Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சாதனையாளர் | அமெரிக்க அனுபவம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | அஞ்சலி | வார்த்தை சிறகினிலே | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
முன்னோடி
வீரமாமுனிவர்
- மதுசூதனன் தெ.|பிப்ரவரி 2006|
Share:
Click Here Enlargeதமிழ் நாட்டோடும் தமிழ் மொழியோடும் கிறித்தவம் கொண்ட தொடர்பு ஐந்து நூற்றாண்டு காலப் பழமை கொண்டது. இத் தொடர்பில் தமிழராகவே மாறிப்போன கிறித்தவப் பாதிரிகள் பலர். அவர்களுள் வீரமாமுனிவர் என்று அழைக்கப்பட்ட கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (1680-1747) குறிப்பிடத்தக்கவர்.

தமிழகத்தில் இவர் தைரியநாதர், வீர ஆரியன், செந்தமிழ்த் தேசிகர் உள்ளிட்ட பல பெயர்களால் அறியப்பட்டவர் லத்தீன் மொழியிலமைந்த தம் இயற்பெயரைத் தாமே வடமொழிக் கலப்புடைய தமிழில் தைரியநாதன், வீர ஆரியன் எனத் தொடக்கத்தில் மாற்றிக் கொண்டார். காலப்போக்கில் இவற்றில் உள்ள வடமொழிச் சாயலைத் தவிர்க்க எண்ணினார். இதனால் தனது பெயரை வீரமாமுனிவர் என அழைக்கப்பட விரும்பினார். அதுவே நிலைபெற்றது.

பெஸ்கி இத்தாலி நாட்டின் வெனிஸ் மாநிலத்தில் ஆகஸ்டு 12, 1680 அன்று பிறந்தார். ஜோசப் பெஸ்கி என்னும் குடும்பப் பெயரும் இணைந்து கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்று அழைக்கப் பெற்றார். தனது பதினெட்டாவது வயதில் துறவறம் வேண்டி இயேசு சபையில் சேர்ந்தார். தொடக்கத்தில் இத்தாலியம், லத்தீனம், பிரெஞ்சு, கிரேக்கம் ஆகிய மொழிகளின் இலக்கியங்களைக் கற்றுப் புலமை பெற்றபின் ஓராண்டு தத்துவம் பயின்றார். 1706-ம் ஆண்டு மறையியல் பயிலத் தொடங்கி 1709 செப்டம்பர் மாதத்தில் குருத்துவப் பட்டம் பெற்றார்.

இந்தியாவில் பணியாற்ற விரும்பி 1710-ல் போர்த்துக்கீசியக் கப்பலில் வந்திறங்கினார். கொச்சியை அடுத்த அம்பலக்காடு சென்று, அங்கிருந்து புறப்பட்டுத் தூத்துக்குடியைச் சார்ந்த கடற்கரைப் பகுதியில் சில மாதங்கள் கழித்தார். பின்னர் மதுரைப் பகுதியைச் சேர்ந்த காமநாயக்கன் பட்டியை 1711 மே 8-ம் நாள் அடைந்தார். அங்கே இராபர்ட் டி நோபிலி அடிகளின் வழியொற்றித் தம் நடையுடை முறைகளை மாற்றிக் கொண்டு தமிழ்த்துறவியாய் அடியெடுத்து வைத்தார்.

ஜோசப் பெஸ்கி இத்தாலி நாட்டிலிருந்து தமிழகம் வந்ததன் தலையாய நோக்கம் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புதலே. ஆயினும் அப்பணியில் மட்டும் அவர் அமைதி காணவில்லை. சமுதாயப் பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். தாம் வாழ்ந்த இடங்களில் உள்ள மக்களுக்கு துன்பம் நேர்ந்த பொழுது அதனைத் துடைக்கும் முயற்சியில் தாமே முன்நின்றார். அவ்வூர் மக்களுக்காக முகமதியப் படைத் தலைவனிடம் பரிந்து பேசிய நிகழ்ச்சி இதற்குச் சான்றாகும்.

தமிழகத்தில் வீரமாமுனிவர் முப்பது ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். அவரது சமய, சமுதாயப் பணிகளை விடத் தமிழ்ப் பணிகள் ஆழமானவை. அவரது படைப்புகள் தமிழின் புதிய துறைகள் சிலவற்றுக்கு அடிகோலியுள்ளன.

