Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
நேர்காணல்
கவனகர் கலை. செழியன்
பேராசிரியர் ஸ்ரீனிவாச வரதன்
- முனைவர் ஸ்ரீனிவாசன் பாலாஜி|ஜூலை 2012||(1 Comment)
Share:
உலகெங்கிலுமுள்ள இந்தியர்களை, குறிப்பாகத் தமிழர்களை, பெருமையடையச் செய்த சிறப்பு மிகச் சிலரையே சாரும். இந்தியாவின் தலைசிறந்த விருதான பத்மபூஷண், நோபெல் பரிசுக்கு இணையான ஏபல் விருது மற்றும் அமெரிக்காவின் மிக உயர்ந்த ‘தேசிய அறிவியல் பதக்கம்’ (National Medal of Science) உட்படப் பல விருதுகளைப் பெற்றவர் பேராசிரியர் ஸ்ரீனிவாச வரதன். 9/11 தீவிரவாதத் தாக்குதலில் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் தரைமட்டமானபோது அதில் தன் மூத்த மகன் கோபாலைப் பறிகொடுத்த பின்னும் அந்தத் துயரத்திலேயே மூழ்கிவிடாமல் சாதனைகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர். எளிமையானவர். அவர் நியூ யார்க் பல்கலைக்கழகத்தின் கூரண்ட் கணித அறிவியல் நிறுவனத்தில் (Courant Institute of Mathematical Sciences) பேராசிரியராகக் கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களாகப் பணிபுரிகிறார். எல்லோராலும் ரகு என்று அன்போடு அழைக்கப்படும் ஸ்ரீனிவாச வரதனைத் தென்றல் இதழுக்காகச் சந்தித்தோம். அவருடனான 20 ஆண்டுக்காலப் பரிச்சயத்தின் பரிசாக இதனைக் கருதுகிறேன். பல முனைவர்களையும் பேராசிரியர்களையும் உருவாக்கியவர். தான் வந்த பாதையை நம்மோடு இங்கே பகிர்ந்து கொள்கிறார் பேரா. வரதன்....

*****


பாலாஜி: உங்களுக்குக் கணித ஆர்வம் வந்தது எப்படி?
வரதன்: கணிதம் என்பது கூட்டல், கழித்தல், வகுத்தல் மட்டுமல்ல. தர்க்க ரீதியான சிந்தனை (logical thinking), நுண்சிந்தனை (abstract thinking), காரணம் காணும் திறமை (ability to reason) என்று பல திறமைகளை உள்ளடக்கியது கணிதத்திறமை. சிறுவயது முதலே சதுரங்கம் விளையாடுவதில் ஆர்வம் கொண்டிருந்தேன். என்னுடைய தாயார் என்னை ஊக்குவித்ததோடு என்னுடன் விளையாடவும் செய்வார். நான் ஓரளவுக்கு நன்றாகவே விளையாடுவேன். என்னுடைய நான்கு வயதிலிருந்து நான் விளையாடுவதால் அது ஓரளவுக்கு என் நுண்ணறிவை வளர்க்க உதவியது. மேலும் நான் கணிதப் பாடத்தில் நல்ல புரிதலுடைய மாணவனாக இருந்தேன். அது பிற பாடங்களை விட எனக்கு எளிதாக இருந்தது.

கே: உங்களது கல்வி வளர்ச்சியில் தந்தையாரின் பங்கு என்னவாக இருந்தது?
ப: என் தந்தை உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர். என் பெரும்பாலான பள்ளிப்பருவம் சென்னையை அடுத்த பொன்னேரியில் கழிந்தது. என் தந்தை அறிவியல் மற்றும் ஆங்கிலம் கற்பிப்பார். அவர் வீட்டில் சொல்லிக் கொடுப்பதோடு சரி. பள்ளியில் அவர் எனக்கு ஆசிரியராய் ஒன்றிரண்டு வருடங்கள்தான் இருந்திருக்கிறார். தலைமையாசிரியர் என்பதால் பாடம் சொல்லித்தரும் வேலை அவருக்கு அவ்வளவாக இல்லை.

