|
|
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தில் பெண்கள் வாழ்க்கை மிகவும் மோசமாக இருந்தது. 1920களில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், பெரியார் ஈ. வெ. ரா. போன்ற முற்போக்குக் காங்கிரஸ்வாதிகள் பெண்ணுரிமை பற்றிக் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். பெரியார் விதவை மறுமணம், பெண் களுக்குச் சொத்துரிமை, விவாகரத்து உரிமை ஆகியவற்றை வற்புறுத்தி வந்தார். பெண்கள் சுயமாகச் சிந்திக்கவும் எழுதவும் பொதுவாழ்வில் தலையிடவும் இந்தகைய புரட்சிக்குரல்கள் சமூகப் பண்பாட்டு தளத்தில் மிகுந்த தாக்கம் செலுத்தின. மாற்றங்களைக் கோரும் ஆளுமைகள் உருவாகத் தொடங்கினார்கள்.
இத்தகைய பின்னணியில் தான் 1940 களின் இறுதியிலும் 50களின் தொடக்கத் திலும் தஞ்சை நாகைப்பகுதியின் பல சுற்றுப்புற கிராமங்களில் மணலூர் மணியம்மாள் என்பவர் தீவிரமாக இயங்கி வந்தார். விவசாயத் தொழிலாளிகளிடையே புரட்சி கரச் சிந்தனைகளை விதைத்து மாற்றத்துக் கான தளம் அமைத்துக் கொடுத்துச் செயற்பட்டார்.
ஒரு பிராமணக் குடும்பத்தில் மூன்றாம் தாரத்தின் குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தவர் மணியம்மாள். இவரது இயற் பெயர் வாலாம்பாள் என்பதாக இருந்தாலும், செல்லப் பெயரான மணி என்பதே நின்று நிலைத்தது. அவருடைய பத்தாவது வயதில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த செல்வந்தரான முப்பத்தைந்து வயதான குஞ்சிதபாதத்துக்கு மணி இரண்டாம் தாரமாக மணமுடித்து வைக்கப்பட்டார்.
பால்ய விவாகம் செய்து வைக்கப்பட்ட மணி தன்னுடைய 27வது வயதில் விதவை யாக மணலூர் வந்து தாய் வீட்டில் தங்கினார். அத்திருமண வாழ்வில் அவருக்குக் கிடைத்த ஒரே ஆறுதல் ஆங்கிலக் கல்வி. வக்கீல் தனது மனைவி மணிக்கு ஆங்கிலம் கற்பிக்கக் கிறித்துவ திருச்சபையில் பணிபுரிந்த ஒரு வெள்ளைக்காரப் பெண் மணியை ஏற்பாடு செய்திருந்தார். இந்தப் பெண்ணுடனான பழக்கமும் கல்வியும் சீர்த்திருத்தக் கருத்துக்களும் மணியம்மாளி டம் மிகுந்த செல்வாக்குச் செலுத்தின.
ஓர் ஆளுமை மிக்க, சிந்திக்கத் தெரிந்து சுயமான முடிவுகள் எடுக்கக் கூடிய ஒருவராக வளர்வதற்கு ஆங்கிலக் கல்வியும் அந்தப் பெண்மணியும் காரணமாக இருந்தார்கள். மேலும் அந்தப் பெண்மணி அவ்வப் பொழுது எழுப்பிய கேள்விகள் அவை சார்ந்த உரையாடல் தர்க்க ரீதியான சுயத்துவத்தைத் தேடும் நபராக மணியம்மை யை உருவாக்கியது.
விதவைக் கோலத்தில் மழித்த தலையோடு மணலூரில் பூஜை புனஸ்காரமென்று வாழ்வைக் கழிக்கத் தொடங்கிய காலத்தில் தான் கைம்பெண்ணின் வாழ்வை முடமாக்கி மகிழும் சனாதன சமூகத்தின் மீது வெறுப்பும் கோபமும் கொண்டவராக வெளிப்பட்டார். ஏற்கனவே உள்வாங்கப்பட்ட சீர்திருத்தக் கருத்துகள் மணியைப் புதிதாக வார்த்தன. ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடவும் புதிய வாழ்க்கை மதிப்பீடுகளின் ஆத்மார்த்தப் பயணம் நோக்கியும் அவரை ஆட்படுத்தும் காலமும் கருத்தும் சாதகமாக இருந்தன.