பெஸ்கி அடிகள் தமிழகம் வந்த காலம் தொடங்கித் தமிழ் கற்கத் தொடங்கினார். தமிழ் மொழியைப் பிழையறத் தெளியும் வகையில் கற்றார். திருக்குறள், சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்றவற்றை விரும்பிக் கற்றார். அவற்றின் சுவை, பொருள் அடிகளாரின் சிந்தனைப் போக்கில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. குறிப்பாக சிந்தாமணியைப் போல் கிறிஸ்தவ மதச்சார்பான ஒரு காவியம் எழுத ஆசைப்பட்டார். அதன் விளைவாக 'தேம்பாவணி'யை எழுதினார். இந்நூல் 3615 பாடல்களைக் கொண்டதாகும். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையோடும் மரபாக வரும் சில கதைகளுடனும் சேர்த்து சூசையப்பர் என்பவரின் வரலாற்றைக் கூறுவது.

இலக்கிய வடிவங்களில் தலை சிறந்ததாகக் காப்பிய வடித்தைக் கூறலாம். உலக மொழிகளில் பிற இலக்கிய வகைகளைப் படைத்தோர் ஆயிரக்கணக்கில் இருக்கக் காப்பியம் படைத்தவர் ஒரு சிலரே உள்ளனர். தமிழில் காப்பியம் படைக்க முன்வந்தோர் மிகச் சிலரே. இத்தகைய சிலரில் ஒருவரே வீரமாமுனிவர்.

தமிழுக்குத் தேம்பாவணியைத் தந்ததன் மூலம் வீரமாமுனிவரது புலமை, படைப் பாளுமையைத் தமிழ் உலகு அறியும் வாய்ப்புக் கிட்டியது. தமிழ்க் காப்பியம் ஒவ்வொன்றுக்கும் தனிச் சிறப்பு உண்டு. அவ்வகையில் தேம்பாவணிக்குரிய சிறப்புகள் பல. அவற்றை ஆய்வு ரீதியில் வெளிப்படுத்தும் முயற்சியில் பலர் ஈடுபட்டுள்ளனர். எழுதியுள்ளனர். அவற்றுள் பேராசிரியர் சூ. இன்னாசி அவர்கள் எழுதியுள்ள குறிப்புகள் இங்கு நோக்கத் தக்கன.

தேம்பாவணி தமிழரல்லாத ஒருவரால் தமிழில் எழுதப் பெற்றது. அவர் பன்மொழி வித்தகருமாவார். பல்வகை இலக்கிய வடிவங்களைக் கையாண்டு வெற்றி பெற்ற ஒருவரால் நாற்பொருள்களுள்ளும் இன்பம் விரவாமல் எழுதப் பெற்றது. இந்நூலில் பயிலும் சந்த வேறுபாடுகளின் எண்ணிக்கை பிற தமிழ்க் காப்பியங்களில் காணப்படும் அளவினை விட மிகுதியாக அமைந்துள்ளது. முதன்முதல் முழுமையாக அச்சில் வந்த சிறப்பையுடையது.

கீர்த்தனை, சிந்து, வசனகாவியம், விருத்தியுரை, உரைநடை, சுருக்கம் ஆகிய பல்வேறு வடிவங்களைக் கண்ட பெருமையுடையது. இவை தேம்பாவணியின் சிறப்புகளில் சில.

தம் காலத்தே வழங்கிவந்த இலக்கியங் களையும் குறிப்பாகக் காப்பியங்களையும் கற்றறிந்ததன் பயனாகவே தேம்பாவணியைப் படைக்கும் விருப்பு வீரமாமுனிவருக்கு எழுந்தது. இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது கூடத் தேம்பாவாணிக் காப்பியத் துக்குச் சிறப்பான இடமுண்டு என்பதை ஆய்வுகள் மேலும் உறுதிப்படுத்துகின்றன.

அடுத்து அகராதித்துறைக்கு வீரமா முனிவர் ஆற்றியுள்ள பணி குறிப்பிடத் தக்கது. முதன் முதலாக உரைநடையில் சொற்பொருள் விளக்கங்களைக் கொண்டு தோன்றிய அகரமுதலி 'சதுரகராதி' ஆகும். இதனை இவர் நிகண்டுகளிலே செய்யுள் வடிவிலே அமைந்திருந்த சொற்பொருள் விளக்கங்களை உரைநடையில் மாற்றி அகராதியாக 1732-ம் ஆண்டு அமைத்தார். திவாகரம், பிங்கலம், உரிச்சொல் நிகண்டு, சூடாமணி நிகண்டு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டது சதுரகராதி.

