Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | குறுநாவல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம் வாழ | சினிமா சினிமா | வாசகர் கடிதம் | Events Calendar | சாதனையாளர் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
நேர்காணல்
டாக்டர் பர்வீன் சுல்தானா
- அரவிந்த் சுவாமிநாதன்|ஏப்ரல் 2012||(2 Comments)
Share:
பேராசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், பெண்ணியவாதி எனப் பலவாறாக அறியப்படுபவர் முனைவர் பர்வீன் சுல்தானா. உலகெங்கும் பயணம் செய்து தமிழின் வளத்தை, சிறப்பை, பெருமையை, அழகை தமது பேச்சின் மூலம் நிலைநாட்டி வருகிறார். 'தமிழ்ப் புயல்' உட்படப் பல்வேறு பட்டங்களையும் கௌரவங்களையும் பெற்றவர். ஒரு மாலை நேரத்தில் அவர் பணிபுரியும் SIET கல்லூரியில் (நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி) சந்தித்து உரையாடினோம். அந்த உரையாடலில் இருந்து...

கே: தமிழார்வம் முகிழ்த்த காலத்தை நினைவு கூர முடியுமா?
ப: நான் பிறந்து வளர்ந்தது சென்னை மீர்சாகிப் பேட்டையில். பள்ளி, கல்லூரிப் படிப்பு எல்லாம் அங்குதான். வீட்டில் அனைவரும் உருது பேசுவார்கள். வீட்டுச் சூழலால் உருது மொழியும், எனது மார்க்கச் சூழலால் அரபியும், சமூகச் சூழலால் நானாகத் தேடிப் பெற்றுக் கொண்டதாக ஹிந்தியும் அமைந்தது. தமிழ்மீதான எனது ஆர்வம் இந்தச் சமூகத்திடமிருந்து நான் உள்வாங்கிக் கொண்டதுதான். இயல்பிலேயே இப்படிப் பல மொழிகளைக் கற்கும் சூழல் இருந்ததே மொழிமீதான எனது தேடலுக்கு விதை என்று சொல்லலாம். பெற்றோர் என் தமிழார்வத்துக்குத் துணையாக இருந்தனர். பள்ளி ஆசிரியர்கள் அந்த ஆர்வத்தை வளர்த்தனர்.

கே: பேச்சாளர் ஆனது எப்படி?
ப: இயல்பாகவே தமிழார்வத்தால் நிறைய நூல்களைத் தேடித் தேடிப் படிப்பேன். பள்ளியில் படிக்கும்போதே மேடை ஏறிவிட்டேன். அப்போதே 1500க்கு மேற்பட்ட மேடைகள் ஏறி, 500க்கும் மேற்பட்ட பரிசுகள் வாங்கியிருக்கிறேன். அக்காலத்து மேடை ஆளுமைகளின் திறன் என்னை மிகவும் கவர்ந்தது. நான் கல்லூரியில் படித்த காலத்தில் என்னை மிகவும் ஊக்குவித்தவர் பேரா. தி. ராசகோபாலன். பல நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைத்துச் சென்று என் திறமை வெளிவரக் காரணமாக இருந்தார். இன்று நான் இருக்கும் நிலைக்குக் காரணம் அன்று நான் ஏறிய அந்த மேடைகள்தாம். பல சமயங்களில், வெற்றி கொடுக்காத பாடங்களை, அனுபவங்களை சில தோல்விகள் எனக்குக் கொடுத்திருக்கின்றன. அவை எல்லாமே என் வளர்ச்சிக்கு உதவின. 15 வயதில் ஆரம்பித்த அந்தப் பயணம் 20, 22 வருடங்களாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கே: சங்க இலக்கியத்தில் ஆரம்பித்து, சிலம்பு, பாரதி, பெரிய புராணம், தேவாரம், திருவாசகம் எனப் பல நூல்களில் ஆழ்ந்த பயிற்சி பெற்றுள்ளீர்கள். எப்படிச் சாத்தியமானது?
ப: எனது தேடலும், ஆர்வமும், உழைப்பும் பயிற்சியும் ஒரு காரணம் என்றால் எனது குடும்பத்தினரின் உறுதுணை மற்றொரு காரணம். கலைத்துறை சார்ந்து நான் இயங்கி இருந்தால் நிச்சயம் எனது பயணத்தில் வேறுவிதமான எதிர்ப்புகளை நான் சந்திக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால் இலக்கியத்தையும், கல்வியையும் கைக்கொண்டதால் என் வீடும் சரி, என் சூழலும் சரி என்னைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தது. சில சமயம் எதிர்ப்பு வரலாம். வரும். ஆனால் எதிர்ப்புக்குத் தலைவணங்காமல், உடன்பாட்டு முறையில் அதனை எதிர்கொண்டு வெற்றிகொள்ள வேண்டும். அறிவுப்புலம் சார்ந்து இயங்கும்போது எதிர்ப்பு வந்தாலும் தேவையில்லாமல் அல்ல, நாம் தேவை என்பதால்தான் வருகிறது என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