கே: உயர்நிலைப்பள்ளியில் வேறு ஆசிரியர் யாரேனும் உங்களுக்கு உதவிகரமாக இருந்தார்களா?
ப: உயர்நிலைப்பள்ளியில் எனக்கு ஒரு நல்ல கணித ஆசிரியர் வாய்த்தார். அவர் பல விதங்களில் எங்களுக்கு உதவிகரமாக இருந்தார். குறிப்பாக முன்னணியில் உள்ள மாணவர்களை அவர் வீட்டிற்கு வரவழைத்து உயர்நிலை கணிதத்தில் பயிற்சி கொடுத்தார். குறிப்பாக யூக்ளிடின் முக்கோணவியல் (Euclidean Geometry) தர்க்கரீதியாக சிந்தனையை வளர்க்கப் பெரிதும் உதவியாக இருந்தது. தன்னுடைய நேரத்தை எந்த எதிர்பார்ப்புமின்றி எங்களுக்காகச் செலவழித்த அந்த ஆசிரியர் என் வளர்ச்சிக்கு ஒரு முக்கியக் காரணம் என்றே சொல்லலாம்.

கே: உங்கள் பூர்வீகம் சென்னை தானா?
ப: இல்லை. என் தந்தையின் ஊர் ஸ்ரீரங்கம். அவர் அங்கு பள்ளிப்படிப்பை முடித்து செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்துவிட்டு பணிபுரிவதற்காகச் சென்னை வந்தார். அங்கு LT என்னும் ஆசிரியர் பயிற்சித் தேர்வில் தேர்ந்தபின் பொன்னேரி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்தார்.

கே: உங்கள் கல்லூரிப் படிப்பு எங்கே நடந்தது?
ப: அப்போதெல்லாம் 11ம் வகுப்புக்குப் பிறகு 2 வருடங்கள் இடைநிலைக் கல்வி. (Intermediate). நான் என்னுடைய சித்தப்பா வீட்டில் தங்கித் தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தேன். நான் படித்து முடித்து ஒரு வருடம் கழித்துத்தான் இன்டர் போய் பியூசி ஆரம்பமானது. பின்னர் இளங்கலைப் படிப்புக்கு சென்னை பிரசிடென்சி கல்லூரிக்குச் சென்றேன்.

கே: இளங்கலை அறிவியல் (B.Sc. Honors) படிப்பில் ஏன் புள்ளியியலைத் (Statistics) தேர்ந்தெடுத்தீர்கள்?
ப: அது ஒரு பெரிய கதை. ஒதுக்கீடு முதலிய காரணங்களாலும், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் அதிகம் இல்லாத காரணத்தாலும் நல்ல மதிப்பெண் எடுத்தாலும் அவற்றில் நுழைவது எளிதல்ல. ஆதலால் பிரசிடென்சி கல்லூரியில் புள்ளியியலும், லயோலா கல்லூரியில் வேதியியலும் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் இயற்பியலும் படிக்க விண்ணப்பித்தேன். ஒரு கல்லூரியில் ஒரு பாடத்துக்கு மேல் விண்ணப்பிக்கக் கூடாது என்ற நியதி வேறு இருந்தது. கணிதத்தில் இளங்கலைப் பட்டம் வாங்கினால் ஆசிரியராகப் போக மட்டும்தான் வாய்ப்பு என்ற பரவலான கருத்து இருந்ததால் அதை விடுத்து மூன்று பாடங்களுக்கும் விண்ணப்பித்தேன். பிரசிடென்சி எனக்கு முதலில் இடம் கொடுத்ததால் அதை எடுத்துக் கொண்டேன். லயோலாவில் கிடைத்திருந்தால் வேதியியல் துறைக்குச் சென்றிருப்பேன். பிரசிடென்சி கல்லூரியில் எனக்கு இடம் கொடுத்த அன்று யாரோ நண்பர் கூறியதால் விடிகாலை புறப்பட்டு தாம்பரத்திலிருந்து ரயில் மற்றும் பஸ் பிடித்துத் திருவல்லிக்கேணி சென்று என் பெயர் பலகையில் ஒட்டப்பட்டிருக்கிறதா என்று பார்த்துப் போனேன். இல்லாவிட்டால் ஒரு வாரம் கழித்து என் வீட்டுக்குக் கடிதம் வரும்போதுதான் தெரிந்திருக்கும்.

