Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | அஞ்சலி
கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | நூல் அறிமுகம் | சமயம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பயணம்
மேரிமூர் பூங்கா (வாஷிங்டன்)
- மலர்க்கொடி பலராமன்|ஏப்ரல் 2014|
Share:
நானும் என் கணவரும் வாஷிங்டன் மாநிலத்தின் (சியாடல் அருகே) ரெட்மண்டில் மகள் வீட்டுக்குப் போயிருந்தோம். அவள் வீட்டருகே இருந்தது மேரிமூர் பார்க். 640 ஏக்கர் நிலத்தில் பரந்து விரிந்து இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் இந்தப் பெரீய்ய பூங்காவுக்கு வருடத்திற்கு 3 மில்லியன் பேர் வருகின்றனர் என்றால் காரணம் இருந்தது.

இதில் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. சாக்கர், பேஸ்பால், கிரிக்கெட் விளையாட்டுகள் நடைபெறுகின்றன. நாங்கள் குடும்பத்தோடு ஷட்டில்காக் விளையாட சென்றிருந்தோம். அங்கு விளையாடிக் கொண்டிருந்த பலர் தமிழ் பேசினார்கள்! மைக்ரோசாஃப்டில் பணிபுரிபவர்கள் என மகள் கூறினாள்.

சிறிது நேரம் விளையாடிவிட்டு என் கணவர் அப்பாடா என்று உட்கார்ந்துவிட்டார். கேட்டால், 'எனக்கு வயதாகிவிட்டது' என்றார். 'சிறிது தூரம் வந்து பாருங்கள், உங்களுக்கு வயதாகிவிட்டதா எனத் தெரியும்' என்று எங்களை கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்துச் சென்று மகள் காண்பித்தாள். அங்கே 70 வயதுக்கும் மேற்பட்டவர்கள் பேஸ்பால் விளையாடிக்கொண்டிருந்தனர். அதற்குப் பின் என் கணவர் வயதாகி விட்டது என்று கூறுவதை நிறுத்திவிட்டார்.

Click Here Enlarge40 ஏக்கரில் நாய்கள் விளையாட (Pet Garden) இந்தப் பார்க்கில் இடம் ஒதுக்கியுள்ளனர். "பிறந்தாலும் அமெரிக்காவில் நாயாகப் பிறக்க வேண்டும்" என்று என் கணவர் கூறியதில் உண்மை இல்லாமலில்லை. காரில் ஒய்யாரமாய் அமர்ந்து வரும் நாய்களைப் பார்த்தும், கடைகளில் நாய்களுக்கென்று விற்கும் பொருட்களைப் பார்த்தும் எனக்கும் கொஞ்சம் பொறாமை ஏற்பட்டது. நாய்களுக்கு நீச்சல்குளம் வேறு! நாய்க்குட்டிகளுக்குப் பயிற்சி அளிக்க அமெரிக்கா முழுவதிலுமிருந்தும் அவற்றை இங்கு அழைத்து வருகின்றனர்.

டாகி டிஸ்னிலேண்ட் (Doggy Disneyland) என அழைக்கப்படுகிறது இந்த பார்க். தமிழ் நாட்டில் யானைகளுக்கு ஓய்வு கொடுக்க முதுமலையில் புத்துணர்ச்சி முகாம் நடைபெறுவதை இது நினைவூட்டியது.

மலையேற்றப் பயிற்சிக்கு ஒரு பாறை (படம் பார்க்க) உள்ளதை கண்டு மிகவும் அதிசயித்தோம். மலையில் ஏறுமுன் இதில் பயிற்சி எடுத்து கொள்கின்றனர். மேலே ஏறிய பின் கயிறு உபயோகித்து இறங்குகின்றனர். எனக்கு மிகவும் ஆச்சரியமாய் இருந்தது.