கே: உங்களது இலக்கிய ஆர்வத்திற்கான தூண்டுதல் எது என்று சொல்வீர்கள்?
ப: எனக்கு எப்போதுமே வார்த்தைகளின் மீது மோகம் அதிகம். பாரதி சொல்வது போல் எழுத்து தெய்வம்; எழுதுகோல் தெய்வம்தான். குரானில்கூட இறைவன் முதன் முதலாகப் பேசிய வார்த்தை "இஹ்ரா" - 'ஓதுவீராக' என்பதுதான். 'ஆதியில் ஒரு சொல் இருந்தது' என்று பைபிள் சொல்கிறது. 'ஓம்' என்ற நாதம்தான் எல்லாம் என இந்து சமயம் சொல்கிறது. இப்படி ஓசையும், ஒலியும் பொருள் கொண்டதாக இருக்கும் போது, அந்த வார்த்தையின் மீதான பயணம், அதன் பொருளைத் தேடிச் செல்லும் பயணம் அலாதியான ஒன்றாகிறது. வாசிக்க வாசிக்க ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு முறையும் வேறு வேறு விளக்கத்தைக் கொடுக்கின்றது. கம்பராமாயணத்தை, பாரதியை, சிலம்பை, சீறாப் புராணத்தை, மணிமேகலையை, தேவார திருவாசகத்தை, சங்கப் பாடல்களை வாசிக்கும்போது அவை ஏதோ ஒன்றைச் சொல்கின்றன. அதனை எழுதியவர்கள் வெறும் எழுத்தை மட்டும் வீசிவிட்டுப் போகவில்லை. அவை மந்திரச் சொற்கள். அதன் உண்மையைக் கண்டறிவதற்காகவே நான் வாசிக்கிறேன். மேலும் வாசித்துக் கொண்டே இருக்கிறேன்.

கே: கம்பனில் ஆழமான பயிற்சி பெற்றிருக்கிறீர்கள்! கம்பன் உங்களைக் கவர்ந்தது எப்படி?
ப: கம்பன் மானிட நேயத்திற்குச் செய்தி சொன்ன மகாகவி. அவனது கவித்திறன் எப்போதும் என்னை வியக்க வைக்கிறது. கம்ப ராமாயணம் மிகப் பெரிய சொத்து. கடவுள் வாழ்த்தில் அவன் இப்படிச் சொல்கிறான்

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட் டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரணாங்களே

இந்தப் பாடலில்தான் எத்தனை வார்த்தைகள், எத்தனை பொருள்கள்? அலகு என்றால் என்ன? அலகிலா விளையாட்டு என்றால் என்ன? அப்படி விளையாடுகிறவனை ஏன் நாம் தலைவன் என்று சொல்லுகிறோம்? அவனை முழுமையாகச் சரணடைவது எப்படி? இப்படி எத்தனை கேள்விகள் பிறக்கின்றன ஒரு சிறு பாடலில்? 'உலகம் யாவையும்' என்றால் எத்தனை உலகங்கள் உள்ளன? இப்படிப் பல விசாரணைகளை, அகப் பயணங்களை, சிந்தனைகளைத் தூண்டுவதுதான் ஒரு நல்ல இலக்கியத்தின் அடையாளம். இலக்கியங்களில் நாம் கண்டெடுத்தவற்றைவிட கண்டடைய வேண்டியவை மிக அதிகம். அவற்றை நோக்கிய பயணம்தான் எனது தேடுதலாக இருக்கிறது.

கே: பல இலக்கிய ஜாம்பவான்கள் முன் பேசியிருக்கிறீர்கள் அல்லவா?
ப: ஆம். முதன்முதலில் என் பேச்சை வடிவமைத்தது என்றால் அது திரு. கீரன் அவர்களின் பேச்சுதான். குன்றக்குடி அடிகளார், வலம்புரி ஜான், ராதாகிருஷ்ணன் என்று என்னை பாதித்தவர்கள் பலர். பேரா. சாலமன் பாப்பையா, பேரா. அவ்வை நடராசன், சொல்வேந்தர் சுகி சிவம், சோ. சத்தியசீலன், தமிழருவி மணியன், பெரும்புலவர் ப. நமசிவாயம், பேரா. அப்துல் காதர், கவிக்கோ அப்துல் ரகுமான் போன்ற பலருக்குக் கீழே தாய்க்கோழியின் சிறகுகளுக்குள் பாதுகாப்பாக இருக்கும் குஞ்சுக்கோழி போல நான் வளர்ந்தேன். அவர்கள் எங்கெங்கிருந்தோ ஞானத்தையும், அறிவையும் கொண்டு வந்து எங்களுக்கு இரையாக ஊட்டியிருக்கிறார்கள். சாலமன் பாப்பையா ஒரு குழந்தையை வளர்த்தெடுப்பதுபோல என் ஆரம்ப காலத்தில் என் வளர்ச்சியில் அக்கறை காட்டினார். சன் தொலைக்காட்சியில் வந்தது எனக்கு நல்ல அறிமுகத்தைத் தந்தது. என்னைவிட எத்தனையோ புத்திசாலிகள், எத்தனையோ படிப்பாளிகள் இருந்தாலும், ஒரு குருவும், சரியாகக் கொண்டு செலுத்தக் கூடிய ஒரு மீடியாவும் அவர்களுக்குக் கிடைக்காததால்தான் இந்த உலகினால் அறியப் படாதவர்களாக இருக்கிறார்கள்.

கே: மறக்க முடியாத பட்டிமன்ற அனுபவங்கள்?
ப: செம்மொழி மாநாட்டில் 'உண்பது நாழி; உடுப்பவை இரண்டு' என்று பேசியது மறக்க முடியாது. மறக்கவே முடியாத பட்டிமன்றங்கள் என்றால் அது கம்பன் கழகப் பட்டிமன்றங்கள்தான். சென்னை, காரைக்குடி, மதுரை, பாண்டிச்சேரி, சேலம், திருப்பத்தூர், ராஜபாளையம், ராசிபுரம், புதுக்கோட்டை என்று கம்பன் கழக மேடைகளில் நான் பேசியதை ஒருநாளும் என்னால் மறக்க முடியாது. காரணம் என்னவென்றால், எந்த ஜனரஞ்சகமான விஷயங்களுக்கு உள்ளேயும் போகாமல், இலக்கிய வரம்புக்குள்ளேயே நின்று கொண்டு - கோர்ட்டுக்குள்ளேயே நின்றுகொண்டு பந்து விளையாடுவது போல - பேசக்கூடிய மன்றங்கள் அவை. இலக்கற்ற பிரயாணமாக அல்லாமல் கட்டுப்பாட்டுடன் கூடிய பயணத்துக்கு வித்திட்டவை கம்பன் கழகப் பட்டிமன்றங்கள்தான்.