சதுரகராதி பெயர், பொருள், தொகை, கொடை என்னும் நான்கு பகுதிகளைக் கொண்டது. அதனாலேயே அது சதுரகராதி எனும் பெயர் பெற்றது. இவ்வகையான பகுப்பு முறைக்கு முன்னைய நிகண்டுகளின் அமைப்புகளே காரணம். மேலும் மேனாட்டு அகராதியியல் வளர்ச்சியும் அதற்குத் துணை செய்தது. அதாவது கற்றவரேயன்றி மற்றவரும் யாவரும் தமிழ்ப்பதங்களை எளிதாகக் தெரிந்து கொள்வதற்கு மேல் நாட்டு அகராதியின் சிறப்புகளை உள்வாங்கிப் படைக்கப்பட்டது.
இவ்வகராதி நம்நாட்டுப் பழமையான பொருள் கூறும் முறைகளை முற்றிலும் மாற்றிவிட்டது. பொருள் தெளிவைவிடப் பொருள் மயக்கமே தருமாறு அமைந்திருந்த தொடக்க கால நிகண்டுகளின் செய்யுள் நடை, வேண்டுமென்றே ஒதுக்கப்பட்ட தெனக் தொடக்கப் பாடல் அறிவிக்கிறது. சரியான அகராதி நிரன்முறை பின்பற்றப்படுகிறது. பொருள் கூறுவதிலும் கடினச் சொற்களுக்கும் மட்டும் பொருள் கூறும் பழமையான மரபு முதன்முறையாக நீக்கப்பட்டுப் பல எளிய சொற்களும் சேர்க்கப்பட்டுள்ளன என்று பேரா. வையாபுரிப் பிள்ளை அவர்கள் இந்த அகராதியின் சிறப்புப் பற்றிக் கூறுவது இங்கு கவனிக்கத் தக்கது.

வீரமாமுனிவரால் பேச்சுமொழிக்கெனப் படைக்கப்பட்டது தமிழ்-இலத்தீன் அகராதி. இவ்வகராதியுடன் போர்த்துக்கீஸ்-இலத்தீன்-தமிழ் அகராதியும் இணைந்து காணப்படுகிறது. இது அவரது இறுதிக் காலத்தில் படைக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் அகராதியியல் பெற்றுள்ள வளர்ச்சிக்குச் சதுரகராதி அடிகோலியது எனலாம். மேலும் அகராதிகளில் பல்வேறு வகைகளுக்குக் கால்கோள் இட்டது தமிழ்-லத்தீன் பேச்சுமொழி அகராதி எனலாம்.

தமிழில் நவீனமான அகராதியியல் தோற்றம் பெற்று வளர்ச்சி அடைவதற்கு வீரமாமுனிவர் மேற்கொண்ட அகராதிப் பணிகள் தெளிவான, உறுதியான தடம் அமைத்துள்ளன. அந்தவகையில் தமிழில் அகராதியியல் துறையின் முன்னோடி யாகவும் அவரை நோக்குவது மிகப் பொருத்தமாக இருக்கும்.

வீரமாமுனிவர் இலக்கணத்தில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். தொன்னூல் விளக்கம் செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், இலக்கணத் திறவுகோல் உள்ளிட்ட நூல்களைத் தந்துள்ளார். தொன்னூல் விளக்கம் தவிரப் பிற மூன்றும் மேனாட்டாருக்குத் தமிழ் இலக்கணத்தைத் தெரிவிக்க இலத்தீன் மொழியில் எழுதப் பட்டவை. ஆனால் தொன்னூல் விளக்கம் தமிழறிந்தோர் தமிழ் இலக்கணப் பரப்பைச் சுருக்கியுணர எழுதப்பட்டது எனக் கூறலாம்.

