Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | அஞ்சலி
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
சாரு ஜெயராமன்
தேச. மங்கையர்க்கரசி
- அரவிந்த் சுவாமிநாதன்|மார்ச் 2013||(3 Comments)
Share:
இலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவாற்றும் இளம் தலைமுறையினரில் குறிப்பிடத் தகுந்தவர் சொல்லரசி தேச. மங்கையர்க்கரசி. கிருபானந்த வாரியாரின் மாணவியான இவர் தனது சிறுவயதிலிருந்தே கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக உலகமெங்கும் பயணித்துச் சொற்பொழிவாற்றி வருகிறார். 'கிருபானந்த வாணி', 'முத்தமிழ் அரசி', 'திருக்குறள் செல்வி' என்று பட்டங்கள் பெற்றவர். தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கியுள்ளது. தமிழ், தெலுங்கு மலையாளம் அறிந்தவர். முறைப்படி கர்நாடக சங்கீதமும் பரதமும் பயின்றவர். கீபோர்டு, ஹார்மோனியம் போன்ற இசைக்கருவிகள் வாசிப்பார். 'இந்து மதம் என்ன சொல்கிறது?', 'நூறு ஆண்டுகள் இன்பச் சுற்றுலா' என்று இரு நூல்களை எழுதியிருக்கிறார். கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் இவர் பேசிய 'இடைக்காலத்தமிழ்' என்ற சொற்பொழிவு பாராட்டைப் பெற்ற ஒன்று. இவரது வானொலி, தொலைக்காட்சிச் சொற்பொழிவுகள் பலரது மனம் கவர்ந்தவை. அருள் வீடியோஸ் என்ற தனது நிறுவனத்தின் மூலம் இதுவரை 12 குறுந்தகடுகளை வெளியிட்டிருக்கிறார். இடைவிடாத பயணத்தில் இருந்தவரை, ஒரு சொற்பொழிவுப் படப்பதிவின் இடையே சந்தித்தோம். அதிலிருந்து....

கே: உங்கள் முதல் சொற்பொழிவு பற்றிச் சொல்லுங்கள்...
ப: எனது முதல் சொற்பொழிவு என் ஆறாவது வயதில் எனது குருநாதர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் முன்னிலையில் மதுரையில் நிகழ்ந்தது. எனது தந்தை தேவி சண்முகம் ஒரு நாடக நடிகர். நவாப் ராஜமாணிக்கம் நாடகக்குழுவில் இருந்தவர். அம்மா பாக்கியலட்சுமிக்குத் தமிழில் மிகுந்த ஈடுபாடு. தந்தையாருக்குச் சிறுவயதிலிருந்தே வாரியார் சுவாமிகளுடன் அறிமுகம் உண்டு. திருமணம் ஆகி ஏழு வருடம் ஆகியும் பெற்றோருக்குக் குழந்தை இல்லை. சுவாமிகள் சொல்லி, சஷ்டி விரதம் இருந்து நான் பிறந்தேன். அப்போது சுவாமிகள் வெளிநாட்டில் இருந்தார். ஆறுமாதம் கழித்து அவர் வந்த பிறகு, அவர்தான் எனக்கு ஜாதகம் எழுதி, 'மங்கையர்க்கரசி' என்று பெயர் சூட்டினார். மதுரை வரும்போதெல்லாம் எங்கள் இல்லத்தில் தங்குவார். வருடத்தில் ஆறுமாதம் மதுரையில் இருப்பார். சிறு பெண்ணாக இருந்த காலத்திலும் அவர் மேடையில் பேசும்போது அவர் அருகிலேயே அமர்ந்திருப்பேன். அவரது சொற்பொழிவுகளைக் கேட்டு வளர்ந்தேன். அம்மா திருக்குறள் சொல்லிக் கொடுத்தார். என் ஆறாம் வயதில் 700 திருக்குறள்களைச் சொல்லி மதுரை மாவட்டத்தின் முதல் மாணவியாக வந்தேன்.

ஒருநாள் மதுரை ஆடிவீதியில் சுவாமிகளின் சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. நானும் அமர்ந்திருந்தேன். திடீரென அவர் பார்வையாளர்களிடம், "மீனாட்சியை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். கும்பிட்டு இருப்பீர்கள். அந்த மீனாட்சி பேசினால் எப்படி இருக்கும்? இதோ கேளுங்கள்" என்று சொல்லி, தான் பேசிக் கொண்டிருந்த மைக்கை என் பக்கம் நகர்த்தி என்னைப் பேசச் சொன்னார். நான் அப்போது சிறுபெண். ஆனால் பயம், கூச்சம் எதுவும் இல்லை. 'இளங்கன்று பயம் அறியாது' என்பதற்கேற்பப் பேச ஆரம்பித்தேன். குறளையும் இதிகாசத்தையும் இணைத்து 'திருக்குறளும் இதிகாசமும்' என்ற தலைப்பில் பேசினேன். முன் தயாரிப்பு இல்லாமல் திடீரென நிகழ்ந்தது அது.