"மலர்க்கரம் விதிர்ப்புற்றான்", "செல்லுயிர் நிமிர்த்திய செங்கோல்" இப்படித் தலைப்புகள் இருக்கும். சாதாரண மாநகராட்சிப் பள்ளியில் படித்து வந்த மாணவி நான். பெரிதாக இலக்கிய ஆழம் எல்லாம் எதுவும் இல்லை. ஆர்வமும் தேடலும் இருந்தன. பேச்சுப் போட்டிக்கோ, கட்டுரைப் போட்டிக்கோ, பட்டிமன்றத்திற்கோ செல்ல வேண்டும் என்றால் முன்னதாக ஏழு, எட்டு மணி நேரம் நூலகத்தில் செலவிடுவோம். ஏனென்றால் சொற்போர், சுழலும் சொல்லரங்கம் என்றால் ஏழெட்டு ஜாம்பவான்கள் சரமாரியாகக் கேள்வி கேட்பார்கள். பதில் சொல்ல வேண்டும். அதற்கு இலக்கியத்தில் நல்ல பயிற்சி வேண்டும். வளையாமல், எங்கும், எதற்கும் விலைபோகாமல், வார்த்தைகளை விற்காமல் இன்று ரௌத்ரத்துடன் நான் இருக்கிறேன் என்றால், அதற்கு அன்று அதுபோன்ற மேடைகளில், அவர்களிடையே பேசிப் பெற்ற பயிற்சிதான் காரணம்.
கே: இன்றைய பட்டிமன்றங்கள் வெட்டி மன்றங்களாக மாறிவிட்டன என்ற குற்றச்சாட்டு குறித்து உங்கள் கருத்தென்ன?
ப: ஆரோக்கியம், ஆரோக்கியமற்றது என்பதைத் தாண்டி இதை நான் எப்படி யோசிக்கிறேன் என்றால் இவை மனமகிழ்ச்சிக்கான நிகழ்ச்சிகள் என்று. ஆனால் நகைச்சுவை என்பது மனமகிழ்ச்சிக்கான விடயமாக எப்போது கொள்ளப்படுகிறதோ அப்போதே அது வீழ்ந்து போகிறது. சிந்தனையை உள்வைத்த நகைச்சுவை மன்றங்கள் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட பேச்சாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நகைச்சுவையின் வாயிலாகச் சிந்தனையைச் சொல்வதும் ஒரு காலத்திலும் பிழையாகாது. ஆனால் humor வேறு, comedy வேறு. உடல்மொழியாலும், குரல் ஏற்ற இறக்கத்தாலும் செய்வது காமெடி. ஆனால், ஹ்யூமர் என்பது நினைத்து நினைத்துச் சிரிக்க வைப்பது. அந்தச் சிரிப்புக்கு ஊடாக நம்மைச் செதுக்குகின்ற சிந்தனையாளர்கள் இன்றும் உள்ளனர். பெரும்புலவர் ப. நமசிவாயம், அறிவொளி, பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் போன்றோரெல்லாம் சிரிக்க மட்டுமல்ல, சிந்திக்கவும் வைப்பவர்கள். ஆனால் இன்று நகைச்சுவைக் கலையே தெரியாமல் பலர் பேச வருகிறார்கள். அதுதான் இந்தக் குற்றச்சாட்டுக்குக் காரணம். இந்த அவப்பெயர் நீங்க வேண்டுமென்றால், நிகழ்ச்சி நடத்துபவர்கள், ஸ்பான்ஸர்கள், சிந்தனைக்கு உதவாத வெற்று நிகழ்ச்சிகளுக்கு இடங்கொடுக்க மாட்டோம் என்று முடிவெடுக்க வேண்டும். ஆனால் இதில் புரவலர்களையும் மீறி மக்கள் விருப்பம் என்ற ஒன்று இருக்கிறது. பொழுதுபோக்கு என்பதற்காக மக்கள் இவற்றை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள். மக்கள் ரசனை என்பதற்காக அல்லாமல் சிந்தனாபூர்வமாக இதை அணுகினால் நிச்சயம் மாற்றம் வரும். அப்படிச் செய்தால்தான், இந்த நிலை மாறும். இதனை நான் ஒரு கோரிக்கையாகவே இங்கு வைக்கிறேன்.

