மறவன்புலவு க. சச்சிதானந்தன்
|
|
புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு: வெற்றிச் செல்வி இராசமாணிக்கம் |
|
- வடிவேல் ஏழுமலை, நித்யவதி சுந்தரேஷ்|மே 2012| |
|
|
|
|
|
கடந்த சில மாதங்களாக விரிகுடாப்பகுதியில், பத்திரிக்கைகள், உணவகங்கள், பலசரக்குக் கடைகள், துணிக் கடைகள், வானொலி, வலைதளங்கள் என்று எங்கு பார்த்தாலும் கண்ணில் படுவது 'புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு' என்பதுதான். நான்கு குழந்தைகளுடன் வீட்டு முற்றத்தில் ஆரம்பிக்கப்பட்ட கலிஃபோர்னியா தமிழ்க் கழகம்-CTA இன்று பல கிளைகளுடன் சுமார் 3000 மாணவர்கள் படிக்கும் அமைப்பாக வளர்ந்துள்ளது. இதன் நிர்வாகி வெற்றிச்செல்வி இராசமாணிக்கம் (பார்க்க: தென்றல், ஏப்ரல் 2008). தமிழைக் குழந்தைகளுக்குப் பயிற்றுவதோடு நில்லாது, புலம்பெயர்ந்த தமிழர்களை ஒருங்கிணைத்து ஒருகுடைக்கீழ் செயல்பட வேண்டும்; அடுத்த தலைமுறைக்கும் தமிழ்க் கல்வி சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை எடுத்துள்ளார். தென்றலுக்காக அவர்களோடு உரையாடியதில்...
***** கே: 'புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு' (பார்க்க: தென்றல், பிப்ரவரி 2012) ஒன்றை நடத்தும் எண்ணம் எப்படி ஏற்பட்டது? ப: நான் சிங்கப்பூர், மலேசியா, மொரீஷஸ் போன்ற நாடுகளுக்கு சென்றபோது, அங்குள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கும் சென்றேன். ஒவ்வொரு பள்ளியிலும் பலவிதமான பிரச்சனைகள். சிலசமயம் சொல்லிக்கொடுப்பது மாணவர்களுக்குப் புரிவதில்லை. கற்பிப்பது கடினமாகும்போது கற்பதில் விருப்பம் இல்லாமல் போகிறது. நாம் ஏன் எல்லா நாடுகளையும் இணைத்து, அதன்மூலம் பிரச்சனைகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் பரிமாறிக்கொள்ளக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. பல நாடுகள் புதிய உத்திகள், உபகரணங்கள், வலை, தொழில்நுட்பவியல், விளையாட்டுக் கருவிகள் ஆகியவற்றை உபயோகித்துத் தமிழ் கற்பிக்கின்றன.
எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரில் தமிழ் கற்பிக்க அரசாங்க நிதியுதவி கிடைகிறது. அவர்களால் நவீனக் கருவிகள் வாங்கவும், நவீனத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தவும் முடிகிறது. நாமும் ஏன் இவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று எங்கள் பள்ளி நிர்வாகக் குழுவினரிடம் பேசினேன். அவர்கள் நமக்குரிய பாடத்திட்டங்களை நாமே வகுக்கலாம், புதிய புத்தங்களை அறிமுகப்படுத்தலாம், புதிய தொழில்நுட்பத்தை உபயோகிக்கலாம் என்றனர். நாம் இவற்றைச் செய்தாலும் நமக்கு மட்டுமே பயன்படும். இதை எல்லோருக்கும் பயன்பட வழி செய்ய வேண்டுமே! உலகிலுள்ள புலம்பெயர்ந்த பள்ளிகள் அனைத்தையும் ஒரு குடையின்கீழ் கொண்டு வந்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. அதற்காக ஒரு மாநாடு நடத்தினால் அனைவரும் பயனடைவர். தத்தமது பள்ளியில் உபயோகிக்கும் உத்திகளையும் பரிமாறிக்கொள்ள முடியும் என்றேன். அனைவரும் ஒப்புக்கொண்டனர்.