அப்பொழுது காந்தி தமிழ்நாட்டுக்கு இரண்டாம் முறையாக வருகிறார். தஞ்சைக்கும் வருகை புரிந்த காந்தியை மணியம்மாள் மிகுந்த உற்சாகத்துடன் தனது உறவினர் ஒருவருடன் கூடப் போய்ப் பார்த்தார். இந்தச் சந்திப்பு மணியம்மாளின் வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அரசியல் வாழ்வுடன் ஒன்று கலக்கும் துணிவையும் பக்குவத்தையும் கொடுத்தது. சமூகம் சார்ந்த சிந்தனையும் செயலும் அவரைப் புதிதாகக் கண்டு பிடித்தன. சமூக, அரசியல், விவகாரங்களில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். தனது இயல்பான செயற்பாட்டின் வேகத்துக்கு ஏற்ப தனது உடை நடை பாவனைகளையும் மாற்றிக் கொண்டார்.
மொட்டைத் தலைக்கு முற்றுப் புள்ளி வைக்கிறார். பதினெட்டு முழப் புடவைக்கு விடை கொடுக்கிறார். கிராப் வெட்டிக் கொள்கிறார்., நடு வகிடு எடுத்து ஆண்கள் போல் தலை சீவிக் கொண்டு...
ஆண்களைப் போலவே வேட்டியும் அரைக்கை ஜிப்பாவும் அணிந்து கொண்டு... செருப்பணிந்து குடைபிடித்துக் கொண்டு... மொத்தத்தில் பெண்ணின் உரிமை வாழ்வுக்குக் கொடியு யர்த்தி வைப்பது போன்ற கோலம் கொள்கிறார். வரவிருக்கும் பெண்ணிய வாதிகளுக்கு முன்னு தாரணமாக வாழ்வதற்த் தன்னைத் தயார்ப் படுத்திக் கொள்கிறார்.
"எனது விருப்பம் போல உடை உடுக்க நடந்து கொள்ள எனக்கு உரிமை உண்டு, நான் பெண் என்பதாலோ விதவை என்பதாலோ யாரும் என்னை அவமதிக்க - அடக்கி ஒடுக்கி விட - முடியாது. அதை நான் அனுமதிக்கவும் மாட்டேன்" இப்படி புதுக்கோலம் பூண்டதன் மூலம் சொந்த வாழ்வில் தனது உரிமையை நிலை நாட்டத் தொடங்கினார். அதற்காகப் போராடவும் தயங்கவில்லை.
இந்தச் செயற்பாடுகளை சனாதனவாதி களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் இவை எவற்றையும் பொருட் படுத்தாமல் தனது வழியில் உறுதியுடன் தெளிவாகப் பயணத்தை மேற்கொண்டார். தனது சிந்தனையிலும் செயற்பாடுகளிலும் நம்பிக்கை கொண்டார்.
சனாதன தர்மம் யார் யாரையெல்லாம் சாஸ்திரம் சம்பிரதாயம் என்ற பெயரில் தீண்டத்தகாதவர்களாக அடக்கி ஒடுக்கி வந்ததோ அந்த மக்களுடன் சேர்ந்து கொண்டார். அந்த மக்களின் நல்வாழ்வுக் காக, விடிவுக்காக உழைப்பதே தனது முழுமுதற்பணியெனக் கருதினார். இதனால் சேரிக்குழந்தைகளைச் சீராட்டிப் பராமரிப் பதிலும் அவர்களுக்கு ஆரம்பக்கல்வி கற்றுக் கொடுப்பதிலும் ஈடுபட்டார். யாவரும் அறியாமையைப் போக்கிச் சிந்தித்து சுயமரியாதையுடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதற்கான உளவுறுதியை உருவாக்கப் பாடுபட்டார்.