கே: ஒரு பேராசிரியராக இன்றைய கல்வி முறை குறித்தும், அதில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் என்பது குறித்தும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ப: மெக்காலே தந்துவிட்டுப் போனது தற்போதைய கல்விமுறை. இந்தக் கல்விமுறை மீது எனக்கு எப்போதுமே கேள்விகள் உண்டு. இது கூலியாளர்களை உருவாக்குகின்ற கல்விமுறை. கல்வியாளர்கள் பாடத் திட்டங்களை உருவாக்காமல், அதிகார வர்க்கத்தினர் பாடத்திட்டங்களை வகுக்கக் கூடிய சூழல் இருக்கிறது. இன்றைக்கு வரலாற்றை அதிகார வர்க்கத்தினர் நிர்ணயிக்கின்றார்களே தவிர, ஆய்வாளர்கள் நிர்ணயிப்பதில்லை. இதனால் பாதிக்கப்படுவது தமிழ்ச் சமுதாயம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியச் சமுதாயமேதான். இப்போது சமச்சீர் கல்விமுறை வந்திருக்கிறது. அது மகிழ்ச்சிக்குரியதுதான் என்றாலும், அதற்குப் பின்னால் உள்ள சவால்கள் என்னை பிரமிக்க வைக்கிறது. கல்வியாளர் மாடசாமி சார் என்னிடம் சொன்னார்: நான்காம் வகுப்புக்குத் திருக்குறளில் இல்லறத்தைப் பாடமாக வைத்திருக்கிறார்கள்; ஐந்தாம் வகுப்புக்கு துறவறத்தைப் பாடமாக வைத்துள்ளார்கள். ஒரு மாணவன் திருக்குறளை எப்படிப் படிப்பான்? ஒரு குழந்தைக்கு நாம் என்ன சொல்லித்தர வேண்டும்? இதெல்லாம் நம்முன் இருக்கும் கேள்விகள்.

"What is education? It is not academic excellence. It is human excellence" என்கிறார் விவேகானந்தர். நமது கல்விமுறையில் Human excellence எங்கே இருக்கிறது? மனிதவளம் மிகுந்த நாடு நம் நாடு. ஆனால் கல்வித்துறையில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. அதில் மிகப் பெரிய மாற்றம் வேண்டும் என்பது. மற்றொன்று, மாணவர்களுக்கு ஆசிரியர்களின் மீது நம்பிக்கையும் மரியாதையும் வேண்டும். அது இன்று இல்லை. இவளுக்கென்ன தெரியும், அவருக்கென்ன தெரியும் என்ற போக்கு வந்துவிட்டது. என் பெற்றோர்கள், ஆசிரியரின் காலில் விழுந்து வணங்கச் சொன்னார்கள். இன்றைய பெற்றோர்களுக்கு ஆசிரியரின் மீது மதிப்பும், நம்பிக்கையும் வரவேண்டும். அந்த நம்பிக்கையும், மரியாதையும், இல்லாத தகுதியைக்கூடத் தேடிப்போகும் முனைப்பை ஆசிரியருக்கு ஏற்படுத்தக் கூடும். தன் வீட்டில், தன் குழந்தைகளுக்கு முன்னாலேயே பெற்றோர்கள் ஆசிரியர்களைக் கேவலமாகப் பேசினால், அப்புறம் மாணவர்களுக்கு எப்படி ஆசிரியர்மீது மரியாதை வரும்?

கே: கடல் கடந்த பயணங்கள் பற்றிச் சொல்லுங்கள்...
ப: அமெரிக்காவுக்கு மூன்று முறை சென்றிருக்கிறேன். ஐரோப்பா, பாரிஸ், துபாய், பாங்காக், அரேபியா, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை என்று பல நாடுகளுக்குப் பலமுறை சென்றிருக்கிறேன். அங்கே கேளிக்கைகளுக்கு முன்னுரிமை தரும் மக்கள் அதிகம் இருந்தாலும், 60-70 சதவிகிதத்தினர் அறிவுத் தாகத்தோடு, தாய்மொழித் தாகத்தோடுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த தாகத்தைத் தணிக்கும் சரியான ஆள் வந்துவிட்டால் கண்களில் நீர் சொரிய, உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமல், கவனம் சிதறாமல் அதைக் கேட்டு மகிழ்கின்றனர். பட்டுப் புடவை, வேஷ்டி, குத்து விளக்கு, வாழையிலை உணவு என்று தமிழ்ப் பண்பாடு, கலாசாரத்தோடு மகிழ்ச்சியோடு அந்த விழாக்களைக் கொண்டாடுவதைப் பார்க்கிறேன்.

மலேசியாவில் ஒரு சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டும் தொழிலாளி. கண்களில் நீர் வழிய என் நிகழ்ச்சியைக் கேட்டுவிட்டு, "குழந்தைல அப்பா, அம்மா மடில படுத்துக்கிட்டு கேட்ட மாதிரி இருந்திச்சிங்க" என்று சொன்னார்; அதைவிட வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்? "என் குழந்தைங்க கிட்ட இன்னிலேர்ந்து வேற மாதிரியா பழகுவேங்க" என்று அவர் சொன்னது எனக்கு மனநிறைவைத் தந்தது. சவூதி அரேபியா, துபாய் போன்ற இடங்களில் பாலைவனத்தில், வெயிலில் உழைக்கும் மக்கள், கேளிக்கையைத்தான் விரும்பி வருவார்கள். ஆனால் அவர்கள்கூட இலக்கியத்தை விரும்பி வருகிறார்கள். குவைத்தில், வீட்டு வேலை செய்பவர்கள், வண்டி ஓட்டுகின்ற சாரதிகள் சேர்ந்து தமிழோசை என்றதொரு அமைப்பை வைத்திருக்கிறார்கள். அவர்கள் நடத்தும் விழாவுக்கு நான் இரண்டாண்டுகள் சென்றிருக்கிறேன். ஆட்டோ ஓட்டுகிறவர்கள்தானே, இவர்களுக்கென்ன தெரியும் என்று நாம் நினைப்போம். ஆனால் அவர்களுக்கு இருக்கும் கலைத்துவமும், கவித்துவமும், இலக்கிய ஆர்வமும், அறிவுத் தேடலும், தாய்மொழித் தாகமும் என்னை வியக்க வைக்கின்றன. நம் முன்னால் இருப்பவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். அதற்கேற்ப, மேலும் புத்தியைத் தரக்கூடிய பயணங்களைச் செய்வதும், அதனைத் தூண்டுவதும் என்னைப் போன்றவர்களது பணியாக இருக்கிறது.