ஆனால் இதற்கு நிறையச் செலவாகுமே. நான் லண்டன், மொரீஷஸ், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாட்டுத் தமிழறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினேன். அவர்களும் “நீங்கள் மாநாட்டை நடத்துங்கள். எங்கள் செலவை நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என்று உற்சாகப்படுத்தினர். வெளிநாட்டிலிருந்து கலந்து கொள்பவர்களுக்கு உணவு, இருப்பிடம் மட்டுமே நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த மாநாடு இத்துடன் முடிவடையாது. அடுத்தும் தொடரும் வகையில் தமிழ்க் கல்வி வலைவாசல் (portal) ஒன்றையும் அமைத்துக் கொண்டிருக்கிறோம். இதன்மூலம் அனைத்து நாட்டவர்களும் மாநாட்டுக்குப் பின்னரும் தொடர்பில் இருப்பர். கே: இம்மாநாடு எத்தனை நாட்கள் நடக்க இருக்கின்றன? என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெறப் போகின்றன? ப: இம்மாநாடு மூன்று நாட்கள் தொடர்ந்து 'சவால்கள், நோக்குகள், சாத்தியங்கள்' என்கிற கருப்பொருளில் மூன்று பிரிவுகளாக நடைபெற உள்ளது. 1. கட்டுரை வாசித்தல்: மாணவர்கள் தாங்கள் கற்பதில் உள்ள பிரச்சனைகளையும், ஆசிரியர்கள் கற்பிப்பதில் உள்ள இடைஞ்சல்களையும், பெற்றோர் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், ஏனைய தமிழறிஞர்கள் அனுபவங்களையும் இதில் பகிர்ந்துகொள்ள உள்ளனர். 2. ஆசிரியர்க்கான பயிற்சிப் பட்டறை (workshop): புலம்பெயர்ந்தோர் நடத்தும் பாரம்பரிய மொழிப் பள்ளிகள் பெரும்பாலும் தன்னார்வத் தொண்டர்களாலும், பெற்றோர்களாலும் நடக்கின்றன. எங்கள் பள்ளியில் உயர்நிலைப் பள்ளி வகுப்பு (High school credit program) ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள். அதனால் இம்மாநாட்டில் ஆசிரியர்க்கான பயிற்சிப் பட்டறை வைத்திருக்கிறோம். இதில் குழந்தைகளை அணுகும் முறை, நவீனக் கருவிகள், உத்திகள், விளையாட்டுக் கருவிகள் மூலம் கற்பித்தல், இணையவழிக் கல்வி ஆகியவை குறித்து அனுபவம் வாய்ந்த தமிழ் அறிஞர்கள் பயிற்சியளிப்பார்கள். இதில் பிற இந்திய மொழிகள், ரஷ்ய, சீன, ஸ்பானிய மொழிகளைக் கற்பிப்போரும் கலந்துகொள்ள உள்ளனர். லாஸ் ஏஞ்சலஸ் பல்கலைகழகப் (UCLA) பேராசிரியர்கள் இப்பட்டறையை நடத்த உள்ளனர். 3. கலைநிகழ்ச்சிகள்: இதில் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகள், வெளிநாடு வாழ் தமிழ் மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். நடனம், இலக்கிய, சமூக நாடகங்கள், பட்டிமன்றம் ஆகியவை நடைபெறும். இவர்களின் தமிழைக் கேட்கும்போது வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த மாணவர்களா என்கிற சந்தேகமே நமக்கு வரும். |
|
|
