Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிறப்புப் பார்வை | வாசகர் கடிதம் | Events Calendar | நூல் அறிமுகம் | கவிதைபந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
நாஞ்சில்நாடன்
ஆஷா ரமேஷ்
- அருணா கிருஷ்ணன்|ஜூன் 2012||(1 Comment)
Share:
அமெரிக்காவின் சான்ஃபிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில் 'ராகமாலிகா' இசைப் பள்ளியை நடத்தி வருகிறார் திருமதி. ஆஷா ரமேஷ். இந்திய இசை உலகிலும் இவர் பிரபலம். 'ராகமாலிகா' தனது இருபதாண்டு நிறைவு விழாவை ஜூன் 16 அன்று சாரடோகோ உயர்நிலைப் பள்ளியின் Mcafee performing Arts அரங்கில் நடத்த இருக்கும் மகிழ்ச்சியான இந்தத் தருணத்தில் தென்றலுக்காக அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து....

*****


தென்றல்: நீங்கள் இசைப் பள்ளி துவங்கி 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. வாழ்த்துக்கள். அதன் தொடக்க காலம்பற்றிப் பேசுவோமா?
ஆஷா: நன்றி. 1992ம் ஆண்டு விஜயதசமி அன்று நான்கைந்து மாணவர்களுடன் ஃப்ரீமாண்ட் நகரில் என் இசைப்பள்ளியைத் துவக்கினேன். 1994ல் பள்ளியை சான் ஹோஸேக்கு மாற்றியபோது 35-40 மாணவர்கள் இருந்தனர். இந்தப் பகுதியில் நிறைய இந்தியர்கள் வசித்ததால் பள்ளி நல்ல வளர்ச்சி அடைந்தது. அடுத்த சில வருடங்களில் மாணவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்தது. பள்ளியின் பத்தாம் ஆண்டு விழா 2002ல் நடைபெற்றது.

கே: அதுபற்றிய விவரம் அப்போது தென்றலில் வெளியானது, அல்லவா?
ப: ஆம். பத்தாம் ஆண்டு நிறைவு விழாவில்தான் என் பள்ளிக்கு 'ராகமாலிகா' என்ற பெயர் சூட்டப்பட்டது. அவ்விழாவில் 75 மாணவர்கள் பங்கேற்றுப் பாடினார்கள். அவர்களோடு விரிகுடாப்பகுதியின் அனுபவமிக்க வயலின், மிருதங்கக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

கே: இடைப்பட்ட காலத்தில் நீங்கள் என்னென்ன நிகழ்ச்சிகளை வழங்கினீர்கள்?
ப: ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இசை நிகழ்ச்சி ஒன்றை ராகமாலிகா வழங்கி வந்துள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒரு புதுமையாவது செய்து வருகிறோம். 'காதம்பரி' என்ற நிகழ்ச்சியில் இசைக்கலைஞர் லக்ஷ்மி ஷங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அப்போது எனது பாடல்களைக் கொண்ட 'தேனும் தினையும்' என்னும் சிடி வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தியாவிலும் நல்ல விற்பனை. இளம் மாணவர்கள் பெரும்பாலும் பங்கு கொண்ட நிகழ்ச்சி 'பக்தி மார்க்கம்.' 2010ம் ஆண்டு ஜனவரியில் மூன்று தேவியரைப் போற்றும் 'சக்தி, ஸ்ரீ, சாரதா' என்கிற நிகழ்ச்சியை நடத்தினோம். காயத்ரி மந்திரத்தை சிறப்பாகப் போற்றியது இந்நிகழ்ச்சி.

கே: இப்போது இருபதாம் ஆண்டு விழாவை நோக்கி...
ப: ஆமாம். இதில் 'அலங்கிருதம்' என்னும் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறோம்.