கே: அதற்கு வரவேற்பு எப்படி இருந்தது?
ப: நல்ல வரவேற்பு. நான் பேசி முடித்ததும் வாரியார் சுவாமிகள், "எனக்கு முருகன் எந்தக் குறையும் வைக்கவில்லை. ஒரே ஒரு குறை, நல்ல மாணவர்கள் என்று யாரும் இதுவரை அமையாததுதான். இப்போது அந்தக் குறையும் நீங்கி விட்டது. எனக்குப் பிறகு என் தமிழ்ப் பணியை மங்கையர்க்கரசி தொடர்வார்" என்று அறிவித்தார். அதன் பிறகு என் ஒன்பது வயதுவரை மூன்று வருடங்கள் அவர் கூடவே இருந்து, பயின்று, அவருடன் இணைந்து சொற்பொழிவு செய்யும் பாக்கியம் கிடைத்தது. அவர் இறைவனடி சேர்ந்த பின்தான், நான் தனிச் சொற்பொழிவுகள் செய்தேன். செய்யத் தொடங்கி 19 வருடங்கள் ஆகிவிட்டன.

கே: இதுவரை எத்தனை சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருப்பீர்கள்?
ப: முதலில் பள்ளிகளில் பேச ஆரம்பித்தேன். அங்கு திருக்குறளை மையப்படுத்தித்தான் ஆரம்ப காலத்தில் பேசினேன். பின் இலக்கியம், ஆன்மிகம் எனப் பல தளங்களில் உள்நாடு, வெளிநாடு என்று இதுவரை பத்தாயிரத்துக்கும் மேல் சொற்பொழிவுகள் ஆகிவிட்டன.



கே: எவை எவையெல்லாம் உங்கள் பேசுபொருள்கள்?
ப: ஆன்மிகச் சொற்பொழிவில் சிலர் சைவம் சார்ந்தும், சிலர் வைணவம் சார்ந்தும் மட்டுமே பேசுவர். ஆனால் நான் அப்படிப் பாகுபாடு வைத்துக் கொள்ளவில்லை. காரணம், என் குருநாதர். எல்லா இறைகள் பற்றியும் பேசியவர் அவர். எந்தச் சொற்பொழிவாளர் பேசினாலும், வாரியார் சுவாமிகள் சொல்லாத ஒரு விஷயத்தை யாரும் சொல்ல முடியாது. அவர் மாணவி நான் என்பதால் என் பேச்சிலும் ராமாயணம், மகாபாரதம் என்று எல்லாத் துறைகள் பற்றியும் பேசி வருகிறேன். குறிப்பாகக் கந்தபுராணத் தொடர் சொற்பொழிவைச் சொல்லலாம். அதைத் தொடர்ந்து பலர் செய்வதில்லை. அது முழுக்க முழுக்க சைவ சித்தாந்தக் கருத்துக்களை உள்ளடக்கியது. அதுபோல தமிழில் செந்தமிழ் இன்பம், முத்தமிழ் இன்பம், இலக்கிய இன்பம், திருக்குறள், திருப்புகழ், மொழி மரபு, சிறப்பு என பல தலைப்புகளில் பேசுகிறேன். ஆனால் பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள் இவற்றில் பேசுவதில்லை.

கே: வாரியார் சுவாமிகளுடன் இணைந்து ஆற்றிய சொற்பொழிவுகள் பற்றிச் சொல்லுங்கள்?
ப: என் குருநாதருடன் இணைந்து ஆற்றிய சொற்பொழிவுகள் பல. இருவரும் இணைந்து கந்தபுராணத் தொடர் சொற்பொழிவு செய்திருக்கிறோம். நான் 'கந்தபுராண சாரம்' என்று பேசினால், அவர் 'வீரபாகு தூது' பேசுவார். நான் 'சூரபத்மன் பெருவாழ்வு' என்ற தலைப்பில் பேசுவேன். இப்படி உள் தலைப்புகளாகப் பிரித்துக் கொண்டு பேசுவோம். இப்படிப் பல தலைப்புகளில் இணைந்து பேசியிருக்கிறேன். மறக்க முடியாத சொற்பொழிவு என்றால் மதுரையில், 1993ல், நேதாஜி சாலையில் உள்ள ஒரு முருகன் கோயிலில் பேசியதைச் சொல்லலாம். கந்தபுராணம் பற்றிய சொற்பொழிவு அது. அதைப் பேசிவிட்டு சுவாமி லண்டன் புறப்பட்டுப் போனார். அப்போது எனக்கு 9 வயது. சுவாமிகள் புறப்படும் போது நானும் வருவேன் என்று அடம்பிடித்து அழுதேன். உடனே சுவாமிகள், 'நான் போயிட்டு வந்துடுவேன். வந்து எப்போதும் உன்கூடதான் இருப்பேன்' என்று சொன்னார். நானும் அழுகையை நிறுத்தினேன். அதுதான் சுவாமிகளுடன் இணைந்து நான் ஆற்றிய கடைசிச் சொற்பொழிவு. லண்டன் சென்ற அவர் இறைவனடி சேர்ந்து விட்டார்.