கே: நல்லது. இம்மாநாட்டின் பிற முக்கிய அம்சங்கள் எவை? ப: முதல்நாள் வெளிநாட்டுத் தமிழறிஞர்கள், பள்ளிக்கு உழைக்கும் தன்னார்வத் தொண்டர்கள், எமது பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள் ஆகியோருடன் ஒரு சிறு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் நாள் காலை அனைத்து நகர மேயர்களையும், சமூக சேவை செய்யும் தன்னார்வத் தொண்டர்கள் (community service volunteers), வெளிநாட்டுத் தமிழறிஞர்கள் ஆகியோரை கெளரவிக்க உள்ளோம். மாநாட்டுக்குச் சுமார் 5000 பேரை எதிர்பார்க்கிறோம். அன்றும் மறுநாளும் அறிஞர்கள் உரை, கலைநிகழ்ச்சிகள், கருத்துப்பட்டறை, ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஆகியவை இடம்பெறும். கே: உங்கள் பள்ளியிலேயே படித்துப் பின்னர் ஆசிரியப் பணி செய்யும் மாணவர்கள் உள்ளனரா? அவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்கிறார்களா? ப: உள்ளனர். அவர்கள் படிக்கும்போது எதிர்கொண்ட பிரச்சனைகள், இன்றைக்குக் கற்பிக்கும்போது எதிர்கொள்ளும் சவால்கள், என்ன மாற்றத்தை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பவை குறித்து அவர்கள் ஒரு கருத்தரங்கில் பேச இருக்கிறார்கள். இது இம்மாநாட்டின் ஒரு முக்கிய அங்கம். நாளை நம் மொழியையும் கலாசாரத்தையும் கொண்டுசெல்லப் போவது இவர்களே என்பதால் இந்நிகழ்ச்சியை ஆவலோடு எதிர்பார்க்கிறோம். இந்த மாநாட்டைக் கட்டாயம் வந்து பாருங்கள். எங்கள் குழந்தைகள் பேசுவதைப் பாருங்கள். இதுதான் எங்களின் மிகப்பெரிய சாதனையாக நினைக்கிறோம். கே: ஆசிரியர் பயிற்சிப் பட்டறை முக்கியத்துவத்தை விளக்குங்களேன்? ப: வருடா வருடம் சான் ஹோசே பல்கலைகழகப் பேராசிரியர் குமார், ஃபிரெஞ்சு ஆசிரியை வைஜயந்தி ஆகியோர் எங்கள் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றனர். இத்துடன் மற்ற நாட்டு மொழி வல்லுனர்களும் பயிற்சி அளிப்பது பலனளிப்பதாக இருக்கும். அடுத்த ஆண்டு முதல் சிங்கப்பூர் புத்தகங்களை அறிமுகப்படுத்தப் போகிறோம். அது குறித்த பயிற்சியும் தரப் போகிறோம். கே: இம்மாநாடு மூலம் ஆசிரியர், பெற்றோர், மாணவர் இவர்களுக்கான பயன்கள் என்னென்ன? ப: இருவேறு கலாசாரம், இருவேறு மொழிகள் என வாழும் மாணவர்களைச் சந்திக்க இங்குள்ள மாணவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இது. தம்மைப் போன்ற பெற்றோர்கள், ஆசிரியர்களைச் சந்திக்கும் வாய்ப்பு இங்குள்ள பெற்றோர், ஆசிரியர்களுக்கு கிடைக்கிறது. நாங்கள் சமீபத்தில் ஒரு மாணவர்கள் சந்திப்பை ஏற்படுத்தி இருந்தோம். அதில் மாணவர்கள் பேசியதிலிருந்து ஒரு சின்ன எடுத்துகாட்டு. குழந்தைகளுக்கு மாதாமாதம் தேர்வு வைக்கிறோம். "பெற்றோர்கள் எங்களைப் படிக்கச் சொல்லிக் கட்டாயப் படுத்துகிறார்கள். அவர்கள் அதிக மதிப்பெண்களை எதிர்பார்க்கிறார்கள்" என்று கூறினர். நாங்கள் பெற்றோர்களுக்குச் சொல்லிக்கொள்வது என்னவென்றால், எமது கற்பிக்கும் முறை சரியானதா, எளிமையாக இருக்கிறதா, ஏதாவது மாற்றம் தேவையா என்பதை அறிய