மேலும் சேரி விவசாய மக்களுடன் நெருங்கிப் பழகி வந்தார். இதனால் ஊரில் உள்ள பெரும் மிட்டா மிராசுகள் விவசாயிகளுக்குக் கொடுக்க வேண்டிய கூலியில் ஓரவஞ்சனையும் பாரபட்சமும் காட்டி அவர்களது உழைப்பைச் சுரண்டி வருவதை நேரில் கண்டார். இந்த நிலைமையைப் போக்குவது நியாயமெனக் கருதினார்.
முதற்காரியமாகத் தனது சொந்த நிலத்தில் நடுவானை நீக்கிவிட்டுத் தானே விவசாய மேற்பார்வையில் இறங்கினார். தமது நிலத்தில் உழுது பயிரிடும் மக்களுக்கு அள்ளிக் கொடுத்தார். அவர்களது உழைப்பைச் சுரண்டும் கொடுமைக்கு தன்னளவில் தீர்வு கண்டார். இந்தச் செய்கை அவ்வூரின் பெரிய குடும்பங்களில் ஒன்றான பட்டாம் மணியம்பிள்ளையுடன் நேரடியாக முரண்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பகைமை வளர்ந்தது. இதனால் பல கஷ்டங்களுக்கு மணியம்மாள் முகங்கொடுக்க வேண்டியதானது.
இவை எவற்றையும் பொருட்படுத்தாது தான் பெண் என்ற பிம்பத்தை மறுத்துத் தன் எண்ணங்களுக்குச் செயல் வடிவம் கொடுப்பதில் உறுதியாகவும் விடாப்பிடியாகவும் இருந்தார். சமூகத்தின் முணுமுணுப்பு களையும் தூற்றல்களையும் துச்சமெனப் புறமொதுக்கித் தனது வழியில் சென்றார். சுயபாதுகாப்புக்காக சேரியில் சிலம்பம் கற்றுத் தேறினார். ஒற்றைக் காளை பூட்டிய வண்டியைத் தானே ஓட்டிச் சென்று தனது காரியங்களைத் தானே பார்த்து வந்தார். எவரிலும் சார்ந்திராது சுதந்திரமாகச் சிந்திக்கவும் செயற்படவும் திடவுறுதி பெற்றார்.
மணியம்மாள் புரிந்து கொள்ளப்படாமல் உற்றார் உறவினர்களிடையே பெரும் கலக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சற்றும் எதிர்பாராத நெருக்கடி உருவானது. மணலூரில் உள்ள மணியம்மாள் குடும்பத் தாருக்குச் சொந்தமான நிலபுலங்கள் யாவும் பட்டாம் மணியம் பிள்ளைக்கே குத்தகைக்கு விட வேண்டிய நிர்ப்பந்தம் அவரது தம்பி மூலம் ஏற்பட்டது. மணியம்மாளையும் தாயையும் தன்னுடன் சென்னைக்கு அழைத்துச் செல்ல விரும்பினார். ஆனால் மணி அங்கு செல்ல மறுத்து அவ்வூரில் உள்ள புழங்கப்படாத சிறுவீட்டில் தங்கலானார். வண்டி மாடு எல்லாம் இழந்த நிலையில் தன் பயணங்களுக்குத் தானே சைக்கிள் ஓட்டப் பழகிக் கொண்டு, ஒரு சைக்கிள் வாங்கி, தனது பயணங்களை மேற்கொண்டார்.
மணலூர் மணியம்மாள் என்ற பெயரும் புகழும் பரந்து செல்வாக்குடன் காணப்பட்டது. அவரது செயற்பாடுகள் எங்கும் விரிவு பெற்றன. விவசாயத் தொழிலாளர் களின் உரிமைகளுக்குக் குரல் கொடுத்த துடன் அவர்களை அணி திரட்டிப் போராட வைப்பதிலும் உறுதியாக இருந்தார். பல்வேறு தொழிற்சங்கங்களை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தார். ஆனால் கட்சி அரசியல் அவரது உழைப்பைத் தமதாக்கி யது. ஆனால் அவருக்கான மதிப்பு, கௌரவம் பதவிகளை வழங்குவதில் ஆண் மேலாதிக்க மனோபாவத்திலேயே கட்சி விளங்கியது. காங்கிரஸ் கட்சிக்குள் புரையோடியிருந்த சனாதனப் பிடியின் இறுக்கத்தை அவர் ஆழமாகப் புரிந்து கொண்டார். விவசாயத் தொழிலாள மக்களின் நலன்களுக்கு எவ்வாறு முரண்பாடாகக் கட்சி விளங்குகிறது என்பதையும் இனங்கண்டார்.