கே: அப்போது சிறுபெண்ணான நீங்கள் அவரது மறைவை எப்படி எதிர்கொண்டீர்கள்?
ப: நாங்கள் அப்போது மதுரையில் இருந்தோம். அவர் நிறைவெய்திய செய்தி வந்தது. சுவாமிகளின் பிறந்த ஊர் காங்கேயநல்லூர். அங்குதான் அவருக்கு சமாதி ஆலயம் அமைக்கப்பட்டது. ஆனால் நான் செல்லவில்லை. பார்ப்பதெல்லாம் அப்படியே மனதில் பதிந்துவிடும் சிறுவயது எனக்கு. அவருடன் பழகியது, பேசியது, அவரிடம் கற்றுக்கொண்டது, ஒன்றாகச் சாப்பிட்டது, இணைந்து சொற்பொழிவாற்றியது இதெல்லாம்தான் என் மனதில் பதிந்து இருந்தது. உயிரற்ற உடலாக அவரை நான் பார்க்கவில்லை. எனது தந்தையும் அதைத் தவிர்த்துவிட்டார். "'உன் கூடதான் இருப்பேன்' என்று வாரியார் சுவாமிகள் உன்னிடம் சொன்னார். இன்றும் இருக்கிறார். லண்டன் போயிருக்கிறார் என்று நினைத்துக் கொள்" என்று என் தந்தை என்னைத் தேற்றினார். இன்றும் நான் சுவாமிகள் என்னோடு இருப்பதாகவே உணர்கிறேன். 'உன் கூடதான் இருப்பேன்' என்று சொன்ன வார்த்தையை இன்றும் மெய்ப்பித்து வருகிறார் என்பதில் சந்தேகம் இல்லை.

கே: சொற்பொழிவாற்றிய வெளிநாடுகளில் உங்களைக் கவர்ந்தது எது?
ப: நான் முதன்முதலில் 14 வயதில் இலங்கைக்குப் போனேன். பிறகு லண்டன், ஸ்விட்சர்லாந்து போனேன். சிங்கப்பூர், மலேசியா, மொரீஷஸ் என்று நிறைய நாடுகளுக்குப் போயிருக்கிறேன். மிகவும் பிடித்தவை ஸ்விட்சர்லாந்தும் லண்டனும். ஏழுமுறைக்கு மேல் லண்டன் போயிருக்கிறேன். என்னுடைய பல பிறந்தநாள்களை லண்டனில்தான் கொண்டாடியிருக்கிறேன். வெளிநாட்டுத் தமிழர்களின் தமிழார்வம், ஒற்றுமை, ரசனை, பக்தி என எல்லாமே பார்ப்பதற்கு மிகுந்த நிறைவையும், மகிழ்ச்சியையும் தருகிறது. தாயகத்திலிருந்து தொலைவில் இருந்தாலும் அவர்கள் தங்கள் வேர்களை மறக்காமல் இருக்கிறார்கள். தமிழை, ஆன்மிகத்தை நேசிக்கிறார்கள். நம் பாரம்பரியத்தைப் பின்பற்றுகிறார்கள்.

கே : அங்குச் சொற்பொழிவின் போது நிகழ்ந்த மறக்க முடியாத சம்பவங்கள்...
ப: இலங்கை மாத்தளையில் ஒரு முத்துமாரியம்மன் ஆலயம் உள்ளது. அங்கு ஒரு மாதம் தொடர் சொற்பொழிவு. அப்போது எனக்கு வயது 14. அங்கு சென்று இறங்கிய பின், என்ன தலைப்பில் பேசலாம் என்று கமிட்டியில் விவாதித்தார்கள். "இராமாயணத்தில் பேசலாமா?" என நான் கேட்டேன். "வேண்டாம் வேண்டாம் அது எங்க ஊரில் நடந்தது" என்றார்கள். "சரி, அப்படியானால் 'கந்த புராணம்' பேசலாமா?" என்றேன். "இல்லை. அது பாதி எங்க ஊரில் நடந்தது" என்றனர். "சரி, அப்படியானால் 'மகாபாரதம்' பற்றிப் பேசுகிறேன்" என்றேன். "இல்லை, தமிழ்நாட்டிலிருந்து வருகிறவர்கள் எல்லோருமே அதைத்தான் பேசுகிறார்கள்" என்றனர். "பெரியபுராணம்?" "இங்கே இருக்கறவங்களே அதைப் பத்திதான் பேசிக்கிட்டு இருக்காங்க" என்று சொன்னதும், இதற்கு மேல் எதைப் பற்றிப் பேசுவது என்று நானும் அப்பாவும் யோசித்தோம். பின் அப்பா, அவர்களிடம், "உங்களுக்கு எந்தத் தலைப்பில் பேச வேண்டும் என்று அன்றன்றைக்குத் தோன்றுகிறதோ அதை மேடையில் சொற்பொழிவுக்கு முன் சொல்லுங்கள். என் மகள் பேசுவாள்" என்றார்.

