ரொறொன்ரோவில் கவிதை நூல் வெளியீடு சங்கரா கண் அறக்கட்டளைக்கு $2 மில்லியன் நிதிக்கான வாக்குறுதி! NRI செய்திகள் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்: 13வது உலகத் தமிழ்க் கணினி மாநாடு FeTNA: தமிழ் விழா குறும்படப் போட்டி Eyeball வழங்கும் நிலைச்சொத்து கண்காட்சி
|
|
கேரளத்தில் வெளியான தமிழ் நூல்கள்! |
|
- திவாகர்|ஏப்ரல் 2014| |
|
|
|
|
|
கேரளத்தைச் சேர்ந்த எட்டு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைத் திருவனந்தபுரம் தமிழ் எழுத்தாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. அவற்றை வாசகர்களிடம் கொண்டு செல்லும் பணியையும் சங்கம் ஏற்றது பாராட்டுக்குரியது. சங்கத் தலைவர் முனைவர் மா. நயினார் பேசும்போது, "இந்த எட்டு எழுத்தாளர்களும் தனித்தனியே தங்கள் புத்தகத்தை விற்கும் சூழ்நிலைக்கு அவர்களைச் செல்லவிடாமல், விற்றால் எட்டுப் புத்தகங்களையும் ஒன்றாகச் சேர்த்து விற்போம் என்ற கொள்கையோடு நாமே இந்த உயரிய பணியைச் செய்து தருவோம்" என்றார். இதோ அந்த எட்டுப் புத்தகங்கள்:
'உருண்டோடும் எண்ணங்கள்' (கவிதைத் தொகுப்பு); க. வானமாமலை: இந்தக் கவிஞர் சங்கச் செயலாளரும்கூட. 'புதுமையான சிந்தனைகள், புதுவழியில் புரட்சிக்கனல் வீசுகின்ற 55 கவிதைகள் இதில் உள்ளன.
'கதவிலக்கம்' (சிறுகதைகள்); இளையவன்: இளைஞரான இவர் பதினேழு சிறுகதைகளைத் தொகுத்தளித்திருக்கிறார். பெண் ஆணாகவும், இன்னொரு பெண் ஆணாக மாறிய நிலைக்குத் தள்ளப்பட்ட நண்பர்கள் சொந்த ஊரிலிருந்து துரத்தப்பட்டு வேற்றூரில் நண்பன் ஒருவன் இல்லத்தைத் தேடி அலைவதும் அந்தக் கதவிலக்கம் ஒன்பதாக இருப்பது சற்று கலக்கத்தைக் கொடுத்ததும்தான் கதை. அனைத்துக் கதைகளுமே வாழ்வின் இயல்பான நிகழ்ச்சிகளைப் பேசுகின்றன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளச் சங்கத் தலைவர் தமிழ்ச்செல்வன் நூலுக்கு அணிந்துரை அளித்துள்ளார்.
'நதியில் மிதக்கும் நிலவு' (சிறுகதைகள்); இராஜேஸ்வரி எஸ்.குமார்: தொகுப்பில் 14 சிறுகதைகள் உள்ளன. இவற்றைக் கதைச் சாரல்கள் என்று அவர் வர்ணித்திருப்பது பொருத்தம்தான். கிராமீய மண்வாசமும், வட்டார நடையும் மிகுந்து காணப்படுகின்றன இவற்றில் சுழலும் பம்பரம், சேற்றில் செந்தாமரை, மாயவலை போன்ற கதைகள் முத்திரை பதிக்கின்றன.
'அம்மாவன்' (சிறுகதைகள்); அனந்தை காசிநாதன்: முதிய தம்பதிகளின் சோகவாழ்க்கையைச் சிறுகதையாக்கி 'அம்மாவன்' எனத் தலைப்புக் கொடுத்திருக்கிறார் காசிநாதன் முதுமையானாலும் அன்பு என்றுமே இளமையானதும், அழிக்க முடியாததுமாகும் என்று பொருள் கொடுத்திருப்பது நன்றாகவே அமைந்துள்ளது. 18 கதைகள் கொண்ட இத்தொகுப்பில் சொந்த அனுபவங்கள் எழுத்துக்களாகி மிளிர்கின்றன. முன்னணி எழுத்தாளர் நீல பத்மநாபன் அழகான முன்னுரை அளித்திருக்கிறார்.