இதனால் மணியம்மாள் இடதுசாரிச் சிந்தனையின் தாக்கத்துக்குள் உள்வாங்கப்பட்டார். 1940களிலும் 50களின் தொடக் கத்திலும் தஞ்சை நாகைப் பகுதிகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியானது மணியம்மாள் கட்சியென்றும, மணியம்மா வின் செங்கொடிக் கட்சி என்றுமே அறியப்பட்டிருக்கிறது. அப்பகுதிகளில் சுரண்டப்பட்ட ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கத்தின் குரலாக அவர்களது உரிமைக்காக ஒலித்த குரலாக மணியம்மா விளங்கி வந்தார். தொழிற்சங்க விவசாய மாநாடுகளிலும் பேரணிகளிலும் கம்பீரமாக மணியம்மாள் பங்கு கொண்டு வந்தார். மேலும் கட்சிப் பணிகளைப் பரவலாக்க திருவாருரில் ஒரு சிறு அறை எடுத்துத் தங்கியிருந்தார். அதுவே கட்சி அலுவலக மாகவும் அமைகிறது. மணியம்மாள் வெகுசனப் போராட்டங்களைத் தேவைக் கேற்ப ஒழுங்கு பண்ணுவதில் தேர்ந்தவராகவும் இருந்தார். |
|
மணியம்மாளின் பணிகளை முடக்கி வைக்கும் நோக்கில் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுக் கடலூர், வேலூர் சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தடைவிதிக்கப் பட்டிருந்தது. இதனால் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள். பலர் தலை மறைவானார்கள். சங்க உறுப்பினர் பலர் போலீஸ் அராஜகத்துக்கு ஆளாயினர். கட்சிச் செயற்பாடுகள் மோசமாகப் பாதிப்படைந்திருந்தன.
மணியம்மாள் வேலூர் சிறைச்சாலையில் இருந்த பொழுது கூட அங்கு பெண் கைதிகளின் அநாதரவான குழந்தைகளைக் கொண்ட பிள்ளைக் கொட்டடியின் அவல நிலையைக் கண்டு மனம் வெதும்பினார். அதைவிட, சரியான பராமரிப்பும், தக்க உணவின்றியும் பிணியால் பீடிக்கப்பட்டுக் குழந்தைகள் சர்வசாதாரணமாக மரணமடை வதையும் கண்டு வேதனை அடைந்தார். தானே முன்னின்று குழந்தைகளைச் சீராட்டிப் பராமரித்தார். குழந்தைகளுக்குச் சத்துணவு கிடைக்கவும் வழி செய்தார். சிறையில் இருந்த பொழுது கூட மக்கள் நலன் சார்ந்த சிந்தனையும் செயலும் தான் அவரை வழிநடத்தியது.
வேலூர் சிறையில் இருந்து வெளிவந்த பொழுது கட்சி சின்னாபின்னப்பட்டிருந் ததைக் கண்டு மிகவும் வேதனையடைந்தார். அனைவரையும் ஒன்று திரட்டும் பணியில் ஈடுபடலானார். கட்சிக்கு விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டது. இதனால் கட்சிப் பணியைத் தீவிரமாக்கினார். முதிர்ச்சியும் ஆளுமையும் மிக்க தலைவராக கட்சிப் பணியாளராக மேலும் மெருகு பெற்றிருந்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் வருகிறது. மக்கள் பிரதிநிதியாகச் செல்வதன் மூலம் மேலும் சிறப்பாகப் பணி செய்ய இயலும் என்ற நம்பிக்கையில் தேர்தலில் நிற்க விருப்பம் தெரிவிக்கிறார். ஆனால் கட்சி மேலிடம் அவரைத் தேர்ந்தெடுக்க மறுக்கிறது. அவருக்குள்ள உறுதி, மக்களிடம் உள்ள செல்வாக்கு எதனையும் கருத்தில் எடுக்காமல் அவரை ஓரங்கட்டும் போக்கிலேயே கட்சி முடிவு அமைந்திருந்தது. இருப்பிலும் மணியம்மாள் இத் தேர்தலில் கட்சி வெற்றி பெறத் தீவிரமாக உழைக்கின்றார். கட்சி வெற்றி பெறுகிறது.