கே: இளங்கலை அறிவியல் படிப்பில் ஆனர்ஸ் பிரிவுக்கும் மற்றதுக்கும் என்ன வித்தியாசம்?
ப: இளங்கலை ஆனர்ஸ் என்பது முதுகலைப் பட்டத்துக்குச் சமமானது. முதல் வருடத்தில் தனியான பாடங்கள் படித்தோம். இரண்டாம் வருடத்தில் முதுகலை முதலாம் வருடப் பாடங்களைப் படித்தோம். மூன்றாம் வருடத்தில் இரண்டாம் வருட முதுகலைப் பாடங்களைப் படித்தோம். இளங்கலை (ஆனர்ஸ்) பட்டம் கிடைத்து ஆறு மாதத்தில் அதை ஒப்படைத்து விட்டு முதுகலைப் பட்டத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
கே: பிறகு என்ன செய்தீர்கள்?
ப: 1959ல், எனது 19ம் வயதில் இளங்கலைப் பட்டம் பெற்றேன். ஏற்கனவே கூறியதுபோல் கணிதம் எனக்கு எப்போதுமே எளிதாக, பிடித்தமானதாக இருந்தது. ஆனால் ஆராய்ச்சி பற்றியெல்லாம் அப்போது பெரிய கருத்து உருவாகவில்லை. அப்போது பரவலாக ஐ.ஏ.எஸ். பரீட்சைக்குப் படித்துத் தேர்வது என்பது மாணவர்களிடையே பிரபலமாக இருந்தது. ஆனால் அதற்குக் குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். எனக்கு ஐ.ஏ.எஸ். மேல் அவ்வளவு ஆசை இருக்கவில்லை. அப்போது இந்தியப் புள்ளியியல் நிறுவனம் (Indian Statistical Institute) பற்றித் தெரிய வந்தது. அங்கு முனைவர் பட்டத்துக்காகப் படிக்கக் கல்கத்தா சென்றேன். அவர்களின் நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளில் தேறியபின் மாதம் இருநூறு ரூபாய் சம்பளத்துடன் முனைவர் பட்டப்படிப்புக்கு இடம் கிடைத்தது. அமெரிக்காவில் உள்ளபடி Ph.D. Program என்றெல்லாம் கிடையாது. அவ்வப்போது நிறுவனத்தில் உள்ள பேராசிரியர்கள் உயர்நிலைப் பாடங்களில் வகுப்பு நடத்துவார்கள். அப்படியாக இரண்டு வகுப்புகளில் கலந்துகொண்டு அளவைக் கோட்பாடு பற்றியும் (Measure Theory) பற்றியும் இடத்தியல் (Topolgy) பற்றியும் கற்றுக் கொண்டோம். முன்னதாக இளங்கலைப் பட்டப்படிப்பிலேயே சாத்தியக் கூற்றியல் (Probability Theory) பற்றி நிறையப் படித்திருந்தேன். அது புள்ளியியலுக்கு மிக முக்கியமானது.

நம்மைச் சுற்றி நிச்சயமில்லாத அறுதியிட்டுக் கூற முடியாத சம்பவங்கள் நடக்கின்றன. அப்போது அவற்றின் சாத்தியம் பற்றிக் கேள்வி எழுகிறது. நாளை மழை பெய்யுமா என்ற கேள்வியிலிருந்து நாணயத்தில் பூவா, தலையா விழுவதுவரை பலதரப்பட்ட சம்பவங்கள் அறுதியிட்டுக் கூற முடியாமல் உள்ளன. இவற்றையும், இது போன்ற இன்னும் பல சம்பவங்களின் சாத்தியத்தைக் கண்டுபிடித்துக் கூறுவதுதான் சாத்தியக் கூற்றியலின் முதன்மையான நோக்கம். அளவைக் கோட்பாடு சாத்தியக் கூற்றியலில் வரும் உயர்நிலைக் கேள்விகளுக்கு உதவும் என்பது அப்போது எனக்குப் புரிந்திருக்கவில்லை. மேலும் அவற்றைப் பாடங்களாகப் படித்தேனே ஒழிய அவற்றின் அத்தியாவசியத் தேவையை அப்போது உணரவில்லை. மேலும் வேலை நிமித்தமாக பயன்முறைப் புள்ளியியலைச் (Applied Statistics) சில மாதங்கள் பயின்றேன். அது எனக்கு அவ்வளவாக ரசிக்கவில்லை. பின்னர் Operation Research, Linear Program ஆகிய பாடங்களைப் படித்து சில மாதங்கள் கழித்தேன். எவையுமே எனக்கு சாத்தியக் கூற்றியல் போல் சுவாரசியமாக இருக்கவில்லை.