குறிப்பாக FeTNA விழாவுக்கு அறிவுத் தாகத்தோடு, புத்துணர்ச்சியோடு கூட்டமாக மக்கள் வந்திருந்தார்கள். இங்கிருந்து சென்று அதைத் தங்கள் சொந்த மண்ணாக நினைத்து உழைப்பால், ஆற்றலால் அந்த மண்ணையும் உயர்த்தும் அவர்களைச் சந்திப்பது எனக்கு ஒரு பெரும்பேறுதான். அந்த வாய்ப்பைக் கொடுத்ததற்காக இறைவனுக்கு எப்போதும் என் நன்றி உண்டு.

கே: உங்கள் இலக்கியப் பயணத்தின் நோக்கம் என்ன?
ப: என் பயணத்திற்கான தேடல் என்னவென்றால் ஏற்கனவே இருந்த பல சொற்களை, பல ரகசியங்களை நாம் தொலைத்துவிட்டோம். உண்மையைச் சொல்லப் போனால் பொக்கிஷத்தை நாம் தொலைத்துவிட்டோம். ஆனால் அதன் சாவியை மட்டும் கையில் வைத்துக் கொண்டிருக்கிறோம். இது எதையாவது திறக்குமா, திறக்குமா என்ற ஆசையோடு அலைந்து கொண்டே இருக்கிறோம். நான் என்ன சொல்கிறேன் என்றால், இன்றைக்கு, இந்தச் சமுதாயத்திற்குத் தேவையான விஷயங்கள் அனைத்துமே கம்பராமாயணம், சிலப்பதிகாரம், சீறாப்புராணம், தேவாரம், திருவாசகத்தில் இருக்கின்றன. அவை வெறும் பழங்கால இலக்கியங்கள் அல்ல. இந்தக் காலத்துக்கும் அவை பொருந்தும். ஆனால் காலம் மாற மாற, இளைஞர்களுடைய தேடலும், புரிதலும் மாறிப் போய்விடுகிறது. அவர்களுக்கு ஏற்றாற்போல் இலக்கியத்தை நாம் கொண்டு செல்லவில்லை. நமது மூதாதையர் விட்டுச் சென்றுள்ள பொக்கிஷங்களில் தேடித் தேடி, எங்கேயாவது ஒரு முத்துமாலை, ஓர் அட்டிகை கிடைத்து விடாதா? அதை அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துவிட்டுப் போவோமே என்ற ஆவலும், தேடுதலுமே என் இலக்கியப் பயணத்தின் நோக்கம்.

கே: உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள்?
ப: மௌனியை மிகவும் பிடிக்கும். கவிதையில் கல்யாண்ஜி. நவீன எழுத்துக்களில் தமிழ்ச்செல்வன், அழகிய பெரியவன், பிரான்சிஸ் க்ருபா, கண்மணி குணசேகரன், ஜோடி க்ரூஸ், பவா. செல்லதுரை என எல்லோருமே நன்றாக எழுதுகிறார்கள். எஸ்.ரா., ஜெயமோகன் என நவீன எழுத்துக்கள் எங்கிருந்தாலும் தேடிப் படிப்பேன். மொழிபெயர்ப்பு நூல்களில் எனக்கு ஆர்வம் அதிகம். சமீபத்தில் ஜெயமோகனின் அறம் படித்தேன். சிறப்பான படைப்பு. கொற்றவை, காடு, ரப்பர் இதெல்லாம் வாசிக்கவே சுகமாக இருக்கும். 'ஏழாம் உலகம்' மாறுபட்ட ஒரு உலகைப் படம் பிடித்துக் காட்டும். ஆதவனின் 'என் பெயர் ராமசேஷன்' என்னை மிகவும் கவர்ந்தது. இன்றைய இளைஞர்களுக்கு மிக அடிப்படையான தேவையாக நான் நினைப்பது, தேர்வு தவிர்த்த, வகுப்பறையைக் கடந்த வாசிப்பு அதிகமாக வேண்டும் என்பதுதான்.

கே: தற்போதைய இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சி குறித்து உங்கள் கருத்தென்ன? அதற்கு நீங்கள் ஆற்றி வரும் பணிகள் குறித்துச் சொல்லுங்கள்...
ப: "இன்பத் தமிழ் மொழி எங்கள் மொழி. இஸ்லாம் எங்கள் வழி" என்பதுதான் இஸ்லாமியர்களின் தாரக மந்திரம். தமிழையும் அவர்களையும் பிரித்துவிட முடியாது. இஸ்லாமியர்கள் எப்போதுமே தமிழ் மொழியின்பால் அதீத ஆர்வம் கொண்டவர்கள். இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் உலகம் முழுக்க ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச மாநாடு நடத்தி வருகிறது. சமீபத்தில் மலேசியாவில் நடந்தது. என்னுடைய முனைவர் பட்ட ஆய்வே இஸ்லாமிய போர்க்கதைப் பாடல்கள் தான். நானும் இஸ்லாமிய மக்கள் வாழ்வியல் குறித்து ஆராய்ந்து சில ஆய்வு நூல்களை எழுதியிருக்கிறேன். சமீபத்தில் தக்கலையில் ஒரு மாநாடு நடந்தது. தற்கால இலக்கியங்களில் இஸ்லாமிய மக்களின் வாழ்வியல் பதிவுகள் குறித்த மாநாடு அது. இஸ்லாமியப் பெண்கள் பதிவுகள் குறித்து நான் அதில் பேசினேன். சல்மாவின் 'இரண்டாம் ஜாமங்களின் கதை', கீரனூர் ஜாகிர் ராஜாவின் 'மீன்காரத் தெரு', அன்வர் பாலசிங்கத்தின் 'கருப்பாயி எனும் நூர்ஜஹான்' குறித்துப் பேசினேன். இந்நூல்கள் ஆழமான பல விசாரணைகளை முன்வைக்கின்றன. தற்போது இஸ்லாமியர்களின் வாழ்க்கைப் பதிவுகளை எழுதும் இஸ்லாமிய எழுத்தாளர்கள் பலர் வந்துவிட்டனர். இஸ்லாமிய மக்களின் வாழ்வியல் செய்திகளை நவீன இலக்கியத்தில் பதிவு செய்யும் போக்கு முன்பைவிடத் தற்போது கூடுதலாகவே இருக்கிறது. பத்திரிகைகள் நடத்துகிறார்கள்; கவிதை, கட்டுரை, தொடர்கள் எழுதுகிறார்கள். எழுத்துக்கும் அவர்களுக்குமான பிணைப்பு எப்போதுமே உண்டு. தற்போது அது வேறு விதத்தில் அதிகரித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நான்கூட 'மீர்சாகிப் பேட்டை' என்ற நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் வெளியாகும்.