ஒவ்வொரு நாளும் அன்றைய விழாத் தலைவர் என்ன தலைப்பில் பேசலாம் என்று சொல்கிறாரோ அந்தத் தலைப்பில் பேசுவது என்று முடிவானது. அதன்படி எந்த முன்னறிவிப்பும், தயாரிப்பும் இல்லாமல், அன்றன்றைக்குத் தலைப்பைச் சொல்ல, நான் இரண்டு மணி நேரம் பேசுவேன். இது மறக்க முடியாத நிகழ்ச்சி மட்டுமல்லாமல் எனக்கு ஒரு சவாலானதாகவும், நிறைவைத் தந்ததாகவும் இருந்தது.

கே: இசை மற்றும் பரதம் கற்றிருக்கிறீர்கள் அல்லவா?
ப: ஆம். சங்கீதம் கற்றுக் கொண்டிருக்கிறேன். தியாகராஜ உற்சவத்தில் என் இசை அரங்கேற்றம் நடந்தது. இராமாயணத்திலிருந்து சில சம்பவங்களை எடுத்துக் கொண்டு ஹரிகதையாக 20 நிமிடம் செய்தேன். அதேபோல் பரதமும் பயின்றிருக்கிறேன். என் தந்தை ஒரு நடிகர் என்பதால் கலை சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் குழந்தைகள் கற்க வேண்டும் என்று ஆர்வமாக இருந்தார். சிலகாலம் மாணவர்களுக்கும் வகுப்பெடுத்தேன். திருமணத்திற்குப் பின் எனக்கு அதற்கென்று தனியாக நேரம் ஒதுக்க முடியவில்லை.
கே: இன்றைக்கு பேச்சாளர்கள் நிறைய இருக்கிறார்கள். ஆனால் ஆன்மிகச் சொற்பொழிவாளர்கள் மிகவும் குறைவு. என்ன காரணம்?
ப: 'ஆன்மிகம்' என்பது கொஞ்சம் கடினமான துறை. முதலில் மக்களைக் கடவுளை நம்ப வைப்பதற்கு அதிகம் சிரமப்பட வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம். அந்தக் காலத்துக் குழந்தைகளிடம் 'சாமி கண்ணைக் குத்தும்' என்றால் பயந்து விடுவார்கள். ஆனால் இப்போது குழந்தைகளிடம் அப்படிச் சொன்னால், "ஏன் கண்ணைக் குத்தும், எதுக்கு கண்ணைக் குத்தற அந்தச் சாமியை நாம கும்பிடணும்?" என்று எதிர்க் கேள்வி கேட்பார்கள். நமக்கு அதற்கு பதில் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் பல பெற்றோர்கள், 'சொன்னதைச் செய்' என்று அதட்டி மழுப்பி விடுவார்கள். இந்த நிலைமையை மாற்றுவதில் ஆன்மிகச் சொற்பொழிவாளர்களுக்குப் பங்கிருக்கிறது. ஆனால் அவர்கள் வெறுமனே புத்தகங்களைப் படித்து விட்டுச் சொற்பொழிவாற்ற முடியாது. அப்படிப் பேசினாலும் காலத்துக்கும் ஒரே விஷயத்தைப் பேசிக் கொண்டிருக்க முடியாது. காலத்துக்கேற்ப அப்டேட் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. வாழ்வியலோடு கலந்து ஒன்றைச் சொல்வதில்தான் சொற்பொழிவின் வெற்றி இருக்கிறது. ராமாயணமும், மகாபாரதமும் காலம் காலமாகப் பேசப்பட்டு வருபவைதான். இன்றைக்கு இவை நமது வாழ்க்கைக்கு எவ்விதத்தில் உதவுகின்றன, நமது வாழ்க்கைச் சிக்கல்களுக்கு அவற்றில் என்ன தீர்வு இருக்கிறது, எது தர்மம், எது நியாயம், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் விளக்கிச் சொன்னால்தான் அவர் நல்ல பேச்சாளராக, மக்கள் மனதுக்கு நெருங்கியவராக இருக்க முடியும்.

சில வரலாறுகளை மட்டும் படித்துவிட்டு அதையே எல்லா இடங்களிலும் பேசி வருபவர்கள் இருக்கக் கூடும். எவ்வளவு நாட்கள் மக்கள் கேட்டதையே கேட்க விரும்புவார்கள்? புதிது புதிதாகத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மக்களுக்கு இருக்கிறது. முதலில் பேசுபவர்களுக்கு அது தெரிய வேண்டும். ஆனால் பலர் மேம்போக்காகப் பேசிவிட்டுச் சென்று விடுகின்றனர். ஆன்மிகத்தை அறிவார்ந்த பின்புலத்தோடு பேசுபவர்கள் குறைவாக இருக்க இதுதான் காரணம். ஆன்மிகம் என்பது இறைவனைப் பற்றி மட்டுமே பேசுவதல்ல; நடைமுறை வாழ்வியலோடு ஒருங்கிணைத்து இறைவனைப் பற்றிப் பேசுவது. இதற்கு நிறைய வாசிப்பு, வாழ்க்கை அனுபவம், ஆழ்ந்த அறிவு, நடைமுறைப் பயிற்சி ஆகியன வேண்டும்.