தாம் இயற்றிய தொன்னூல் விளக்கத்துக் குத் தாமே உரையும் எழுதினார். 'யான் மூத்தோர் புதைத்த நூல் நலம் விளங்கவும், கல்லாதவரும் பயன் கொண்டு உணரவும் நானே அதன் மேற்கவிந்த போர்வை நீக்கி, அறிஞர் முன் கொழுத்தின தீபம் எவர்க்கும் எறிப்பக் கையில் ஏந்தினாற் போல அவர்முன் செந்தமிழ் மொழியால் மறைந்த இலக்கண நூலை இளந்தமிழுரையால் வெளிப்பொருளாக்க நினைத்தேன். முன் தந்த யாவையும் விரித்துரைத்தால் இந்நூலும் பெருகிக் கண்டவர் அஞ்சித் துணியார் என்று கருதி முன்னம் மிக அறிய வேண்டுவதென்றைத் தெரிந்து தருவேன்" என்னும் பாயிர உரைப்பகுதியிலிருந்து அவரது நோக்கத்தை அறியலாம்.

வேதவிளக்கம், வேதியர் விளக்கம், லூத்தர் இனத்தியல்பு, பேதகம் மறுத்தல், பரமார்த்த குருகதை, வாமன் சரித்திரம் உள்ளிட்ட உரைநடை நூல்கள் தமிழில் உரைநடை நிறைபேறாக்கத்துக்கு தெளிவான தடம் அமைத்திருப்பவை. மிக எளிய மொழி நடையைக் கையாண்டு பாமரரும் படித்து மகிழும் வகையில் அமைத்திருப்பது கவனிப்புக்குரியது.

பரமார்த்த குரு கதையில் நிகழ்ச்சிகளை நகைச்சுவையாக அமைத்துள்ளார். மொழி நடையும் எளிமையானது. கடின நடையைப் பயன்படுத்தித் தம் புலமையை வெளிப்படுத்த விழைந்த காலத்தில் வீரமாமுனிவரது இந்த நடை, பிற்காலத்தில் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கான கூறுகளைக் கொண்டிருந்தது.

"அந்த ஆறு கொடியது என்றும், எனவே அது விழித்திருக்கும் வேளையில் அந்த ஆற்றைக் கடக்கக் கூடாது என்றும் கூறினார் (பரமார்த்த) குரு. எனவே அந்த ஆறு தூங்கிக் கொண்டிருக்கிறதா என்று அறிந்து வர மிலேச்சன் எனும் தன் சீடனை அனுப்பனார். மிலேச்சன், புகையிலைச் சுருட்டை தீப்பற்ற வைப்பதற்காகக் கையிலேந்தியுள்ள கொள்ளிக் கொட்டையைக் கையிலேந்திக் கொண்டு சென்று அதைத் தண்ணீருக்குள் செலுத்தினான்.

தீக்கட்டையை தண்ணீருக்குள் செலுத்தியதும் சுறீரென புகைந்த புகை வெளியே வந்தது அதைக் கண்ட மிலேச்சன் பதறி ஓடி வந்து, 'ஐயா! ஐயா!' இப்போது நதியைக் கடக்கத் தருணமன்று அது விழித்திருந்தது. நான் தொட்டவுடனே நச்சுநாகம் போல் சீறி தீயெரி கோபத்தில் பாய்ந்து என்னை எதிர்த்தது. அதன் கோபத்தில் இருந்து உயிர் தப்பியோடி வந்தேன்! என்று குருவிடம் கூறினான்."

வீரமாமுனிவரின் நகைச்சுவை, எளிமை ஆகியவற்றுக்கு மேலே கண்டது ஒரு சான்று.

தொகுத்துக் கூறின், தமிழில் வீரமாமுனிவரது பணிகள் பலதரப்பட்டவை. கிறித்தவம் பரப்ப வந்த பாதிரிமார் எப்படித் தமிழர் மொழியோடும் வாழ்வியலோடும் இரண்டறக் கலந்து தமிழின் ஆழ அகலம் வேண்டிச் செயற்பட்டுள்ளார்கள் என்பதற்கு வீரமாமுனிவர் சிறந்த எடுத்துக் காட்டு.

வீரமாமுனிவர் 1747 பிப்ரவரி 4-ம் திகதி தமது அறுபத்தாறாம் வயதில் காலமானார். ஆனால் தமிழ் வளர்ச்சியில் அவர் முன்னெடுத்த பணிகள், படைப்புகள், ஆய்வுகள் புதிய செல்நெறிப் போக்குகள் உருவாகி வளர்வதற்குக்
காரணமாக இருந்துள்ளன. இன்றுவரை இருந்து வருகின்றன.

தெ. மதுசூதனன்
Share: 
© Copyright 2020 Tamilonline