கே: கம்பனில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்த நீதிபதி மு.மு. இஸ்மாயில் அவர்களை உங்களுக்கு முன்மாதிரி என்று சொல்லலாமா?
ப: நிச்சயமாக. கம்பனைப் பொறுத்தவரை அவர் எனக்கு ஒரு வழிகாட்டி. அவர் ஒருமுறை என்னிடம் சொன்னார், "பெண்கள் நம் சமூகத்தில முன்னுக்கு வருவது ரொம்ப கஷ்டமா இருக்கும்மா. நீ இந்தச் சமூகத்துக்கு ஒரு முன்மாதிரியா இருப்பேன்னு நான் நம்பறேன். என்னுடைய ஆசியும், என்னுடைய வழிகாட்டுதலும் உனக்கு எப்போதும் உண்டு" என்று என் தலையில கை வைத்துச் சொன்னார். அப்போது அவர் கம்பன் கழகத்தின் தலைவராக இருந்தார். சுமார் 20 நிமிடங்கள் என்னைக் குறித்து அவர் மேடையில் பேசினார். அவருடைய வாரிசு என்று சொல்லப்படும் அந்தத் தகுதியை நான் முழுமையாகப் பெற வேண்டும். அதற்கான வல்லமையையும், வலுவையும், தேடலையும் இறைவன் எனக்குள் ஆத்ம பலமாய்த் தர வேண்டும் என்பது என் பிரார்த்தனை.

கே: உங்களைக் கவர்ந்த பேச்சாளர்கள் யார், யார்?
ப: தமிழருவி மணியன், சாலமன் பாப்பையா, சுகி சிவம், சுதா சேஷய்யன், இளம்பிறை மணிமாறன், சேலம் ருக்மிணி, கு. ஞானசம்பந்தன், நெல்லை கண்ணன், பாரதி பாஸ்கர், த. ராமலிங்கம், நீதிபதி ராமசுப்ரமணியம், இலங்கை ஜெயராஜ் எனப் பலரது பேச்சுக்களைச் சொல்லலாம். இவர்கள் எல்லாம் ஒரு பிரவாகம். தற்போது லயோலா கல்லூரியிலிருந்து சாரோன் என்று ஒருவர் பேசுகிறார். அவ்வளவு அற்புதமாகப் பேசுகிறார். அதுபோல திருவாரூர் சண்முக வடிவேலின் பேச்சு மிகச் சிறப்பாக இருக்கும். லியோனி ஐயாவின் கிண்டலும், கேலியும், எள்ளலும் அற்ற முழுமையான பேச்சை நான் கேட்டிருக்கிறேன். அது எவ்வளவு அலாதியானது தெரியுமா? காலம் அவரிடமிருந்து தற்போது வேறொன்றை எதிர்பார்க்கிறது. கு. ஞானசம்பந்தம் நகைச்சுவைப் பேச்சாளர் என்பதைக் கடந்து மிக ஆழமான ஆய்வாளர். பாரதி கிருஷ்ணகுமாரின் பேச்சு; கருத்த ராவுத்தர் கல்லூரியில் இருந்து அப்துல் சமது என்பவர் பேசுகிறார். சிறப்பான ஆளுமை உடையவர். "தமிழ்ப் பேச்சு; எங்கள் மூச்சு" என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன். குட்டிக் குட்டி குழந்தைகள் எல்லாம் வந்து பேசினார்கள். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மணி. கணேஷ், கார்த்திகேன், வித்யா, லக்ஷ்மி, மணி பாலா, யாழினி என்று அவர்கள் பேச்சை நான் மிகவும் மன மகிழ்ச்சியோடு ஆத்மார்த்தமாக ரசித்துக் கேட்டேன்.