கே: ஆன்மிகச் சொற்பொழிவுகளுக்கு இன்றைய இளைஞர்களிடையே வரவேற்பு எப்படி உள்ளது?
ப: நிச்சயமாக நிறையப் பேர் வருகிறார்கள். நானும் அவர்களுள் ஒருத்தி என்பதும் ஒரு காரணம். என் வயதொத்தவர்களுக்கு என்னென்ன கேள்விகள், சந்தேகங்கள் வருமோ அது எனக்கும் வரும். அதற்கான விடையை நான் தேடிக் கண்டடைந்து, அதை அவர்களுக்கும் சொல்லும்போது அவர்களுக்கு ஒரு தெளிவு வருகிறது. பெரியவர்களுக்கு இணையாக இன்றைக்கு இளைஞர்கள் பலரும் ஆலயங்களுக்கு வருகிறார்கள். ஆலயப் பணிகளில் பங்கு கொள்கிறார்கள். அவர்களை மேலும் பக்குவப்படுத்த வேண்டியது நல்ல ஆன்மிகவாதிகளின் கடமை.

கே: ஆன்மிகத்தின் இன்றைய நிலை என்ன?
ப: முன்னைவிட பக்தி வளர்ந்திருக்கிறது. கோயிலுக்கு நிறையப் பேர் வருகிறார்கள். ஆலயப் பணி செய்கிறார்கள். ஆனால் கடவுளுக்கு இதைச் செய்தால் கடவுள் நம்மைக் காப்பாற்றுவார். இது கொடுத்தால் இது கிடைக்கும் என்பது போன்ற எண்ணம் வந்திருக்கிறது. ஒரு பண்டமாற்று முறை போல பக்தி வளர்ந்திருக்கிறது. ஆனால் பக்குவம் வளரவில்லை. உண்மையான பக்தி வளர்ந்திருந்தால் நாட்டில் தவறுகள் குறைந்திருக்கும். சுயநலம் சார்ந்த பக்தி அதிகம் வளர்ந்திருக்கிறது.

இன்றைக்கு எத்தனை ஆன்மிக இதழ்கள் வருகின்றன. டிவி நிகழ்ச்சிகள் போலப் பல ஊடகங்கள் ஆன்மிகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஒரு சாதாரண ராகு, கேதுப் பெயர்ச்சிக்குக் கூடச் சிறப்பிதழ், சிறப்பு நிகழ்ச்சி, பரிகார ஹோமம், மக்கள் கூட்டம் என்று பார்க்கிறோம். ஆனால் சக மனிதர்களை நேசிக்கும், அவர்களுக்கு உதவும், சமத்துவ எண்ணம் கொண்ட பக்தி போதிய அளவு வளரவில்லை. கடவுளை வழிபடுவது என்பது நம் அன்றாடக் கடமை என்பதாகிய, எதிர்பார்ப்பு ஏதுமில்லாத பக்தி என்பதாகிய நிலைமையை நோக்கி நாம் செல்ல வேண்டும். அதற்கு மிகத் தேவையாக இருப்பது ஆன்மிகம். அதை நோக்கிய பயணத்தில் நாம் இருக்கிறோம். மனிதனைப் பண்படுத்த, பக்குவப்படுத்த ஆன்மிகம் அவசியம் தேவை.

கே: உங்களது குடும்பம் பற்றி...
ப: எனது அப்பா தேவி சண்முகம். அம்மா பாக்கியலட்சுமி. எனக்கு ஓர் இளைய சகோதரன், சகோதரி. சகோதரிக்குத் திருமணமாகி விட்டது. 2008ல் எனக்கு திருமணமானது. அதன்பின் சென்னைக்கு வந்தேன். கணவர் சக்தி சுப்ரமணியத்துக்கு வங்கியில் பணி. கிருபானந்தன், கிருத்திக் நந்தன் என இரட்டைக் குழந்தைகள். பாலர் வகுப்பில் படிக்கின்றனர். கூட்டுக் குடும்பமாக வசிக்கிறோம். என்னுடைய வளர்ச்சிக்கு முதல் பலம் என்னுடைய குடும்பம். பெண் குழந்தைதானே, இன்னொரு வீட்டிற்குப் போகும் பெண்தானே என்று எண்ணாமல் எனக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்து ஊக்குவித்து வளர்த்த எனது பெற்றோர்கள் முதற்காரணம். ஒரு குழந்தையை 12, 13 வயது வரை மேடையில் காட்டிவிடலாம். கூடவே சென்று வரலாம். ஆனால் பருவம் வந்த பெண்ணை மேடையேற ஊக்குவிப்பது மிகச் சிரமம். நிறையவே இடர்ப்பாடுகள் வரும். ஆனால் என் தாய், தந்தையர் இதில் நான் பின்தங்கிவிடக் கூடாது என மிகவும் உறுதியாக இருந்தனர். இப்போது என் கணவரும், வீட்டாரும் துணையாக இருக்கின்றனர். குறிப்பாக என் கணவர் எனது நோக்கத்தைப் புரிந்து கொண்டு ஊக்குவிப்பராக இருக்கிறார். மாதத்தில் 15, 20 நாள் நான் ஊரில் இருக்கமாட்டேன். கணவரை, குடும்பத்தை, குழந்தைகளைப் பிரிந்திருக்க நேரும். குறிப்பாகச் சொன்னால் என் குழந்தைகள், அவைகூட என்னைத் தேடுவது கிடையாது. அம்மா நிகழ்ச்சிக்குப் போயிட்டாங்க; ஊருக்குப் போயிட்டாங்க என்று புரிந்து கொள்கின்றன. அதுபோல ஒலிப் பொறியியல் படித்துவிட்டு எனக்கு உதவியாக இருக்கிறார் என் சகோதரர். என் வளர்ச்சிக்குப் பின்னால் என் குடும்பமே இருக்கிறது.