அப்போது அங்கே Ph.D. மாணவர்களாக இருந்த பார்த்தசாரதி மற்றும் ரங்காராவ் நேரத்தை வீணாக்காமல் சாத்தியக் கூற்றியலில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்கள். நாங்கள் மூவரும் தினமும் பல மணி நேரம் உயர்நிலை சாத்தியக் கூற்றியல் மற்றும் அதைச் சார்ந்த பாடங்களைப் படித்து அலச ஆரம்பித்தோம். அந்த நாட்கள் என் வாழ்வின் பொன்னான நாட்கள். ஒரு மாதிரியாகத் தெளிவு பிறக்க ஆரம்பித்தது. அதே சமயத்தில் ஆராய்ச்சிக் கட்டுரைக்கான கேள்விக்கும் விடை ஆராய்ந்து கொண்டே வந்தேன். 1962ல் முனைவர் பட்ட ஆய்வுக் கட்டுரையைச் சமர்பித்தேன். சாத்தியக் கூற்றியலின் தந்தை என்று போற்றப்படும் பேரா. கோல்மகொரோவ் (Kolmogorov) என்னுடைய கட்டுரையின் ஆய்வாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. என்னுடைய ஆலோசகராக இருந்தவர் பிரபல புள்ளியியல் மேதையான பேரா. சி.ஆர். ராவ்.

கே: உங்கள் வாழ்க்கையில் ’ரோல் மாடல்’ என்று யாரைச் சொல்வீர்கள், ஏன்?
ப: என்னுடைய நண்பர், பேராசிரியர் வரதராஜன் அவர்களைக் குறிப்பிடுவேன். அவர் தற்போது லாஸ் ஏஞ்சலஸில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் கணிதத் துறைப் பேராசிரியராக இருக்கிறார். நான் ISIயில் இருந்தபோது 1962-63ல் கிட்டத்தட்ட ஒரு வருடம் அவருடன் பழகியிருக்கிறேன். கணிதத் துறையில் பரந்து விரிந்த கண்ணோட்டமும் அறிவும் உடையவர் அவர். அவருடன் நான் பகிர்ந்து கொண்ட உரையாடல்களும் வாதங்களும் எனக்கு பெருமளவில் உதவி புரிந்திருக்கின்றன. இன்றளவும் அவர் எனக்கு ஒரு நல்ல நண்பராக விளங்குகிறார்.

கே: கணிதமேதை ராமானுஜன் உங்கள்மீது ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறாரா?
ப: அவ்வளவாக இல்லை என்றுதான் கூற வேண்டும். அவருடைய சரித்திரத்தைத் தெரிந்து வைத்திருக்கிறேன் என்ற மட்டில்தான் பரிச்சயம். அவர் ஆராய்ச்சி செய்த எண் கோட்பாட்டில் (Number Theory) எனக்கு மிகப் பரிச்சயம் கிடையாது. அதில் எனக்கு ஓர் உள்ளுணர்வு இல்லை. எந்தப் பாடத்தில் எந்தக் கேள்வியை ஆராய்ச்சி செய்கிறோமோ அதைப் பற்றி ஓர் உள்ளுணர்வு ஏற்பட வேண்டும். அந்த உள்ளுணர்வின் திசையில் சென்று கேள்விக்கான விடையைப் பெறுவதுதான் ஆராய்ச்சியின் முக்கிய அங்கம். சாத்தியக் கூற்றியலில் பெரும்பாலான கேள்விகளுக்கு நல்ல உள்ளுணர்வு இயல்பாகவே எனக்கு இருந்தது.