கே: எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?
ப: நிறைய இருக்கின்றன. என் குரல் என்றைக்காவது ஒருநாள் பாராளுமன்றத்தில் ஒலித்தே ஆக வேண்டும் என்ற உறுதிப்பாடு எனக்கு உண்டு. என் வாழ்க்கைப் பயணத்தில் நான் ஒருமுறை சந்தித்தவர்களை மறுபடியும் சந்தித்துவிட வேண்டும் என்ற அவா எனக்கு உண்டு. "மனிதரைக் கடந்து போகாதே; கற்றுக் கொண்டு கடந்து போ" என்று என் அப்பா சொல்லியிருக்கிறார். எனக்குத் தேடல் மிக அதிகமாக இருப்பதால் நான் காணும் காட்சிகள் எல்லாமே எனக்கு குருவாகத் தெரிகின்றன. அடுத்தவர்களைக் காயப்படுத்துவதிலோ, தோற்கடிப்பதிலோ எனக்கு உடன்பாடு கிடையாது. என் உச்சத்தை நான் அடைவதுதான் என் இலக்கே தவிர, அடுத்தவர்கள் உச்சத்தை அளந்து பார்த்துக் கொண்டிருப்பதோ, அதை அடைய முயற்சி செய்வதோ அல்ல. நான் வெறும் பட்டிமண்டபச் பேச்சாளர் மட்டுமல்ல. நான் ஒரு தனிச் சொற்பொழிவாளர். தன் முனைப்புப் பேச்சாளர். சமூக ஆர்வத்தோடு கல்விப்புலத்தில், அறிவுப்புலத்தில் இயங்குபவள். பெண் விடுதலைக்காக, ஜாதி விடுதலைக்காக, குழந்தைகளின் கல்வி விடுதலைக்காகப் பேசக்கூடிய விசாலமான ஒரு பிரயாணம் என்னுடையது. என்னுடைய பயணத்தில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட இனக்குழு மக்களுக்கான வாழ்வியல் வளர்ச்சிக்காக ஒரு துரும்பேனும் செய்ய முடிந்திருந்தால் அதுவே எனக்குப் பெரும் நிறைவு தரக் கூடியதாய் இருக்கும். என்னுடைய சுயத்தையும், எனது அறிவையும் அவர்களது உயர்வுக்காகப் பயன்படுத்துவதில் எனக்கு அலாதியான விருப்பம் உண்டு. ஏனென்றால் நானும் அந்த நிலையிலிருந்துதான் வந்திருக்கிறேன்.

சொற்பொழிவுகளில் பேசுவது போலவே அனலும் கனலும் பொங்க வீரியத்துடன் பேசுகிறார் பர்வீன் சுல்தானா. "இந்தத் துறை வாழ வேண்டுமென்றால் என்னை விட நன்றாகப் பேசுபவர்கள் இருக்க வேண்டும். அவர்களைவிட நான் நன்றாகப் பேச வேண்டும். என்னை நானே ஒவ்வொரு மேடையிலும் வென்றுகொண்டே போக வேண்டும்" என்கிறார் கண்கள் மின்ன. அவரது எண்ணங்கள் ஈடேற வாழ்த்தி விடை பெற்றோம்.

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்

ஆண்பால்? பெண்பால்? ஆவின் பால்!
பாண்டிச்சேரி கம்பன் கழகத்தில் நடந்த ஒரு சுழலும் சொல்லரங்க மேடையில் எனக்கு தெ. ஞானசுந்தரம் அவர்களிடமிருந்து ஒரு கேள்வி வந்தது.

ஆண்பாலோ? பெண்பாலோ?
அப்பாலோ? எப்பாலோ?

என்று கவந்தன், இராமனை வியப்பதாக வரும் பாடலில் "ஆண்பால், பெண் பால் சரி. எது என்ன அப்பால்?" என்று கேட்டார் அவர்.

நான் அப்போது சிறுபெண். 17-18 வயது இருக்கும். அவை முழுவதும் நடுவர் கைக்குப் போய்விட்டது. நான் சொல்லும் பதிலால் அவையினரின் கவனத்தை என்மீது திருப்ப வேண்டும். அதே சமயம் அது சரியானதாகவும் இருக்க வேண்டும். நான் பேசினேன். "அப்பாலோ, எப்பாலோன்னா அது என்ன ஆவின் பாலா?" என்றதும் அவை கலகலத்தது. "கவந்தன் இராமனை வியக்கிறான். 'இவன் ஆணாக இருக்கின்றானா, பெண்ணாக இருக்கின்றானா அல்லது அவை இரண்டும் கடந்து அப்பாலாக இருக்கிறான் என்றால், எப்பாலாக இருக்கிறான்?' என்று அவன் வியக்கிறான். நடுவர் அவர்களே, சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன்மணீயத்தில் காதலனை வியந்து, காதலி 'ஒப்புயானெப்படிச் செப்புவன்? அம்மா' என்று கேட்டு, ஒப்புமையே இல்லாதவன் என்று வியப்பதைப் போல, கவந்தன் இராமனின் ஒப்புமையே இல்லாத திறனைக் கண்டு வியந்து அப்படிப் பேசுகிறான் என்று நான் பேசியதும், இவள் இலக்கியத்தை வாசித்திருக்கிறாள், அதனால் அங்கிருந்து இங்கிருந்து எடுத்து ஒப்பு நோக்கிப் பேசுகிறாள் என்பதை உணர்ந்து பார்வையாளர்கள் எழுந்து நின்று கை தட்டினர்.