கே: உங்களுடைய பொழுதுபோக்குகள்...
ப: இசை கேட்பதும், வாசிப்பதும். ஆன்மிகம், இலக்கியம், மாதநாவல், நாளிதழ், ஓஷோ, கண்ணதாசன் என எல்லாவற்றையுமே வாசிப்பேன். இசையில் எம்.எஸ். அம்மாவைக் கேட்பது மட்டுமல்ல; அவர் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும். டென்ஷன், பிரஷர் எல்லாம் போய்விடும். ஏசுதாஸ், உன்னிகிருஷ்ணன், சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ, ஜானகி, லதா மங்கேஷ்கர், ராஜேஷ் வைத்யா என எல்லார் இசையுமே பிடிக்கும்.



கே: எதிர்காலத் திட்டங்கள் என்ன?
ப: மக்கள் நம்மை மதிக்கும்போது, அந்த மதிப்பிற்குத் தகுந்த மரியாதையை நாம் செலுத்தியாக வேண்டும். மேடை என்பது சாதாரணமானதல்ல; ஒருவரை உச்சத்துக்குக் கொண்டு செல்வதும் அதுதான். அதல பாதாளத்திற்கு வீழ்த்தி விடுவதும் அதுதான். ஆகவே அதற்கான மதிப்பை நாம் கொடுத்தாக வேண்டும். அதற்காக நமக்கு ஏற்படும் சிறு சிறு அசௌகரியங்களை, பிரச்சனைகளைப் பெரிதுபடுத்தக் கூடாது. நான் கருவுற்றிருந்த காலத்தில் கூட 9 மாதம்வரை சொற்பொழிவு செய்திருக்கிறேன். குழந்தைகள் பிறந்து 10 நாட்கள் ஆனதும் மீண்டும் சொற்பொழிவுக்குச் சென்றேன். கைக்குழந்தைகளை நிகழ்ச்சி நடக்கும் இடங்களுக்குத் தூக்கிக் கொண்டு போய் சொற்பொழிவு செய்திருக்கிறேன். நான் பின்பற்றுவது வாரியார் சுவாமிகள் வழி. ஆன்மிக, சமூகப் பணிகளை அவர் வழியில் நானும் செய்து வருகிறேன். இவற்றைத் தொய்வில்லாமல், ஓய்வில்லாமல், சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதே என் ஆசை.

"என் குருநாதர் வாரியார் மிகப்பெரிய ஆன்மிகக் கடல். அவர் அளித்த பிச்சைதான் எனது வளர்ச்சி. ஒவ்வொரு மேடையையும் எனது முதல் மேடையாக நினைத்து, உண்மையான உழைப்போடு செயல்படுகிறேன்" என்கிறார் தேச. மங்கையர்க்கரசி, அழுத்தந் திருத்தமாக வெண்கலக் குரலில். வாரி என்றாலே கடல்தான். அந்தக் கிருபானந்த வாரியில் பிறந்த ஆன்மிக அமுதத் துளிகளில் ஒருவர்தான் இவரோ என்று வியந்தபடியே விடைபெறுகிறோம்.

சந்திப்பு, படங்கள் : அரவிந்த் சுவாமிநாதன்

*****


என் குருநாதர்
வாரியார் சுவாமிகள் மிக எளிமையானவர். குழந்தைகளிடம் குழந்தை ஆகிவிடுவார். அவரது சொற்பொழிவுக்கு நிறையக் குழந்தைகள் வருவார்கள். அவர் சிறு சிறு கேள்விகள் கேட்டு அவர்களுக்குப் பரிசு தருவார். அறிவாளிகளிடம் அவருக்கேற்பப் பழகுவார். ரொம்ப அன்பானவர். உணவின்மீது விருப்பம் கொண்டவர். அவர் தன் இளம் வயதில் காசி, கயை சென்று வந்தார். கயையில் ஏதாவது காயோ, கனியோ விட்டுவிட வேண்டும் என்பது ஐதீகம். தங்களுக்குப் பிடிக்காத காய், கனிகளை விடுபவர் உண்டு. அதில் அவர்களுக்கும் பலனில்லை, இறைவனுக்கும் ஏற்பில்லை. வாரியார் சுவாமிகள் 'எனக்கென்று இனி எந்தச் சொத்தும் சேர்ப்பதில்லை; சம்பாதிப்பது எல்லாம் இறைப் பணிக்கே' என்று முடிவெடுத்தார். தன் சம்பாத்தியம் அனைத்தையும் கோயில்களுக்கே கொடுத்தார். அவருக்கென்று சொந்த வீடுகூடக் கிடையாது. எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது உலகத் தமிழ்மாநாடு நடத்தினார். அதில் இயல், இசை, நாடகம் என முத்தமிழ் வித்துவான்களுக்கு மூன்று பவுனில் பொற்கிழி அளிக்க நினைத்தார். தன் அமைச்சர்களிடமும் சொன்னார். கடைசியில் யாருமே தேர்வாகாததால் முத்தமிழுக்கும் சேர்த்து கிருபானந்த வாரியார் அவர்களையே தேர்ந்தெடுத்து 9 பவுனில் 'தங்கத் தாமரை' அளித்து கௌரவித்தார்.