ஆனால் தொடர்ந்து கட்சி மணியம்மாளை ஓரங்கட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுகிறது. ஆனால் இவை எவற்றையும் பொருட்படுத்தாது மனம் சோராது வெகுசனங்களிடையே பணியாற்றுகிறார். 1953-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் மணியம்மாள் ஒதுக்கப்படுவ தோடு மட்டுமல்லாமல் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப் படுகிறது.
மாநாட்டுக்கு முதல் நாள் பூந்தாழங் குடியிலிருந்து பக்கத்து கிராமத்துப் பண்ணை விவகாரம் ஒன்றைத் தீர்த்து வைக்க அழைப்பின் பேரில் செல்கிறார். பேச்சுவார்த்தைக்குப் பின் விவசாயி களிடையே விட்டுக் கொடுக்காமல் போராடும்படி உரையாற்றுகிறார். அங்கி ருந்து திருவாரூர் செல்லப் பேருந்துக்காகக் காத்திருக்கிறார். அச்சமயத்தில் எவரும் எதிர் பாராத வகையில் அவ்வூரில் வளர்க்கப்பட்ட கொம்பு மானொன்று பாய்ந்து வந்து அவர் முதுகில் குத்தி அவரைச் சரிக்கிறது.
அவரது மரணம் விபத்து என்றும் சதி என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. மணியம்மாளின் இறுதி ஊர்வலத்துக்கு மாநாட்டுக்கு வந்த தலைவர்கள் தொண்டர்கள் தொழிலாள விவசாய மக்கள் எனப் பலதரப்பட்டோர் திரளாக இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டார்கள்.
இருபதாம் நூற்றாண்டு கட்சி அரசியல் வரலாற்றில் அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சுரண்டப்பட்ட மக்களின் அரசியல் வரலாற்றில், வெகுசன அரசியல்மயப் படுத்தலில் மணலூர் மணியம்மாளின் வாழ்க்கை வரலாறும் பின்னிப் பிணைந் துள்ளது. கட்சி அரசியல் ஆண்நோக்கு வயப்பட்ட மேலாண்மையால் பெண்கள் பாத்திரம் அவர்களது பங்களிப்பு இருட்ட டிப்புக்கு உள்ளாக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட வரலாறாகவே எழுதப்பட்டு வரும் அவலம் தொடர்ந்து நீடிக்கிறது.
கோட்ட இடிஞ்சி விழ கொடி பிடிச்சி அம்மா வந்தா சாட்டை அடிக்கும் முன்னே சாகசங்க செய்து வந்தா
மதிலுகள் சரிஞ்சு விழ மணியம்மா அங்கே வந்தா பதிலுகள் கேட்டு வந்தா பட்டமரம் தழைக்க வந்தா
ஏழைகுலம் குளிரும் எங்கம்மா பேரு சொன்னா மக்கள் குலம் விளங்கும் மணியம்மா பேரு சொன்னா
நம்பி உழைத்தோருக்கு நாயங்கள் கேட்டு வந்தா கும்பி குளிர வந்தா குரலுகளும் எழுப்பி வந்தா
இன்றும் நாட்டுப்புறப் பாடல்களில் மணியம்மாளின் பெயர் எழுதப்படிக்கத் தெரியாத ஏழை எளிய மக்களால் பாடல் வரிகளால் பளிச்சிட்டுக் கொண்டிருக் கின்றன. ஆம்! அவரது வரலாறு அப்படிப் பட்டதுதான்.
தெ. மதுசூதனன் |
|
|
|
|
|
|
|