எங்களுக்கு நாங்களே வைத்துக்கொள்ளும் தேர்வுதான் இது. குழந்தைகள் தமிழ் கற்பதை ஒரு சுமையாக எண்ண வைக்காதீர்கள். மதிப்பெண்கள் மட்டுமே முக்கியமல்ல. அவர்கள் மொழியைப் புரிந்துகொள்ள வைப்பதும், நேசிக்க வைப்பதும் எங்கள் குறிக்கோள் ஆகும். கே: இம்மாநாட்டில் எத்தனை நாடுகள் பங்கேற்கின்றன? ப: சிங்கப்பூர், மலேஷியா, மொரீஷஸ், இந்தியா, ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, கனடா, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் ஆகியவை பங்கேற்கின்றன. கே: இம்மாநாட்டுக்காக CTAவுடன் இணைந்து செயல்படுபவர்கள் யார்? ப: சிங்கப்பூரில் இருந்து அருண் மகிழ்நன், இந்தியாவிலிருந்து டாக்டர். பொன்னவைக்கோ, டாக்டர். எம். ராஜேந்திரன், டாக்டர். கார்த்திகேயன், டாக்டர். நக்கீரன், லண்டனிலிருந்து சிவா பிள்ளை, ஃபிரான்சில் இருந்து அப்பாசாமி, மலேசியாவிலிருந்து டாக்டர். பரமசிவம் ஆகியோ நம்மோடு இணைந்து செயல்படுகிறார்கள். மேலும் கனடா, ஸ்ரீலங்காவைச் சேர்ந்தவர்கள் மாநாட்டுக் குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர். பெர்ர்கலி பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர். ஜார்ஜ் ஹார்ட், கௌசல்யா ஹார்ட், பென்சில்வேனியாவின் டாக்டர். வாசு ரங்கநாதன், டெக்சாஸின் ராதாகிருஷ்ணன், சிகாகோவின் அண்ணாமலை ஆகியோரும் மாநாட்டுக் குழு உறுப்பினர்களாக உள்ளனர். கே: CTA பள்ளிகளில், நீங்கள் எதிர்கொண்ட முக்கியச் சவால் என்ன? அதை நிவர்த்தி செய்ய இந்த மாநாடு எந்த வகையில் உதவும்? ப: வெளிநாட்டில் வாழும் குழந்தைகள் எவ்வளவு தூரம் தமிழ் பேசுகிறார்கள், தமிழ் படிக்க எவ்வளவு நேரம் ஒதுக்குகிறார்கள், நம் வம்சாவழியினருக்கு எவ்வளவு தூரம் தமிழ் புரிகிறது, பெற்றோர்களுடன் எவ்வளவு நேரம் தமிழில் பேசுகிறார்கள், பெற்றோர் பிள்ளைகளுடன் எப்படி உரையாடுகிறார்கள் போன்றவற்றை உடனிருந்து ஆராய்ந்து பாடத் திட்டங்களை வல்லுனர்கள் வகுத்து இருக்கிறார்கள். மேலும் பார்த்ததில் இலக்கணம் கற்பது மாணவர்களுக்குக் கடினமாக இருப்பது தெரிய வந்தது. சிங்கப்பூர்ப் புத்தகத்தில் இலக்கணம் தனியாக அல்லாமல் பாடத்துடன் சேர்த்து அழகாகக் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் விரும்பிப் படிக்கிறார்கள். இப்பாட நூலை உருவாக்கியவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரை நிகழ்த்த உள்ளனர். கே: அமெரிக்கா முழுவதும் ஒரே பாடத்திட்டத்தைக் கொண்டுவரும் முயற்சி இந்த மாநாட்டில் ஏற்படுமா? ப: கட்டாயம் சாத்தியமே. கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்தில் படித்துவிட்டு நியூ ஜெர்சிக்குப் போனால் வேறு பாடத்திட்டத்தைப் பின்பற்ற வேண்டியுள்ளது. இது தமிழ் படிக்கும் ஆர்வத்தைக் குறைக்கும். எங்கு சென்றாலும் ஒரேமாதிரிக் கல்வி இருந்தால் படிப்பைத் தொடருவது