பர்வீன் சுல்தானா

*****


வட்டில் அப்பம்
நான் கம்பன் விழாவுக்காக ஒருமுறை இலங்கைக்குப் போயிருந்தேன். பேசி முடித்து விட்டு மேடையிலிருந்து இறங்கியதும் ஒருவர் வந்து என்னைச் சந்தித்தார். நாளை மாலையும் நிகழ்ச்சி இருக்கிறதா என்று கேட்டார். நானும் ஆம் என்றேன். சரி, நாளை மாலை உங்களைச் சந்திக்கிறேன். எனது குடும்பத்தினரையும் அழைத்து வருகிறேன் என்றார். மறுநாள் நிகழ்ச்சிக்கு வந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் குடும்பத்தினரை அறிமுகப்படுத்தினார். கையில் ஒரு பெரிய பானையை வைத்திருந்தார். "இது உங்களுக்கு" என்று சொல்லிக் கையில் கொடுத்துவிட்டார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பானையை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று குழம்பி அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், "இல்லீங்க. நேத்து நீங்க பேசுனதைக் கேட்டு நாங்க ரொம்ப மகிழ்ச்சியா இருந்தோம். இரவு முழுதும் தூங்கலை. இப்படிப்பட்ட தமிழா, அதை இப்படியெல்லாம் பேச முடியுமான்னு ராத்திரி முழுக்க பேசிக்கிட்டு இருந்தோம். உங்களுக்கு ஏதாவது கொடுக்க முடிவு பண்ணினோம். ஆனா, எந்தப் பொருளை நாங்க வாங்கிக் கொடுத்தாலும் அதை உங்களாலயும் காசு கொடுத்து வாங்கிக்க முடியும். அதுனால உங்களால விலை கொடுத்து வாங்க முடியாத ஒரு பொருளைக் கொடுக்க முடிவு பண்ணினோம். என் குடும்பமே இரவு முழுக்க விழித்திருந்து, தேங்காய்ப் பாலை பிழிந்து 'வட்டில் அப்பம்' செஞ்சோம். இதை நீங்க, உங்க விருந்தின நண்பர்களோட சாப்பிடணும். இதுல எங்க குடும்பத்தோட அன்பும், உழைப்பும், பாசமும் கலந்திருக்கு. இதை வேற எங்கயும் நீங்க விலை கொடுத்து வாங்க முடியாது. இது உங்களுக்கே உங்களுக்காக நாங்க செஞ்சது. நீங்க ஏத்துக்கணும்" என்று சொன்னார். நான் மிகவும் நெகிழ்ந்து போய் விட்டேன். இதற்கு முன்னால் எத்தனை கோடிப் பணமும் ஒன்றுமே கிடையாது அல்லவா?.

பர்வீன் சுல்தானா

*****


'கொலவெறி' பாடங்கள்
'கொலவெறி' என்று ஒரு பாட்டு. எல்லோரும் அதைப் பற்றிப் பேசினார்கள். அதைப் பற்றிப் பேசுவதற்கென்றே ஒரு லாபி ஆகிவிட்டது. அதைப்பற்றி பேசுவதே கூட எனக்குக் கூச்சமாக இருக்கிறது. விரல்களில் பேனா பிடித்து எழுதத் தெரியாத குழந்தைகள் இன்று உதடுகளில் அந்தப் பாடல் வரிகளை உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். அது வெறும் வார்த்தைகளோ இசையோ அல்ல. 'உடம்பெல்லாம் ஒயிட். ஹார்ட் ப்ளாக்' என்று வரும் வேகமான அந்த வார்த்தைகள், ஒரு பிஞ்சு மனதில் அவர்கள் அறியாமலேயே எந்த வெள்ளை நிறப் பெண்களின் இதயம் இப்படி கருமை படர்ந்ததாக இருக்கும் என்றுதான் பதியும். மலர்ச்சியாக இருந்த ஒரு விஷயம் போய், இன்று அதற்குள் ஏதோ இருக்கிறது என்று பார்க்கும் அளவுக்கு நிலைமை வந்து விட்டது. இது ஆரோக்கியமானதா?

"படிச்சா பாடம் ஏறலை; குடிச்சா போதை ஏறுது" என்று பாடும் ஒரு குழந்தை என்ன யோசிப்பான்? படிப்பதும், போதை ஏறுவதும் ஒன்றா? இது சமுதாயச் சீர்கேடான விஷயம் இல்லையா? நம்முடைய கல்வித் துறையிலேயே பல விஷ கலாசாரங்கள் உள்ளே வந்துவிட்டன. ஒரே ஒரு வார்த்தையால் ஒருவனை முழுவதும் தூங்க விடாமல் செய்துவிட முடியும். ஒற்றைச் சொல்லால் வாழ்க்கையையே பறித்துக் கொண்டு போய்விட முடியும். அந்த அளவுக்குச் சொற்கள் வீரியமிக்கவை. அவைதான் மந்திரங்கள். அந்த வார்த்தைகளை எவ்வளவு கவனமாக நாம் பேச வேண்டும்? குழந்தைகள் இன்றைக்கு அப்படி கவனமாகப் பேசுகிறார்களா? பாடப் புத்தகங்களில் வரும் வார்த்தைகள் அப்படி கவனமாக இருக்கிறதா? எம்ஜியார் பாடிய பாட்டு என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடலை எழுதி வைத்திருக்கிறார்கள், ஏழாம் வகுப்பு பாடப் புத்தகத்தில். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் எப்படி எம்ஜியாரின் பாடலாக முடியும்? பத்து, பதினைந்து வருடங்களாக எகனாமிக்ஸ் பாடப் புத்தகத்தை மாற்றாமல் இருக்கிறார்கள். அப்புறம் எப்படி மாணவனுக்கு பொருளாதாரம் பற்றிய அறிவு வளரும்? இந்த வகுப்புப் பாடத் திட்டத்தில் மந்தரை சூழ்ச்சிப் படலமா? சரி, அடுத்த வகுப்புக்கு இராவணன் வீழ்ச்சிப் படலத்தை வை. இப்படித்தான் இருக்கிறது இன்றைய பாடப் புத்தகங்கள். படிப்பு என்பது இவ்வளவுதானா?

பர்வீன் சுல்தானா
மேலும் படங்களுக்கு
Share: 




© Copyright 2020 Tamilonline