'உயிர்த்தெழு' (கவிதைகள்); ஆய்க்குடி அ. லட்சுமணன்: கொச்சியில் வசித்துவரும் இவர் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி. கவிதைகள் ஏதாவது ஒருவகையில் சமூகத்துடன் பின்னி உறவாடவேண்டும் என்பது இவர் கருத்து. அந்த எண்ணம் இவரது முப்பத்தாறு கவிதைகளிலும் வெவ்வேறு விதமாகப் பரிணமிப்பது உண்மைதான். 'விடியல் உண்டு நிச்சயம், உன்னை இயக்கும் சக்தியை உணர்ந்து கொள் போதும்' என்று அறைகூவுகிறார் கவிஞர். |
|
'முருகக்கனி' (கவிதைகள்); வி. பாமா கிருஷ்ணன்: 'வாழ்ந்த காலத்தில் சோறிடாமல் விமரிசையாய் திதி படைக்கிறான் இறந்தபின்னே பாசமகன்' எனும் கவிதைபோலச் சமூகத்தை ஒருபக்கம் சாடினாலும் பல கவிதைகள் சமூகத்தை நல்வழிப்படுத்தும் வகையிலே எழுதப்பட்டுள்ளன. பாரதியின் கவிதைகளின் நன்னெறியைக் குறுங்கவிதையாக்கி இருக்கிறார்.
'இயற்கையை நேசி' (கவிதைகள்); செ. இராஜசேகர்: ஹைக்கூ மற்றும் புதுக்கவிதைகள். தித்திப்பான ஒன்று, 'எங்கு வைத்தாலும் எறும்பு / ஏனென்று தெரியவில்லை / அவள் எழுதிய கடிதம்'. சுடும் கவிதையும் உண்டு. 'செத்தபின்னேதான் கொள்ளி / உயிரோடு எதற்குக் கொள்ளி / சிகரெட்' எனப் புகைபிடிப்போரைச் சாடுவதும் உண்டு.
'நேர்கோடுகள்' (சிறுகதைகள்); மா.நயினார்: நயினார் தேர்ந்த கதைசொல்லி. தொகுப்பில் உள்ள அனைத்துமே சமூகப் பிரச்சனைகளை அடித்தளமாகக் கொண்டவை. படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் தங்களுக்கொரு விடிவுகாலம் வரும்வரை தந்தை செய்யும் தொழிலைச் செய்வது உயர்வு என்கிறது 'வேலைக்காக'. போலி கௌரவம் சோறு போடாது என்பதை அழுத்திச் சொல்லும் கதை இது. பதினைந்து கதைகளைக் கொண்டது இத்தொகுப்பு.
'நேர்கோடுகள்' தவிர மற்ற ஏழு புத்தகங்களையும் தமிழ் எழுத்தாளர் சங்கமே பதிப்பித்துள்ளது. 8 நூல்களையும் சேர்த்துத்தான் வாங்கவேண்டும். விலை ரூ.800. கிடைக்குமிடம் திருவனந்தபுரம் தமிழ் எழுத்தாளர் சங்கம், 38/2799, பழைய சாலை, திருவனந்தபுரம் 695036, கேரளா, இந்தியா.
V. திவாகர், விசாகப்பட்டணம். |
|
|
More
ரொறொன்ரோவில் கவிதை நூல் வெளியீடு சங்கரா கண் அறக்கட்டளைக்கு $2 மில்லியன் நிதிக்கான வாக்குறுதி! NRI செய்திகள் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்: 13வது உலகத் தமிழ்க் கணினி மாநாடு FeTNA: தமிழ் விழா குறும்படப் போட்டி Eyeball வழங்கும் நிலைச்சொத்து கண்காட்சி
|
|
|
|
|
|
|