கே: உங்களுடைய கூரண்ட் கல்வியக அனுபவம் பற்றிக் கூறுங்கள். 48 ஆண்டுகளாக நீங்கள் இதில் பணிபுரிகிறீர்கள். இவ்வளவு காலம் ஒரே இடத்தில் இருப்பதற்கான ஈர்ப்பு என்ன?
ப: நான் 1963ம் வருடம் கூரண்ட் கணித அறிவியல் நிறுவனத்தில் பின்முதுகலை ஆய்வாளராகப் (Post Doctoral Researcher) பணியில் சேர்ந்தேன். 1966ல் துணைப் பேராசிரியர் ஆனேன். 1968ல் இணைப் பேராசிரியர் ஆகவும், 1972ல் பேராசிரியராகவும் உயர்ந்தேன். 1980-84ல் இயக்குநர் பொறுப்பேற்றேன். பின்னர் மறுபடியும் 1990-92ல் இயக்குநராகப் பணியாற்றினேன். கூராண்ட் நிறுவனம் எனக்கு ஒரு நல்ல சூழலைக் கொடுத்தது. என்னுடைய சகாக்கள் ஆராய்ச்சி செய்யும் துறைகள், குறிப்பாக வகையீட்டுச் சமன்பாடுகள் (Differential Equation) சாத்தியக் கூற்றியலுக்கு மிகவும் துணை நிற்கும் ஒரு துறை. என்னுடைய முக்கியமான பங்களிப்பு பெருத்த பிறழ்வுகளின் ஒருங்கிணைந்த கோட்பாடு (Unified Theory of large deviation) என்று கூறலாம். சுருக்கமாகச் சொல்லப் போனால் ஒரு நிலைமைக்குப் பிறகு பிறழ்வுக்கான வாய்ப்பு பூஜ்யம் என்று பேரெண்கள் விதி (Law of large numbers) குறிப்பிட்டாலும் அது எவ்வளவு விரைவில் மறைகிறது என்று தெரிந்து கொள்வது முக்கியமாகிறது.

உதாரணத்திற்கு ஒரு காப்பீட்டுக் கழகத்தின் தவணை தவறும் சாத்தியத்தை அனுமதிக்கப்பட்ட அளவுக்குக் கீழே வைத்திருக்கத் தேவையான மூலதன இருப்பு எவ்வளவு என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க பெருத்த பிறழ்வுக் கோட்பாடு பெரிதும் உதவுகிறது. ஆச்சரியமாக, பல துறைகளில் அதாவது புள்ளியியல் இயற்பியல் (Statistical Physics), கூறு களக் கோட்பாடு (Quantum Field Theory), மக்கள்தொகை இயக்கவியல் (Popularity Dynamics), அளவைப் பொருளியல் (Econometrics), நிதியியல் (Finance), போக்குவரத்துப் பொறியியல் (Traffic Engineering) போன்ற துறைகளுக்கு இது பொருந்தும். கடந்த பல ஆண்டுகளாக அடிப்படை மற்றும் பயன்பாட்டுச் சாத்தியக் கூற்றியலின் முக்கிய அம்சமாக இந்தப் பெருத்த பிறழ்வுக் கோட்பாடு விளங்கி வருகிறது. சாத்தியக் கூற்றியலின் மற்ற பிரிவுகளில் என்னுடைய பங்களிப்பு இருந்தாலும் திரும்பத் திரும்பப் பல நேரங்களில் பல இடங்களில் எதிர்பாராத இடத்திலெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்கும் கேள்விக்கு விடையாக, விடையின் அங்கமாக பெருத்த பிறழ்வுகளின் தோற்றம் என்னை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

கே: 2007ல் ஏபல் பரிசும் 2010ல் அமெரிக்காவின் தேசிய அறிவியல் விருதும் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதியிடமிருந்து விருது வாங்கிய அனுபவம் பற்றி...
ப: விருது வழங்கிய பிறகு எல்லோருடனும் அதிபர் ஒபாமா தனித்தனியாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மிகவும் எளிமையான மனிதர். பேசுவதற்கு இனியவர்.