நடக்க ஒரு பாதை, சைக்கிள் பந்தயத்துக்கு ஒரு பாதை (400மீ. தூரம்வரை) என்று அவரவருக்குப் பாதைகள். பசுமையை ரசித்துக்கொண்டே உடற்பயிற்சியில் ஈடுபடலாம். விளையாட்டுப் போட்டிகள் நிறைய நடைபெறுகின்றன. இரவு நேரத்திலும் பளிச்சென்று விளக்குகள் உள்ளதால் நேரம் காலம் பார்க்காமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சிறு தூறலைக் கவனிக்காமல் அவர்கள்பாட்டுக்கு விளையாடினார்கள். "என்ன மழையில் விளையாடுகிறார்களே" என்று கேட்டதற்கு, "இப்போது கோடைக்காலம். எஞ்சாய் பண்ணுவாங்க. அப்புறம் ஆறு மாசம் குளிரில் வீட்டில் அடைந்து கிடக்கணும்" என்று மகள் சொன்னாள்.
ரேடியோ கண்ட்ரோல் கிளப் 1968ல் ஆரம்பிக்கப்பட்டது. 250 உறுப்பினர்கள் உள்ளனராம். பொழுது போக்குக்காகவும் ஏரோபிளேன் மாடல் இங்கு பறக்க விடுகின்றனர். கோடைக்காலத்தில் ஃபிளைட் பயிற்சி தருகின்றனர்.

ஜூலை 10லிருந்து ஆகஸ்டு 28வரை இங்கு திறந்தவெளி திரையரங்கத்தில் பிரபலமான படங்கள் திரையிடப்படுகின்றன. அதில் உட்கார்ந்து ஜுராசிக் பார்க் பார்ப்பது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. திறந்தவெளிப் புல் தரையில் உட்கார்ந்து பெரிய திரையில் டைனோசார்களைப் பார்க்க திகில் அதிகரித்தது. சூடான உணவுப் பொருள்களும் அங்கு கிடைத்தன. படம் இரவு 7 மணிக்கு ஆரம்பித்தது. நாங்கள் ஒரு பெரிய கம்பளியும் இரு போர்ட்டபிள் சேர்களையும் எடுத்துச் சென்றிருந்தோம். பத்துக் கடை ஏறி இறங்கி வாங்கியதை உபயோகிக்க முடிந்ததில் என் மகளுக்கு ஒரே சந்தோஷம்.

Click Here Enlargeசுமார் ஒரு மணி நேரம் போயிருக்கும். எனக்கு லேசாகக் குளிரெடுக்க ஆரம்பித்தது. மற்ற இருவரும் படத்தில் மூழ்கி விட்டிருந்தனர். சரி, அவர்களுக்காக குளிரைப் பொறுத்துக் கொள்ளலாம் என்று இன்னும் ஒரு மணி நேரம் ஒட்டினேன். முதலில் ஒரு ஸ்வெட்டர் போட்டு, பின் தலையில் ஒரு கேப் போட்டு, அதற்கு மேல் ஒரு ஷாலைப் போர்த்தியும் குளிர் தாங்கவில்லை. அங்கே சிறு குழந்தைகள்கூட ஸ்வெட்டர் போடாமல் இருந்தது எனக்கு ஆச்சரியம். பின்னர் வீட்டுக்குக் கிளம்பி வந்துவிட்டோம்.

எனது தோழியின் மகள் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் குடி இருக்கிறாள். ஒருநாள் ஒரு பெரிய பை நிறையக் கீரை, கத்தரிக்காய், உருளை, கோஸ், வெண்டைக்காய், தக்காளி, வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, குடைமிளகாய், முள்ளங்கி, பீட்ரூட் எல்லாம் எடுத்து வந்தாள். இவ்வளவு காய்கறிகளும் நாங்களே இயற்கை உரமிட்டுப் பயிர் செய்தோம் என்றாள். ஃப்ளாட்டில் இருந்து கொண்டு எப்படி என்றேன். மேரிமூர் பார்க்கில் ஒரு தன்னார்வலர் குழு உருவாக்கி அவர்களுக்குப் பயிர் வைக்கப் பயிற்சி அளித்து இடமும் தருகின்றனர். அந்த இடத்திற்கு ஒரு சிறிய தொகையை வாடகையாகக் கொடுத்தால் போதும். அங்கே 3 ஏக்கர் பரப்பை இதற்காக ஒதுக்கி உள்ளனராம். வீட்டிலுள்ளோருக்கு பொழுதுபோன மாதிரியும் இருக்கும். ரசாயன உரமில்லாத காய்கறிகள் கிடைத்த மாதிரியும் இருக்கும், ஒரே கல்லில் இரு மாங்காய் என்று நினைத்தேன்.

மேரிமூர் பார்க் வெறும் பூங்கா அல்ல, ஒரு வானவில் அனுபவம் என்பது புரிந்தது.

மலர்க்கொடி பலராமன்,
சியாடல், வாஷிங்டன்
Share: 
© Copyright 2020 Tamilonline