்பில் மும்முரமாக ஈடுபட்டார்; பிரச்சாரமும் செய்தார். இது பொறுக்காமல் நண்பரொருவரே இவரை வெட்டரிவாளால் தாக்கிக் காயப்படுத்தினார். இந்தக் காயத்தழும்பு அவருடைய வாழ்நாள் முழுவதும் இருந்தது. 1932-ல் காங்கிரஸ் போராட்டத்தில் ஓராண்டு சிறைத்தண்டனை அடைந்தார். சிறையில் பகத்சிங்கின் தோழர்கள் சிலருடைய தொடர்பு கிடைத்தது. இதனால் சோசலிஸ்டாக மாறினார். |
|
பெரியார் காங்கிரஸிலிருந்து வெளியேறி குடியரசு இதழை உருவாக்கி அதன் மூலம் சுயமரியாதை இயக்கத்தைக் கட்டுவதில் மும்மரமாக ஈடுபட்டார். பெரியாரோடு இணைந்து செயற்படும் மனநிலையில் ஜீவா அப்பொழுது இருந்தார். 1935வரை சுயமரியாதை இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டார்.
1934-ம் ஆண்டு பகத்சிங்கின் 'நான் நாத்திகன் ஏன்?' என்னும் நூலை ஜீவா மொழி பெயர்த்தார். இந்நூல் ஈரோடு பகுத்தறிவு நூற்பதிப்புக் கழக வெளியீடாக வெளிவந்தது. இதனால் ஜீவாவும், கண்ணம்மையும் (ஈ.வே.ரா.வின் தங்கை) கைது செய்யப்பட்டனர். கருத்துரிமைக்காக முதன்முதலில் தமிழகத்தில் சிறை சென்றவர்கள் இவ்விருவருமாகவே இருப்பார்கள்.
சுயமரியாதை இயக்கம் இக்காலங்களில் சோவியத் யூனியன் மீதும் லெனின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்ட இயக்கமாக இருந்தது. பெரியாரின் சோவியத் பயணம் மற்றும் அது தொடர்பான அவரது அறிக்கைகள் இதனை உறுதிப்படுத்தின. மார்க்சியச் சிந்தனையில் தன்னை இணைத்துக்கொண்ட மா. சிங்காரவேலரும் இக்காலங்களில் சுயமரியாதை இயக்கத்தோடு இணைந்து செயற்பட்டு வந்தார்.
இந்தச் சூழலில் சுயமரியாதை இயக்கம் காங்கிரஸ் கட்சியைவிட முற்போக்கானது என்று ஜீவா கருதினார். ஜீவா குடியரசு இதழில் பாடல்களையும், கட்டுரைகளையும் எழுதி வந்தார். பெரியார் நடத்திய மாநாடுகளிலும் சிறப்பாகக் கலந்து வந்தார். சோசலிசம், பகுத்தறிவு, விஞ்ஞான நோக்கு ஆகியவற்றைப் பிரச்சாரம் செய்வதில் முழுமூச்சுடன் ஈடுபட்டார்.
1935-ல் நடைபெற்ற திருத்துறைப்பூண்டி மாநாட்டில் ஜீவா மற்றும் பெரியாரின் அணுகுமுறைகளிக்கிடையே முரண்கள் வெளிப்பட்டன. இதனால் அவ்வியக்கத்திலிருந்து ஜீவா விலகிக் கொண்டார். பின்னர் 1936-ல் சாத்தான்குளம் அ. இராகவன் உள்ளிட்டோருடன் இணைந்து 'சுயமரியாதை சமதர்மக்கட்சி' என்ற அமைப்பைத் தொடங்கினார். இதன் சார்பில் 'அறிவு' என்ற இதழையும் தொடங்கினார்.
சுயமரியாதை சமதர்மக் கட்சி ஏன் தொடங்கப் பட வேண்டும்? சுயமரியாதை இயக்கத்தி லிருந்து இந்தக்கட்சி எந்தவிதத்தில் வேறுபடுகிறது?-இவற்றை விளக்கி ஒரு துண்டுப் பிரசுரத்தை ஜீவா வெளியிட்டார். சுயமரியாதை இயக்கம் பற்றிய ஜீவாவின் மதிப்பீடு எத்தகையது என்பதை இந்த ஆவணம் தெளிவுபடுத்துகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் சோசலிஸ்டு கட்சியும் இக்காலங்களில் இயங்கிவந்தது. இக்கட்சிக்குள் கம்யூனிஸ்டுகள் உட்புகுந்து செயற்படத் தொடங்கினார். கம்யூனிஸ்டுகளின் செயற்பாடுகள் பலமுனைகளில் நிகழ்ந்தன. இவர்களுடனும் இணைந்து ஜீவா செயற்பட்டு வந்தார். ஒரு கட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளராக ஜீவா தேர்ந்தெடுக்கப்படார். 1937-ல் ஜனசக்தி இதழின் ஆசிரியராகவும் பொறுப்பெடுத்தார். 'சோசலிஸ்டு வார இதழ்' என்ற தலைப்போடு ஜனசக்தி வெளிவரத் தொடங்கியது.