கே: இப்போது கொஞ்சம் கல்விசாரா வாழ்க்கையை பற்றிப் பேசுவோம். நியூ யார்க் நகரம் உங்களை எவ்வாறு ஈர்த்தது, ஈர்க்கிறது?
ப: பெரிய நகரங்களும் நகர வாழ்க்கையும் எனக்கு எப்போதுமே பிடித்திருந்தது. பள்ளிப்பருவத்தில் சென்னைக்கு அருகிலும் பிறகு சென்னையிலும் அதன்பின் கல்கத்தாவிலும் இருந்ததால் நகர வாழ்க்கை எனக்குப் பிடித்தமான ஒன்று. மேலும் நியூ யார்க் மிகவும் வித்தியாசமான நகரம். பலதரப்பட்ட மக்கள், பல நாட்டு மக்கள் பரவலாக இருக்கும் இடம். இங்கு அந்நியர்கள் என்று யாருமே கிடையாது. மேலும் எல்லாவற்றுக்கும் சௌகரியமான இடம். என்னுடைய மனைவி வசுந்தரா படிக்கும் போதும், குழந்தைகள் பள்ளிகளுக்கும் மிகவும் சௌகரியமாக இருந்தது. மேலும் நிறுவனத்துக்கு 5 நிமிட தூரத்தில் வீடு இருப்பதால் நேர விரயம் இல்லை. ஆராய்ச்சியில் நேரத்தைச் செலவிட முடிகிறது.

கே: இவ்வளவு புகழுக்கு நடுவிலும் இருக்கும் உங்களின் எளிமை என்னை எப்போதும் கவர்ந்திருக்கிறது. வாழ்க்கையின் தத்துவமாக நீங்கள் எதைக் கருதுவீர்கள்?
ப: வாழ்க்கையைப் பற்றி என்னுடைய கருத்து இதுதான். வாழ்க்கையில் சந்தோஷமானது 1) நாம் செய்ய நினைப்பதைச் செய்வதினாலும், 2) நாம் செய்ய நினைப்பதில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பதாலும் 3) நாம் செய்வது மற்றவரால் பாராட்டப்படுவதாலும் 4) நம்மை விரும்பும் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் நம்மைச் சூழ்ந்து இருப்பதாலும் 5) அமைதியான வாழ்க்கைக்குத் தேவையான வளங்கள் அமையப் பெறுவதாலும் ஏற்படுகிறது. ஆடம்பரமான வாழ்க்கையும் ஆடம்பரமான செலவுகளும் நம் குறிக்கோளிலிருந்து நம்மை விலக்கி பிரச்சனையைத்தான் கொடுக்கும்.

கே: உங்களுடைய கருத்துகள் “யாதனின் யாதனின்
நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்” என்ற குறளை நினைவுபடுத்துகிறது. உங்களுடைய பொழுதுபோக்குகள் என்னென்ன?

ப: நான் தினமும் காலை சுமார் ஒரு மணி நேரம் டென்னிஸ் விளயாடுவேன். வாரம் ஓரிருமுறை ஸ்க்வாஷ் விளையாடுவேன். மற்றபடி நாடகம், இசை, சினிமா என்று எல்லாவற்றிலும் நாட்டமுண்டு. நல்ல திரைப்படமாக இருந்தால் எந்த மொழியானாலும் பார்ப்பேன். விளையாட்டு நிகழ்ச்சிகளையும் பார்ப்பதுண்டு.

கே: தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுண்டா?
ப: தமிழுணர்வும் தமிழ்க் கலாசாரமும் என்னோடு ஒட்டிக் கொண்ட ஒன்று. உணவில் கூட நம் உணவையே விரும்பிச் சாப்பிடுவேன். நேரம் கிடைக்கும்போது, பெரும்பாலும் பயணங்களின் போது, தமிழ் இலக்கியமும் நாவல்களும் படிப்பேன். சிறுவயதில் என்னை மிகவும் கவர்ந்தவர் தேவன். அவர் கதைகளில் மிஸ்டர் வேதாந்தம், ஸ்ரீமான் சுதர்சனம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன் முதலிய நாவல்கள் என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றன. பாரதி மற்றும் பிறருடைய கவிதைகளும் படிப்பேன். மொத்தத்தில் தமிழ்மேல் பெருத்த ஆர்வமுள்ளவன் நான்.

கே: உங்கள் பயணங்கள் பற்றி...
ப: பயணங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை. உலகின் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். சில நாடுகளுக்குப் பலமுறை பயணித்திருக்கிறேன். பலவிதமான கலாசாரங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் பற்றித் தெரிந்து கொள்ள எனக்கு மிகவும் பிடிக்கும்.