கே: ஓர் இசைக் கலைஞராக நீங்கள் வந்த வழியைத் திரும்பிப் பார்க்கும்போது என்ன உணர்கிறீர்கள்?
ப: இசையில் பெரும் ஈடுபாடு கொண்டவர் என் தாயார். அவர் தமது கலையார்வத்தை குழந்தைகள் மூலம் நிறைவேற்றிக் கொண்டார் என்று சொல்லலாம். எனக்குச் சுமார் நான்கு, ஐந்து வயதாகும்போதே இசை கற்கத் தொடங்கிவிட்டேன். பத்து வயதானபோது இசையின் அருமையை உணர்ந்து அதில் முழுமையாக ஈடுபட்டேன். நாங்கள் வசித்து வந்த ஜாம்ஷெட்பூரிலிருந்த 'ரவீந்திர பவன்' கலைமேதை ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் நிறுவப்பட்டது. அதில் திருமதி. மாலதி லக்ஷ்மண் அவர்களிடம் பத்து ஆண்டுகள் இசைப்பயிற்சி பெற்றேன்.

பிறகு நாங்கள் சென்னை வந்தோம். பள்ளியில் 11, 12ம் வகுப்புகள் படிக்கும் காலத்தில் கலாக்ஷேத்ராவில் மாலை வேளையில் இசை பயின்றேன். திரு எம்.டி. ராமநாதன், புதுக்கோட்டை கிருஷ்ணமூர்த்தி போன்ற இசை மேதைகளிடம் பயிலும் வாய்ப்புக் கிடைத்தது. எனது இசையில் சென்னை பாணி மெருகேறியது. இசையை முழுநேரமாகப் பயிலும்படி திருமதி. ருக்மிணி தேவி ஊக்குவித்தார். இதனால், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தபோதும் சேராமல், ராணி மேரி கல்லூரியில் சேர்ந்து இசையில் பி.ஏ. பட்டம் பெற்றேன். பிறகு சென்னைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து எம்.ஏ. மியூசிக்கில் பட்டம் பெற்றேன். அதில் தங்கப் பதக்கத்தைக் கலைஞர் கருணாநிதி அவர்கள் கையால் பெற்றது மறக்க முடியாத அனுபவம். பிறகு மத்திய அரசின் நிதி உதவி கிடைத்து, சங்கீத கலாநிதி திரு டி.கே. ஜெயராமன் அவர்களிடம் மாணவி ஆனேன். 1990ல் அவரது மறைவுக்குப் பின்னர் நங்கநல்லூர் ராமநாதன் அவர்களிடம் என் பயிற்சி தொடர்ந்தது.

கே: கர்நாடக இசையின் தலைமைப் பீடமான சென்னையில் வளர்ந்து வரும் இசைக் கலைஞராக நீங்கள் புகழ் சேர்க்கத் துவங்கிய தருணத்தில் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடிபுக நேர்ந்தது உங்களுக்குக் கஷ்டமாக இல்லையா?
ப: கண்டிப்பாக. மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது. எனக்குத் திருமணமான சமயத்தில் நான் மேடைக் கச்சேரிகள் செய்ய ஆரம்பித்திருந்தேன். அகில இந்திய வானொலியில் பாடத் தரம்பெற்று இருந்தேன். அலர்மேல் வள்ளி, அனிதா ரத்னம், ப்ரீதா ரத்னம், லக்ஷ்மி விஸ்வநாதன் போன்றோரின் நடன நிகழ்ச்சிகளுக்குப் பாடிக் கொண்டிருந்தேன். அதை விட்டுவிட்டு அந்நிய மண்ணில் குடியேற முடிவெடுப்பது எளிதாக இல்லை. ஆனால் எனது வருங்காலக் கணவரும், மாமனார், மாமியாரும் என் ஆர்வத்துக்குத் துணையாக இருப்பார்கள் என்பது தெரியவந்தபோது தெம்பு பிறந்தது. 'சரஸ்வதி கான நிலையம்' எனும் இசை நாட்டியப் பள்ளியை எனது மாமியார் திருமதி. ரங்கநாயகி ஜெயராமன் திருவல்லிக்கேணியில் நடத்தி வந்தார். கலைக் குடும்பத்தினர்கள் இவர்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். திருமணம் நடந்து 1992ம் ஆண்டு விரிகுடாப்பகுதிக்கு வந்து சேர்ந்தேன்.
கே: அமெரிக்க மண்ணில் இசைக் கலைஞராக உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து...
ப: சென்னை மண்ணில் ஒரு பாடகியாக வளர்ச்சியடைய நல்ல பக்க பலம் அமைந்திருந்தது. ஆனால் இங்கே ஆரம்பக் கட்டத்திலிருந்து மீண்டும் இசைப் பயணத்தைத் தொடங்க வேண்டிய நிலை. இது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாகவும் எனது சொந்தக்காலில் நிற்கும் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதத்திலும் அமைந்து விட்டது. "Immigrant Spirit for survival" என ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்களே, அந்தத் திறமை என் வளர்ச்சிக்குப் பக்கபலமாக அமைந்தது.