எளிதாகிவிடும். நம் குழந்தைகள் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். கே: இம்மாநாட்டில் யார், யார் கலந்து கொள்ளலாம்? கட்டணம் உண்டா? ப: இம்மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். கட்டணம் இல்லை. கடந்த பதிமூன்று ஆண்டுகளாக எங்களுக்கு ஒத்துழைப்பையும், உற்சாகத்தையும் கொடுத்த அனைவரும் இம்மாநாட்டிலும் கலந்து கொண்டு சிறப்பிக்கக் கேட்டுகொள்கிறோம். அமெரிக்கத் தமிழரின் முக்கிய நிகழ்ச்சிகளை எழுதுவதோடு பொதுமக்களுக்கு வேண்டிய செய்திகளைக் கொடுப்பதில் 'தென்றல்' முக்கியப் பங்கு வகிக்கிறது. எமது முயற்சிகளுக்கு ஆதரவளித்து, உற்சாகப்படுத்தும் தென்றல் பத்திரிக்கைக்கு இந்த நேரத்தில் எங்கள் பள்ளியின் சார்பில் மனமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறோம்.
"தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல் வேண்டும்" என்ற பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வர, இம்மாநாடு மிகப்பெரிய வெற்றியை அடையவும், வெற்றிச்செல்வி மேலும் பல சாதனைகள் புரியவும் தென்றலின் சார்பில் வாழ்த்தி விடைபெற்றோம்.
உரையாடல்: வடிவேல் ஏழுமலை உதவி: நித்யவதி சுந்தரேஷ் *****
புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 ஜூன் 8, 9, 10 தேதிகளில் சான்டா கிளாரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற உள்ளது. இம்மாநாடு குறித்த செய்திகள் www.tamilhl.org என்கிற வலைதளத்தில் காணக் கிடைக்கும். மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், தமிழறிஞர்கள் பங்கேற்கும் கருத்தரங்கு, ஆசிரியர்க்கான பயிற்சிப்பட்டறை, பிற மொழி வல்லுனர்களின் உரை, கண்கவர் கலைநிகழ்ச்சிகள் போன்றவை இடம்பெறும் இந்தப் பன்னாட்டு மாநாட்டிற்கு அனுமதி இலவசம்.
*****
CTA பெற்ற அங்கீகாரங்கள் ACS-WASC (The Accrediting Commission for Schools, Western Association of Schools and Colleges) என்பது பள்ளிக் கல்வியில் மேம்பட்ட தரத்தைக் கொண்டுவருவதற்கு உதவும் ஓர் அமைப்பாகும். அதன் தரநிர்ணயத்துக்கு ஏற்ப கல்விக்கூடம் இருக்குமென்றால் அதன் அங்கீகாரத்தைப் பெற முடியும். பள்ளியின் நிர்வாகம், பாடத்திட்டம், நிதிநிலைமை போன்ற அளவுகோல்களைக் கணக்கில் கொண்டு இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
CTAவின் துணைக் கல்வித் திட்டத்துக்கு (Supplementary Education System) 2012 பிப்ரவரி மாதம் மூன்றாண்டு அங்கீகாரம் தரப்பட்டது. கல்விக் கழகம் வழங்கும் சான்றிதழ்களிலும் அதன் வலையகத்திலும் WASCயின் இலச்சினையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். பொதுப்பள்ளி மாவட்டங்கள் இந்த அங்கீகாரத்துக்கு நல்ல மதிப்புத் தருகின்றன. |
மேலும் படங்களுக்கு |
|
More
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
|
|
|
|
|
|
|
|