ஒருமுறை தங்கள் பெண்களுக்கு திருமணம் செய்ய வேண்டும்; என்று இரு பெண்கள் வந்து கேட்டபோது அந்தத் தாமரையை இரண்டாக்கி இருவருக்கும் கொடுத்து விட்டார். விபூதிப் பை, பூஜை சாமான், விக்கிரகங்கள் அடங்கிய பெட்டி, உடுத்திக் கொள்ள இரண்டு வேட்டி தவிர வேறு எதையும் வைத்துக் கொள்ளாதவர் அவர். பொன், பொருள், புகழ் என எதிலும் பற்றற்றவர். தலைக்கனம் இல்லாதவர். எதையும், யாரிடமும் தனக்கெனக் கேட்டுப் பெறாதவர். சுயநலமே இல்லாத மனிதர் என்றால் அது அவரை மட்டுமே சாரும்.

மிகப்பெரிய ஞானி அவர். தன்னுடைய மறைவை முன்னரே கணித்திருந்தார். தினந்தோறும் தனது வரவு செலவுக் கணக்கை ஒரு தாளில் குறித்து வைப்பது சுவாமிகளின் வழக்கம். அவர் சென்னை ஏர்போர்ட்டில் லண்டனுக்குக் கிளம்பும் போது பக்தர் ஒருவர் சந்தித்தார். ஆசிபெற்றார். உடனே தன் மான் தோல் பையைத் திறந்திருக்கிறார் சுவாமிகள். அதில் 50 ரூபாய் மட்டும் இருந்திருக்கிறது. அதை அவருக்குக் கொடுத்துவிட்டு, தன் செலவுக் கணக்கில் 50 ரூ. செலவு என்று எழுதி, கணக்கை நேர் செய்துவிட்டுப் போனார். பொதுவாக கணக்கில் வரவோ அல்லது செலவோ மீதம் இருக்கும். ஆனால் சுவாமிகள் தன் கணக்கை நேர் செய்துவிட்டுப் போனார். அதன் பிறகு அவர் ஒரு பைசா சம்பாதிக்கவில்லை. லண்டன் போனவுடனேயே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் சேர்த்தார்கள். சொற்பொழிவு செய்ய இயலவில்லை. மயில் வாகனத்தில் வந்து முருகன் அழைத்துச் செல்வது போல லண்டனிலிருந்து திரும்ப வரும்போது விமானத்திலேயே அவர் ஆன்மா பிரிந்துவிட்டது.

- தே. மங்கையர்க்கரசி

*****


மறக்க முடியாத பாராட்டு
மதுரை ஆடி வீதியில் 'திருக்குறள் பேரவை' இருக்கிறது. அவர்கள் எனக்கு 'திருக்குறள் செல்வி' என்று பட்டமளித்தனர். அந்த விழாவில் பலரும் 500, 100 என்று பணம் அன்பளிப்புக் கொடுத்தனர். நானும் எனது தாயாரும் நிகழ்ச்சி முடிந்து இரவில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் எங்கள் வீடு. 8.00 மணிக்கு மேல் இருக்கும். ஒரு முரட்டு ஆள் எங்களைப் பின்தொடர்ந்து வந்தார். ஏன் என்பது எங்களுக்குப் புரியவில்லை. கையில் பரிசுப் பொருட்கள், பணம் வேறு இருந்தது. நாங்கள் வேகமாக நடக்க ஆரம்பித்தோம். அவரும் வேகமாக நடந்து வந்து எங்களைத் தாண்டி நின்றார். எனக்குக் கொஞ்சம் அச்சமாக இருந்தது. அவர் என் அம்மாவைப் பார்த்து, "அம்மா, நான் இங்க மார்க்கெட்டில மூட்டை தூக்குறவன். பாப்பா பேச்சைக் கேட்டேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. அவங்க திருக்குறள் சொன்னது ரொம்பப் பிடிச்சிருந்திச்சி. தமிழ்ல இவளோ எல்லாம் இருக்குதுன்னு எனக்குத் தெரியாதும்மா. எல்லாரும் 50, 100ன்னு நிறைய பரிசு கொடுத்தாங்க. நான் படிக்காதவன். மூட்டை தூக்குறவன். எங்கிட்ட அவ்ளோல்லாம் காசு இல்ல. எங்கிட்ட இருக்குறது இந்த 2 ரூவாதான். இதை எல்லோருக்கும் முன்னாடி எப்படிக் குடுக்கறதுன்னு தெரியலை. சங்கடமா இருந்திச்சு. அதான் அதை உங்ககிட்டக் கொடுக்கலாம்னு பின்னாடியே வந்தேன். தப்பா நினைச்சுக்காதீங்க" அப்படின்னு சொல்லி 2 ரூபாயைக் கொடுத்தார்.