கே: நடன நிகழ்ச்சிகளுக்கு மிகவும் உயிரோட்டம் தருவதாக உங்களது இசை அமைந்து வருகிறது என்பது விரிகுடா ரசிகர்களின் கருத்து. நடனத்துக்குப் பாடுவது பற்றிய உங்களது அனுபவங்கள் என்ன?
ப: நடனம் கண்களுக்கு விருந்தாகும் கலை. அதனுடன் உணர்ச்சி தோய்ந்த இன்னிசை சேரும்போது அது ரசிகர்களின் கண்ணையும் செவிகளையும் கருத்தையும் கவர்ந்து விடுகிறது. தேர்ந்த நடனக் கலைஞராக இருந்தாலும் சரி, அல்லது அரங்கேற்றம் காணும் இளம் மாணவியாக இருந்தாலும் சரி, என்னைப் பொறுத்தவரை வேறுபாடு இல்லாமல் உணர்வுபூர்வமாக அனுபவித்துப் பாடுகிறேன். தவிர, நடனத்துக்கென்றே புதிய பாடல்களை இயற்றி இசையமைத்துப் பாடும் வாய்ப்புகள் பல கிட்டி வருகின்றன.

கே: அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இசைக் கலைஞராக உங்களுக்குக் கிடைத்த தனியனுபவங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?
ப: ஒரு பாடகராக அமெரிக்காவிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் பாடி வரும்போது எனது கண்ணோட்டம் விரிந்து எனது இசையுணர்வில் ஓர் உலகக் கண்ணோட்டம் (Global Perspective) ஏற்பட்டுள்ளதை நான் உணர்கிறேன். சங்கீதம் என்பது மொழி, மதம், கலாசார வேற்றுமைகளைத் தாண்டிய ஓர் உயரிய மனித உணர்வு. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் 'அபிநயா' நாட்டிய நிறுவனத்தில் நடன நிகழ்ச்சிகளுக்குப் பாடும்போது பாலி நாட்டு இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து பணியாற்றியது; பெர்க்கலி பல்கலைக்கழகத்தில் World Music துறையில் Adjunct Professor of Music ஆக மூன்று வருடங்கள் பணியாற்றியது; விரிகுடாப் பகுதியைச் சேர்ந்த 'நிருத்யோல்லாசா', 'அபிநயா', 'லாஸ்யா' நிறுவனங்கள் வழங்கிய நிகழ்ச்சிகளுக்கும், மஸ்கட்டில் திருமதி. பத்மினி கிருஷ்ணமூர்த்தி வழங்கிய நிகழ்ச்சிகளுக்கும் பஞ்ச தந்திரக் கதைகள், ஜாதகக் கதைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாடல்களை இயற்றி இசையமைத்தது; ஷடி பரூக் அவர்கள் 1998ல் தயாரித்த 'The Visitor' என்னும் டாகுமெண்டரி படத்திற்கு இசையமைத்தது (இப்படம் Cannes Film Festivalல் விருது பெற்றது). இவை யாவுமே எனக்குக் கிடைத்த தனியனுபவங்கள்.