தமிழக இடதுசாரி அரசியல் முகிழ்ப்பின் சின்னமாக ஜீவா இயங்கினார். அவரது பணிகள் பலநிலைகளில் வேகம் கண்டன. 1938 டிசம்பரில் 'தாமரை' இதழ் தொடங்கப்பட்டது. இதன் மூலம் இடதுசாரி இலக்கிய மரபுக்கான விரிதளம் உருவாக்கப்பட்டது.
ஜீவா சங்க இலக்கியம், திருக்குறள், கம்பன், பாரதி படைப்புகள் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு மிக்கவராக இருந்தார். தமிழ் இலக்கிய மரபுகளுடன் பரிச்சயம் மிக்கவராக இருந்தது அவரது தனிச்சிறப்பு. சமூகம், இலக்கியம் பற்றிய புதிய பார்வைக்கான தளம் அமைத்துக் கொடுத்தார். 1930களின் இறுதியில் இருந்து தமிழ் இலக்கியம், தமிழிப்பண்பாடு குறித்து முற்போக்கு இடதுசாரிப் பார்வையை முன்னெடுத்து வளர்த்துச் சென்றார். திமுகவினர் 1950களின் பின்னர் மேற்கொண்ட தமிழ் இலக்கியம் பற்றிய உரையாடல்களை ஜீவா 1930களில் இறுதியில் இருந்து முன்னெடுத்தார். இதன் மூலம் பண்பாட்டுப் போராட்டக் களத்தில் ஜீவா முன்னோடியாகச் செயற்பட்டுள்ளார். இதனையே ஜீவாவின் 'தளமும் வளமும்' உறுதிப்படுத்துகின்றது.
"குறிப்பிட்ட இனம் சார்ந்த பண்பாட்டு விழுமியங்களை கம்யூனிஸ்டுகள் எப்படி உள்வாங்குவது என்பதில் இந்திய இடதுசாரிகள் மத்தியில் முரண்பட்ட அணுகுமுறைகள் இருந்தன. ஜீவா இதில் தெளிவாகச் செயற்பட்டார் என்று கூற முடியும். அதுவே அவரின் மிகப்பெரும் பலம் என்று கூறலாம் பண்பாட்டுத் தளத்தில் இடதுசாரி இயக்கங்களின் செயல்பாடுகள் பல்வேறு விமரிசனங்களுக்கு இன்னும் கூட ஆட்படுத்தப்படுவதைக் காணமுடியும். இதில் ஜீவாவின் அணுகுமுறை வேறுபட்டிருந்தது" என்று பேரா. வீ. அரசு குறிப்பிடுவதை சமகாலப் பின்புலத்தில் வைத்து நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ஜீவா 1952-56 காலங்களில் சட்டமன்ற உறுப்பினராகச் செயற்பட்ட பொழுது அவரது சட்டமன்ற உரைகள் பண்பாட்டுப் போராளியாக அவர் செயல்பட்ட பாங்கை மிகத்துல்லியமாக அடையாளப்படுத்துகிறது. 'சட்டப்பேரவையில் ஜீவா' என்ற ஜீவபாரதி தொகுத்த நூல் இதற்கு சிறந்த ஆவணமாகும்.
தமிழ் ஆட்சிமொழி, பயிற்றுமொழி, நீதிமன்ற மொழி பற்றியெல்லாம் அவரது சிந்தனை விரிவானவை அறிவு பூர்வமானவை மேலும் மொழிவழி மாநிலங்கள் உருப்பெறுவதற்கும் கருத்தியல் விளக்கங்களை அறிவுபூர்வமாக முன் வைத்தவர்களுள் ஜீவாவுக்கும் முதன்மையான பங்கு உண்டு. பண்பாட்டு தளத்தில் சிறந்த போராளியாக இயங்கினார். இந்தப் பின்புலம் பற்றிய விரிவான ஆழமான பார்வை நமக்கு இன்று வேண்டும்.
தெ. மதுசூதனன் |
|
|
|
|
|
|
|