இன்றைக்கும் அதை நினைத்தால் என் கண் கலங்கும். நன்கு படித்தவர்கள், விஷயம் அறிந்தவர்கள் பாராட்டுவது இயல்பு. ஆனால் மூட்டை தூக்கி ஒருவர் பாராட்டுவதும், தன் ஒருநாள் உழைப்பை எனக்குப் பரிசாகத் தந்ததையும் என்னால் மறக்கவே முடியாது. உருவத்திற்கும் பேச்சுக்கும் சம்பந்தமில்லாத அந்த எளிய மனிதரின் பாராட்டை என் வாழ்நாளில் மறக்க முடியாது. அவர் தந்த அந்த 2 ரூபாய்க்கு நான் பரீட்சை அட்டை வாங்கி, பள்ளியில் படித்தவரை ஒவ்வொரு பரீட்சையும் அதில்தான் எழுதினேன். ஒவ்வொருமுறை எழுதும் போதும் அந்த எளிய மனிதரை நினைத்துப் பார்ப்பேன். இன்றைக்கு எனக்கு தங்கத்திலும், வைரத்திலும் பாராட்டும் பரிசும் கிடைத்தாலும் அந்த எளிய மனிதரின் வியர்வையினால் ஆன அந்த 2 ரூபாய்க்கு ஈடாகுமா?

அதுபோல, "ஏழாம் நூற்றாண்டில் ஒரு மங்கையர்க்கரசி தோன்றி சைவத்தைத் தழைக்கச் செய்தார். இந்த இருபதாம் நூற்றாண்டில் இந்த மங்கையர்க்கரசி தோன்றி சைவத்தைத் தழைக்கச் செய்கிறார்" என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் என்னைச் சிறுவயதில் பாராட்டியதும் மறக்க முடியாதது.

- தேச. மங்கையர்க்கரசி

*****


பிரச்சனைகள் காணாமல் போக....
கடவுள் என்பது பிரபஞ்சத்தின் மிகப் பெரிய சக்தி. அவரவருக்குரிய இறைவனை, அவரவர் வழிமுறைப்படி, மனிதனாகத் தாம் பிறந்ததற்கு நன்றி கூறி, நம்மால் முடிந்த நன்மையைச் செய்து வாழ வேண்டும். குறிப்பாக, நாம் இந்த உலகில் வருவதற்குக் காரணமான பெற்றோரை மதிக்க வேண்டும். அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் அவலநிலை இன்றைக்கு இருக்கிறது. இதைப்பற்றிச் சொல்ல வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். நாளைக்கு நாமும் இதேபோன்று ஓர் இல்லத்திற்குத்தான் அனுப்பப்படுவோம் என்ற பயம் இருந்தால் அப்படிச் செய்யமாட்டார்கள். தாய், தந்தையரை தயவுசெய்து உதாசீனம் செய்யாதீர்கள். அவர்கள் இல்லை என்றால் நாம் இல்லை என்பதை உணர வேண்டும். விலை கொடுத்து வாங்க முடியாத உறவு அது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கையில் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய சொத்து பெற்றோர்.

அதே போன்று கணவர்/மனைவி மற்றும் குழந்தைகள். ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் கிடைக்கும் மிகப் பெரிய விஷயங்களில் முக்கியமானது அவனைச் சுற்றி இருக்கும் உறவுகள்தாம். இன்றைக்குப் பலர் உறவுகளை இடைஞ்சலாக நினைக்கின்றனர். தேவையில்லை என்று நினைக்கின்றனர். வீட்டில் இருக்கும் வயதானவர்களை முதியோர் இல்லத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விடுகின்றனர். மிகக் கொடுமையான விஷயம் இது. அலுவலகத்தில் சக பணியாளர்கள், மேலதிகாரிகளுடன் அனுசரித்துப் போகத் தெரிந்தவர்களுக்கு வீட்டில் உள்ள உறவுகளோடு விட்டுக் கொடுத்துப் போகத் தெரியவில்லை. கூட்டுக் குடும்பம் என்பது மிகப் பெரிய பலம். பிரச்சனைகள் இல்லாத வீடு என்று எதுவுமே இல்லை. நாணல் மாதிரி வளைந்து கொடுத்து, விட்டுக் கொடுத்து, அனுசரித்துப் போகத் தெரியவில்லை. தெரிந்தாலும் ஈகோ அவர்களைத் தடுக்கிறது. விவாகரத்துக்கள் அதிகரிக்க இந்த ஈகோதான் காரணமாக இருக்கிறது. இதைப் புரிந்து கொண்டு, ஒவ்வொருவரும் விட்டுக் கொடுத்து வாழ ஆரம்பித்தால் நிறைய பிரச்சனைகள் காணாமல் போய்விடும்.

- தேச. மங்கையர்க்கரசி
More

சாரு ஜெயராமன்
Share: 




© Copyright 2020 Tamilonline