கே: ஒரு ஆசிரியர் என்ற முறையில் சங்கீதம் பயில விரும்பும் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ப: இசையில் உண்மையான ஆர்வம் இருந்தால்தான் முழுமையாகப் பயில முடியும். குழந்தைகள் சென்றுவரும் பல்வேறு வகுப்புகள், செயல்பாடுகள் இவற்றில் இதுவும் ஒன்று, கல்லூரியில் சேர மாணவர்கள் தயாரிக்கும் சுயவிவரக் குறிப்பில் இதுவும் ஒன்று என்று ஆகிவிடக் கூடாது. இசையை அனுபவித்துச் சந்தோஷமாகக் கற்றுக் கொள்ள வேண்டும். பெற்றோர்கள் அவர்களின் ஆர்வத்தை வளர்க்க வேண்டும். கச்சேரிகளுக்கு அழைத்துச் சென்று சங்கீதம் கேட்பதற்கு நிறையச் சந்தர்ப்பங்களை உருவாக்கித் தரவேண்டும். இசைத் திறமையென்பது இன்று வகுப்பில் சேர்ந்து நாளை சம்பாதிப்பதல்ல. அதற்குத் தேவையான ஆர்வம், முயற்சி, பயிற்சி என்று பொறுமையாக ஈடுபட்டு, காலப்போக்கில் வளர்ந்து மலர்வது. சில பெற்றோர்கள் குழந்தைகளை இசை வகுப்புகளில் சேர்க்கும் போதே, “எப்போது என் குழந்தை மேடையேறிப் பாடப் போகிறாள்?" என்று கேட்கிறார்கள். இது தவறான அணுகுமுறை. இத்தனை வருடங்கள் இசை பயின்றால் மேடையேறிப் பாட முடியும் என்று கணக்கிட்டுச் சொல்ல முடியாது. மாணவர்களின் ஆர்வமும் திறமையும் வேறுபட்ட நிலைகளில் இருக்கும். பொது விதி என்பது கிடையாது. தவிர இசை பயிலும் எல்லோருமே மேடைப் பாடகர்கள் ஆகிவிடுவார்கள் என்றும் சொல்ல முடியாது.

கே: 20ம் ஆண்டு இசைவிழா நிகழ்ச்சிக்கு 'அலங்கிருதம்' என்று பெயர் சூட்டியிருப்பதாகச் சொன்னீர்கள். அதைப்பற்றிச் சொல்லுங்கள்...
ப: 'அலங்கிருதம்' என்ற சொல்லுக்கு 'அலங்கரித்தல்' என்று பொருள். இனிமையான இசையால் இந்நிகழ்ச்சியை ராகமாலிகாவின் பாடகர்கள் அலங்கரிக்கப் போகிறார்கள். இசையென்பது இந்தப் பிரபஞ்சத்திற்கே பொதுவான அரிய உணர்வு. கலை. நாடு, மதம், கலாசாரம், மொழி என்பன போன்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது இசை. மனித இனத்துக்கே உயிரூட்டுவது இசை.

கே: ஒரு பெரிய இசை விருந்து காத்திருக்கிறது என்று சொல்லுங்கள்!
ப: நிச்சயமாக. நிகழ்ச்சி அரை நாள் அளவுக்கு நீடிப்பதால் நல்ல உணவும் ரசிகர்களுக்குக் கிடைக்கும்.

செவிக்கு மட்டுமல்லாமல் வயிற்றுக்கும் சுவையான உணவைத் தரவிருக்கும் ஆஷா ரமேஷ் அவர்களின் இருபதாண்டு கலைச்சேவை நூறாண்டும் அதற்கு மேலும் காணட்டும் என்று மனமார வாழ்த்தி விடைபெற்றோம்.