கே: நீங்கள் சமீபத்தில் பார்த்த படம் எது?
ப: வீடியோவில் ‘ஆலய மணி’ பார்த்தேன். முன்னாள் சிவாஜி, சரோஜா தேவி படம். இசையும் நன்றாக இருக்கும். இப்போது வரும் தமிழ்ப் படங்களில் கதை நன்றாக இருப்பதில்லை. அடிதடி சண்டை, கூத்து கும்மாளம்தான் அதிகம். ஒரு படத்தின் கதைக்கும் மற்றொரு படத்தின் கதைக்கும் வித்தியாசமே இருப்பதில்லை. ஊழலான அரசியல்வாதியின் மகளுக்கும் சீர்திருத்தக்காரனுக்கும் ஏற்படுப்படும் காதல் கதையை எவ்வளவு முறை பார்ப்பது!

இங்கே தியேட்டரில் பார்த்தது The Best Exotic Marigold Hotel. சிறந்த நடிகர்களும் நடிகைகளும் கொண்ட படம்.

கே: உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார்? ஏன்?
ப: தமிழில் கமலஹாசன். சிறந்த நடிகர். பலவிதமான படங்களில் அருமையான நடிப்பு. அதுவும் முன்னாள் படங்களில் நடிப்பு மிகவும் நன்றாக இருக்கும். ஆங்கில நடிகர் பீட்டர் செல்லர்ஸ். நல்ல நகைச்சுவை நடிகர். தமிழ் நடிகை லக்ஷ்மி (முன்னாள் நடிகை). ஆங்கில நடிகை Audrey Hepburn.

கே: தென்றல் வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
ப: அமெரிக்காவில் தமிழ் வளர்க்கப் பாடுபடும் தென்றல் குழுவினருக்கும் அவர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு தரும் வாசகர்களுக்கும் என்னுடைய உளங்கனிந்த நன்றிகள், வாழ்த்துக்கள்.

உரையாடல்: முனைவர் ஸ்ரீனிவாசன் பாலாஜி
இந்த
நேர்காணலைச் செய்த முனைவர் ஸ்ரீனிவாசன் பாலாஜி, ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் துறைத் துணைப் பேராசிரியர். சாத்தியக் கூற்றியலில் ஆராய்ச்சியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் அவருக்குத்
தமிழ் மேலும் இலக்கியங்கள் மேலும் பெருத்த ஆர்வமுண்டு. வாஷிங்டன் நகரத்திலுள்ள ‘தீம்தனனா’ தமிழ் மெல்லிசைக் குழுவில் பாடகராகவும் இருக்கிறார்.


*****


பேரா. வரதனுடன் ஸ்டீல் பரிசைப் (The Leroy P. Steele Prize for Seminal Contribution to Research) பகிர்ந்துகொண்ட, முக்கியமான சகாவான பேரா. டேனியல் ஸ்ட்ரூக் அவர்கள், “அமெரிக்கா உண்மையிலேயே பெருமைப்படக் கூடிய இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மாபெரும் கணித மேதைகளில் முக்கியமானவர் வரதன்” என்று குறிப்பிடுகிறார்.

*****


பரிசுகளும் விருதுகளும்
National Medal of Science (2010)
Birkhoff Prize (1994)
Margaret and Herman Sokol Award of the Faculty of Arts and Sciences, New York University (1995)
Leroy P. Steele Prize for Seminal Contribution to Research (1996) of the American Mathematical Society
Abel Prize (2007)
Padma Bhushan (2008)
Member, U.S. National Academy of Sciences (1995),
Member, Norwegian Academy of Science and Letters (2009)
Fellow, American Academy of Arts and Sciences (1988)
Fellow, Third World Academy of Sciences (1988)
Fellow, Institute of Mathematical Statistics (1991),
Fellow, Royal Society (1998)
Fellow, Indian Academy of Sciences (2004)
Fellow, the Society for Industrial and Applied Mathematics (2009)
மேலும் படங்களுக்கு
More

கவனகர் கலை. செழியன்
Share: 
© Copyright 2020 Tamilonline