சந்திப்பு: அருணா கிருஷ்ணன்,
கூபர்டினோ, கலிஃபோனியா

*****


அரங்கேற்றம் என்பது....
நமது கலைப் பாரம்பரியத்தில் 'அரங்கேற்றம்' என்பது நடனத்திற்கே உரியது. சங்கீதத்தைப் பொறுத்தவரையில் ஒரு மாணவர் முதன்முதலில் ஒரு கோவிலில் இறைவன் சன்னதியில் பாடுவது வழக்கம். இங்கே, சங்கீதத்திற்கும் அரங்கேற்றம் நடத்துகிறார்கள். மேடையேறிப் பாடும் அளவுக்குப் பயிற்சி பெறுவது எளிதல்ல. நடனத்தைப் பொறுத்தவரையில், ஒரு நிகழ்ச்சியில் இடம்பெறுவதற்கான ஏழெட்டு நடனங்களைப் பழுதின்றிக் கற்று, நன்கு பழகி, கடின உழைப்பிற்குப் பின் மேடையேறி தவறின்றி ஆடினால், ஒரு நல்ல நிகழ்ச்சியை வழங்கி விடலாம். ஆனால் 'இசை' என்று வரும்போது ஒரு சில பாடல்களைக் கற்றுக்கொண்டு அவற்றை அப்படியே பழுதின்றிப் பாடி ஒப்பேற்றிவிட முடியாது. மனோதர்மம் இசையில் வெளிப்பட வேண்டும். ராக ஆலாபனை, நிரவல் இவற்றைத் திறம்படச் செய்ய கல்பனா சக்தியும் மனோதர்மமும் வேண்டும். அந்த அளவு இசையறிவு பெற வேண்டுமானால் ஈடுபாடும், கடினமான பயிற்சியும், தகுந்த வளர்ச்சியும் அமைய வேண்டும். ஆகைவேதான் சங்கீத அரங்கேற்றங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று நினைக்கிறேன்.

ஆஷா ரமேஷ்

*****


அலங்கிருதம்
ஆஷா ரமேஷ் அவர்கள் இசைப் பள்ளி தொடங்கி, இருபதாவது ஆண்டு விழா 'அலங்கிருதம்' என்ற பெயரில் ஜூன் 16 அன்று சாரடோகோ உயர்நிலைப் பள்ளியின் McAfee Performing Arts அரங்கில் நடைபெற உள்ளது. அதைப்பற்றி ஆஷா ரமேஷ் கூறுவதைக் கேட்போம்: “இசை மனித இனத்திற்குப் பொதுவானது, வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டது என்பதே 'அலங்கிருதம்' நிகழ்ச்சியின் மையக்கருத்து. இக்கருத்தைக் கொண்டாடும் வகையில் முதலில் வட இந்தியாவின் ஹிந்துஸ்தானி இசையில் தேர்ந்த வித்வான் திரு. நசிகேத் ஷர்மா பாடவிருக்கிறார். மதியம் 1 மணிக்குத் துவங்கி மாலை 9 மணி வரையில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சியில் ராகமாலிகா மாணவர்கள் பலர் பாட உள்ளனர். படிப்பு மற்றும் வேலை காரணமாக விரிகுடாப் பகுதியிருந்து வேறு நகரங்களுக்குச் சென்றுவிட்ட மாணவர்கள்கூட, 'அலங்கிருதம்' நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வமாக ஒன்றுகூடியுள்ளனர். இவர்களில் பலர் தாம் பெற்ற இசைப்பயிற்சி எப்படித் தம் வாழ்க்கைக்குப் பலவகையிலும் உதவுகிறது என்பதைப் பகிர்ந்துகொள்ளப் போகிறார்கள். மாலையில் நடக்கவிருக்கும் எனது கச்சேரி, இசைப் பள்ளியின் பெயரைப் பிரதிபலிக்கும் விதத்தில் அமையப் போகிறது. விரிகுடாப் பகுதியின் பிரபலமான பல வாத்தியக் கலைஞர்களும், பிற அமெரிக்க மாநிலங்களிலிருந்து வரும் கலைஞர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகின்றனர்."
மேலும் படங்களுக்கு
More

நாஞ்சில்நாடன்
Share: 
© Copyright 2020 Tamilonline